அந்த பனி இரவில் மாடியில் தன் மன அழுத்தங்களை கொட்டி அழுத வெண்ணிலா, தீர்மானமாக ஒரு முடிவு எடுத்தவள் அதற்கு மேல் அங்கிருந்தால் தன் தந்தைக்கு ஏதேனும் சந்தேகம் வந்து விடும் என்றெண்ணி கண்ணீர்த் துளிகளை துடைத்துக் கொண்டு கீழிறங்கினாள் வெண்ணிலா.
அப்பொழுது யாரோ தன்னை கவனிப்பது போல் தோன்ற சட்டென திரும்பிப் பார்த்தாள் வெண்ணிலா. அவள் வீட்டிற்கு மிக அருகாமையில் தன் காரில் சாய்ந்து நின்றவாறு தன்னையே கவனித்துக் கொண்டிருந்த ஆதிரனைக் கண்டு பயம் கொள்ளலானாள் வெண்ணிலா.
“இவன் இங்க என்ன பண்றான்?” என ஒரு நொடி நின்று யோசித்தவள் பின் அவனைக் கண்டு கொள்ளாமல் விறு விறுவென்று கீழிறங்கி வீட்டிற்குள் நுழைந்தாள் வெண்ணிலா.
வீட்டிற்குள் நுழைந்த வெண்ணிலா நேராக சமையலறைக்குள் நுழைந்து பாத்திரம் கழுவி அறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். பாத்திரம் உருளும் சத்தம் கேட்டு உறங்கிய சுந்தரம் எழுந்து வந்து சமையலறையை எட்டிப் பார்த்தார்.
“என்ன நிலா… நீ இன்னும் தூங்கலயா?” சுந்தரம்.
“இல்ல ப்பா… தூக்கம் வரல. அதான் பாத்திரம் கழுவி வச்சுறலாம் னு வந்தேன். நீங்க போய் தூங்குங்க…” என பதிலளித்தபடியே பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தாள் வெண்ணிலா.
திரும்பி அவரைப் பார்த்தால் எங்கே அழுது விடுவோமோ என பயந்தே திரும்பாமலேயே வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள் வெண்ணிலா.
“ஏம்மா என்னயப் பாத்து பேச மாட்டேன்ங்குற? அப்பா மேல எதுவும் கோபமா?” என பாவமாக வினவினார் சுந்தரம்.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல ப்பா… நீங்க போய் தூங்குங்க…” என விழிகளில் ததும்பிய கண்ணீரை அவரிடம் காட்டிவிடாமல் மறைத்தபடி வேலையை தொடர்ந்தாள் வெண்ணிலா.
“அப்புறம் ஏன்டா அம்மாடி என்னய பாக்க மாட்டேன் ங்குற?” எனக் குரல் கரகரக்க கேட்டார் சுந்தரம்.
“இப்ப என்ன ப்பா உங்களுக்கு?” என சிறிய கேவலுடன் திரும்பி சுந்தரத்தைப் பார்த்தாள் வெண்ணிலா.
அவளது கண்களில் கண்ணீரைக் கண்ட சிதம்பரம் பதறி துடித்தார். “அம்மாடி நிலா… அழுகுறியா? ஏன்டா அழுகுற?” என அவரின் கண்களும் சேர்ந்து கலங்கியது.
“நா ஏன் ப்பா அழப் போறேன்? நா அழல ப்பா…” என தன்னை மீறி வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டபடி கூறினாள் வெண்ணிலா.
“என்னால தான டா உனக்கு இந்த கண்ணீரு… என்னால தான போலீஸ் ஸ்டேஷனக்கும் வீட்டுக்குமா அலைஞ்சே? நா பெரிய பாவி ஆகிட்டேன் மா… ஒரு வயசுப் புள்ளய போக கூடாத இடத்துக்கெல்லாம் போக வச்சுட்டேனே மா… எனக்குலாம் மன்னிப்பே கிடையாது… உன் அம்மா என்னய மன்னிக்கவே மாட்டா…” என தலையில் அடித்துக் கொண்டு மடிந்து கீழே அமர்ந்து அழ ஆரம்பித்தார் சுந்தரம்.
