அரக்கன் -16

Chellammal Bharathi | 27 Dec 2025 | Share

    “ஜோடிப் பொருத்தம் நல்லா இருக்கு ல ஆதி? ஆரனுக்கு பொருத்தமா இருக்கா…” என தங்களை நோக்கி வந்து கொண்டிருக்கும் ஆரண்யனையும் வெண்ணிலாவையும் பார்த்துக் கூறினார் சிவகாமி. 

     தாய் கூறிய சொற்கள் காற்றில் கரைந்து தன் காதில் விழுந்த அடுத்த நொடி பேரதிர்ச்சிக்குள்ளானான் ஆதிரன்.

    “ம்மா… என்ன பேசுறீங்க?” என அதிர்ச்சியுடன் வினவினான் ஆதிரன். 

     “இல்ல ரெண்டு பேரையும் ஜோடியா பாக்குறப்ப ரொம்ப நல்லா இருக்காங்க. அதான் சொன்னேன்.”சிவகாமி. 

     “அவங்க ரெண்டு பேரும் ப்ரண்ட்ஸ் ம்மா. அவங்கள தப்பா பேசாதீங்க பக்கத்துல வந்துட்டாங்க. நீங்க பேசுறது நம்ம குட்டா காதுல விழுந்துச்சுனா நல்லா இருக்காது.” ஆதிரன். 

     “ப்ரண்ட்ஸா இருந்தா என்ன டா? அவங்க ரெண்டு பேரும் ஆணும் பொண்ணும் தான? போடா…” என அவர்கள் இருவரும் அருகில் வந்து விட்டதை பார்த்துக் கொண்டே ஆதிரனின் காதில் கூறியபடி, “இப்ப அப்பாவுக்கு பரவாயில்லையா நிலா?” என தன் முன்னே வந்து நிற்கும் வெண்ணிலாவிடம் கேட்டார் சிவகாமி. 

      “ஹான்… நல்லா இருக்காங்க ஆண்டி. இப்ப தான் சாப்பாடு குடுத்துட்டு வர்றோம்.” வெண்ணிலா. 

      “அப்பாக்கு ஒன்னும் இல்ல. எதுக்கும் கவலப்படாத. கூட நாங்கலாம் இருக்கோம்…” என வெண்ணிலாவின் கரம் பற்றி அன்புடன் கூறினார் சிவகாமி.

     “ரொம்ப தேங்க்ஸ் ஆண்டி. ஆரா மட்டும் கூட இல்லனா நா தனியா ரொம்ப கஷ்ட்டப்பட்டு இருப்பேன்.” வெண்ணிலா.

     “அவன் மட்டும் இல்ல. நாங்க எல்லாருமே உன் கூட இருக்கோம். எப்ப என்ன உதவி வேணுனாலும் தயங்காம கேளு. நீயும் எங்க வீட்ல ஒருத்தி தான்..” சிவகாமி. 

     “உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு ஆண்டி…” வெண்ணிலா. 

     இவர்கள் இருவரும் பாசத்தில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருக்க, தாயின் அருகில் நின்றபடி விடாமல் வெண்ணிலாவையே பார்த்திருந்தான் ஆதிரன். அவன் வெண்ணிலாவை விடாமல் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு தன் அண்ணனை முறைத்தபடி இருந்தான் ஆரண்யன்.

     “சரி ரொம்ப நேரம் ஆகிருச்சு மா. நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க. கண்டிப்பா மதியம் ரெண்டு பேரும் சாப்பிட்டு இருக்க மாட்டீங்க.” சிவகாமி. 

    “இல்ல ஆண்டி. எனக்கு பசிக்கல. ஆராவுக்கு குடுங்க…” வெண்ணிலா. 

    “நிலா வா… சாப்பிட்டு வரலாம்…” என இறுக்கமான குரலில் ஆரண்யன் கூற நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் வெண்ணிலா. 

     கைகளை இறுக்கமாக கட்டியபடி ஆதிரனையே பார்த்திருந்தான் ஆரண்யன். அவன் பார்வையில் இருந்த கோவத்தை உணர்ந்த வெண்ணிலா, “சரி வா கேன்டீன் ல போய் உக்காந்து சாப்பிட்டு வரலாம்…” என ஆரண்யனை கை பிடித்து இழுத்தாள் வெண்ணிலா. 

     “இந்தாங்க சாப்பாடு…” என சாப்பாட்டு பையை வெண்ணிலாவிடம் அளித்தார் சிவகாமி. 

