அரக்கன் -15

Chellammal Bharathi | 25 Dec 2025 | Share

     “இப்ப எதுக்கு ப்பா என்னய அங்க இருந்து கூட்டிட்டு ஸாரி இழுத்துட்டு வர்றீங்க?” என தந்தையின் பின்னே மருத்துவமனைக்கு வெளியே வந்ததும் கேட்டான் ஆதிரன். 

      “நீ ஏன் அங்க இருக்கனும் னு நெனக்கிற? உனக்கும் அந்த பொண்ணுக்கும் என்ன சம்பந்தம்? அந்த பொண்ணோட ப்ரண்ட் அங்க அந்த பொண்ணு கூட இருக்கான். நீ அங்க இருக்க வேண்டிய அவசியம் என்ன?” என ஆதிரனை நேர் பார்வையில் தாக்கினார் அருணாச்சலம். 

      “ஒன்னும் இல்ல… சும்மா தான் கேட்டேன். எனக்கு அங்க இருக்க ஆசையா என்ன? அந்த மனுஷன் அன்னக்கி என் கிட்ட ரொம்ப பாசமா பேசுனார். அதான் ஒரு பழக்கத்துக்காக அவர பாத்துட்டு வந்து இருக்கலாம் னு சொன்னேன்.” என கழுவுகின்ற மீனில் நழுவுகின்ற மீனாக பேசினான் ஆதிரன். 

    “ஓஓ அப்பிடியா? அவ்ளோ நல்ல மனசு இருந்தா நாளைக்கி உன் அம்மாவையும் அழைச்சுட்டு வந்து பாரு. அந்த பொண்ணுக்கும் கொஞ்சம் ஆறுதலா இருக்கும். இப்ப வீட்டுக்கு வா…” என ஆணையிட்டபடி ஆதிரனின் காரில் ஏறி அமர்ந்தார் அருணாச்சலம். 

     “உங்க கார்ல தான என்னய பாலோ பண்ணிட்டு வந்தீங்க? இப்ப எதுக்கு என் காருல ஏறி இருக்கீங்க? ” என சிறு பிள்ளையின் கோபத்துடன் காரில் ஏறி அமர்ந்தபடி கேட்டான் ஆதிரன். 

    “அது இங்கயே இருக்கட்டும். ஆரனுக்கு தேவைப்படும்…” என அதற்கு மேல் எதுவும் பேசாமல் காரை வீட்டை நோக்கி செலுத்தினார் அருணாச்சலம். 

     வீட்டிற்கு வந்து சேரும்வரையில் முகத்தை கோபமாக வைத்துக் கொண்டே வந்தவன், வீட்டில் தன் தாயைப் பார்க்கவும் தன்னை மாற்றிக் கொண்டான் ஆதிரன். 

     “என் கூட கோவிலுக்கு வர இருந்தவர ரெண்டும் பேரும் ப்ளான் பண்ணி ஆபீஸ்க்கு அழைச்சுட்டீங்கள்ல…” எனக் குரலில் கோபத்தையும் முகத்தில் சிரிப்பையும் காட்டியபடி ஆதிரனுக்கு கோவில் பிரசாதத்தை அளித்தார் சிவகாமி. 

     “அவர நா ஒன்னும் கூப்பிடல ம்மா. குட்டா தான் கூப்பிட்டான்…” ஆதிரன். 

     “நீ பேசுறத பாத்தா நா இன்னக்கி ஆபீஸ்க்கு வந்தது உனக்கு புடிக்கல போலயே…” அருணாச்சலம். 

     அதைக் கேட்டு ஆதிரன், தந்தையை முறைத்தபடி, “ம்மா… இங்க பாருங்க ம்மா அப்பாவ…” எனத் தாயிடம் சரணடைந்தான் ஆதிரன். 

     “ப்ச்… ஏன் ங்க இப்ப ஆதிக்கிட்ட இப்பிடி பேசுறீங்க?” சிவகாமி. 

