கல்யாணம் முதல் காதல் வரை – 1

Shanmuha Sethuramachandran | 21 Nov 2025 | Share

                              1.

         “ரஷி” 

        “ம்ம்ம்”  

       “கண்ணுல   மை   போட்டுக்க , அப்போ   தான்   அழகா  இருக்கும்  . கண்ணைக்  காட்டு   , நான்    போட்டு   விடட்டுமா?”

       “வேணாம்   பாபி”

       “என்னடி   இது  ?இன்னிக்கு   உனக்கு   மங்க்னா,  ஜொலி    ஜொலின்னு   ஜொலிக்க    வேணாமா?   எதைக்  கேட்டாலும்  வேணாம்   வேணாம்னே   சொல்லிட்டு  இருக்க”  நஸ்ரின்  ஃபாத்திமா   கேட்க  , அவளை  நிமிர்ந்து    பார்த்து   புன்னகைத்தாள்  ரஷிதா   பேகம்.  

        “என்ன    சிரிக்கிற?” 

       “ஒண்ணுமில்ல   பாபி” 

        “அட   சொல்லுடி”

        “இல்ல  , உனக்கு   மங்க்னா  வச்சப்ப   எவ்ளோ   அமைதியா   இருக்குற   இடம்  தெரியாம    இருந்த?   இப்ப   நிக்காஹ்  முடிஞ்ச   உடனே   உன்னைய   நீயே   பெரிய  கிழவின்னு   நினைச்சுக்கிட்டு,   எனக்கு   கோளாறு   சொல்லிட்டு   இருக்கல?   அத   நினைச்சேன்   சிரிச்சேன்”   தன்  வாயை  மூடிக்   கொண்டு   சிரித்தாள்   ரஷிதா.

       ” வாய்   ரொம்ப   ஜாஸ்தி   ஆகிருச்சு   உனக்கு .  எங்க  ஜுனைத்   கிட்ட   சொல்லி  அதிகம்   பேசுற   அந்த   வாயை   முதல்ல   உடைக்க  சொல்லணும்” 

       “வாயை   உடைக்கணுமா?   ஓ,   நீ   சொன்னதும்   எங்க   மாமு   என்   வாயை  உடைச்சிருவாரா? அப்டின்னு  நீ  நம்புறியா?”

     “ஏன் ?  ஏன்   உடைக்க   மாட்டான்?” 

      “ஏன்னா   என்னை   அவருக்கு  ரொம்ப  பிடிக்கும்,   அதனால   அடிக்க   மாட்டாரு”

   “எல்லா  ஆம்பளைங்களும்   ஒரே  மாதிரி  தான் .  மாற்றம்   அவங்களுக்கு   சர்வ  சாதாரணம்.  நிக்காஹ்வுக்கு   அப்புறம்   நிச்சயமா பழைய   மாதிரி   இருக்க  மாட்டாங்கடி.   ஏன்   இப்ப   உங்க   அண்ணனை  எடுத்துக்கயேன்,   முன்னாடி எப்படி    இருந்தவர்    தெரியுமா?”

      “ஃபாத்திமா  இங்க   வாயேன்”    என   ரஷிதாவின்  தாய்   நிஷா   அழைக்க,

       “இதோ   வந்திட்டேன்   மாமி,  இருடி  வந்துடறேன்”    சொல்லி விட்டு  அவள்   ஓடினாள்.  ஹோல்ட்   ஆன் …..  நம்   கதை,    அதில்   தோன்றும்   சூழ்நிலை,  மற்றும்  கதாபாத்திரங்கள்  அனைத்தையும்   பற்றி  விரிவாகக்   காணலாம் .

