12.
“என்னது ? வெளியே போறியா ? நான் நேத்து என்ன சொன்னேன் மறந்து போயிட்டியா நசீமா? ஏய் ஜமால், அவ தான் அறிவில்லாம ஏதோ சொல்றான்னா, நீயும் அவ பேச்சை கேட்டுக்கிட்டு கிளம்பிட்டியே? கொஞ்சமாவது யோசிக்க மாட்டியாடா நீ?”
“நன்னா, நீங்க எங்க ரெண்டு பேருக்கும் மதிப்பு குடுக்கல . நேத்து வந்தவங்களைத் தான் மதிக்கிறீங்க, தலையில வச்சு ஆடுறீங்க. நாங்க உங்க காலையே சுத்தி சுத்தி வர்றதுனால தான் எங்க அருமை தெரியல. அதான் போறோம். கொஞ்ச நாள் தூரமா தான் இருந்துட்டு வர்றோமே , அப்ப தான் உங்களுக்கு எது தங்கம், எது தகரம்னு புரியும்”
“தேனுகாக்கா ,ஆனா உங்க திறமையே திறமைக்கா. நேத்து வரைக்கும் அணுகுண்டு மாதிரி இந்த வீட்டுல சுத்திக்கிட்டு இருந்த நசீமா பாபியை, ரெண்டே ரெண்டு அறையில நமத்துப் போன பட்டாசா மாத்திட்டீங்களே? கூடவே சாப்பிட்ட தட்டை அப்படியே வச்சுட்டு போகக் கூடாது , சாப்பாடை வேஸ்ட் பண்ணக் கூடாதுன்னு , அல்டிமேட்டான ரூல்ஸ்லாம் போட்டாச்சு. இப்பப் பாருங்க, அதை ஃபாலோ பண்ண பயந்துக்கிட்டு இப்பவே ரெண்டு விக்கெட் அவுட்ட்”
“ஏய் என்ன சொல்ற ? அப்போ நாங்க இவளுக்கு பயந்து தான் வீட்டை விட்டு கிளம்புறோமா?”
“ஆமா, பின்ன இல்லயா?”
“ஏய் ரஷிதா, என்ன இப்பலாம் வாய் ரொம்ப நீளுது ? காலேஜூக்கு படிக்க அனுப்பப் போறாங்கன்னு கொழுப்பா ? கன்னம் கன்னமா அறைஞ்சு, காலை வெட்டி போட்ருவேன். அப்புறம் எப்டி காலேஜ் படிப்ப?”
“சை…..எப்பப் பாரு சத்தம் தானா? காலை நேரம் அமைதியா இருக்க வேண்டிய நேரம்”
” எல்லாம் அந்த பொண்ணு வந்த நேரம் தான் நன்னா, இது வரை அத்தா அம்மா கூட என்னையும் நசீமா அக்காவையும் அடிச்சதில்ல. ஆனா இந்த பொண்ணு வயசுக்குக் கூட மரியாதை குடுக்காம அடிக்கிறா. அதுக்கு நீங்க யாருமே இப்ப வரைக்கும் அவளை ஒரு வார்த்தை கூட திட்டல . அப்ப எங்க அக்காவுக்கு எப்டி இருக்கும்? சொல்லுங்க” நஸ்ரின் வக்காலத்து வாங்க,
” தேனுகா நசீமா அக்காவை அடிச்சது தப்பு தான். அது இல்லன்னு யாரும் சொல்லல . அப்ப அதுக்கு முன்னாடி அக்கா அவளை டார்ச்சர் பண்ணினதும் தப்புதான?”