     “அவன் சொன்னதுக்குத் தான் நா அப்பிடி கேட்டேன். உடனே நீ உன் புள்ளைக்காக என் கிட்ட சண்டைக்கு வந்துரு…” என முகத்தை திருப்பிக் கொண்டார் அருணாச்சலம். 

      “அடடா… இப்ப உங்க ரெண்டு பேருக்கும் என்ன ஆச்சு? ஆமா… நீங்க ரெண்டு பேரும் மட்டும் தான் வந்து இருக்கீங்க. ஆரன் எங்க?” சிவகாமி. 

     “அவன் ஹாஸ்பிடல்ல இருக்கான்.” ஆதிரன். 

     “என்னது? ஹாஸ்பிடல்ல இருக்கானா? என்ன ஆச்சு அவனுக்கு? என்ன ஆச்சு?” எனப் பதறினார் சிவகாமி. 

     “என்ன ஆதி நீ? இப்பிடியா சொல்றது?” என ஆதியை கடிந்தபடி, “ஹே சிவா… உன் பையனுக்கு எதுவும் ஆகல. அவன் ப்ரண்டோட அப்பாக்குத் தான் லைட்டா உடம்பு சரியில்லை. அதான் அவன் ப்ரண்ட்டுக்குத் தொணையா ஹாஸ்பிடல்ல இருக்கான். இதத்தான் உன் செல்லப் புள்ள ஆதி சொல்ல வந்தான்…” என்றார் அருணாச்சலம். 

    “ப்ரண்டோட அப்பாவுக்கா? அவன் உன் கூடத் தான ஆதி ஆபீஸ்க்கு வந்தான்? அப்புறம் எப்பிடி?” சிவகாமி. 

     “உன் அம்மா கேக்குறா ல… எல்லாத்தையும் சொல்லு ஆதி. நா போய் ப்ரஷ் ஆகிட்டு வர்றேன்.” என ஆதியிடம் சிறு சிரிப்புடன் கூறிவிட்டு தன் அறையை நோக்கி சென்றார் அருணாச்சலம். 

     “என்ன ஆச்சு ஆதி?” என கவலையுடன் வினவினார் சிவகாமி. 

     “நீங்க கவலைப்படுற அளவுக்கு எதுவும் நடக்கல ம்மா…” என தாயை தேற்றியவாறு வெண்ணிலாவைப் பற்றிக் கூறினான் ஆதிரன். வெகு கவனமாக வெண்ணிலாவை ஆரண்யனின் தோழியாக மட்டுமே கூறினான் ஆதிரன். அனைத்தையும் கேட்ட சிவகாமி, “அச்சோ பாவம் டா அந்த பொண்ணு. அந்த பொண்ணுக்கு அம்மா இல்லையா?” என்றார். 

     “இல்ல ம்மா. நிலாவோட சின்ன வயசுலயே அவங்க அம்மா இறந்துட்டதா காலேஜ் டைம் ல குட்டா சொல்லி கேட்டு இருக்கேன்.” ஆதிரன். 

     “ஓஓ… அவங்க அப்பா ரொம்ப கஷ்ட்டப்பட்டு வளத்து இருப்பாரு ல. ஒரு பொம்புள புள்ளைய தனி ஆளா இருந்து வளக்குறது ங்கிறது சாதாரண விசயமா? சரி நீ போய் ப்ரஷ் ஆகிட்டு வா… அவங்க மூணு பேருக்கும் சாப்பாடு சமைச்சு எடுத்துட்டு போகலாம்…” சிவகாமி. 

       சுந்தரத்தின் வளர்ப்பை பற்றி தாய் பேசுகையில் நெஞ்சின் ஓரம் குற்றவுணர்வென்ற சிறிய வலி ஒன்று ஏற்பட்டாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தாயிடம், சரியென தலையாட்டிவிட்டு தன் அறைக்குச் செல்ல மாடியேறினான் ஆதிரன். 

      “ஆதி… அப்பிடியே ஆரனுக்கு ஃபோன் பண்ணி அந்த பொண்ணோட அப்பாக்கு என்ன மாதிரி சாப்பாடு குடுக்கனும் னு டாக்டர் கிட்ட கேட்டு சொல்ல சொல்லு டா…” சிவகாமி. 

