கோவத்தில் முகம் சிவக்க கத்திவிட்டு எழுந்து அறைக் கதவை நோக்கி சென்ற வெண்ணிலா, ஆதிரன் கூறிய வார்த்தைகளை கேட்டு, மின்னல் தாக்கியதைப் போல் உணர்ந்து அப்படியே நின்றாள். இத்தனை வருடம் கழித்து இக்கட்டான நிலையில் இவன் முன் தான் வந்து நிற்பது தன் விதி அல்ல இவன் செய்த சதி என உணர்ந்தவளுக்கு பைத்தியம் பிடிப்பது போல் தலை சுற்றியது.
தலை சுற்றி மயக்கம் வருவது போல் இருக்க… அப்படியே திரும்பி கதவின் மீது சாய்ந்து தன்னை ஒருநிலை படுத்தியவள், “இப்ப… இப்ப நீ என்ன சொன்ன ஆதி?” என அந்த ஏசி அறையிலும் வியர்த்து வழியும் தன் முகத்தை துப்பட்டாவால் துடைத்துக் கொண்டு கேட்டாள் வெண்ணிலா.
“இப்ப நீ இங்க இருந்து வெளில போனா அப்புறம் உன் அப்பாவ எப்போதும் ஜெயில்ல தான் பாக்க முடியும் னு சொன்னேன். காதுல நல்லா விழுந்துச்சா? விழுகலனா சொல்லு இன்னொரு தடவ தெள்ளத் தெளிவா சொல்றேன்…” என அசால்ட்டாக தோளை குலுக்கியபடி கூறினான் ஆதிரன்.
“அப்ப உனக்கு என் நிலைமை முழுசா தெரிஞ்சு தான் என்னய நோகடிச்சுட்டு இருக்க?” வெண்ணிலா.
“ஆமா…” என ஆணவத்துடன் பதிலுரைத்தான் ஆதிரன்.
“ச்சே…” என முகத்தை சுழித்தபடி கதவைத் திறந்தாள் வெண்ணிலா.
“திரும்பவும் தெளிவா சொல்றேன். இன்னொரு தடவ லாம் சொல்லிட்டு இருக்க மாட்டேன். உன் அப்பா வாழ்க்கை முழுக்க ஜெயில்ல தான் இருக்கனும் னு ஆசைப்பட்டா தாராளமா இங்க இருந்து வெளில போ…” ஆதிரன்.
அதைக் கேட்டு நின்ற இடத்தில் இருந்து திரும்பிப் பார்த்தாள் வெண்ணிலா. “என்ன? என்னால செய்ய முடியாது னு நினைக்கிறியா? உன்னய என் கிட்ட வர வச்ச எனக்கு அது ஒன்னும் பெரிய விசயம் இல்ல… ” எனத் திமிராக கூறினான் ஆதிரன்.
“இப்ப என் கிட்ட இருந்து உனக்கு என்ன தான் வேணும்?” வெண்ணிலா.
“இப்ப தான் நீ கரக்ட்டா பேசுற…கொஞ்சம் உக்காந்து பேசலாமா?” ஆதிரன்.
“பரவால… நீ சொல்லு… நா கேக்குறேன்…” என எரிச்சலை உள்ளடக்கியபடி கூறினாள் வெண்ணிலா.
“வெரி குட்… ரொம்ப சரியா நிலைமைய புரிஞ்சுக்கிட்ட… நா சொல்லுவேன். அத நீ கேக்கனும். கேட்டுத்தான் ஆகனும்…” ஆதிரன்.
“பேசிட்டே இருக்காம விசயம் என்னனு சொல்றியா?” வெண்ணிலா.
“பெருசா ஒன்னும் இல்ல. உன் அப்பா எப்பிடி ஜெயில்க்குள்ள போனாங்க? உன் குடும்பத்துக்காக அந்த பணம் தேவைப்படுது னு தெரியும்… என்ன பிரச்சனை னு கொஞ்சம் தெரியும். இருந்தாலும் உன் வாயால உன் கஷ்ட்டத்த கேக்கனும் னு ஆசையா இருக்கு…” ஆதிரன்.