“அய்யோ அப்பா… நீங்க ஏன் ப்பா அழறீங்க? நா அப்பிடியெல்லாம் எதுவுமே நினைக்கல ப்பா…” என ஓடிச் சென்று சுந்தரத்தை தேற்றினாள் வெண்ணிலா.
“இதுவரைக்கும் என் பொண்ணோட கண்ணுல கண்ணீர பாத்தது இல்லயே நா… என்னால தான எதையும் கண் கலங்காம செஞ்சு முடிக்கிறவ இன்னக்கி என் முகத்த கூட பாக்க புடிக்காம திரும்பி நின்னுக்குறா. இத நா என்ன னு நெனைக்க?” என வழிந்த கண்ணீருடன் வெண்ணிலாவைப் பார்த்துக் கேட்டார் சுந்தரம்.
“நீங்க நினைக்கிற மாதிரி எதுவுமே இல்லை ப்பா. மொதல்ல நீங்க அழறத நிறுத்துங்க. நீங்க அழாதீங்க… நீங்க அழுதா எனக்கும் அழுகை வரும். அப்புறம் நானும் அழுவேன்…” வெண்ணிலா.
“இல்ல ம்மா… நா அழல ல…” என தன் கண்ணீரை துடைத்தபடி கூறினார் சுந்தரம்.
“சரி… மொதல்ல எந்திரிங்க. எந்திரிச்சு வாங்க…” என அவரை எழுப்பி தன் கை வளைவில் அழைத்துச் சென்று ஹாலில் அமர வைத்தாள் வெண்ணிலா.
“நீ ஏன்டா தூங்காம அழுதுட்டு இருந்த?” சுந்தரம்.
“கொஞ்ச நாளா நீங்க இல்லாம ரொம்ப கஷ்ட்டப்பட்டுட்டேன் ப்பா. நீங்க இல்லாம என்னால இருக்க முடியாது ப்பா. தனியா இந்த வீட்ல… நேத்தெல்லாம் தனியா இருக்க எப்பிடி தெரியுமா பயந்து வந்துச்சு?” என சிறு பிள்ளையாக மாறி சுந்தரத்தின் மடியில் படுத்து அழுதாள் வெண்ணிலா.
“அச்சோ… என் பொண்ணு எதுக்கும் பயப்பட மாட்டா னு ல நெனச்சேன். அவ இப்பிடி ஒரு பயந்தாங்கொள்ளியா?” என தன் துக்கத்தை காட்டாமல் விளையாட்டாக பேசினார் சுந்தரம்.
“இல்லையே… நா தைரியசாலியாக்கும்… ப்பா… இப்பிடியே கொஞ்ச நேரம் படுத்துக்கட்டுமா?” என சிறுமியாய் வினவினாள் வெண்ணிலா.
“சரி டா… எல்லாமே சரி ஆகிருச்சு…” என அவளை தட்டிக் கொடுத்தார் சுந்தரம்.
“இன்னும் எதுவுமே சரி ஆகலயே ப்பா…” என நினைத்தவாறு கண் மூடினாள் வெண்ணிலா.
“ஏன்டா மா… அந்த தம்பி ரொம்ப நல்ல தம்பி ல… தம்பி இல்லனா நா இன்னக்கி இப்பிடி நம்ம வீட்ல உக்காத்துட்டு இருக்க மாட்டேன் ல…” சுந்தரம்.
“ம்ம்… ஆமா…” என வெறுப்புடன் கூறினாள் வெண்ணிலா.
“நெசமா அந்த தம்பிய உனக்கு முன்னாடியே தெரியுமா நிலா?” சுந்தரம்.
“ஏன் ப்பா இப்பிடி சந்தேகமா கேக்குறீங்க?” வெண்ணிலா.
“இல்ல… அந்த பையன் உன்னோட காலேஜ் சீனியர் னு சொன்ன… நீ கவர்ன்மென்ட் காலேஜ் ல படிச்ச…” சுந்தரம்.