      “நீங்களே உங்க சின்ன மகன் கிட்ட ஃபோன் பண்ணி கேட்டுக்கங்க…” என தனக்கு இதில் ஆர்வம் இல்லாதது போல் காட்டிக் கொண்டான் ஆதிரன். 

     “சரித்தான் போடா…” என சமையலறைக்குள் நுழைந்து சமைக்கத் தொடங்கினார் சிவகாமி. என்ன தான் பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் சமையலுக்கு என்று வேலைக்காரர்களை அனுமதித்தது இல்லை சிவகாமி. தன் குடும்பத்திற்கு தானே முன் நின்று சமைக்க வேண்டும் என்ற அழுத்தமான பிடிவாதம் உண்டு அவருக்கு. 

    சிவகாமி சமையலறையில் பரப்பரப்பாக சமைத்துக் கொண்டிருக்கையில் அவரை பின்னிருந்து வலிமையான இரு கரங்கள் காதலுடன் அணைத்துக் கொண்டது. அவ்வணைப்பில் அதிகமான வெட்கம் கொண்டாலும் , “என்னங்க இது… நம்ம பையன் வீட்ல தான் இருக்கான்…” என சிறிய அதட்டலுடன் கணவனின் அணைப்பில் வெட்கி சிவந்து நின்றார் சிவகாமி. 

     “அது எப்பிடி சிவா… எத்தனை வயசானாலும் உன்னோட இந்த வெக்கத்துக்கு மட்டும் வயசே ஆக மாட்டேன்ங்குது…” என மனைவியின் கன்னத்துடன் கன்னம் வைத்து உரசினார் அருணாச்சலம். 

     “போடா…” என சிரிப்புடன் கணவனை தள்ளி விட்டார் சிவகாமி. 

     மனைவியின் காதலுடன் கூடிய டா வில் மயங்கிய அருணாச்சலம், “இளைய நிலா பொழிகிறதே

இதயம் வரை நனைகிறதே

உலா போகும் மேகம் கனா காணுமே

விழா காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே

இதயம் வரை நனைகிறதே…” எனப் பாடியபடி ஆடிக்கொண்டே அருகிலிருந்த காலிஃப்ளவரை எடுத்து மண்டியிட்டு மனைவியிடம் நீட்டினார். 

     சிரிப்புடன் அதை வாங்கி அருணாச்சலத்தின் தலையில் லேசாக அடித்து விட்டு, “சீக்கிரம் சமைச்சு ஹாஸ்பிட்டல்லுக்கு எடுத்துட்டு போகனும். ஸோ… உங்க காதல் லீலையெல்லாம் கொஞ்சம் தள்ளி வச்சுட்டு வந்து ஹெல்ப் பண்ணு அருணா…” என்றார். 

     “ஹாஸ்பிடல்லுக்கு சாப்பாடு எடுத்துட்டு போறியா? அந்த பொண்ணுக்கா?” அருணாச்சலம். 

     “ம்ம் ஆமா… கூட ஆரனும் இருக்கான் ல அவனுக்கும் சேத்து தான். பாவம் தாயில்லா பொண்ணு வேற…” சிவகாமி. 

      “ஓஓ உடனே நீங்க சாப்பாட்டு கூடைய தூக்கிருவீங்களே…” என சிரித்தார் அருணாச்சலம். 

      “ப்ச்… கிண்டல் பண்ணாதீங்க.” சிவகாமி. 

      “அந்த பொண்ண பத்தி உன் பையன் வேற என்ன சொன்னான்?” என மெதுவாக கல்லெறிந்து பார்த்தார் அருணாச்சலம். 

     “என்ன சொன்னான்? நம்ம ஆரனோட ப்ரண்டாம்லோ அந்த பொண்ணு. ஏதோ பணம் லாம் குடுத்து ஹெல்ப் பண்ணான்னாம். அதை இன்னக்கி அந்த பொண்ணு திருப்பி குடுக்க வர்றப்போ நம்ம ஆரன் பாத்து ரொம்ப சர்ப்ரைஸ் ஆகிட்டான் னு சொன்னான்.” எனப் பேசியபடி சமையலை தொடர்ந்தார் சிவகாமி. 

