அழகிய தேவதை எபிசோட் 1

Mohana Rajasekar | 01 Dec 2025 | Share

மாநிற மேனி, படர்ந்த  முகம் அதில் மெல்லிய புருவங்கள் அதன் கீழ்  முத்துச் சிற்பி போன்ற அழகியவிழிகள் , அளவான மூக்கின் வலது பக்கத்தில் ஒரு வெள்ளைக்கல் பதித்த மூக்குத்தி,  இளவட்டங்கள் வட்டமிட வளைந்து கொடுக்காத மன உறுதி, தனக்கே உரித்தான தன்னம்பிக்கை கொண்ட கயல்விழி பொறியியல் பட்டப்படிப்பை முடித்தவள். தன் குடும்ப சூழ்நிலையின் காரணமாக கிடைத்த வேலையை செய்து  கொண்டிருந்தாள். அன்று அதிகாலை மஞ்சள் ஒளி  மென்மையாக தன் கதிர்களை மெல்ல மெல்ல பூமியை எட்டிப் பார்க்க சமையலறையில் உணவுகளை தயாரித்து அதனை மிக வேகமாக கேரியரில் அடுக்கிக் கொண்டிருந்தாள். 

                   திடீரென்று ஒரு சத்தம், அவள் தங்கை கண்மணி கல்லூரி படிக்கும் முதலாம் ஆண்டு மாணவி அவளின் அலறல் சத்தம் தான் அது, அதனைக் கேட்ட கயல்விழி அவளை சாமாதானப்படுத்தி  உறங்க வைத்துவிட்டு தன் தாத்தாவிடம் “தாத்தா உங்களுக்கும் கண்மணிக்கும் டிபன் ரெடி பண்ணி டேபிளில் எடுத்து வச்சிருக்கேன் நீங்களும் அவளும் சாப்பிடுங்க.  இன்னைக்கு அம்மாவோட நினைவு நாள் அதனால நான் கோயிலுக்கு போயிட்டு  அன்னதானம் பண்ணிட்டு வந்துடுவேன் அதுவரைக்கும் கண்மணியே பத்திரமா பாத்துக்கோங்க” என்றாள். தாத்தாவும் “சரி மா கயல் நீ பத்திரமா போயிட்டு சீக்கிரம் வந்துருமா..” என்று சொல்ல  அதற்கு கயல்விழி  “இல்லை தாத்தா கோவில் இரண்டு பஸ் ஸ்டாப் தாண்டி இருக்குதில்லையா அதனால கொஞ்சம் நேரம் ஆகலாம் பஸ்சும் கிடைக்குமான்னு தெரியல நீங்க எனக்காக காத்திருக்க வேண்டாம் நீங்க சாப்பிடுங்க”  என்று சொல்லிவிட்டு அவள் கோவிலுக்கு  வேகமாக புறப்பட்டாள்.      

                 உணவு கேரியரை எடுத்துக்கொண்டு வேகமாக விரைந்தவள்.  கால் கடுக்க பேருந்துக்காக காத்திருந்தாள், பேருந்தும் வந்துவிட்டது. நிம்மதி பெருமூச்சுடன்  அவள் உட்கார ஒரு ஜன்னலோர இருக்கை அவளுக்காகவே காத்திருந்தது.  அதில் உட்கார்ந்து கொண்டு இளைப்பாற தொடங்கினாள், அவள் மனதிலோ பல எண்ண ஓட்டங்கள்  ஓட தொடங்கின. உடல்நிலை குறைவினால் தன் தாயை இழந்தவள் அம்மாவை நினைத்துக் கொண்டே பேருந்தில் மட்டுமல்ல தன் குழந்தை பருவத்தில் இருந்தே பயணிக்கலானாள். 

