ஹே ரகிட ரகிட ரகிட… ஊ
ரகிட ரகிட ரகிட… ஊ
ரகிட ரகிட ரகிட… ஊ
ரகிட ரகிட ரகிட
ஹே என்ன வேணா நடக்கட்டும்
நான் சந்தோசமா இருப்பேன்
உசுரு இருக்கு வேறென்ன வேணும்
உல்லாசமா இருப்பேன் என்ற பாடல் காதை கிழித்துக் கொண்டிருக்க நடு ஹாலில் அப்பாடலுக்கு ஏற்றவாறு ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தான் ஆரண்யன்.
ஷோபாவில் ஏறிக் குதிப்பதும் அதிலிருந்து தொப்பென்று இறங்கி குதிப்பதுமாக சிறு பாலகனாக மாறி அக்காலை வேளையில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தான் ஆரண்யன்.
அப்பெரிய ஹாலின் ஓரத்தில் ஒரு மூலையில் அமைதியாக அமர்ந்து அவன் ஆடுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார் அருணாச்சலம். சமயலறையில் கருமமே கண்ணாக சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் சிவகாமி. அப்படித்தான் அருணாச்சலம் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் உள்ளே பாடலுக்கு ஏற்ப சிவகாமியும் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்ததை யாரும் பார்க்கவில்லை.
அலுவலகத்திற்கு புறப்பட்டு கீழே வந்த ஆதிரன் பாடல் சத்தம் கேட்டு எரிச்சலுற்றபடியே கீழிறங்கினான். “ம்மா… என்ன ம்மா இது?” எனக் கத்தி குரல் கொடுத்தபடி கீழிறங்கியவனின் குரல் பாவம் யார் காதிற்கும் சென்றடையவில்லை.
ஆடுகிறேன் என்ற பேரில் தாறுமாறாக குதித்துக் கொண்டிருக்கும் ஆரண்யனையும் அவன் செய்வது என்னமோ உலக அதிசயம் போல விழி அசைக்காமல் ரசித்துக் கொண்டிருக்கும் தந்தையையும் கண்டு மேலும் எரிச்சலுற்ற ஆதிரன், “இங்க என்ன நடந்துட்டு இருக்கு? நா ஒருத்தன் இங்க கத்திட்டு இருக்கேன்… நீங்க பாட்டு போட்டு கூத்தடிச்சுட்டு இருக்கீங்க…” எனக் கத்தினான்.
ஆனாலும் பாவம் அதுவும் யார் காதிலும் சென்று சேரவில்லை. குரங்கு போல குதித்து தாவிக் கொண்டிருந்த ஆரண்யன் தன் அண்ணனைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் அவனிடம் வந்து, “வா ஆதி… ஒரு ஆட்டம் போடலாம்…” என அவனின் கைகளைப் பிடித்து அழைத்தான்.
ஆரண்யனின் மகிழ்ச்சியைக் கண்டு அவன் மீது கோவத்தைக் காட்ட முடியாத ஆதிரன், “ஏன்டா இன்னக்கி இந்த கூத்துப் பண்ற?” என மென்மையாக அதட்டினான்.
“நீ என்னமோ சொல்றங்கிறது தெரியுது. ஆனா என்ன சொல்ற ங்கிறது தான் தெரியல…” என பதிலுக்கு பெருங் குரலெடுத்துக் கத்தியவன் ஆதிரனையும் கைபிடித்து இழுத்து ஆட வைத்தான் ஆரண்யன்.
தம்பியின் இழுப்பிற்கு சிறிது அசைந்தவன் பின்பு தாங்க முடியாமல், “ம்மா.. ம்மா…” என்றவாறு சமையலறை நோக்கி சென்றான் ஆதிரன்.