     “கன்பார்ம்… ஆதி மனசுல நிலா வ பத்தி ஏதோ இருக்கு. அப்பிடி இல்லனா அவன் ஏன் நா பேசுனதெல்லாம் சிவாக்கிட்ட மறைக்கனும்?” என யோசனையில் ஆழ்ந்தார் அருணாச்சலம். 

     “என்னங்க… நா சொன்னது காதுல விழுந்துச்சா?” என்ற மனைவியின் உரத்த குரல் கேட்டு யோசனையில் இருந்து வெளி வந்தார் அருணாச்சலம். 

     “என்ன சொன்ன சிவா?” அருணாச்சலம். 

     “என்ன சொன்னேன்னா? அப்ப இவ்ளோ நேரம் நா சொன்னத காதுல வாங்கலயா? நா தினமும் போவேன் ல கோவில், அந்த கோவில்ல நேத்து ஏதோ வித்தியாசமான கல்லியாணம் நடந்துச்சாம்…” என அடுப்பை கவனித்தபடி கூறினார் சிவகாமி. 

     “வித்தியாசமான கல்லியாணமா? அப்பிடி என்ன நடந்துச்சு?” என மனைவிக்கு உதவியபடியே வினவினார் அருணாச்சலம். 

     “ஆமா ங்க. நேத்து விடியக்காலையில யாரோ ஒரு பையனும் பொண்ணும் மட்டும் வந்து கல்லியாணம் பண்ணிக்கிட்டாங்கலாம்.” சிவகாமி. 

     “யாராவது லவ்வர்ஸ்ஸா இருப்பாங்க. இதுல என்ன வித்தியாசம் இருக்கு?” அருணாச்சலம். 

     “இருக்கே… அந்த பொண்ணு மொகத்துல சந்தோஷமே இல்லையாம். பையன் கொஞ்சம் மொரட்டுத்தனமா இருந்து இருக்கான். அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டுனதும் அந்த மொரட்டுப் பய பொண்ண திரும்பி கூட பாக்காம போய்ட்டானாம். லவ்வர்ஸா இருந்தா பொண்ணும் பையனும் ஏதாவது பேசிக்கிட்டு இருந்து இருப்பாங்கல்ல. ஆனா அந்த பொண்ணு ஒரு வார்த்தை கூட பேசலயாம். எல்லாத்தையும் வச்சு பாத்தா அந்த பொண்ணுக்கு கல்லியாணத்துல விருப்பம் இல்லாதது போல தான் இருந்துச்சாம். ஆனா அந்த பொண்ணு எந்த எதிர்ப்பும் இல்லாம அமைதியா இருந்துச்சாம்.” சிவகாமி. 

     “இதெல்லாம் உனக்கு யாரு சொன்னது?” அருணாச்சலம். 

      “லேடீஸ் நாங்க காசிப் மட்டும் தான் சொல்லுவோம். சொன்னது யாருனுலாம் சொல்ல மாட்டோம். ஏங்க… ஒரு வேளை அந்த பொண்ண மிரட்டி கல்லியாணம் பண்ணி இருப்பானோ அந்த பையன்?” சிவகாமி. 

      “இதென்னடா புது கொள்கையா இருக்கு…” என சிரிப்புடன் காய்கறி எடுக்க திரும்பியவர் சமையலறை வாயிலில் ஆதிரன் அனைத்தையும் கேட்டபடி நின்றிருப்பதைக் கண்ட அருணாச்சலம், “இங்க பாரு ஆதி உன் அம்மா ஏதோ இன்ட்ரஸ்ட்டிங்கான கதை சொல்றா…” என அவனிடம் கூறியபடி தன் வேலையை தொடர்ந்தார்.

