10.
“சுல்தானா” அழைத்தார் இப்ராஹிம் தாத்தா. வீட்டின் பக்கவாட்டில் அமைந்திருந்த தோட்டத்தின் ஊஞ்சலில் அமர்ந்திருந்த பாட்டி திரும்பினார்.
“என்னங்கத்தா வேணும்? டீ தரட்டுமா?”
“இல்ல இல்லமா. இன்னும் கொஞ்ச நேரத்துல தான் சாப்பிடுற நேரம் வந்திருமே ? உன்னை பாக்கத் தான் வந்தேன், கொஞ்சம் பேசணும்”
“உக்காருங்க” அவர் எழ முற்பட,
“இல்லம்மா, பெரிய ஊஞ்சல் தான? இரண்டு பேருமே உக்காந்துக்கலாம்”
” சரிங்க” பாட்டியின் அருகில் அமர்ந்து கொண்டார் தாத்தா.
“ஜூனைத் தேனுகா விஷயத்துல நான் எடுத்த முடிவைப் பத்தி நீ என்ன நினைக்கிற சுல்தானா?”
“நல்ல முடிவு தாங்க”
” சும்மா எனக்காக சொல்லக் கூடாது. உன் மனசுல என்ன நினைக்கிறங்குறது தான் எனக்கு தேவை” மெல்ல புன்னகை சிந்தினார் சுல்தானா
“என்ன ?”
“என்னமோ தெரியல, இது தேனுகா. என்னோட மனைவின்னு மங்க்னா அன்னிக்கு ஜூனைத் அந்த பொண்ணை அறிமுகப்படுத்துனப்போ எனக்கு அதிர்ச்சியா மட்டும் தான் இருந்ததே தவிர, அந்த பொண்ணு மேல கோபமோ இல்ல வெறுப்போ வரலங்க. அதனால அவளை நீங்க இங்கயே இருக்க சொன்னது எனக்கு நல்லா தான் இருக்கு. அவளை நீங்க அனுப்பாம இருந்தா நல்லா இருக்கும்னு தான் நான் நேத்து முழுக்க யோசிச்சுட்டு இருந்தேன் . அந்த பொண்ணு கிட்ட இரண்டு நாளா நான் எதுவும் பேசல. ஆனா அவளை பேச விட்டு நாள் பூரா கேட்டுக்கிட்டே இருக்கலாம் . அப்டி ஒரு இனிமையும், கம்பீரமும் கலந்த குரல். அதோட பேச்சில் தான் எத்தனை தெளிவு, பண்பான வார்த்தைகள்? ஐயோ! இந்த பொண்ணை இழக்கணுமான்னு பயந்தேன் . நல்ல வேளையா நீங்க நான் நினைச்ச மாதிரியே சொல்லிட்டீங்க” பெருமூச்சு விட்டார் இப்ராஹிம்.
“நீயும் நானும் அந்த பொண்ணை ஏத்துக்கிற மனநிலைக்கு வந்துட்டோம் சரி தான். ஆனா நம்ம வீட்ல மத்தவங்களுக்கு அந்த பொண்ணை பிடிக்கணுமே? அது எல்லாத்தையும் விட தேனுகாவுக்கு இங்க எல்லாரையும் பிடிக்கணுமே ? அது இங்க இருந்து போறேனுல்ல ஒத்தக்கால்ல நிக்குது ?”