“தெரிஞ்சுக்கிட்டு என்ன பண்ண போற? என்னய வெளில போக விட்டனா நா வேற இடத்துல பணத்த அரேன்ஜ் பண்ணிப்பேன்…” வெண்ணிலா.
“ஓஓ… அப்பிடியா? நீங்க கேட்டதும் உன்னய நம்பி மொத்தமா பதினஞ்சு லட்சத்த யாருமா உனக்கு தூக்கி குடுப்பாங்க?” என அந்த நம்பி என்ற வார்த்தையில் நன்றாக அழுத்தம் குடுத்து கூறினான் ஆதிரன்.
அவன் சொல்வதும் சரிதானே… தன்னை நம்பி யார் கொடுப்பார் இவ்வளவு பெரிய பணத்தை? என நினைத்தபடி அமைதியாக நின்றாள் வெண்ணிலா. அவளது அமைதி அவனுக்கு மேலும் கொண்டாட்டத்தை ஏற்படுத்த, “இப்பவாவது என்ன ஆச்சு னு சொல்ல முடியுமா?” என நக்கலாக வினவினான் ஆதிரன்.
கண்ணை மூடி பெருமூச்சொன்று விட்டவள், “என் அப்பா சீட்டு காசு எடுத்து நடத்துனாங்க. அந்த பணத்த போன வாரம் யாரோ திருடிட்டாங்க. ஆனா அந்த பணத்தை என் அப்பா தான் எடுத்துக்கிட்டு பொய் சொல்றாங்கனு சீட்டு காசு போட்டவங்கலாம் சேந்து போலீஸ் ல கம்ப்ளைன்ட் குடுத்துட்டாங்க. போலீஸ்க்கிட்ட கெஞ்சி அஞ்சு நாள் டைம் வாங்கி இருக்கேன் மொத்த பணத்தையும் திருப்பி குடுத்துர்றேன்னு. அதுல ஏற்கனவே மூனு நாள் முடிஞ்சு போச்சு. நாளைக்குள்ள நா பணத்த குடுத்தாகனும்… இதான் என் பிரச்சனை. போதுமா? கேட்டு ரொம்ப சந்தோஷப்படீங்களா?” வெண்ணிலா.
“வெயிட் வெயிட்… நடந்தது என்ன னு தெளிவா சொல்லு…” ஆதிரன்.
“இப்ப தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க? அதான் பிரச்சனை என்ன னு தெளிவா சொல்லிட்டேன் ல… என் கஷ்ட்டத்த என் வாயால கேட்டு சந்தோஷப்பட்டாச்சு… இனியும் என்ன இருக்கு?” வெண்ணிலா.
“இனித்தானடி விசயமே இருக்கு…” என நினைத்தவாறு மேசையின் கீழிருந்து ஒரு சிறிய பையை மேலே எடுத்து வைத்தான் ஆதிரன்.
“இந்தா… இது உனக்குத்தான். இதுல பதினஞ்சு லட்சம் இருக்கு…” என விட்டேத்தியாக கூறினான் ஆதிரன்.
அதைக் கேட்டு திகைத்து ஆதிரனைப் பார்த்தாள் வெண்ணிலா. “என்ன அப்பிடி பாக்குற? உனக்குத் தேவையான பணம் இதுல இருக்கு. தெரிஞ்சு என்ன பண்ண போற னு கேட்ட ல… அதுக்கு இதுதான் பதில். உன்னோட சோக கதைய கேட்டு என் மனசு உருகி இத உனக்கு குடுக்கலாம் னு எடுத்து வச்சு இருக்கேன்…” ஆதிரன்.
“இவன் எல்லாமே தெரிஞ்சு வச்சுட்டு தான் நம்மள இப்பிடி சித்திரவதை பண்றானா? ஆனா ஏன்?” என வெண்ணிலா யோசித்துக் கொண்டிருக்கையில் அவள் முகத்தின் முன் சொடக்கிட்டு அழைத்தான் ஆதிரன்.
