சற்றுமுன் அவன் கட்டிய மாங்கல்யம் அவளது கழுத்தில் இல்லை. ஒருவேளை தூக்கி வீசி இருப்பாளோ? என்ற யோசனையின் விளைவாக ஆதிரனுக்கு கோபம் ஏற்பட வெண்ணிலாவின் அரக்கனாக மாற ஆரம்பித்தான்…
சில நொடிகளிலேயே தன்னை நிதானப்படுத்திக் கொண்டான் ஆதிரன். “அந்த தாலி அவன் கழுத்தில் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?” என்று நினைத்து அவள் கழுத்தை ஆராய்வதை விட்டுவிட்டான் ஆதிரன்.
இது எதையுமே உணராது தன் தந்தை எங்கே என்பதிலேயே கண்களை சுழன்று கொண்டிருந்தாள் வெண்ணிலா. “ஸார்… அப்பா…” என்றவாறு சுற்றும் முற்றும் பார்த்தாள் வெண்ணிலா.
“அப்பா தான மா? உள்ள தான் இருக்காங்க… யோவ் ஸார கூட்டிட்டு வாய்யா…” என கான்ஸ்டபிளிடம் சுந்தரத்தை அழைத்து வரக் கூறினார் இன்ஸ்பெக்டர்.
“நேத்து வரைக்கும் திருடன்… இன்னக்கி ஸாரா?” என நினைத்தவாறு உள்ளிருந்து வெளி வருகின்ற தன் தந்தையை பார்த்ததும், “அப்பா…” என ஓடிச் சென்று அணைத்துக் கொண்டாள் வெண்ணிலா.
“எனக்கு ஒன்னும் இல்ல மா…” என பயத்துடன் தன்னை அணைத்திருந்த மகளின் முதுகை தட்டிக் கொடுத்தார் சுந்தரம்.
“அதுக்கு அப்புறம் உங்கள அடிக்கலயே?” என கண்ணீருடன் தன் தந்தையை ஆராய்ந்தாள் வெண்ணிலா.
“இல்ல டா… அதெல்லாம் எதுவும் இல்லை… எனக்கு ஒன்னும் இல்ல…” சுந்தரம்.
“நா ரொம்ப பயந்துட்டேன் ப்பா…” என தந்தையின் நெஞ்சில் சாய்ந்து அழுதாள் வெண்ணிலா.
அக்காட்சியைப் பார்த்திருந்த ஆதிரனின் கைகள் தன்னாலயே அவனது நெஞ்சை தடவியது. தன்னை அறியாமல் தன் கைகள் தன்னிச்சையாய் நெஞ்சை தடவுவதை உணர்ந்த ஆதிரன், “அவ இருக்க வேண்டிய இடம் இது தான் னு சொல்லாம சொல்றியா? கொன்ருவேன்…” தன் கைகளயே மிரட்டி அடக்கினான்.
“என்னமா அப்பாவ பாத்ததும் ஸார மறந்துட்டியா?” என மிக பவ்யமாக வினவினார் இன்ஸ்பெக்டர்.
அக்கேள்வியில் இருவரும் தங்கள் கண்ணீரை துடைத்துக் கொண்டு ஆதிரனைப் பார்த்தனர். ஆதிரனைப் பார்த்த சுந்தரம், “ஸார் யாரு?” என்றார்.
“ஸார் தான் ப்பா நமக்கு பணம் குடுத்து ஹெல்ப் பண்ணுனது…” என வெண்ணிலாவும் “ஸார் தான் பணத்த திருடுனவன புடிச்சு ஒப்படைச்சது…” என இன்ஸ்பெக்டரும் ஒரே நேரத்தில் கூறினர்.
“என்னது? திருடன புடிச்சாச்சா? யாரு?” என சுந்தரம் பரபரத்தார்.
“அது ஏன் ஸார் உங்களுக்கு? அவங்க அவங்க பணம் அவங்க அவங்களுக்கு கிடைச்சாச்சு ஸார். நீங்க உங்க பொண்ண கூட்டிட்டு நிம்மதியா வீட்டுக்கு போங்க…” என மிக பணிவாக கூறினார் இன்ஸ்பெக்டர்.
கூறியது மட்டுமல்லாமல் அதற்கு மேல் சுந்தரத்தையும் வெண்ணிலாவையும் அங்கு நிற்க விடாமல் வெளியேற்றினர்.
