அரக்கன் -04

Chellammal Bharathi | 29 Nov 2025 | Share

    “குழப்பமா இருக்கா நிலா? அந்த பணத்த எடுத்ததும் நாந்தான்… உன்னய இங்க வரவச்சதும் நாந்தான்… என்னய மீறி உன் வாழ்க்கையில ஒரு அணுவும் அசையாது டி… இப்ப தான என் விளையாட்ட ஆரம்பிச்சு இருக்கேன்… இனி போக போக பாரு…” என வெளியே செல்லும் வெண்ணிலாவை சிசிடிவி கேமராவில் பார்த்து சிரித்தான் ஆதிரன். 

     ஆதிரனின் எண்ணங்களை பற்றி புரியாத வெண்ணிலா, குழப்ப மிகுதியில் எங்கு செல்கிறோம் என்று அறியாமல் கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தாள். ஏதோ ஒரு இடத்தில் நடந்து கொண்டிருந்த கால்கள் திடீரென்று நிற்க நடப்பு உலகிற்கு வந்து சுற்றும் முற்றும் பார்த்தாள் வெண்ணிலா. தான் எப்போதும் வழக்கமாக செல்லும் அம்மன் கோவிலின் முன் நின்றிருந்தாள். திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்பது போல குழப்ப மிகுதியில் தன்னை அறியாமலேயே கோவில் வாசலில் வந்து நின்றிருக்கிறாள். 

       “அம்மா…” என மனம் உருகி மௌனமாக அழைத்தவாறே அம்மனை தரிசிக்க கோவிலினுள் நுழைந்தாள் வெண்ணிலா. 

        முழு அலங்காரத்தில் சாந்த சொரூபிணியாக காட்சி அளித்த அம்மனின் முன்பு அமைதியாக அவளை பார்த்தவாறே அமர்ந்தாள் வெண்ணிலா. 

      “நா இப்ப என்ன பண்ணட்டும் ம்மா? என்னய சுத்தி என்ன நடக்குதுனே எனக்குத் தெரியல. வீட்ல இருந்த பணம் எப்பிடி காணாம போச்சு னு தெரியல… வீட்ல இருந்து வேற எந்த பொருளும் காணாம போகல… வந்தவன் எந்த பூட்டையும் உடைக்கல. பீரோவ உடைக்கல… எப்பிடி பணத்த எடுத்துட்டு போனான்னே தெரியல. இதுல இருந்து அப்பாவ எப்பிடி வெளில கொண்டு வர்றது னு தெரியாம நின்னப்ப அந்த ஆதி பணம் தர்றேன் னு சொல்றான். ஆனா அவன் போட்ட கண்டீஷன் எதுவும் எனக்கு புரியல ம்மா… கல்லியாணம் ங்கிறான். அடுத்த செகண்ட்டே நீ போகலாம் ங்கிறான்… எனக்கு ஒன்னும் புரியல ம்மா… நீதான் எனக்கு ஒரு நல்ல வழி காட்டனும்.” என மனம் உருகி வேண்டினாள் வெண்ணிலா. 

     சிறிது நேரம் அமைதியாக அம்மனை பார்த்தவாறு இருந்தவள் பின்பு அங்கிருந்து புறப்பட்டு நேராக தன் தந்தையை பார்க்க போலீஸ் ஸ்டேஷன் வந்திறங்கினாள் வெண்ணிலா. 

       “ஸார்… என் அப்பாவ பாக்கலாமா?” வெண்ணிலா. 

        “ஏம்மா… உன் அப்பா என்ன ஹோட்டல்ல ரூம் எடுத்தா தங்கி இருக்காரு? டெய்லி வந்து உன் அப்பாவ பாத்து நலம் விசாரிச்சு கொஞ்சி குழாவிட்டு போற?” என எரிச்சலாக கத்தினார் போலீஸ் இன்ஸ்பெக்டர். 

      “ஸார்… ப்ளீஸ் ஸார்…” வெண்ணிலா. 

       “இங்க பாரு மா உனக்கு குடுத்த டைம் நாளையோட முடியுது. நாளைக்கு சாய்ந்திரத்துக்குள்ள பணத்த நீ குடுக்கலனா உன் அப்பா நிரந்தரமா ஜெயில்ல தான் இருக்கனும்…” போலீஸ் இன்ஸ்பெக்டர். 