“என்ன ஒரே யோசனையா இருக்கு? இந்த பணம் வேணும்னா சொல்லு என்ன நடந்துச்சுனு டீட்டைலா… நீதான் பணம் வேணும்னா என்ன வேணுனாலும் பண்ணுவியே…” ஆதிரன்.
அவனின் இறுதி வார்த்தையில் வெண்ணிலாவின் சுய மரியாதை தூண்டப்பட்டு விட… “என் சோக கதைய கேட்டு சந்தோஷப்படனும் சொல்லு னு சொன்னீங்க… சொல்லிட்டேன்… எனக்கு இந்த பணம் வேண்டாம்…” என எழ முயன்றாள் வெண்ணிலா.
“ஓஹோ… அப்பிடியா? என் கிட்ட நீ பணம் வாங்கலனா நீ யார்க்கிட்டயுமே பணம் வாங்க முடியாத அளவுக்கு பண்ணிருவேன்…” என உறுதியான குரலில் கூறினான் ஆதிரன்.
“ஐயோ என்னய ஏன் இப்பிடி சித்திரவதைப் பண்றான்… இவனுக்கு இருக்குற செல்வாக்குக்கு செஞ்சாலும் செய்வான். பின்ன சும்மாவா இவனோட பேக்கிரவுண்ட் அப்பிடிபட்டதாச்சே… ஆதி இண்டஸ்ட்ரீஸ் னா சௌத் இண்டியாலயே நம்பர் ஒன் கம்பெனி ஆச்சே… அதோட ஓனர் நினச்சா என்ன வேணுனாலும் செய்யலாம். கருணாகரன் விசிட்டிங் கார்டு குடுக்குறப்பவே சொல்லி தான குடுத்தாரு. ஆதி இண்டஸ்ட்ரீஸ் கம்பேனியோட ஓனர பாக்குறது ரொம்ப கஷ்ட்டம்… உனக்காக பேசி அப்பாயின்மென்ட் வாங்கி இருக்கேன். தாராள மனசுக்காரரு… இவரு கண்டிப்பா உனக்கு ஹெல்ப் பண்ணுவாரு னு லாம் சொல்லி தான அனுப்புனாரு. ஆனா அந்த ஆதி இண்டஸ்ட்ரீஸ் கம்பேனியோட ஓனர் இவனா இருப்பான் னும் அந்த தாராள பிரபு இவனா இருப்பான்னு கொஞ்சங்கூட நா நெனச்சு பாக்கலயே… இத்தனை வருஷத்துல இவன மறந்துட்டு நிம்மதியா இருந்த என்னய எனக்கு இப்பிடி ஒரு பிரச்சனைய உருவாக்கி இவன் முன்னாடி கொண்டு வந்து நிறுத்தி இருக்கியே கடவுளே…” என மனதினுள் வெண்ணிலா புலம்பிக் கொண்டிருக்க, “அப்பிடி என்ன பலமா யோசிச்சுட்டு இருக்க? இவன் கிட்ட இருந்து எப்பிடி தப்பிக்கலாம்னா? கண்டிப்பா அது முடியாது…” என ஆணவத்துடன் கூறினான் ஆதிரன்.
“இன்னும் என் கிட்ட இருந்து உனக்கு என்ன தான் வேணும்?” வெண்ணிலா.
“பிரச்சனை என்ன னு எனக்கு முழுசா தெரியனும்… அதாவது இந்த பணம் எப்பிடி காணாம போச்சு னு எனக்குத் தெரியனும்…” ஆதிரன்.
“ஹப்பாடா… எல்லாரையும் போல இவனும் பணத்த நாங்க திருடிட்டோம் னு நெனக்கல. எப்பிடி காணாம போச்சு னு கேக்குறான்… அந்த வரைக்கும் நம்ம மேல இவனுக்கு நல்ல அபிப்பிராயம் இருக்கு… இவன் கிட்ட உண்மைய சொல்லலாம்…” என நெஞ்சின் ஓரம் நிம்மதி பரவ ஒரு வாரத்திற்கு முன்பு தன் வாழ்வில் நிகழ்ந்த சோகமான நிகழ்வை கூற ஆரம்பித்தாள் வெண்ணிலா.