“என்னம்மா இது? அந்த திருடன் யாருனு தெரிஞ்சுக்கலாம் னு பாத்தா இப்பிடி விரட்டி அடிக்கிறாங்க?” சுந்தரம்.
“அது யாரா இருந்தா நமக்கு என்னப்பா? நம்ம மேல தப்பு இல்ல னு நிருபனம் ஆகிருச்சு ல… வாங்க வீட்டுக்குப் போகலாம்…” என அங்கிருந்து கிளம்பினால் போதும் என்ற மனநிலையுடன் கூறினாள் வெண்ணிலா.
“என்னமோ சொல்ற… பாவம் நீயும்… நாலஞ்சு நாளா என்னால ரொம்ப கஷ்ட்டப்பட்டுட்ட…” என வெண்ணிலாவுடன் வெளியேறினார் சுந்தரம்.
அப்பொழுது அவர்கள் முன் காரை கொண்டு வந்து நிறுத்தினான் ஆதிரன். “வாங்க ஸார்… வீட்ல இறக்கி விடுறேன்…” என காரினுள் இருந்து குரல் கொடுத்தான் ஆதிரன்.
“இல்ல… அது…” என தந்தையை பார்த்துவிட்டு, “பரவாயில்லை ஸார்… நாங்க ஆட்டோல போய்க்கிறோம்…” என மறுத்தாள் வெண்ணிலா.
“நா உன் கிட்ட கேக்கல நிலா…” என அவளிடம் கூறியவாறே காரில் இருந்து இறங்கி சுந்தரத்திடம் வந்தான் ஆதிரன்.
“அங்கிள்… வாங்க நா உங்கள வீட்ல ட்ராப் பண்றேன்…” என சுந்தரத்திடம் கூறினான் ஆதிரன்.
“இல்ல பரவாயில்லை தம்பி…” எனத் தயக்கத்துடன் கூறினார் சுந்தரம்.
“அட என்ன அங்கிள்… வாங்க…” என வலுக்கட்டாயமாக அழைத்தான் ஆதிரன்.
“தம்பி… ஏற்கனவே நீங்க எங்களுக்கு பெரிய உதவி பண்ணி இருக்கீங்க. இப்ப வீட்ல விடுறேன் னு வேற சொல்றீங்க… அதுக்கே நாங்க உங்களுக்கு நன்றிக் கடன் பட்டு இருக்கோம். அங்க உள்ள உங்களுக்கு ஒரு நன்றி கூட சொல்ல முடியாம அந்த இன்ஸ்பெக்டர் அவசர அவசரமா வெளிய அனுப்பிட்டாரு. ரொம்ப ரொம்ப நன்றி தம்பி… கடவுள் மாதிரி வந்து காப்பாத்தி இருக்கீங்க… ஆமா… என்னய உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?” சுந்தரம்.
“அதெல்லாம் ஒரு விசயமா? நல்லவங்க என்னக்கும் கஷ்ட்டப்படக் கூடாது. அதோட எனக்குத் தெரிஞ்ச பொண்ணோட அப்பா நீங்க… மனுஷங்க ஒருத்தருக்கொருத்தர் உதவி பண்ணிக்கிட்டா தான அங்கிள் நாம மனுஷங்க… அத போய் பெருசு படுத்துறீங்க?” ஆதிரன்.
“என்ன தம்பி… எவ்ளோ பெரிய விஷயத்தை இவ்ளோ சாதாரணமா சொல்றீங்க… உனக்குத் தம்பிய ஏற்கனவே தெரியுமா மா?” சுந்தரம்.
“ம்ம்… தெரியும் ப்பா… காலேஜ் ல என்னோட சீனியர் தான் ஸார். கருணாகரன் ஸார் கிட்ட ஹெல்ப் கேட்டு போனப்ப ஸார் தான் இவங்களோட விசிட்டிங் கார்டு குடுத்து இவங்கள போய் பாக்க சொன்னாங்க. அங்க போனதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது என்னோட சீனியர் னு… இவங்க தான் பணம் குடுத்து ஹெல்ப் பண்ணாரு. ஆனா போலீஸ் ஸ்டேஷன் ல நடந்தத எதிர்பாக்கல…” என ஆதிரனை பார்க்காமல் தவிர்த்தபடி சுந்தரத்திடம் கூறினாள் வெண்ணிலா.
