அரக்கன் -22

Chellammal Bharathi | 29 Dec 2025 | Share

      கோவிலில் வைத்து அச்சிறுமி கூறிய செய்தியைக் கேட்ட அருணாச்சலம், அதிர்ந்து அப்படியே கீழே அமர்ந்தார். அவர் முகம் முழுவதும் வியர்த்துக் கொட்ட உடல் நடுங்க ஆரம்பித்தது அருணாச்சலத்திற்கு. 

    அவர் அவ்வாறு அதிர்ச்சியில் அமர்ந்ததைக் கண்ட அச்சிறுமி, “தாத்தா, உங்களுக்கு என்ன ஆச்சு? உடம்பு சரி இல்லையா? குடிக்க தண்ணி கொண்டு வரட்டுமா? இங்கயே இருங்க நா போய் தண்ணி கொண்டு வர்றேன்…” என்றவாறு அங்கிருந்து நகரப் போனாள்.

     “இல்ல இல்ல. எனக்கு ஒன்னும் இல்ல மா. தாத்தா நல்லா இருக்கேன்.” என அச்சிறுமியைப் பார்த்து முயன்று சிரித்தார் அருணாச்சலம். 

    “இல்ல. உங்க மொகமே என்னமோ மாதிரி இருக்கு. இருங்க நா போய் தண்ணி எடுத்துட்டு அப்பாவ கூட்டிட்டு வர்றேன்…” சிறுமி.

    “அதெல்லாம் வேணாம் டா தங்கம். இங்க பாரு தாத்தா எந்திரிச்சு நிக்குறேன்…” என்றவாறு எழுந்து நின்றார் அருணாச்சலம். 

    “நெஜமாவா?” என சந்தேகத்துடன் அருணாச்சலத்தை சுற்றி வந்தாள் அச்சிறுமி. 

     அக்குழந்தை தன் மீது உள்ள அக்கறையினால் தான் கூறுவது உண்மையா என்பது போல் சந்தேகத்துடன்  தன்னை சுற்றி வருவதைக் கண்டு லேசாக சிரித்தவர், “உண்மையாவே நா நல்லா இருக்கேன் தங்கம். ஆனா நீங்க இன்னொரு தடவ இந்த போட்டோவ பாத்து இவங்க தானா னு கொஞ்சம் பாத்து சொல்ல முடியுமா?” என்றார் அருணாச்சலம். 

     “அதிகாலையில பாத்தாலும் அந்த அங்கிளோட மொகமும் அந்த அக்காவோட மொகமும் நல்லா நியாபகம் இருக்கு. அன்னக்கி இவங்க ரெண்டு பேருக்கும் தான் கல்லியாணம் நடந்துச்சு. கடைசியில கூட இந்த அங்கிள் அந்த அக்காவ திடீருனு புடிச்சு இழுத்து செல்ஃபி எடுத்தாங்க தாத்தா ” என உறுதியாக கூறினாள் அச்சிறுமி. 

    “ஓஓஓ… ரொம்ப தேங்க்ஸ் டா தங்கம். இந்தா என் பர்ஸ எனக்கு எடுத்து குடுத்ததுக்கு…” என்றவாறு நூறு ரூபாயை எடுத்து அச்சிறுமியிடம் நீட்டினார் அருணாச்சலம். 

     “அய்… தேங்க்ஸ் தாத்தா. இத கொண்டு போய் நா என் அம்மாக் கிட்ட கொடுக்குறேன்…” என மிகுந்த மகிழ்ச்சியுடன் அருணாச்சலத்திடம் இருந்து அந்நூறு ரூபாயை வாங்கிக் கொண்டு சிட்டாகப் பறந்தாள் அச்சிறுமி. 

     அவளது சந்தோஷத்தை பார்த்த அருணாச்சலத்தின் மனதில் மிகுந்த பாரம் ஏறிக் கொண்டது. தன் மனைவி ஏற்கனவே  ஜோதிடர் கூறிய செய்தியில் குழம்பி இருப்பதை உணர்ந்து காரை நோக்கி சென்றார் அருணாச்சலம். 