“ஆமா ப்பா… அதே காலேஜ் ல தான் அவரும் படிச்சாரு…” வெண்ணிலா.
“இல்ல அவரு எவ்ளோ பெரிய பணக்காரன் னு உனக்கே நல்லாத் தெரியும். அப்பிடி இருக்குறப்ப எப்பிடி அவரு வந்து கவர்ன்மென்ட் காலேஜ் ல படிச்சு இருப்பாரு?” சுந்தரம்.
“நீங்க கேக்குறத பாத்தா நா ஏதோ பொய் சொல்ற மாதிரி ல இருக்கு… ” என தந்தையின் மடியில் இருந்து எழுந்து அமர்ந்தாள் வெண்ணிலா.
“நா அப்பிடி சொல்ல ல மா… உடனே கோவிச்சுக்க வேண்டியது…” என வெண்ணிலாவை மீண்டும் மடியில் படுக்க வைத்துக் கொண்டார் சுந்தரம்.
“அப்புறம் வேற எப்பிடி சொல்றீங்க? நீங்க சொல்றது நா பொய் சொல்றேன் னு சந்தேகப்படுற மாதிரி தான் இருக்குது…” வெண்ணிலா.
“அப்பிடி இல்ல மா… அவ்ளோ பெரிய பணக்காரரு எதுக்கு வந்து கவர்ன்மென்ட் காலேஜ் ல படிச்சு இருப்பாரு? அதான் கேட்டேன்… ” சுந்தரம்.
“அவர நேர்ல பாக்குறப்ப நீங்களே இந்த முக்கியமான சந்தேகத்த கேட்டுக்கங்க…” என ஆதிரனின் மேல் உள்ள வெறுப்பில் கூறினாள் வெண்ணிலா.
“சரி அத விடு… இனி நீ எதுக்கும் அழக் கூடாது… ஏதோ கெட்ட காலம் னு நெனச்சு அத மறந்துறனும். சரியா? சும்மா சும்மா அதையே நெனச்சு ராத்திரில மொட்ட மாடிக்கு தனியா போய் நின்னு அழுக கூடாது…” சுந்தரம்.
அதைக் கேட்டு திடுக்கிட்ட வெண்ணிலா, “ப்பா…” என எழுந்தாள். “ஒருவேளை எல்லாத்தையும் பாத்து கேட்டு இருப்பாரோ…” என்ற பயத்துடன் சுந்தரத்தைப் பார்த்தாள் வெண்ணிலா.
“என்னம்மா அப்பிடி பாக்குற? நீ மாடி ல போய் அழுதது எனக்கு எப்பிடி தெரியும் னா? நீ மேல அழுத சத்தம் கீழ வரைக்கும் கேட்டுச்சு. அப்பவே மேல வரலாம் னு தான் நெனச்சேன். ஆனா அழுது மனசுல உள்ள பாரத்த குறைச்சுட்டு வரட்டும் னு போய்ட்டேன்…” என பாசமாக வெண்ணிலாவின் கரத்தை எடுத்து தன் கரத்தினுள் வைத்துக் கொண்டார் சுந்தரம்.
“நா அழுத சத்தம் மட்டும் தான் கேட்டுச்சா? இல்ல நா கத்துனது எல்லாம் கேட்டுச்சா னு தெரியலயே…” என்ற பீதியுடனே சுந்தரத்தைப் பார்த்தாள் வெண்ணிலா.
“ரொம்ப கேவி கேவி அழுதியே மா… இப்ப உன் மனக் கஷ்ட்டம் கொஞ்சமாச்சும் குறைஞ்சுருச்சா டா? இல்லனா அப்பா மடியில படுத்து ஒரே மூச்சா அழுது தீத்துருமா… எனக்குத் தெரியும்… பணம் கேட்டு பல இடத்துக்கு போய் இருப்ப… அங்க எல்லாரும் ஆதிரன் தம்பிய மாதிரி நல்லவங்களா இருந்து இருக்க மாட்டாங்க. கேட்க கூடாத பேச்செல்லாம் நீ கேட்டு இருப்ப… அதான் இப்ப உன் மனச உறுத்திட்டு இருக்கும்…” என சிறிது இடைவெளி விட்டார் சுந்தரம்.
