அரக்கன் -13

Chellammal Bharathi | 18 Dec 2025 | Share

       ஆதிரன் அறையில் இருந்து வெளியில் வந்தவன் நேராக தனது கேபினுக்குள் சென்று அமர்ந்த ஆரண்யன், சில நொடிகளிலேயே எழுந்து அலுவலகத்திலிருந்து வெளியேறினான். கால் போன போக்கில் நடந்தவன் எதேர்ச்சையாக எதிரே பார்த்தவன் அப்படியே நின்று விட்டான். 

     பேருந்து நிறுத்தத்தில் உள்ள கூட்டத்தில் இருந்து விலகி தனியாக அருகே உள்ள ஒரு மரத்தில் சாய்ந்து நின்றிருந்தாள் வெண்ணிலா. நிலாவை மேகம் மறைப்பது போல், வெண்ணிலாவின் முகத்தில் சோகம் படர்ந்து அவளது மகிழ்ச்சியை மறைத்திருந்தது. 

      தனியாக நின்றிருக்கும் நிலாவைப் பார்த்தவன், “ஹே நிலா…” எனக் கத்தியபடி அவளை நோக்கி சென்றான் ஆரண்யன். 

      ஆரண்யன் எதிரே இருந்து அழைத்தது கூட உணராமல் தன்னுள்ளே மூழ்கிப் போய் இருந்தாள் வெண்ணிலா.

       அவள் அருகே வந்தும் தன்னை கவனிக்காது நின்றிருந்தவளைக் கண்டு புன்னகையுடன் நிலாவின் காதோரத்தில் விளையாட்டாக கத்தினான் ஆரண்யன். திடீரென மிக அருகாமையில் ஏற்பட்ட சத்தத்தில் பயந்து அருகே பார்த்தவள், ஆரண்யனைக் கண்டு, “ஹே லூசு… பயந்துட்டேன்…” என ஆரண்யனின் தோளில் தட்டினாள் வெண்ணிலா. 

      “அது என்ன நா கூப்பிடுறது கூட தெரியாம அப்பிடி ஒரு சிந்தனை?” ஆரண்யன். 

      “சும்மா தான்… சரி நீ என்ன இங்க? அதுவும் நடந்து வந்து இருக்க?” வெண்ணிலா. 

      “ஏன்? நா நடந்து வரக் கூடாதா?” ஆரண்யன். 

      “பெரிய பணக்கார வீட்டுப் பையன் நடந்து வரலாமா? ” என நக்கலாக கேட்டாள் வெண்ணிலா. 

     “நிலா… ப்ளீஸ்… பழசெல்லாம் மறந்துடேன்…” என வருத்தத்தை அப்பட்டமாக முகத்தில் காட்டினான் ஆரண்யன். 

      “சரி சரி உடனே ப்யூஸ் போன பல்ப் மாதிரி ஆகாத. என்னய தேடி இவ்ளோ தூரம் வந்து இருக்க? என்ன விசயம்?” வெண்ணிலா. 

      “நா ஒன்னும் உன்னய தேடி வரல. ஆபீஸ் ல ஃபோர் அடிச்சுச்சு. அப்பிடியே சும்மா ஒரு வாக் போகலாம் னு வந்தேன். பாத்தா தனியா நின்னுட்டு இருந்த. அதான் வந்தேன்… ” ஆரண்யன். 

      “வீட்டுக்கு போக நின்னுட்டு இருக்கேன். பஸ் இன்னும் வரல…” வெண்ணிலா. 

      “வீட்டுக்கா? நா வேணுனா ட்ராப் பண்ணவா?” ஆரண்யன். 

      “எதுல?” வெண்ணிலா. 

      “இதோ… என் முதுகுல தான். அப்பிடியே உப்பு மூட்டை தூக்கிட்டுப் போறேன்…” ஆரண்யன். 

       “என்ன கிண்டல் பண்றியா?” என ஆரண்யனை முறைத்தாள் வெண்ணிலா. 

