கல்யாணம் முதல் காதல் வரை – 11

Shanmuha Sethuramachandran | 17 Dec 2025 | Share

                                11.

          ” உக்காரு” 

         ” கையை   எடுங்க: 

          “உன்னைப்   பாசமாலாம்   தொடல.  நீ  சாப்பிடாம  எந்திரிச்சு போயிரக்கூடாதுன்னு தடுத்து  நிறுத்துறேன்.  நான்   வச்ச  டேஸ்ட்டான   மட்டன்   குழம்பை   மிஸ்  பண்ணிடாம   சாப்பிடு” 

          “ஏய்ய்ய்   நசீமா,  என்ன   நீ   இப்படி  பண்ணிட்டு   இருக்க?  அவ   இதைத்   தான்   சாப்பிடணும்னு   சித்ரவதை   செய்றதுக்கு  நீ    யாரு?”   இப்ராஹிம்   தாத்தாவின்  கோபம்  எல்லை   மீறியது.

        “என்ன  ராதா  இப்படி   கேட்டுட்டீங்க?  அவ  என்   தம்பி   பொண்டாட்டி   இல்லயா? அப்டி  தான   சொல்லி   பெட்டியை  தூக்கிட்டு   புறப்பட்டவளை   வம்படியா  இழுத்துட்டு   வந்து   இங்க   உக்கார  வைச்சிருக்கீங்க ?  அவ   மேல   எனக்கு   இல்லாத  உரிமையா?  ரஷி   சின்ன  வயசுல   மீன்   வேணாம்,  மட்டன்   வேணாம்னு   சொல்லும்  போதுலாம்   நான்   தான   அவளை  மிரட்டி  உருட்டி   சாப்பிட  வைப்பேன் ?  அப்போ   இவளையும்  நான்  சாப்பிட   வைப்பேன்”   யார்   பேசுவதையும்  காதில்   வாங்காமல்,   தேனுகாவை  அமர  வைத்து   அவள்   தட்டில்   மேலும்  இரண்டு  கரண்டிகள்  அந்த   குழம்பை  ஊற்றி , ஒரு  கரண்டி   நிறைய   கறியை   அள்ளி  வைத்து.   ஒட்டுமொத்தமாக   அனைத்தையும்  சேர்த்து   பிசைந்தாள்.  “ஆ  வாயைத்   திற,   நீ   சாப்பிட   சங்கடப்படுறல்ல ? நானே  உனக்கு   ஊட்டி   விடறேன்”  கை   நிறைய  அள்ளி,  அவள் வாய்  அருகே  கொண்டு  சென்றாள்.  இதுவரை   செய்தே   பார்க்காத   ஒரு   செயலை   செய்ய   சொல்லி  கட்டாயப்படுத்தினால்   தன்னை   அழ  வைக்கலாம்   என்று  ஆணவத்தில்  ஆடிக்  கொண்டிருக்கும்   நசீமாவிடம்  அமைதியாக   இருப்பதெல்லாம்   வேலைக்கு  ஆகாது  என  கண்டுகொண்டவள் ,  தன்   முகத்திற்கு  நேரே   பரோட்டாவுடன்   நீண்ட  கையை  அழுத்தமாகப்   பிடித்தாள். 

          ” என்ன?” 

         ” பாசமா   பிடிக்கல,   நீங்க   எனக்கு  ஊட்டக்    கூடாதுன்னு   தடுத்து   நிறுத்துறதுக்காக   பிடிச்சுருக்கேன்.  தட்டி  விட்டுருப்பேன் , ஆனா   சாப்பாடை  வேஸ்ட் பண்ணக்   கூடாதுன்னு   தான்  அதை  பண்ணல. இந்த  மாதிரி  வேலையெல்லாம்  என்கிட்ட   வச்சுக்கக்   கூடாது”  தேனுகா கோபமாய்ப்   பேச,

        “வாயைத்   திறடி”….அடுத்த  வாக்கியம்  அவள்   பேசி   முடிக்கும்   முன் ,  பளாரென  அவளை   அறைந்திருந்தாள்   தேனுகா.  அவளது   அறையில்   நசீமா  மட்டுமல்ல,  அங்கு   இருந்த  அனைவருமே  அதிர்ந்து   போய்   விட்டனர் .  உண்மையை  சொல்ல  வேண்டுமென்றால்   தேனுகாவிடமிருந்து  இப்படி   ஒரு   பதிலடியை   யாருமே  எதிர்  பார்க்கவில்லை.  தனக்கு  நடந்த  அவமானத்தை   லேசாக   ஜீரணித்துக்  கொண்ட    நசீமா,   கன்னத்தைத்   தேய்த்துக்  கொண்டே   அவளை   தீயாய்   முறைத்தாள்.