“ப்ச், அதெல்லாம் ஒண்ணுமில்லங்க. அவ இயல்புக்கு, சீக்கிரமா எல்லாரையும் கவர்ந்திருவா. நம்ம எல்லார் கூடவும் சிறப்பா பொருந்தி போயிருவா”
“அப்டி பொருந்தி போறதுக்கு நம்ம நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தித் தரணும் சுல்தானா. நசீமா மாதிரி ஆட்கள் இருக்கும் போது , அது எப்படி சாத்தியம்? அவ கூட பாத்தா ரஷி எவ்ளோ சின்ன பொண்ணு? அவ எவ்ளோ அருமையா, அழகா, பக்குவமா பேசுறா. அந்த அறிவு அவளுக்கு இருக்கா? ஜூனைத் நிக்காஹ்னால ரஷியை விடவா வேற யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்? நம்ம எல்லாருக்கும் மனவேதனை தான். ஆனா, ரஷிதா குட்டிக்கு அது மனமுறிவு . அதை அவ்ளோ ப்ராக்டிக்கலா கடந்து வர முயற்சி பண்றா. நசீமாலாம் அவ கிட்ட டியூஷன் கத்துக்கணும்”
“நீங்க சொல்றது சரி தான் . காலையில அவ பேசுனதுல இருந்து எனக்கு ஒண்ணு மட்டும் நல்லா புரிஞ்சதுங்க. ரஷி இன்னும் சின்ன பொண்ணு இல்ல . அவ நல்லா வளர்ந்துட்டா. பொட்டில அடிச்ச மாதிரி நியாயங்களைப் பேச ஆரம்பிச்சுட்டா . ஜமால் கண்ணுலயே விரலை விட்டு ஆட்டிட்டாளே? அவளை நம்ம தானங்க வளர்த்தோ?ம் அந்த ரீதியில ரஷியை நினைச்சு நம்ம பெருமைப்படணும். அல்லாஹ்வோட கருணை எப்பவுமே அவளுக்கு கிடைக்கட்டும்”
“நீ இன்னிக்கு நடந்த நல்ல விஷயங்களையே நினைச்சுட்டு இருக்க சுல்தானா. ஆனா என்னால அப்படி இருக்க முடியல. நம்ம வீடு நம்ம கண்ணுக்கே தெரியாம இரண்டு அணிகளா பிரிய ஆரம்பிச்சிருக்கு. அதுக்கு ஆண் தலைவர் நம்ம முஸ்தஃபா மாப்பிளை, பெண் தலைமை நசீமா . நம்ம மக நிஷாவும் ,வீட்டுக்காரர் சொல்றதைத் தட்ட முடியாம தவிக்கிறா. இந்த நிலமை நீடிச்சா என்ன நடக்கும்? ஊர் உலகம் என்னைப் பத்தியோ, என் குடும்பத்தைப் பத்தியோ, என்ன பேசும்னு நான் கவலைப்படல. நான் கஷ்டப்பட்டு வளர்த்து ஒண்ணு சேர்த்த குடும்பம், நான் உயிரோட இருக்கிற வரைக்கும் பிரியக் கூடாது . நான் போன பிறகு என்ன வேணாலும் நடக்கட்டும்” அவர் பேசப் பேச , சுல்தானா பதறினார்.
” என்னங்க இந்த மாதிரிலாம் பேசுறீங்க? உங்க மனக்குறை எனக்கு புரியாம இருக்குமா? நான் ராத்திரி சாப்பிட்டு முடிச்சதும், நசீமாவை தனியா இங்க தோட்டத்துக்கு கூட்டிட்டு வந்து அவளுக்குப் புரியுற மாதிரி எல்லாம் தெளிவா சொல்றேன். அவ கொஞ்சம் முசுடு , கோபப்பட்டுக்கிட்டு இருப்பா, ஆனா பேசுறது காதுல ஏறாமலயா இருக்கும்? நான் பேசுறேன். எல்லாம் சரி பண்ணிடலாம். நம்ம யார் குடியையும் கெடுக்கலங்க . அல்லாஹ் இருக்கான். இந்த ஒரு மாசத்துல எல்லாம் சரி ஆகி, ரொம்ப சந்தோஷமா இருப்போம். வாங்க, நேரம் ஆகுது சாப்பிடலாம்” தாத்தாவின் கையை ஆறுதலாகப் பற்றிக்கொண்டு, வீட்டின் உள்ளே அழைத்துச் சென்றார் சுல்தானா பாட்டி.
“ரஷிதா , உன் ரூம்ல தாத்தா என்னை ஸ்டே பண்ணிக்க சொல்லிட்டாரு, உனக்கு அதுல ப்ராப்ளமில்லையே?”
