“ரொம்ப சந்தோஷம்… நாளைக்கி காலையில நாலு மணிக்கு நமக்கு கல்லியாணம். பக்கத்துல இருக்கிற அம்மன் கோவிலுக்கு வந்துரு… நமக்கு கல்லியாணம் ஆன அடுத்த ரெண்டு மணி நேரத்துல உண்மையான திருடன போலீஸ் முன்னாடி நா நிறுத்துறேன். இப்ப போய்ட்டு நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கி காலையில ப்ரெஷ்ஷா கல்லியாணப் பொண்ணா கோவிலுக்கு வந்து சேரு…” என மிகப் பெரிய விஷயத்தை இலகுவாக கூறி முடித்தான் ஆதிரன்.
தன் வாழ்க்கை என்ன ஆனாலும் பரவாயில்லை தந்தை எந்த அவப்பெயரும் இல்லாமல் வெளியே வர வேண்டும் என்ற உறுதியுடன்,”ஓகே ஸார்…” என்றாள்.
“நல்லா யோசிச்சுக்கோ… என்னோட கண்டீஷனுக்குலாம் ஓகே தான? அப்புறம் நாளக்கி முடியாது னு லாம் சொல்ல கூடாது…” ஆதிரன்.
“நல்லா யோசிச்சுட்டேன் ஸார். எனக்கு ஓகே தான்… ஆனா எனக்கு ஒரு சின்ன சந்தேகம்…” வெண்ணிலா.
அவள் என்ன கேட்பாள் என அறிந்தே “கேளு…” என்றான் ஆதிரன்.
“எதுக்காக இந்த பொய் கல்லியாணம்? இந்த கல்லியாணத்துனால உங்களுக்கு என்ன கிடைக்க போகுது? எனக்குத் தெரிஞ்சு இதுல உங்களுக்கு எதுவும் கிடைக்கப் போறதில்ல… பதினஞ்சு லட்சம் உங்களுக்குத் தான் நட்டம்… எதையும் லாபம் இல்லாம செய்யாத நீங்க இத எதுக்கு செய்றீங்க?” வெண்ணிலா.
“இதுல எனக்கு எதுவும் கிடைக்கப் போறதில்ல னு உனக்கு யாரு சொன்னது? இதுனால பல வருஷக் கணக்க நாளக்கி தீத்துக்கப் போறேன்…” என சிரித்தான் ஆதிரன்.
“இல்ல… புரியல…” எனக் குழப்பத்துடன் கூறினாள் வெண்ணிலா.
“உனக்கு புரியனும் னு ஒன்னும் அவசியம் இல்ல. இந்த கான்ட்ராக்ட் பேப்பர் ல எல்லாம் தெளிவா இருக்கு. நல்லா படிச்சு பாத்துட்டு ஸைன் போடு…” என்றவாறு அவள் முன் ஒரு சில பேப்பர் தாள்களை நீட்டினான் ஆதிரன்.
“இவன் மனசுல என்ன தான் நெனச்சுட்டு இதெல்லாம் பண்றான்?” எனப் புரியாது அந்த பேப்பர் தாள்களை வாங்கி படிக்க ஆரம்பித்தாள் வெண்ணிலா.
முதல் பக்கத்தில் அவன் கூறிய விசயங்களே தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தன. தாலி கட்டியப்பிறகு இருவருக்கும் இடையே எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதாகவும் அந்த தாலியை காரணம் காட்டி எவ்விதமான சொத்து உரிமையும் வெண்ணிலா கோரக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அடுத்த பக்கத்தை வெண்ணிலா படிக்க திருப்புகையில், “நீ கேட்டியே எதுக்காக இந்த பொய் கல்லியாணம் னு… இதுல எனக்கு என்ன கிடைக்கப் போகுது னு கேட்ட ல… திருப்தியும் சந்தோஷமும் கிடைக்கும். அதுக்காக நா எவ்ளோ பணம் வேணும்னாலும் செலவு செய்ய ரெடியா இருக்கேன்…” என வெண்ணிலாவை பார்த்தபடியே கூறினான் ஆதிரன்.
அவன் கூறிய வார்த்தைகளை கேட்டு எதுவும் புரியாமல் காண்ட்ராக்டில் உள்ள இரண்டாம் பக்கத்தை படிக்காமல் ஆதிரனைப் பார்த்தாள் வெண்ணிலா.
