4.
யாரோ தன்னை உலுக்குவது போல் இருக்க , கட்டிலில் படுத்திருந்த தேனுகா, திடுக்கென எழுந்தாள் .எதிரில், பைகளைக் கொண்டு வந்து வைத்த வேலைக்கார அம்மாள் நின்று கொண்டிருந்தாள். கொஞ்ச நேரம் படுக்கலாம் என நினைத்து படுத்தது தான் நினைவிருந்தது. அசதியின் காரணமாகவும், அலைச்சலின் காரணமாகவும் , அவளையும் அறியாமல் நன்றாக தூங்கிப்போயிருந்தாள். எழுந்த உடன் வயிறு பசியில் கொர் என சத்தம் போட்டது. நேற்று காலையில் இருந்து சாப்பாடு என எதையுமே வயிற்றில் சேர்க்கவில்லை . மயங்கி விடக் கூடாதே என்று இரண்டு காபிகளை மட்டும் குடித்திருந்தாள் . கண்கள் வேறு லேசாக இருட்டிக் கொண்டு வருவது போல் ஒரு விதமான உணர்வு.
“சின்னம்மா, மணி இரண்டாச்சு . வாங்க சாப்பிடலாம். நேரமாகுதில்ல?”
“இல்லங்க பரவாயில்ல , எனக்கு வேணாம் , பசியில்ல”
“காலையில இருந்து சாப்பிடாம இருக்கீங்க , எப்டிம்மா பசிக்காம இருக்கும்? நீங்க இந்த மாதிரி தான் ஏதாவது சொல்லுவீங்கன்னும் , அதனால நீங்க முகம் கழுவிட்டு வர்ற வரைக்கும் கூடவே நின்னு உங்களைக் கையோட கூட்டிட்டு வரணும்னும் சொன்னாரு ஜூனைத் ஐயா”
……………..
“என்னமா யோசிக்கிறீங்க? புது வீடா இருக்கே, இங்க எப்படி சாப்பிடறதுன்னு யோசனை பண்றீங்களா ? இது உங்க வீடும்மா. நீங்க வரணும்னு சின்னய்யாவும் சாப்பிடாம காத்துக்கிட்டு இருக்காரு. வாங்க வாங்க” அவள் தேனுகாவின் கையைப் பற்ற, வேறு வழி இல்லாமல் எழுந்து, பாத்ரூமுக்குள் நுழைந்து, முகம் கழுவிக் கொண்டாள். பின் அந்த அம்மாளுடன் இறங்கி கீழே சென்றாள். அங்கு யாருமே இல்லை . வீடு முழுக்க மயான அமைதி .அந்த அமைதி தேனுகாவை வெகுவாய் இம்சித்தது.
“வாங்கம்மா, டேபிள் இந்த பக்கம். கிச்சன் வாசல்லயே இருக்கு. நீங்க சாப்பிட்டதும் இந்த வீட்டை நான் சுத்தி காட்டுறேன். எவ்ளோ நேரம் தான் உங்க ரூம்லயே அடைஞ்சி கிடப்பீங்க? இங்க எது எது , எங்கெங்க இருக்குன்னு தெரிஞ்சி வச்சிக்கிறது தான நல்லது?” பேசிக் கொண்டே டைனிங் டேபிளை நெருங்கினர் . விஸ்தாரமான , நீளமான டைனிங் டேபிள் . ஒரே நேரத்தில் இருபது பேர் அமர்ந்து சாப்பிடக் கூடிய அளவில் இருந்தது. வெறும் தட்டைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் ஜூனைத். அவன் அருகில் இருந்த சேரை நகர்த்திப் போட்டு , “உக்காருங்கம்மா” என்றாள். எதுவும் பேசாமல் அமர்ந்தாள் தேனுகா. டேபிள் மேல் இருந்த பார்சலை அவளை நோக்கி நகர்த்தினான் ஜூனைத்.
“இன்னிக்கு இங்க விசேஷம்னு ப்ளான் பண்ணிருந்ததால , ப்ரான் பிரியாணி , வொயிட் ரைஸ் , ப்ரான் தொக்குனு சமைச்சி வச்சிருந்தாங்க தேனுகா. வெறும் ரசத்தை மட்டும் நீ எப்டி சாப்பிடுவ? அதனால புகாரி ஹோட்டல்ல இருந்து உனக்கு வெஜ் ஃப்ரைடு ரைஸ் ஆர்டர் பண்ணிருக்கேன். வந்து .. நீ ஃப்ரைடு ரைஸ் சாப்பிடுவல்ல? சாரி உன்னைக் கேக்காம ஆர்டர் பண்ணிட்டேன் . வேணாம்னா சொல்லு, மாத்திரலாம் . என்ன?”