        “நாளைக்குள்ள கண்டிப்பா பணத்த குடுத்துருவேன் ஸார். ஒரே ஒரு தடவ மட்டும் அப்பா வ பாத்துட்டு போறேனே ஸார்… ப்ளீஸ்…” எனக் கண்ணீர் விழிகளுடன் இன்ஸ்பெக்டரிடம் கெஞ்சினாள் வெண்ணிலா. 

       “என்னமா நீ… உன் கூட பெரிய ரோதனையா போச்சு… சொன்னா புரிஞ்சுக்க மாட்டியா? ” போலீஸ் இன்ஸ்பெக்டர். 

       “ப்ளீஸ் ஸார்…” வெண்ணிலா. 

        “சரி… ரெண்டு நிமிஷம் தான். பேசிட்டு உடனே வந்துறனும்?” போலீஸ் இன்ஸ்பெக்டர். 

        “ரொம்ப தேங்க்ஸ் ஸார்…” என அவருக்கு நன்றி உரைத்து விட்டு தன் தந்தையை அடைத்து வைத்து இருந்த செல்லை நோக்கி சென்றாள் வெண்ணிலா. 

        “அப்பா…” என செல்லின் வெளியே நின்று குரல் கொடுத்தாள் வெண்ணிலா.

       “அம்மாடி நிலா…” என தீனக்குரலில் அழைத்தவாறு உள்ளிருந்து அறை கதவருகே வந்தார் சுந்தரம். 

        “ப்பா… என்னாச்சு ப்பா? என்னப்பா உடம்பெல்லாம் காயமா இருக்கு? அடிச்சாங்களா ப்பா?” எனப் பதறினாள் வெண்ணிலா. 

        “ம்ம்… பணத்த திருடுனா அடிக்காம கொஞ்சுவாங்களா?” எனப் பின்னிருந்து நக்கலாக குரல் கொடுத்தார் அந்த இன்ஸ்பெக்டர். 

       “நாந்தான் என் அப்பா அந்த பணத்த எடுக்கல னு சொல்றேனே ஸார்…” வெண்ணிலா. 

        “நீங்க சொன்னா அத நாங்க அப்படியே நம்பி இந்த திருட்டுப்பயல விட்டுறனுமா?” இன்ஸ்பெக்டர். 

        “ஸார் என் அப்பா திருடவே இல்ல னு சொல்றேன். திரும்ப திரும்ப என் அப்பாவ திருடன்னு சொல்றீங்க… வரம்பு மீறி போறீங்க ஸார்…” என விரல் நீட்டி எச்சரித்தாள் வெண்ணிலா. 

       “போனா போகுது… பொண்ணாச்சே னு பாவம் பாத்து உனக்கு அஞ்சு நாள் டைம் குடுத்தா என் முன்னாடியே விரல் நீட்டி பேசுறியா நீ? நாளைக்கி காலையில நீயும் உன் அப்பனும் திருடுன அந்த பதினஞ்சு லட்சம் பணம் வந்தாகனும்… இல்ல… நீயும் இந்த திருட்டுல கூட்டு னு உன்னயவும் சேத்து உள்ள தூக்கி வச்சுருவேன்…” இன்ஸ்பெக்டர். 

    “என்ன ஸார் இப்பிடி பேசுறீங்க? இதெல்லாம் அநியாயம் ஸார்… ” சுந்தரம்.

      “ஓஓ… அப்பிடிங்களா ஸார்? மன்னிச்சுருங்க ஸார்… அடிங்க… அப்பனும் பொண்ணும் சேந்து பணத்த திருடிட்டு நாடகமா ஆடுறீங்க? ஒழுங்கா ரெண்டும் பேரும் திருடுன பணத்த எடுத்து வைங்க… இல்ல நடக்குறதே வேற…” இன்ஸ்பெக்டர். 

      “ஸார்…  பணத்த நா திருடல ஸார். அது எப்பிடி காணாம போச்சு னு எனக்கே தெரியாது ஸார்… என்னய நம்புங்க ஸார்…” என கையெடுத்து கும்பிட்டு கெஞ்சினார் சுந்தரம். 

     “அதெப்பிடி உங்களுக்கே தெரியாம உன் வீட்டு ப்ரோல இருந்து பணம் போய் இருக்கும்? ஒருவேளை பணம் நடந்து போயிருக்குமோ?” என நக்கலாக கேட்டார் இன்ஸ்பெக்டர். 