“உனக்கு ஞாபகம் இருக்கா? படிக்கிறப்போ அடிக்கடி ஒரு டையலாக் பேசிட்டு திரிவியே… என் அப்பா யார கல்லியாணம் பண்ணிக்க சொல்றாரோ அவரத்தான் கல்லியாணம் பண்ணிப்பேன். அவருக்குத் தெரியாம நா எதையும் செய்ய மாட்டேன். என் கழுத்துல ஒரு தடவ தான் மஞ்சக்கயிறு ஏறும்… அதுவும் எனக்கும் என் அப்பாவுக்கும் புடிச்சவன் கையால தான் ஏறும் னு சபதம் எடுத்த மாதிரி பேசி ஸீன் போட்டுட்டு திரிஞ்சியே… இன்னும் சொல்லப் போனா அதுதான் உன்னோட வாழ்க்கை லட்சியம் மாதிரி பேசுவியே… அத இந்த பொய் கல்லியாணம் மூலமா உடைக்கப் போறேன். உன்னோட மனச சுக்கு சுக்கா உடைஞ்ச சந்தோஷம் கிடைக்கும். இன்னும் தெளிவா சொல்லப் போனா உன்னய பழி வாங்குன சந்தோஷம் கிடைக்கும். அந்த சந்தோஷத்துக்காக எவ்வளவு பணத்த வேணும்னாலும் செலவு செய்யலாம் நிலா…அதெல்லாம் உனக்குப் புரியாது…” என்றவாறு தெனாவெட்டாக அவளைப் பார்த்தான் ஆதிரன்.
அவன் கூறிய அனைத்தையும் கேட்ட வெண்ணிலா ப்ரீஸாகி அப்படியே அமர்ந்திருந்தாள். “ஹலோ… நிலா…” என அவள் முகம் முன்னே தன் கையை அசைத்து அவளை சுய நினைவிற்கு கொண்டு வந்தான் ஆதிரன்.
“என்ன ஷாக்கா இருக்கா?” என அவளின் அதிர்ச்சியை கன்னத்தில் கை வைத்து ரசித்துப் பார்த்திருந்தான் ஆதிரன்.
“இவன் என்ன அரக்கனா? இவ்ளோ கொடுமையா யோசிச்சு இருக்கான்? எப்பவோ சொன்னத இப்ப வரைக்கும் ஞாபகம் வச்சுட்டு இப்ப இப்பிடி நிக்க வச்சு இருக்கான். நா அப்பிடி என்ன தப்பா சொல்லிட்டேன்… எல்லா பொண்ணுங்களுக்கும் இருக்குற ஆசையத் தான சொன்னேன். அதுக்காக இப்பிடி கொடூரமா ப்ளான் என்னய சிக்க வச்சு இருக்கான். கடவுளே எனக்கு வேற வழியே இல்லையா?” என மனதினுள் வெண்ணிலா வேண்டியது அந்த கடவுளின் செவிகளில் எட்டியதோ இல்லையோ அவளின் அரக்கனின் செவிகளில் எட்டி, “வேற வழியே இல்ல நிலா… கையெழுத்து போடு…” என்றான் ஆதிரன்.
“நா மனசுக்குள்ள நெனச்சது இவனுக்கு எப்பிடி கேட்டுச்சு?” என அதிர்வுடன் அவனைப் பார்த்தாள் வெண்ணிலா.
“அதெல்லாம் உன் மைண்ட் வாய்ஸ் எனக்கு தெளிவா கேக்குது ப்யூச்சர் பொண்டாட்டி…” எனக் குறும்புடன் அவளைப் பார்த்து ஆதிரன் கண்ணடிக்க… அதில் வெண்ணிலாவிற்கு அவளது கல்லூரி நாட்கள் நெஞ்சில் வந்து தாக்கியது. அதிலிருந்து தப்பிப்பதற்காக வேகவேகமாக காண்ட்ராக்டில் எல்லா பக்கங்களிலும் கையெழுத்து போட்டு அவனிடம் நீட்டினாள் வெண்ணிலா.
