காரணங்கள் பலவாக இருக்கலாம்.ஒவ்வொரு மனிதனும் வாழ்நாளில் படும்
துயரங்கள் துன்பங்கள் கண்ணில் பனித்துளியை உதிர்க்காமல் வெள்ள நீரை வழிய விடுகின்றன.
என் சொந்த ஊருக்கு தற்செயலாக போக வேண்டி இருந்ததால் காலையே கிளம்பி சென்றேன்.மாமனார் ஊரிலிருந்து சொந்த ஊர் தூரம் அதிகமிருப்பதால் அந்தி மயங்கும் வேளையில் தான் ஊருக்குள் சென்றேன்.எங்கள் வீட்டுக்கு போகும் பாதை நிறைய இருந்தாலும் அந்த கருவாட்டு கடை வழியாக சென்றால் தான் வேகமாக போகமுடியும்.
கருவாட்டு கடை என்பது சிறுவயதுகளில் என்னைப் போன்ற சிறுவர்களின் சொர்க்க பூமி.ஏனென்றால் எங்களுக்கு பிடித்த லக்கி பிரைஸ்.அதுவும் விளையாட்டு பொருட்கள் பரிசாக கிடைக்கும் ஒரே கடை கருவாட்டு கடை.எட்டணா கொடுத்து பம்பரம் வாங்க முடியாது.ஆனால் அஞ்சு பைசா இருந்தால் பிரைஸ் எடுக்க முடியும்.அதில் மரப்பம்பரம் அதுவும் குடை ராட்டினம் போல கொண்டை வைத்த பம்பரம் பரிசாக கிடைத்தால் விட மனசு வருமா என்ன.அதே மாதிரி செங்குளத்தில் மீன் பிடிக்க வேண்டும் என்றால் தூண்டில் முள்,அளவாக வெட்டிய மிதப்புக்கட்டை,பம்பர சாட்டை,கோலிக்குண்டு, பட்டம் என எங்களுக்கு பொழுது போக்கும் அத்தனை பொருட்களும் கிடைக்கும் ஒரே இடமாக இருந்தது கருவாட்டு கடை தான்.
கடை முதலாளி வயதானவர்.அவர் இறந்ததும் அவரது பிள்ளைகள் திருச்சி சென்னை என்று வேறு வேறு இடங்களில் இருந்ததால் கடையை பராமரிக்க ஆள் இல்லை.கொஞ்ச நாள் உள்ளூரில் யாருக்கோ லீஸ் விட்டு இருந்தார்கள்.ஆனால் பெரியவர் இருந்த போது நடந்த வியாபாரம் இல்லாமல் லீஸ் பணம் கட்ட முடியாமல் கடையை காலி செய்து விட்டனர்.அதன்பிறகு கடையை கவனித்துக் கொள்ள ஆளும் இல்லை.அதன் பிளவுகளை கூரைகள் பிய்ந்து விழும் பகுதிகளை சரிசெய்ய பெரியவரின் பிள்ளைகளும் வரவில்லை மற்றவர்களும் உதவவில்லை.விதி கூரை இடிந்து விழுந்ததில் பாழடைந்த கட்டடமாக எங்கள் தெருவுக்கு குறுக்கு வழியில் செல்லும் பாதையாக பயன்படுகிறது.முதலில் சிறுவர்கள் அவசரத்திற்கு ஒதுங்கும் இடமாக இருந்தது.இப்போது மது அருந்துபவர்களின் கட்டுபாட்டில் முழுவதும் இருப்பதாக தகவல்.ஆண்கள் அந்த குறுக்கு பாதையை பயன்படுத்துவார்கள்.பெண்களில்சில வரம் வாங்கி வந்தவர்கள் மட்டும் அந்த பாதையை கண்டு பயம் கொள்வதில்லை.ஏனெனில்அங்கே பெரிதாக அவர்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை.
இந்த வழியாக நான் நடந்த போது என் பின்னால் யாரோ பெண் காலடி ஓசை கொலுசு மூலம் உறுதி ஆனது.யாராக இருக்கும் என்று திரும்பி பார்த்தேன்.சுமதி அக்கா.அக்கா நீங்களா.நல்லா இருக்கீங்களா.வெளிய எங்கேயோ போனதா சொன்னாங்க அக்கா எனநான் கேட்டதற்கு.ஆமா தம்பி.என்ன செய்ய என்று அக்கா சொன்னதை அப்படியே உங்களுக்கு.
