எபிசோட் 2

PANAIYAN VELMURUGAN | 23 Nov 2025 | Share

நான் அப்போது நான்காம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன்.எங்களை பக்கத்தில் உள்ள மலைக்கும் அங்கே இருந்த பெரிய ஆற்று நீரில் குளிக்க அழைத்து சென்றார்கள்.அந்த காட்டுப் பகுதிக்குள் செல்ல ஜீப் அல்லது டிராக்டர் மட்டும் தான் பயன்படும்.எனவே முப்பது பேர் வரை இருந்த எங்களை டிராக்டரில் ஏற்றி பாட்டி ஊரில் இருந்து கிளம்பியது வண்டி.டிராக்டர் பயணம் என்று இல்லை.எந்த வண்டி பயணம் என்றாலும் அலுப்பின்றி எல்லாவற்றையும் அனுபவமாக,ஆசையாக ,கிடைத்தற்கரிய பொக்கிஷமாக கருதும் வயது கொண்ட  அந்த கால குழந்தைகளாக இருந்ததால் அதுவே சிறந்த பயணமாக தெரிந்தது.ஏனென்றால் அதிகபட்சமாக மாட்டு வண்டியில் உட்கார வைத்து கூப்பிட்டு செல்வார்கள்.இல்லை சைக்கிளில் பயணம் இருக்கும்.சிலர் நடந்து செல்ல மட்டுமே முடியும்.இவற்றோடு ஒப்பிட்டால் டிராக்டர் பயணமே  ஓரளவு வசதியான பயணம் தான் அப்போது.வழியில் தெரிந்த மயிலும் குரங்கும் எங்களை கண்டதும் துள்ளி குதித்து வரநாங்கள் அதைப் பார்த்து சந்தோஷத்தில் சத்தமிட ஒரேஆரவாரமான பயணம்.

எல்லோரும் பழங்குடி மக்கள் தங்கியிருந்த கூடாரம் அருகே இறக்கி விடப்பட்டோம்.அங்கே இறங்கிய பின் கொஞ்ச தூரம் நடந்து சென்றால் மட்டுமே ஆற்றின் கரையையும் ,வழுக்கும் பாறையையும் அடைய முடியும்.

காட்டில் அனைவரும் நினைத்தபடி நடக்க முடியாது நடக்க கூடாது என்பதால் எங்களை வழி நடத்த பள்ளி சார்பாக அழைத்து வரப்பட்டவர் எனது மனம்கவர்ந்த ராமசாமி அண்ணன்.எனவே முதல் ஆளாக நான் ராமசாமி அண்ணன் பின்னாடி போய் நின்றேன்.எனக்கு பின்னால் வரிசையாக மற்றவர்கள் நிற்க ஆரம்பித்தனர்.இரண்டு இரண்டு பேராக நின்ற பின்னர் கடைசியாக எங்கள் தலைமை ஆசிரியரும் பள்ளி தாளாளரும் நடந்து வர ராமசாமி அண்ணன், என் தலைமையில் சுற்றுலா பயணம் இனிதே துவங்கியது.பாதி தூரம் கடந்திருப்போம் இடையில் வந்து கொண்டு இருந்த பையன் ஒருவன் மெல்லிய குரலில் ஆனை எனச் சொல்லவும் அனைவருக்கும் யானையை பார்க்க ஆசையிருந்தாலும். காட்டிற்கு கிளம்பும் முன் வீட்டில் பெரியவர்கள் யானை புலி எல்லாம் வரும் அதனால் டீச்சர் சொல்ற மாதிரி ஒழுங்கா போயிட்டு ஒழுங்கா வா என சொன்னது ஞாபகம் வந்தது பாதி.இன்னும் சிலர் வெயில் காலம் என்பதால் யானை அவ்வப்போது இறங்கி வந்து வழுக்குப் பாறையில் தண்ணீர் குடித்து செல்வதாக கூறியிருந்ததாலும் பயத்தில் ஆளுக்கொரு திசையாக ஓட ஆரம்பித்தனர்.சற்று நேரத்தில் வரிசை காணாமல் போனது.பெரியவர்கள் எல்லோரும் அவரவர் பாதுகாப்பான இடம் என ஏதோ ஒன்றை முடிவு செய்து அதை நோக்கி சென்றனர்.சிலர்என்ன செய்வது என்று தெரியாமல் தோன்றிய பக்கம் தான்தோன்றி தனமாக ஓடிக்கொண்டே இருந்தனர்.ராமசாமி அண்ணன் மற்றும் தலைமை ஆசிரியர் பள்ளி நிர்வாகி எல்லாம் ஒரு நிமிடம் திணறி.பின்னர் ஓரிரு நிமிடங்களில் நிலைமையை சரிசெய்ய முயற்சி செய்து எல்லாரையும் ஒரே இடத்தில் நிற்க வைத்தனர்.