“இதுல என்னக்கா இருக்கு ? உங்க கூட தங்கப் போறது எனக்கு ரொம்ப ஜாலியா இருக்கு . இது வரை எங்க பாபிகள் கூட, என் கூட இப்படி வந்து உக்காந்து பேசிக்கிட்டு இருந்ததில்ல. இது எனக்கு ரொம்ப புதுசுக்கா. என்னனு தெரியல, ஐ லைக் யூ” கள்ளம் கபடம் இல்லாமல், சிறு குழந்தை போல் சிரித்தாள் ரஷிதா பேகம்.
” எனக்கும் உன்னை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு கண்ணா. அவள் கன்னங்களை செல்லமாகக் கிள்ளினாள் தேனுகா. ” உன் கூட பேசும் போது, ஏதோ ரொம்ப நாள் பழகுன ப்ரண்டு கூட பேசுற ஒரு உணர்வு . இப்ப என் கூட இருக்குற மாதிரி, நான் இந்த வீட்டை விட்டு கிளம்புன பிறகும் இதே மாதிரி என் கூட பேசணும் , பழகணும்”
” அக்கா, நீங்க எங்க போகப் போறீங்க? இங்க தான் இருந்தாகணும். எங்க ஃபேமிலி கிட்ட மாட்டிக்கிட்ட நீங்க இறுதி வரை தப்பிக்கவே முடியாது. எங்க நன்னா நன்னியை நீங்க இம்ப்ரஸ் பண்ணிட்டீங்க. அவங்களுக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு “
“சும்மா ஏதாவது சொல்லிட்டு இருக்காத . இந்த வீட்ல நிறைய பேருக்கு என்னைப் பிடிக்கல. நான் இங்க நிரந்தரமா தங்குறதுலாம் செட் ஆகாது . நான் ஒரு மஞ்சு மூட்டம் மாதிரிடி. இந்த குடும்பத்தை தற்சமயம் சூழ்ந்திருக்கேன். விலகிருவேன் . நான் இங்க இருப்பேன்னு எதிர் பார்க்காத, என்னை கன்விண்ஸ் பண்றதுக்கும் ட்ரை பண்ணாத, அது உனக்கு ரொம்ப கஷ்டம், சரியா?”
……………. ஒன்றும் பேசாமல் கொஞ்சமாய் நகர்ந்து வந்து , அவள் மடியில் படுத்துக் கொண்டாள் ரஷிதா. அமைதியாய் விட்டத்தை வெறித்தாள். அவளது மௌனத்திற்கான காரணம் புரிந்தும் , அவளிடம் மேலும் பேச்சு குடுக்க முயலவில்லை தேனுகா. என்ன ஆனாலும் நான் பாதியில் போகப் போகிறவள். அன்பால் இவளை நனைய வைத்துவிட்டு பின் விட்டுச்சென்றால், பாவம் சிறுமி, துடித்துப் போவாள். ஏனோ அவளைப் பார்க்கையில், தேனுகாவுக்கு தன் தங்கை ப்ரியலேகாவின் நினைவு வந்தது. மெல்ல கண்கள் கலங்கியது.
“ரஷி” வெடுக்கென கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள் நஸ்ரின் ஃபாத்திமா. தேனுகாவின் மடியில் அவள் படுத்திருப்பதைக் கண்டவுடன் , அவள் மனதில் வெறுப்பு மண்டிக் கொண்டு வந்தது.
“சொல்லு பாபி”
“என்னடி பண்ணிட்டு இருக்க?”
“அக்கா கூட பேசிட்டு இருக்கேன். ஏன் ? பாத்தா எப்டி தெரியிது?”
“வெட்டியா வாய் பேசாம.. சாப்பிட வா , டைம் ஆகுது”
” ம்ம்ம்ம்”
“ம்ம்ம்ம் னா என்ன அர்த்தம்? இது என்ன பதில் ? வாடி”
“வர்றேன்னு அர்த்தம். நீ போ, நான் அக்காவை கூட்டிக்கிட்டு பின்னாடியே வர்றேன் . போ பாபி” அவள் கதவை பட்டென சார்த்திவிட்டு சென்றாள்.