          “ஏய்ய்,   என்னையா  அடிக்குற?  வாழ  வக்கு   இல்லாம   இந்த   வீட்ல   ஒண்ட  வந்த   பிடாரி   நீ,   உனக்கு   என்ன  அவ்ளோ  தைரியமா  ? அனாதை   கழுதை”   மீண்டும்  அவளை   அடிக்க  தன்   கையை  ஓங்கினாள் நசீமா . ஓங்கிய  கையை  அந்தரத்திலேயே  பிடித்து   முறுக்கி,   மீண்டும்  அவள்  கன்னத்தில்   பளார்  என  அறைந்தாள்  தேனுகா.  இந்த   முறை  அடியின்  பலம்  தாங்காமல்   கையில்  எடுத்திருந்த  பரோட்டா  துண்டு   சிதற,   கீழே  விழுந்தாள்  நசீமா. அமர்ந்திருந்த  அனைவரும்  எழுந்து  விட்டனர் . “ஐயோ  ஆப்பா”  பதறிப்  போய்  ஓடி   வந்த   நஸ்ரின்  , அவளைத்   தூக்கினாள்.

          “இங்க   பாரு,  இனிமே  இந்த   நான்   வெஜ்   கலந்த   சாப்பாடை   எனக்கு   சாப்பிட  குடுக்குறது,   அனாதை கினாதைன்னு  சொல்லி  இரிடேட்  பண்றது,  இந்த   வேலையெல்லாம்   என்கிட்ட  காட்டக்  கூடாது.   நீ   என்ன   பெரிய  ரவுடியா?  மனசில   பெரிய   டான்ன்னு   நினைப்பா?   நீலாம்   ஒரு   ஆள்னு   நீ   என்னை  விதம்  விதமா   டார்ச்சர்   பண்ணினதும் ,  நான்   பயந்து   ஓடிப்   போயிருவேன்னு   கனவு   கண்டியா?   அதுலாம்   நடக்காது   பாப்பா.    இது  என்   வீடு , எனக்கு   தோணும்  போது   தான்   கிளம்புவேன்,  புரிஞ்சதா ?  உன்னை  விட  பெரிய  பெரிய  ரவுடிகளையும்,   போக்கிரிங்களையும்  தினம்   சந்திக்கிறவ   நான்  . உன்னால   என்னை  ஒண்ணும்  பண்ண   முடியாது.   வீண்  முயற்சிகளை  விட்டொழிச்சுட்டு , அடக்கமா  இரு” சொல்லி விட்டு ,  வேகமாக   கிச்சனுள்   நுழைந்து  சுல்தானா   பாட்டி   குறிப்பிட்ட   அந்த  பாத்திரத்தையும்  , தரையைத்   துடைக்கும்  துணியையும்   தேடி   எடுத்துக்   கொண்டு  வெளியே   வந்தாள் . 

        “ஏன்  எல்லாரும்  இன்னும்  நின்னுட்டே   இருக்கீங்க ? ஆக்ஷன்  சீக்வன்ஸ்லாம்  ஓவர். இப்ப   திருப்பி   டின்னர்  டைம்  ஸ்டார்ட்  ஆகிருச்சு ,  உக்காந்து   சாப்பிடுங்க”   கீழே  சிதறிக்   கிடந்த   உணவினை  எடுத்து,  ரஷிதா   கொண்டு   வந்து   நீட்டிய  டஸ்ட்  பின்னில்  போட்டாள்  .கொஞ்சம்   தண்ணீர்   தெளித்து  அந்த  இடத்தை   சுத்தமாகத்   துடைத்தாள். 

        “அக்கா,   அந்த   தட்டைக்   குடுங்க   நான்   சாப்பிட்டுக்குறேன்” 

        “வேணாம்  ரஷி”

        “ரஷி,  யார்   அதை   பார்க்க  சகிக்காத அளவுக்கு   போட்டு   அப்டி   பிசைஞ்சு  வச்சிருக்காங்களோ,   அவங்க   தான்  சாப்பிடணும் . நசீமா  அந்த   தட்டுல  இருக்குற   பரோட்டாவை   நீ   தான்  சாப்பிடணும் ,சரியா?:இப்ராஹிம்  சொல்ல , மௌனம்   காத்தாள்   நசீமா.  இன்னொரு  தட்டில்   இரண்டு  பரோட்டாக்களை  எடுத்து  வைத்து,  அவளிடம்   நீட்டினான்  ஜூனைத். தாங்க்ஸ்   சொல்லி   வாங்கிக்  கொண்டு,  அதில்   வெஜ்   குருமா  ஊற்றி  ஒன்றுமே   நடக்காதது   போல் ,  ரசித்து   ருசித்து  சாப்பிட   ஆரம்பித்தாள்   தேனுகா.  