அங்கோ, ஆரண்யனை விட மிக மோசமாக குதித்துக் கொண்டிருக்கும் சிவகாமியைக் கண்டு வாயில் கை வைத்து அப்படியே சுவற்றில் சாய்ந்து நின்று விட்டான் ஆதிரன். “இன்னக்கி இந்த வீட்டுக்கு என்ன டா ஆச்சு?” என உள்ளே குதிக்கும் தாயையும் வெளியே ஹாலில் போட்டிருந்த பனியனை கழட்டி கங்குலியைப் போல் வெற்றுடம்புடன் ஆடிக் கொண்டிருக்கும் தம்பியையும் மாறி மாறி பார்த்தவன் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடலை நிறுத்தினான் ஆதிரன்.
பாடல் சத்தம் நின்றதும், “பாட்ட யாரு நிறுத்துனது?” என ஆரண்யன் கேள்வி கேட்கும் முன்பே, “எவன்டா பாட்ட நிறுத்துனது?” எனக் கேட்டபடி உள்ளிருந்து வேகமாக வெளியே வந்தார் சிவகாமி.
அவர் சேலையை இடுப்பில் சொருகி இருந்த விதமும் கேள்வி கேட்ட வேகமும் அவரும் உள்ளே ஆடியுள்ளார் என்பதை வெட்ட வெளிச்சமாக்கிவிட வசமாக மாட்டிக் கொண்டார் சிவகாமி.
அவரை அக்கோலத்தில் கண்ட ஆரண்யன், “தாயே சிவகாமி…” என அளவு கடந்த ஆச்சரியத்துடன் பார்த்தான்.
“என்ன டா?” என சமாளிப்பாக சற்று அதட்டலுடன் வினவினார் சிவகாமி.
“நீயுமா ம்மா ஆடுன?” ஆரண்யன்.
“ஆங்… ஆமா. நானும் தான் ஆடுனேன். ஏன்? நா ஆடக் கூடாதா?” சிவகாமி.
“வெண்ணிலா கல்லியாணத்துக்கு ஓகே சொல்லிட்டா னு சந்தோஷத்துல நா ஆடுனேன். நீ எதுக்கு ஆடுன சிவகாமி?” என பொய்யான முறைப்புடன் வினவினான் ஆரண்யன்.
“என் மருமக வீட்டுக்கு வரப் போறா னு நா ஆடுனேன்…” என விரைப்பாகவே பதிலளித்தார் சிவகாமி.
“ஆஹான்… நீங்க ஈஸியா சொல்லிட்டீங்க. அங்க பாருங்க ஒருத்தரு அதிர்ச்சியில இருந்து இன்னும் வெளில வரல…” என தந்தையைக் காட்டி சிரித்தான் ஆரண்யன்.
ஆரண்யன் கூறியதைப் போல தன் மனைவி சிறு பிள்ளைப் போல ஆடியதை நம்ப முடியாமல் மனைவியையே அதிர்ச்சி கலந்த ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தார் அருணாச்சலம்.
“அங்க பாருங்க அப்பா உங்கள படு ரொமான்டிக்கா பாத்துட்டு இருக்குறத…” என சிவகாமியிடம் கூறிச் சிரித்தான் ஆரண்யன்.
“சும்மா இரு டா…” என வெட்கத்தில் ஆரண்யனை விளையாட்டாக அடித்து விட்டு, “ரொம்ப வழியுது தொடச்சுக்கங்க…” என அருணாச்சலத்திடம் சென்று தனது முந்தானையை நீட்டினார் சிவகாமி.
தன்னிடம் நீட்டிய முந்தானையை பிடித்து இழுத்து தன் மனைவியை தன் அருகில் இழுத்தவர், “இப்ப போட்ரா பாட்ட…” என்றார் அருணாச்சலம்.
“ஹே… கமான் டாட்.” என உற்சாகத்துடன் பாடலை ஒலிக்க விட்டான் ஆரண்யன்.
