முதலாளியா தொழிலாளியா
அன்று வழுக்கு பாறைக்கு போய்ட்டு வந்த பிறகு ராமசாமி அண்ணனை நான் பார்க்க வில்லை.அந்த ஆண்டு முடிந்த பிறகு எங்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக நாங்கள் குடும்பத்துடன் என் அம்மா ஊருக்கு போனதால் எனக்கு ராமசாமி அண்ணன் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
அதற்கு பிறகு இப்போது தான் அவரை இப்படி யானைக்கால் நோயோடு பார்க்கிறேன்.இடையில் என்ன நடந்தது.ஏன் அவர் இப்படி தனியாளாக கவனிப்பாரின்றி இருக்கிறார் எனப் புரியவில்லை.எது எப்படி என்றாலும் ராமசாமி அண்ணனை என்னுடன் அழைத்து போவது என்று முடிவு செய்து விட்டேன்.அவரை அழைத்துக் கொண்டு என் மனைவியின் ஊருக்கு வந்தேன்.இப்போது நான் வேலை பார்ப்பது மாமனார் ஊரின் அருகில் தான்.எனவே ராமசாமி அண்ணனை எங்களுடனே தங்க ஏற்பாடு செய்து விட்டேன்.
சில நாட்கள் கழித்து என் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பண்டம் வாங்கலாம் என்று கடைக்கு போனேன்.நண்பர் ஒருவர் நேந்திரம் பழம் சாப்பிட்டால் நல்லது என்று வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பியதால் பத்து நேந்திரம் பழம் வாங்கிவிட்டு முறுக்கு அதிரசம் சிப்ஸ் ஏதாவது வாங்கலாம் என்று இப்போது இருக்கும் ஊரிலேயே பெரிய பேக்கரிக்கு போனோம்.அங்கேமுறுக்கு அதிரசம் இல்லாததால் உடனே கேக், பப்ஸ் வாங்கி விட்டு வீட்டுக்கு கிளம்பி வெளியே வந்த போது தான் ஒரு குரல் என்னை அழுத்தமாக அழைத்து திரும்பி பார்க்க வைத்தது.
அங்கே ஒரு நபர் அருகில் இருந்த எலெக்ட்ரிக்கல்ஸ் கடை வாசலில் ஹீரோ போல சொகுசாக சாய்ந்து உட்கார்ந்து இரண்டு கால்களையும் ஸ்டைலாக பரப்பி விட்டு.இடது கையின் முட்டு, மேல் படியில் பதித்து, உள்ளங்கை முகத்தாடையை பிடித்திருந்தது.விரல்கள் முகத்தில் படர்ந்து சூரியனை மூடி இருக்கும் மேகம் போல இருந்தது.
அவர் என்னிடம் ஏதோ கேட்பது போல இல்லாமல் ஒரு முதலாளி தன் வேலையாளிடம் கேட்பது போல கேட்டார்.அவரது நிலையை பார்த்து என் மகனிடம் ஏதாவது ஒரு நேந்திரம் பழத்தை எடுத்து அவரிடம் கொடு என்றேன்.அவனும் வாங்கி இருந்த பழத்தில் இரண்டை எடுத்து கொடுத்தான்.அதை அவர் வாங்காமல் வேண்டாம் என்று தலையை மட்டும் ஆட்டி விட்டு அப்படியே ஸ்டைலாக உட்கார்ந்து இருந்தார்.இவருக்கு நம்மால் உதவ முடியாது என்று வீட்டிற்கு கிளம்பி வந்து விட்டேன் என் குழந்தைகளோடு.அதன் பிறகு அந்த நிகழ்ச்சி என் நினைவில் இல்லை.
கொஞ்ச நாள் கழித்து ராமசாமி அண்ணன் கூட மார்க்கெட் பக்கம் போன போது அந்த நபர் எங்கள் எதிரே வந்து கொண்டு இருந்தார்.
