கல்யாணம் முதல் காதல் வரை – 16

Shanmuha Sethuramachandran | 28 Jan 2026 | Share

                           16.

          “நன்னா   நன்னா”…….அழைத்துக்  கொண்டே   உள்ளே   வந்த   ரஷிதா,   ஹால்   சோபாவில்   அமர்ந்திருந்த   இப்ராஹிமிடம்   ஓடினாள்.  ” நன்னா,   காலேஜ்ல  அட்மிஷன்  போட்டுட்டு   வந்துட்டேன்.  வர்ற   இருபதாம்  தேதிலருந்து   காலேஜ்  ஸ்டார்ட்  ஆகிரும்”  

       “இன்ஷா  அல்லாஹ்!!  நீ    நல்ல  படியா  படிச்சு   பெரிய   ஆளா   வருவ  ரஷிக்குட்டி”  

       “தாங்க் யூ   நன்னா,  நான்   போய்  எல்லார்   கிட்டயும்   சொல்றேன்  நன்னா”  

       “சரிமா”

      “தேனுகாக்கா  வந்துட்டாங்களா  நன்னா?” 

      “இன்னும்   இல்லமா,  ஆறு   மணிக்கு  மேல   ஆகும்னு   நினைக்கிறேன்”

       “சரி” என்றுவிட்டு  சுல்தானாவை  தேடிக்  கொண்டு   தோட்டத்துப்  பக்கமாக  சென்றாள்  ரஷிதா . ஆனால்  எதிர்பட்டதோ   ஜூனைத் .சோகமே  வடிவாக  ஊஞ்சலில் ஆடிக்கொண்டு   இருந்தான்.  மாமுவிடம்  இப்போது   சொல்லலாமா  வேணாமா?  யோசித்துக்  கொண்டே   இருந்தாள். பின்  அவனை   நெருங்கி   நின்று, 

        “மாமு”  என   அழைத்தாள்.  

        “சொல்லு  ரஷி”

       “காலேஜ்கு  போனேன்  மாமு,  இன்னிக்கு   அட்மிஷன்   போட   வரச்  சொன்னாங்க”

          “ஓ  !!!! ஆமால்ல,   சாரிடா,  மறந்தே  போயிட்டேன்.   தனியாவா   போன?”

        “இல்ல   மாமு, ப்ரியா  கூட  போனேன்.  இருபதாம்   தேதி   காலேஜ்  ஸ்டார்ட்  ஆகுமாம்  , சொன்னாங்க” 

       “ரொம்ப  சந்தோஷம்  ரஷி . உன்   நல்ல  மனசுக்கு   எல்லாம்   நல்லதாவே  நடக்கும்”  உண்மையான   மனநிறைவுடன்  சொல்லி,  அவளை   நோக்கி  கையை  நீட்டினான்.  ஒன்றும்   புரியாமல்   அவளும்  கையை  நீட்ட   , அதைப்  பற்றி  குலுக்கினான். 

       “ஆல்   த   பெஸ்ட்   ரஷி,   நீ   பப்ளிக்  எக்ஸாம்ல   ஸ்கூல்   ஃபர்ஸ்ட்   வந்து  சாதனை   படைச்ச   மாதிரி   செமஸ்டர்  எக்ஸாம்ஸ்லயும்  நிறைய  சாதனைகள்  செய்யணும் .  நீ   செய்யுவ,  எனக்கு  உன்  மேல   நம்பிக்கை   இருக்கு”  

       ” தாங்க்  யூ   மாமு”   அகமும்,  முகமும்  மலர    புன்னகைத்தாள்.

        ” சாரிடா   உன்   மனசை  நான்  ரொம்ப  காயப்படுத்திட்டேன்.  ஆனா” ……

         “மாமு….இப்ப   ஏன்   அதெல்லாம்  பேசிக்கிட்டு   இருக்கீங்க?  அது  முடிஞ்சு  போச்சு  , அவ்ளோ  தான்.   இனிமே  நடக்கப்  போறதைப்   பத்தி  மட்டும்  யோசிக்கலாம். ஏதோ  ஒரு  விரும்பத்தகாத  சூழ்நிலையில  நீங்க   தேனுகாக்காவை   நிக்காஹ்  பண்ணிக்கிட்டதால,  அவங்க   ரொம்பவும்  ரணப்பட்டு   போயிருக்காங்க .  கொஞ்சம்  கொஞ்சமா   பேசி  அவங்களை  சரி  பண்ணுங்க.   பாவம்,   இந்த  வீட்ல  நன்னா  நன்னி , நீங்க,  நான்,  நம்ம   நாலு   பேரைத்  தவிர,  அக்காவுக்கு   ஆறுதல்னு  யாரும்  இல்ல . ரொம்ப தனிமையை  உணருறாங்க” அவள்   பேசிக்   கொண்டிருக்கும்  போதே, 

         “ரஷி   பாப்பா”   என்று  ஒரு   குரல்  அழைக்க,   திரும்பினாள் . எதிர்  வீட்டு  கமலாவும் ,  தேவியும். 

