15.
மனது முழுக்க விவரிக்க முடியாத பாரத்தோடு வீட்டுக்குள் நுழைந்த ஜூனைத் , அப்படியே சோபாவில் தளர்ந்து போய் சாய்ந்தான்.
” ஜூனைத்…… வாடா , என்ன ஃபேன் கூட போட்டுக்காம உக்காந்திருக்க?” ஃபேனுக்கான ஸ்விட்சை அழுத்தி விட்டு, அவன் அருகில் வந்து அமர்ந்தாள் நஸ்ரின் ஃபாத்திமா.
“அக்கா, தம்பிக்கு சூடான இஞ்சி டீ போட்டு எடுத்துட்டு வா, ரொம்ப டயர்டா வந்து இருக்கான்” அவளையே இமைக்காமல் பார்த்தான் ஜூனைத்.
“என்னடா அப்டி பாக்கிற?”
“இல்ல,,,,,, இந்த திடீர் கரிசனத்தின் பின்னால என்ன மாதிரி வேட்டு இருக்குமோன்னு யோசிக்கிறேன்”
“என்ன சொன்ன ? திடீர் கரிசனமா? ஏன் இது வரை நானும் அக்காவும் உனக்கு ஒண்ணுமே செஞ்சதில்லையா? நீ எங்களுக்கு ஒரே தம்பி , உன்னை நாங்க எவ்ளோ செல்லமா வளர்த்தோம்? எப்டி டா உன் வாழ்க்கையில புதுசா ஒருத்தி வந்த உடனே, நாங்க செஞ்ச எல்லாத்தையும் மறந்திட்டு பேசுற?”
“நான் எதையும் மறக்கல . என்னைக் கொஞ்சம் தனியா விடு , எனக்குள்ள ஏற்கனவே நிறைய யோசனைகள் ஓடிக்கிட்டு இருக்கு . நீ வேற அதையும் இதையும் பேசி என்னை டென்ஷன் ஆக்காத , ப்ளீஸ் ”
“நஸ்ரினு , நீ சும்மா இரு. அவன் கிட்ட நான் பேசிக்கிறேன். இந்தா டா டீ” கிச்சனில் இருந்து வந்த நசீமா, அவன் முன் டீ கப்பை நீட்டினாள்.
“இந்தா”
…………..
” என்ன பாக்குற? காலையிலயே சாப்பிடாம போயிட்ட, நான் போட்டா டீ கூட குடிக்க மாட்டியா ?” இஞ்சி டீயின் மணம் இழுக்க, ஒன்றும் சொல்லாமல் வாங்கிக் கொண்டான்.
“தாங்க்ஸ்”
“ஓ! நன்றிலாம் சொல்ல ஆரம்ச்சாச்சா? சரி சரி நடக்கட்டும், நீ டீ குடி . நஸ்ரின் வா போலாம்” மெல்ல இடுப்பைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள். அவள் நினைத்தது போலவே ,
“ஆப்பா என்னாச்சு? ஏன் இப்டி கஷ்டப்பட்டு நடக்குற?” கேட்டான் ஜூனைத்
“அதுவா ? அது ஒண்ணுமில்ல விடு”
“ஏன், என் கிட்ட சொல்ல மாட்டியா? என்னனு சொல்லு , கேக்குறேன்ல?”
” நேத்து ராத்திரி உங்க மாமா என்னைய அடிச்சிட்டாரு , எட்டி மிதி வேற, அதான் ரொம்ப வலிக்குது” நசீமாவின் கண்களில் கண்ணீர் மின்னியது.
“ஓ…..மாடியில துணி காயப் போட்டுட்டு , என் காரைப் பாத்ததும் அவ்ளோ வேகமா இறங்கி ஓடி வந்தப்ப உனக்கு இடுப்பு வலிக்கலயா?” திக் என விழித்து, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் நசீமாவும் நஸ்ரினும்.