    அங்கு நிற்கும் ஒவ்வொரு நொடியும் ஆரண்யன் அதிக கோவத்துடன் ஆதிரனை முறைத்துக் கொண்டிருப்பதை அறிந்து ஒரு கையால் ஆரண்யனையும் மறு கையால் சிவகாமி அளித்த சாப்பாட்டு பையை வாங்கியபடி ஆரண்யனை இழுத்துக் கொண்டு சென்றாள் வெண்ணிலா. 

     அவள் அங்கிருந்த ஒவ்வொரு நொடியும் வெண்ணிலாவின் முக அசைவுகளையே கவனித்திருந்த ஆதிரன் இறுதியில் அவள் அடைந்த பதட்டத்தை நன்றாக அறிந்து கொண்டான். 

    “இவ ஏன் இப்பிடி பதட்டமா ஓடுறா?” என்ற யோசனையுடன் செல்லும் வெண்ணிலாவை பார்த்திருந்தான் ஆதிரன். 

     “பாரேன்… நம்ம ஆரன் சொன்னதும் அந்த பொண்ணு ஒரு வார்த்தை கூட மறுத்து பேசாம போறத… உடனே இத பத்தி உங்க அப்பா கிட்ட பேசனும்.” சிவகாமி. 

    “அம்மா நீங்க ரொம்ப ஓவரா போறீங்க” ஆதிரன். 

     “அடப் போடா… நீதான் ரெண்டு வருஷம் கழிச்சு தான் கல்லியாணம் பண்ணிக்குவேன் னு சொல்லிட்ட. அதுனால நா சின்னவனுக்கு கல்லியாணம் பண்ணி வைக்க போறேன்.” சிவகாமி. 

     “ம்மா… சும்மா உலறிட்டு இருக்காதீங்க. வாங்க போய் உடம்பு சரியில்லாதவர பாத்துட்டு வரலாம்…” என எரிச்சலாக கூறினான் ஆதிரன். 

     “ஆமா ஆமா… வந்ததே அதுக்காகத் தான…” என முதலில் ஆரண்யனும் வெண்ணிலாவும் வெளியே வந்த அறையை நோக்கி ஆதிரனுடன் நடந்தார் சிவகாமி. 

     “நீ ஏன் ஆரா உன் அண்ணன அப்பிடி மொறச்சு பாத்துட்டு இருக்க?” என கேண்டீனில் ஒரு இடத்தை தேடிப்பிடித்து அமர்ந்தபடி கேட்டாள் வெண்ணிலா.

     “மொறச்சு பாக்குறதோட நிறுத்திட்டேன் னு சந்தோஷப்படு…” என வெறுப்பாக கூறினான் ஆரண்யன். 

      “அவன் உன் அண்ணன் டா…” வெண்ணிலா. 

      “அண்ணன்… பொல்லாத அண்ணன்… இவ்ளொ பெரிய காரியத்த செஞ்சுட்டு ஒன்னுமே தெரியாதவன் மாதிரி நடிச்சுட்டு திரியுறான். இவன… ச்சே…” எனக் கோவம் தாங்க முடியாமல் தன் முன் இருந்த மேசையில் குத்தினான் ஆரண்யன். 

     “என்ன டா பண்ற? மெண்டல் மாதிரி பண்ணாத. ஆதி மேலயே மொத்த தப்பையும் சொல்லிற முடியாது. அவன் ஒன்னும் என் கைய கால கட்டி என் கழுத்துல தாலி கட்டலயே. என் மேலயும் தப்பு இருக்கு ஆரா…” வெண்ணிலா. 

    “அதுனால தான் அந்த ஒரு காரணத்துனால தான் இவ்ளோ பொறுமையா இருக்கேன். ஹேய் அந்த தாலிய எதுக்குடி இன்னும் கழுத்துல போட்டுட்டு திரியுற? கழட்டி அவன் மூஞ்சி மேலயே வீசு. அவன் மூஞ்சி மேலயே வீசு…” எனக் கோவம் தாங்க முடியாமல் பொறுமினான் ஆரண்யன். 

     “எனக்குத் தெரியல ஆரா. என்னால அப்பிடி செய்ய முடியும் னு தோணல…” வெண்ணிலா. 

     “ஆமாம்மா… என்னதான் இருந்தாலும் ஸார் உங்களோட எக்ஸ் லவ்வராச்சே. அப்புறம் எப்பிடி அவன் கட்டுன தாலிய கழட்டி வீசத் தோணும்?” ஆரண்யன்.

