அரக்கன் -07

Chellammal Bharathi | 30 Nov 2025 | Share

      வெண்ணிலாவையும் அவளது அப்பாவையும் வீட்டில் இறக்கி விட்டவன், சுந்தரத்திடம் முக்கியமான மீட்டிங் இருக்கிறது எனக் கூறியவன், நேராக தனது இல்லத்திற்கு காரை திருப்பினான் ஆதிரன். 

      “தாலி கட்டி அவள அழ வச்சு பாக்கனும் னு ஆசைப்பட்டேன். ஆனா அவ அழறத பாக்குறப்போ இங்க என்னமோ பண்ணுதே…” என இடப்பக்க நெஞ்சை தட்டிக் கொடுத்தான் ஆதிரன். 

        எங்கு பார்த்தாலும் அவளது அழுத விழிகளே தென்பட காரை வேகமாக செலுத்தி தனது பங்களாவினுள் சென்று நிறுத்தினான் ஆதிரன். 

      காரை நிறுத்தி விட்டு, “அம்மா… ம்மா…” என வெளியில் இருந்தே குரல் கொடுத்தபடி உள்ளே நுழைந்தான் ஆதிரன். 

      “இப்ப ஏன்டா பிச்சக்காரன் மாதிரியே கத்திட்டு வர்ற? ” என ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த ஆதிரனின் தாயார் சிவகாமி கேட்டார். 

        எவ்வளவு தான் பணம் இருந்தாலும் சாதாரண காட்டன் புடவை உடுத்தி சாதாரணமாக சாந்த சொரூபிணியாக அமர்ந்திருந்த அம்மாவைக் கண்டதும், “அம்மா…” என ஓடிச் சென்று அவர் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான் ஆதிரன். 

      “இப்ப என் புள்ளைக்கு என் கிட்ட என்ன காரியம் ஆகனும்?” என சிரித்தபடி ஆதிரனின் கேசத்தை கலைத்தவாறு வினவினார் சிவகாமி. 

       “வேற என்ன? பசிச்சு இருக்கும்… அம்மா னு ஓடி வந்து இருப்பான்…” எனக் கூறியவாறு ஒரு முண்டா பனியனும் கைலியும் தலையில் கட்டிய துண்டுடனும் வியர்க்க விறுவிறுக்க கையில் ஒரு ஆம்லெட்டுடன் சமையலறையில் இருந்து வெளி வந்தார் ஆதிரனின் தந்தை தி க்ரேட் பிஸினஸ்மேன் அருணாச்சலம். 

       “ஆமா ஆமா… எனக்கும் செம பசி…” என கையில் தட்டுடன் அருணாச்சலத்தின் பின்னிருந்து எட்டிப் பார்த்தான் ஆதிரனின் தம்பி ஆரண்யன்.

     ஆரண்யனைக் கண்ட ஆதிரன், “டேய் குட்டா… பாரின் ல இருந்து நீ எப்ப வந்த? என் கிட்ட சொல்லவே இல்ல…” என தாயின் மடியில் இருந்து எழுந்து கொள்ளாமல் தலையை மட்டும் உயர்த்திப் பார்த்துக் கத்தினான். 

      “நா வந்தது இருக்கட்டும் ஸார் எங்க போய்ட்டு வர்றீங்க? கல்லியாணத்துல இருந்து வர்ற மாதிரி இருக்கு…” என உணவுத் தட்டுடன் சிவகாமியின் மறுபக்கம் வந்து அமர்ந்து அவர் மேல் சாய்ந்து கொண்டான் ஆரண்யன். 

      “ஆமா… நாந்தான் கல்லியாணம் பண்ணிட்டு வர்றேன்…” என தாயின் மடியில் வசதியாக தலை வைத்து படுத்தபடி கூறி சிரித்தான் ஆதிரன். 

      “டேய் அண்ணா… சொல்லவே இல்ல பாத்தியா? என்ன திருட்டு கல்லியாணமா? அண்ணிய எங்க ஒளிச்சு வச்சுட்டு வந்து இருக்க? ” என எழுந்து ஆதிரனின் முன் வந்து நின்றான் ஆரண்யன். 

      “டேய்…ரெண்டு பேரும் என்னடா பேசுறீங்க?” என அதட்டினார் சிவகாமி. 

       “சும்மா ம்மா… உல்லுலாய்க்கு… அவன் என்னய கிண்டல் பண்றான் னு உங்களுக்கு தெரியலயா?” என தாயின் தாடையை பிடித்து ஆட்டி கொஞ்சினான் ஆதிரன். 