“நா உனக்கு வெறும் சீனியர் தானா?” என்ற கேள்வியை விழிகளில் தேக்கி வெண்ணிலாவை பார்த்தான் ஆதிரன். ஆனால் அவள் தான் அவனை பார்க்கவே இல்லையே…
“ரொம்ப ரொம்ப நன்றி தம்பி… இந்த உதவிய என்னைக்கும் மறக்க மாட்டேன். இதுக்கு என்ன கைம்மாறு செய்ய போறேன் னு தெரியல…” எனக் கையெடுத்து கும்பிட்டார் சுந்தரம்.
“அட ஏன் அங்கிள்… இதெல்லாம் போய் பெருசு படுத்துறீங்க? இதெல்லாம் ஒரு உதவியே இல்ல அங்கிள். ஏன் ஸார் இங்க நின்னே பேசனும்? வாங்க ஸார் கார்ல ஏறுங்க போய்ட்டே பேசலாம்…” ஆதிரன்.
“ஏன் ஸார் உங்களுக்கு கஷ்ட்டம்? இதுவரைக்கும் நீங்க பண்ணுனதே போதும் ஸார்… உங்களுக்கு நிறைய வேலை இருக்கும். அத போய் நீங்க பாருங்க ஸார். இனி எங்களால உங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது ஸார்…” வெண்ணிலா.
“ஏன் நிலா இப்பிடி பேசுற? சும்மா இரு…” என வெண்ணிலாவை அதட்டிவிட்டு, “எனக்காக இவள மன்னிச்சுருங்க தம்பி. சின்ன பொண்ணு ஏதோ தெரியாம பேசிட்டா…” என ஆதிரனிடம் மன்னிப்பு கோரினார் சிதம்பரம்.
“உங்க பொண்ண நா மன்னிக்கனும் னா நீங்க என் கூட வரனும் அங்கிள்…” என சிரித்தான் ஆதிரன்.
“அட ஏன் தம்பி நீங்க வேற… சரி தம்பி. வாங்க போய்க்கிட்டே பேசலாம்… வா நிலா… தம்பியோடவே போவோம்…” என வெண்ணிலாவை அழைத்துக்கொண்டு காரில் ஏறினார் சுந்தரம்.
“ப்பா… ஏன் ப்பா…” என சுந்தரத்தின் காதில் கேட்டாள் வெண்ணிலா.
“சும்மா இரு நிலா. தம்பி எவ்ளோ தண்மையா கூப்பிடுது…” சுந்தரம்.
“உங்க பொண்ணு என்ன சொல்றாங்க அங்கிள்? “எனக் கேட்டபடியே காரை ஸ்டார்ட் செய்தான் ஆதிரன்.
“அது ஒன்னுல்ல தம்பி… நீங்க என்ன பண்றீங்க தம்பி? எங்க வேலை பாக்குறீங்க?” சுந்தரம்.
“நா ஒரு கம்பெனி வச்சு நடத்துறேன் அங்கிள்…” என அடக்கத்துடன் பதிலளித்தான் ஆதிரன்.
“என்ன கம்பெனி தம்பி? கம்பெனி பேரு என்ன?” சுந்தரம்.
“ஆதி இன்டஸ்ட்ரீஸ் அங்கிள். கேள்விபட்டு இருக்கீங்களா?” ஆதிரன்.
“என்ன தம்பி சொல்றீங்க? நிலா… தம்பி என்ன சொல்றாரு? ஸௌத் இண்டியாலயே நம்பர் ஒன் கம்பெனி தம்பி அது… அந்த கம்பெனியோட ஓனரா நீங்க?” என ஆச்சரியத்துடன் வினவினார் சுந்தரம்.
“ஏன் அங்கிள் நானா இருக்க கூடாதா?” என சிரித்தான் ஆதிரன்.
“அய்யோ தம்பி… நா அப்பிடி சொல்ல ல. அவ்ளோ பெரிய ஆளு இவ்ளோ சிம்பிளா… எங்களுக்கு ரொம்ப பெரிய உதவி பண்ணி இருக்கீங்க… எங்களுக்காக போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் வந்து இப்ப எங்கள உங்க கார்ல கூட்டிட்டு போறீங்க. என்னால நம்ப முடியல…” சுந்தரம்.
இவர்களின் உரையாடல் எதிலும் கலந்து கொள்ளாமல் வெளியே விழிகளை செலுத்தி வெறித்து பார்த்தபடி வந்து கொண்டிருந்தாள் வெண்ணிலா.