        “சொல்லுங்கக்கா” 

        “வீட்டுக்கு   நாலு   முருங்கைக்காய்  பறிச்சுக்குறோம் பாப்பா.   அம்மா   கிட்ட   காலையிலயே   கேட்டுட்டோம்”  

        ” சரிக்கா ,  வாங்க”   வெளிப்பக்கம்  இருந்து   தோட்டத்துக்குள்  வருவதற்காக  வைக்கப்பட்டிருந்த  சிறிய  கேட்டைத்  திறந்து    கொண்டு,  உள்ளே  வந்த   அவர்கள்   இருவரும் ,  நேராய்  முருங்கை  மரத்தை   நோக்கி   நடந்தனர்.

           “தேவி”

         ” என்னக்கா?”

         ” வெளிய   தான்   பெரிய  குடும்பம்னு  பேரு ,  உள்ள   நடக்குறது   எல்லாமே  கேவலமான   விஷயங்கள்” 

         “என்னக்கா   சொல்ற?  எனக்கு  ஒண்ணும்  புரியல, யாரை  சொல்ற?  இந்த  வீட்டுப்   பையன்   ஹிந்து   பொண்ணை  கூட்டிட்டு   வந்திருக்கானே,  அதை  சொல்றியா? அதுக்கு  என்னக்கா பண்றது?  காலம்  மாறிக்கிட்டு  வருது,  லவ்  பண்ணி  கல்யாணம்   பண்றதுலாம்   இப்ப   சர்வ  சாதாரணமான  விஷயம்” 

       “அது   இல்லடி,  அந்த   பிள்ள   ரஷிதாவைத்   தான்   சொல்றேன் . அதான்  மாமன்   காரன்   வேற   ஒருத்தியை  கட்டி  வீட்டுக்கு   கூட்டிட்டு  வந்திருக்கானே,  அப்றமும்   இவ   அடங்குறாளான்னு  பாரு,  அவன்  கையைப்   பிடிச்சுக்கிட்டு,  தோட்டத்துல   வந்து   நின்னு   தனியா  பேசிக்கிட்டு   இருக்கா.  கருமம்  கருமம்”  தலையில்  அடித்துக்   கொண்டே  , எட்டி  எட்டி  முருங்கைக்காய்களைப்  பறித்தாள்  கமலம்.

         “அக்கா,  அவ   சின்னப்   பொண்ணு.  ஏதோ   மாமான்னு   கள்ளம்  கபடம்  இல்லாம   ஜூனைத்  கூட   பேசுறா.  அவளைப்  பத்தி  ஏன்  இவ்ளோ கேவலமா  பேசுற ?  இது   தப்புக்கா” 

        “இப்பலாம்  சின்னப்   பிள்ளைகளைத்  தான்  தேவி   நம்ப   முடியுறதில்ல,  அதுவும்  இந்த  ரஷிதா   இருக்காளே,   சரியான  வெஷம்  . மாமாவை இப்டி   தனியா   கூட்டிட்டு  வந்து  பேசி  பேசி , அவனை   வச்சே   கட்டின   பொண்டாட்டியை  துரத்த   வைக்க  பாக்குறா”  கமலாவைப்  பார்க்க  அருவருப்பாக   இருந்தது   தேவிக்கு. 

       ” பறிச்சாச்சுல ?  வாங்க   போலாம்,  இவங்க   வீட்ல   என்ன   வேணா  நடக்கட்டும்,  நமக்கு   என்ன ?  நம்மளே   வீட்ல   முருங்கை  மரம்   வளர்க்க   துப்பில்லாம  இங்க  வந்து   பறிக்குறோம் ,  நமக்கு  வாய்  தான்  கேடு , வாங்க” அவள்  விறு  விறு  வென  வெளியே  நடக்க ,  தேவியைப்  முறைத்துக்  கொண்டே ,பின்   தொடர்ந்தாள்   கமலா.   முருங்கை  மரத்தின்   பின்புறம்   இருந்த  மகிழ  மரத்தின்   சருகுகளைக்   கூட்டி  சுத்தம்  செய்து   கொண்டிருந்த,  கமலா  பேசியது  அனைத்தையும்   கேட்டுக்  கொண்டிருந்த   நிஷா,  கையில்   இருந்த  விளக்குமாறை  இறுக்கி  கொண்டே   ஆக்ரோஷமாய்  ஊஞ்சலை   நெருங்கினாள்.