“பேர் வச்சாலும்
வைக்காம போனாலும்
மல்லி வாசம் அது குத்தால
சுக வாசம் அட இப்போதும்
எப்போதும் முப்போதும்
தொட்டுப் பேசும் இந்த
பெண்ணோட சகவாசம்
மொட்டுத் தான்
வந்து சொட்டுத் தேன் தந்து
கிட்டத் தான் ஒட்டத் தான்
கட்டத் தான் அப்பப்பா
வச்சாலும்
வைக்காம போனாலும்
மல்லி வாசம் அது குத்தால
சுக வாசம்” என்ற பாடலை சத்தமாக ஒலிக்க பாடல் வரிகளுக்கு ஏற்ப மனைவியுடன் ஆடத் தொடங்கினார் அருணாச்சலம். சிவகாமியும் வெட்கப்பட்டுக் கொண்டே கணவருடன் சேர்ந்து நன்றாகவே ஆடினார்.
அவர்களின் ஆட்டத்தைக் கண்ட ஆரண்யன்,”யாஹூ…” என உற்சாக குரல் கொடுத்தபடி கைத்தட்டி மகிழ்ச்சியுடன் அவர்களை உற்சாகப்படுத்தினான்.
“டேய் என்னங்கடா பண்றீங்க?” என அவர்களின் இடையே புலம்பியபடி ஷோபாவில் அமர்ந்தான் ஆதிரன்.
“நீயும் வா ஆதி, ஆடலாம். செம ஜாலியா இருக்கும்…” என அண்ணனையும் ஆடுவதற்கு அழைத்தான் ஆரண்யன்.
“சும்மா இருடா. கொன்ருவேன். ஆபீஸ்க்கு போகனும்.” ஆதிரன்.
“உன் பொறுப்புணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா? இன்னக்கி சன்டே ஆதி. வா ஆடலாம். காலையில செம வைப்பா இருக்கும்” என்றவாறு ஆதிரனின் கைப்பிடித்து எழுப்பினான் ஆரண்யன்.
ஒரு பக்கம் தாயும் தந்தையும் உற்சாகத்துடன் ஆடிக் கொண்டிருக்க மறுபுறம் தம்பி அதே உற்சாகத்துடன் அழைக்க, மறுக்க முடியாமல் நீட்டிய ஆரண்யனின் கைப்பற்றி எழுந்து ஆட எழுந்தான் ஆதிரன்.
“ஹேய் ஹேய் ஹேய்…” என உற்சாகத்துடன் ஆரண்யன் தன் போக்கில் குதிக்க அவனுடன் இணைந்து மனம் போன போக்கில் ஆடுதல் என்னும் பெயரில் குதிக்க ஆரம்பித்தான் ஆதிரன். நால்வரும் மிக உற்சாகமாக ஆடிக் கொண்டிருக்கையில் எதார்த்தமாக ஆதிரன் திரும்பிப் பார்க்க அங்கு வாயிற்கதவை இறுக்கமாக பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள் வெண்ணிலா.
அவளைப் பார்த்ததும் சட்டென ஆடுவதை நிறுத்திவிட்டு ஆரண்யனை கைப் பிடித்து நிறுத்த முயன்றான் ஆதிரன்.
“ப்ச் என்ன ப்ரோ… ஆடுறத நிறுத்திட்ட? கமான் ப்ரோ. டான்ஸ் வித் மீ…” என நிற்காமல் கண்டமேனிக்கு குதித்துக் கொண்டிருந்தான் ஆரண்யன்.
“டேய்… ப்ச் டேய் குட்டா அங்க பாரு டா…” என ஆரண்யனின் குதியலை சற்று இழுத்து நிறுத்தி அவன் முகத்தை வெண்ணிலாவின் புறம் திருப்பினான் ஆதிரன்.
அவளோ மிகவும் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கியதால் விழிகளில் நீர் வழிய அவர்களை பார்த்தவாறு நின்றிருந்தாள். வெண்ணிலாவின் விழிகளில் நீர் வழிவதை கண்டவன் தான் எந்த நிலையில் உள்ளோம் என்பதை கூட உணராமல், “ஹேய் நிலா, உன்னய யாரு என்ன செஞ்சது? ஏன் அழுகுற? ஏதாவது பிரச்சனையா?” என அவளருகில் சென்று அவளின் கண்ணீரை மிக அக்கறையாக துடைத்தபடி கேட்டான் ஆரண்யன்.
