அரக்கன் -18

Chellammal Bharathi | 27 Dec 2025 | Share

      “அப்பா… மாத்திரை போட்டீங்களா?” வெண்ணிலா. 

      “இதோ இப்ப போட்டுர்றேன் மா…” சுந்தரம். 

      “மணி என்ன ஆச்சு? இன்னும் மாத்திரை போடாம என்ன பண்ணிட்டு இருக்கீங்க? உங்களுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல ப்பா… இன்னும் சின்ன குழந்தை னு நினைப்பா? திருப்பி போய் ஹாஸ்பிடல்ல படுத்துக்கனும் னு ஆசையா?” என காலையில் கையில் தோசை கரண்டியுடன் தந்தையிடம் கத்திக் கொண்டிருந்தாள் வெண்ணிலா.

      வெண்ணிலா திட்டுவதைப் பார்த்து சிரித்தார் சுந்தரம். “ப்பா… நா உங்கள திட்டிட்டு இருக்கேன். என்னமோ பாராட்டிட்டு இருக்குற மாதிரி சிரிச்சுட்டு இருக்கீங்க?” என மேலும் கோவமானாள் வெண்ணிலா. 

      “இங்க வந்து உக்காரு நிலா…” என சிரித்தவாறு தன் பக்கத்தில் கை காட்டினார் சுந்தரம். 

     “என்ன ப்பா?” என்றவாறே அவர் அருகில் வந்து அமர்ந்தாள் வெண்ணிலா. 

      “அப்பா உன்னய விட்டுட்டு எங்கயும் போயிற மாட்டேன்.” என வெண்ணிலாவைப் பார்த்து சிரித்தார் சுந்தரம். 

      “நா என்ன பேசிட்டு இருக்கேன் நீங்க என்ன சொல்லிட்டு இருக்கீங்க? இப்பிடி சம்பந்தமே இல்லாம பேசுனா என்ன அர்த்தம்?” என முகத்தை சுருக்கினாள் வெண்ணிலா. 

      “என்ன அர்த்தம் னா, நீ பயப்படுறது வெளில தெரியுது னு அர்த்தம்.” என நன்றாக சிரித்தார் சுந்தரம். 

     “அப்பிடியா வெளில தெரியுது?” என கண்ணை சுருக்கி வினவினாள் வெண்ணிலா. 

     “அப்பிடியே அப்பட்டமா வெளில தெரியுது…” என சத்தமிட்டு சிரித்தார் சுந்தரம்.

     “ப்ச் சிரிக்காதீங்க ப்பா. ஒரு செகண்ட் கூட நீங்க இல்லாம என்னால என்னய யோசிச்சு பாக்க முடியல. அப்பிடி என்ன உங்களுக்கு ஸ்ட்ரெஸ்? பொல்லாத ஸ்ட்ரெஸ். என்னய விட உங்களுக்கு அந்த ஸ்ட்ரெஸ் முக்கியமா போயிருச்சா?” என கண் கலங்கினாள் வெண்ணிலா. 

    “இல்ல மா. அந்த சீட்டுப் பணம் நா எடுத்து நடத்தி இருக்க கூடாது. அதுனால தான என்னால நீ ரொம்ப கஷ்ட்டப்பட்டுட்ட. பெத்த பொண்ண இவ்ளோ கஷ்ட்டப்பட வச்சுட்டேன் ங்கிற குற்ற உணர்வ என்னால தாங்கிக்க முடியல. அந்த ஸ்ட்ரெஸ் ல தான்… இப்பிடி… இப்ப அத மேலா உன்னய ரொம்ப பயப்பட வச்சுட்டேன். நான்லாம் நல்ல அப்பாவே இல்ல நிலா. ” என கண் கலங்கினார் சுந்தரம். 