“இல்ல எனக்கு வெஜ் ஃப்ரைடு ரைஸ் எள்ளளவு கூட பிடிக்காது. நூடூல்ஸ் தான் பிடிக்கும். ஆனா மாத்த வேணாம் . நமக்குன்னு என்ன விதிக்கப்பட்டு இருக்கோ, அது தான் நமக்கு கிடைக்கும். எல்லாத்தையும் எப்பவுமே மாத்திட்டு இருக்க முடியாது” அந்த பார்சலைப் பிரித்து வைத்து, சாப்பிட ஆரம்பித்தாள்.
“ஆகா! இவங்க பேரு தேனுகா வா? பேருக்கு ஏத்த மாதிரி குரலும் தேன் போலத் தான் இருக்கு . பேசச் சொல்லி நாள் முழுக்க கேட்டுக்கிட்டே இருக்கலாம். ஐயா , பிரியாணி வைக்கட்டுமா ? இல்ல வெள்ளை சாதம் வச்சு தொக்கைப் போட்டு பிரட்டிக்கிறீங்களா?”
“இல்ல வனிதாம்மா, ரசம் மட்டும் போதும் எனக்கு”
“என்ன தம்பி இப்டி சொல்றீங்க? மீன் வகைகள் சமைச்சா அன்னிக்கு வழக்கத்தை விட சீக்கிரமாவே சாப்பிட வந்துருவீங்களே? அவ்ளோ பிடிக்குமே உங்களுக்கு? இப்ப ஏன் வேணாங்குறீங்க?”
“இல்லம்மா, வேணாம். சாதம் மட்டும் போடுங்க . ரசம் ஊத்திக்கிறேன் போதும்”
“ஏங்க ஜூனைத் , நேக்கு ஸ்மெல் செட் ஆகாதுன்னு யோசிக்கிறீங்களா? அதுலாம் ஒண்ணும் ப்ராப்ளமில்ல”
“இல்ல அது காரணமில்ல”
“சும்மா சாப்பிடுங்கய்யா”
“ராதா, ராதி , நசீமா ஆப்பான்னு, எல்லாருக்குமே இறால் பிரியாணி பிடிக்குமே? அதுவும் எங்க அம்மா செய்யுற பிரியாணின்னா இன்னும் கூடுதலா பிடிக்கும் . ஆசையா வயிறு நிறைய சாப்பிடுவாங்க. ஆனா அவங்க யாருமே அதை ஒரு வாய் கூட சாப்பிடல .நான் ஹாட்பாக்சை தொறந்து பாத்தேன் வனிதாம்மா. என்னால தான் அவங்க யாருமே சரியா சாப்பிடல, அது எனக்கே புரியுது. அப்புறமும் என்னால எப்டி ஸ்பெஷல் சாப்பாடை சாப்பிட முடியும்?” கிச்சனுள்ளே இப்ராஹிமுக்காக சுடுநீர் வைத்துக் கொண்டிருந்த சுல்தானா பாட்டி, ஜூனைத் பேசியதைக் கேட்டு ஊமையாகக் கண்ணீர் வடித்தா.ர் அவரைப் பொறுத்தவரை பேரன் செய்தது மிகப் பெரிய குற்றம் தான் என்றாலும் , அதை காரணம் காட்டி அவனை வீட்டை விட்டு அனுப்பவோ, இல்லை குடும்பத்தை விட்டு ஒதுக்கி வைக்கவோ, அவர் மனது இடம் கொடுக்கவில்லை .கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, அல்லாஆஆ…என பெருமூச்சு விட்டார்.
“ஐயா, யாரும் பிரியாணி தான் சாப்பிடல . தொக்கு சாப்பிட்டாங்க ,நல்லா சாப்பிட்டாங்க . எனக்காக , எனக்காக கொஞ்சமாவாவது சாப்பிடுங்க ஐயா”
“என்னை வற்புறுத்தாதீங்க வனிதாம்மா. அப்புறம் நான் சாப்பிடாமலயே எந்திரிச்சு போயிருவேன்” வனிதா இனி அவனை கன்வின்ஸ் செய்ய முடியாது என நினைத்து வாயை மூடிக்கொள்ள, அதே நேரம் , ரஷிதாவின் கையைப் பிடித்து தர தரவென இழுத்துக் கொண்டு டைனிங் டேபிளை நோக்கி வேகமாக வந்தாள் நஸ்ரின் பாத்திமா. “உக்காரு” என அவளை உட்கார வைத்தாள். அருகருகே அமர்ந்திருந்த ஜூனைத்தையும், தேனுகாவையும் முறைத்து விட்டு,
“வனிதாம்மா” என அழைத்தாள்.
