அறிமுகம்

அர்பிதா S | 14 Dec 2025 | Share

குயிலும், கிளியும் காற்றின் கானத்திற்கேற்ப தம்முள் இசை பாடி மகிழ்ந்து  கிடக்க, மேகமும் கூட அவ்விசையில் மயங்கி சூரியனை மறைத்து குளிர் காற்றை உலகம் எங்கும் உலவ விடும் அந்த இனிய மாலை பொழுதில், மகிழ்ச்சியின் உச்சத்தில் திளைத்து கிடந்தது விநாயகத்தின் குடும்பம்.

ஏற்கனவே தயாராகி முற்றம் அடைந்த விநாயகம், கைக்கடிகாரத்தை பத்தாவது முறையாக பார்த்த படி, தவிப்புடன், தன் பொறுமையை இழந்து இறுதியாய் அனைவரையும் அழைக்கவே செய்தார்.

“ஏம்மா லட்சுமி.. எவ்வளவு நேரம் ரெடியாவீங்க.. சீக்கிரம் கெளம்பி வாங்க.. நேரம் ஆகுது பாருங்க” என்றவருக்கு இப்போது பொறுமை முற்றிலுமாக இல்லை.

அவர் குரலிற்கு அறையை விட்டு அரக்கப்பரக்க வெளியே வந்த அவரின் மனைவி லட்சுமி, 

“இப்போ எதுக்கு கால்ல சூடு தண்ணி ஊத்துன மாதிரி இப்டி அவசர படுறீங்க.. நேரம் எல்லாம் எதுவும் ஆகல.. நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க” என்றவர் தன் ஹாண்ட்பாக்கை சரி பார்த்த படி இருந்தார்.

“விருது உனக்கு இல்லடி.. என் புள்ளைக்கு தான் குடுக்குறாங்க.. அதனால அலங்காரத்தை குறைச்சிட்டு சீக்கிரம் வாங்க” என்றவர், எதோ யோசித்து விட்டு,

“ஆமா, கவிதா எங்க.. அவளை ஆளவே காணோம்” என்றார் விநாயகம்.

“உங்க பொண்ணு இப்போ தான் குளிச்சிட்டு வந்தா.. இனி தயாராகி வரதுக்குள்ள விடிஞ்சிடும்” சலித்த லட்சுமிக்கு அதிர்ச்சி தரும் வகையில் அவ்விடம் வந்து சேர்ந்தாள் கவிதா.

“பாத்தியா என் பொண்ணு என்ன மாதிரி.. அலங்காரம் பண்றேன்னு நாள் பூரா கண்ணாடி முன்னாடி நிக்க மாட்டா” மெச்சி கொண்டார் அந்த அதிசய தந்தை.

“போதும் போதும்.. உங்க பொண்ணை மெச்சினது.. வாங்க கிளம்பலாம்” என்றார் லட்சுமி.

“இததானேடி நான் ரொம்ப நேரமா சொல்லிக்கிட்டு இருக்கேன்.. லேட் பண்ணிட்டு இப்போ எதோ நான் லேட் பண்ண மாதிரி பேசுறா பாரு” புலம்பியவரை,

“சரி சரி சண்டை போடாதீங்க ஏட்டையா.. மொதல்ல கிளம்பலாம்.. அப்பறம் மதத்தை பேசிக்கலாம்” குரல் வந்தது கவிதாவிடம் இருந்து.

“அம்மா, அண்ணனுக்கு போன் பண்ணியாமா.. எங்க இருக்கானாம்..எப்போ வரேன்னு ஏதும் சொன்னானா?” வினவினார் விநாயகம்.

“அண்ணன் நேரா பங்க்ஷன் நடக்குற இடத்துக்கே வரேன்னு சொல்லிட்டான்பா.. எதோ வேலைல இருக்கானாம்.. நம்மள முன்னாடி போக சொல்லி சொன்னான்” என்றாள் கவிதா.