     “யாரு சொன்னது நீங்க நல்ல அப்பா இல்ல னு? இந்த உலகத்துலயே பெஸ்ட் அப்பா னா அது நீங்க தான். அம்மா இறந்ததுக்கு அப்புறம் உங்களுக்கு னு ஒரு வாழ்க்கைய தேடிக்காம நாந்தான் உங்களோட மொத்த வாழ்க்கை னு இப்ப இந்த செகண்ட் வரைக்கும் எனக்காக மட்டுமே வாழ்ந்துட்டு இருக்குரவருப்பா நீங்க. தூக்கத்துல கூட நீங்க உங்க பொண்ணு நிலாவ பத்தி மட்டுமே யோசிச்சுட்டு இருப்பீங்க. தனி ஒரு ஆணா இருந்து உங்க பொண்ண ரொம்ப நல்லவிதமா வளத்து ஆளாக்கி இருக்கீங்க. இதெல்லாம் ரொம்ப சாதாரணம் னு நெனச்சுட்டீங்களா?” வெண்ணிலா. 

     “இதெல்லாம் ஒரு அப்பா தான் மகளுக்கு செய்ற சாதாரண விசயம் தான?” சுந்தரம்.  

     “கண்டிப்பா அப்பிடி இல்ல சுந்தரம்…” வெண்ணிலா. 

     “அப்புறம் எப்பிடி?” என்ற சுந்தரத்தின் முகத்தில் வருத்தம் சென்று லேசான புன்னகை பூத்திருந்தது. 

     “இது சாதாரண விசயம் இல்ல சுந்தரம். இது ஒரு பெரிய சாதனை. இதுக்காக உங்களுக்கு அவார்ட்டே குடுக்கலாம் தெரியுமா?” என வெண்ணிலா கூறிய தோரணையில் சுந்தரத்திற்கு சிரிப்பு வந்தது.

     தந்தையின் சிரிப்பைக் கண்டு, “குட். இப்பிடியே எப்போதும் சிரிச்சுட்டு சந்தோஷமா இருக்கனும். நடந்தது நடந்து போச்சு. இனி அத நம்மளால மாத்த முடியாது. ஆனா நடக்கப் போறத நம்மளால நமக்கு சந்தோஷமா மாத்திக்க முடியும். ஸோ ஸ்மைல் ஃபார் எவர் டாடி…” என சுந்தரத்தின் தாடையைப் பிடித்து ஆட்டி கொஞ்சினாள் வெண்ணிலா. 

      “நீ எப்போதும் இப்பிடியே சிரிச்சுட்டு இரு. நானும் எப்போதும் சந்தோஷமா இருப்பேன்.” என புன்னகைத்தார் சுந்தரம். 

     “சூப்பர்… சரி இது என்ன தாடி இவ்ளோ வளந்துருச்சு. வாங்க நா உங்களுக்கு ஷேவ் பண்ணி விடுறேன்.” வெண்ணிலா. 

     “உங்களுக்கு அந்த வேலை வேண்டாம் இளவரசி. நானே பண்ணிக்கிறேன்.” என சிரித்தவாறு எழுந்தார் சுந்தரம். 

     “ஆஹான். இது இளவரசியின் ஆணை. மீறக் கூடாது.” என வலுக்கட்டாயமாக சுந்தரத்தை இழுத்துச் சென்று வீட்டின் முன்புறம் வெளியே அமர வைத்தாள் வெண்ணிலா. 

     “என்ன நிலா பண்ண போற?” என சவரம் செய்யும் பொருட்கள் அடங்கிய பெட்டியை தூக்கி கொண்டு வரும் வெண்ணிலாவைப் பார்த்து சிறிது பயத்துடன் வினவினார் சுந்தரம். 

    “ஆங்… என் அப்பாக்கு நா ஷேவ் பண்ணிவிட போறேன்.” என அனைத்துப் பொருட்களையும் எடுத்து ஸ்டூலில் அடுக்கினாள் வெண்ணிலா. 