     “ஸார்… சத்தியமா நா எடுக்கல ஸார்… அதுல என் பணமும் தான் ஸார் இருக்கு. என் பொண்ணு கல்லியாணத்துக்குனு சேத்த பணம் ஸார் அது. அதுல என்னோட பணமும் தான் ஸார் காணாம போச்சு… நா எங்க ஸார் போய் மொற இடுவேன்? ” என துக்கம் தாளாமல் தலையில் அடித்துக் கொண்டு அழுதார் சுந்தரம். 

      “ஓஓஓ… உன் பொண்ணு கல்லியாணத்துக்கு பணம் சேக்குறியா? பொண்ணு கல்லியாணத்துக்காக மொத்த பணத்தையும் எடுத்து எங்கயோ ஒளிச்சு வச்சுட்டு பணம் காணாம போச்சு னு நாடகமாடுறியா டா திருட்டுப்பயலே…” இன்ஸ்பெக்டர். 

       “ஸார்… கொஞ்சம் மரியாதையா பேசுங்க…” எனக் கோவத்துடன் இன்ஸ்பெக்டரின் முன் வந்து நின்றாள் வெண்ணிலா. 

      “திருட்டு நாய்களுக்கு என்ன மரியாதை கேக்குது? ஏய்… நாளைக்கி காலையில பணம் வரல… உன் அப்பன திருடன் னு முத்திரை குத்தி ஜெயில்ல தூக்கி போட்ருவேன்…” இன்ஸ்பெக்டர். 

     “யாரு திருடன்? ஆங்… யார திருடன் னு சொல்ற? அவரு எவ்ளோ நேர்மையானவருனு உனக்குத் தெரியுமா?” வெண்ணிலா. 

     “அதான் அவன் திருடன் னு ஊருக்கே தெரிஞ்சு போச்சே…” என சிரித்தவாறு கூறினார் இன்ஸ்பெக்டர். 

     “அவர் அந்த பணத்த திருடல னு நா நிருபிச்சு காட்டுறேன்… எனக்குத் தெரியும். என் அப்பா அந்த பணத்த எடுக்கல… ” வெண்ணிலா. 

      “ஓஓ… எங்க வேலைய நீ பாக்க போற னு சொல்ற? பாரு பாரு… நல்லா பாரு… ” இன்ஸ்பெக்டர். 

      “நீங்க தான் உங்க வேலைய ஒழுங்கா பாக்கலயே. அதான் நா பாக்குறேன் னு சொல்றேன்… ” வெண்ணிலா. 

      “என்ன வேணுனாலும் பண்ணிக்கோ. நாளைக்கி காலையில பணம் வந்தாகனும்… இல்ல…” என வெண்ணிலாவை விரல் நீட்டி எச்சரித்துவிட்டு சென்றார் இன்ஸ்பெக்டர். 

       அவர் சென்றதும் தன் தந்தையின் பக்கம் திரும்பி, “நீங்க ஒன்னும் கவலப்படாதீங்க ப்பா… அந்த பணத்த யாரு எடுத்தது னு நா கண்டுபுடிச்சு உங்கள திருடன் னு சொன்னவங்க எல்லார் வாயையும் மூடுறேன். நீங்க எதுக்கும் கவலப்படாதீங்க ப்பா… நா இருக்கேன்…” என்றாள் வெண்ணிலா. 

       தன் மகளை சில வருடங்களுக்கு முன்பு இருந்த அதே தைரியத்துடன் பார்க்கவும் மிகுந்த சந்தோஷமாக இருந்தாலும் மனதின் ஓரம் தனியாக என்ன செய்ய போகிறாளோ என்ற கவலையும் எட்டிப் பார்த்தது சுந்தரத்திற்கு. 

      “என்னமா பண்ண போற?” எனக் கவலையுடன் கேட்டார் சுந்தரம். 

      “நீங்க எதுக்கும் கவலப்படாதீங்க ப்பா… எல்லாத்தையும் நா பாத்துக்கிறேன்…” என ஆதரவாக சுந்தரத்தின் கரத்தை பிடித்தாள் வெண்ணிலா. 

