இதயச்சிறை

தளிர் நிலா | 15 Nov 2025 | Share

சிறை1

சென்னை மத்திய சிறைச்சாலை

வழக்கம் போல் கைதிகளைப் பார்க்க வரும் உறவினர்கள் அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்து விட்டு தங்களுக்கான நேரத்திற்காக அந்த உச்சி பொழுதிலும் வெயிலில் காத்திருந்தனர்…

அதிகாரிகள் விண்ணப்பங்களை சரிபார்த்து விட்டு உறவினர்களை கொஞ்சம் கொஞ்சமாக அனுமதிக்க…

தனக்கான நேரத்திற்காக காத்திருந்தாள் அவள்…. வானதி…. அந்த வானத்து தேவதைப் போல அழகு ரதியவள்…. ஐந்தரையடி உயரம் உயரத்திற்கு ஏற்ற உடல்வாகு கோதுமைநிறம் அந்த வட்ட முகமும் அதில் சிவப்புக்கல் மூக்குத்தியும் அவளது அழகை ஒரு படி மெருகூட்டியுள்ளது என்று சொன்னால் மிகையில்லை.

பார்க்க இருபத்தைந்து வயதை போல் காட்சியளுக்கும் அவளுக்கு பத்தொன்பது வயது என்று சத்தியம் செய்தாலும் யாரும் நம்ப மாட்டார்கள்.

வயதிற்கு மீறிய முதிர்ச்சி தான்…. அது அவள் கடந்து வந்த பாதையால் கூட இருக்கலாம்.

அவளோ தன் மேடிட்ட வயிற்றை தடவியபடி, “இன்னும் கொஞ்ச நேரத்துல அப்பாவை பார்த்துரலாம் சரியா செல்லம். உனக்காக அப்பா வெயிட் பண்ணிட்டு இருப்பாரு. நம்ப அப்பாவை பார்க்க போலாம்” என்று பூரிப்பாக சொல்ல….

குழந்தையும் அதற்காக தான் காத்திருந்ததோ என்னவோ தனது துடிப்பை அவளுக்கு உணர்த்த….

“நீயும் அப்பாவை பார்க்க ஆர்வத்துல இருக்கியா பாப்பா…. அப்பாவும் நமக்காக இப்படி தானே வெயிட் பண்ணுவாரு” என்று சொல்லும் போதே அவள் கண்கள் லேசாக கலங்கத் தான் செய்தது.

“அடுத்த பேட்ச் வாங்கம்மா” என்று ஒரு அதிகாரி பேர்களை வாசிக்க….

தனது பெயர் எப்பொழுது வருமென ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தாள் வானதி.

அவள் பெயர் மட்டும் வந்தபாடில்லை. இவள் உடன் காத்திருந்தவர்கள் எல்லாம் தன் உற்றவர்களை பார்த்த திருப்தியில் செல்ல….

அவள் மட்டும் சிறை வாசலை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

நொடிக்கொரு முறை தன் குழந்தையிடம் “இப்போ போலாம் அப்பாவை பார்க்கலாம்” என்று சொல்லிக் கொண்டே இருந்தாள்.

அவள் மனமோ ‘எப்போ மாமா உன்னை பார்ப்பேன்’ என்று முனுமுனுத்துக் கொண்டது.

அவளுடன் காத்திருந்தவர்கள் எல்லாம் சென்று விட்டனர். அவள் மட்டுமே எஞ்சியிருக்க…. சிறை வாசலை ஏக்கமாக பார்த்த படி அமர்ந்திருந்தாள்.

“விசிட்டர்ஸ் டைம் முடிஞ்சுது எல்லாம் கிளம்புங்க இங்க எல்லாம் ரொம்ப நேரம் இருக்கக் கூடாது” என்று அங்கொன்றும் இங்கொன்றுமாய் பேசிக் கொண்டிருந்தவர்களிடம் காவலர் ஒருவர் வந்து சொல்ல.