     இறுகிய முகத்துடன் உள்ளே வந்தவன், “இத உங்களுக்கு யாரு ம்மா சொன்னது?” என்றான் ஆதிரன். 

     “கதை கேட்டா கதைய மட்டும் தான் கேக்கனும். கதைய சொன்னது யாரு னு கேக்க கூடாது. நா போய் என் சின்ன மகன் கிட்ட பேசிட்டு வர்றேன். நீ இத கிண்டிக்கிட்டே இரு. கருகிற கூடாது…” என ஆதிரனிடம் ஆணையிட்டுவிட்டு ஃபோனை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றார் சிவகாமி. 

      தாய் கூறியதை கேட்டு, அடுப்பில் உள்ளதை கருக விடாமல் கிளறியவனின் முகமும் அகமும் எக்கச்சக்கமாய் கருகியது.

                     ❤❤❤❤ 

     “திருட்டுக் கல்லியாணம் பண்ணுனவன் என்ன பெரிய யோக்கயனவா இருப்பான்? எவனாவது ஒரு அயோக்கிய ராஸ்கலா தான் இருப்பான்…” என இகழ்வாக இதழ் வளைத்தான் ஆரண்யன். 

      “ஓஹோ… அயோக்கிய ராஸ்கலா?உனக்கு ஒரு பெருமையான விஷயம் சொல்லட்டா? அந்த அயோக்கிய ராஸ்கலே உன் அண்ணன் தான்…” என வெறுப்பாக கூறினாள் வெண்ணிலா. 

     “என்ன உலர்ற? என் அண்ணன் அப்பிடிபட்டவன் இல்ல…” என்ற ஆரண்யனின் குரலில் சுருதி இறங்கியது. 

     “அப்ப என்னய பாத்தா வீணா அவன் மேல பழி போடுற மாதிரி இருக்கா ஆரா? உன்னய பொறுத்தவரைக்கும் நா கேடு கெட்டவ, உன் அண்ணன் உலக மகா உத்தமன். அதான?” என கண்கள் சிவக்க கத்தினாள் வெண்ணிலா. 

     “ஹேய் நிலா நிலா… காம் டவுன். எனக்கு ஒன்னும் புரியல. என்ன ஆச்சு… எப்பிடி… எனக்கு ஒன்னும் புரியல நிலா. ஆதி இப்பிடி ஒரு காரியத்த செஞ்சானா?” என தலையை தாங்கியபடி அங்கும் இங்கும் நடந்தவன் வெண்ணிலா கூறும் பழியை ஏற்றுக் கொள்ள முடியாமல் அங்கிருந்த ஒரு பெரிய கல்லில் அமர்ந்தான் ஆரண்யன். 

     அவனின் செயல்களை ஒரு வெற்றுப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தாளே தவிர வாயை திறந்து எதுவும் கூறினாளில்லை. 

     “என்ன நடந்துச்சு நிலா?” ஆரண்யன். 

     “இத நீ ஆதிரனோட தம்பியா கேக்குறியா? இல்ல என்னோட ப்ரண்டா கேக்குறியா?” வெண்ணிலா. 

     “எனக்குத் தெரியும் நிலா. இந்த விசயத்துல உன்னால என்னய நம்ப முடியாது. ஏன்னா நா ஆதிரனோட தம்பி. ஆனா நா ஆதிரனோட தம்பி மட்டும் இல்ல சிவகாமியோட மகன். ஆதிரனோட தம்பிய நம்பாம உன் கூட படிச்ச உன் ப்ரண்ட் ஆரா வ நம்பு. என் ப்ரண்ட்ட கஷ்ட்டபடுத்துனவன  கண்டிப்பா நா சும்மா விட மாட்டேன். அது என் அண்ணனா இருந்தாலும் சரி என் அப்பாவா இருந்தாலும் சரி… உன் கண்ணீர் மேல சத்தியமா சொல்றேன் இந்த கண்ணீருக்கு காரணமானவன சும்மா விட மாட்டேன். இதுக்கு மேல உன் விருப்பம். என்னய நம்புனா என்ன நடந்துச்சு னு சொல்லு…” எனக் கண்ணை மூடியபடி தீர்க்கமாக கூறினான் ஆரண்யன். 