அதைக் கண்டு எரிச்சலில் தலையில் அடித்துக் கொண்டு பாடலை நிறுத்தினான் ஆதிரன். பாடல் நின்றதும் அருணாச்சலமும் சிவகாமியும் தங்கள் காதல் உலகில் இருந்து வெளி வந்தனர். அவர்கள் இருவரும் வெண்ணிலாவைக் கண்டு, “உள்ள வா நிலா? ஏன் அங்கயே நின்னுட்ட?” என அன்புடன் வரவேற்றனர்.
“குடும்பமா நீங்க அடிச்ச கூத்து பத்தாது னு உங்க மகன் எப்பிடி நின்னுட்டு இருக்கான்னு பாருங்க…” என கடுகடுத்தான் ஆதிரன்.
“ஏன்? நாங்க மட்டுமா டான்ஸ் ஆடுனோம்? நீயும் தான சேந்து ஆடுன? போடா போய் அவன இழுத்துட்டு வா. புள்ள அங்க சத்தம் போட்டு சிரிக்க முடியாம ரொம்ப கஷ்ட்டப்பட்டு கன்ட்ரோலா நின்னுட்டு இருக்கு…” என ஆதிரனை ஆரண்யனை நோக்கி தள்ளினார் அருணாச்சலம்.
“நீ உள்ள வா நிலா…” என வெண்ணிலாவை கை பிடித்து அழைத்தார் சிவகாமி.
“ம்மா நிலாக்கு ஏதோ பிரச்சனை போல. இவ்ளோ காலையில வந்து அழுதுட்டு நிக்கிறா. என்ன னு கேளு ம்மா…” என தன் நிலைமை அறியாமல் கூறினான் ஆரண்யன்.
“டேய் பொறம்போக்கு அடிச்சு மூஞ்ச உடைச்சுருவேன். உன் கண்ண முழிச்சு அவள நல்லா பாரு. அவ சிரிச்சு சிரிச்சு அவ கண்ணுல இருந்து தண்ணி வருது…” என ஆரண்யனின் காதில் பல்லை கடித்தபடி கூறினான் ஆதிரன்.
அதன் பிறகு தான் நிதானமாக வெண்ணிலாவைப் பார்த்தவன், “அட ஆமா ப்ரோ. அவ சிரிச்சுட்டு இருக்கா. ஆனா என்னய ஏன் வித்தியாசமா பாக்குறா?” என ஆதிரனிடம் மெதுவாக வினவினான் ஆரண்யன்.
“ம்ம் குனிஞ்சு உன் கீழப் பாரு…” என நக்கலாக கூறினான் ஆதிரன்.
“கீழ என்ன இருக்கு?” என கேஷூவலாக தன்னைப் பார்த்தவன் மேல் சட்டை எதுவும் இல்லாமல் வெற்றுடம்புடன் முழங்கால் வரை உள்ள ஷார்ட்ஸூடன் தான் நின்றிருப்பதை உணர்ந்து, ” ஓ மை காட்… ஐயோ என் கற்பு போச்சே…” என மார்பின் குறுக்கே தன் இரு கைகளையும் எக்ஸ் போல வைத்துக் கொண்டு தன் அறை நோக்கி ஓடி மறைந்தான் ஆரண்யன்.
அவன் ஓடுவதைப் பார்த்து மிகவும் கஷ்டப்பட்டு அடக்கி வைத்திருந்த சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் வாய்விட்டு சத்தமாக சிரித்தாள் வெண்ணிலா. அவளின் சிரிப்பை பார்த்து முகிழ்ந்த புன்னகையுடன், “உள்ள வா நிலா…” என அவளை உள்ளே அழைத்து வந்தார் சிவகாமி.