     இப்ராஹிம்சுல்தானா  தம்பதிக்கு   மூன்று  பிள்ளைகள்,   இரண்டு   பெண்  குழந்தைகள், ஒரே  ஒரு  ஆண்  இரண்டு பெண்களையும்,   தங்கள்  சொந்தத்தில்  உள்ள   மாப்பிளைகளுக்கே  திருமணம்  செய்து  வைத்து,   தனியாக  தொழிலும் அமைத்து   குடுத்துவிட்டதால்,  அனைவரும்   ஒன்றாக   ஒரே   வீட்டில்   தான்  வசித்து  வருகின்றனர் .  மூத்த   மகள் ஆயிஷா.  அவரது    கணவர்  பகீம் . இவர்களுக்கு  குழந்தை   இல்லை.   இரண்டாவது   மகள் நிஷா ,  அவரது    கணவர்  முஸ்தஃபா.  இவர்களுக்கு     இரண்டு   ஆண்  பிள்ளைகள்,  ஜமால்   மற்றும்  ஷாரிக்.   மற்றும்   ஒரு   பெண்,   அவள்   தான் ரஷிதா  பேகம்.    இப்ராஹிமின்   கடைசி   குழந்தையான   மகனின்   பெயர் ரபீக்,    மருமகள்  கதீஜா.   இந்த   ஜோடிக்கு  இரண்டு   பெண்   பிள்ளைகள்.  கடைசி   கடைசியாய்  ஒரே  ஒரு   ஆண்  பிள்ளை.  ஒருத்தி  ஜமாலின்   மனைவியான நசீமா,  ஒருத்தி    ஷாரிக்கின்   மனைவியான  நஸ்ரின்  ஃபாத்திமா  . கடைசி   பையன்   தான்   ஜூனைத்   கான் .   மூன்று   கொள்ளு  பேரப்பிள்ளைகளும்    உண்டு  ஹாலித்ஹஸ்மத்   மற்றும்  ஜலால்.

      இறைநம்பிக்கை  அதிகம்  கொண்டவர்    இப்ராஹிம்.  அல்லாவுக்கு  அடுத்தபடியாக  அவர்   அதிகமாக   பற்று   வைத்திருப்பது   அவர்   குடும்பத்தின்   மீது  தான்.  மிகவும்  கட்டுக்கோப்பான  குடும்பமாய்,   எல்லாரையும்   செதுக்கி  வைத்திருந்தார்.  முக்கியமாக   திருமண  சம்பந்தம்  கூட   அந்த   குடும்பத்துக்குள்ளேயே   தான்.  இது  வரை ,அவர்    ஆசைப்பட்டபடி   தான்  அந்த   வீட்டில்   எல்லாமே    நடந்து    வருகிறது.  இன்று   அவர்களுக்கு   ஒரு   முக்கியமான   நாள்  . அந்த   குடும்பத்தின்   கடைசி  ஆண்   வாரிசு  ஜுனைத்திற்கும் , பெண்  வாரிசு  ரஷிதா  பேகத்திற்கும்,  அன்று  மங்கனா.   அதாவது    நிச்சயதார்த்தம். 

       “ரஷி”…..   ஏதேதோ  சிந்தனையில்  தரையைப்  பார்த்து  அமர்ந்திருந்த  ரஷிதா,  மெல்ல  திரும்பினாள்  . அறை   வாசலில்   சுல்தானா,   ரஷிதாவின்   நெருங்கிய   தோழி  ப்ரியாவுடன்   நின்றிருந்தார். 

      “ப்ரியா” சேரில்   இருந்து   எழுந்து   ஓடிச்  சென்று ,  அவளை  கட்டிக்கொண்டாள்.

      “நன்னிம்மா ,  இது   ப்ரியா.   ஸ்கூல்ல   என்னோட   ஒரே   பெஸ்ட்   ஃப்ரண்ட்”  

    “தெரியும்  கண்ணா, பாப்பா சொல்லுச்சு. சரி ,  நீ   சீக்கிரமா  சீலை  கட்டிக்க,  தயார்  ஆகு ,  நேரமாகுதில்ல?”

      “ஜுனைத்   மாமு   வந்துட்டாரா?”

       “அவன்   வந்துருவான்டி,  நீ   கிளம்பு”  

      ” சரி   நன்னி.   பத்தே   நிமிஷத்துல  சேலை   கட்டிடுறேன்.   ப்ரியாவுக்கு    ஜூஸ்  மட்டும்    கொண்டு   வர    சொல்லு”

     “கொண்டு   தர  சொல்றேன்”  சுல்தானா   விலகி    சென்றுவிட ,   அவளை  முறைத்தபடி   நின்றிருந்த   ப்ரியாவைப்   பார்த்து  புன்னகைத்தாள்   ரஷிதா. 

        “என்ன   சிரிக்கிற?”