இது மோசமான காலம்.சொந்த ஊரில் வாழ முடியாமல் அயலகம் சென்றவர்கள் முன் வாழ்ந்துகாட்ட வேண்டும் என்று பிறந்த மண்ணை பிரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்த போது தான்.இந்த கொரோனா பரவி சேமிப்பின் பெரும் பகுதியை மூலதனமாக மாற்றி ஆரம்பித்த டீ கடையை மூடும் படி செய்தது.இனி உழைத்து வாழலாம் என்று நினைத்து கிடைக்கும் வேலைக்கு சென்று கொண்டு இருந்த போது தற்செயலாக எஸ்டேட் வேலைக்கு ஆட்கள் தேவை என்று சொன்னார்கள்.பக்கத்து வீட்டில் உள்ள சுகந்தி குடும்பத்தோடு பத்து வருஷத்துக்கு முன்னாடி எஸ்டேட் வேலைக்கு போனதும்.இப்ப மகளுக்கு இங்கே நல்ல இடத்தில் வரன் பார்த்து கல்யாணம் செஞ்சு வைச்சு சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து நாமும் எஸ்டேட் வேலைக்கு போகலாமே என நினைத்து சரி என்று சொன்ன பிறகு தான் சொன்னார்கள்.எஸ்டேட் இருக்கும் இடம் தேனி அருகே என்றால் வேலையும் தொடர்ச்சியாக இருக்கும்.சூழ்நிலையும் சாதகமாக வருடம் முழுவதும் இருக்கும் என்று கேள்வி பட்டேன்.ஆனால் எங்களுக்கு வேலை கிடைத்தது ஊட்டி பக்கம் உள்ள எஸ்டேடில்.இங்கே வேலை தினமும் இருக்கிறது.ஆனால் இலைகளை குறிப்பிடும் அளவு பறிக்கத்தான் வழியில்லை.காலநிலை மாற்றம்னு சொல்றாங்க படிச்சவங்க.
நாட்டுபுறத்தாளுங்க வெயில் மழை பனி எதுவுமே முன்ன மாதிரி இல்லை என்கிறார்கள்.காத்தடிக்க வேண்டிய நாளில் மழை பெய்து,மழை பெய்ய வேண்டிய நாளில் வெயில் போட்டு வாட்டி வதக்கி எடுக்கிறது.வெயில் அடிக்க வேண்டிய நாளில் பனி படர்ந்து சூரியனை மறைக்கிறது.அடைமழை பெய்ய வேண்டிய காலங்களில் தூரலும் சாரலும் கூட விழுவதில்லை.எல்லாமே மொறை தவறிவிட்டது என்கிறார்கள்.
இதுல நமக்கென்ன என்று தான் நானும் நினைத்தேன் ஆரம்பத்தில்.ஆனால் விதி மற்றவர்களிடம் கெஞ்சி கூத்தாடி விட்டு மொத்த சதியையும் எங்கள் தொழிலில் காட்டிவிட்டது.டீ எஸ்டேட் தொழில் சிறுசிறு புதர் செடிகளைச் சார்ந்தது.அது சாதாரண மண்ணில் முளைப்பது கூட கிடையாது.அது வேர்விட்டு வளர மண் வளம் அது கிளை பரப்பி துளிர் விட சாதகமான சூழ்நிலை இல்லை என்றால் அத்தனை செடிகளும் வளர்ந்து இருக்கும்.ஆனால் இளம் தளிர்கள் உற்பத்தி தேவையான அளவு இருக்காது.இங்கே இப்போது எல்லாம் பயங்கர மழை.மற்ற வருடங்களில் பனிக்காலத்தில் பனி காற்றில் கலந்து இருக்கும்.எதிரில் வரும் வண்டி எதுவும் தெரியாது.பகலிலேயே வண்டியின் லைட் எரிந்தால் மட்டுமே ஆக்ஸிடென்ட் ஆகாமல் வண்டி ஓட்ட முடியும்.