“சொந்த வீட்ல சொந்த தம்பி கிட்டயே இவ்ளோ கேவலமா நடந்துக்குறீங்களே , வெக்கமா இல்லயா உங்களுக்கு? சே! வர வர இங்க வர்றதுக்கே அவ்ளோ கடுப்பா இருக்கு” தன் கையில் இருந்த டீ கப்பை தரையில் வீசி எறிந்தான்.
“டேய்ய்ய்ய்ய்!! என்னடா பண்ற?”
“சும்மா இரு , வர்ற ஆத்திரத்துக்கு அப்டியே உன்னை கழுத்தை நெறிச்சு”…..
“ஓ….. அவ கழுத்தை நீ நெறிப்ப, அதைப் பாத்துட்டு நான் சும்மா நிப்பேன் , ஓங்குன கையை அப்டியே உடைச்சு போட்ருவேன் பாத்துக்க. அடேய்ய் தம்பீஈஈஈ, ரொம்ப ஆடாத. இந்த வீட்ல நிறைய பேருக்கு நீ செஞ்சு வச்சிருக்க காரியம் பிடிக்கல. ராதா ராதிம்மா மட்டும் தான் எந்த விவரமும் புரியாம உன் பக்கம் நிக்கிறாங்க. அவங்களும் எங்க பக்கம் வரப் போற நாள் ரொம்ப தூரத்துல இல்ல. நீ பொண்டாட்டின்னு சொல்லி கூட்டிட்டு வந்தவளும் எப்படா இங்க இருந்து கிளம்புவோம்னு தான் குறியா இருக்கா. உஸ்ஸ்ஸ்ஸ் அதுலாம் முடிஞ்சு போன கதை . இங்க பாரு ஜூனைத்து, உன் மேல உள்ள அன்புல தான் நான் சொல்றேன். இப்பக் கூட ஒண்ணும் கெட்டுப் போகல, நாங்க சொல்றதைக் கேட்டு எங்க விருப்பப் படி நடந்துக்க, உன் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும். அதுக்கு இந்த நசீமா பொறுப்பு”
“வாயை மூடு, நீங்க சொல்ற பொண்ணை கல்யாணம் பண்ணினா தான் என்னை உங்களுக்கு பிடிக்குமா? கேக்கவே அபத்தமா இல்லயா? ஒரு ஹிந்து பொண்ணை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தது தப்பு தான், உங்க எல்லாருக்கும் அது ரொம்பப் பெரிய அதிர்ச்சியா இருந்துருக்கும். அந்த சின்ன பொண்ணு ரஷிதாவுக்கு நான் செஞ்சது பெரிய துரோகம் தான். எல்லாம் சரி .ஆனா எந்த மாதிரி ஒரு சூழ்நிலையில தேனுகாவை நான் கல்யாணம் பண்ணேன், என்னால அவ அடைஞ்ச இழப்பு எப்பேர்பட்டது எல்லாத்தையும் ஓரளவு சொன்னதுக்கு அப்புறமும் கூட, அவளை வீட்டை விட்டு துரத்து ரஷிதாவை இரண்டாவதா கல்யாணம் பண்ணிக்கனு பேச வர்றீங்களே ? பொம்பளைங்களா நீங்கள்லாம் ?தேனுகா பாவமில்லயா?”
” அவளா பாவம்? அடைக்கலம் குடுத்த குடும்பத்தை சேர்ந்தவன்னு பாக்காம, என்னைய அப்டி போட்டு அடிச்சாளே?
அதுக்கு நீ”
“நசீமாக்கா, அவ ஒண்ணும் சும்மா உன்னை அறையல . தேனுகான்னு இல்ல , மான மரியாதை இருக்குற யாருமே அன்னிக்கு நீ பண்ணின காரியத்துக்கு உன்னை அறைய தான் செஞ்சிருப்பாங்க. அவளைப் பத்தி என்ன தெரியும் உனக்கு?”