அந்த தாள்களுடன் அவளது மொத்த வாழ்க்கையையும் அவனிடம் அளிப்பதை அறியாமலே காண்ட்ராக்ட் பேப்பரை ஆதிரனிடம் கொடுத்தாள் வெண்ணிலா. அந்த நொடியில் இருந்து அவளின் மொத்த வாழ்க்கையின் ஆட்டுவிப்பனாக தான் மாறி விட்டதை அறிந்தே புன்னகையுடன் வெண்ணிலாவிடம் இருந்து காண்ட்ராக்ட் பேப்பர்களை வாங்கி அனைத்து பக்கங்களிலும் அவளது கையெழுத்து இருப்பதை உறுதிபடுத்திக் கொண்ட பின் அதை பத்திரப்படுத்தி வைத்தான் ஆதிரன்.
“போய் நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கி காலையில இந்த புடவையில கல்லியாணத்துக்கு ரெடியாகி கோவிலுக்கு வா…” என சிரித்தபடி வெண்ணிலாவிடம் ஒரு புடவையை நீட்டினான் ஆதிரன்.
“இல்ல என் கிட்ட வேற புடவை இருக்கு…” என அதை வாங்க மறுத்தாள் வெண்ணிலா.
“இந்த புடவையில வந்தா தான் கல்லியாணம். இல்லனா கல்லியாணமும் இல்ல பணமும் இல்ல…” எனக் கோவமானான் ஆதிரன்.
“இதெல்லாம் காண்ட்ராக்ட்ல இல்லையே…” என முனுமுனுத்தாள் வெண்ணிலா. குரல் உயர்த்தி தான் இவனிடம் பேச முடியாதே…
“இந்த கல்லியாணம் என் விருப்பப்படி தான் நடக்கும் னு இருந்துச்சு ல… அந்த என் விருப்பத்துல இதுவும் ஒன்னு… புடி…” எனக் கரறாக அவளிடம் புடவையை நீட்டினான் ஆதிரன்.
எல்லாம் கை மீறி சென்று விட்டது. இதற்கு மேல தன் கையில் எதுவும் இல்லை என்றுணர்ந்து கண்ணீரை உள்ளடக்கியபடி அவனிடமிருந்து அந்த புடவையை வாங்கிக் கொண்டு, “ரொம்ப தேங்க்ஸ் ஸார்…” எனக் கையெடுத்து கும்பிட்டு விட்டு திரும்பி கூட பார்க்காமல் விறு விறுவென்று வெளியேறிச் சென்றாள் வெண்ணிலா.
அவள் சென்றதும் அறையினுள் சத்தம் போட்டு சிரித்தான் ஆதிரன். “என்னயவா அசிங்கப்படுத்துன? உன்னய எப்பிடி அழுக வச்சு இருக்கேன் பாத்தியா? இது வெறும் ஆரம்பம் தான் நிலா. இன்னும் நீ அனுபவிக்க வேண்டியது நெறய இருக்கு. உன் வாழ்க்கையவே எனக்கு எழுதி குடுத்துட்டு போயிருக்கடி. இத வச்சு உன்னய எப்பிடி ஆட்டிப்படைக்கிறேன்னு பாரு…” என சுற்று நாற்காலியில் சுழன்றபடி சிரித்தான் ஆதிரன்.
வீட்டிற்கு வந்த வெண்ணிலா, எதுவும் செய்ய தோன்றாமல் அப்படியே கட்டிலின் மீது விழுந்து கத்தி அழுதாள்.
“என்னய ஏன் இப்பிடி சோதிக்கிற கடவுளே…” எனக் கத்தி கதறி அழுதாள் வெண்ணிலா. அழுகையில் கரைந்தபடியே இரவைக் கழித்தாள் வெண்ணிலா. மறுநாள் அதிகாலை மூன்று மணிக்கு அவளின் அலைபேசி ஒலிக்க அதை எடுத்துப் பார்த்தாள் வெண்ணிலா. புது எண்ணாக இருக்கவும் குழப்பமாக அழைப்பை ஏற்று காதில் வைத்தாள் வெண்ணிலா.
“அழுதது போதும். நேரம் ஆகிருச்சு … எந்திருச்சு கிளம்பி வா நிலா…” என்ற ஆதிரனின் குரல் கேட்க… நிதர்சனம் உணர்ந்து கடவுளின் மேல் பாரத்தை போட்டு விட்டு குளித்து அவன் அளித்த புடவையில் கோவிலுக்கு கிளம்பினாள் வெண்ணிலா.