கண்ணாடி வழியே வெண்ணிலாவை கவனித்தபடியே வந்தவன், அவளது வதனத்தில் தெரிந்த சோகத்தைக் கண்டு உள்ளம் வாடினாலும் அதை அந்நொடியே ஒதுக்கி விட்டு மகிழ்ச்சியானான் ஆதிரன்.
“அதான் முன்னாடியே சொன்னேன் ல அங்கிள். எனக்கு தெரிஞ்ச பொண்ணோட அப்பா நீங்க… நிலா வந்து உதவி னு கேக்குறப்ப மறுக்க முடியுமா அங்கிள்?” ஆதிரன்.
“ரொம்ப பெரிய ஆளு நீங்க… நீங்க எங்க கிட்ட இவ்ளோ எளிமையா பழகுறீங்க… உங்க அம்மா உங்கள ரொம்ப நல்லா வளத்து இருக்காங்க தம்பி. பொண்டாட்டி புள்ளையோட நல்லா இருப்பீங்க… தம்பிக்கு கல்லியாணம் ஆகிருச்சா?” சுந்தரம்.
சரியாக அந்நேரம் சாலையில் ஒரு வேகத்தடை வர… அதன் காரணமாக காரை மெதுவாக வேகத்தடையில் ஏறி இறக்கியபடி, “ஹான்… ஆகிருச்சு அங்கிள். என் வொய்ப் ரொம்ப அழகா இருப்பாங்க. லவ் பண்ணி கல்லியாணம் பண்ணிக்கிட்டேன்…” என ரசனையுடன் கூறினான் ஆதிரன்.
அவனது வார்த்தைகளை கேட்டு உடல் நடுங்கி மின்சாரம் தாக்கியதைப் போல் துள்ளி விழுந்தாள் வெண்ணிலா. அவளது திடுக்கிடலை ரசித்துப் பார்த்தான் ஆதிரன்.
“அம்மாடி நிலா… என்னாச்சு மா? ஏன் உன் உடம்பு இப்பிடி தூக்கி போடுது?” எனப் பதறினார் சுந்தரம்.
“ஸ்பீட் ப்ரேக் ல அங்கிள் அதான்…” என வெண்ணிலாவை முந்திக் கொண்டு பதிலளித்தான் ஆதிரன்.
“ஓஓ… சரி சரி… பத்ரமா உக்காந்துக்க மா…” என வெண்ணிலாவின் தலையை வருடி கொடுத்தார் சுந்தரம்.
“அப்போ இவனுக்கு ஏற்கவே கல்லியாணம் ஆகிருச்சா? இன்னொரு பொண்ண தொட்டு தாலி கட்டுனவன் தான் என் கழுத்துலயும் தாலி கட்டுனானா? என் நெஞ்சே வெடிக்கிற மாதிரி இருக்கே…” என உள்ளுக்குள் வேதனையில் உலன்றபடி இருந்தாள் வெண்ணிலா. வெண்ணிலாவிற்கு அந்த ஏசி காரிலும் வியர்த்து கொட்டியது.
“ஏன் மா உனக்கு இப்பிடி வேர்க்குது?” என வெண்ணிலா உடலில் வியர்வை கொட்டுவதைக் கண்டு பயந்தார் சுந்தரம்.
தந்தை பயம் கொள்வதைக் கண்டு பொறுக்காது, “ஒன்னுல்ல ப்பா… மூனு நாளா சாப்பிடல தூங்கல… அதான் லேசா மயக்கமா இருக்கு. வேற ஒன்னும் இல்ல…” எனக் கூறி சமாளித்தாள் வெண்ணிலா. அதுதான் உண்மையும் கூட… கடந்த இரண்டு மூன்று நாட்களாக உதவி கேட்டு அழைந்து உண்ண பிடிக்காமல் உறங்கவும் முடியாமல் அவள் தவித்த தவிப்பு ஆண்டவனுக்குத் தான் தெரியும்.
“இதோ… அவ்ளோ தான் டா… வீடு வந்துருச்சு. பாரு தம்பி கரக்ட்டா வீட்டுக்கு கூட்டி வந்துருச்சு…” என வெண்ணிலாவை தோளோடு அணைத்துக் கொண்டார் சிதம்பரம்.