                          அவளது தாய் அவளை மிகவும் பக்குவப்படுத்தி வளர்த்துள்ளார்.. கயல்விழியின் அம்மா வீட்டு வேலை செய்துதான் தன் குடும்பத்தை பார்த்துக் கொண்டாள். அவள் வேலைக்கு செல்லும் போதெல்லாம் குழந்தைகளை தன் மாமனாரிடம் விட்டுச் செல்வது வழக்கம். அவளது மாமனார் மிகவும் தைரியசாலி,  அவர் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும், ஒரு கடுமையான சூழ்நிலையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் பல கதைகளின் மூலமே சொல்லிக் கொடுத்துத் தன் செல்லப் பேத்திகளை வளர்த்தார். கயல்விழி ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது அவளுக்கு சில கசப்பான அனுபவங்களே அவளுக்கு பல தெளிவுகளை கற்றுக் கொடுத்துள்ளது. அதனால் தானோ என்னவோ அவள் தன் தங்கையின் மீது அதிக கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தாள்.  அவள் எப்பொழுதும் கண்மணியிடம்    ” கண்மணி நீ ஸ்கூலுக்கு போகும் போதும் வரும்போதும்  ரொம்ப கேர் ஃபுல்லா இருக்கணும்.  உன்னை யாரும்  தொட்டுப் பேசாம பாத்துக்கணும் நீயும் யாரையும் தொட்டுப் பேசக் கூடாது உன்னை யாராவது  அப்படி தவறாக தொட்டால் என்கிட்ட கண்டிப்பா சொல்லிடனும் ஓ கே , பயப்படக்கூடாது என  சொல்லிக் கொண்டே வருவாள். ஆனால் கண்மணிக்கோ “அக்காவுக்கு வேற வேலையே இல்லை எப்ப பார்த்தாலும் ஏதாவது அட்வைஸ் பண்ணிக்கிட்டே தான்  இருப்பா ” என்று நினைத்துக் கொண்டு அவள் அக்கா சொல்வதை சற்றும் புரிந்து கொள்ளாமல் விளையாட்டுத்தனமாகவே இருப்பாள். அப்படியே பள்ளிப்படிப்பை முடித்தவள் கல்லூரியில் சேர்ந்தாள். 