     “அம்மாடி … இந்த விளையாட்டுக்கு நா வரல. உனக்கு இன்னக்கி ஸ்கூல் இல்லையா?” என்ற சுந்தரத்தின் குரலில் பயம் நன்றாக தெரிந்தது. 

     “நோ ப்பா… இன்னக்கி நா ஸ்கூலுக்கு லீவ் சொல்லிட்டேன்.” என தந்தைக்கு பதில்  கூறியவாறு துப்பட்டாவை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு கத்தரிக்கோலை காற்றில் வெட்டியபடி சீரியஸாக கூறினாள் வெண்ணிலா. 

     “டீச்சரே ஸ்கூலுக்கு லீவ் போட்டா அப்புறம் படிக்கிற பசங்களோட வாழ்க்கை என்ன ஆகுறது? ஒரு நல்ல டீச்சரா ஸ்கூலுக்கு லீவ் போடாம கிளம்புங்க. போங்க நிலாக் குட்டி.” சுந்தரம். 

     “நோ ப்பா. எனக்கு அங்க புள்ளைங்கள திருத்துறத விட இங்க என் அப்பாவோட முடிய திருத்துறது தான் முக்கியம்.” என்றவாறு ஷேவிங் ப்ளேடை எடுத்து சரி பார்த்தாள் வெண்ணிலா. 

     “வேண்டாம் நிலா. குடு நானே பண்ணிக்கிறேன்.” என பயத்தில் எழுந்து அவளிடம் உள்ள கத்தியை வாங்க முயன்றார் சுந்தரம். 

     “முடியாது நாந்தான் பண்ணுவேன்.” என்றவாறு சுந்தரத்தை பிடித்து நாற்காலியில் அமர வைத்து அவர் மேலே ஒரு துண்டை போர்த்தினாள் வெண்ணிலா. 

     “அய்யையோ நிலா… என்னய விட்ரு மா…” என அலறியவாறு கழுத்தில் கட்டி இருந்த துண்டுடன் எழுந்து வீட்டிற்குள் ஓடினார் சுந்தரம். 

      “எங்க ஓடுனாலும் இன்னக்கி விட மாட்டேன் ப்பா…” என அவரின் பின்னாலேயே ஓடிச் சென்று சுந்தரத்தை பிடித்து இழுத்து வந்து மீண்டும் நாற்காலியில் அமர வைத்தாள் வெண்ணிலா.

    “ப்ளீஸ் மா… என்னய விட்ரு…” என மீண்டும் எழுந்திருக்க முயன்றார் சுந்தரம். 

    “இப்பிடியே விட்டா நீங்க எந்திரிச்சு ஓடிருவீங்க… இருங்க வர்றேன்.” என எழ முயன்ற சுந்தரத்தை பிடித்து நாற்காலியில் அமர வைத்து விட்டு வீட்டின் உள்ளே  சென்றாள் வெண்ணிலா. 

     “நிலா என் தங்கம் ல. ப்ளீஸ் மா…” எனக் கதறினார் சுந்தரம். 

     “நோ வே…” எனக் கத்தியபடி உள்ளிருந்து ஒரு நீளமான கயிற்றை எடுத்து வந்து சுந்தரத்தை நாற்காலியுடன் சேர்த்து கட்டினாள் வெண்ணிலா. 

     “என்ன நிலா பண்ற?” எனப் பயத்தில் கத்தினார் சுந்தரம். 

    “ஆங்… பாத்தா தெரியல? ச்சேரோட சேத்து உங்கள கட்டுறேன். நீங்க எழுந்து ஓடாம இருக்க…” எனப் பேசியபடி தன் தந்தையை கட்டி விட்டு, “சூப்பர்… கட்டி முடிச்சாச்சு. இனி வேலைய ஆரம்பிக்கலாமா?” என்றவாறு சுந்தரத்தின் முகத்தில் தண்ணீர் தெளித்தாள் வெண்ணிலா. 

    “மெதுவா பண்ணு நிலா. பயமா இருக்கு.” சுந்தரம். 