“ஹப்பாடா… அப்பாக்கு நா என்ன கத்தி அழுதேன் னு கேக்கல… எதேய் அவன் நல்லவனா? அவனால தான் ப்பா இப்ப உங்க மக வாழ்க்கை அந்தரத்துல தொங்கிட்டு இருக்கு…” என சுந்தரத்தின் முகத்தைப் பார்த்தவாறே நினைத்துக் கொண்டாள் வெண்ணிலா.
“என்ன மா… நா சொல்றது சரி தானே?” என வெண்ணிலாவை தோளோடு அணைத்துக் கொண்டார் சுந்தரம்.
“ம்ம் ஆமா ப்பா…” என மறுப்பேதும் கூறாமல் சுந்தரத்தின் கூற்றோடு ஒத்துப் போனாள் வெண்ணிலா.
“அதெல்லாம் மறந்துரு டா… நானும் எல்லாத்தையும் மறந்துர்றேன். நாளையில இருந்து இப்பிடி ஒரு சம்பவம் நம்ம வாழ்க்கையில நடந்ததையே மறந்துறனும். சரியா?” சுந்தரம்.
“நானும் அப்பிடித்தான் ப்பா நெனக்கிறேன்… நடந்த எல்லாத்தையும் மறந்துறனும். எதையும் நினைச்சுக் கூட பாக்க கூடாது…” என தன் உள்ளத்துக்கும் சேர்த்து ஆறுதல் கூறிக் கொண்டாள் வெண்ணிலா.
“சரி மா… கேக்கனும் னே நெனச்சுட்டு இருந்தேன்…. போலீஸ் ஸ்டேஷன் ல குடுக்க பதினஞ்சு லட்சம் பணம் அங்க கொண்டு வந்தியே அத திருப்பி அந்த தம்பிக்கிட்டயே குடுத்திட்டியா? அதான் அவங்க அந்த திருடனையே புடிச்சுட்டாங்கள்ல… அப்புறம் அந்த பணம் நமக்கு எதுக்கு?” சுந்தரம்.
“அய்யோ ஆமா ப்பா… அத சுத்தமா மறந்துட்டேன்… நா ஏதேதோ நெனப்புல அந்த பணத்த திருப்பி குடுக்குறத மறந்தே போய்ட்டேன் ப்பா…” என நெற்றியில் கை வைத்து தேய்த்தாள் வெண்ணிலா.
“ப்ச்… என்னமா இப்பிடி இருக்க? அது அவங்களோட பணம் தான? இப்பிடி அடுத்தவங்களோட பணத்த நாம வச்சுக்க கூடாது மா. ஏற்கனவே அந்த பணத்தால தான் இவ்ளோ பெரிய பிரச்சனை ஆகிருச்சு…” சுந்தரம்.
“சரி ப்பா… காலையில மொத வேலையா போய் அந்த பணத்த குடுத்துட்டு வந்துடுறேன்…” வெண்ணிலா.
“சரி மா… அப்பிடியே அந்த தம்பிய ஒரு நாள் சாப்பிட வீட்டுக்கு வாங்க னு சொல்லிட்டு வா…” சுந்தரம்.
“ஏன் ப்பா?” வெண்ணிலா.
“என்ன மா இப்பிடி டக்கு னு ஏன்னு கேக்குற? அந்த தம்பி எதையும் எதிர் பாக்காம பழகுன பழக்கத்துக்காக நமக்கு இவ்ளோ பெரிய உதவிய செஞ்சு இருக்காரு. நீ எத்தன பேரு கிட்ட போய் உதவி கேட்டு இருப்ப? அவங்க எல்லாருமா நமக்கு உதவி செஞ்சாங்க? அவ்ளோ பெரிய ஆளா இருந்தும் இந்த தம்பி தான நமக்காக ஓடி வந்து முன்னாடி நின்னு உதவி செஞ்சுச்சு… அந்த தம்பி நெனச்சு இருந்தா யார வேணுனாலும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி இருக்கலாம்… ஆனா நமக்காக அந்த தம்பியே முன்னாடி வந்து நின்னு எல்லாம் செஞ்சு குடுத்துச்சு. நமக்காக எவ்ளோ பெரிய விசயம் செஞ்சு இருக்கு தம்பி? அந்த தம்பிய சாப்பிட வீட்டுக்கு அழைக்கிறதுல என்ன தப்பு இருக்கு?” சுந்தரம்.