        “எதுவா இருந்தாலும் ஒரு வரைமுறை வேண்டாமாடா?” சிவகாமி. 

        “சரி ஸாரி பட்டு …” என தாயின் கன்னத்தைக் கிள்ளினான் ஆதிரன். 

        “ம்ஹூம்… என்ன உலகம் டா இது… கட்டுன புருஷன் முன்னாடி பொண்டாட்டிய கொஞ்சுறானுக… அத நானும் பாத்துட்டு சும்மா இருக்கேன். ம்ஹூம்…” என பெருமூச்சு விட்டார் அருணாச்சலம். 

        “ஏப்பா… நேத்து உங்க பிஏ போஸ்ட்டுக்கு இன்டர்வியூ நடந்துச்சாம்லோ… கேள்விப்பட்டேன்…” என தாயின் மடியில் இருந்து எழுந்து தந்தையின் தட்டில் இருந்த ஆம்லெட்டை பிச்சு வாயில் போட்டப்படியே அவர் பக்கத்தில் அமர்ந்தான் ஆதிரன். 

        “ஆமா ப்பா… நான் கேக்கனும் னு நெனச்சேன்… ஒரு பொண்ண செலக்ட் பண்ணி இருக்கீங்களாம். பொண்ணு எப்பிடி ப்பா?” என அருணாச்சலத்தை இடித்துக் கொண்டு அவரின் மறுபுறம் சென்று அமர்ந்தான் ஆரண்யன். 

       “செம பொண்ணு டா… நா ஒரு வேலை சொன்னா அத சொல்லி முடிக்கிறதுக்குள்ள செஞ்சு முடிச்சுர்றா… சூப்பர் பொண்ணு டா…” என சிலாகித்தபடியே கூறினார் அருணாச்சலம். 

       “ஓஓ… அப்பிடியா?” என ஆதிரன் இழுக்க, “ம்மா… பொண்ணு சூப்பராம்…” எனக் கூறி முடித்தான் ஆரண்யன். 

      “டேய் டேய் நா அந்த அர்த்தத்துல சொல்ல ல டா…” என பதறியவாறு சிவகாமியைப் பார்த்தார் அருணாச்சலம்.

      அவரோ அருணாச்சலத்தை கண்களாலயே எரிப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுதுதான் தன் மகன்களின் நோக்கம் புரிந்து மனைவியிடம் சரணடைந்தார் அருணாச்சலம். 

      “சிவகாமி…” எனப் பயத்தில் எழுந்து நின்றார் அருணாச்சலம். 

      அவர் எழுந்து நின்ற நிலை கண்டு ஆதிரனுக்கும் ஆரண்யனுக்கும் சிரிப்பு பீறிட்டு கொண்டு வர… அதை அடக்க முடியாமல் சத்தமாக சிரித்தனர். 

       சிவகாமியோ தன் கணவரைக் கண்டு முறைத்தபடியே, “கட்டப்பா…” என்றழைத்தார்.

       “ஆணையிடுங்கள் தாயே…” என பணிவாக குனிந்தபடி அவர் முன்பு வந்து நின்றான் ஆரண்யன்.

       “அவரது மொத்த ஆம்லெட்டையும் எடுத்து அவர் முன்பாகவே நீங்கள் இருவரும் உண்ணுங்கள். இதுவே இவருக்கு அளிக்கும் தண்டனை…” என சிவகாமி சிரிக்காமல் கூற… அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆதிரனுக்குத் தான் பொத்துக் கொண்டு சிரிப்பு வந்தது. 

     ஆரண்யனோ சிவகாமி கூறி முடித்த நொடி அருணாச்சலத்தின் தட்டில் உள்ள மொத்த ஆம்லெட்டையும் எடுத்து ஒரே வாயில் போட்டுக் கொண்டான். 

      நடந்ததைப் பார்த்த ஆதிரனுக்கு சிரிப்பு நிற்காமல் வந்து கொண்டிருந்தது. ஆரண்யனோ ஆம்லெட்டை உண்ட மகிழ்ச்சியை குதித்து கொண்டாடிக் கொண்டிருந்தான். சிவகாமி, தன் மகன்களின் சிரிப்பை சந்தோஷமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். இதில் அருணாச்சலம் தான் பாவமாக முழித்துக் கொண்டிருந்தார்.

      “தாயும் மகன்களும் ஒன்னா சேந்துக்கிட்டு என்னய கொடுமையா படுத்துறீங்க? இருங்கடா… என் மருமகளுக வரட்டும்… நாங்க மூனு பேரும் கூட்டு சேந்துக்கும் உங்கள துரத்துறோம்…” அருணாச்சலம். 