      “ச்சே ச்சே… சீரியஸா தான் சொல்றேன்… கமான் வா… காலேஜ் டைம் ல நா உன்னய தூக்குனதே இல்லையா?” என சிரிப்புடன் வெண்ணிலாவை இழுத்தான் ஆரண்யன். 

     “கைய விடு மெண்டல். இதோ பஸ் வந்துருச்சு. நா கெளம்புறேன். அப்புறம் பாக்கலாம்…” என வெண்ணிலா கூறி முடிக்கவும் பேருந்து வந்து நிற்கவும் சரியாக இருந்தது. ஆரண்யனுக்கு கை அசைத்து விட்டு பேருந்தில் ஏறினாள் வெண்ணிலா. அவள் செல்வதை சில நொடிகள் வேடிக்கைப் பார்த்தவன் பிறகு வெண்ணிலா ஏறிய அதே பேருந்தில் ஏறி வெண்ணிலாவின் அருகிலேயே அமர்ந்தான் ஆரண்யன். 

      “ஹேய்… நீ எங்க வர்ற?” என அதிர்ச்சியுடன் கேட்டாள் வெண்ணிலா. 

     “உன் வீட்டுக்குத் தான் வர்றேன். டிக்கெட் எடுக்க காசு இல்ல. எனக்கும் சேத்து டிக்கெட் எடுத்துரு…” எனக் கூறி விட்டு பேருந்தில் உள்ளவர்களை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தான் ஆரண்யன். 

      “இப்ப நீ எதுக்கு என் கூட வர்ற? ஒழுங்கா பஸ்ஸ விட்டு கீழ இறங்கு…” என வெண்ணிலா அடிக்குரலில் சீற, பேருந்து புறப்பட தொடங்கியது. 

     “பஸ் எடுத்துட்டாங்க நிலா… நா என்ன பண்ணட்டும்?” என அப்பாவியாக வினவினான் ஆரண்யன். 

     “மண்ணாங்கட்டி…” எனக் கோவமாக கூறியவள் முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டாள் வெண்ணிலா. 

     “அப்புறம் நிலா… உன் கிட்ட தான் வண்டி இருக்குமே, அது எங்க? சர்வீஸ்க்கு விட்டு இருக்கியா?” என மெதுவாக அவளிடம் பேச்சை ஆரம்பித்தான் ஆரண்யன். 

      “வண்டிய நா எடுக்குறது இல்ல…” என முகத்தை திருப்பாமலே கூறினாள் வெண்ணிலா. 

      “ஏன் நீ எடுக்குறது இல்ல?” ஆரண்யன். 

      “அது உனக்கு தேவையில்லாத விசயம்…” வெண்ணிலா. 

      “அப்பிடியா? அத நீ என்னய பாத்து சொல்லு நிலா…” என வெண்ணிலாவின் முகத்தை பிடித்து தன் புறம் திருப்பினான் ஆரண்யன். 

      “ப்ச்… கைய எடு…” என அவனின் கையை தட்டி விட்டு மீண்டும் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள் வெண்ணிலா. 

       “ஓஓஓ… மேடம் என் மொகத்த கூட பாத்து பேச மாட்டீங்களோ? இப்ப எப்பிடி உன்னய பேச வைக்கிறேன் னு பாரு… ” என்றவாறு அவளது கையில் பலமாக கிள்ளினான் ஆரண்யன். 

       அவன் கிள்ளியது வலிக்க, ஆரண்யனை திரும்பி முறைத்தாள் வெண்ணிலா. “என்ன? என்ன மொறைக்கிற? என் கிட்ட நீ பேச மாட்டியோ…” என்றான் ஆரண்யன். 

      “நா எங்க பேச மாட்டேன் னு சொன்னேன்? பேசிட்டு தான இருக்கேன்…” வெண்ணிலா. 

      “என் மொகத்த பாத்து ஏன் பேச மாட்டேன் ங்குற னு தான் கேக்குறேன்…” ஆரண்யன். 

      “புடிக்கல…” வெண்ணிலா. 