    “அதெல்லாம் முடிஞ்சுப் போனக் கதை ஆரா…” வெண்ணிலா. 

     “முடிஞ்சு போனத நீ ஏன் தொடரனும் னு நெனக்கிற?” ஆரண்யன். 

     “இத பத்தி நாம இன்னொரு நாள் பேசலாம். இப்ப சாப்பிடு.” என சாப்பாட்டை எடுத்து பரிமாறினாள் வெண்ணிலா. 

     “இது என்ன சாதாரண விசயம் னு நெனச்சுட்டு இருக்கியா நிலா? நாளைக்கே உன் அப்பா உன்னய இன்னொருத்தன கல்லியாணம் பண்ணிக்க சொன்னா அப்ப என்ன பண்ணுவ?” ஆரண்யன். 

      “கடவுள் தான் எனக்கு இப்பிடி ஒரு சூழ்நிலைய உருவாக்கி ஆதி முன்னாடி கொண்டு வந்து நிறுத்தி என் கழுத்துல தாலி ஏற வச்சு இருக்கு. இதுக்கு மேல என்ன நடக்கனும் னு கடவுளுக்குத் தெரியும். என்ன நடந்தாலும் நடக்குறப்ப பாத்துக்கலாம்…” என உணவுண்ண ஆரம்பித்தாள் வெண்ணிலா. 

     “நீ எப்போல இருந்து இப்பிடி மாறுன?” ஆரண்யன்.

     “நீ எப்ப மாறுனியோ அப்போ… இதுக்கு மேல இதப்பத்தி பேசாம சாப்பிடு…” வெண்ணிலா.

     அதற்கு மேல் ஒரு வார்த்தை பேசாமல் சாப்பிடத் தொடங்கினான் ஆரண்யன். 

      இருவரும் மௌனமாகவே சாப்பிட்டு அங்கிருந்து புறப்பட்டனர். அறைக்கு வெளியே இருந்த இருக்கையில் ஆதிரனும் சிவகாமியும் பேசிக் கொண்டிருப்பதைக் கண்ட வெண்ணிலா ஆரண்யனிடம் , “உன் அண்ணங்கிட்ட எப்போதும் போல பேசு. சும்மா மொறைச்சுட்டு இருக்காத… சரியா?” என்றாள். 

      “அதான் நீ அத பத்தி பேசக் கூடாது னு சொல்லிட்டல்ல. அப்புறம் ஏன் நீயே அத பத்தி பேசுற?” என முகத்தை திருப்பியபடி கேட்டான் ஆரண்யன். 

     “சரி விடு…” என்றபடி அமைதியாக நடந்தாள் வெண்ணிலா. 

      “என்ன மா ரெண்டு பேரும் சாப்டீங்களா? சாப்பாடு புடிச்சு இருந்துச்சா?” சிவகாமி.

     “சூப்பரா இருந்துச்சு ஆண்டி சாப்பாடு. இந்தாங்க ஆண்டி பாத்திரம் எல்லாம் கழுவிட்டேன்…” என்றபடி சாப்பாட்டு பையை சிவகாமியிடம் அளித்தாள் வெண்ணிலா. 

     “நீ ஏன் அதெல்லாம் செஞ்ச?” சிவகாமி. 

     “பரவாயில்லை இருக்கட்டும் ஆண்டி. சாப்பிட்டதும் சாப்பிட்ட பாத்திரத்த உடனே கழுவிர்றது என் பழக்கம்.” வெண்ணிலா. 

     “ரொம்ப நல்ல பழக்கம் நிலா. இதோ இவனுக இருக்காங்களே ஸ்கூலுக்குலாம் சாப்பாடு குடுத்து விட்டா அந்த டிபன் பாக்ஸ தண்ணி விட்டு அலசிட்டு கூட வர மாட்டானுக. அப்பிடியே மூடி வச்சு வீட்டுக்கு கொண்டு வருவானுக. அத தொறக்குறப்ப ஒரு கெட்ட வாடை வரும் பாரு. ப்பா… இப்ப நெனச்சாலும் நாறுது…” என சிரித்தார் சிவகாமி. 

      “வந்த வேலை முடிஞ்சது ல வாங்க வீட்டுக்குப் போகலாம்…” என வெண்ணிலாவின் முன் அவமானப் பட முடியாமல் அழைத்தான் ஆதிரன். 