“அப்போ சரி வாங்க கிளம்புவோம்.. அவன் சொன்னா சொன்ன நேரத்துக்கு வந்துடுவான்.. நாம முன்னாடி போகலாம்” பெருமிதத்தில் லட்சுமியிடம் இருந்து வந்தது வார்த்தைகள்.

அதே வேகத்தில் அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் விழா வளாகம் அடைந்தனர் மூவரும்.

“அரசு சட்ட கல்லூரி”, சென்னை’,

பெயர் பலகை வாசலில் இனிதே அவர்களை வரவேற்றபடி கம்பீரமாய் நிற்க, அதற்கு முன் சரியாய் காரை நிறுத்தியவர்கள் கண் முன்னே அலங்கரித்து நிற்கும் கல்லூரியின் அமைப்பிலே கர்வம் கொள்ள தான் வைத்தது தாய் தந்தை உள்ளத்தில்.

இன்று தன் மகனின் உண்மை திறமை பலரின் முன்னாள் அங்கீகரிக்கபட உள்ளதின் பெருமையே அதிகம் பெற்றவர்களை வாசலியே வரவேற்க, சிறு படை ஒன்று ஆவலாய் அவர்களை நோக்கி அடி எடுத்து வைத்த வண்ணம் தான் இருந்தது.

சேலை, வேட்டியில் அவ்விடம் வந்த அனைவரின் கண்களிலும் தெரிந்த தேடலை உணர்ந்த விநாயகம்,

“தம்பிக்கு ஒரு வேலை வந்துடுச்சி.. போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போயிருக்கான்.. நேரா இங்கயே வந்துடுறேன் சொல்லி இருக்கான்” என்றார் அவர், விடை அளித்த படியாய்.

“பரவாயில்லை சார்.. நீங்க உள்ள வாங்க” கல்லூரியின் ஆசிரியர் ஒருவர் அவர்களை இன்முகத்தோடு வரவேற்றாலும்,

“அவரு வர இன்னும் டைம் ஆகுமாம்டி.. ச்சா இது தெரியாம நான் வேற இப்போவே மேக்கப் எல்லாம் போட்டு ரெடி ஆகிட்டேனே” கூட்டத்தில் ஒருத்தி புலம்ப,

“எனக்கு ஒரு வேலை இருக்குடா.. சார் வந்ததும் அவரை நேர்ல பார்த்து விஷ் பண்ணிட்டு போகலாம்னு பார்த்தா, அவரே லேட்டா வருவாரு போலயே” புலம்பினான் மற்றொருவன்.

இவர்கள் அனைவரின் எதிர்பார்ப்புமே, இன்று முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கையால் விருது வாங்க இருக்கும் ஆர்யனின் வரவை எதிர் பார்த்து தான்.

விழா ஏற்பாடுகள் அனைத்துமே படு கோலாகலமாய் அமைக்கப்பட்டு இருக்க, அதனின் அமைப்பிலேயே வியந்த விநாயகம், லட்சுமி, கவிதா மூவரையும் முதல் வரிசை இருக்கைகளில், நடுவே அமைந்து இருந்த சிவப்பு லேபிள் போடப் பட்டு இருந்த மூன்று இருக்கைகளை நோக்கி அவர்களை நடத்தி சென்றார் அக்கல்லூரியின் ஆசிரியர்.

“இங்க உக்காருங்க சார்… இன்னும் ஜெட்ஜ் வரல.. வந்ததும் பங்ஷன் ஸ்டார்ட் பண்ணிடலாம் சார்.. மேக் யுவர் செல்ப் கம்போர்டேபிள்” என்றவர் அவர்கள் மூவரும் இருக்கையில் அமர்ந்த பின்னர் தான் அவ்விடம் விட்டே நகர்ந்து சென்றார்.