       “என்   என்கேஜ்மென்ட்டுக்கு   வர   மாட்டேன்   வர   மாட்டேன்னு   சொல்லிட்டு   இருந்த ,   ஆனா    இப்ப   முதல்   ஆளா  வந்து   நிக்குறதைப்   பாத்ததும்  தன்னால   சிரிப்பு    வந்துருச்சு “

     ” என்ன   பண்ணி   தொலையுறது?  உன்   மேல   உண்மையான   அன்போட   பழகி  தொலைச்சிட்டேனே,   எப்டியோ  போன்னு  என்னால   விலகி   போக  முடியலயே” 

      “இந்த   சேலை   தான்டி   கட்டப்  போறேன் .  எவ்ளோ   அழகா   இருக்கு   பாரேன். செம்ம   க்ராண்டா    இருக்கில்ல?  மாமா   எனக்கே   எனக்குன்னு   செலக்ட்   பண்ணினாராம்.  எங்க   மாமி   சொன்னாங்க”  அவள்  முகத்தில்   வழிந்த   பெருமையை, பாவமாய்  பார்த்தாள்  ப்ரியா. 

      ” நான்    சொல்றதைக்   கொஞ்சம்  கேக்குறியா   ரஷிதா?   ப்ளீஸ்”

      “சொல்லு”

      “நீ    எவ்ளோ    நிறைய    மார்க்   வாங்கிருக்க ?   அறநூறுக்கு   ஐநூத்தி  அறுபத்தி    ஆறு” 

     “ஆமா ,அவ்ளோ   மார்க்   தான்  வாங்கி  வச்சிருக்கேன்  . அதுக்கு    இப்ப   என்னடி?”

      “நீ   மேல   படிச்சா   உனக்கு   அது   எவ்ளோ    யூஸ்ஃபுல்லா   இருக்கும்   தெரியுமா ?  உனக்கு    இயல்பாவே   நிறைய   திறமை    இருக்கு   ரஷி,   அதை   சரியா  பயன்படுத்திக்கிட்டா   உன்னால  நிறைய   சாதிக்க   முடியும்” 

      ” ப்ச் ,   இங்க   பாரு   ப்ரியா,   ஒரு   விஷயத்தை    நீ    புரிஞ்சுக்காம   பேசிக்கிட்டு    இருக்க.   நான்   படிக்க   மாட்டேன்னு   சொல்லவே   இல்லயே?  நான்   நிச்சயமா   காலேஜ்ல   சேருவேன்,  மேல   படிப்பேன்.  ஆனா படிப்பா கல்யாணமான்னு   பாத்தா,  என்னோட   முதல்   ப்ரிஃபரென்ஸ்  கல்யாணத்துக்கு  தான்.  இது   எங்க   தாத்தாவோட   கனவுடி.  அதை   என்னால   கலைக்க   முடியாது” 

       “நீ    இந்த    சின்ன   வயசுல   அவங்களுக்காக    இவ்ளோ   யோசிக்கிற. ஆனா   உன்    வீட்டு   மனுஷங்க   யாரும் உனக்காக   யோசிக்கிற   மாதிரி   எனக்கு   தெரியல”

       “ப்ரியா,   பாத்துப்   பேசு”   பாம்பை   போல்   கோபமாய்   சீறினாள்   ரஷிதா.  

      “இல்லடி    அது”

      “இங்க   பாரு ,   எனக்கு    பதினெட்டு   வயசு   முடிஞ்சிருச்சு.  வயசோட   சேர்த்து  என்  வாழ்க்கையைப்  பத்தி  முடிவெடுக்குற   அறிவும்   எனக்கு  வந்திருச்சு .  எனக்கு   எங்க   மாமுவை   கல்யாணம்   செய்ய   முழு   சம்மதம்    .இங்க   எல்லா   ஏற்பாடும்   என்னை   கேட்டு  , என்    நாலெட்ஜோட    தான்  நடந்துட்டு  இருக்கு.  எங்க  ஜூனைத் மாமாவை   எனக்கு   அப்டி   பிடிக்கும். என்ன  நான்   சொல்றது    புரியுதா ?  தெளிவா  மண்டைல   ஏறுச்சா?    இதோட   இந்த   பேச்சுக்கு  ஒரு  ஃபுல்ஸ்டாப்   வச்சிடு” வேகவேகமாக   புடவையை   விரித்து   ப்ளீட்ஸ் வைக்க  ஆரம்பித்தாள்.  ப்ரியாவின்  கண்கள்  லேசாகக்   கலங்கியது.