      “அப்ப சீக்கிரம் கல்லியாணம் பண்ணி வைங்க ப்பா…” ஆரண்யன். 

      “கொன்ருவேன்… மொதல்ல ஆதிக்கு… அப்புறம் தான் உனக்கு…” அருணாச்சலம்.

      “ஏன்? என் ரெண்டு மகன்களுக்கும் நா ஒரே நேரத்துல ஒன்னாவே கல்லியாணம் பண்ணி வைப்பேன்… என்ன ஆதி? பொண்ணு பாக்கட்டுமா?” என மகிழ்ச்சியுடன் ஆதிரனிடம் கேட்டார் சிவகாமி. 

       திருமணம் என்றதும் காலையில் நிலாவின் கழுத்தில் தாலி கட்டிய நினைவில் மூழ்கிப் போனான் ஆதிரன். “என்ன ஆதி பதில் சொல்லாம இருக்க?  நாங்க பொண்ணு பாக்கட்டுமா? இல்ல பொண்ணு பாத்து வச்சு இருக்கியா?” என ஆதிரனின் முகத்தை யோசனையாக பார்த்தபடி கேட்டார் சிவகாமி. 

      “ஹான்… அதெல்லாம் ஒன்னும் வேணாம் ம்மா… இன்னும் ஒரு ரெண்டு வருஷம் போகட்டும்…” என நிலாவின் நினைப்பில் இருந்து வெளிவந்தபடி கூறினான் ஆதிரன். 

     “என்னது ரெண்டு வருஷமா?” எனப் பொய்யாக அதிர்ச்சியாகி ஷோபாவில் பொத்தென்று விழுந்தான் ஆரண்யன்.   

      “அய்யோ… இன்னும் ரெண்டு வருஷம் நா இவனுங்க கிட்ட கஷ்ட்டப்படனுமா?” என வராதக் கண்ணீரை துடைத்துக் கொண்டார் அருணாச்சலம். 

      “ப்ச்… ரெண்டு பேரும் கொஞ்சம் சும்மா இருங்க…” என அவர்கள் இருவரையும் பார்த்து கூறிவிட்டு, “ஏன் ஆதி இப்பிடி சொல்ற? நாங்கலாம் எவ்ளோ ஆசைப்படுறோம்…” என்றார் சிவகாமி. 

      “ம்மா… பிஸினஸ் ல அப்பா தனக்குனு ஒரு பேர சம்பாதிச்சுட்டாரு. அதே போல நானும் அவரு பையன்னு இல்லாம எனக்குனு ஒரு பேர சம்பாதிக்கனும் ம்மா… இன்னும் ஒரு ரெண்டு வருஷம் போகட்டும் ம்மா…” ஆதிரன்.

     “சரி ப்பா… உன் இஷ்டம். ஆரண் கேட்ட மாதிரி இது என்னப்பா வேட்டி சட்டை?” சிவகாமி.

      “அது… சும்மா தான் ம்மா… காலையில ஒரு ப்ரண்டோட கல்லியாணம். அதுக்குப் போனேன்… சாப்பிட என்னம்மா இருக்கு? பசிக்குது…” என சிவகாமியை அதற்கு மேல் யோசிக்க விடாமல் செய்தான் ஆதிரன்.

      “இதோ வந்துட்டேன்… பிஸினஸ் பிஸினஸ் னு சுத்தி ஒழுங்காவே சாப்பிடுறது இல்ல…” என ஒரு தாயாய் புலம்பியபடி சமயலறைக்குள் நுழைந்தார் சிவகாமி. 

      அவர் சென்றதும் பின்னேயே,”சிவா…சிவா…” என்றழைத்தபடி சென்றார் அருணாச்சலம். 

      அவர்கள் இருவரும் சென்றதும், “என்ன ப்ரோ… முகத்துல தனி ஒளிவட்டம் தெரியுது… இன்னக்கி என்னமோ ஸ்பெஷலா நடந்திருக்கு போலயே…”என ஆதிரனின் அருகே வந்து அவனை உரசினான் ஆரண்யன். 

      “ம்ம்… அப்பிடியா தெரியுது?” என்றக் கேள்வியுடன் ஆரண்யனைப் பார்த்தான் ஆதிரன். 

      “சும்மா ஜெக ஜோதியா மின்னுறியே ப்ரோ… ஏதோ ஒரு விசயம் நடந்து இருக்கு. என்ன அது?” ஆரண்யன். 