அதன் பின்னர் யார் அந்த குரல் எழுப்பியது என்றதும் அனைவரும் முன்னால் சென்ற என்னை கை காட்டி நின்றனர்.அது மட்டும் இன்றி ஒரு பையன் அந்த குரல் என்னுடையது தான் என்று அழுத்தம் திருத்தமாக சொல்லவும்.பள்ளி நிர்வாகி என்னை விசாரித்தபடி என் அருகே வந்தார் .அதுவரை விசாரணையை கவனித்தபடி இருந்த ராமசாமி அண்ணன் இடையில் புகுந்து.சார் உண்மையில் ஆனை என இந்த தம்பி முதலில் குரல் தரவில்லை.எங்களுக்கு பின்னால் சரியாக சொல்வதென்றால் நடுவில் இருந்து தான் சத்தம் வந்தது என்று கூறவும்.என்னை நோக்கி வந்த நிர்வாகி நின்று நிதானமாக யோசித்து பார்த்து நடுவில் வந்ததில் கொஞ்சம் குறும்புக்கார மாணவன் யாராக இருக்கலாம் என்று நினைத்து ரமேஷ் என்ற மாணவனை அழைத்து நீ தானே அப்படி சத்தம் போட்ட என்றும் ,உண்மையை சொன்னா அடிக்க மாட்டேன் என்றும் சொல்லவும்.ரமேஷும் ஆமா சார் நான் தான் முதலில் சத்தமிட்டேன்.தூரத்தில் தெரிந்த பாறை ஆனை போல இருந்ததால் அப்படி சொன்னேன்.ஆனால் அதன் பின்னர் அது ஆனை இல்லை என்று தெரிவதற்குள் அனைவரும் ஓட ஆரம்பித்து விட்டனர்.அதனால் நானும் ஓட ஆரம்பித்தேன் என்றான்.ஆமா நானும் பார்த்தேன் நீ மட்டும் கொஞ்ச நேரம் கழித்து தான் ஓட ஆரம்பித்தாய்.நான் கூட நினைத்தேன் இந்த பையன் மட்டும் ஏன் இப்படி நின்று பின்னர் ஓடுகிறான் என்று.நீ இன்னும் கொஞ்ச நேரம் நின்றிருந்தால் நானே உன்னை இழுத்து சென்று இருப்பேன்.நீ ஓட ஆரம்பித்ததால்விட்டு விட்டேன்.சரி நடந்தது நடந்து விட்டது.இனி இப்படி செய்யாதே ரமேஷ் என அவனுக்கு அறிவுரை சொன்ன நிர்வாகி.