       “மாமா,   என்   மருமகப்  பொண்ணை போட்டு   அவ   அந்த   அடி   அடிக்கிறா,  நீங்க   ஒண்ணுமே   பேச   மாட்டேங்குறீங்க? அப்போ  அந்த   பொண்ணு   செஞ்சது   உங்க  கண்ணுக்கு   தப்பா  தெரியலயா?”  முஸ்தஃபா   வாதிட்டார். 

       ” மாப்பிளை ,  சாது   மிரண்டா  காடு  கொள்ளாதுன்னு   ஒரு   பழமொழி   இருக்கு  அதை   கேள்விப்பட்டிருப்பீங்க   தானே?  அது   தான்   இப்போ   இங்க   நடந்துச்சு.   இதுல  நான்   சொல்ல   என்ன   இருக்கு?   சாப்டுங்க”

         “நல்லா   இருக்கு  மாமா , ரொம்ப  நல்லா    இருக்கு.   இந்த   கூத்து ,  இந்த   ஆட்டமெல்லாம்   இன்னும்   எத்தனை  நாளைக்குன்னு   நானும்   பாக்கத்  தான  போறேன்”   சொல்லிவிட்டு   விருட்டென  எழுந்து   சென்றார்  முஸ்தஃபா.  கூடவே  கொடுக்குகள்   போல்   அவரது  பிள்ளை  செல்வங்கள்   இரண்டும்  எழுந்து  செல்ல எத்தனிக்க,   சாப்பிட்டுக்  கொண்டிருந்த  தேனுகா   “ஒரு   நிமிஷம்”   என்றாள்.

       “என்ன?”  ஷாரிக்  எரிச்சலாய்   கேட்க, 

       “நீங்க  பாட்டுக்கு  அரையும்  குறையுமா பாதி   ப்ளேட்டை   அப்படியே   விட்டுட்டுப்   போனா , யார்  எடுத்து  கழுவி  வைப்பாங்க?”

        “என்னது   ப்ளேட்டை   கழுவணுமா?  அப்புறம்   இந்த   வீட்டு   பொம்பளைங்க  எதுக்கு   இருக்காங்க ? இதோ  பார் ,  என்ன   பேசுறோம்னு  பாத்து   பேசு.   உன்   அதிகாரத்தையெல்லாம்  வீட்ல  மத்தவங்க மேல  காட்டு”  ஜமால் கத்த,

     “இது அதிகாரமில்லை, மனிதாபிமானம்.   நானும்    இங்க   வந்ததுல   இருந்து  பாத்துக்கிட்டு   தான்   இருக்கேன்.  எப்பப்  பாத்தாலும்   சாப்பிட்ட   தட்டை  டேபிள்ல  அப்டியே   போட்டுட்டு   போறது.   தட்டை  கழுவாட்டியும்   பரவாயில்ல,  கொண்டு  போய்   சிங்க்லயாவது   போடுங்க”  

      “தேனுகா ,அதெல்லாம்  எங்களுக்கு  பெரிய  வேலைலாம்  இல்லம்மா , நாங்களே  கழுவி வச்சு”….. ஜூனைத்தின்   தாய்  கதீஜா  பதறிப்  போய்   குறுக்கிட, 

        “அத்தை,   நான்   உங்க  எல்லார்  நல்லதுக்காகவும்   தான்  சொல்றேன். இனிமே  தாத்தா  மட்டும்   தான்   ப்ளேட்டை  இங்கயே   வச்சுட்டு   போகணும்.  வேற  யார்   அப்படியே  வச்சுட்டுப்   போனாலும், அந்த  நபர்கு   அடுத்த   வேளை   சாப்பாடு  கட் . அது   மட்டும்   இல்லாம,   இனிமே  இங்க  சாப்பாடை   யாரும்  வேஸ்ட்   பண்ணக்  கூடாது.   ஏன்னா   சாப்பாடு   இல்லாம  உலகத்தில   நிறைய  பேர்  செத்து”….. எரிச்சலாய்   மீண்டும்  அமர்ந்து, சாப்பிட  ஆரம்பித்தார்   முஸ்தஃபா.  ஏனெனில்  அவருக்கு   வீட்டைத்   தாண்டி  வெளியில்  என்ன   சாப்பிட்டாலும்   அஜீரணக்  கோளாறு    ஏற்பட்டு   விடும்.   அவரே  உட்கார்ந்து   விட , வேறு  வழியில்லாமல்  ஜமால் ,  ஷாரிக்   இருவரும்   அமர்ந்தனர்.