“டைம் முடிஞ்சுதா?” என்றவளின் கண்களில் நீர் திரையிட…

தன் மேடிட்ட வயிற்றை தூக்கிக் கொண்டு சிறைக் காவலரை நாடிச் சென்றாள்.

“சார் என்னோட முறை வரவே இல்லையே? அதுக்குள்ள டைம் முடிஞ்சுருச்சுனு சொல்றீங்க?” என்று பரிதவிப்பாக கேட்க.

“என்னம்மா நீ?…. நீயும் வாராவாரம்  வர்ற… உன் புருஷனும் ஒவ்வொரு முறையும் உன்னை பார்க்க மாட்டேன்னு சொல்றான்… நாங்க என்னம்மா பண்ணட்டும்.. உன்னைப் பார்த்தாலும் பாவமா இருக்கு… ஆனா உன் புருஷன் தான் உன்னை பார்க்க மாட்டேன்னு உடும்பா நிக்குறானே” என்றார் அந்த மூத்த காவலர்.

அவரும் கடந்த சில மாதங்களாக பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார். ஒவ்வொரு வாரமும் அவனை பார்க்க வந்து விடுவாள் எப்படி பட்ட சூழ்நிலையாக இருந்தாலும்…

ஒரு முறை கடும்காய்ச்சலிலும் அவனை பார்க்கவே அந்த சிறை வாசலில் தவமாய் கிடந்தாள். அப்பொழுது கூட உள்ளே இருக்கும் அவள் கணவனுக்கு மணமிறங்கவில்லை.

ஒரு பெருமூச்சு விட்ட காவலரோ, அவளது மேடிட்ட வயிற்றைப் பார்த்தவர் எப்போம்மா டேட் என்றார்..

“இன்னும் ஒரு மாசம் இருக்கு சார். அப்போ மாமாவை இப்போ பார்க்க முடியாதா?” என்றாள் கணகளில் ஏங்கம் இழையோட.

“உன் புருஷன் தான் பார்க்க முடியாதுனு சொல்றானே நாங்க என்னம்மா பண்ண முடியும்’ என்றார் அவரும்.

பாவம் அவரும் என்னதான் செய்வார்? ஒவ்வொரு முறையும் இவள் இப்படி ஏமாற்றத்துடன் செல்வதை பார்க்க தானே செய்கிறார்.

அவனிடம் சொன்னாலும் கேட்க மாட்டான். வர முடியாது அவ்வளவு தான் பேச்சு முடிச்சுது என்பது போல் தன் வேலையை பார்க்க சென்று விடுவான். அதை தவிர அவன் வாயிலிருந்து இதுவரை வார்த்தை யாரும் கேட்டதில்லை.

“சரி சார், இது அவருக்கு பிடிக்கும்னு கொண்டு வந்தேன் மீன் குழம்பு அவருக்கு குடுத்துடுறீங்களா?” என்று கேட்க.

“சரிம்மா” என்றவர் அவள் கையில் இருந்த கூடையை வாங்கிக் கொண்டார்.

“சரி சார் அப்போ நான் வரேன்” என்று வாடிய முகத்துடன் அவள் செல்ல அவரும் ஒரு பெருமூச்சுடன் அங்கிருந்து அகன்றார்.

அவளது மனதைப் போல் அவளது நடையும் தளர்ந்து போக ஆட்டோவுக்காக காத்திருந்தாள் சிறைச்சாலை வெளியில்.

மனமெல்லாம் சோர்ந்து போனது அவளுக்கு.

எதிர்பாரா திருமணம் தான்…. மிஞ்சிப் போனாள் ஒரு வாரம் அவனுடன் வாழ்ந்திருப்பாள்…

கல்யாணம் முடிந்த மறுவாரமே ஓரு கொலை வழக்கில் ஜெயிலுக்கு சென்று விட்டான் அவள் கணவன் ரணதீரன்.