மற்றவர்களை பார்த்து வாங்க சந்தோஷமாக ஆற்றில் குளிக்கலாம்.ஆனால் வழுக்கு பாறையில் குளிக்கும் போது  அதிக கவனத்தோடு குளிக்க வேண்டும் என்றார்.வழுக்கு பாறையில் குளிப்பது உற்சாகத்துடன் நல்ல அனுபவத்தையும் தந்தது.நாங்கள் வழுக்கும் பாறையில் குளித்து வெளியே வந்தோம்.அப்போது அங்கே இருக்கும் கருப்பசாமிக்கு கிடாய் வெட்டி வேண்டுதல் நிறைவேற்ற வந்திருந்த ஒரு குடும்பத்தார் எங்களையும் சாப்பிட்டு செல்ல கட்டாயப்படுத்தினர்.அவர்கள் சொன்னதும் எங்களுக்கு பயங்கர குஷி.நாங்கள் வரிசையாக அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்த போது எங்களுக்கு சாப்பாடு கொடுத்த அந்த மனிதர் கருப்பசாமிக்கு கட்டி இருந்த வேட்டியை கழட்டி எடுத்தார்.ஏன் அதை கழட்டி எடுக்குறீங்க? என்று ராமசாமி அண்ணன் கேட்கவும்.அதாவது தம்பி கருப்பசாமி சிலை ஆளுயரத்துக்கு செஞ்சு வைக்கிறோம்.அதுல நாம  பரிவட்டம் வேட்டிய  கட்டி வைச்சி படையல் போடுறது பிரச்சினை இல்லை.ஆனா இந்த வேட்டிய இப்படியே விட்டுட்டு போனால் தூரமா இருந்து பார்த்தா ஆள் ஒருத்தர் நிற்கிற மாதிரி இருக்கும்.அதை பார்த்த யானைகள் மனிதன் தான் நிற்கிறான் என்று நினைத்து வேட்டியோடு இருக்கும் கருப்பசாமியை தும்பிக்கையால் பிடித்து இழுத்து உடைத்து விடுகிறது.அதனால தான் இந்த வேட்டிய மட்டும் கட்டி பூசை செஞ்சு முடிச்சிட்டு கட்டுன மாதிரியே கழட்டி எடுத்து இந்த பக்கத்து மரத்துல கட்டி வைச்சிருவோம் என்றார்.ஆனா சந்தனத்தை வைச்சு அலங்காரம் பண்ணுனத மட்டும் அப்படியே வைச்சிருக்கீங்களே.அது யானையை கோபப்படுத்தாதா?.அதை பார்த்து யானை கருப்பசாமி சிலையை உடைக்காதா?. இல்லை தம்பி இது வரை அந்த மாதிரி நடக்கவில்லை.அது ஏனென்றும் தெரியவில்லை அதனால அதை நாங்க எடுக்குறது இல்லை என்றார். அப்படியா என்று ராமசாமி அண்ணன் சொன்னதும் நாங்கள் சாப்பிட்டு முடித்து கிளம்ப தயாராக இருந்தோம்.அப்போது அங்கே கொஞ்சம் சுற்றி பார்த்தோம்.பன்றி ஒன்று வந்து குழி தோண்டி அங்கே ஏதாவது கிடைக்குமா என்று பார்த்துவிட்டு இப்போது தான் சென்றிருக்க வேண்டும்.பெரிய பள்ளம் எதனாலோ தோண்டப்பட்டது போல  மேலாக நடந்து அழுத்திய மண்  மேலே, அடி மண் தெரியும் அளவு பள்ளமும்,அங்கே மண் உதிரியாகவும் இருந்தது அதை உறுதி செய்தது.கொஞ்சம் தள்ளி நடந்த போது சிறியதும் பெரியதுமாக மாட்டின் காலடி தடம் போல நிறைய இருந்தது.அதன் அருகே சில புல்லின் நுனி வெட்டப்பட்டது போல இருந்தது.அதை காட்டி ராமசாமி அண்ணனிடம் இது என்ன அண்ணா வித்தியாசமா இருக்கே என்று கேட்டேன்.அதைநன்கு உற்று பார்த்த ராமசாமி அண்ணன் பெரிய கால் தடம் மிலாவுடையது என்றதும், அப்ப அந்த சின்ன கால் தடம் என நான் கேட்டதும்.அது மான் கால் தடம் என்றார் ராமசாமி அண்ணன்.அது எப்படி உங்களுக்கு தெரியும் என்றேன்.இது மாதிரி கால் தடம் நான் இதுக்கு முன்னாடி வந்தப்ப பாத்துட்டு வனத்துறையில் வேலை பாக்கும் மனோகர் கிட்ட கேட்டேன் அவன் தான் அதை வீடியோ எடுத்து அவுங்க டிபார்ட்மெண்ட்ல இருந்த படத்தை காமிச்சு சொன்னான்.அதை வைச்சு உனக்கு நான் சொல்றேன் என்று முடித்தார் ராமசாமி அண்ணன்.அப்படியே பேசியபடி நாங்கள் மீண்டும் நடக்க ஆரம்பித்தோம்.இந்த தடவை வரும் போது வந்த தொந்தரவு ஏதும் வரக்கூடாது என நிர்வாகி முன்னே நடக்க.ராமசாமி அண்ணன் நான் அனைவருக்கும் பின்னால் வந்தோம்.

    

    No comments yet.