     அவனிற்கு மறு மொழி எதுவும் கூறாமல் தன் தாடியை தடவியபடி சிரித்தான் ஆதிரன். அதைப் பார்த்த ஆரண்யன், “ப்பா… என்ன ஒரு க்யூட் மேனரிசம்… இந்த ஒரு மேனரிசத்துக்கே பல பொண்ணுங்க விழுவாங்களே ப்ரோ. எனக்கும் கொஞ்சம் சொல்லி குடேன்…” என்றான். 

      “அண்ணனும் தம்பியும் அப்பிடி என்ன டா பேசிட்டு இருக்கீங்க?” எனக் குரல் கொடுத்தபடி சாப்பாட்டை உணவு மேசையில் அடுக்கியபடி கேட்டார் அருணாச்சலம். 

      “அண்ணந்தம்பிக்குள்ள ஆயிரம் இருக்கும். அத ஏன் கேக்குறீங்க மிஸ்டர் அருணாச்சலம்?” என அதட்டினான் ஆரண்யன். 

      “டேய்… நா உங்கள பெத்தவன் டா…” அருணாச்சலம். 

      “அந்த ஆண்டனாவே இருந்தாலும் அண்ணந்தம்பிக்குள்ள  வரக் கூடாது. டூ யுவர் வொர்க் மிஸ்டர் அருணாச்சலம்… ” ஆரண்யன். 

      “கடவுளே… பெரியவனுக்கு எப்பிடி வேணுனாலும் பொண்டாட்டிய குடு. ஆனா நா பெத்த இந்த சின்ன குரங்குக்கு இவன ஆட்டிப் படைக்கிற ராட்சசிய பொண்டாட்டியா குடு…” என மேல் நோக்கி பார்த்து வேண்டினார் அருணாச்சலம். 

      “எப்பிடி ப்பா உங்களுக்கு அம்மாவ குடுத்த மாதிரியா?” என சிரித்தான் ஆதிரன். 

      “சூப்பர் ப்ரோ…” என ஆதிரனுடன் ஹைபை அடித்தான் ஆரண்யன். 

     “ஆமா டா ஆமா… உங்க அம்மா ராட்சசி தான்… அதுக்கு என்ன இப்ப?” எனக் கத்திவிட்டு, “அய்யய்யோ ஒரு ப்லோ ல உலறிட்டோமே…” என முனுமுனுத்துவிட்டு,  “டேய் நா பெத்த தங்கங்களா… இத உங்க அம்மா கிட்ட சொல்லிறாதீங்க டா…உங்களுக்கு அப்பா சிக்கன் லாலிபப் செஞ்சு தாரேன்…” என ஆதிரனிடமும் ஆரண்யனிடமும் கெஞ்சினார் அருணாச்சலம். 

      “அய்யோ… சாமி சத்தியமா நாங்க அம்மா கிட்ட சொல்ல மாட்டோம் ப்பா…” என ஆதிரனும் ஆரண்யனும் ஒரே குரலில் சேர்ந்து ஏற்ற இறக்கத்துடன் கூறினர்.

     “ஹப்பாடா… என் செல்லம்…” என தன் மகன்களை கொஞ்சிவிட்டு திரும்பிய அருணாச்சலத்தின் முன்னே இடுப்பில் கை வைத்து முறைத்தபடி நின்றிருந்தார் சிவகாமி. 

       “சத்தியமா நாங்க சொல்ல ல ப்பா…” என மீண்டும் இருவரும் சேர்ந்து ஏற்ற இறக்கத்துடன் குரல் கொடுத்தனர். 

       “படுபாவிகளா… உங்க அம்மா பின்னாடி நிக்கிறா னு ஒரு சின்ன சிக்னல் குடுத்தீங்களா டா…” என சிவகாமியின் முன் நின்று நெளிந்தவாறு தன் பின் நிற்கின்ற மகன்களிடம் மெதுவாக கேட்டார் அருணாச்சலம். 

      “ஏன்?  என்னயப் பத்தி இன்னும் ஏதாவது கேவலமா சொல்றதுக்கா?” என்றவாறு அருணாச்சலத்தின் காதைப் பிடித்துத் திருகினார் சிவகாமி. 

      “அப்பிடியெல்லாம் ஒன்னும் இல்ல சிவா…நாம எத்தன வருஷம் காதலிச்சு கல்லியாணம் பண்ணிக்கிட்டோம்… எனக்கு என் தேவதையப் பத்தி தெரியாதா?” என பணிவாக குழைந்தார் அருணாச்சலம். 

      “ஓஓஓ… இப்ப தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ராட்சசி னு சொன்னீங்க? ஆங்… அது என்ன?” என மேலும் அவரின் காதைப் பிடித்துத் திருகினார் சிவகாமி. 