     “நா உங்க பொண்ணு ப்பா. பயப்படாதீங்க. நீங்க தான சொல்லுவீங்க எல்லா வேலையும் நா கத்துக்கனும் னு அதான் இந்த வேலைய உங்கள வச்சு நா கத்துக்கிறேன்.” என தந்தையுடன் பேசியபடியே சுந்தரத்தின் முகத்தில் ஷேவிங் க்ரீமை பூசினாள் வெண்ணிலா. 

     “நீ இத கத்திக்கிட்டு என்ன சலூன் கடையா வைக்கப் போற?” என கிண்டலாக சிரித்தார் சுந்தரம். 

     “சலூன் கடை லாம் வைக்கப் போறது இல்ல. என்னய பாத்து கிண்டலாவா சிரிக்கறீங்க. அதுக்கு தண்டனை இது தான்…” என சிரித்தவாறு சுந்தரத்தின் முகம் முழுவதும் ஷேவிங் க்ரீமை பூசினாள் வெண்ணிலா.

     “அப்புறம் எதுக்கு இத கத்துக்கனும் னு சொல்ற? உன் வீட்டுக்காரருக்கு ஷேவிங் பண்ணி விடுறதுக்காகவா?” என சிரித்தார் சுந்தரம். 

     “ஆமா… அப்பிடித்தான் னு வச்சுக்கங்களேன். நா என் புருஷனுக்கு ஷேவிங் பண்ணி விடுறதுக்குத் தான் இப்ப ப்ராக்டீஸ் பண்றேன். போதுமா?” எனக் கூறியவாறு தாறுமாறாக ஷேவிங் க்ரீமை பூசி சுந்தரத்தின் முகத்தை முற்றிலுமாக மறைத்தாள் வெண்ணிலா.

      “அய்யோ என்ன பண்ற நிலா? கடவுளே… என்னய காப்பாத்த யாரும் இல்லையா?” எனக் கத்தினார் சுந்தரம்.

      “யாரும் இல்ல ப்பா…” என இடுப்பில் கை வைத்து சிரித்தாள் வெண்ணிலா. 

     அப்பொழுது, “நாங்க உள்ள வரலமா?” என்ற குரல் கேட்டு திரும்பிப் பார்த்தாள் வெண்ணிலா. 

     வீட்டு கேட் மீது கைகளை கட்டிக் கொண்டு கண்ணைக் கவரும் புன்னகையுடன் சாய்ந்து நின்றிருந்தான் ஆதிரன். 

    ஆதிரனைக் கண்டு, “இவனா?” என்ற அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தவாறு வெண்ணிலா நின்றிருக்க, “ஆதி தம்பியா? வாங்க வாங்க… வந்து என்னய இவக்கிட்ட இருந்து காப்பாத்துங்க தம்பி.” என வேண்டினார் சுந்தரம். 

     “என்ன அங்கிள் இதெல்லாம்?” என அவரைப் பார்த்து சிரித்தான் ஆதிரன். 

     “நிலாவோட ஹஸ்பெண்ட்டுக்கு ஷேவிங் பண்ணி விட என் கிட்ட இப்பவே ப்ராக்டீஸ் பண்றாளாம் தம்பி. நீங்களாச்சும் இவக்கிட்ட இருந்து என்னய காப்பாத்துங்க.” சுந்தரம். 

     “அப்படியா?” என்றக் கேள்வியுடன் அதிர்ச்சியுடன் நிற்கும் வெண்ணிலாவை சுவாரசியமாக பார்த்து சிரித்தான் ஆதிரன். 

     அதைப் பார்த்த வெண்ணிலா, “அரக்கன் சிரிக்கிறானா?” என மேலும் அதிர்ந்தாள். 

    “என்ன நிலா அப்பிடி பாத்துட்டு நிக்கிற?” என ஆதிரனின் பின்னிருந்து குரல் கொடுத்தார் சிவகாமி. 