“சொல்லு பாப்பா”
“பரிமாறிட்டீங்கன்னா பிரியாணியைக் குடுங்க , ரஷிதாக்கு வைக்கணும்”
“இந்தா பாப்பா” அவள் கேட்டதை கொடுத்து விட்டு, ஜூனைத்திற்கு வெள்ளை சாதம் வைத்து, ரசம் ஊற்றினாள் வனிதா.
“பாபி நான் பிரியாணி திங்குற மூட்ல இல்ல , வேற வை”
“சும்மா சாப்பிடு”
“வேணாம்னு சொல்றேன்ல பாபி?”
“ஏன்டி வேணாம் ? மங்க்னா நின்னு போயிருச்சுன்னு துக்கம் காக்குறியா? அங்க பாரு , உன் துக்கத்துக்கான காரணகர்த்தா எந்த வித கவலையும் இல்லாம சாப்பிடுறான் . நீ என்னடி வேணாங்குற? பேசாம சாப்பிடு”
“ஃபாத்திமா பாப்பா , சாப்பிடுற இடத்துல வீண் பேச்சு வேணாமே? சின்னய்யாவும் , சின்னம்மாவும் இப்ப தான் சாப்பிட ஆரம்பிச்சாங்க. நிம்மதியா சாப்பிடட்டுமே? நீங்க ரஷி பாப்பாவை கவனிச்சு , சாப்பிட வைங்க” அதன் பின் நஸ்ரின் எதுவும் பேசவில்லை.
“நீங்க என்னம்மா, ஏன் சாப்பாட்டுல கிடக்குற குடை மிளகாயெல்லாம் ஒதுக்கி வைக்கிறீங்க?”
” இல்லங்க , நேக்கு சாப்பிடறச்சே வாயில எதுவுமே கடிக்க முடியாம தட்டுப்படுறது சின்ன வயசிலருந்தே பிடிக்கறதில்ல , அதான்”
“என்னடி, அந்த பொண்ணு ஐயரா?” ரஷிதாவின் காதுக்குள் மெல்ல கேட்டாள் நஸ்ரின் . “ஆமா பாபி” என அவள் பதில் சொல்ல , “இவனுக்கு வாரத்துல ஆறு நாள் அசைவம் வேணும். ராதா எப்படியும் இன்னும் இரண்டு நாள்ல இவனை வீட்டை விட்டு அனுப்பிருவாரு. இவளை வச்சுக்கிட்டு என்னடி பண்ணப் போறான்? கஷ்டம் , ரொம்ப கஷ்டம். இவனுக்கு இதுலாம் தேவையா?”
“அது அவங்க பாடு . உனக்கென்ன கஷ்டம் ? பேசாம இரு”
” நஸ்ரினு நஸ்ரினு” அழைத்துக் கொண்டே உள்ளே வந்தாள் நசீமா.
“இங்க இருக்கேன் ஆப்பா”
” ம்ம்ம் … ஹாலித் என் ரூம்லயே தூங்கிட்டான் , தேடாத ” தேனுகாவை முறைத்துக் கொண்டே சொன்னாள்.
“சரி சரி , நீ சாப்பிட்டியா?”
“எங்க சாப்பிடறது? நான் என்ன சில ஜென்மங்கள் மாதிரி , வெக்கம், மானம் , ரோஷம், சூடு, சொரணைனு எல்லா உணர்ச்சிகளையும் தொடைச்சிப் போட்டுட்டா திரியிறேன்? இன்னும் என்னால இந்த ஏமாற்றத்தை ஏத்துக்க முடியலடி. இந்நேரம் ஒரு சுபகாரியம் நடந்து முடிஞ்சு , கல கலன்னு இருக்க வேண்டிய வீடு. வீட்ல எல்லார் நிம்மதியையும் குலைச்சிட்டு எப்டி தான் வக்கனையா தின்ன முடியுதோ? சை”…. விஷம் போல வார்த்தைகளை அவள் அள்ளி வீச , சேரில் இருந்து வேகமாக எழுந்தாள் தேனுகா.
“நேக்கு போதும், நான் ரூமுக்குப் போறேன் ” அவள் கையை பற்றினான் ஜூனைத் . “போகாத, முழுசா சாப்பிட்டு முடிச்சுட்டுப் போ”
“போதும் வயிறு ரொம்பிடுத்து” பேசப் பேச ,அவள் கண்ணில் கண்ணீர் எட்டிப் பார்த்தது .கஷ்டப்பட்டு அடக்கினாள்.
“உக்காரு தேனு”
“வே….வேணாம்”
“ஏய், உக்காருடி” அலறினான் ஜூனைத். திடுக்கிட்டுப் போய் அவனைப் பார்த்தாள் தேனுகா அவள் மட்டுமல்ல அது வரை ஜாடை பேசிக் கொண்டிருந்த அவனது சகோதரி நசீமாவும் தான்.
No comments yet.