திடீரென்று ‘ஏய் இங்கே வா.இந்த வத்தல் மூட்டைய உள்ளே கொண்டு இறக்கி வை.வண்டி எவ்வளவு நேரம் ரோட்ல நிப்பாட்டி வைக்க முடியும் ‘ என்று குரலை உயர்த்தி கூறினார்.யாரை இவர் இப்படி கூறுகிறார்.வண்டி எங்கே.வேலையாள் எங்கே என்று நான் குழம்பி போய் பார்த்து கொண்டு இருந்தேன்.
சற்று நேரத்தில் அவரே வேலையாள் மாதிரி துண்டு போல கழுத்தில் கிடந்த கிழிந்த துணியை இடுப்பில் கட்டிக்கொண்டு ‘ஐயா அந்த ரமேஷையும் கூட வரச் சொல்லுங்க.ரெண்டு பேரா இருந்தா வேலை வேகமா முடியும்.வண்டியும் டிராபிக் இல்லாமல் வேகமாக கிளம்பி போகும் ‘ என்றார்.
என்ன நடக்கிறது என்று நான் யோசிக்கும் முன்.
அவரே ஒரு முதலாளக்குரிய தோரணையோடு நின்று கொண்டு’டேய் ரமேஷ் நீயும் அந்த கணேசன் கூட சேர்ந்து வத்தல் மூட்டைய இறக்கி வைடா’என்று சத்தமிட்டு விட்டு.
கொஞ்சம் உடலை வளைத்து அவரே ‘சரிங்க அண்ணாச்சி இதோ இப்போ போறேன் ‘என்றார்.
மீண்டும் ‘டேய் குமாரு அந்த டிவிஎஸ் சேம்ப் எடுத்துட்டு போய் குடோனில் இருந்து கடலை பருப்பு மூட்டையை கொண்டு வாடா’ என மிடுக்கோடு உத்தரவு பிறப்பித்தார்.
கொஞ்சம் கூட யோசிக்காமல் அடுத்த நொடியே ‘அண்ணாச்சி கடலைப்பருப்பு நேத்து தான கொண்டு வந்தேன்’என வேலையாள் போல சொன்னவர்.
இந்த பக்கம் திரும்பி ‘டேய் நீ சொல்றது குழம்பு கடலை பருப்பு.நான் சொல்றது வேர்கடலை.ஒழுங்கா சொன்னதை செய்’என்று கூறியவர்.எல்லாம் மாட்டு மூதியா இருக்கு.நாம ஒன்னு சொன்னா அவன் ஒன்ன செய்றான்.வேலை பாக்க கறி வலிக்குது’என்றவர்.
இந்த பக்கம் திரும்பி ‘அண்ணாச்சி திட்டாதீக.இப்ப போய் கடலைய எடுத்து வாரேன்’என தாழ்ந்த குரலில் சொல்லி முடித்தார்.அதன் பிறகு மனிதர் என்ன நினைத்தாரோ எங்களை தாண்டி நடந்து சென்று விட்டார்.
அதுவரை அவரது செயல்களை உன்னிப்பாக கவனித்து வந்த எனக்கு என்னடா நடக்குது இங்கே என்று தோன்றியது.எனக்கு எதுவும் தெரியாததால் ராமசாமி அண்ணனிடம் இவர் யாரு, ஏன் இப்படி பேசுறார்.இவர் குடும்பத்து ஆட்கள் என்ன ஆனார்கள்.உயிரோடு இருக்கிறார்களா இல்லையா.இவரை ஏன் இப்படி விட்டு விட்டார்கள் என்று வரிசையாக நான் கேள்விகளை அள்ளி வீச.பொறுமையாக ராமசாமி அண்ணன் சொன்னார்
‘தம்பி பத்து வருஷத்துக்கு முன்னாடி இவரு பெரிய குடும்பத்த சேர்ந்தவர்.பக்கத்து ஊரிலே இவரைப் பற்றி சின்ன குழந்தை கூட சொல்ற அளவுக்கு பிரபலமான குடும்பம்.பெரிய கடை நடத்திட்டு இருந்தார்.மதுரையில கிடைக்காத பொருள் கூட இவர் கடையில் கிடைக்கும்.அந்தளவு பேமஸ்.இவரோட கெட்ட நேரம் இவர் கூட பழகின மனுசன் இவரை நல்லா பழகி ஏமாத்திட்டான்.அதுல புத்தி பேதலித்து இப்படி திரிகிறார்.நான் கூட சின்ன வயசுல இவர் கடைக்கு கொஞ்ச நாள் வேலைக்கு போயிருக்கேன்.நல்ல மனுசன் விதி யாரை விட்டது என்று முடித்தார் ராமசாமி அண்ணன்.