உள்ளே வந்து ஷோபாவில் அமர்ந்தும் அவளது சிரிப்பு நிற்கவில்லை. விடாமல் சிரித்து சிரித்து வெண்ணிலாவிற்கு கண்ணீர் அருவியாக கொட்டியது. அவளது இந்த சிரிப்பை அருணாச்சலமும் சிவகாமியும் அன்புடன் ரசித்தவாறு அமர்ந்திருந்தனர். ஆதிரனால் அவள் மீதிருந்த தன் விழிகளை சிறிதும் அகற்ற முடியவில்லை. “இந்த நிலா இவ்ளோ அழகா?” என நம்ப முடியாமல் அவளையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதிரன்.
ஒருவழியாக தன் சிரிப்பைக் கட்டுக்குள் கொண்டு வந்தவள் சிவகாமியைப் பார்த்து, “ஸாரி ஆண்டி… நீங்க எல்லாரும் ஆடுறத ஸாரி குதிக்கிறத பாத்து என்னால சிரிப்ப கண்ட்ரோல் பண்ண முடியல. அதுலயும் ஆரா வேற லெவல்…” எனக் கூறியபடி மீண்டும் சிரித்தாள் வெண்ணிலா.
“கொழுப்ப பாத்தியா? நாங்க ஒன்னும் குதிக்கல. டான்ஸ் ஆடிட்டு இருந்தோம்…” என ரோசத்துடன் பதிலளித்தார் அருணாச்சலம்.
“இதப் போய் வெளில டான்ஸ் னு சொல்லிறாதீங்க ஸார்… அப்புறம் நிஜமா டான்ஸ் ஆடுறவங்கலாம் உங்க கூட சண்டைக்கு வந்துருவாங்க…” என சிரித்தாள் வெண்ணிலா.
“அது என்ன இன்னும் ஸார் ஆண்டி னு அழைச்சுட்டு இருக்க? ஒழுங்கா அத்தை மாமா னு கூப்பிடு…” என உரிமையாக ஆணையிட்டார் அருணாச்சலம்.
“ஓகே ஓகே மாமா. நார்மலாவே நீங்க எல்லாரும் இப்பிடித்தானா?” என மீண்டும் சிரிக்க ஆரம்பித்தாள் வெண்ணிலா.
“ஆஹா… நீ என்ன நெனச்சு நெனச்சு சிரிச்சுட்டு இருக்க? சரி, எங்க ரெண்டு பேரோட டான்ஸ் எப்பிடி இருந்துச்சு?” என ஆர்வமாக வினவினார் சிவகாமி.
“உங்க ரெண்டு பேரோட டான்ஸ் தான அத்தை? செம, வேற லெவல் போங்க… டான்ஸ் ஆடுறேன் ங்கிற பேருல ரெண்டு பேரும் செம க்யூட்டா ரொமான்ஸ் பண்ணிட்டு இருந்தீங்க. சீரியஸ்லி உங்க ரெண்டு பேருக்கும் சுத்தி தான் போடனும்…” என இருவரையும் சேர்த்து நெட்டி முறித்தாள் வெண்ணிலா.
“நிஜமாவா?” என லேசாக வெட்கப்பட்டார் அருணாச்சலம்.
“அச்சோ மாமா நீங்க ரொம்ப ரொம்ப க்யூட்…” வெண்ணிலா.
“டேய் பார்ரா பார்ரா இதுக்காகத்தான் மருமக வேணுங்கிறது…” என பெருமையாக சிரித்தார் அருணாச்சலம்.
“ரொம்ப பண்ணாதீங்க…” என அவரின் தாடையில் குத்தினார் சிவகாமி.
மூவரும் சிரித்துப் பேசிக் கொண்டிருக்க அங்கு ஃபோன் நோண்டுவது போல் அமர்ந்தபடி வெண்ணிலாவை ரசித்துக் கொண்டிருந்தான் ஆதிரன். அப்பொழுது, “ஹாய் நிலா… வாட் எ சர்ப்ரைஸ்…” என்றவாறு குளித்து உடை மாற்றிக் கொண்டு வந்தான் ஆரண்யன்.