எதிரே இருந்த மேடை மொத்தம் வண்ணப் பூக்களும், வண்ண வண்ண சிறு விளக்குகளும் கொண்டே அலங்கரிக்க பட்டதோடு,

அதனின் சுவற்றில் நீதிபதியின் பெயரும், விருது வாங்க போகும் தன் மகனின் பெயரும் தங்க நிற மினிமினுப்பு பூசப் பட்டு மின்னுவதை கண்டதில், எத்துணை கர்வமோ தாய் தந்தை அவர்களின் கண்களுக்கு.

அதன் இடை இடையே, அவர்களுக்கு உபசரிக்க வந்து சேர்ந்த, ஜூஸ், காபீ, டீ என வரிசை கட்டி வந்து கொண்டே இருந்த அவர்களின் விருந்தோம்பலிலேயே, தன் மகனின் மீது இருக்கும் அன்பும் மரியாதையையும் அப்பட்டமாய் தெரிந்து போக பூரித்து போயினர் மூவருமே.

அதிலும் ஒருத்தி, கவிதாவை நெருங்கி,

“ஹலோ சிஸ்டர், அது…வந்து… எப்படி சொல்லனு தெரியல! எனக்கு உங்க அண்ணனை ரொம்பவே பிடிச்சி இருக்கு.. அதை அவர் கிட்ட எப்படி சொல்லன்னு தெரியல.. நீங்க எனக்கு உதவி செஞ்சா,  உங்கள ரொம்பவே நல்லா பார்த்துப்பேன்.. சத்தியமா!!

அத்தை மாமாவை கூட நல்லா பார்த்துப்பேன்.. நீங்க கொஞ்சம் ரெகமெண்ட் பண்ண கூடாதா!!!” தூதாய் போக சொல்லி இறைஞ்சி கொண்டு இருந்தவளை காணும் போதே ஒரு புறம் சிரிப்பும், மறுபுறம் பாவமாக தான் இருந்தது கவிதாவிற்கு.

தன் அண்ணின் குணம் நன்கு அறிந்தவளுக்கு தானே தெரியும், இரண்டு வருடமாய் அவனுக்கு திருமணம் செய்ய வீட்டில் செய்யும் ஏற்பாடும், அதை கெடுப்பது போல அவன் செய்யும் காரியமும் என, இந்த இரண்டு வருடமாய் வீட்டில் நடக்கும் சம்பவங்களை கண்டவள், தானே தன் அண்ணனிடம் பேச முயற்சித்தும் கூட, அவனின் வெறுப்பு மட்டுமே பதிலாக கிடைத்து இருக்க பெற்றவள்,

 இப்பொது தனக்கு அண்ணியாக விரும்பும் அப்பெண்ணை பற்றி மட்டும் எப்படி அவனிடம் கூற முடியும், மீறி கூறினாலும் அதை காதும் கொடுத்து கேட்கா அதிசய பிறவியாயிற்றே தன் அண்ணன்.

மனதில் இவை அனைத்தையும் நினைத்து பார்த்தவள்,

“ஹ்ம்ம்ம், பங்ஷன் முடிஞ்சதும் இதை பத்தி பேசிக்கலாம்.. நீங்களே கூட அண்ணன் கிட்ட நேரா பேசிக்கோங்க” என்றவள், தெளிவாய் பந்தை அந்த பெண்ணின் பக்கம் திருப்பி இருக்க,

“ஆ.. நானா.. நான் எப்படி!!!” தயங்கியவளின் முகம் சென்ற கோணங்கள் கண்ட கவிதாவிற்கு சிரிப்பு தான் வந்தது,

அதற்குள் நல்ல வேலையாக அந்த பெண்ணின் கைபேசிக்கு அழைப்பு வர, அதை காரணமாக்கி அவள் அவ்விடம் விட்டு ஓடி விட்டவளயே கண்கொட்டாமல் பார்த்து கொண்டு இருந்த கவிதா கண் முன்னே, சில நாட்களுக்கு முன் அவள் கண்ட காட்சிகள் படலம் எடுக்க பெற்றவள் சுற்றமும் மறந்து தான் போயிருந்தாள்.