           “எனக்கு எந்த நியாயமும் கிடைக்க வேண்டாம். என்னால உங்க ரெண்டு பேருக்குள்ள பிரச்சனை வர வேண்டாம். இதுல உன் அண்ணன மட்டுமே தப்பு சொல்ல முடியாது. நெருப்பு சுடும் னு தெரிஞ்சே நெருப்புக்குள்ள கைய விட்டது நாந்தான்…” என தன் மாங்கல்யத்தை கையில் ஏந்தியபடி கூறினாள் வெண்ணிலா. 

     “சரி… இந்த விசயத்த உன்னால உன் அப்பாக்கிட்ட சொல்ல முடியாது. வேற யார்க்கிட்டயும் உன்னால சொல்ல முடியாது. என் கிட்ட சொல்லி  உன் பாரத்த கொறச்சுக்க நிலா. ப்ளீஸ் எல்லாத்தையும் உனக்குள்ளயே வச்சுக்காத…” ஆரண்யன்.

     “இது ஒரு கான்ட்ராக்ட் மேரேஜ். என் அப்பாவ காப்பாத்துறதுக்காக பதினஞ்சு லட்சம் பணம் தேவைப்பட்டுச்சு. அந்த பணத்த தர்றேன் ஆனா அதுக்கு பதிலா அவரு என் கழுத்துல தாலி கட்டனும் னு சொன்னாரு. அதான் இது…” வெண்ணிலா. 

    “என்னது பணத்துக்காக தாலி கட்டுனானா?” ஆரண்யன். 

    “ஆமா…” என நடந்த அத்தனையையும் கூறினாள் வெண்ணிலா. 

    “இதெல்லாம் என்ன நிலா? இதென்ன சின்னப்பசங்க விளையாட்டா? எவ்ளோ பெரிய விசயத்த பண்ணிட்டு ப்ளையிங் கிஸ் குடுத்து விளையாடுறானா?” என பொறுமினான் ஆரண்யன். 

     “ப்ளையிங் கிஸ்ஸா?” வெண்ணிலா. 

     “ப்ச் அத விடு… நீ எதுக்கு இன்னும் இத கழுத்துல போட்டுட்டு இருக்க? கழட்டி அவன் மூஞ்சி மேலயே வீச வேண்டியது தான?” ஆரண்யன். 

     “அது… அது என்னால முடியல ஆரா.” வெண்ணிலா. 

     “ஏன்? அந்த அயோக்கிய பயல இன்னும் லவ் பண்றியா?” ஆரண்யன். 

     “கண்டிப்பா இல்ல ஆரா.” என திட்டவட்டமாக மறுத்தாள் வெண்ணிலா. 

      “இவன சும்மா விடக் கூடாது நிலா. கேக்க யாரும் இல்ல னு தான இந்த அளவுக்கு பண்ணி இருக்கான். என் அம்மா வளர்ப்ப பொய் ஆக்கிட்டு வந்து நிக்கிறான். எனக்கு வர்ற கோபத்துக்கு அவன் சட்டைய புடிச்சு நாலு அறை விடனும் னு தோனுது…” ஆரண்யன். 

     “எனக்காக நீ இந்த அளவுக்கு கோவப்படுறதே போதும் ஆரா. இதுக்கு மேல வேற எதுவும் வேண்டாம். நா போய் அப்பாவ பாக்குறேன்.” வெண்ணிலா. 

     “நிலா ஒரு நிமிஷம். உன்னய இந்த அளவுக்கு துடிக்க வச்சவன துடி துடிக்க வைக்காம விட மாட்டேன். உனக்காக எப்போதும் நா இருப்பேன் நிலா. எத நினைச்சும் கவலைப்படாத…” ஆரண்யன். 

     “தேங்க்ஸ்…” என்றவாறு தன் தந்தை இருக்கும் அறையை நோக்கி சென்றாள் வெண்ணிலா. 