“நா ஏன் னு ஒரு வார்த்தை தான கேட்டேன்? அதுக்கு ஏன் இவ்ளோ நீளமா பேசுறீங்க?” என வாயில் விரல் வைத்தாள் வெண்ணிலா.
“அதுக்கு இல்ல மா… நமக்கு செஞ்ச உதவிய என்னைக்கும் மறந்துறக் கூடாது… அந்த தம்பி இல்லனா நம்ம நிலைமைய யோசிச்சு பாரு…”சுந்தரம்.
“அவன் செஞ்ச வேலை எனக்குத் தான தெரியும்?” என நினைத்தபடி, “சரி ப்பா… சரி ப்பா… வீட்டுக்கு சாப்பிட அழைக்கிறேன்… போதுமா?” என்றாள் வெண்ணிலா.
“அவ்ளோ தான் டா… சரி நீ அழாம போய்த் தூங்கு… நா கொஞ்ச நேரம் டிவி பாத்துட்டு போய் தூங்குறேன்…” சுந்தரம்.
“பரவாயில்லை ப்பா நானும் இருக்கேன். ரெண்டு பேரும் சேந்தே டிவி பாப்போம்…” என மேலும் வாகாக சுந்தரத்தின் தோளோடு சாய்ந்துக் கொண்டாள் வெண்ணிலா.
“சரி சரி மா… அப்ப நல்ல படமா போடு… ரெண்டு பேரும் சேந்து படம் பாத்து ரொம்ப நாள் ஆச்சு…” சுந்தரம்.
“சரி ப்பா…” என மகிழ்ச்சியுடன் வெண்ணிலா சர்வர் சுந்தரம் படத்தை போட … இருவரும் தங்களின் கடந்த காலங்களில் தாங்கள் அனுபவித்த துன்பங்களை மறந்து திரைப்படத்தில் ஒன்றினர்.
திரைப்படத்தில் தங்களை மறந்து இருவரும் ஒன்றி போய்விட… அப்பொழுது திடீரென வெண்ணிலாவின் ஃபோன் மணி சத்தம் எழுப்ப… “யாரும்மா இந்த நேரத்துல?” என்றபடி தன்னருகில் இருந்த வெண்ணிலாவின் அலைபேசியை கையில் எடுத்தார் சுந்தரம்.
“ப்ச்… யாரா இருந்தா என்னப்பா? அத அப்பிடி ஓரமா வச்சுட்டு படத்த பாருங்க…” என திரைப்படத்தில் இருந்து கண்ணை எடுக்காமல் தந்தையின் தோளில் சாய்ந்திருந்தவாறே கூறினாள் வெண்ணிலா.
சுந்தரமும் எதுவும் கூறாமல் வெண்ணிலாவின் ஃபோனை அருகில் உள்ள மேசையில் வைத்து விட்டு படத்தை பார்க்கத் தொடங்கினார்.
மெஸேஜ் அனுப்பிய ஆதிரன் பதில் எதுவும் வராமல் போகவே, “ஒருவேளை தூங்கி இருப்பாளோ?” என யோசித்தவாறு ஃபோனைப் பார்த்தான். அதில் அவன் அனுப்பிய மெஸேஜ்ஜில் டபுள் டிக் ஆகி இருக்க… அதைப் பார்த்தவன், “என்ன டபுள் டிக் காமிக்குது? அப்ப தூங்கல போலயே… மறுபடியும் மெஸேஜ் பண்ணுவோம்…” என நினைத்தவாறு மீண்டும், “ஓய் பொண்டாட்டி… என்ன பண்ற?” என அனுப்பினான் ஆதிரன்.