      “இப்பிடி பட்டுனு பதில் சொன்னா எப்பிடி? சரி… உன் காலுல வேணுனா விழட்டுமா?” ஆரண்யன். 

      “விழு டா…” எனக் கோபத்துடன் கீழே பார்த்து தன் காலை காண்பித்தாள் வெண்ணிலா. 

       “விழ மாட்டேன் னு நெனச்சியா?” என சற்றும் யோசிக்காமல் வெண்ணிலாவின் காலைப் பற்றினான் ஆரண்யன். “என்னய தயவு செஞ்சு மன்னிச்சுரு நிலா… நா உன் கிட்ட சொல்லாம வெளிநாடு போனது தப்புத்தான்… மன்னிச்சுடேன்…” எனக் கெஞ்சினான் ஆரண்யன். 

      “சரி பொழச்சு போ…” வெண்ணிலா. 

      “இன்னும் என்ன மொகத்த திருப்பிட்டு இருக்க? வேணுனா ரெண்டு அடி கூட அடிச்சுக்க…” என ஆரண்யன் கூறி முடிக்கும் முன்பே அவன் முதுகில் பல அடிகள் விழத் தொடங்கியது. 

       “படிக்கிறப்ப என்ன சொன்ன? பிஸினஸ் விசயமா நா எங்க இருந்தாலும் வாரத்துக்கு ஒரு தடவ கண்டிப்பா உனக்கு கால் பண்ணி பேசுவேன். அப்பிடி இப்பிடி நெறய டையலாக் விட்டுயே… எங்க இருக்க என்ன பண்ணுற னு ஒரு வார்த்தை கூட சொல்லாம விட்டுட்ட ல… இதுல நம்பரையும் ஸார் மாத்திட்டீங்க… இப்ப திடீருனு நிலா னு வந்தா நாங்க உடனே பேசிடனுமா? ” என பேசியபடியே ஆரண்யனை நன்றாக அடித்தாள் வெண்ணிலா. 

      “ஹேய்… ஸாரி ஸாரி… வலிக்குது. போதும் பஸ்ல எல்லாரும் பாக்குறாங்க நிலா… ” என வலி தாங்க முடியாமல் கத்தினான் ஆரண்யன். 

       “வலிக்கட்டும் வலிக்கட்டும்… நல்லா வலிக்கட்டும்…”என தொடர்ந்து அடித்தபடியே சிரித்தாள் வெண்ணிலா. 

      “சரி அடிச்சுக்க… உனக்கு வேணும் ங்கிற அளவு நல்லா அடிச்சுக்க…” எனப் புன்னகையுடன் அமைதியானான் ஆரண்யன். 

      ஆரண்யனை தொடர்ந்து அடித்தவள், சில நொடிகளில் மூச்சு வாங்க சிரிப்புடன் அமைதியானாள் வெண்ணிலா. 

       “என்ன இப்ப கோபம் போயிருச்சா நிலாக் குட்டிக்கு?” என மகிழ்ச்சியுடன் வெண்ணிலாவின் தோளை இடித்தான் ஆரண்யன். 

       “சரி நீ எதுக்கு பாரின் போன? ” வெண்ணிலா. 

        ஒரு நொடி தடுமாறியவன் பின், “ஒரு சின்ன பிஸினஸ் டீல் முடிக்கப் போனேன். அப்புறம் அங்கேயே இருந்து பிஸினஸ் கத்துட்டு வந்தேன்…” ஆரண்யன். 

      “ஓஓஓ… இப்ப எல்லாம் முடிஞ்சுச்சா?” வெண்ணிலா. 

      “ஹான்… முடிஞ்சுருச்சு. சரி நீ என்ன பண்ணிட்டு இருக்க? ” ஆரண்யன் .

      “நா ஒரு நர்சரி ஸ்கூல்ல வேலை பாத்துட்டு இருக்கேன்… ” வெண்ணிலா.