கோவிலில் அவளுக்கு முன்பாகவே ஆதிரன் நின்றிருந்தான். வேட்டி சட்டையில் அவனைக் கண்டு ஒரு நொடி அவளது உள்ளம் தடுமாறித்தான் போனது. தான் இருக்கும் சூழ்நிலை நினைவிற்கு வர தடுமாறிய உள்ளத்தை நிலை நிறுத்தி அவனைப் பார்த்தாள் வெண்ணிலா. அவனது கண்களில் ஏதோ ஒன்று புதிதாக தெரிய அதை ஆராய முயலாமல் அப்படியே விட்டு விட்டாள் வெண்ணிலா.
“சீக்கிரம் வா நிலா… உனக்காகத்தான் வெயிட்டிங்…” என அவளின் கை பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான் ஆதிரன்.
கோவிலின் உள்ளே ஐயர் மற்றும் ஒரு பெண்மணியும் ஒரு சிறுமியும் இருந்தனர். “இவர் தான் நம்ம கல்லியாணத்த நடத்தி வைக்கப் போறாரு. இது இவரோட வொய்ப்… அண்ட் இது அவரோட பொண்ணு…” என அங்கிருந்தவர்களை வெண்ணிலாவிற்கு அறிமுகப்படுத்தி வைத்தான் ஆதிரன்.
அவர்களைப் பார்த்து லேசாக புன்னகைத்துக் கொண்டதோடு நிறுத்திக் கொண்டாள் வெண்ணிலா.
“நல்ல நேரம் போய்ட்டு இருக்கு வாங்கோ…” என ஆதிரனையும் வெண்ணிலாவையும் அழைத்துச் சென்று அம்பாள் சன்னதி முன் சென்று நிறுத்தினார் அந்த ஐயர்.
“இந்தாங்க… இந்த மாலைய மாத்திக்கங்க…” என இருவரித்திலும் மாலையை அளித்தார் அந்த ஐயரின் மனைவி.
“இவர்கள் எப்படி இப்படி ஒரு திருமணத்திற்கு உடைந்தையாக இருக்க ஒத்துக் கொண்டார்கள்? எப்படி ஒத்துக்கொள்ளாமல் இருப்பார்கள்? பணம் தான் என்ன வேண்டுமானாலும் செய்யுமே… பணத்தால் இவர்களை வாங்கி இருப்பான் இந்த அரக்கன்…” என உள்ளுக்குள் புளுங்கியபடி ஐயர் மனைவி தன்னிடம் அளித்த மாலையை தன் கழுத்தில் போடப் போனாள் வெண்ணிலா.
“மாப்பிள்ளை கழுத்துல போடுமா… ஸார்… நீங்க பொண்ணு கழுத்துல மாலைய போடுங்க…” என வெண்ணிலாவை தடுத்தாள் அய்யரின் மனைவி.
மிக மகிழ்ச்சியுடன் வெண்ணிலாவின் கழுத்தில் மாலையிட்டான் ஆதிரன். வேறு வழி இல்லாமல் ஆதிரனின் கழுத்தில் மாலையிட்டாள் வெண்ணிலா. அம்மன் பாதத்தில் வைத்து பூஜை செய்து ஐம்பொன் தாலியை தட்டில் வைத்து எடுத்து வந்தார் ஐயர்.
அந்த அதி காலையில் அம்மன் முன்னிலையில் பிரம்ம முகூர்த்தத்தில், “மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்” எனப் பாடி ஐயர் தாலி எடுத்து ஆதிரனிடம் அளிக்க… அந்த ஐம்பொன் தாலியை வெண்ணிலாவின் கண்களை பார்த்தவாறே அவளது கழுத்தில் கட்டினான் ஆதிரன்.
“முடிஞ்சுச்சு… இத்தோட என் வாழ்க்கை முடிஞ்சுச்சு…” என உள்ளுக்குள் எழுந்த வேதனையில் கண்ணீர் சிந்தினாள் வெண்ணிலா. அவளது கண்ணீர்த்துளி அவளது கழுத்தில் ஆதிரன் கட்டிய மாங்கல்யத்தில் பட்டுத் தெறிக்க அதை தன் கைகளால் தட்டி விட்டு அம்மாங்கல்யத்தை எடுத்து அதில் தன் இதழ்களை ஒற்றி எடுத்தான் ஆதிரன்.