        ” எனக்கு   காலேஜோட   இன்ஃப்ரா  ஸ்ட்ரக்ச்சரைப்   பாக்க   பாக்க  அவ்ளோ  பிடிச்சுருந்திச்சு  மாமா”  வேகமாய்  அவளை  சமீபித்த   நிஷா , சத்தென   அவள்  தலையில்  அடிக்க,   

         “மாமி   என்ன   இது ? அவளை  ஏன்  அடிக்கிறீங்க?” 

       ” என்   மகளை   நான்   அடிக்கிறேன் ,  அதை   கேக்க   நீ   யாரு?   ஏன்டி  மானம்  கெட்ட   கழுதை,   ரோட்ல  போற  நாய்ங்க  கிட்டலாம்   பேச்சு   வாங்கணும்னு  உனக்கு  என்ன   தலையெழுத்தா?   உள்ள  வா,   உன்னை  என்ன   செய்யுறேன்னு  பாரு”  அவள்   முடியைப்   பற்றி   இழுத்துக்  கொண்டே   வீட்டினுள்   சென்றார்   நிஷா.

        ” அம்மா  விடும்மா ,  வலிக்குதும்மா, அம்மா   இப்ப   என்னம்மா?   எதுக்கு  என்னைய   அடிக்கிற?  நான்   என்ன  செஞ்சேன்? விடு  என்னைய ” அவள்  பேசப்  பேச  அதைக்  காதிலேயே  வாங்கிக்  கொள்ளாமல்,   இழுத்து   சென்று  நடு  ஹாலில்   விட்டாள்.   விளக்குமாறை  வைத்து , அவள்   நடு   முதுகில்  நச்சென  ஒரு   அடி  வைத்தாள்.

       ” அய்யய்யோ   மாமி  மாமி,   என்ன  பண்றீங்க? அறிவு  இல்லயா உங்களுக்கு?” அதற்குள்  ஆயிஷா,  நசீமா, நஸ்ரின், கதீஜா  சுல்தானா , இப்ராஹிம்  என  அனைவரும்  ஹாலில்   கூட்டி  விட்டனர்.

       ” ஆமா   துரை,   எனக்கு  அறிவில்ல தான்.  என்   மக   வாழ்க்கையை   கெடுத்த  உன்னைய   இன்னும்  கழுத்தைப்  பிடிச்சு  வெளிய  தள்ளாம,  உன்  கூட  ஒரே  வீட்ல  வாழ்ந்துட்டு    இருக்கேன்ல ? எனக்கு  அறிவில்ல   தான்  டா”

         “ஏய்   நிஷா,   என்ன  ஆச்சு   உனக்கு?  கிறுக்கு   பிடிச்சிருச்சா ?  பெத்த  பிள்ளையை  துடைப்பத்தால  அடிக்கிறியே,  மனுஷியா நீ? சே….அப்டி  என்ன  கோபம்  உனக்கு ?”

        “அத்தா……கமலாவும்  தேவியும்”  என  ஆரம்பித்து   சொல்லி   முடிக்க,  

     ” அந்த  கமலாவை  என்ன செய்யுறேன்னு   பாரு  ” வேகமாக  வாசலை  நோக்கி   சென்ற  ஜூனைத்தை  தடுத்தார்   சுல்தானா  பாட்டி.  கண்ணீர்   விட்டபடி   தரையில்  கிடந்த  ரஷிதாவை  தூக்கி   நிறுத்தினார். 

       “யாரோ   ஏதோ   சொல்லிட்டாங்கன்னு  உன் மகளை  இப்டி  கேவலப்படுத்துவியா?”

      ” நன்னி”   என   கதறி  அவரைக்  கட்டிக்  கொண்டாள்   ரஷிதா .  