       “கான்ஸ்டபிள்… அந்த பொண்ண மொதல்ல வெளில தொரத்து… பணத்த திருடிட்டு பெரிய உத்தமன் மாதிரி பேச வேண்டியது… யோவ்… அந்த பொண்ண வெளில தொறத்துய்யா…” எனக் கத்தினார் இன்ஸ்பெக்டர். 

      “யம்மா… இன்ஸ்பெக்டர் கத்துறது காதுல விழலியா? மொதல்ல இங்க இருந்து கிளம்பு மா நீ…” என கான்ஸ்டபிள் வந்து வெண்ணிலாவை இழுத்து சென்றார். 

       “அம்மாடி நிலா…” என சுந்தரம் உள்ளிருந்து கத்த… நீங்க எதுக்கும் கவலப்படாதீங்க ப்பா… நா பணத்தோட வருவேன்…” எனக் கத்தியபடி கான்ஸ்டபுளின் இழுப்பிற்கு இணங்கி ஸ்டேஷனை வெட்டு வெளியே வந்தாள் வெண்ணிலா. 

      “நல்ல பொண்ணுமா நீ… இன்ஸ்பெக்டர் கிட்ட போய் எதித்து பேசிட்டு இருக்க… அவரே ஒரு ஈகோ புடிச்ச ஆளு. அந்த ஆளு தான் பணத்த குடுத்துட்டா உன் அப்பாவ விட்டுர்றேன் னு சொல்றாரு ல… மொதல்ல நீ போய் யார் கிட்டயாவது கடன வாங்கி அந்த பணத்த கொண்டு வந்து குடுத்துரு. அதுக்கு அப்புறம் உன் பணத்த யாரு திருடுனது னு கண்டுபுடிச்சுக்கலாம்…” என அந்த போலீஸ் கான்ஸ்டபிள் வெண்ணிலாவிற்கு அறிவுரை வழங்கி விட்டு சென்றார். 

      மீண்டும் மீண்டும் இன்ஸ்பெக்டர் கூறிய பழிச் சொற்களே காதுகளில் ஒலிக்க, இனி ஆதியை தவிர தனக்கு வேறெந்த வழியும் இல்லை என்றுணர்ந்து மீண்டும் அவனது அலுவலகத்தை நோக்கி பயணமானாள் வெண்ணிலா. 

       “ஆச்சரியமா இருக்கு… ஒரு நாலு மணி நேரத்துக்கு முன்னாடி தான பேசுனோம். அதுக்குள்ளயும் யோசிச்சுட்டியா என்ன? உனக்கு நாளைக்கு வரைக்கும் டைம் இருக்கு நிலா…” என தன் அறைக்குள் நுழைந்த வெண்ணிலாவைக் கண்டு ஆச்சரியமானான் ஆதிரன். 

       “எனக்கு ஓகே…” என வெறுமனே கூறினாள் வெண்ணிலா. 

       “என்ன ஓகே? இப்பிடி மொட்டையா சொன்னா நா அத எந்த அர்த்தத்துல புரிஞ்சுக்கிறது நிலா?” என விஷமமாக கூறி கண்ணடித்தான் ஆதிரன். 

      சற்று முன் போலீஸ் ஸ்டேஷனில் அந்த இன்ஸ்பெக்டர் பேசியதும் தற்பொழுது ஆதிரன் கேவலமாக சைகை செய்வதும் ஒன்று போல் தோன்ற தீயில் நிற்பது போல் உணர்ந்தாள். இருந்தாலும் தனக்கு இவனை விட்டால் வேறு வழி இல்லை என தன் உணர்வுகளை உள்ளடக்கியபடி, “எனக்கு அந்த பதினஞ்சு லட்சம் பணம் வேணும். அதுக்கு நீங்க போட்ட கண்டீஷன் ஓகே னு சொன்னேன் ஸார்…” என அந்த ஸாரில் அழுத்தம் குடுத்து கூறினாள் வெண்ணிலா. 

      “வாவ் சூப்பர் நிலா. நீ இந்த கண்டீஷனுக்கு ஒத்துக்குவ னு எனக்கு ஏற்கனவே தெரியும் நிலா. எப்பிடி னு கேக்குறியா? பணத்துக்காக நீ என்ன வேணும்னாலும் செய்வ னு எனக்குத் தான் தெரியுமே…” ஆதிரன். 

       அதற்கு எவ்வித உணர்வும் வெளிக்காட்டாமல் இறுகிய கல்லென ஆதிரனின் முகத்தை பார்த்தவாறு நின்றிருந்தாள் வெண்ணிலா. 