“நீ குடுத்த சர்ப்ரைஸ விடவா நா பெருசா குடுத்துட்டேன்?” எனக் கண்ணடித்து சிரித்தாள் வெண்ணிலா.
“ப்ச்… கிண்டல் பண்ணாத நிலா…” என அவளை விளையாட்டாக அடித்தபடி அவளருகில் அமர்ந்தான் ஆரண்யன். அவன் அமர்ந்ததும் ஆதிரனால் நிலாவை பார்க்க முடியாமல் போக அவளை பார்க்கும் விதமாக சிறிது நகர்ந்தான் ஆதிரன். அப்பொழுது சரியாக ஆரண்யனும் நகர்ந்து அமர்ந்து ஆதிரனுக்கு வெண்ணிலாவை மறைத்தான்.
“நீ வீட்டுக்கு வர்றேன் னு சொல்லவே இல்ல…” ஆரண்யன்.
“இல்லயே நா அத்தைக்கிட்ட சொல்லிட்டு தான வந்தேன்?” வெண்ணிலா.
“ஏன் ம்மா சொல்லவே இல்ல?” ஆரண்யன்.
“நாந்தான் சொன்னேன் னே டா, என் மருமக வரப் போறா னு…” சிவகாமி.
“ஓஓ அது இப்ப வரப் போறா னு சொன்னீங்களா? நா நம்ம வீட்டுக்கு வரப்போறத சொன்னீங்களோ னு நெனச்சுட்டேன்…” ஆரண்யன்.
அவன் கூறியதைக் கேட்டதும் அதுவரை இருந்த இலகுத்தன்மை மாற, “இந்தாங்க அத்தை ஜாதகம். அப்பா கொண்டு வர்றேன் னு தான் சொன்னாரு. அவர் ஸ்ட்ரெய்ன் பண்ணக் கூடாது னு நானே கொண்டு வந்துட்டேன்.” என கைப்பையில் இருந்து தன் ஜாதகத்தை எடுத்து கொடுத்தாள் வெண்ணிலா.
“அதுனால என்ன நிலா? நீ வந்ததுல எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்…”அருணாச்சலம்.
“எதுக்கு ம்மா இது?” ஆரண்யன்.
“உங்க ரெண்டு பேர் ஜாதகத்தையும் பாத்து கல்லியாணத்துக்கு நாள் குறிக்க டா…” சிவகாமி.
அப்பொழுது திடீரென பலமாக இருமினான் ஆதிரன். அதைப் பார்த்த சிவகாமி, “ஆதி… என்ன ஆச்சு ஆதி? இந்தா தண்ணி குடி மொதல்ல…” என பதறியபடி ஆதிரனிடம் தண்ணீரை எடுத்துக் கொடுத்தார்.
“அட அவன் அப்பிடித்தான் ம்மா சும்மா சும்மா இருமிட்டு கிடப்பான். நீ வா நிலா, நாம வெளில போய்ட்டு வரலாம்…” என நிலாவை கைப்பிடித்து தூக்கினான் ஆரண்யன்.
“எங்க டா?” வெண்ணிலா.
“எங்கயாச்சும் போவோம் வா. உன் கிட்ட கொஞ்சம் பேசனும். அம்மா எப்ப ஜாதகம் பாக்க போறீங்க?” என வெண்ணிலாவை கைபிடித்தபடி தாயிடம் வினவினான் ஆரண்யன்.
“இன்னக்கி நாள் நல்லா இருக்கு. இன்னக்கித் தான் டா போகனும்…” சிவகாமி.
“ஓகே ம்மா. பாத்துட்டு என்ன ஏது னு எனக்கு ஃபோன் பண்ணி சொல்லுங்க. இப்ப நானும் நிலாவும் வெளில போய்ட்டு வர்றோம். வா நிலா…” என அதற்கு மேல் வெண்ணிலாவை அங்கு நிற்க விடாமல் அவளை அங்கிருந்து இழுத்துக் கொண்டு சென்றான் ஆரண்யன்.