“லூசு.. அது கிடக்குது. நீங்க வாங்க அக்கா , நம்ம சாப்பிடப் போலாம்”
” இல்லடா, நீ போ. நான் அப்றமா வந்து சாப்பிட்டுக்குறேன். எனக்கு பசியே எடுக்கல , நீ நல்லா சாப்பிட்டுட்டு வா”
“அதுலாம் இல்ல நீங்களும் என் கூட வர்றீங்க ,அப்போ தான் நான் போவேன். இல்லன்னா எனக்கும் சாப்பாடு வேணாம்”
“ரஷிதா”
“அக்கா”
“ஏன்டி இப்டி பிடிவாதம் பிடிக்குற?”
“ஏன்? நீங்க பிடிக்கலயா?”
“சரி நானும் வர்றேன், நீ வா”
“ஹான்ன்ன்ன் …. இப்ப தான் நீங்க குட் கேர்ள் , வாங்க ” அவள் கையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு, அறையை விட்டு வெளியே வந்தாள் ரஷிதா. நிறைய கண்கள் அவளை முறைத்தன. எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் தேனுகாவிடம் பேசிக்கொண்டே டைனிங் டேபிளை நெருங்கி , அவளை அமர வைத்துவிட்டு அவளும் அமர்ந்தாள். பாட்டி ,தேனுகாவின் அருகில் வந்து நின்று தட்டு வைத்தாள். மூன்று பரோட்டாக்களை அவள் தட்டில் வைத்தாள்.
“பாட்டி , மூணுலாம் என்னால சாப்பிட முடியாது , இரண்டு போதும்”
“சும்மா சாப்பிடு , காத்து வேகமா அடிச்சா பறக்குற மாதிரி இருக்க. வயசுப் பிள்ள, சரியா சாப்பிடணும்” ஜூனைத், பாட்டியின் செயலால் அகம் மகிழ்ந்தான்.
“கதீ , உள்ள வெஜ் குருமா அந்த வாய் அகண்ட பாத்திரத்துல , சிவப்பு மூடி போட்டு அடுப்பு கிட்ட வச்சிருப்பேன் . அதை எடுத்துட்டு வர்றியாமா?”
“சரிங்க மாமி” ஜூனைத்தின் அம்மா கிச்சனுக்குள் செல்ல, வரிசையாய் அனைவர் தட்டிலும் மட்டன் குழம்பை ஊற்றிக் கொண்டு வந்த நசீமா, வேண்டுமென்றே தேனுகா தட்டிலும் அதே குழம்பை ஊற்றிவிட்டாள். ஆட்டின் ஈரல் அவள் தட்டில் விழுந்தது. அதைப் பார்த்ததும் சட்டென ஒவ்வாமை ஏற்பட, வாயை மூடிக்கொண்டு எழுந்தாள் தேனுகா. பதறிய இப்ராஹிம்,
“என்ன நசீமா? கவனமா இருக்க வேணாமா ? அசைவ வாடையே இல்லாம வளர்ந்த பொண்ணு தட்டுல, இப்டி மட்டன் குழம்பை ஊத்திட்டியே?” நன்றாகக் கடிந்து கொண்டார்.
“கவனக்குறைவா லாம் ஊத்தல ராதா. நம்ம வீட்டு மருமக தானே? நம்ம பழக்கத்தை பழக வேணாமா?”
“ஆமா, அவ சொல்றது சரி தானே?” ஜமால், மனைவிக்கு கொடி தூக்கினான்.
“ஆமா … அம்மா தேனுகா, இதான் எங்க வீட்டுப் பழக்கம் . வாரத்துல பாதி நாள் நான் வெஜ் தான். ஜூனைத் பொண்டாட்டினு இந்த வீட்ல உரிமையா தங்க தெரியுதுல்ல? அப்ப சாப்பிடு”….. இது முஸ்தஃபா…
“ஏய் , அதான் சொல்றோம்ல ?உக்காரு”
“நசீமா, உனக்கு அவ்ளோ தான் மரியாதை ” ஜூனைத் அலறிக் கொண்டிருக்க, அவனைக் கண்டு கொள்ளாமல் தன் முகத்தைத் திருப்பிக் கொண்ட நசீமா,
“உக்காருடி” தேனுகாவின் தோளில், மூர்க்கமாக கையை வைத்து அழுத்தினாள்.
– தொடரும்
No comments yet.