     “ஏங்க பர்ஸ வாங்கிட்டு வர இவ்ளோ நேரமா? நானே அந்த ஜோசியர் சொன்னதுல இருந்து ரொம்ப டென்ஷனா இருக்கேன். இதுல நீங்க வேற அந்த பாப்பாக்கிட்ட சாவகாசமா கதை பேசிட்டு வர்றீங்க. இதெல்லாம் உங்களுக்கே நியாயமா இருக்கா?” என டென்ஷனில் படபடவென பொரிந்தார் சிவகாமி. 

     சிவகாமிக்கு எப்பதிலும் கூறாமல் அமைதியாக காரை தங்கள் வீட்டை நோக்கி செலுத்தினார் அருணாச்சலம்.

     “பதில் சொல்லுவோம் னு கொஞ்சமாச்சும் நினைப்பு இருக்கா? இவ என்ன கேக்குறது? நாம என்ன பதில் சொல்றது ங்கிற நினைப்பு. ஏங்க.. நா உங்க கிட்ட தான் பேசிட்டு இருக்கேன். அதுவாச்சும் உங்களுக்கு தெரியாதா இல்லையா?” என வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் கணவனிடம் கத்தினார் சிவகாமி. 

     “தெரியுது சிவகாமி. அந்த ஜோசியர் சொன்னதுல நீ ரொம்ப டிஸ்டர்ப் ஆகி இருக்க னு நல்லா தெரியுது. இவ்ளோ பதட்டத்துல நம்மளால எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது. வீட்டுக்குப் போய் ஒரு தூக்கம் தூங்கி எந்திரி. அப்ப தான் அடுத்து என்ன செய்றது னு உனக்குத் தெரியும். அதுவரைக்கும் நீ என்னய எவ்ளோ வேணுனாலும் திட்டிக்க. இதோ அவ்ளோ தான் வீடு வந்துருச்சு…” என தங்களின் பங்களாவினுள் காரை செலுத்தியபடி கூறினார் அருணாச்சலம்.

     “நா ஏன் உங்கள திட்ட போறேன். உங்கள திட்ட நா என்ன லூசா?” என முறுக்கிக் கொண்டு உள்ளே சென்றார் சிவகாமி. 

    தன் மனைவி கூறியதில் புன்னகை ஏற்பட அப்புன்னகையுடனே காரை நிறுத்திவிட்டு தங்கள் அறையினுள் அருணாச்சலம் நுழைகையில் கண்ணை மூடி படுத்திருந்தார் சிவகாமி. 

    “நீ தூங்கு சிவகாமி. நா கொஞ்சம் வெளில இருக்கேன் ” என தன் மனைவியிடம் கூறி விட்டு அறையை விட்டு வெளியே வந்தார் அருணாச்சலம்.

    வெளியே வந்தவரின் மூளைக்குள் ஆயிரம் எண்ணங்கள் வந்து மோத ஹாலில் நடந்தபடி தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார் அருணாச்சலம். 

    “ஆதி ஏன் இப்பிடி பண்ணி இருக்கான்? நிலா கழுத்துல தாலி கட்டிட்டு ஏன் அத வெளில சொல்லாம இருக்கனும்? மொதல்ல அந்த பொண்ணு எப்பிடி இதுக்கு சம்மதம் சொன்னா? எந்த ஒரு பொண்ணும் செய்யத் துணியாத செயல செஞ்சுட்டு எப்பிடி நார்மலா இருக்கா? ஆதி கையால தாலி வாங்கிட்டு எப்பிடி ஆரன கல்லியாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னா? இது ஆரனுக்கு தெரியுமா? இப்ப ஒரு பொண்ணால என் ரெண்டு பசங்களோட வாழ்க்கை சிக்கல்ல இருக்கு. அந்த பொண்ணால என் ரெண்டு பசங்க வாழ்க்கை சிக்கல்ல இருக்கா? இல்ல என் ரெண்டு பசங்களால அந்த பொண்ணோட வாழ்க்கை சிக்கல்ல இருக்கா? ஐயோ எனக்கு ஒன்னும் புரியலயே.. அன்னக்கி ஆபீஸ்லயும் சரி ஹாஸ்பிடல்லயும் சரி ஆதி தான் நிலாவ விடாம பாத்துட்டு இருந்தான். நிலா, ஆதிய திரும்பி கூட பாக்கல. கல்லியாணம் பண்ணிக்கிட்ட ரெண்டு பேரும் ஏன் அப்பிடி இருக்கனும்? அப்பிடி அவங்க ரெண்டு பேருக்குள்ள என்ன தான் நடந்து இருக்கும்? இத எப்பிடி தெரிஞ்சுக்கிறது?” என மூளையை கசக்கி தீவிரமாக யோசித்தவரின் மூளையில் திடீரென ஒரு யோசனை பளிச்சிட அதை செயல்படுத்த வேகமாக மாடி ஏறினார் அருணாச்சலம். 