அவன் அவ்வாறு நிலாவை இழுத்து செல்வதை சிரிப்புடன் பார்த்தவாறு, “நல்ல பிள்ளைங்க…ஏங்க சீக்கிரம் கிளம்புங்க. போய் ஜாதகம் பாத்துட்டு வந்துறலாம்…” என்றவாறு உள்ளே சென்றார் சிவகாமி.
ஆனால் அருணாச்சலம் செல்லும் அவர்களை சிறு யோசனையுடன் பார்த்தவாறே ஜாதகம் பார்க்க புறப்பட்டார். அவர்கள் இருவரும் அங்கிருந்து சென்றதும் மிக வேகமாக ஆரண்யனையும் வெண்ணிலாவையும் பின் தொடர்ந்து சென்றான் ஆதிரன்.
சிறிது நேரத்தில் அருணாச்சலமும் சிவகாமியும் ஜாதகம் பார்க்க கிளம்பி சென்றனர். பிரபல ஜோதிடரிடம் வெண்ணிலாவின் ஜாதகத்தையும் ஆரண்யனின் ஜாதகத்தையும் காட்டி கேட்க, வெண்ணிலாவின் ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர், “இந்த ஜாதகத்துக்கு உரியவங்களுக்கு இந்நேரம் கல்லியாணம் முடிஞ்சு இருக்கனுமே…” என்றார்.
“இல்ல ஜோசியரே… இப்ப தான் கல்லியாணம் பண்ண ஜாதகம் பாக்க வந்து இருக்கோம். பொண்ணு ஜாதகம் இது. பையன் ஜாதகம் இது…” சிவகாமி.
“இல்ல… இந்த ஜாதகத்துக்கு திருமணம் நடந்து ஒரு வாரத்துல இருந்து ஒரு மாசம் ஆகிருச்சு. நீங்க எடுத்துட்டு புறப்படலாம்…” என ஒரே வார்த்தையாக ஜோதிடர் கூறி விட அவர் கூறியதில் ஏற்பட்ட உள்ள அதிர்ச்சியுடன் அருணாச்சலமும் சிவகாமியும் அங்கிருந்து புறப்பட்டு மன அமைதிக்காக கோவிலுக்கு வந்து சேர்ந்தனர்.
“என்னங்க இது? ஜோசியர் இப்பிடி சொல்றாரு?” சிவகாமி.
“அதான் சிவா எனக்கும் ஒன்னும் புரியல…” அருணாச்சலம்.
“இதப்பத்தி அண்ணங்கிட்ட பேசி பாப்போமா?” எனக் கலக்கத்துடன் வினவினார் சிவகாமி.
“வேண்டாம் சிவா. அவனே இப்பத்தான் செத்து பொழச்சு வந்து இருக்கான்.” அருணாச்சலம்.
“ம்ம் ஆமா… எனக்கு நிலா மேல எந்த சந்தேகமும் இல்ல. என்ன நடந்தாலும் சரி. நிலா தான் என் மருமக. அதுல நா உறுதியா இருக்கேன்…” சிவகாமி.
“சரி வா வீட்டுக்குப் போகலாம்…” என்றவாறு எழுந்தார் அருணாச்சலம். அவர் எழுகையில் அவர் பாக்கெட்டில் இருந்து பர்ஸ் கீழே விழுவதை கவனியாமல் எழுந்து சென்றார் அருணாச்சலம்.
ஒரு சிறு பெண் அதை சரியாக கவனித்து எடுத்து, “தாத்தா தாத்தா…” எனக் கத்தி அழைத்து அருணாச்சலத்தை நிறுத்தினாள்.
குரல் கேட்டு அருணாச்சலமும் சிவகாமியும் நின்று திரும்பிப் பார்க்க, சிவகாமியைப் பார்த்து அச்சிறு பெண் சிநேகமாக புன்னகைத்து, “சிவகாமி பாட்டி…” என்றாள்.
