13.
“நல்ல வேளைடி , நினைச்ச மாதிரியே நம்ம இரண்டு பேருக்கும் ஒரே காலேஜ்லயே சீட் கிடைச்சிருச்சு ப்ரியா, ரொம்ப ஹாப்பீயா இருக்கு: அட்மிஷன் போட்டுவிட்டு இருவரும் வெறிச்சோடிப் போயிருந்த காலேஜ் கிரவுண்டில் நடந்து, வாசலை நோக்கி போய் கொண்டிருந்தனர்.
“எனக்கும் தான்டி . புதுசா யாரையும் தேடிப் போய் பழக வேண்டியதில்ல, பெரிய்ய்ய வேலை மிச்சம்” சுற்றும் முற்றும் பார்த்தபடியே பதில் சொன்னாள் ப்ரியா. “என்னடி, அங்க இங்கன்னு பராக்கு பாத்திட்டே வர்ற?”
“ரெஸ்ட் ரூம் போகணும் ரஷி , அதான் எந்த பக்கம் இருக்குன்னு பாத்துட்டே வர்றேன்”
“அட ஆமாடி, நானும் அந்த வேலையையே மறந்துட்டேன். இரு, யார் கிட்டயாவது கேப்போம்” அப்போது அவர்களின் பின்னால் யாரோ அழைக்கும் குரல்,
” எக்ஸ்க்யூஸ்மி ” திரும்பினார்கள். பின்னால் ஒருவன் நின்றிருந்தான். அவன் முழியே அவன் சரியில்லை என உணர்த்தியது. கையில் சிகரெட் வேறு புகைந்து கொண்டிருந்தது.
“சொல்லுங்க”
“ஏதோ ரெஸ்ட் ரூம் போகணும் எங்க இருக்குன்னு தெரியலன்னு பேசிட்டு இருந்தீங்க ? என் கூட வாங்க, நான் வழி காட்டுறேன் ” அவன் ஈஈஈஈஈஈ என கேவலமாக சிரித்தான் .
“நோ தாங்க்ஸ்” வெடுக்கென முகத்தைத் திருப்பிக் கொண்ட ப்ரியா, ரஷிதாவின் கையைப் பற்றி வேகமாக இழுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.
“ஏங்க நில்லுங்க நில்லுங்க” அவன் பின்னாலயே வர ஆரம்பித்தான் . தோழிகள் இருவருக்கும் பயம் வர ஆரம்பித்தது .
“இது என்னடி புது தொந்தரவா இருக்கு? சை, யாரு இவன்?”
“தெரியல, பயப்படாத .இந்த கிரவுண்டை தாண்டினா , அட்மிஷன் போட வந்தவங்க கூட்டமா இருப்பாங்க. அங்க இவன் வந்து டிஸ்டர்ப் பண்ண மாட்டான்.” பின்னால் திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்த இருவரும், யார் மீதோ இடிக்கப் போய் சுதாரித்து நின்றனர். எதிரே ஒருவர் நீல நிற சட்டை, வெள்ளை நிற பேண்ட் ,லெக்சரர் போன்ற தோற்றத்தில் இருந்தார்.
“சா…சாரி சார்”
“இட்ஸ் ஓகே, ஏன் இப்படி ஓடி வர்றீங்க ? எனி ப்ராப்ளம்?”
“ஆமா , ஒருத்தர் பின்னாலயே ஃபாலோ பண்ணி வந்து இன்டீசண்ட்டா பிகேவ் பண்றாரு சார்” ரஷிதா சொல்ல, அவர்களின் பின்னால் எட்டிப் பார்த்த அந்த சார், உடன் ஆவேசமானார்.
“ஏய்ய்ய் ராஸ்கல் , உனக்கு இங்க என்ன வேலை?”
“சார்ர்ர்ர் அது… நான் ஒண்ணும் தப்பா சொல்லல சார் , நம்ம காலேஜை சுத்தி காமிக்கத் தான்ன்ன்”
“வாயை மூடுய்யா உன் வேலையைப் பாரு போ, இன்னொரு தடவை உன்னை இங்க காலேஜ்குள்ள பாத்தேன்னு வை அவ்ளோ தான், போய்யா” அவன் அவரை முறைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
“அவன் பாய்ஸ் ஹாஸ்டல்ல சாப்பாட்டு மாஸ்டர்மா , குடிகாரப்பய, இனி வர மாட்டான் , சரியா?”