       “தேனுகா”…அவள்   தலையை  பாசமாகத்   தடவினார்   சுல்தானா   பாட்டி.

       “உன்னைக்   கூடிய   சீக்கிரம்   என்ன   செய்யுறேன்னு   பாரு”   மனதிற்குள்  சபதம்   செய்து   கொண்டான்   ஷாரிக்.

                 *****************

     மறுநாள்   காலை.   கண்ணாடி   பார்த்து  தேனுகா   தலை   சீவிக்   கொண்டிருக்க , குளித்துவிட்டு   வந்தாள்   ரஷிதா.

       “வெளிய   போறியா  ரஷி?”

       “ஆமாக்கா .  காலேஜ்   வரைக்கும்   போகணும்.   இன்னிக்கு  அட்மிஷன்  போட   வர   சொல்லிருக்காங்க”

        ” வாவ்வ்வ்வ்வ்!!!!!…… சரி   பாத்து   பத்திரமா  போயிட்டு   வா  . என்னென்ன  எடுத்துட்டு  வர    சொன்னாங்கன்னு   ஞாபகப்படுத்திப்  பாத்து,   மிஸ்  பண்ணாம  எடுத்து  வச்சுக்க” 

         “சரி  அக்கா”   ஈரத்   துண்டை  கழற்றி, தலையை   துவட்ட   ஆரம்பித்தாள்.

       ” யார்  கூட  போற?  தனியா  வா  போற? அப்டி   தனியா   போறதா   இருந்தா,  ஜூனைத்தை   கூட்டிட்டுப்   போக  சொல்லு”

        “இல்லக்கா,   என்    பெஸ்ட்  ப்ரண்ட்  ப்ரியான்னு  ஒரு   பொண்ணு , அவளுக்கும்  அங்க  தான் சீட்   கிடைச்சிருக்கு .  அவ  கூட   தான்   போறேன்” 

        “சரிடா” தலை  சீவி   முடித்த  கையோடு, கப்போர்டை   திறந்து   கருப்பு   கோட்டை   எடுத்து   அணிந்திருந்த  சேலையின்   மேல்   மாட்டிக்   கொண்டாள் .  இந்த   கோட்  உனக்கு   அவ்ளோ   கெத்தா  இருக்கு  தேனு! ப்ரித்வியின்  குரல்  காதுக்குள்  ஒலிக்க , மனது   கனமானது.   அவன்   கட்டப்   போகிறான்   என   அவள்  கனவு  கண்டு  கொண்டிருந்த   தாலியை ,  இன்று  வேறு   யாரோ   கட்ட  ,  அவன்  வீட்டில்   வந்து   தான்   அமர்ந்திருக்கும்  அவல   நிலையை  நினைக்க   நினைக்க   மனதின்   வலி  கூடிக்   கொண்டே   போனது.  

        “அக்கா ,  என்னக்கா?”

      ” ஒண்ணுமில்ல”

       ” சரி   வாங்க   போலாம்”  

       “நீ   கிளம்பிட்டியா?  அவ்ளோ   தானா?”

        “ஆமாக்கா.  பத்து   மணிக்கு   காலேஜ்ல   இருக்கணும் .  அசந்து   தூங்கிட்டேன், அதனால   லேட்  ஆயிருச்சு .   ப்ரீ   ஹேர்   தான?   போகப்   போக   காஞ்சிரும்,  வாங்க” 

        ” வா ”   இருவரும்   அறையை  விட்டு  வெளியேறி ,  கதவை   சாத்திவிட்டு  ஹாலுக்கு   வந்தனர் . ஒரு   பெரிய  ட்ராவல்   பேக்கும்   கையுமாய்  , நசீமாவும்  அப்போது  தான்   அங்கு   வந்தாள்.   

       “என்ன  பாபி?   கையில  என்ன  பேக்?” 

       “ஒரு   மாசத்துக்கு   நான் ,  என்   புருஷன்,   என்   பிள்ளைங்க , எல்லாரும்   நம்ம   ஃபாக்டரில   வேலை   செய்யுறவங்களுக்கு   குடுக்குற   க்வார்ட்டர்ஸ்ல  போய்  தங்கப்  போறோம்.  என்   புருஷன்  , பிள்ளைங்க  கூட   பின்னால   வர்றாரு.  இந்த  வீடு  இப்போதைக்கு   ஒரு   சைத்தானோட    ஆதிக்கத்துல   சிக்கி   இருக்கு.   அந்த  சைத்தான்   ஒழிஞ்சப்புறம்   தான்  நான்  மறுபடியும்    இங்க   வருவேன்”.

                                                – தொடரும்  

         

         

         

        

      

        

       

    No comments yet.