      “இரு ஆதி… நிலா அப்பாவ தான் பாக்க முடியல. நிலா கூடவாவது கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்துட்டு போகலாம்.” சிவகாமி. 

     “பாக்க முடியலயா? ஏன் என்னாச்சு ஆண்டி? எந்த ரூம் னு தெரியலயா?” வெண்ணிலா. 

     “உள்ள அப்பா ரெஸ்ட் எடுக்குறாரு இப்ப பாக்க முடியாது னு நர்ஸ் சொல்லிட்டாங்க நிலா.” சிவகாமி. 

     “ஓஓ… யாருன்னே தெரியாத எனக்காக நீங்க இவ்ளோ தூரம் வந்ததே ரொம்ப பெரிய விசயம் ஆண்டி. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். ” வெண்ணிலா. 

      “என்ன நீ இப்பிடி சொல்லிட்ட? என் பையனோட ப்ரண்ட் நீ. அதுவும் ஆரன் ஒரு பொண்ணுக்கிட்ட இவ்ளோ நெருக்கமா பழகி இருக்கான் ங்கிறத என்னால இப்ப வரைக்கும் நம்பவே முடியல…” என சிரித்தார் சிவகாமி. 

     “அந்த விசயத்த நம்புறது கொஞ்சம் கஷ்ட்டம் தான்…” என வெண்ணிலாவும் புன்னகைத்தாள். 

      “ஏன்டா நானும் வந்ததுல இருந்து பாக்குறேன் நீ ஏன் வாயத் தொறந்து பேசவே மாட்டேன் ங்குற?” என ஆரண்யனைப் பார்த்துக் கேட்டார் சிவகாமி. 

      “நா என்ன பேசுறது? அதான் ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பேசிட்டு இருக்கீங்களே…” ஆரண்யன். 

       “சரி நீ சாப்பிட்டியா?” சிவகாமி. 

       “ரொம்ப சீக்கிரமா கேட்டுட்டீங்க ம்மா…” ஆரண்யன்.

       “சரி சரி கோச்சுக்காதடா… ஆமா, என்னமோ ஆதிக்கிட்ட பேசனும் னு சொன்ன? என்ன டா அது?” சிவகாமி. 

      “அது ஒன்னுல்ல. அப்புறம் பேசிக்கிறேன்…” என்றவாறு ஆதிரனைப் பார்த்தான் ஆரண்யன். 

     “என்ன னு சொல்ல மாட்டானே. இவனுக ரெண்டு பேரும் இப்படித் தான் நிலா. அண்ணந்தம்பிக்குள்ள நடக்குற விசயத்த என்ன ஆனாலும் வெளியில சொல்ல மாட்டானுக.” சிவகாமி. 

      “நாங்க ரெண்டு பேரும் ஒத்துமையா இருக்குறத பாத்து உங்களுக்கு பொறாமை…” ஆதிரன். 

      “அப்பிடியே நாங்க பொறாமை பட்டுட்டாலும்…” சிவகாமி. 

      “சரி நீங்க கெளம்புங்க. இங்க இருந்து என்ன பண்ண போறீங்க? நிலா கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்…” ஆரண்யன். 

      “அப்ப நீ கிளம்பலயா? நீ வீட்டுக்குப் போ. நா நிலாக்குத் தொணையா இருக்கேன்.” சிவகாமி. 

       “இல்ல… நானே இருக்கேன்…” ஆரண்யன். 

       “நீங்க ரெண்டு பேருமே வீட்டுக்கு கெளம்புங்க. என் மேல வச்சு இருக்குற அக்கறைக்கு ரொம்ப தேங்க்ஸ். அப்பா தான் இப்ப நல்லா இருக்காரே. நானே பாத்துக்கிறேன். நீங்க எல்லாரும் வீட்டுக்கு கெளம்புங்க.” வெண்ணிலா. 

      “இல்ல நிலா. நா கூட இருக்கேன். ” ஆரண்யன். 

     “ஆமா யாராவது உன் கூட இருக்கனும்.” சிவகாமி. 

      “ஆரா ப்ளீஸ். ஆண்டி நீங்களாவது புரிஞ்சுக்கங்களேன். அப்பா கூட உள்ள நா இருந்துப்பேன் ஆண்டி. நீங்க யாரும் எனக்காக இதுக்கு மேல கஷ்ட்டப்பட வேண்டாம். எனக்கு ரொம்ப கில்டியா பீல் ஆகுது. கிளம்பு ஆரா. நா பாத்துக்கிறேன்.” வெண்ணிலா. 