சிவகாமியும் அப்பொழுது உள்ள மனநிலையில் அவளிடம் எதுவும் பேசாமல் சிநேகமாக புன்னகைத்தார். “என்ன வேணும் குட்டிக்கு?” என அச்சிறுமி உயரத்திற்கு முழந்தாளிட்டு அமர்ந்து வினவினார் அருணாச்சலம்.
“இந்த பர்ஸ் உங்களோடதா தாத்தா?” என அருணாச்சலத்தின் பர்ஸை காட்டி கேட்டாள் அச்சிறுமி.
மனக்கலக்கம் சிவகாமியை வாட்ட, “நீங்க பாத்து பேசிட்டு வாங்க. நா காருல உக்காந்து இருக்கேன்…” எனக் கூறி விட்டு காரை நோக்கி நடந்தார் சிவகாமி.
“அச்சோ ஆமா தங்கம். பர்ஸ் கீழ விழுந்தத பாக்கல. ரொம்ப தேங்க்ஸ் டா தங்கம்…” என்றவாறு பர்ஸை பிரித்து அதிலிருந்து ஒரு நூறு ரூபாயை எடுத்து அச்சிறுமியிடம் நீட்டினார் அருணாச்சலம்.
அப்பொழுது அவரின் பர்ஸில் உள்ள போட்டோவைக் கண்ட அச்சிறுமி, “அய் இந்த அங்கிள உங்களுக்கு தெரியுமா?” என வினவினாள்.
“ஏன்? இந்த அங்கிள உனக்குத் தெரியுமா?” அருணாச்சலம்.
“ஓஓ… நல்லாத் தெரியுமே. ஆமா எங்க சிவகாமி பாட்டி?” சிறுமி.
“அவங்க காருக்கு போய்ட்டாங்க. இந்த அங்கிள கேட்டுட்டு ஏன் பாட்டிய தேடுற?” அருணாச்சலம்.
“அது… கொஞ்ச நாளைக்கு முன்னாடி இந்த கோவில்ல வித்தியாசமா ஒரு கல்லியாணம் நடந்துச்சு னு பாட்டிக் கிட்ட சொன்னேன். அந்த கல்லியாணம் பண்ணுன அங்கிள் இவர் தான்னு பாட்டிக்கிட்ட காட்டனும்…” என்றவாறு விழிகளாலயே சிவகாமியைத் தேடினாள் அச்சிறுமி.
“என்ன சொல்ற பாப்பா? இந்த அங்கிளா?” என அதிர்ச்சியுடன் வினவிய அருணாச்சலத்திற்கு அன்று சிவகாமி கூறிய கதை தெளிவாக நினைவில் இருந்தது.
“ஆமா…இதே அங்கிள் தான்… என் அப்பா தான் கல்லியாணம் பண்ணி வச்சாரு…” எனத் தெளிவாக அருணாச்சலத்தின் பர்ஸில் உள்ள ஆதிரனின் போட்டோவைக் காட்டினாள் அக்கோவில் அய்யரின் மகளான அச்சிறுமி.
அதைக்கேட்டு வெகுவாக அதிர்ந்த அருணாச்சலம் சற்று முன் ஜோதிடர் கூறியது மனதில் நெருட, சட்டென தன் ஃபோனில் இருந்த வெண்ணிலாவின் போட்டோவைக் காட்டி, “இந்த அங்கிள் கல்லியாணம் பண்ண பொண்ணு இவங்க தானா னு பாத்து சொல்லு மா..” என்றார்.
“அட ஆமா தாத்தா. அன்னக்கி இந்த அக்கா சிரிக்கவே இல்ல. உர்ருனு அழுகுற மாதிரியே இருந்துச்சு…” என அச்சிறுமி தெளிவாக கூற அதிர்ச்சியில் வியர்த்து விறுவிறுக்க அப்படியே தொப்பென்று தரையில் அமர்ந்தார் அருணாச்சலம்.
இனி அருணாச்சலத்தோட முடிவு என்னவா இருக்கும்?
(நிலவு மலரும்…)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.