“ஜூனைத் , ஆனா நீ நிக்காஹ்வுக்கு அப்புறம் இவ்ளோ மாறுவன்னு நான் நினைக்கவே இல்ல . புதுசா வந்தவ பின்னால நல்லா சுத்து நான் வேணாங்கல . நல்லா ஜால்ரா போடு அதையும் நான் வேணாங்கல . ஆனா ஒரு விஷயத்தை நினைவுல வச்சுக்க. இப்ப யாருக்காக நீ எங்க எல்லாரையும் தூக்கி எறிஞ்சு பேசுறியோ, இவ உன் கூட காலம் முழுக்க வாழ மாட்டா, உன்னை விட்டுட்டு ஓடிப் போயிருவா . அப்போ நீ உடைஞ்சு நிக்கும் போது தாங்கிப் பிடிக்க நாங்க தான் வருவோம். அப்ப இருக்கு டா உனக்கு ” அவன் பேசப் பேச தேனுகாவுக்கு எரிச்சல் பீறிட்டுக் கொண்டு வந்தது. அவளுக்கு காலை நேரம் எப்போதும் அமைதியாய் இருந்தால் தான் பிடிக்கும். ஆனால் இங்கோ நிலைமை தலைகீழ் . இப்படி தன்னை சுற்றி இவ்வளவு எதிர்மறையான எண்ணங்கள் படைத்த மனிதர்கள் இருக்கும் இந்த வீட்டில் , ஒரு மாதம் எப்படித் தான் தாக்குப்பிடிக்கப் போகிறேனோ ? ஈஸ்வரா……….
“ஏய் ஜமால் , இப்ப என்ன? உன்னால தேனுகா இருக்குற வரைக்கும் இங்க இருக்க முடியாது அதான? சரி நீ எங்க வேணாலும் கிளம்பு. நிக்காத, பெட்டி படுக்கை எல்லாம் எடுத்தாச்சுல்ல? கிளம்பிக்கிட்டே இரு” திக்கென அதிர்ந்து விட்டாள் நசீமா. தன் ராதா இப்படி சட்டென பேசி விடுவார் என அவள் நினைக்கவே இல்லை. அவள் போட்டு வைத்திருந்த கணக்கே வேறு . தான் இப்படி இங்கு இருந்து கிளம்புகிறேன் என ஊன்றி நின்றால், எக்காரணம் கொண்டும் குடும்பம் பிரியக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாய் உள்ள ராதா, தன்னை சமாதானப்படுத்துவார். தேனுகாவை தன்னிடம் மன்னிப்பு கேக்க சொல்லுவார் என நினைத்தவளுக்கு, மூக்கு உடைந்து போனது. செய்வதறியாது திகைத்துப் போய் திரும்பி கணவனை பார்த்தாள் . அவன் அவளை முறைத்தான். அவனுக்கு இந்த கேவலமான நாடகத்தில் தொடக்கத்தில் இருந்தே உடன்பாடில்லை. இப்போது நசீமாவுடன் சேர்ந்து, அவனும் அவமானப்பட்டதால் அதீத எரிச்சலில் இருந்தான். முன்னால் வந்த ஷாரிக்,
“அண்ணா , ஏன் நன்னாவை இப்டி கஷ்டப்படுத்துற ? அவருக்குப் பிடிக்காத எதையுமே நம்ம இது வரை செஞ்சது கிடையாதே? புதுசா ஒரு வழக்கம் ஏற்படுத்துறதுக்கு நம்ம ஒண்ணும் ஜூனைத் கிடையாது. குடும்ப வழக்கங்களையும், மத மார்க்கங்களையும், மீறக் கூடாதுன்னு சொல்லி குடுத்து சொல்லி குடுத்து நம்ம அப்பா அம்மா நம்மை ஒழுக்கமா வளர்த்திருக்காங்க. அவங்க கை காட்டுன நம்ம முறைப் பொண்ணுகளைத் தான் நம்ம நிக்காஹ் பண்ணிக்கிட்டோம். வேற மத பொண்ணை கட்டி கூட்டிட்டு வந்த அவனே இது என் வீடு நான் எங்கயும் போக மாட்டேன்னு இந்த வீட்ல உக்காந்திட்டு இருக்கும் போது, நீ ஏன் போற ? நன்னா கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு உள்ள வா. பேக்கை வச்சிட்டு என் கூட ஃபாக்டரிக்கு கிளம்பு. அங்க நம்ம தலைக்கு மேல நிறைய வேலைகள் இருக்கு. இங்க நின்னு டைம் வேஸ்ட் பண்ணாத போ, பாபி நீயும் போ.” யாரும் அறியா வண்ணம் ஜமாலுக்கு ஜாடை காட்டினான்.