மெஸேஜ் வந்ததற்கு அறிகுறியாக மீண்டும் ஒலி எழுப்ப… சுந்தரம் ஃபோனை எடுத்தார். “அம்மாடி… திரும்ப ஏதோ மெஸேஜ் வந்து இருக்கு போல…” என்றார் சுந்தரம்.
“ப்ச் அத அந்த பக்கம் போடுங்க ப்பா…” என சலிப்பாக கூறினாள் வெண்ணிலா.
“ஏதாவது முக்கியமான விசயமா இருக்கப் போகுது நிலா…” சுந்தரம்.
“எனக்கு யாருப்பா இந்த நேரத்துல மெஸேஜ் பண்ண போறாங்க? நீங்களே எடுத்து யாரு னு பாருங்க…” வெண்ணிலா.
“ப்ச் என்ன மா நீ?” என்றவாறு ஃபோனை ஆன் பண்ண சென்றார் சுந்தரம்.
“ஒருவேளை அவனா இருக்குமோ?” என்ற சிந்தனை திடீரென வெண்ணிலாவின் மண்டையில் மணி அடிக்க… “ஒருவேளை அவனா இருந்தா அவன் ஏதாவது உலறி வச்சு இருப்பானே…” என மண்டையில் எச்சரிக்கை மணி அடிக்க உடனே தந்தையின் கையில் இருந்து தனது ஃபோனை வாங்கினாள்.
“இல்ல ப்பா நானே பாத்துக்கிறேன்… உங்களுக்கு ஏன் வீண் சிரமம்?” என்றவாறு சுந்தரத்தைப் பார்த்தாள் வெண்ணிலா.
“அதத்தான நானும் சொன்னேன்… ” என சாதாரணமாக கூறிவிட்டு திரைப்படம் பார்ப்பதை தொடர்ந்தார் சுந்தரம்.
“ஹப்பாடா…” என நிம்மதியாக மூச்சு விட்டவள் தந்தை கவனத்தை கவராமல் ஃபோனை எடுத்து மெஸேஜைப் பார்த்தாள் வெண்ணிலா. பார்த்தவளின் நிம்மதியான மூச்சு ஒரு நொடி நின்று விட்டது. அதன் விளைவாக அவள் உடல் அதிர்வுக்கு உள்ளாக… அதை உணர்ந்த சுந்தரம், “என்னாச்சு டா…” என்றார்.
“ஆங்… ஒன்னுல்ல ப்பா… தூக்கம் வந்துருச்சு…” என சமாளித்தாள் வெண்ணிலா.
“சரி மா… ரொம்ப லேட் ஆகிருச்சு… நீ போய் தூங்கு. டிவிய ஆஃப் பண்ணிட்டு நானும் போய் தூங்குறேன்…” என எழுந்தார் சுந்தரம்.
மெஸேஜ் அனுப்பி விட்டு ஃபோனையே பார்த்திருந்த ஆதிரனுக்கு வெண்ணிலா மெஸேஜை பார்த்து விட்டதன் அறிகுறியாக அவன் அனுப்பிய மெஸேஜ் ப்ளூ டிக்கில் மாறியதைப் பார்த்தவன், “மெஸேஜை பாத்தும் எந்த ரிப்ளை பண்ணல… இவளுக்கு அவ்ளோ திமிர் ஆகிருச்சா…” என்றக் கோவத்துடன் நேரத்தையும் பார்க்காமல் வெண்ணிலாவிற்கு அழைப்பு விடுத்தான் ஆதிரன்.
மெஸேஜை பார்த்த உடனே வெண்ணிலா ஃபோனை சைலன்ட்டில் போட்டு விட… அழைப்பு வந்து கொண்டிருப்பதற்கு அறிகுறியாக திரை ஒளிர்ந்து மிளிர்ந்தது. அதை கவனித்த வெண்ணிலா ஃபோனை மறைத்தபடி, “குட் நைட் ப்பா…” என மெதுவாக தந்தையிடம் இருந்து தப்பித்து தனது அறைக்குள் நுழைந்தாள் வெண்ணிலா.