      ”  ரஷி   அழாத ,  உன்   அம்மாவுக்கு,  உங்க   அப்பாவும்,  உங்க   அண்ணன்களும்  சொல்றதைக்   கேட்டு   கேட்டு,   மறை  கழண்டு   போச்சு .  அதான்   இந்த   மாதிரிலாம்   நடந்துக்குறாங்க  . விடு,  கண்ணைத்   தொட”   என்ற  ஜூனைத் அவள்  கையைத்   தொட   முற்பட ,  அவன்  டீ  ஷர்ட்டைப்   பிடித்து   பின்னால்   இழுத்து,  அவனை  பளார்  என  அறைந்தாள்  நிஷா.  வீட்டிலுள்ள  அனைவரும்  அதிர்ச்சியில்  உறைந்து    போய்   நிற்க,

     ”   இனிமேல்   என்   மக   கூட  பேசுற  வேலை   வச்சுக்கிட்டன்னு  வை,  நான்  என்ன   பண்ணுவேன்னு  எனக்கே  தெரியாது.   இனி   உனக்கு  அவ்ளோ  தான்  மரியாதை . அண்ணன்  பிள்ள , தம்பி  பிள்ளன்னு   பாத்து   பாத்து,   வாயை  மூடிக்கிட்டு   இருந்ததுலாம்   போதும்னு  தோணிருச்சு எனக்கு”அவளது  முறையற்ற வார்த்தைகள்  கதீஜாவின்  மனதை  சுட்டது.  வலிக்கும்   உள்ளத்தோடு  தன்   மகனைப்  பார்த்தார்.   பாவம்   இவன்,   ஒரு   நல்ல  உள்ளத்தோடு   தானே    தேனுகாவை   கல்யாணம்  செய்து   கூட்டி   வந்தான்?  இப்போது   அனைவராலும்  சாடப்பட்டு,  அது  போதாதென்று  இன்று  கன்னத்தில் அடியும் வாங்கி… உனக்கு   இன்னும்  என்னென்ன  சோதனைகள்   காத்துக்கிட்டு   இருக்கோ  என்   மகனே  மௌனமாய்   அழ   ஆரம்பித்தார்  கதீஜா. 

       “என்ன   வார்த்தை   பேசிட்ட   நிஷா?  அவன்  அண்ணன்  மகனா ? இத்தனை  வருஷமா   அவனை   நம்ம   எல்லாரும்  சேர்ந்து   அப்படியா   வளர்த்தோம்? ஷாரிக்,  ஜமாலை   விட  இவன்   மேல   தான  நம்ம  ரொம்ப   பாசமா   இருப்போம் ? யாரோ  ஏதோ  பேசிட்டுப்   போறாங்க. நரம்பில்லாத   நாக்குகள்   என்ன   வேணாலும்   பேசும், இதுக்கு  மேலயும்  பேசும்.   ஒரு   ஹிந்து  பொண்ணை   வித்யாசம்  பாத்து  ஒதுக்கி  வைக்காம  மருமகளா  ஏத்துக்கிட்டோம் ,  பொதுவா  இந்த   மாதிரியான    பெரிய  விஷயத்தை  சின்னபுத்தி   படைச்சவங்களுக்கு  நல்ல  விதமா பாக்கத்   தெரியாது.   அந்த  கமலா   கேவலமா பேசிட்டான்னு  ரஷிக்குட்டியை   இந்த  அடி   அடிக்கிறியே , அப்டின்னா  உன்   மக  மேலயும்,   ஜூனைத்  மேலயும்   நம்பிக்கை  இல்லயா?   சொல்லு ,  நம்ம   பிள்ளைங்க  தப்பு   பண்ணுமா ? மட்டமா  நடந்துக்காத   நிஷா ,  இனி   ஒரு   தரம்  என்  பிள்ளைங்க   மேல  நீ   கை  வைக்கக்  கூடாது”  மூத்தவர்,  பண்பட்டவர்,   என   தன்   பேச்சில்   உணர்த்தினார்   ஆயிஷா.

      ” ஆப்பா  போதும்,  ரஷிதாவை  நீ   வாய்  வார்த்தையால  தான்   உன்   மக  உன்  மகன்னு   சொல்ற.   ஆனா   நான்  பத்து  மாசம்  சுமந்து,   வலியோட  அவளைப்  பெத்தவ.  பிள்ளையில்லாத  உனக்கு,  அந்த வலியெல்லாம்   தெரியாது .  அவ  என்  மக,  அவ   விஷயத்துல   நீ   தலையிடாத.  அந்த  உரிமை   உனக்கு   கிடையாது . ஒரு  பிள்ளையாவது    பெத்திருந்தாத்   தான் , இந்த   நிலைமைல    ஒரு   தாயோட  மனசு  என்ன பாடுபடும்னு தெரியும்”  கோபத்தில்  என்ன   பேசுகிறோம்  என்ற   யோசனை  இல்லாமல்   பேசிவிட்டாள்   நிஷா.  அதே  நேரத்தில்,   வீட்டின்   உள்ளே   நுழைந்து  கொண்டிருந்தாள்   தேனுகா.

                                                     –  தொடரும் 

        

           

          

     

        

         

          

          

  

         

    

               

  

       

        

    No comments yet.