அண்ணன் வியாபாரம் கெட்டது புத்தி பேதலித்து இப்படி ஆனது சரி.இவர் குடும்ப ஆட்கள் இருப்பாங்கல்ல.இவரை ஏன் இப்படி ரோட்ல அழைய விடுறாங்க.இவருக்கு வைத்தியம் ஏதாவது பாக்கலாம்.இல்லையா வீட்டில் வைச்சு கவனிக்கலாம்.அதெல்லாம் விட்டு இப்படி வெளிய இந்த நிலைமையில் அனுப்புறது நல்லாவா இருக்கு.பெரிய குடும்பம்னு வேற சொல்றீங்க.பேரு கெட்டு போகும்ல அண்ணன் என நான் முடிக்கவும்.
தம்பி ஒரு நாலு வருஷத்துக்கு முன்னாடி ஒரு பெரிய ஆக்ஸிடென்ட் நம்ம நவாச்சோலை வடக்க நடந்ததா. அதுல குடும்பத்தோட போனவங்க அத்தனை பேரும் ஸ்பாட் அவுட் ஆனங்களா.அது இவரோட குடும்பம் தான்.இவர் இப்படி இருந்ததால் இவர மட்டும் வீட்ல விட்டுட்டு போனவங்க போயே போயிட்டாங்க.இவர கவனிக்க ஆள் இல்லாம இப்படி திரியிறார் தம்பி என சொல்லி முடித்தவர்.
இவருக்கு நாம ஏதாவது ஹெல்ப் பண்ண முடியுமா தம்பி என்று கேட்டதும்.எனக்கு ஞாபகம் வந்தது ஈரோடு அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை தேடி பிடித்து அவர்களின் அழுக்கை எல்லாம் முடிந்தவரை சுத்தம் செய்து.முடியை நன்றாக வெட்டி.நல்ல ஒரு வேட்டி சட்டை இல்லை பேண்ட் சட்டை எடுத்து கொடுத்து.அதை அவர்களை உடுத்த வைத்து அழகு பார்ப்பதோடு.அவர்கள் மன அழுத்தம் நீங்கி சுமூகமாக அனைவரோடும் பழக வாய்ப்புகளை ஏற்படுத்தித் கொடுப்பதும்.மனச்சிதைவிற்கான காரணம் கண்டறிந்து அதை சரிசெய்ய முயற்சி செய்யும் குழுவில் என் நண்பன் இருக்கிறான்.அவனைத் தொடர்பு கொண்டு இவரைப் பற்றி எடுத்துச் சொல்லி உதவும் படி கேட்கலாம் என்று மனதில் நினைத்து.முடிந்தவரை முயற்சி செய்கிறேன் அண்ணா என்று மட்டும் ராமசாமி அண்ணனிடம் கூறினேன்.
ஆனால் இவர்களைப் போல எவ்வளவு பேர் இன்னும் நம்மை சுற்றி இருப்பவர்களோ தெரியவில்லை.
இறைவா அவர்கள் என்ன தான் தவறுகள் செய்திருந்தாலும் இவ்வளவு கொடுமை அவர்களுக்கு ஏன்.சிலர் இதை விதியென்றும், சிலர் கர்மா என்றும், சிலர் முன்வினைப் பயன் என்றும் பெயரிடுகின்றனர்.அதெல்லாம் காரணமாக இருக்கலாம்.அதற்காக இவ்வளவு சிக்கல், இவ்வளவு பிரச்சினை, இவ்வளவு தொந்தரவு.இறைவன் கருணைவடிவானவர்.ஆனால் ஏன் இவ்வளவு கொடூரமான தண்டனைகள்.ஒவ்வொன்றிற்கும் ஒரு காரணம் உண்டு என்பார்களே.அது போல இதற்கும் காரணம் இருக்குமா? .
No comments yet.