“என்னை மன்னிச்சிருங்க நன்னா” பையை கீழே போட்டு விட்டு, வேக வேகமாய் மாடிப்படிகள் ஏறினான் ஜமால். ஷாரிக் பின் தொடர்ந்தான்.
” உஸ்ஸ்ஸ்ஸ்” பெருமூச்சு விட்ட இப்ராஹிம் சோபாவில் அமர்ந்தார். நடந்த அனைத்தையும் வாயையே திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்த நிஷா, மெல்ல கிச்சனுள் சென்று அந்த இரண்டடுக்கு டிபன் ஃபாக்சை எடுத்து வந்து ரஷிதாவிடம் நீட்டினாள்.
“இந்தாடி . அங்க ஒரு வேளை கூட்டமா இருந்தா என்ன பண்ணுவ ? உனக்கு நேரத்துக்கு பசிச்சிருமே, இதை சாப்பிட்டுக்க. ப்ரியாவுக்கும் குடு” ரஷிதாவின் அருகில் நின்றிருந்த தேனுகாவை அவள் கண்டு கொள்ளவே இல்லை . அம்மாவின் செயலால் மனம் நொந்து போனவள், “அம்மா அக்காவுக்கு லஞ்ச் ?” வெக்கமே இல்லாமல் வாயை விட்டு கேட்டு விட்டாள்.
“உனக்கு அவசரமா முட்டை சாதம் சமைச்சி பேக் பண்ணினேன். இந்த பொண்ணு அதை சாப்பிடுமா? நேத்து நசீமா பழகட்டுமேன்னு ஆட்டுக் கறியை ஊட்டப் போனதுக்கு அவளை கை நீட்டி அறைஞ்ச இந்த பொண்ணு ,ஒருவேளை டிபன் ஃபாக்சை கொடுத்திருந்தா என்னையும் ஏதாவது மரியாதை இல்லாம பேசாதுன்னு என்ன நிச்சயம் ?” கணவன் குச்சி எடுக்க , அதற்கு ஏற்றாற் போல் ஆடும் குரங்கு போல் ஆகி , அறிவே இல்லாமல் பேசும் மகளைக் கண்டு அழுவதா சிரிப்பதா என தெரியவில்லை தாத்தாவுக்கு.
” சரி. அக்கா முட்டை சாப்பிட மாட்டாங்கன்னு சொல்ற, அது கூட ஓகே தான் . ஏன் காலையில சாப்பாடையே அக்காவுக்கு லஞ்ச்சா கட்டி குடுத்து விட வேண்டியது தான?”
“தேனு சம்மர் ஆரம்பிச்சாச்சுல்ல ? உனக்கு சாப்பிடுறதுக்கும் குடிக்குறதுக்கும் நிறைய எடுத்துட்டு வந்திருக்கேன். முதல்ல இந்த டப்பால சர்பத், பத்து மணிக்கு குடிக்கணும். அப்புறம் லெவன்கு அந்த பிங்க் டப்பால இருக்குற தர்பீஸ் ,அப்புறம் பண்னென்டு மணிக்கு ஜூசர்ல இருக்கு பாரு அந்த லெமன் ஜூஸ், ஒரு மணிக்கு நம்ம கோர்ட் கேன்டீன்ல சாப்பாடு , அப்புறம் மூணு மணிக்கு ப்ரஷ்ஷா இளநீர் வாங்கிட்டு வருவேன், அதையும் குடிக்கணும்”
“மிஸ்டர் ப்ரித்வி நீங்க சொல்றதுலாம் நான் நேரம் தவறாம சாப்பிட்டா, அப்புறம் என் வயிறு வயிறா இருக்காது. பெரிய்ய குப்பைத் தொட்டியா தான் இருக்கும்.ஸோ என்னால இதைலாம் சாப்பிட முடியாது , எடுத்துட்டுப் போடா”
” ஏய்ய்ய்ய் சாப்பிடுன்னு சொல்றேன்ல? உன் கேஸ் இன்னிக்கு நாலு வருது கோர்ட்கு . வெயில் வேற மண்டையை பொளக்குது . ஜட்ஜ் கேள்வி கேட்டா ஸ்ட்ராங்கா நின்னு எப்டி பதில் சொல்ல முடியும்? உனக்காக தான எங்க சமையல் அக்கா கிட்ட சொல்லி இது எல்லாத்தையும் தனித் தனி பாக்ஸ்ல போட்டு”
“மேம்ம் அடுத்து நம்ம கேஸ் தான்” உதவியாளர் வாசலில் நிற்க ,
“ஓகே நான் போயிட்டு வர்றேன், முடிச்சுட்டு வந்து உன்னை பாக்குறேன் ப்ரித்வி பாய்ய்ய்ய்”……..அன்று விளையாட்டாக உன் பேரன்பை உதாசீனம் செய்தேன் . ஆனால் இன்று சோறு போட ஆள் இல்லாத அனாதையாய்……கண்கள் கலங்க, வலது கையில் ஏதோ கனம் கூடியது. டிபன் பாக்ஸ் . சுல்தானா பாட்டி தான்….