அவளுக்கும் அந்த அணைப்பு தேவைப்பட்டதால் அமைதியாக அணைப்பில் கண்டுண்டு இருந்தாள் வெண்ணிலா. இருப்பினும் தந்தை கூறிய வார்த்தையை கேட்டு நெஞ்சம் உறுத்தியது. “இவனுக்கு எவ்வாறு தன் இல்லம் தெரியும்?” என்ற கேள்வி நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய் குத்த தந்தையை விட்டு விலகி கண்ணாடி வழியே ஆதிரைனைப் பார்த்தாள் வெண்ணிலா.
அவளது பார்வைக்காகவே காத்திருந்தவன் போல கண்ணடித்து உதடுகளை குவித்தான் ஆதிரன். “இன்னொரு பெண்ணின் கணவன் தன்னைப் பார்த்து கண்ணடிப்பதா? இதை விட பெரிய அசிங்கம் தனக்கு வேறு எதுவும் இல்லை…” மனம் வெதும்பி முகத்தை திருப்பினாள் வெண்ணிலா.
“என்னய பாத்தா மூஞ்சிய திருப்பிக்கிற? இருடி… உன்னய கவனிச்சுக்கிறேன்…” என மனதினுள் கோபம் கொண்டு வெண்ணிலா வீட்டின் முன் காரை கொண்டு வந்து சர்றென்று நிறுத்தினான் ஆதிரன்.
“உள்ள வந்து காபி குடிச்சுட்டு போங்க தம்பி… ” என ஆதிரனை வீட்டிற்குள் அழைத்தார் சுந்தரம்.
“இல்ல பரவாயில்லை அங்கிள். எனக்கு ஒரு அர்ஜ்ண்ட் மீட்டிங் இருக்கு. இன்னொரு நாள் கண்டிப்பா வர்றேன் அங்கிள்… ” ஆதிரன்.
“கண்டிப்பா வரனும் தம்பி…” எனக் கூறி விட்டு உள்ளே சென்றார் சுந்தரம்.
அவர் பின்னே செல்ல முயன்ற வெண்ணிலாவை கைப்பிடித்து தடுத்து நிறுத்தினான் ஆதிரன்.
அவன் கரம் தன் உடலில் பட்டதும் பதறி துள்ளி விலகி நின்றாள் வெண்ணிலா. அவள் விலகலைக் கண்டு கோபம் கொண்ட ஆதிரன், “என்னடி பெரிய பத்தினியாட்டம் துள்ளுற?” என வேண்டுமென்றே அவளது கைப்பிடித்து முறுக்கினான் ஆதிரன்.
“நீ சொன்னாலும் சொல்ல னாலும் நா பத்தினி தான்… ஏற்கனவே ஒரு பொண்ணு கழுத்துல தாலி கட்டி குடும்பம் நடத்துறவன் இன்னொரு பொண்ணு கழுத்துல கட்டுறவன் லாம் பேசவேக் கூடாது…” என்றவாறு அவனது கைச் சிறையில் இருந்து விடுபட திமிறினாள் வெண்ணிலா.
“என்னது இன்னொரு பொண்ணு கழுத்துல தாலி கட்டி குடும்பம் நடத்துறேனா? இதென்ன புதுக் கதையா இருக்கு? ஓஓ… கார்ல சொன்னத இப்பிடி புரிஞ்சுக்கிட்டு இருக்கியா? அதுவும் ஒரு வகையில நல்லதுதான்…” என நினைத்து சிரித்துக் கொண்டான் ஆதிரன்.
அவளது திமிறலை ரசித்தவாறே தனது பிடியை தளர்த்தியபடி, “பத்தினி ங்கிற… எங்கடி நா கட்டுன தாலி?” என்றான் ஆதிரன்.
“அது உனக்கு தேவையில்லாத விசயம். அதான் கான்ட்ராக்ட் போட்டு என்னய பழி வாங்கிட்டியே… உனக்கு என்ன அத பத்துன கவலை? அக்ரிமென்ட் படி நா அத என்ன வேணுனாலும் செய்யலாம். அது என் இஷ்ட்டம்…” என அவனிடம் கூறிவிட்டு நிற்காமல் வீட்டிற்குள் சென்றாள் வெண்ணிலா.
“போடி போ… நாளைக்கே என்னய தேடி வர வைக்கிறேன்…” என சங்கல்பம் எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டான் ஆதிரன்.
உள்ளே நுழைந்த வெண்ணிலாவிடம், “அருமையான பையனா இருக்கான் ல மா…” என்றார் சுந்தரம்.