     “ஆண்டி… நீங்களும் வந்து இருக்கீங்களா? வாங்க ஆண்டி…” என வரவேற்றாள் வெண்ணிலா. 

    “நானும் வந்து இருக்கேன் நிலா…” என சிரிப்புடன் காரினுள் இருந்து இறங்கினார் அருணாச்சலம். 

     “ஸார்… வாங்க ஸார்…” என மகிழ்ச்சியுடன் வரவேற்றாள் வெண்ணிலா. 

     “நாங்க வர்றது இருக்கட்டும் நிலா. நீ என்ன பண்ணிட்டு இருக்க?” என ஆர்வமாக கேட்டார் அருணாச்சலம். 

     “அது… சும்மா ஸார்” என கண்ணை சுருக்கி சிறு குழந்தை போல நெளிந்து சிரித்தாள் வெண்ணிலா. அவளது அந்த சிரிப்பை பார்த்த ஆதிரனின் மனதில் தாறுமாறான எண்ணங்கள் தோன்றத் தொடங்கின. 

     “என்னது சும்மாவா? அவ புருஷனுக்கு ஷேவிங் பண்ண என் கிட்ட ப்ராக்டீஸ் பண்றேன் னு சொல்லிக்கிட்டு என்னய கொல்லப் பாக்குறா ஸார். ஸார் ஸார் என்னால உங்கள பாக்க முடியல… எந்திரிக்கவும் முடியல. ப்ளீஸ் ஸார் என்னய காப்பாத்துங்க…” எனக் கெஞ்சினார் சுந்தரம். 

      “என்னமா இதெல்லாம்?” என அடங்கமாட்டாமல் சிரித்தார் சிவகாமி. 

      “சும்மா ஒரு டைம் பாஸ்க்கு ஆண்டி…” என அவரிடம் சிரிப்புடன் கூறி விட்டு, “என்ன ஆனாலும் சரி, இன்னக்கி நாந்தான் உங்களுக்கு ஷேவிங் பண்ணி விடுவேன் ப்பா…” என தன் தந்தையிடம் திரும்பிக் கூறினாள் வெண்ணிலா. 

      “யாராவது என்னய காப்பாத்துங்களேன்…” சுந்தரம். 

      “சும்மா இருங்க ப்பா. நீங்க உள்ள வாங்க ஆண்டி. வாங்க ஸார்…” என அவர்கள் இருவரையும் உள்ளே அழைத்தாள் வெண்ணிலா. 

     சுந்தரத்தின் நிலையைப் பார்த்து சிரித்தபடியே அவரது கை கட்டுக்களை அவிழ்த்து விட்டான் ஆதிரன். அவன் அவிழ்த்த அடுத்த நொடி, “ரொம்ப தேங்க்ஸ் தம்பி…” என்றபடி தனது ஷேவிங் பொருட்களை எடுத்துக் கொண்டு உள்ளே ஓடி மறைந்தார் சுந்தரம். 

     “பாரு உங்க அப்பா எப்பிடி ஓடுறாரு னு. அந்த அளவுக்கு நீ அவர பயமுறுத்தி வச்சு இருக்க…” என சிரித்தார் சிவகாமி. 

     “ப்ச் போங்க ஆண்டி… அது சரி இது என்ன தட்டு பழம் எல்லாம் கொண்டு வந்து இருக்கீங்க? என்ன விசேஷம்? உள்ள வாங்க…” என்றவாறு உள்ளே நுழைந்தாள் வெண்ணிலா. 

      “எல்லாம் உனக்காகத் தான்…” சிவகாமி. 

     வெண்ணிலாவை இவ்வளவு மகிழ்ச்சி நிறைந்த முகத்துடன் பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருந்தாலும் அவளை அவ்வாறு பார்க்க பிடித்து இருந்தது ஆதிரனுக்கு. அவள் தன்னை கண்டுகொள்ளாமல் இருப்பதை கவனித்து தான் இருந்தான் ஆதிரன். தான் வீட்டிற்கு வந்தது அவளுக்கு சுத்தமாக விருப்பம் இல்லை என்பதை அவளது செய்கையில் தெளிவாக காட்டினாள் வெண்ணிலா. அவனும் விருப்பமே இல்லாமல் தான் வந்திருந்தான். 