” அடடாஆஆ எங்களுக்கு தெரியாது சரி , உனக்கு மட்டும் என்னப்பா தெரியும்?” நஸ்ரின் கேலியாய் கேட்டாள்.
“கரக்ட் , எனக்கும் தெரியாது . ஆனா உங்க ரெண்டு பேரையும் விட அவ ரொம்ப மென்மையானவ, எவ்ளோவோ மேலானவ, அது மட்டும் தெரியும் எனக்கு” அவனை தீயாய் முறைத்தாள் நசீமா.
“அப்ப அவளைத் துரத்த மாட்ட, அவ உன்னை நீ என் புருஷனே இல்லன்னு எவ்ளோ தான் அவமானப்படுத்துனாலும், அவ காலடியில தான் விழுந்து கிடப்ப அப்டி தான?”
” துரத்த மாட்டேன் , அவ ஆழ் மனசோட ரணங்களையும், அவ வேதனைகளையும், அவளோட ஈடு செய்ய முடியாத பேரிழப்பையும், அவ சொல்லாமலே என்னால உணர முடியுதுன்னா , நிச்சயமா அவளுக்கு ஒரு நல்ல பெட்டர் ஹாஃபா என்னால இருக்க முடியும். என்னை விட்டு போறேன் போறேன்னு சொல்ற அவளை சரி பண்ணுவேன் . இது முழுக்க முழுக்க என்னோட வாழ்க்கை , அதை நான் பாத்துக்கிறேன் . அதைப் பத்தி கவலையோ, பயமோ யாருக்கும் வர தேவையில்ல” சொல்லிவிட்டு படிகளை நோக்கி வேகமாக நடந்தான்.
**************
தேனுகா என்னம்மா சொல்ற? என்னால இதை நம்பவே முடியல. ஆனா நீ ரொம்ப ரொம்ப ஸ்ட்ராங்க் மா. தைரியமா இரு, ஆண்டவன் எப்பவுமே உன் கூட இருப்பான், கவலைப்படாத. நீ நாளைக்கு காலையில பத்து மணிக்கு என் ஆஃபீஸ்கு வந்துரு, நாளன்னிக்கு அந்த மாடசாமி மேல கேஸ் போட்ரலாம். அவள் அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்கு, மேற்சொன்னபடி பேசி பதில் செய்தி அனுப்பியிருந்தார் அவளது சீனியர் லாயர் கோவிந்தன்.
Thank you Sir. என பதில் அனுப்பிவிட்டு , அமர்ந்திருந்த சேரில் இருந்து மெல்ல எழுந்தாள். கண்ணீர் பெருகிக் கொண்டு வந்தது . தன் குடும்ப புகைப்படத்தின் முன்னால் போய் நின்றாள் . அந்த படம் , அவர்கள் ஆக்சிடெண்ட்டில் இறந்து போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் எடுக்கப்பட்ட படம் . சென்னையில் லா காலேஜில் ஹாஸ்டலில் தங்கி படித்துக் கொண்டிருந்த தேனுகாவைப் பார்க்க வந்திருந்தனர் அப்பா விஸ்வநாதன் , அம்மா வாணி, மற்றும் அவளது செல்லத் தங்கை ப்ரியலேகா மூவரும். சனியும் ஞாயிறும் எப்போதும் அவளுக்கு விடுமுறை நாள் என்பதால் , பிசினசில் பெரிய ஆர்டர் ஒன்று கிடைத்த மகிழ்வில் , மூத்த மகளையும் அழைத்துக் கொண்டு , இரண்டு நாட்களை நிம்மதியாகக் கழிக்க கேரளா செல்ல திட்டமிட்டு இருந்தார் விஸ்வநாதன். ப்ரியலேகா இன்னும் இரண்டு மாதத்தில் பொதுத் தேர்வு எழுதவிருப்பதால் தான் இந்த இரண்டு நாள் திட்டம். லேகாவிற்கு டாக்டர் ஆக வேண்டுமென தீராத வெறி .