     அவள் அங்கிருந்து சென்றதும் ஃபோனில் தன் தாயை அழைத்தான் ஆரண்யன். 

     “டேய்… நூறு ஆயுசு டா உனக்கு. உனக்குத்தான் ஃபோன் பண்ணனும் னு ஃபோன எடுத்தேன். நீயே பண்ணிட்ட…” சிவகாமி. 

     “ஆதி எங்க ம்மா?” ஆரண்யன். 

     “ஆதியா? அவன் இப்பத்தான் கிச்சனுக்கு வந்தான் அவன் கையில கரண்டிய குடுத்துட்டு நா உன் கிட்ட பேச வந்துட்டேன். சரி அவன விடு உன் ப்ரண்டோட அப்பாவுக்கு என்ன மாதிரி சாப்பாடு குடுக்கனும் னு டாக்டர் கிட்ட கொஞ்சம் கேட்டு சொல்லேன்… ” சிவகாமி. 

     “அவருக்கு லாம் இங்க ஹாஸ்பிடல்லையே சாப்பாடு குடுத்துருவாங்க. நீங்க நிலாக்கு மட்டும் ஆதிக்கிட்ட சாப்பாடு குடுத்து விடுங்க.” ஆரண்யன். 

     “இப்ப ஏன் நீ ஆதிய மட்டும் அழைக்கிற?” சிவகாமி. 

     “அவன் கிட்ட ரொம்ப முக்கியமான விஷயம் பேசனும். அதான்…” ஆரண்யன்.

    “ஆனாலும் அண்ணனும் தம்பியும் ரொம்பத்தான்டா ரகசியம் பேசுறீங்க. அவன் வருவான், கூட நானும் வருவேன்.” சிவகாமி. 

     “சரி சீக்கிரம் வாங்க…” என இறுக்கத்துடன் கூறி விட்டு அழைப்பை துண்டித்தான் ஆரண்யன். 

     சிறிது நேரம் கழித்து உணவுடன் சிவகாமியும் ஆதிரனும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் வந்த நேரம் வெண்ணிலாவும் ஆரண்யனும் சுந்தரத்தின் அறையில் இருந்தனர். 

     எந்த அறை என்று தெரியாததால் வெளியில் இருந்த நாற்காலியில் அமர்ந்த சிவகாமி, “எந்த ரூம் னு உனக்குத் தெரியுமா ஆதி?” என்றார். 

     “அப்போ நா சரியா கவனிக்கல ம்மா. இருங்க அவனுக்கு ஃபோன் பண்றேன்.” என்றவாறு ஃபோனை எடுத்தவன், “அதோ குட்டா வர்றான் ம்மா…” என்றான் ஆதிரன். 

    அவன் கை காட்டிய பக்கம் திரும்பிய சிவகாமி, “அவன் கூட வர்றது தான் அந்த பொண்ணா ஆதி?” என்றார். 

    “ம்ம் ஆமா… நிலா ம்மா…” என கூந்தல் களைந்து அழுது சிவந்த போன கண்களுடன் சோர்ந்து போன முகத்துடன் இருந்தாலும் தனி அழகுடன் மிளிரும் வெண்ணிலாவை ரசித்தபடி கூறினான் ஆதிரன். 

     “ஜோடிப் பொருத்தம் நல்லா இருக்கு ல ஆதி? ஆரனுக்கு பொருத்தமா இருக்கா…” என தங்களை நோக்கி வந்து கொண்டிருக்கும் ஆரண்யனையும் வெண்ணிலாவையும் பார்த்துக் கூறினார் சிவகாமி. 

     தாய் கூறிய சொற்கள் காற்றில் கரைந்து தன் காதில் விழுந்த அடுத்த நொடி பேரதிர்ச்சிக்குள்ளானான் ஆதிரன். 

        (நம்ம மைண்ட் வாய்ஸ்: செத்தான் சிவனாண்டி..🐚🐚🐚)

                                     (நிலவு மலரும்…)

   

                                  -செல்லம்மாள்பாரதி 

     

    No comments yet.