      “பார்ரா… ஒரு நர்சரி பாப்பாவே நர்சரி ஸ்கூலுக்கு வேலைக்கு போகுது. பேசாம நீ என் கம்பெனிக்கு வேலைக்கு வாயேன். எனக்கு பிஏ வா. இல்ல வேணாம் என் அண்ணனுக்கு பிஏ ஆ வாயேன். ” என மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு கூறினான் ஆரண்யன். 

      “வேண்டவே வேண்டாம்… எனக்கு இந்த வேலையே ரொம்ப புடிச்சு இருக்கு… ” என அவசரமாக சிரிப்புடன் மறுத்தளித்தாள் வெண்ணிலா. 

      “ஆமா ஆமா உன்னய மாதிரி குட்டிக்கு நர்சரி ஸ்கூல் தான் ஒத்து வரும்…” எனக் கிண்டலாக சிரித்தான் ஆரண்யன். 

      “ப்ச் கிண்டல் பண்ணாத ஆரா…” என புன்னகைத்தாள் வெண்ணிலா. 

      “ஹப்பாடா… ஒருவழியா என் பேரு உன் வாயில வந்துருச்சு…” ஆரண்யன். 

       “ம்ம்… வீடும் வந்துருச்சு இறங்கு…” எனக் கூறியபடி இருக்கையில் இருந்து எழுந்தாள் வெண்ணிலா. அவள் பின்னேயே இறங்கினான் ஆரண்யன்.

       “காலேஜ் படிக்கிறப்ப கூட என்னய உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போனதில்ல ல நீ? இப்ப கூட நானா தான் உன் பின்னாடி பஸ் ஏறி வந்தேன். இல்லனா நீ கூப்பிட்டே இருக்க மாட்ட தான?” ஆரண்யன். 

       “அதான் நாளைக்கு வீட்டுக்கு வா னு தான சொல்லிட்டு வந்தேன்… “என தன் வீட்டை நோக்கி நடந்தபடி கூறினாள் வெண்ணிலா. 

       “அத நீ என் அண்ணன தான அழைக்க வந்த… நாங்கலாம் கொசுறு தான? ” என அவளுடன் நடந்தபடி கேட்டான் ஆரண்யன். 

      “அவரு தான் எனக்கு கரக்ட் டைம்க்கு ஹெல்ப் பண்ணாரு. அதான் அப்பா அவர வீட்டுக்கு கூப்பிட்டு வர சொன்னாரு. உன்னய பத்தி அப்பாக்கு தெரியாது ஆரா. அவர் கிட்ட உன் அண்ணன என் காலேஜ் சீனியர் னு சொல்லி இருக்கேன். அவரோட தம்பியும் நானும் ஒன்னா படிச்சோம் னு சொல்ல ல…” வெண்ணிலா. 

      “ஓஓ… இப்ப பாக்க தான போறேன். நானே கேட்டு சண்டை போடுறேன் அவர் கிட்ட….”ஆரண்யன். 

      “சும்மா இரு ஆரா…” என சிரிப்புடன் தன்னிடம் உள்ள சாவியால் வீட்டைத் திறந்தாள் வெண்ணிலா. 

      “ஹேய் வீடு ரொம்ப அழகா இருக்கு நிலா…” என வீட்டை சுற்றி பார்த்தபடி கூறினான் ஆரண்யன். 

       “வெளில பாத்தது போதும் உள்ள வா…” என அவனை உள்ளே அழைத்தபடி வீட்டின் உள்ளே தன் தந்தையை தேடினாள் வெண்ணிலா. 

       “அப்பா… ப்பா…” எனக் குரல் கொடுத்தபடி, “உக்காரு ஆரா… இதோ வர்றேன்…” என்றபடி தந்தையின் அறையை நோக்கி சென்றாள் வெண்ணிலா. 

      “அப்பா எங்காவது வெளில போய் இருப்பாரு நிலா…” ஆரண்யன்.

       “இல்ல… வீடு உள் தாப்பாள் தான போட்டு இருந்துச்சு…” எனக் கூறியபடி, தந்தையின் அறைக் கதவைத் திறந்தவள், “ப்பா…” என பெருங்குரலெடுத்து கத்தினாள் வெண்ணிலா. 