மூன்று மணி நேரங்களுக்கு முன்பு,

     அலுவலகத்தில் எந்த வேலையும் பார்க்காமல் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தான் ஆதிரன். அவன் சிந்தை முழுவதும் நேற்று இரவு ஆரண்யன் பேசியதிலேயே இருந்தது. 

        “நெஜமாலுமே தம்பி அவள லவ் பண்றானா? இவன் என் கிட்ட உண்மைய தான் பேசுனானா? அவ்ளோ நக்கலா சொல்றான் நிலாக்கிட்ட இருந்து என்னய தள்ளி இருக்க சொல்லி. ஒருவேளை நிலா எதுவும் அவன் கிட்ட சொல்லி இருப்பாளோ? எப்பிடி இத தெரிஞ்சுக்கிறது? நம்ம ப்ளான அடுத்த லெவலுக்கு கொண்டு போகலாம் னு நெனச்சா இவன் ஒருத்தன் முட்டுக்கல்லா வந்து நிக்கிறானே. இந்த குட்டா பயலுக்கு உண்மை தெரிஞ்சு தான் நம்மக்கிட்ட விளையாடுறானா? இத எப்பிடியாச்சும் தெரிஞ்சுக்கனுமே. வெயிட் நாம ஏன் குழம்பனும்? இத நேரா நிலாக்கிட்டயே கேட்ருவோம்.” என தீவிர யோசனைக்குப் பிறகு ஒரு முடிவு எடுத்து நிலாவை சந்திக்க கிளம்பினான் ஆதிரன். 

    அந்நேரம் சரியாக அலைபேசியில்  அழைத்தான் ஆரண்யன். “இவன் எதுக்கு இப்ப நமக்கு கால் பண்றான்?”  என்ற யோசனையுடன் அழைப்பை ஏற்று பேசினான் ஆதிரன். 

     “என்ன பண்ணிட்டு இருக்க ஆதி?” ஆரண்யன். 

     “கொஞ்சம் வேலையா இருக்கேன். என்ன விசயம் சொல்லு?” ஆதிரன். 

     “ஓகே… உனக்கு எவ்ளோ பெரிய வேலையா இருந்தாலும் இப்ப அப்பாவையும் அம்மாவையும் கூட்டிட்டு நிலா வீடு வரைக்கும் போய்ட்டு வா. இப்ப உனக்கு அம்மா ஃபோன் பண்ணி கூப்பிடுவாங்க. மறுக்காம கூட போய்ட்டு வா…” ஆரண்யன். 

     “ஏன்?” ஆதிரன்.

     “அம்மாவும் அப்பாவும் நிலாவோட அப்பாவ பாக்கனும் னு சொன்னாங்க. அப்பிடியே அம்மா, நிலாவோட அப்பாக்கிட்ட பொண்ணு கேட்டு வரலாம் னு கிளம்புறாங்க. ஸோ ஒரு அண்ணனா கூட போய்ட்டு வா.” ஆரண்யன். 

      “ஏன் நீ என்ன புடுங்கிட்டு இருக்க?” என உச்சபட்ச எரிச்சலில் வினவினான் ஆதிரன். 

     “ஹே எப்பிடி ப்ரோ இவ்ளோ கரக்ட்டா கேக்குற? புடுங்கிட்டு தான் இருக்கேன். நம்ம தோட்டத்துல நிலாக்கு புடிக்காத செடியெல்லாம் புடுங்கிட்டு இருக்கேன்.” ஆரண்யன். 

      “என்ன என்னய நக்கல் பண்றியா?” ஆதிரன். 