“ஓகே சார் , தாங்க் யூ”
“ஐ அம் விக்ரம், இந்த காலேஜ்ல ஹிஸ்ட்ரி டிபார்ட்மெண்ட்ல புரபசர் “
” ஹலோ சார்! ஐ அம் ப்ரியா , இவ ரஷிதா பேகம். இங்க பி.காம் ஜாயின் பண்ணிருக்கோம். அட்மிஷன் போடத் தான் வந்தோம்”
“வெல்கம்” …….
” தாங்க் யூ சார் , தாங்க்யூ ஃபார் யுவர் டைம்லி ஹெல்ப் , வர்றோம் சார்”
“ஓகே மா ” அவர்கள் இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.
“நல்ல வேளை அந்த சார் வந்து நம்மை காப்பாத்தினாரு ”
“ஆமா ப்ரியா , இல்லன்னா காலேஜ்கு வந்த முதல் நாளே பிராப்ளம் ஆகிருக்கும். நம்ம மனசுலயும் அது ஒரு வடுவா தங்கிரும் . இனிமே நான் தேனுகாக்கா கிட்ட இருந்து கொஞ்சம் தைரியத்தை கத்துக்கணும்டி, யாரைப் பாத்தும் இந்த மாதிரி நடுங்கி ஓடக் கூடாது ப்ரியா . இந்த ஃபைவ் டேஸ்ல எங்க வீட்ல என்னென்ன நடந்து போச்சு தெரியுமா ? பல ட்விஸ்ட்கள்டி”
“அப்டியா?” ஆச்சரியமானாள் ப்ரியா
“ஆமா . இரு, கொஞ்சம் பிரஷ் ஆகிட்டு சாப்பிட்டுக்கிட்டே பேசலாம். எல்லா கதையையும் உன்கிட்ட சொல்றேன், ஓகே வா?” …..
*************
தன் அலுவலக அறையை சாவி கொண்டு திறந்தாள் தேனுகா. இந்த ஐந்து நாட்கள் அவள் வரவில்லை என்றாலும் , உதவியாளர் மூர்த்தி மிகவும் சுத்தமாக வைத்திருந்தார் . உள்ளே நுழைந்தாள் . அந்த அறை முழுக்க ப்ரித்வியின் நினைவுகள் தான் இறைந்து கிடந்தன . மனது மிகவும் பாரமாக இருந்தது. சுவற்றில் பெரிதாக்கி வைக்கப் பட்டிருந்த அவளது குடும்ப புகைப்படத்தின் முன் இருந்த விளக்கை ஏற்றினாள். அது கூட ப்ரித்வியின் ஏற்பாடு தான்.
“அம்மா !!!!!! வந்திட்டீங்களா?” குரல் கேட்டு திரும்பினாள் தேனுகா. மூர்த்தி தான் .
” வாங்கண்ணே “
“அம்மா எவ்ளோ அழகா இருக்கீங்க தெரியுமாம்மா? இந்த தாலியில உங்களைப் பாக்கும் போது அவ்ளோ மங்களகரமா இருக்கும்மா. என்னிக்கும் நல்லா இருப்பீங்க , ஆண்டவன் ஆசீர்வாதம் எப்பயும் உங்களுக்கு உண்டு” அவர் கால்களில் விழுந்தாள் தேனுகா.
“அம்மா, என்னம்மா இது? எந்திரிங்க, எந்திரிங்க” அவர் பதற,
“இந்த அனாதையை வாழ்த்த உங்களை விட்டா வேற யார் இருக்கா ? நல்லதா நாலு வார்த்தை சொல்லி வாழ்த்துங்கணே ப்ளீஸ்”
” என்னிக்கும் அமோகமா இருப்பீங்கமா, ஆண்டவன் உங்களைக் கைவிட மாட்டான். போதும்மா எந்திரிங்க, என்னை தர்ம சங்கடப்பட வைக்காதீங்கம்மா” எழுந்து நின்றாள்.