அதன்படி மிகவும் தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்தாள். அதனால் அந்த அழகிய சிறிய பயணம் அவளுக்கு சிறந்த புத்துணர்வைத் தந்தது. நினைத்த மாதிரியே இரண்டு நாட்கள் ஜாலியாக சுற்றி விட்டு , தேனுகாவை அவளது ஹாஸ்டலில் வந்து ட்ராப் செய்து விட்டு போனவர்கள் தான். அப்படியே போய் விட்டனர் . ஒரே விபத்தில் , தன்னை சேர்ந்தவர்கள் அனைவரையும் இழந்து தனி மரமாக நின்றாள். இவள் படிப்பை முடிக்கும் வரையில் இவளது தாய் மாமா தான் கண்மணி போல் இவளைக் காத்து வந்தார் . அத்தை , தேனுகாவின் சிறு வயதிலயே இறந்து விட்டார். மாமாவுக்கு குழந்தைகளும் இல்லை . ஊரில் இருந்த ஃபேக்டரி , வீடு, மற்றும் பிற சொத்துக்கள் அனைத்தையும் , அவர்கள் வீட்டில் ட்ரைவராய் பணி புரிந்த மூர்த்தி அண்ணனின் உதவியுடன் நல்ல விலைக்கு விற்று, அந்த பெரிய தொகையான மூன்று கோடி ரூபாயை, பேங்கில் போட்டு வைத்தார் மாமா. இரண்டு வருடங்களில் அவரும் இறந்து விட, நொந்து போனாள் தேனுகா. ஆனால் யார் இல்லையென்றாலும் வாழ்ந்து தானே ஆக வேண்டும்? அங்கே இங்கே என நாயாய் பேயாய் அலைந்து , திறமையான வக்கீல் என எல்லாராலும் கருதப்படும் கோவிந்தன் சாரிடம் அசிஸ்டெண்ட்டாக சேர்ந்தாள். மாமாவுடன் தங்கியிருந்த வாடகை வீட்டை காலி செய்து விட்டு வொர்க்கிங் விமண்ஸ் ஹாஸ்டலில் சேர்ந்தாள். பின் தனது திறமையால் படிப்படியாய் உயர்ந்து, தனியாக ஆபீஸ் போடும் அளவுக்கு தன் தொழிலின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொண்டாள். ஆபீஸ் பார்ப்பது , அட்வான்ஸ் குடுப்பது, என மூர்த்தி அண்ணன் தான் அலையோ அலையாய் அலைந்தார். அப்பா இறந்த பிறகு சென்னை வந்து ஒரு தொழிலதிபர் வீட்டில் ட்ரைவராய் சேர்ந்திருந்ததால், அடிக்கடி இவளை வந்து சந்தித்து தன்னால் இயன்ற வரை நிறைய உதவிகள் செய்து விட்டுப் போவார். ஆபீஸ் போடுவதற்கும் , அட்வான்ஸ் பணம் குடுப்பதற்கும் வங்கியில் மாமா போட்டு வைத்திருந்த தொகை பெரிதும் உதவியது . மூர்த்தி அண்ணனை தன் உதவியாளராக வைத்துக் கொண்டாள். எதைப் பற்றியும் யோசிக்காமல் வேலை வேலை என ஓடிக் கொண்டிருந்த போது தான், அவள் வாழ்வின் காதல் அத்தியாயத்தை எழுதும் நோக்கில், எங்கிருந்தோ வந்து குதித்தான் ப்ரித்வி …….. ப்ரித்வீஈஈஈ……….
“என் வாழ்க்கையில எதுவுமே நிரந்தரம் இல்லையாப்பா?” ஃபோட்டோவில் சிரித்துக் கொண்டிருந்த தந்தையின் முகத்தை கண்ணீருடன் தடவினாள் தேனுகா .
– தொடரும்
No comments yet.