அந்த வழக்கு மூன்று மாதங்களாக நடந்தது. இறுதியில் ரணதீரனின் குற்றம் நிரூபிக்கப்பட அவனுக்கு வாழ்நாள் சிறை தண்டனை அளித்து கோர்ட் தீர்ப்பளித்தது.

அன்றிலிருந்து அவள் வாழ்வு இப்படி தான் ஓட்டமாக இருக்கிறது.

அவளும் ஒரு பெருமூச்சுடன் எதிரே வந்த ஆட்டோவை மறிக்க கை காட்ட..

அதிவேகமாக ஒரு ஜீப் வந்து அவள் முன் நின்றது. ஒரு நொடி திடுக்கிட்டவள் யாரென்று பார்க்க…

காக்கிசட்டையில் மீசையை முறுக்கியவாரு இறங்கினான் அவன் இன்ஸ்பெக்டர் வாசுதேவன்.

அவனை முறைத்தவள் முன்னால் நின்ற ஆட்டோவில் ஏறப் போக….

அவளது கையை எட்டிப் பிடித்தவன் ஆட்டோவை போகும்படி சைகை செய்ய…. ஆட்டோகாரனும் எதற்கு வம்பு என்று அங்கிருந்து சென்று விட்டார்.

அவனை அழுத்தமாகப் பார்த்தவள், “கையை எடு” என்றாள் பல்லிடுக்கில்.

அவனோ அவளை முறைத்தவன், அதேத் தோரணையில் “வண்டியில ஏறு” என்றான் கட்டளையாக…

“ப்ச் கையை விடு” என்று அவள் அவன் கையில் திமிர…

“சீன் க்ரியேட் பண்ணாம வண்டியில ஏறுடி இல்லைனா வண்டியை உன் மேல ஏத்திட்டு போய்க்கிட்டே இருப்பேன்” என்று அவனும் சிடுசிடுக்க…

“அதையாவது பண்ணு நான் நிம்மதியா இருப்பேன். இப்படி கூடவே இருந்து கொஞ்சகொஞ்சமா என் உயிரை ஏன் வாங்குற” என்றவள் இயலாமையில் உதடு துடிக்க கேட்க….

சட்டென அவள் கையை விட்டவன்… “இங்க பாரு வானு, அவனுக்கும் உனக்கும் டைவர்ஸ் ஆகப் போகுது…. அவன் ஆயுசுக்கும் ஜெயில்ல தான்னு முடிவாகிப் போச்சி… அவனே உன்னை வேண்டாம்னு சொல்லிட்டான் இன்னும் நீ மட்டும் ஏன்டி அவனைப் பிடிச்சிட்டு தொங்குற. வாரவாரம் அவனைப் பார்க்க வறீயே ஒரு தடவையாவது அவன் உன்னை பார்க்க அனுமதிச்சானா. ஏன் உன் புள்ளையைக் கூட பார்க்க வரலையேடி” என்றவனின் வார்த்தையும் ஆதங்கமாக வர….

“அது எங்க புருஷன் பொண்டாட்டிக்குள்ள  இருக்க விஷயம் அதைப் பத்தி  கவலைப்பட நீங்க யாரு?” நீ யாரோ மூன்றாவது மனிதன் என்று அவள் வார்த்தை அவனை தள்ளி நிறுத்த….

“நான் யாரா? உன்னை கல்யாணம் பண்ணிக்கப் போறவன். குழந்தை பிறந்து டைவர்ஸ் கிடைக்குற வரை தான் உனக்கு டைம் நினைவு இருக்குல்ல” என்றவன் அவளை அழுத்தமாகப் பார்க்க.

அவளது கைகளோ தானாக தன் வயிற்றைப் பிடித்துக் கொள்ள அவளது கண்களோ சிறை வாயிலை ஏக்கமாக பார்த்தது.

அவள் ஏக்கங்களை தீர்க்கப் போவது யாரோ?

    No comments yet.