                               கண்மணியை சுற்றி பல நண்பர்கள் எப்போதும் இருப்பார்கள் கண்மணி மிகவும் அழகானவள், அன்பாக பழகக்கூடிய குணம் கொண்டவள், எளிதில் யாரையும் நம்பக் கூடியவள், ஒரு நாள் அவளுடைய நண்பன்  அருண் அவளிடம் தன் காதலை தெரிவித்தான் அதற்கு கண்மணி “இல்ல அருண் எனக்கு அந்த மாதிரி எந்த ஐடியாவும் இல்லை எனக்கு  முதல்ல படிக்கணும் என் ஃபேமிலியை பார்த்துக்கணும் அதனால நீ என்ன டிஸ்டர்ப் பண்ணாத” என்று சொல்லிவிட்டாள்.  ஆனால் அருணோ அவளை திரும்பத் திரும்ப வற்புறுத்தி சம்மதிக்க முயற்சி செய்தான். அதை விரும்பாத கண்மணி அவனை விட்டு விலகிச் சென்றாள். அருணின் நண்பர்களோ அவனை கேலி செய்து தூண்டி விட்டனர். மறுநாள் கண்மணி கல்லூரிக்கு வரும் பொழுது அருண் அவன் நண்பர்களிடம் “இன்னைக்கு கண்மணி வரட்டும் அவளுக்கு  நான் யாருன்னு காட்டுறேன்” என்று சொல்லிக் கொண்டிருக்க, கண்மணி அருணிடம் சென்று “என்னடா செய்வே” என்று கேட்டாள் உடனே வருண் அவளது துப்பட்டாவை இழுத்து விட்டான். இதனை சற்றும் எதிர்பார்க்காத  கண்மணி  கோபத்தில் அவனை அடித்து விட்டாள். அவனது நண்பர்களின் முன்பே அவள் அடித்ததை அருணால் தாங்கிக் கொள்ள முடியவில்லை அந்த அவமானம் அவனை மிகவும் பாதித்தது. கண்மணிக்கு பயமும் பதற்றமும் அதிகரிக்க தன் அக்காவிடம் சென்று நான் இனிமேல் கல்லூரிக்கு போகமாட்டேன் என்று சொல்லிவிட்டாள்.என்ன நடந்தது என்று தெரியாத கயல்விழி அவளது தோழியிடம் சென்று கேட்டு தெரிந்து கொண்டாள் வீட்டுக்கு வந்து சமாதானப்படுத்தி கண்மணியை கல்லூரிக்கு  அனுப்பி விட்டு கயல்விழி வேலைக்கு சென்று விட்டாள் தன் அக்கா கொடுத்த தன்னம்பிக்கையான பேச்சினையும் தைரியத்தை வளர்க்கக்கூடிய சொற்களையும் வைத்துக்கொண்டு உற்சாகமாக கல்லூரிக்கு புறப்பட்ட கண்மணி கல்லூரி அடைவதற்கு முன்பே அவள் செல்லும் வழியில் நான்கு சக்கர வாகனத்தில் இருந்து ஒரு கை அவளை உள்ளே இழுத்தது.  கதறிய கண்மணிக்கு என்ன நடக்கிறது என்று யூகிக்கும் முன்பே அவள் கற்பும் அவளது கனவும் தூக்கி எறியப்பட்டன. கனவுகள் கலைந்தால் மீண்டும் கனவு காணலாம்  கற்பு தொலைந்தால் வாழும் வாழ்க்கை செல்லாக்காசாய் போய்விடும். என்கிற எண்ணங்கள் தன் தங்கைக்காகவும் அவளது கனவுகளுக்காகவும் வாழ்கின்ற கயல்விழியை தன் மனதில் வைத்துக்கொண்டு தன் அக்காவிற்கு தோளுக்குத் தோளாய்  நிற்க வேண்டும் என்று எண்ணிய அந்த அழகானவளை அன்பானவளை மென்மையான பூவானவளை கசக்கி காகிதம் போல் தூக்கி எறிந்தனர்  வீதியில். தட்டு தடுமாறி  எழுந்தவள் தன் வீட்டிற்கு சென்று தன் அறையில் சத்தம் இல்லாமல் பித்து பிடித்தது போல் கிடந்தாள். சிறிது நேரம் கழித்து கண்மணியின் கல்லூரியில் இருந்து ஒரு அழைப்பு “ஹலோ நாங்க கண்மணியோட காலேஜ்ல இருந்து கால் பண்றோம் என்னாச்சு மேடம் கண்மணி காலேஜுக்கு வரவில்லை  “என்று அவர்கள் சொன்னதை கேட்டு பயந்த கயல்விழி  கண்மணிக்கு என்ன ஆயிற்று என்ற தெரியாமல் வீட்டிற்கு சென்றாள். கயல்விழி உள்ளே நுழைந்ததும் அதிர்ந்து போனாள். அங்கே கண்மணி யாரோ ஒருவர் போல சொன்னதையே சொல்லிக்கொண்டு தன்னையே மறந்து அழுது கொண்டிருந்தாள்.அதை பார்த்த கயல்விழிக்கு  என்ன நடந்திருக்கும் என்று புரிந்தது விட நிலை குலைந்து போனாள் கயல்விழி என்ன நடக்கக் கூடாது என்று கவனமாக  இருந்தேனோ அது நடந்து விட்டதே என்று புலம்பித் தவித்தாள். அவள் தங்கையை அதற்கு முன்பு வரை அப்படி பார்த்ததே இல்லை என்று எண்ணிக் கொண்டிருக்கையில் அவளுக்கு அருணின் மீது சந்தேகம் எழுந்தது அவன் தானோ என்று எண்ணி அவனை கல்லூரியில் பார்க்க சென்றாள்.  

    No comments yet.