சுந்தரமும், “குட் நைட் மா…” என்றவாறு தனது அறைக்கு உறங்க சென்றார். அவர் உள்ளே சென்று அறை கதவை மூடியதை உறுதிபடுத்திக் கொண்ட வெண்ணிலா ஃபோனைப் பார்த்தாள். அதற்குள் நான்கு முறை அழைத்து இருந்தான் ஆதிரன். அறைக் கதவை நன்றாக மூடியவள், ஃபோனை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் வெண்ணிலா. ஐந்து முறை விடாமல் அழைப்பு விடுத்தவன் உக்கிரமாகி, “இப்ப நீ ஃபோன எடுக்கலனா நேர்ல வந்துருவேன்…” என மெஸேஜ் அனுப்ப ,”இவன் வந்தாலும் வந்துருவான்…” என பதறிப் போய் அடுத்த நொடியே அழைப்பை ஏற்றாள் வெண்ணிலா.
“என்னடி உன் மனசுல நெனச்சுட்டு இருக்க? மெஸேஜ் அனுப்புனா பாத்துட்டு பேசாம இருக்க… ஃபோன் பண்ணுனா எடுக்க மாட்டேன்ங்குற?” எனக் காட்டுக் கத்தலாக கத்தினான் ஆதிரன்.
“ஸார் ஸார்… ரிலாக்ஸ்… அக்ரிமென்ட் படி உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்புறம் எதுக்கு அர்த்த ராத்திரி னு கூட பாக்காம ஒரு பொண்ணுக்கு ஃபோன் பண்ணிட்டு இருக்கீங்க?” என மெல்லிய குரலில் கத்தினாள் வெண்ணிலா.
அப்பொழுது தான் நேரத்தைப் பார்த்தான் ஆதிரன், கடிகாரம் பன்னிரண்டு முப்பது எனக் காட்ட… தன் கிறுக்குத் தனத்தை உணர்ந்து பின் மண்டையில் மெதுவாக அடித்துக் கொண்டான் ஆதிரன். இருந்தாலும் அதை அவளிடம் ஒத்துக்கொள்ள மனம் வராமல் ,”பொண்டாட்டிக்கு புருஷன் எத்தனை மணிக்கு வேணுனா ஃபோன் பண்ணலாம். எத்தனை மணியா இருந்தாலும் என் பொண்டாட்டி நீ அத எடுக்கனும்…” என கடுங்குரலில் கூறினான் ஆதிரன்.
“ஸார்… நீங்க என்ன லூசா? அக்ரிமென்ட் படி…” என மீண்டும் வெண்ணிலா கூறப் போகையில், “அக்ரிமென்ட் படி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை… அதானே?” எனக் கூறி முடித்தான் ஆதிரன்.
“அதான் நீங்க தெளிவா சொல்றீங்களே ஸார்… அப்புறம் எதுக்கு இந்த நேரத்துல எனக்கு ஃபோன் பண்ணிட்டு இருக்கீங்க? அதுவும் மெஸேஜ் ல என்னமோ அசிங்கமா உலறி வேற வச்சு இருக்கீங்க…” வெண்ணிலா.
“ஏய்… என்னடி அசிங்கம்? பொண்டாட்டிய பொண்டாட்டி னு தான கூப்பிட முடியும்… ” என லேசாக சிரித்தான் ஆதிரன்.
“இது உங்க வொய்ப் க்கு தெரிஞ்சா அவங்க மனசு எவ்ளோ கஷ்ட்டபடும்? ஏன் ஸார் ரெண்டு பொண்ணோட வாழ்க்கைய கெடுக்குறீங்க? ஏற்கனவே ஒரு பொண்ணு கழுத்துல தாலி கட்டி குடும்பம் நடத்திக்கிட்டு இன்னொரு பொண்ணு கழுத்துல தாலி கட்டி பெரிய பாவம் பண்ணிட்டு இருக்கீங்க ஸார்…” வெண்ணிலா.