       “சரி  , இனி   நான்    உன்கிட்ட   இதைப்  பத்தினு   இல்ல   எதைப்   பத்தியுமே    பேசல.   ஆனா   இப்ப   நான்   உங்க   வீட்டுக்கு    வந்ததுக்கு    வேற   ஒரு  முக்கிய   காரணம்    இருக்கு”

        “என்ன    காரணம்?”

        “நம்ம    ப்ரின்சிபல்   கல்யாணி   மேம்  நீ    ஃப்ரீயா   இருக்கும்    போது    உன்னை  அவங்களுக்கு கால் பண்ண சொன்னாங்க.   உங்க   வீட்டுக்கு    இரண்டு   மூணு   தடவை   ட்ரை  பண்ணாங்களா,ம்   லைன்  கிடைக்கல  .அதுனால   தான்  என்னை   சொல்ல  சொன்னாங்க .மறக்காம  பேசிரு”

       “நான்   கண்டிப்பா   மேம்   கிட்ட   பேசுறேன் , இன்னிக்கு   நைட்குள்ள  கால்  பண்ணிடுறேன்”

       “ம்ம்ம் .   நான்    கிளம்புறேன்”

       “எங்க    போற?”

        “வீட்டுக்குத்   தான்”

       “என்ன,   திட்டிட்டேன்னு   கோபமாக்கும்? நிச்சயம்   முடியிற   வரை   நீ   என்   கூட     தான்    இருக்கணும்” 

       “ரஷி”   கூப்பிட்டுக்   கொண்டே   உள்ளே  வந்தாள்   நஸ்ரின்   ஃபாத்திமா.  கையில் கண்ணாடி   டம்ளரில்  லெமன்  ஜூஸ்.

       “வா  பாபி  . ப்ரியா ,  இவங்க   தான்   என்  அண்ணி.   ஷாரிக்  அண்ணாவோட  வைஃப்.  பாபி  , இவ   என்   ப்ரண்ட்  ப்ரியா”  கதவை  சாத்தி   தாழிட்டாள்   ரஷிதா.  இருவரும்    ஒருவரை   ஒருவர்  பார்த்து  புன்னகைத்துக்    கொண்டனர். 

      “இந்தா   பாப்பா   ஜூஸ்”   

      “வேணாங்க   அண்ணி”

       “அட,   குடி   பாப்பா.  உனக்காகத்   தான்   கொண்டு   வந்தேன்”

        …………

        “குடி   டி ”  டம்ளரை   வாங்கினாள்  ப்ரியா.  மளமளவென  புடவையைக்  கட்டி முடித்தாள்  ரஷிதா . அதே   நேரம்,  வாசலில்  பீங்க்க்க்க்க்க்   என  நீளமான   ஹார்ன்  சத்தம்.  அது  ஜூனைத்  கார்   தான்,   ஹோண்டா   சிட்டி.

      “ப்ரியா,   வா  வா,   எங்க   மாமுவை  உனக்கு    காட்டுறேன் ”  அவளை  ஜன்னல்  அருகே   இழுத்து    சென்றாள்   ரஷிதா.  அவளது   ரூம்   வாசலை   ஒட்டி  அமைந்திருந்த படியால் , வாசலும்,  காரும்     நன்றாகத்  தெரிந்தது .  கார்   மெல்ல   ஊர்ந்து , போர்டிகோவில்  வந்து  நின்றது.   சுல்தானாவும்  , இப்ராஹிமும் வேகமாக   காரை   நெருங்கினர் .  காரை   ஓட்டி   வந்த   ஜூனைத்,   உம்மென்ற   முகத்தோடு  கீழே   இறங்கினான் . நெடு   நெடு   உயரம்.

       “என்னப்பா,  மங்கனாவை  வச்சுக்கிட்டு   இவ்ளோ    நேரம்   எங்க   போயிட்ட?”

       “ராதிம்மா  அது….அது”…  காரின்  பின் கதவைத்   திறந்து   கொண்டு , அந்த இளம்  பெண்  கீழே    இறங்கினாள் .  பெரிய  விழிகளில்   கண்ணீர்.   மருண்ட  பார்வை.  கழுத்தில்  புத்தம்   புது   தாலி   சரடு…

      “ஜூனைத்,   யார்   இந்த   பொண்ணு?”  இப்ராஹிம்   கேட்க

     “அ…அது…இது  தேனுகா,  என் மனைவி”   என்றான்   ஜூனைத்.     

                                               –  தொடரும்…..      

   

     

      

       

       

    No comments yet.