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பு, ஏதோ இரு காரியமாய், எதையோ தேடி ஆர்யன் அறை சென்றவள் கையில், தானே வந்து சிக்கிய சில காகித தூண்டுகளை சாதாரணமாக நினைத்தே கடக்க முயன்ற கவிதாவிற்கு, அவைகள் அனைத்திலும் இருக்கும் ஒற்றுமை சற்று நேரம் கழித்தே மூளைக்கு உரைக்க துவங்கி இருந்தது.

எல்லா காகிதங்களிலும், ஆரம்பத்திலோ, நடுவிலோ ஏதோ எழுதி, பின் கிறுக்கலாகி, முடிவின்றி மொட்டையாய் கிடந்த அவைகளின் பக்கங்கள், அனைத்துமே கசங்கி, நிலை குலைந்து, சிலவைகள் கிழிக்க பட்டு, உருகுழைந்து தான் இருந்தன.

அதிலும் ஒரு காகிதம் சுமந்து வந்த வரிகள் கூறிய வலிகளை படித்ததும், உறுத்தல்கள் அனைத்தும் மேலோங்க, பல முறை வாசித்து, முழுதாய் முடிந்து, உணர்வுகள் பல சுமந்து வந்த கவிதையான அவன் மன பிம்பத்தை.

அது தந்த தாக்கத்தில், இன்று கூட அதை மறக்க இயலாதவள், இப்போதும் கூட அதனின் வரிகளில் மனதில் முனு முனுத்து கொண்டே தான் இருந்தாள்,

“நிகழும் போதே நெகிழசெய்து,

கண்ணீருடன் ஆனந்தமுமாக்கும்

கீழ்வானவிடியல் …

காட்சிபிழையாம்.,

வானம் போல் நீயும் தூரமாய் . . .

காத்திருப்பேன் வாழ்நாள் முழுதும்

கரும்பாறையென.,

மேகமாய் நீ இறங்கி, என்னை வருடும்

அந்த நொடிக்காக . . .”

அதனின் அர்த்த தேடலில் கடந்த சில நாட்களாக தன்னை துளைத்து கிடந்தவள், இப்போதும் அமர்ந்து இருந்த மறதி நிலையை கண்ட லட்சுமி,

“ஏய்ய்ய், கவிதா.. என்னை ஆச்சு.. அந்த பொண்ணு என்னை சொல்லிட்டு போறா? நீ எத பத்தி இவ்ளோ தீவுரமா யோசிச்சிகிட்டு இருக்க?” என்றார், சற்றே யோசனையுடன்.

“ஆ…, ஒன்னும் இல்லம்மா, இவங்க இவ்ளோ தடபுடலா நம்ப அண்ணனுக்காக ஏற்பாடு செஞ்சி இருக்காங்க, ஆனா அவனை இன்னும் காணோம்.. அதான் யோசிச்சிகிட்டு இருக்கேன்” என்றாள் சற்றே சுதாரித்த படியாய்.

“இதுல யோசிக்க என்னம்மா இருக்கு? அவனுக்கே கால் பண்ணி கேட்டுடு.. எங்க இருக்கான்? எப்போ வருவான்னு!!!” சொன்னார் விநாயகம்.

“சரிப்பா, இதோ கூப்பிட்டு கேக்குறேன்” என்றவள் தன் கைபேசியை எடுக்கவும் இல்லை, அதற்குள் அவளுக்கு வந்த, அழைப்பை ஏற்படுத்திய நபரின் பெயரை திரையில் கண்டவள் திடுக்கித்து, பல எண்ணங்கள் மனதில் ஓட பெற்றவள், தன் தாயை பார்க்க, அவரின் கண்களும் கூட அதே மிரட்சியில் தான் விரிந்து இருந்தது.

யாரோ அழைப்பது?

தன் அண்ணனின் மன கவிதைகளின் விடையை தேடுவாளோ, கவிதா?

சரியான நேரத்திற்குள் வந்து சேர்வானோ ஆர்யன்!!!

                                                             … தொடரும் 

    No comments yet.