        “அதான் அவ பாத்துக்கிறேன் னு சொல்றால்ல. குட்டா வா வீட்டுக்கு போவோம்.” ஆதிரன். 

      “நெஜமா நீ இருந்துக்குவியா நிலா?” ஆரண்யன். 

      “ஹேய் லூசு… நா இருந்துப்பேன் டா. நீ வேணுனா போய்ட்டு காலையில வா. இப்ப கெளம்பு…” வெண்ணிலா. 

      “சரி வா நாம கெளம்பலாம். தைரியமா இருக்குற பொண்ண நாம கெடுக்க கூடாது.” என ஆரண்யனை அழைத்தார் சிவகாமி. 

       “நேரம் காலம் பாக்காம எதுனாலும் எனக்கு உடனே கால் பண்ணிறனும். சரியா?  எப்போதும் உனக்கு நா இருப்பேன்.” என வெண்ணிலாவின் கரம் பற்றி அழுத்தி கூறி விட்டு புறப்பட்டான் ஆரண்யன். 

     வெண்ணிலாவும் புன்னகையுடன் தலையசைத்து விடை கொடுத்தாள். 

      தன் மகன் வெண்ணிலாவிடம் பேசியதை கூர்ந்து கவனித்த சிவகாமி, அவளிடம் தலையசைத்து விடைபெற்றவர் தன் இரு மகன்களுடன் நடந்தார். வெண்ணிலாவை விட்டு சிறு தொலைவு நடந்ததும்,  “உனக்கு அந்த  பொண்ண ரொம்ப புடிக்குமா குட்டா?” என ஆரண்யனிடம் வினவினார் சிவகாமி. 

       “ரொம்ப புடிக்கும் ம்மா…” என எதார்த்தமாக பதிலளித்தான் ஆரண்யன். 

        “அப்ப அம்மா உனக்கு அந்த பொண்ணயே கல்லியாணம் பண்ணி வச்சுறவா?” என ஆரண்யனிடம் நேரடியாக கேட்டார் சிவகாமி. 

       அவரது அக்கேள்வியில் அதிகமாக அதிர்ந்து போனது ஆதிரன் தான். 

       “அம்மா… அவங்க ரெண்டு பேரும் ப்ரண்ட்ஸ் ம்மா…” என இடையில் புகுந்தான் ஆதிரன். 

       “நீ சும்மா இரு டா. மொதல்ல இருந்து இப்பிடித்தான் சொல்லிட்டு இருக்க. நீ சொல்லு குட்டா, அம்மா உனக்கு அந்த பொண்ணயே கல்லியாணம் பண்ணி வச்சுறவா?” சிவகாமி. 

        தாய் பேசியதை கூர்ந்து கவனித்த ஆரண்யன், “மொதல்ல இருந்து அண்ண என்ன ம்மா சொல்றான்?” என்றான். 

      “அது ஒன்னும் இல்ல டா. நிலா வ மொத தடவ உன் கூட பாக்குறப்பவே உனக்கு நல்ல ஜோடியா எனக்குத் தோனுச்சு. அத இவன் கிட்ட சொன்னா, நீங்க ரெண்டு பேரும் ப்ரண்ட்ஸ். அப்பிடி இப்பிடி னு சொல்லிட்டு இருக்கான். ப்ரண்ட்ஸா இருந்தா கல்லியாணம் பண்ணிக்க கூடாதா என்ன?” சிவகாமி. 

       “ஓஓஓ…” என்றபடி ஆதிரனை கூர்ந்து கவனித்தான் ஆரண்யன். 

      “நீ சொல்லு, உனக்கு நிலா ஓகே வா?” சிவகாமி. 

      ஆரண்யன் இதற்கு சம்மதிக்க மாட்டான் என்ற எதிர்பார்ப்பில் தம்பியைப் பார்த்தான் ஆதிரன். சில நொடிகள் யோசித்த ஆரண்யன், “எனக்கு ஓகே ம்மா. என் ப்ரண்ட்டே எனக்கு லைப் பாட்னரா வர்றது ரொம்ப சந்தோஷம் தான்…” என வெண்ணிலாவை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தான். 

      “என்ன டா சொல்ற?” என வெளிப்படையாகவே அதிர்ந்த ஆதிரனின் உள்ளத்தில் தன் திட்டங்கள் அனைத்தும் பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதை உணர்ந்தான். 

                                    (நிலவு மலரும்…)

                                -செல்லம்மாள்பாரதி 

     

    No comments yet.