“அட யார்ரா இவ… சரியான தத்தியா இருக்கா…” என வெண்ணிலாவை நினைத்து புன்னகைத்தபடி, “சரிங்க பொண்டாட்டி… இனி நா அந்த பாவம் பண்ணல ங்க பொண்டாட்டி…இனி நா என் பொண்டாட்டிய மட்டும் பொண்டாட்டி னு கூப்பிடுறேங்க பொண்டாட்டி…” என வார்த்தைக்கு வார்த்தை பொண்டாட்டி என்ற வார்த்தையை அழுத்தி கூறி அவள் பிபியை எகிற வைத்துவிட்டு சிரித்தபடியே அழைப்பை துண்டித்தான் ஆதிரன்.
இந்த பக்கம் அவன் நினைத்ததை போலவே, பிபி தலைக்கு ஏற கோப மூச்சுக்களை இழுத்து விட்டபடி அமர்ந்திருந்தாள் வெண்ணிலா. “என்ன தான் நெனச்சுட்டு இருக்கான் இவன்? வீட்ல ஒரு பொண்ண குடும்பம் நடத்திக்கிட்டு இந்த நேரத்துல இன்னொரு பொண்ணு கிட்ட ஃபோன் பண்ணி உரிமையா பேசிட்டு இருக்கான்… என்னய இவன் என்ன னு நெனச்சுட்டு இருக்கான்? நாளைக்கு பணத்த குடுக்க போறப்ப நாக்க புடுங்கிக்கிற மாதிரி நல்லா நாலு கேள்வி கேட்டுட்டு வரனும்…” எனக் கோபத்துடன் நினைத்துக் கொண்டாள் வெண்ணிலா.
வெண்ணிலாவை கோபமடைய வைத்து புலம்ப வைத்த ஆதிரனோ புன்னகை மாறாமல் தலையணையை கட்டியணைத்தவாறு படுத்திருந்தான்.
“எனக்குத் தெரியும் டி… இப்ப நா பேசுனதுக்கு நாளைக்கி நீ என் கிட்ட சண்டை போட நீ வருவ னு… உன்னய ஆவலோடு எதிர்பாத்து உன் புருஷன் காத்து இருக்கேன் டி… அத்தோட பழைய பாக்கி எல்லாம் உனக்கு திருப்பி குடுக்க வேண்டியது இருக்கு… உன்னய கொஞ்ச கொஞ்சமா தான் சித்திரவதை பண்ணனும்… எத்தனை நாள் பேசியே காயப்படுத்தி என்னய தூங்க விடாம புலம்ப விட்டு இருப்ப… அதத்தான்டி இப்ப நா திருப்பி குடுக்குறேன். உன் கழுத்துல நா தாலி கட்டல… தூக்கு கயிறு கட்டி இருக்கேன். அத கொஞ்ச கொஞ்சமா நெருக்கி உன்னோட திமிரையும் உன் ஆணவத்தையும் மொத்தமா அடக்கி காட்டுறேன்… ” என தன் ஃபோனில் உள்ள வெண்ணிலாவின் போட்டோவைப் பார்த்து சூளுரைத்து விட்டு உறங்கச் சென்றான் ஆதிரன்.
“இவன் எதுக்கு என்னய இப்பிடி சித்திரவதை பண்றான்? நா பாட்டுக்கும் நா உண்டு என் வேலை உண்டு னு தான இருந்தேன். திடீருனு என் வாழ்க்கையில வந்து என்னய கொல்லாம கொன்னுட்டு இருக்கான். என்ன ஆனாலும் சரி… இவன் முன்னாடி நாம கூனி குறுகி நின்னுறவே கூடாது. கண்ணீரும் சிந்திறவே கூடாது. நாளைக்கு போறப்ப கண்டிப்பா நம்ம மனச நோகடிக்கிற மாதிரி ஏதாவது பேசுவான். அவன் என்ன தான் பேசுனாலும் அவன் முன்னாடி நா கண்ணீர் சிந்திறவே கூடாது…” என தீர்மானமாக முடிவெடுத்தபடி உறங்கச் சென்றாள் வெண்ணிலா.
(நிலவு மலரும்…)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.