       “சீரியஸ்லி ஆதி… நீ நம்பலனா உன் வாட்ஸப் செக் பண்ணு…” ஆரண்யன். 

      ஆதிரன் தனது வாட்சப் ஐ பார்க்க அதில் தோட்டத்தில் ஒரு செடியை பறித்தவாறு செல்ஃபி எடுத்து அனுப்பி இருந்தான் ஆரண்யன். அதைக் கண்டு மேலும் எரிச்சலுற்ற ஆதிரன், “சரி… நம்பிட்டேன். இப்ப எதுக்கு என்னய கூப்பிட்ட?” என்றான். 

      “அதான் சொன்னேனே ப்ரோ…நிலாவ எனக்கு பொண்ணு பாக்க அம்மா கூட போய்ட்டு வா. நானும் கூட வர்றேன் னு சொன்னேன். அம்மா தான் நாங்க போய் மொதல்ல பேசிட்டு வர்றோம் நீ வீட்லயே இரு னு சொல்லிட்டாங்க…” ஆரண்யன். 

      அவனது கூற்றில் அதிக கோபம் கொண்ட ஆதிரன், “சரி இதயே காரணமா வச்சு நிலாவ போய் பாத்து அவக்கிட்டயே கேட்ருவோம். அதுக்கு அப்புறம் இருக்கு டா குட்டா உனக்கு…” என நினைத்து சிறிது நிதானமுற்றான்.

    “சரி…” என இறுக்கத்துடன் பதிலளித்து விட்டு அலைபேசியை அணைத்தான் ஆதிரன். 

    ஆரண்யன் கூறியது போலயே சிறிது நேரத்தில் சிவகாமி, ஆதிரனை ஃபோனில் அழைத்து வெண்ணிலாவின் வீட்டிற்கு கூப்பிட மறுப்பேதும் கூறாமல் புறப்பட்டான் ஆதிரன். வரும் வழியில் அருணாச்சலம் ஆதிரனை குறுகுறுவென்று பார்க்க, அவரது பார்வையில் மேலும் இறுக்கமானான் ஆதிரன். ஆனால் அதெல்லாம் நிலாவின் வீட்டில் அவளை பார்க்கும் வரையில் தான். தந்தையை மிரட்டயவாறு இருந்த நிலாவை பார்த்த நொடி, அவனது இறுக்கமெல்லாம் தகர்ந்து மனம் லேசானாது. 

     தற்பொழுது தாயும் தந்தையும் மட்டும் உள்ளே சென்றிருக்க நிலாவை தனியாக அழைத்து எவ்வாறு பேசுவது என்ற யோசனையுடன் வெளியே நின்றிருந்தான் ஆதிரன். அப்பொழுது அவன் யோசனையின் நாயகியே வெளியே வந்து, “ஸார்… நீங்க ஏன் வெளில நின்னுட்டு இருக்கீங்க? உள்ள வாங்க…” என புன்னகையுடன் அழைத்தாள் வெண்ணிலா. 

      “நிலா நம்மள பாத்து சிரிக்கிறாளா?” என்ற ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்த ஆதிரனின் வலக்கரம் தன்னாலேயே இட நெஞ்சை தட்டிக் கொடுத்தது. 

     “நிலா… நா உன் கிட்ட கொஞ்சம் தனியா பேசனும். மாடிக்கு வா…” என ஆணையிட்டு விட்டு பதிலை எதிர் பார்க்காமல் மாடியேறினான் ஆதிரன். 

     “ங்கே…  இவன் என்ன என் கிட்ட தனியா பேசப் போறான்? இவன் அப்பா அம்மா வந்த தோரணையும் சரி இல்ல. பூ பழத்தட்டோட வந்து இருக்காங்க. ஏதோ டவுட்டா இருக்கே…” என்ற யோசனையுடன் உள்ளே சென்று, “ஆண்டி ஒரு ரெண்டு நிமிஷம். மாடியில துணி வச்சுட்டு வந்தேன். அத மட்டும் எடுத்து காயப்போட்டுட்டு வந்துர்றேன். தப்பா நெனச்சுக்காதீங்க ஆண்டி…” என அவரிடம் கூறிவிட்டு மாடி ஏறினாள் வெண்ணிலா. 