இப்போது பனி கட்டிகள் தார் ரோடு, டீ ச்செடி, பெரிய பெரிய மரங்களில் படிந்து காலை பதினோரு மணி வரை இருக்கிறது.இந்தளவு பனி விழுவது இளம் தளிர்கள் உருவாக விடாமல் தடுக்கும்.ஏற்கனவே இருக்கும் இலைகளையும் கருகச் செய்து விடும்.அந்த நேரத்தில் தேவை அதிகம்.ஆனால் பறிப்பதற்கு இளம் தளிர்கள் இருப்பதில்லை என்றால் பறிப்பவர்கள் நிலைமை மோசம் தான்.பறித்து கொடுப்பார்கள் அதிகம் வருமானம் பெறும் காலம் இது தான்.பனி படர்ந்து சாதாரண நாட்களில் கிடைக்கும் தளிர்கள் கூட கிடைக்காமல் அவர்கள் தேவையும் நிறைவேறாமல், எஸ்டேட் நடத்துபவர்களும் அவதிப்படும் காலமாகிவிடுகிறது.பனிக்கட்டி உறைந்து அனைவரையும் பாடாய்ப்படுத்தி விட்டது இந்த ஆண்டு.இது வரை தகரத்திலும்,ஹாலோ பிளாக் கொண்டும் கட்டப்பட்ட லைன் வீடுகளில் இருந்தோம்.பத்து பதினைந்து வீடுகளுக்கு மூன்று கக்கூஸ்.காலை நேரம் ஒரே பிரச்சினை.வேலைக்கு எல்லோரும் ஒரே நேரத்தில் கிளம்புவதால் ஒன்னு ரெண்டு எதுவென்றாலும் உள்ளே இருப்பவர்கள் வரும் வரை காத்திருக்க வேண்டும் பஸ்ஸ்டாண்ட் கக்கூஸ் போல.வேலைக்கு போகும் இடத்தில் போகலாம் என்றால்
அது அடர்ந்த வனப்பகுதியில் இருப்பதால் கக்கூஸ் உள்ளே சாதாரணமாக பாம்பு போன்ற ஏதாவது உயிரினம் இருக்க வாய்ப்பு அதிகம்.எனவே நாள் முழுவதும் அடக்கப்பட்டதால் உடல் எங்கும் கழிவு ,நீராக வெளியேறி சொறி சிரங்காக மாறியிருந்தது.எப்படியாவது தனி வீடு கட்டி போக வேண்டும் என்று கஷ்டப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, கடனை வாங்கி வீடு கட்டி ஒரு வருடம் தான் முடிந்தது.பெய்யாமல் பெய்த பெருமழை அதை அப்படியே அடித்து சென்று மீண்டும் எங்களை ஆரம்பித்த இடத்திலேயே நிறுத்தி விட்டது.என்ன செய்ய என்று யோசித்தேன்.சொந்த ஊருக்கு வந்து விடலாம் என்று யோசிச்சு இங்கே வந்து விட்டோம் தம்பி என முடித்த போது.நாங்கள் கருவாட்டு கடை பகுதியை கடந்து கிட்டத்தட்ட எங்கள் வீட்டுக்கு பக்கம் வந்து விட்டோம்.சரிங்க அக்கா இனி சொந்த ஊருல சொந்த பந்தங்களோட சந்தோஷமா இருக்கலாம் என்று கூறி கிளம்பினேன்.
சுமதி அக்கா மட்டும் இல்லை எங்கள் ஊரில் பலபேர் நிலைமை இது தான்.எப்போதும் வந்தவர்களை வாழ வைக்கும் ஊர் நான் பிறந்த ஊர்.எங்கேயும் பிழைக்க முடியாதவர்கள் இங்கே வந்தால் வாழ வழியுண்டு.அதற்காக கோடீஸ்வரன் ஆக முடியுமா என்றால் என்னால் உறுதியாக எதுவும் சொல்ல முடியாது.அப்படி நான் பார்த்த ஒருவர் தான் கேசவன் அண்ணன்.அவரை முதன் முதலாக பார்த்த இடம் பிரிண்டிங் பிரஸ்.
No comments yet.