“மொதல்ல நீங்க போய் குளிச்சுட்டு வாங்க ப்பா… சாப்டலாம்… ரொம்ப பசிக்குது… ” என அவரின் கவனத்தை திசை திருப்பி விட்டாள் வெண்ணிலா.
“என்னால ரொம்ப கஷ்ட்டப்பட்டுடியா மா?” என கண் கலங்கினார் சுந்தரம்.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல ப்பா. மொதல்ல நீங்க போய் குளிச்சுட்டு வாங்க… சாப்பிட்டு நாம அப்புறம் பேசலாம்…” என அவரை வலுக்கட்டாயமாக குளிக்க அனுப்பினாள் வெண்ணிலா.
அவர் குளிக்க உள்ளே சென்றதும் சுவரில் சாய்ந்து கண்ணீர் சிந்தினாள் வெண்ணிலா. சிறிது நேரத்திலேயே தன்னை தேற்றிக் கொண்டு தந்தைக்காக உணவு சமைக்க ஆரம்பித்தாள் வெண்ணிலா.
சமைத்து இருவரும் உணவு உண்டு விட்டு தந்தையை படுத்து உறங்க கூறிவிட்டு தான் வேலை செய்யும் பள்ளிக்கு சென்றாள் வெண்ணிலா. அங்கிருந்த சின்ன சின்ன மழலைகளுடன் நேரத்தை செலவளித்தவள் இல்லம் திரும்பி இரவு உணவை தயாரித்தாள். தந்தையுடன் கதைகளை பேசிக் கொண்டே அவரை சாப்பிட வைத்தாள் வெண்ணிலா. தந்தைக்கு துரோகம் செய்து விட்டோம் என்ற நினைவே அவளை கொல்லாமல் கொன்று கொண்டிருந்தது.
அவருடன் பேசினாலும் சிரித்தாலும் உள்ளுக்குள் இருந்த குற்ற உணர்வு பெருகிக் கொண்டே சென்றது. எப்படியோ இரவு உணவை முடித்து தந்தை உறங்க சென்றதும் தனிமை தேடி மாடியேறினாள் வெண்ணிலா.
இரவின் அமைதியும் யாருமற்ற தனிமையும் அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர்த்துளிகளை அருவியாய் கொட்ட வைத்தது.
“நா என்ன தப்பு பண்ணுனேன்? எனக்கு ஏன் இந்த நிலைமை? அப்பாக்கு தெரியாம கழுத்துல தாலி வாங்கிட்டு வந்து நிக்கிறேனே… என் பொண்ணு எந்த தப்பும் பண்ண மாட்டா னு நம்புன அப்பாக்கு நம்பிக்கை துரோகம் பண்ணிட்டேனே… கடவுளே… நா பேசுன வார்த்தைலாம் ஒருத்தன இந்த அளவுக்கு கொடூர அரக்கனா மாத்தும் னு நினைச்சு கூட பாக்கலயே நா… அம்மா… மேல இருந்து என்னய பாத்துட்டு தான இருக்க? உன் பொண்ண பாரும்மா… எந்த பொண்ணும் செய்யக் கூடாத செயலை உன் பொண்ணு செஞ்சுட்டு வந்து நிக்கிறேன். என்னய மன்னிச்சுரு ம்மா…” என்றவாறு கும்பிட்டு விழுந்து கதறி அழுதாள் வெண்ணிலா.
நிலத்தில் உள்ள வெண்ணிலா அழுவதைக் கண்டு வானில் உள்ள வெண்ணிலா கண்ணீர் சிந்தியது. ஆனால் இவள் அழுகையில் கரைய வேண்டியவனோ, பாறாங்கல்லாக கை கட்டி காரில் சாய்ந்து அவள் வீட்டின் கீழ் நின்றபடி அவள் அழுவதை ரசித்து பார்த்தபடி இருந்தான் ஆதிரன்.
வெண்ணிலா கும்பிட்டு கீழே விழுந்து அழுகையில் உள்ளிருந்த மாங்கல்யம் வெளியே வந்து விழ… அதை கையில் ஏந்தி பார்த்துக் கதறினாள் வெண்ணிலா. அவள் கையில் ஏந்தி இருப்பதைக் கண்டவன் நிம்மதி பெருமூச்சு விட்டு புன்னகைத்தான் ஆதிரன்.
(நிலவு மலரும்…)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.