“முருங்கைக்காய் சாம்பார் ,வெண்டை பொரியல் இருக்கு . மிச்சம் வைக்காம சாப்டுட்டு வரணும்” அவ்வளவு தான் அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த அழுகை பீறிட்டுக் கொண்டு வர, அவரை கட்டிக் கொண்டாள் …..
“ஷூ, என்ன இது? வெளிய கிளம்பும் போதா அழுவாங்க ? தோசை இருக்கு, வாங்க இரண்டு பேரும் சாப்பிடலாம்” தன் கண்களைத் துடைத்துக் கொண்ட தேனுகா , “பாட்டி நான் திங்கள்கிழமை காலைல விரதம், சாப்பிட மாட்டேன். ரஷி நீ போய் சாப்பிடு. தாத்தா எனக்கு நேரமாச்சு நான் கிளம்புறேன். பாட்டி நான் போயிட்டு வர்றேன். ரஷி பாய்டி ,பாத்து போயிட்டு வா காலேஜ்கு”
“தனியாவா போற? ஜூனைத் கூட போலாம்ல? அவன் இப்ப வந்துருவான்”
” இல்லங்க தாத்தா, நானே தனியா போயிடுவேன். எனக்கு ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல . வர்றேன் தாத்தா”
“சரிம்மா” அவள் புறப்பட்டாள்.
மாடியில்
“அண்ணே , நீ என்ன லூசா? நீ பாட்டுக்கு வீட்டை விட்டு கிளம்புறேன்னு போய் நின்னுட்டு இருக்க ? பாத்தியா நம்ம நன்னா என்ன சொன்னாருன்னு?”
“என்னை எதுவும் கேக்காத . நான் இல்லடா ஷாரிக், உங்க பாபி தான் எல்லாத்துக்கும் காரணம் , அவளைக் கேளு, நல்லா கேளு”
“பாபி நீ கொஞ்ச நாளைக்கு சும்மா இரு .உன் வழில போனா அந்த தேனுகாவை இந்த வீட்டை விட்டு துரத்த முடியாது . நீ படுத்துற கொடுமைல அவ மேல தானாவே எல்லாருக்கும் பரிவும், பாசமும் வந்துரும் போல”
“முடியல ஷாரிக்கு , அவளைப் பாக்க பாக்க எனக்கு வெறி வெறியா வருது”
“கொஞ்ச நாளைக்கு பொறுமையாத் தான் இருந்தாகணும் பாபி, நமக்கு வேற வழி இல்ல. அவ லாயருக்கு படிச்சவ . சமத்துவம் அது இதுன்னு புதுசு புதுசா எதை எதையோ சொல்லிக்கிட்டு திரியுறா. அது நல்லா இருக்குன்னு இங்க இருக்கிற சில பேர் பாராட்டிக்கிட்டு இருக்காங்க. அதையே அவளுக்கு எதிரா திருப்பி விட்டு , அவளை எல்லாருக்கும் எதிரி ஆக்கி , ஒரு கெட்ட பேரோட அவளை இங்க இருந்து அனுப்பணும்”
– தொடரும்
No comments yet.