ஆதிரன் மாங்கல்யத்தை கையில் இதழ் ஒற்றுகையில் அவனது செய்கையில் பயந்து , “என்ன செய்றீங்க?” என்றவாறு அவனைப் பார்த்தாள் வெண்ணிலா.
“ஒன்னுல்ல… வா ஒரு செல்ஃபி எடுத்துக்கலாம்… ” ஆதிரன்.
“அதெல்லாம் ஒன்னும் வேணாம்… நா என் அப்பாவ பாக்கனும்…” வெண்ணிலா.
“உன் கிட்ட யாரும் ஒப்பினியன் கேக்கல… வா னா வரனும்…” என்றவாறே அவளது இடுப்பை வளைத்து தன்னருகில் நெருக்கமாக நிறுத்தியபடி தன் ஃபோனில் செல்ஃபி எடுத்தான் ஆதிரன். அதில் வெண்ணிலா பயந்து ஆதிரனை பார்த்தபடி இருந்தாள். ஆனால் வெட்கப்பட்டு இருப்பது போல் அழகாக தெரிந்தது. அதில் திருப்தி அடைந்த ஆதிரன், “ரொம்ப நன்றி ஐயா… நாங்க கிளம்புறோம்…” என அய்யருக்கு நன்றியுரைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டான்.
“என்ன… மாப்பிள்ளை பொண்ண விட்டுட்டு அவர் பாட்டுக்கும் போறாரு?” என அய்யரின் மனைவி தன் கணவனின் காதில் வினவினாள். அது தெளிவாக வெண்ணிலாவின் காதில் விழுந்தாலும் எதையும் கண்டு கொள்ளாமல், அவன் சென்றதே எனக்கு நிம்மதி தான் என நினைத்தவாறு அம்மனை நன்றாக தரிசித்தாள்.
“அதெல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம்… நமக்கு எதுக்கு?” என அய்யர் தன் மனைவியை சமாதானம் செய்வதை காதில் வாங்கிக் கொண்டே கோவிலை விட்டு வெளியே வந்தாள் வெண்ணிலா.
கோவிலின் வெளியே தன் காரின் மீது சாய்ந்து நின்றவாறு தான் கட்டிய மாங்கல்யம் கழுத்தில் ஆட நடந்து வரும் வெண்ணிலாவை பார்த்துக் கொண்டிருந்தான் ஆதிரன்.
வெண்ணிலா தன்னை நெருங்கியதும், “இந்தா இதுல பதினஞ்சு லட்சம் பணம் இருக்கு…” என ஒரு பையை அவளிடம் நீட்டினான் ஆதிரன்.
எதுவும் கூறாமல் அப்பையை அமைதியாக வாங்கிக் கொண்டு சாலையில் நடக்க ஆரம்பித்தாள் வெண்ணிலா. “அந்த தாலியை கழட்டலியா நிலா?” என செல்லும் வெண்ணிலாவைப் பார்த்து வினவினான் ஆதிரன்.
“அது என்னோட இஷ்டம் ஸார்… என்னய பழிவாங்கி முடிச்சுட்டிங்கல்ல ஸார்… உங்களுக்கு தேவையான உங்க சந்தோஷம் கிடைச்சுருச்சு ல ஸார்… இன்னும் எதுக்கு ஸார் என் கிட்ட பேசி என்னய நோகடிங்கிறீங்க?” எனக் கண்ணீர் வழிய கேட்டாள் வெண்ணிலா.
“இல்ல… இப்படியே உன் அப்பாவ பாக்க போலீஸ் ஸ்டேஷன் போறியே… அதான் கேட்டேன். உனக்கு கழட்ட கஷ்ட்டமா இருந்துச்சுனா நா வேணுனா கழட்டுறேன்…” ஆதிரன்.
“இத கட்டுனதோட உங்க பழிவாங்கல் முடிஞ்சு போச்சு. உங்களுக்கும் எனக்கும் உள்ள சம்பந்தமும் முடிஞ்சு போச்சு… நீங்க உங்க வேலய பாத்துட்டு போங்க. என்னய பத்தி நீங்க கவலப்படாதீங்க…” வெண்ணிலா.