         “அய்யோ சிவா… சத்தியமா தெரியாம சொல்லிட்டேன். வலிக்குது சிவா… டேய் பசங்களா… வந்து என்னய காப்பாத்துங்களேன் டா…” எனக் கதறினார் அருணாச்சலம். 

       “ஸாரி ப்பா… நாங்க பிஸியா இருக்கோம்…” என வாயில் அப்பளத்தை வாயில் வைத்து கடித்தபடி கூறினான் ஆரண்யன்.

       “நீங்களாம் என் புள்ளைங்களா?” என அவர்களைப் பார்த்து ஒரு கதறு கதறிவிட்டு, “தெரியாம சொல்லிட்டேன் சிவா… ப்ளீஸ்… உன் லவ்வர மன்னிச்சுறேன்…” எனக் கெஞ்சினார் அருணாச்சலம். 

        “சரி பாவமே னு விடுறேன்…” என காதில் இருந்து கையை எடுத்தார் சிவகாமி. 

       “அது என்ன ப்பா லவ்வர்? அப்ப ஹஸ்பெண்ட் இல்லையா?” எனத் தன் முக்கிய சந்தேகத்தைக் கேட்டான் ஆதிரன். 

       “உங்கம்மா தான் என்னய புருஷனா மதிக்கிறதே இல்லயே… அதான் ஒரு லவ்வராவது மதிக்கிறாளா னு பாத்தேன்… ம்ம்ம் … பரவாயில்லை… மதிக்கிறா…” என உணவு மேசையில் உள்ள நாற்காலியில் அமர்ந்தார் அருணாச்சலம். 

       “ம்ம்… என்ன சொன்னீங்க?” எனக் கோவத்துடன் அருணாச்சலத்தின் மண்டையில் நங்கென்று ஒரு கொட்டு கொட்டினார் சிவகாமி. 

       “அய்யோ ஸாரி சிவா… அவசரப்பட்டு உண்மைய உலறிட்டேன்…” அருணாச்சலம். 

      “என்னது?” என அருணாச்சலத்தை தீயாய் முறைத்தார் சிவகாமி. 

      “ஹா ஹா ஹா… அய்யோ அப்பா… நீங்க வேற லெவல்…” என சத்தமாக சிரித்தான் ஆரண்யன். 

      தன் தாயையும் தந்தையையும் பார்க்கையில் அவர்களிடத்தில் தன்னையும் வெண்ணிலாவையும் தன்னாலயே மனம் பொருத்திப் பார்த்தது. உடனே அவளை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்க… உடனே அதை செயல்படுத்த அவசர அவசரமாக கை கழுவிட்டு எழுந்து சென்றான் ஆதிரன். 

     சாப்பாட்டின் பாதியிலேயே எழுந்து செல்வதைக் கண்ட சிவகாமி, “டேய் ஆதி… பாதி சாப்பாட்டுலயே எந்திரிச்சு எங்க டா போற?” எனக் கத்தினார். 

       “ஒரு இம்பார்டன்ட் மீட்டிங் ம்மா… இப்ப தான் ஞாபகம் வந்துச்சு…” என வேக வேகமாக மேலேறி தன் அறைக்குள் நுழைந்து உடையை மாற்றிக் கொண்டு கீழிறங்கினான் ஆதிரன். 

       “இன்னும் ஒரு வாய் சாப்பிட்டு போயேன் டா… பசிக்குது னு சொன்ன…” எனக் கத்தினார் சிவகாமி. 

     “ஸாரி ம்மா… நைட் வந்து சாப்பிட்டுக்கிறேன்… பை ப்பா… என் சாப்பாட்டையும் சேத்து குட்டனுக்கு போடுங்க…” என சின்ன சிரிப்புடன் கூறியவாறு வெளியேறினான் ஆதிரன். 

       “இவ்ளோ அவசரமா இவன் எங்க போறான்?” என யோசனையுடன் வினவினார் சிவகாமி. 

       “அதான் சொன்னானே ஏதோ இம்பார்டன்ட் மீட்டிங் னு… விடுங்க ம்மா…” என்றவாறு சாப்பிடுவதில் குறியானான் ஆரண்யன். 

        “விடு சிவகாமி… பிஸினஸ் னா அப்பிடித்தான் இருக்கும்… ” என மனைவியை சமாதானப்படுத்தினார் அருணாச்சலம். 

       அவசர அவசரமாக கிளம்பியவன் காரை எடுத்துக் கொண்டு வெண்ணிலா வீடு இருக்கும் பக்கம் செலுத்தினான் ஆதிரன். 