      “ஸார் எனக்கு பணம் நாளைக்கு காலையில வேணும்…” என ரோபோ போன்ற குரலில் கூறினாள் வெண்ணிலா. 

      “காலையிலயா? ஏன் அதுக்குள்ளயும் என்ன ஆச்சு? உன் முகம் வேற சரியில்லை…” ஆதிரன். 

      “அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு ஸார்? நீங்க சொன்ன கண்டீஷன் எனக்கு ஓகே… பணம் கொஞ்சம் சீக்கிரம் வேணும்… ” வெண்ணிலா. 

       “ஓகே… பணம் ஒரு பிரச்சனையும் இல்ல… நாளைக்கி ஈவினிங் வரைக்கும் டைம் இருக்கு ல… நீ காலையில வேணும் னு சொல்றியே  அதான் கேட்டேன்…” ஆதிரன். 

        எவ்வித உணர்ச்சியும் காட்டாது போலீஸ் ஸ்டேஷனில் சற்று முன் நடந்ததை கூறினாள் வெண்ணிலா. 

        “ஓஓ… அந்த அளவுக்கு ஆகிருச்சா? சரி… அந்த திருடன் யாருனு நானே கண்டுபுடிக்கிறேன். நா உனக்கு இந்த பேவர் பண்றதுனால இந்த கல்லியாணத்துல இன்னொரு கண்டீஷன் ஒன்னு சேத்துக்கிறேன்…” ஆதிரன். 

         “என்ன கண்டீஷன் ஸார்?” வெண்ணிலா. 

         “நா உன் கழுத்துல தாலி கட்டுனதுக்கு அப்புறம் தாரளமா நீ உனக்கு ஒரு புது வாழ்க்கைய ஆரம்பிச்சுக்கலாம்… அதுக்கு நா தடையா இருக்க மாட்டேன். அதே போல அந்த தாலிய காரணம் காட்டி என் கிட்ட நீ எந்த உரிமையும் கேக்க கூடாது. ஓகே யா?” ஆதிரன். 

       “புரியுது ஸார்… உங்க கிட்ட சொத்து கேட்டு நா வந்துறக்கூடாது…அதான? கவலப்படாதீங்க ஸார். என்னோட பெரிய சொத்தே என் அப்பா தான். அவரையே நீங்க மீட்டு தரப் போறீங்க… அத விட வேற எதுவும் எனக்கு தேவை இல்லை ங்க ஸார்…” வெண்ணிலா. 

         அதைக் கேட்டு மனதினுள் சிரித்தவாறு, “ரொம்ப சந்தோஷம்… நாளைக்கி காலையில நாலு மணிக்கு நமக்கு கல்லியாணம். பக்கத்துல இருக்கிற அம்மன் கோவிலுக்கு வந்துரு… நமக்கு கல்லியாணம் ஆன அடுத்த ரெண்டு மணி நேரத்துல உண்மையான திருடன போலீஸ் முன்னாடி நா நிறுத்துறேன். இப்ப போய்ட்டு நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கி காலையில ப்ரெஷ்ஷா கல்லியாணப் பொண்ணா கோவிலுக்கு வந்து சேரு…” என மிகப் பெரிய விஷயத்தை இலகுவாக கூறி முடித்தான் ஆதிரன். 

        தன் வாழ்க்கை என்ன ஆனாலும் பரவாயில்லை தந்தை எந்த அவப்பெயரும் இல்லாமல் வெளியே வர வேண்டும் என்ற உறுதியுடன், “ரொம்ப தேங்க்ஸ் ஸார்…” எனக் கையெடுத்து கும்பிட்டு விட்டு புறப்பட்டாள் வெண்ணிலா. 

       மறுநாள் காலையில் அம்மன் சந்நிதியில் முன்பு நின்று பிரம்ம முகூர்த்தத்தில் , “மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்” எனப் பாடி ஐயர் தாலி எடுத்து ஆதிரனிடம் அளிக்க… அந்த ஐம்பொன் தாலியை வெண்ணிலாவின் கண்களை பார்த்தவாறே அவளது கழுத்தில் கட்டினான் ஆதிரன். 

                                   (நிலவு மலரும்…)

                              -செல்லம்மாள்பாரதி

    No comments yet.