      நேராக ஆதிரனின் அறைக்குள் நுழைந்த அருணாச்சலம், அறையை முற்றிலுமாக சல்லடை போட்டு தேடத் தொடங்கினார் அருணாச்சலம். அறையில் ஒவ்வொரு இடமாக தேடியவர் எதுவும் கிடைக்காமல் சோர்ந்து போனார் அருணாச்சலம். 

      “இப்ப என்ன பண்றது? ஆதி ரூம்ல நிலா சம்பந்தமா எதுவுமே கிடைக்கலயே. ஒருவேளை ஆதி நிலாவ லவ் பண்ணி இருந்தா அவ சம்பந்தமா ஏதாவது ஒரு பொருள் இருந்து இருக்கனுமே. இங்க எதுவுமே இல்லாம இருக்கு. அப்ப நிலாவ ஆதி லவ் பண்ணலயா? லவ் பண்ணாதவன் எதுக்கு நிலாவ கல்லியாணம் பண்ணனும்? அதுவும் கோவில்ல அய்யர வச்சு மொறையா கல்லியாணம் பண்ணனும்?” என மூளையை கசக்கி யோசித்தவர், “அய்யர வச்சு பண்ணி இருந்தா தாலி தங்கமா தான இருந்து இருக்கும்? இவன் தாலி போய் வாங்கி இருப்பானா? ஒருவேளை, அப்பிடி இருக்குமோ?” என யோசித்துக் கொண்டே கீழே இறங்கி பூஜை அறையில் இருந்த லாக்கரை திறந்தார் அருணாச்சலம். 

     அவர் எதிர்பார்த்தது போல் அது அந்த லாக்கரில் இல்லை. அப்பொருள் இல்லாமல் இருப்பதைக் கண்ட அருணாச்சலத்தின் முகத்தில் எதையோ சாதித்த புன்னகை தோன்றியது. 

     “இந்த ஒன்னு போதும் டா மவனே. முடிவ கண்டுபிடிச்சாச்சு. இனி ஏன்? எதுக்கு னு காரணத்த கண்டுபிடிச்சா போதும்…” என நினைத்தவாறு லாக்கரை பூட்டி விட்டு திரும்பிய அருணாச்சலத்தின் எதிரே நின்றிருந்தான் ஆதிரன். 

     தன் எதிரே நிற்கும் ஆதிரனைக் கண்டு அவன் செய்திருக்கும் காரியத்தை நினைத்து கோபம் வந்தாலும் அமைதி காத்தார் அருணாச்சலம். 

     “என்ன டாட்? லாக்கரலாம் செக் பண்ணுன மாதிரி இருக்கு?” என லேசான குறு குறுப்புடன் வினவினான் ஆதிரன். 

     “ம்ம் ஆமா…” என ஒற்றை வார்த்தையில் பதில் கூறியவாறு அவனை கடந்தார் அருணாச்சலம். 

     “திடீருனு லாக்கர செக் பண்ண வேண்டிய அவசியம் என்ன வந்துச்சு?” ஆதிரன்.

     அக்கேள்விக்கு கோவமாக பதிலளிக்க தோன்றிய தன் உள்ளத்தை கடினப்பட்டு அடக்கியபடி, “இந்த நேரத்துல கோவம் முக்கியம் இல்ல. காரியம் தான் முக்கியம். தூண்டில போட்டா தான் மீன் விழும். கல்லெறிஞ்சா விழாது…” என நினைத்தவாறு, “ஆரனுக்கு கல்லியாணம் ஆக போகுது ல. அதான் என் மருமகளுக்கு போட்டு அழகு பாக்க என்னென்ன நகை இருக்கு னு பாத்தேன்.” என்றார் அருணாச்சலம். 

     “ஓஓ… சரி சரி… அவக்கிட்ட கேளுங்க. இதெல்லாம் அவளுக்கு புடிச்சு இருக்கா இல்ல புது டிசைன் ல நிலாக்கு புடிச்ச மாதிரி புதுசா செஞ்சுறலாம்…” எனக் கூறியவாறே மாடியேறினான் ஆதிரன். 