      அப்பொழுதுதான் தந்தைக்கு உணவளித்து விட்டு வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்ல வெளியே வந்தாள் வெண்ணிலா. 

      அதைப் பார்த்த ஆதிரன், “இந்த நேரத்துல இவ எங்க போறா?” என்ற யோசனையுடன் அவளை மெதுவாக பின் தொடர்ந்தான் ஆதிரன். செல்லும் வழியில் பாதியில் ஆதிரனுக்கு போனில் ஒரு ஆபீஸ் அழைப்பு வர… காரை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு அழைப்பை எடுத்து பேசினான். 

     இரண்டு நிமிடங்களாக அந்த அழைப்பு நீண்டு விட, ஒரு வழியாக பேசி முடித்து பார்க்கையில் எதிரில் சென்ற வெண்ணிலாவைக் காணவில்லை. அவளைக் காணாமல் யோசனைக்குள்ளானான் ஆதிரன். 

       “எங்க போயிருப்பா… அதுவும் இந்த நேரத்துல…” என சிந்திக்கையில் தான் அவள் வேலை செய்யும் பள்ளி இந்த பக்கம் தான் உள்ளது என நினைவில் வந்தது. உடனடியாக அவள் வேலை பார்க்கும் பள்ளியை நோக்கி காரை செலுத்தினான் ஆதிரன். பள்ளியின் சற்று தொலைவிலேயே காரை நிறுத்தியவன் வெண்ணிலா பள்ளியை விட்டு வெளியே வருவதற்காக காத்திருக்க ஆரம்பித்தான் ஆதிரன். 

      அவளுக்காக காத்திருக்கும் நேரத்தில் கைகள் தன்னிச்சையாய் ஃபோனை எடுத்து வெண்ணிலாவிற்கு தெரியாமல் எடுத்த அவளது ஃபோட்டோக்களை எடுத்து பார்க்கத் தொடங்கினான் ஆதிரன். 

      சிறிய நுதல் கொண்டு, சின்னஞ்சிறிய அழகிய கண்களுடன் சிரிக்கையில் அந்த கண்கள் இன்னும் சிறியதாக சுருங்கி இதழ்கள் விரிந்து ஒரு கன்னத்தில் மட்டும் குழி விழுகையில் மனதை கொள்ளை கொண்டாள் வெண்ணிலா. இடுப்பை எட்டிய கருங்கூந்தலை எப்பொழுதும் பின்னலிட்டே வெளியில் வருவாள். ஒருபோதும் பின்னலிடாமல் கூந்தலை விரித்து விட்டதில்லை. அவளை அவ்வாறு பார்க்க பல வருடங்களாக மனம் ஏனோ ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. 

       கைகளில் எப்பொழுதும் கண்ணாடி வளையல்களே அணிவாள். ஒருபோதும் வேறெந்த வளையல்களும் அணிந்ததில்லை. தன் தாயை போலவே காட்டன் புடவை அணிந்தே பள்ளிக்கு செல்வாள். காதில் சிறிய கம்மல், கழுத்தில் கண்ணுக்கே தெரியாத அளவிற்கு மிக மெல்லிய செயின், காலில் ஓசை எழுப்பாத கொலுசு… இவைகளே வெண்ணிலாவின் அணிகலன்கள். ஆனால் இதையெல்லாம் விட மிக மிக அழகான புன்னகை எனும் அணிகலன் ஒன்று எப்பொழுதும் அவளிடம் இருக்கும். இவ்வாறு அவளை அணு அணுவாக ரசித்துக் கொண்டிருக்கையில் பள்ளி முடிந்து மாணவ மாணவிகள் வெளியே வர ஆரம்பித்தனர். அவர்களுடன் ஒரு குழந்தையாக மாறி வெளியில் வந்து கொண்டிருந்தாள் வெண்ணிலா. 

        இது தான் வெண்ணிலா என்பது… எவ்வளவு துன்பம் வந்தாலும் எதற்கும் கலங்கிடாமல் அடுத்தது என்ன என்று அதை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விடுவாள். இதுவே மற்ற பெண்களாயிருந்தால் அழுது அழுது வீட்டிற்குள் முடங்கி இருப்பார்கள். குழந்தையோடு குழந்தையாய் சிரித்துக் கொண்டு வருகையில் கொள்ளை அழகாய் தெரிந்தாள் வெண்ணிலா. 