“இதுல என்னணே சங்கடம் இருக்கு? இவ்ளோ முழு மனசோட யார் என்னை வாழ்த்த முடியும்?”
” அப்பா மாதிரி உங்களுக்கும் ரொம்ப விசாலமான மனசும்மா . இல்லனா உங்க வீட்ல வேலை பாத்த என்னை இவ்ளோ நாள் கூட வச்சிருப்பீங்களா? அப்புறம் இன்னொன்னும் சொல்லிக்கிறேன்மா, இது வரைக்கும் உங்களை பலமுறை நீங்க அனாதை அனாதைன்னு சொல்லிருக்கீங்க, போகட்டும். ஆனா இனி உங்க வாய்ல இருந்து அந்த வார்த்தை வரவே கூடாது . நீங்க இழந்த சொந்தங்களோட மறு உருவமா ப்ரித்வி ஐயா இருக்காரே ? அவரைக் கட்டிக்கிட்ட பிறகும் நான் அனாதைன்னு நீங்க சொல்லலாமா ? அவர் மனசு வேதனைப்படுமே , பாவமில்லயா ?” மூர்த்தி பேசியதற்கு பதிலேதும் சொல்லாமல் புன்னகை செய்தாள் தேனுகா.
“ஐயா எங்கம்மா ? இன்னும் வரலயா? புது வீட்டுக்கு எப்பமா பால் காய்ச்ச போறீங்க ? தேதி பாத்தாச்சா?”
” எல்லாம் சொல்றேண்ணே. முதல்ல என் போன் எனக்கு வேணும் எங்கணே இருக்கு ? உங்க கிட்டயா?”
“இல்லமா ட்ரால தான் இருக்கு. நீங்க இருங்கம்மா , நான் ப்ளாஸ்க்கை கழுவி எடுத்திட்டுப் போய் டீ வாங்கிட்டு வந்துடறேன். சூடா குடிங்க ” அறையின் மூலையில் ஆணியில் தொங்கிக் கொண்டிருந்த ப்ளாஸ்க்கை கையில் எடுத்தார் மூர்த்தி அண்ணன்.
” வேண்டாம்னே , நான் தான் மண்டே எதுவும் சாப்பிட மாட்டேனே?”
” எனக்கு தெரியாதுங்களா ? அதனால தான்மா டீ மட்டும் . ப்ரித்வி ஐயா வந்ததும் , என்னை டீ வாங்கிக் குடுத்தீங்களான்னு கேப்பாரும்மா. பத்து நிமிஷத்துல வந்திடறேன்” அவர் வெளியே சென்று விட்டார். தன் ஹேண்ட் பேக்கில் இருந்த சாவியை எடுத்து ட்ராவைத் திறந்தாள் தேனுகா. உள்ளே பத்திரமாக அவளது ஃபோன் இருந்தது. எடுத்து ஸ்விட்ச் ஆன் செய்தாள். நல்ல வேளையாக சார்ஜ் இருந்தது. நிறைய மிஸ்ட் கால்கள் , வாட்சப்பில் நிறைய மெசேஜ்கள் , அது எல்லாம் லோட் ஆவதற்குள் வாட்சப் கால் வந்தது . அது பூமிகா அக்காவின் எண். ப்ரித்வியின் அக்கா. தற்சமயம் பாரினில் இருக்கிறாள். கைகள் நடுங்க அட்டண்ட் செய்தாள்.
“ஹலோ”
“அ….அக்கா”
“தேனு !!!!!! என்னம்மா? மூணு நாள் ஆச்சு ஒரு கால் இல்ல, ஒரு மெசேஜ் இல்ல, கேஸ்ல ஏதாவது ப்ராப்ளமா? அதான் ரெண்டு பேரும் ஃபோனை ஆஃப் பண்ணி வச்சிட்டீங்களா? கல்யாணம் லுக்ல ஒரு போட்டோ கூட அனுப்பல? எனக்கு செம்ம கோபம். இரு நான் வீடியோ கால் பண்றேன்” பூமிகா சொல்ல, அதே நேரம் ,வாசலில் நிழலாட்டம். தேனுகா நிமிர்ந்து பார்க்க ஜூனைத் நின்று கொண்டிருந்தான்.
– தொடரும்
No comments yet.