     அங்கு தனக்காக காத்திருந்த ஆதிரனிடம், “சொல்லுங்க ஸார். என் கிட்ட என்ன பேசனும்?” என்றாள். 

     “என் தம்பி கிட்ட என்ன சொன்ன?” என நேரடியாக விசயத்திற்கு வந்தான் ஆதிரன். 

      “ப்ரண்ட்ஸ் நாங்க என்ன வேணுனாலும் பேசிக்குவோம். நீங்க எத கேக்குறீங்க?” வெண்ணிலா. 

      “நம்மள பத்தி அவன் கிட்ட என்ன சொன்ன?” ஆதிரன். 

      “நம்மள பத்தி சொல்ல என்ன இருக்கு ஸார்?” வெண்ணிலா. 

      “ஓகே நேரடியா கேக்குறேன். என் கையால தாலி வாங்கி கட்டிக்கிட்டு இப்ப என் தம்பி கையாலயும் தாலி கட்டிக்க நெனக்கிறியா?” ஆதிரன். 

     “வாட் ரப்ஃபீஷ்? என்ன பேசுறீங்க நீங்க?” வெண்ணிலா. 

     “கீழ என் அப்பாவும் அம்மாவும் எதுக்கு வந்து இருக்காங்க னு நெனக்கிற? என் தம்பிக்கு உன்னய பொண்ணு கேக்க. கேட்டா என் தம்பி உன்னய லவ் பண்றானாம்.” ஆதிரன். 

     “என்ன உலறிட்டு இருக்கீங்க?” எனக் கோவத்துடன் தன் அலைபேசியில் ஆரண்யனுக்கு அழைப்பு விடுத்தாள் வெண்ணிலா. 

     “என் தம்பிக்குத் தான ஃபோன் பண்ற? ஸ்பீக்கர்ல போடு…” ஆதிரன். 

     அவனை முறைத்தவாறே ஃபோனை ஸ்பீக்கரில் போட்டாள் வெண்ணிலா. அந்த பக்கம் ஆரண்யன் அழைப்பை எடுக்க, “ஹலோ ஆரா…” என்றாள் வெண்ணிலா. 

     “சொல்லு நிலா… அப்பா அம்மா அண்ணா அங்க வந்துட்டாங்களா?” ஆரண்யன். 

     “அதெல்லாம் வந்துட்டாங்க. இங்க உன் அண்ணன் என்னென்னமோ உலறிட்டு இருக்காங்க என் கிட்ட?” என தொடர்ந்து பேச முயன்ற வெண்ணிலாவை இடையில் தடுத்த ஆரண்யன், “வெயிட் நிலா. ஆதி உன் கிட்ட என்ன சொன்னான்னோ அதெல்லாம் உண்மை இல்லை.” என்றான்.

     அதைக் கேட்ட ஆதிரன், “மாட்டுனியா நீ? இப்ப வாடா வழிக்கு…” என உள்ளுக்குள்ள மகிழ்ந்தான். ஆனால் அடுத்து ஆரண்யன் கூறிய சொற்களை கேட்டு ஆதிரன் மட்டுமல்ல வெண்ணிலாவும் அதிர்ச்சி அடைந்தாள்.

     “என்ன சொல்ற ஆரா?” வெண்ணிலா.

     “ஆமா நிலா. ஆதி வந்து உன் கிட்ட என்ன சொன்னான் னு எனக்குத் தெரியல. ஆனா நா இப்ப சொல்றேன், நிலா ஐ லவ் யூ…” எனத் தெளிவாக கூறினான் ஆரண்யன். 

                                     (நிலவு மலரும்…)

                              -செல்லம்மாள்பாரதி

    No comments yet.