        “என் நிலா எப்போதுமே ஸ்பெஷல் தான்… ” என மனதினுள் அவளை மெச்சியவன், அடுத்த நொடியே, “அவ எப்பிடி என்னய மறந்துட்டு சந்தோஷமா இருக்கலாம்?” என்ற கோபம் தலை தூக்கியது. அந்த கோபத்துடனே அவள் பின்னே சென்றான் ஆதிரன். 

        “எவ்ளோ தைரியம் இருந்தா… நா கட்டுன தாலிய கழட்டி போட்டுட்டு சந்தோஷமா சிரிச்சுட்டு இருப்பா… இவள எப்பிடியாவது அழ வைக்கனுமே…” என அவனது மூளை பலமாக யோசிக்க ஆரம்பித்தது. 

       அப்பொழுது ஆபீஸில் இருந்து முக்கியமான அழைப்பு வர அதை எடுத்து பேசியவன், மனமே இல்லாமல் அலுவலகத்திற்கு புறப்பட்டான் ஆதிரன். அலுவலகத்திற்குள் நுழைந்ததும் வேலை அவனை வேறெதையும் பற்றி யோசிக்க விடவில்லை. அனைத்து வேலைகளையும் முடித்தவன் மணியைப் பார்க்க அது இரவை நெருங்கி இருந்தது. 

      எவ்வித தயக்கமும் இல்லாமல் அந்த இரவு நேரத்தில் வெண்ணிலாவின் வீட்டை நோக்கி பயணித்தான் ஆதிரன். வெண்ணிலாவின் வீட்டிற்கு மிக அருகாமையில் காரை நிறுத்தி விட்டு சுற்றும் முற்றும் ஆராய்ந்தான் ஆதிரன். அவ்வளவாக ஆள் நடமாட்டம் இல்லாமல் போக… சுவரேறி வீட்டிற்குள் நுழைய ஆயத்தமானான் ஆதிரன். அந்நேரம் சரியாக வெண்ணிலா வெளியே வந்து மாடியேற அதைப் பார்த்தவன் சத்தமில்லாமல் மீண்டும் கார் அருகே சென்றான். 

       மாடியேறியவள் ஏதோ புலம்பியபடி அழுவதை பார்க்க ஆதிரனின் மனம் ஏனோ கனத்துப போனது. ஆனால் அவனின் இதழ்கள் புன்னகைத்துக் கொண்டு தான் இருந்தது. இறுதியாக வெண்ணிலா மேல் நோக்கி கை கூப்பியபடி தரையில் விழுந்து எந்திரிக்கையில் அவளது கையில் தாலியைப் பார்க்கவும் இனம் புரியாத நிம்மதிக்குள்ளானான் ஆதிரன். 

       ஆதிரன் தன்னை கவனித்துக் கொண்டிருப்பதை அறியாமல், தன்னை யாரும் கவனிக்கவில்லை என்ற உணர்வில் கத்தி அழுது கொண்டிருந்தாள் வெண்ணிலா. 

       “இனி நா என்ன செய்யப் போறேன் ம்மா? இத தூக்கி போட்றவா? இல்ல இத ஏத்துக்கிட்டு இத கட்டுனவன என்னோட புருஷனா நினைச்சு வாழவா ம்மா? ஆனா அவனுக்குத்தான் ஏற்கனவே கல்லியாணம் ஆகிருச்சே ம்மா… இன்னொரு பொண்ணோட புருஷன என் புருஷனா நினைக்கிறது மகா பாவம் ஆச்சே ம்மா… இப்ப நா என்ன தான் பண்றது? எனக்கு ஒன்னுமே புரியலயே ம்மா… ” என அப்படியே தலையில் கை வைத்து அமர்ந்தாள் வெண்ணிலா. 

       கீழே அவளது ஒவ்வொரு அசைவுகளையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தான் ஆதிரன். அவள் புலம்புவது கேட்கவில்லை என்றாலும் அவளது உடல் மொழி நன்றாக புரிந்தது ஆதிரனுக்கு. 

       சில நொடிகள் அப்படியே இருந்தவள் பிறகு அந்த தாலியை கையில் ஏந்தி பார்த்தவள், “என்ன ஆனாலும் சரி… அம்மன் முன்னாடி இந்த தாலி என் கழுத்துல ஏறி இருக்கு. அது என்னைக்கும் தப்பா போகாது. அதுக்காக அவனோட நா வாழப்போறேன் னு சொல்ல ல… இந்த தாலி என் கழுத்துல ஏறி இருக்கு னா அதுக்கு கண்டிப்பா ஒரு காரணம் இருக்கும். அது எனக்கு தெரியுற வரைக்கும் இது என் கழுத்துலயே இருக்கட்டும். என்னைக்காவது ஒரு நாள் இந்த தாலியோ இல்ல இத கட்டுனவனோ என் கழுத்த நெரிக்கிற சூழ்நிலை வந்தா இத கழட்டி அந்த அம்மன் பாதத்துலயே கொண்டு போய் வச்சுர்றேன் ம்மா. எனக்கு நீதான் ம்மா சாமியா இருந்து துணை புரியனும்…” என வேண்டியவள் மீண்டும் அந்த தாலியை தன் உடைக்குள் மறைத்து வைத்தாள் வெண்ணிலா. 