      அவளின் கத்தலைக் கேட்டு ஆரண்யன் ஓடி வந்து பார்க்கையில் தரையில் மூச்சு பேச்சின்றி தரையில் விழுந்து கிடந்தார் சுந்தரம். “அய்யோ அப்பா… எழுந்திரிங்க ப்பா… என்னாச்சு உங்களுக்கு?” என சுந்தரத்தை தன் மடியில் போட்டுக் கொண்டு அவரின் கன்னத்தில் தட்டியபடி அழுதாள் வெண்ணிலா. 

     சட்டென உணவு மேசையில் உள்ள தண்ணீரைக் கொண்டு வந்து சுந்தரத்தின் முகத்தில் தெளித்தான் ஆரண்யன். அப்பொழுதும் எந்த மாற்றமும் இல்லாமல் போகவே, “ப்பா ப்பா என்னாச்சு ப்பா… ” என சுந்தரத்தை உலுக்கியபடி அழுதாள் வெண்ணிலா. 

       உடனே அவசர அவசரமாக  அவசர ஊர்தியை ஃபோனில் அழைத்து விட்டு, தன் அண்ணனிற்கும் அழைத்து விவரத்தைக் கூறினான் ஆரண்யன். அவன் ஃபோன் பேசச் சென்ற நிமிடங்களில் வெண்ணிலாவிற்கு திடீரென சந்தேகம் வந்து, குனிந்து சுந்தரத்தின் நெஞ்சில் காது வைத்துப் பார்த்தாள் வெண்ணிலா. அவரின் இதயத்துடிப்பு மிக மெல்லியதாக கேட்க, “அய்யோ அப்பா… என்னய விட்டு போயிறாதீங்க ப்பா…” என பலமாக அழுதாள் வெண்ணிலா. 

       அவளின் பெருங்குரல் அழுகையை கேட்டவன், “நிலா அப்பாக்கு ஒன்னுல்ல…  ஆம்புலன்ஸ் க்கு ஃபோன் பண்ணி இருக்கேன். இப்ப வந்துருவாங்க. நாம ஹாஸ்பிடல் போயிறலாம். இரு நா வெளில போய் அவங்கள கையோட கூட்டிட்டு வர்றேன்…” என அவளிடம் அவசர அவசரமாக கூறிவிட்டு வெளியே சென்றான் ஆரண்யன். 

       அவன் கூறியதைக் கேட்டவள், “ப்பா… உங்களுக்கு ஒன்னும் இல்ல. நாம இப்ப ஹாஸ்பிடல் போயிறலாம். ஒன்னும் இல்ல ப்பா…” எனத் தன் கண்ணீரைத் துடைத்தபடி சுந்தரத்திடம் பேசியவள் அப்பொழுது தான் தன் கழுத்தில் இருந்த மாங்கல்யம் வெளியில் வந்து விழுந்திருப்பதை. அதை உடனே ஆரண்யனுக்குத் தெரியாமல் தன் உடையினுள் மறைத்துக் கொண்டாள் வெண்ணிலா. 

       சில நொடிகளில் ஆம்புலன்ஸ் வந்துவிட மூவரும் மருத்துவமனையை நோக்கி விரைந்தனர். ஆரண்யனின் செல்வாக்கினால் மருத்துவமனையில் ஏற்கனவே அனைத்தும் தயாராக இருக்க , சுந்தரத்திற்கு சிகிச்சை விரைவாக நடக்கத் தொடங்கியது. 

        சுந்தரத்திற்கு சிகிச்சை நடக்க ஆரம்பித்ததும், நிலாவின் கரம் பற்றி தனியாக அழைத்துச் சென்றவன், ஏன் எதற்கு என்று கூறாமலே வெண்ணிலாவை பளாரென்று அறைந்தான் ஆரண்யன். 

                                    (நிலவு மலரும்…)

                                 -செல்லம்மாள்பாரதி 

      

    No comments yet.