     “இதெல்லாம் ஆரன் தான ஆதி யோசிக்கனும்? நீ என்னமோ உன்னோட  வொய்ப்க்கு செய்ற மாதிரி ரொம்ப அக்கறையா யோசிக்கிற?” அருணாச்சலம். 

     “அவன் யோசிச்சா என்ன? நா யோசிச்சா என்ன? எல்லாம் ஒன்னு தான் ப்பா…” ஆதிரன். 

     “இவன் என்ன இப்பிடி சொல்லிட்டு போறான்? இவன் என்ன நினைப்புல தான் இருக்கான்?” என சிந்தித்தவாறு ஷோபாவில் சென்று அமர்ந்தார் அருணாச்சலம். 

     மேலே ஏறி நின்றவன், “டாட்… உள்ள லாக்கர் ல எல்லா நகையும் கரக்ட்டா இருக்கா?” என வினவினான் ஆதிரன். 

     அக்கேள்வியை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அருணாச்சலம், “எல்லாமே கரெக்ட்டா தான் இருக்கு. ஏன் ஆதி இப்பிடி கேக்குற? என்றார். 

      “இல்ல சும்மா தான் ப்பா… நிஜமா எல்லாம் கரெக்ட்டா இருக்கா?” ஆதிரன்.

     “சரியா தான் டா இருக்கு. வேணுனா உன் அம்மாவ அழைச்சு திரும்ப சரி பாத்துருவோமா?” அருணாச்சலம்.

     “ஏன் அம்மாவ லாம் கூப்பிட்டுக்கிட்டு? எல்லாம் கரெக்ட்டா இருந்தா சரி தான்…” எனக் கூறியவாறு தன் அறையினுள் நுழைந்தான் ஆதிரன். 

     “ஆக மொத்தம் அம்மா னு சொன்னதும் தான் டா நீங்க லாம் பயப்படுறீங்க… என்னய யாரு னு நெனச்ச? என் கிட்டயே நடிக்கிறியா? நா உனக்கு அப்பன் டா. உனக்கு மேலயே நா நடிப்பேன்…” என நினைத்தவாறு அடுத்து என்ன செய்வது என யோசிக்கலானார் அருணாச்சலம். 

      அந்நேரம் அருணாச்சலத்தின் அலைபேசி அழைப்பு மணியை ஒலிக்க,  அதை எடுத்துப் பார்த்தார் அருணாச்சலம். ஆரண்யன் அழைக்கவும் அழைப்பை ஏற்று, “ஹலோ…” என்றார் அருணாச்சலம். 

      “ஹலோ… அப்பா…” ஆரண்யன். 

     “என்ன ஆரன்? சொல்லு…” அருணாச்சலம். 

     “ஜாதகம் பாக்க போனீங்களே என்ன ஆச்சு னு கேக்க தான் கூப்பிட்டேன். ஜோசியர் என்ன சொன்னாரு? கல்லியாண நாள் குறிச்சுட்டீங்களா?” ஆரண்யன். 

     “இல்ல டா… இன்னும் கல்லியாண தேதி குறிக்கல…” எனத் தயக்கமாக கூறினார் அருணாச்சலம். “இவனுக்கு எதுவும் தெரியாது போலயே… இந்த கல்லியாணத்துல இவ்ளோ ஆர்வமா இருக்கான். இப்ப நா என்ன பண்றது? இந்த கல்லியாணம் நடந்தா ஆதி மனசு கஷ்ட்டப்படுறது உறுதி… இந்த கல்லியாணம் நடக்கலனா ஆரன் மனசு கஷ்ட்டபடுறது உறுதி. இப்ப இவன் கிட்ட எப்பிடி உண்மைய சொல்றது னு தெரியலயே…” என ஃபோனை காதில் வைத்தபடி ஆரண்யனுக்காக யோசித்தார் அருணாச்சலம். 

      உங்களுக்கு முன்னாடியே அவனுக்கு தெரிஞ்சுருச்சு னு உங்களுக்கு தெரியலயே 🤭🤭

                                (நிலவு மலரும்…)

                         -செல்லம்மாள்பாரதி 

   

    No comments yet.