      அவள் தாலியை உடைக்குள் மறைத்து வைப்பதை தன் கழுகு கண்களால் கண்டவன், “தாலி பத்ரமா தான் இருக்கு…” என நினைத்து சந்தோஷப்பட்டான் ஆதிரன். வெண்ணிலாவை பழிவாங்கி துடிதுடிக்க வைக்க நினைத்தாலும் அவனால் ஏனோ இந்த தாலி விசயத்தில் மனம் முரண்பாடாகவே நெருடிக் கொண்டிருந்தது. தற்பொழுது தான் மனம் நிம்மதியடைவதை உணர்ந்தான் ஆதிரன். 

      சிறிது நேரம் அமைதியாக அப்படியே அமர்ந்திருந்தவள், பிறகு கண்ணீரை துடைத்தபடி கீழிறங்கி வீட்டிற்குள் நுழைந்தாள் வெண்ணிலா. அவள் வீட்டிற்குள் சென்றதை உறுதிபடுத்திக்கொண்ட பின்னரே ஆதிரன் அங்கிருந்து தன் வீட்டிற்கு புறப்பட்டான். 

           நேரம் கடந்து வீடு திரும்பும் மகனிற்காக உணவு மேசையில் உணவு எடுத்து வைத்துக் கொண்டு காத்திருந்தார் சிவகாமி. தன் தாய் அந்நேரத்திலும் தனக்காக காத்திருப்பதை அறிந்து, “ம்மா… நீங்க இன்னும் தூங்கலயா?” என்றபடி அவர் அருகில் சென்று அமர்ந்தான் ஆதிரன். 

       “மதியம் நீ வேற பசிக்குது னு சொல்லிட்டு ஒழுங்கா சாப்பிடாம பாதியிலயே எந்திரிச்சு போய்ட்டியா… அதான் மனசு கேக்கல… வா வந்து சாப்பிடு…” என உணவு பரிமாறினார் சிவகாமி. 

       “அச்சோ… லவ் யூ ஸோ மச் ம்மா…” என சிவகாமியை கட்டி அணைத்து முத்தம் வைத்துவிட்டே சாப்பிட அமர்ந்தான் ஆதிரன். 

       “இந்த கொஞ்சலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை…” என பொய்யாய் சலித்தவாறே மகனுக்கு உணவூட்டினார் சிவகாமி. 

        இருவரும் பேசியபடியே சாப்பிட்டு தாயை உறங்க அனுப்பி விட்டு தனது அறைக்கு மாடியேறினான் ஆதிரன். அலுப்பு தீர குளித்துவிட்டு படுக்கையில் விழுந்ததும் மீண்டும் வெண்ணிலாவின் நினைவு வர…”இந்நேரம் என்ன பண்ணிட்டு இருப்பா?” என யோசித்தான் ஆதிரன். 

       “என்ன பண்ணிட்டு இருப்பா? தூங்கி இருப்பாளா? இல்ல முழிச்சுட்டு இருப்பாளா?” என்ற யோசனையுடன் படுக்கையில் உருண்டவன், “எதுக்கு யோசிச்சுட்டு… பேசாம அவளையே கேட்ருவோம்…” என முடிவெடுத்து ஃபோனை எடுத்தான் ஆதிரன். 

         “ஃபோன் பண்ணுவோமா? இல்ல வேண்டாம்… மெஸேஜ் பண்ணுவோம்…” என நினைத்து, “ஹாய் பொண்டாட்டி தூங்கிட்டியா?” என வெண்ணிலாவிற்கு மெஸேஜ் அனுப்பினான் ஆதிரன். அந்த மெஸேஜ் வெண்ணிலாவின் ஃபோனிற்கு சென்றடைந்து செய்தி வந்ததன் அறிகுறியாக மணியோசை எழுப்பியது. ஆனால் அதை வெண்ணிலா பார்க்கவில்லை. மாறாக அந்த ஃபோன் சிதம்பரத்தின் கையில் இருந்தது. 

                       

                           (நிலவு மலரும்…)

                                 -செல்லம்மாள்பாரதி

    No comments yet.