“இப்ப நா அப்பிடி என்ன தப்பா கேட்டுட்டேன்? ஏதோ பழகுன பொண்ணாச்சே னு ஒரு அக்கறையில கேட்டேன்… அவ்வளவு தான்… அதுக்குப் போய் இப்பிடி பேசுற?” ஆதிரன்.
“அக்கறையா? உங்க அக்கறைய தூக்கி குப்பையில போடுங்க… இல்ல தெரியாம தான் கேக்குறேன், அப்பிடி என்ன ஸார் நா தப்பா பேசிட்டேன்? எல்லா பொண்ணுங்களுக்கும் இருக்குற ஆசை தான ஸார் நானும் ஆசைப்பட்டேன்? அம்மாக்கு அம்மாவா என்னய வளத்த என் அப்பா சம்மதத்தோட அவருக்கு இஷ்ட்டப்பட்ட மாப்பிள்ளைய கல்லியாணம் பண்ணிக்கனும் னு ஆசைப் பட்டேன்… அது தப்பா ஸார்? அதுக்கு ஏன் ஸார் எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை?” என ஆக்ரோசமாக ஆதிரனின் சட்டையைப் பிடித்து கண்ணீர் மல்க கத்தினாள் வெண்ணிலா.
“அஸ் பெர் காண்ட்ராக்ட் ரூல் நம்பர் செவன், கல்லியாணத்துக்கு அப்புறம் இப்பிடி என் கிட்ட நியாயம் கேட்டு நிக்க கூடாது. என் கிட்ட இப்பிடி சண்டை போட மாட்டேன் னு ஸைன் பண்ணி குடுத்து இருக்க மா…” என நக்கலாக சிரித்தான் ஆதிரன்.
“ச்சே…” என இயலாமையுடன் அழுத கண்களை துடைக்கத் தோன்றாமல் அங்கிருந்து கிளம்பினாள் வெண்ணிலா.
அங்கிருந்து நேராக போலீஸ் ஸ்டேஷன் முன் சென்று நின்றாள் வெண்ணிலா. நேராக உள்ளே சென்று இன்ஸ்பெக்டர் முன் பணத்தை வைத்தாள் வெண்ணிலா. “இந்தாங்க ஸார்… இதுல பதினஞ்சு லட்சம் பணம் இருக்கு. என் அப்பாவ வெளில விடுங்க…” என்றாள் வெண்ணிலா.
“அட இது ஏன் மா? இதெல்லாம் தேவை இல்லை… பணத்த திருடுனவன நாங்க புடிச்சுட்டோம்… ” இன்ஸ்பெக்டர்.
“என்னது… நீங்க கண்டு புடிச்சீங்களா?” என்ற குரலுடன் வெண்ணிலாவின் பின் வந்து நின்றான் ஆதிரன்.
“ஆமா சொல்ல மறந்துட்டேன்… ஸார் தான் அந்த திருடன கண்டுபுடிச்சு ஒப்படைச்சாரு… உனக்கு ரொம்ப பெரிய உதவி பண்ணி இருக்காரு மா…” இன்ஸ்பெக்டர்.
“இவன் இங்க எப்பிடி?” என்ற அதிர்ச்சியுடன் ஆதிரனை பார்த்தபடி நின்றிருந்தாள் வெண்ணிலா.
“என்ன வெண்ணிலா? அப்பிடி பாக்குற என்னய? நேத்து நீதான வந்து என் கிட்ட ஹெல்ப் கேட்ட? பணத்த திருடனது யாரு னு கண்டுபுடிச்சு தர சொல்லி? இப்ப மேடம் சந்தோஷமா?” என வெண்ணிலாவிடம் பேசினாலும் அவனது கண்கள் அவளது கழுத்தை ஆராய்ந்தபடி இருந்தது.
சற்றுமுன் அவன் கட்டிய மாங்கல்யம் அவளது கழுத்தில் இல்லை. ஒருவேளை தூக்கி வீசி இருப்பாளோ? என்ற யோசனையின் விளைவாக ஆதிரனுக்கு கோபம் ஏற்பட வெண்ணிலாவின் அரக்கனாக மாற ஆரம்பித்தான்…
(நிலவு மலரும்…)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.