சிறியதும் இல்லாமல் பெரியதும் இல்லாமல் நடுத்தரமான இல்லம் வெண்ணிலாவுடையது. தந்தை சுந்தரம் டிவிஎஸ் இல் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். தாய் சுதா வெண்ணிலாவின் சிறு வயதில் காய்ச்சல் வந்து இறந்து விட தாயில்லாமல் தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தவள். படித்து முடித்து விட்டு அருகிலுள்ள நர்சரி பள்ளியில் டீச்சராக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள் வெண்ணிலா. சுந்தரத்திற்கு மகள் மட்டுமே உலகம். வெண்ணிலவிற்கோ தந்தை மட்டுமே உலகம். தந்தையும் மகளும் சந்தோஷமாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்தனர் அந்த மோசமான நாள் வரும் வரையில்…
“அப்பா… நா ஸ்கூலுக்கு போய்ட்டு வர்றேன்…” என அறையின் உள் நோக்கி குரல் கொடுத்தாள் வெண்ணிலா.
“ஸ்கூலுக்கு கிளம்பிட்டியா? சாப்டியா? இல்லையா நீ?” சுந்தரம்.
“நா சாப்டேன் ப்பா… நீ நேரத்துக்கு சாப்பிட்டுரு…” வெண்ணிலா.
“வீட்ல தான இருக்கேன் நானு… நா மெதுவா சாப்டுக்கிறேன்…” சுந்தரம்.
“மெதுவா சாப்பிட்டுக்கிறியா? கொன்ருவேன்… ஒழுங்கா டைத்துக்கு சாப்பிடு…” என இடுப்பில் கை வைத்து முறைத்தாள் வெண்ணிலா.
“சரி சரி மா… நாளைக்கி சீட்டு பணம் பிரிக்கனும். நல்லசிவத்த வர சொல்லி இருக்கேன். அவன் வந்ததும் அவனும் நானும் சேந்து சாப்பிட்டுக்கிறேன் நிலா…” சுந்தரம்.
“நீ ஏன்ப்பா சீட்டுப்பணம் லாம் எடுத்து நடத்துற? வயசான காலத்துல இதெல்லாம் உனக்குத் தேவையா?” வெண்ணிலா.
“வேற என்ன மா பண்ண சொல்ற? உன் கல்லியாணத்துக்கு நகை சேக்கனும் ல… உன்னய ஒரு நல்ல இடத்துல கல்லியாணம் பண்ணி குடுத்தா தான் எனக்கு நிம்மதி…” சுந்தரம்.
“ஐயோ அப்பா… அதுக்குத்தான் அம்மாவோட நகைலாம் இருக்கு ல… நா கல்லியாணம் பண்ணிட்டு எங்க போக போறேன்? அப்பிடிலாம் உன்னய விட்டுட்டு எங்கயும் போக மாட்டேன். தினமும் இதே பாட்ட பாடிட்டு இருக்காத… நா ஸ்கூலுக்கு கிளம்புறேன்…” வெண்ணிலா.
“ஹா ஹா ஹா… அம்மாவோட நகை இருந்தாலும் உனக்கு னு நா ஏதாவது சேக்கனும் ல நிலா…” சுந்தரம்.
“சரி சரி… என்னவோ பண்ணிட்டு போ… ஆனா இதுனால எந்த பிரச்சனையும் வந்துறக் கூடாது. பணம் விசயம் ப்பா… ரொம்ப கவனமா இருக்கனும்…” வெண்ணிலா.
“சரி மா… இது தான் கடைசி சீட்டு. நாளைக்கு பிரிச்சதோட இதுக்கு மேல நா சீட்டு எடுத்து நடத்த மாட்டேன் நிலா…” சுந்தரம்.
“ஏன் ப்பா? என்ன இந்த திடீர் ஞான உதயம்?” என கிண்டலாக சிரித்தாள் வெண்ணிலா.
“திடீர் ஞான உதயம் லாம் ஒன்னும் இல்ல. உன் கல்லியாணத்துக்கு சேக்க வேண்டிய நகைய சேத்துட்டேன். நாளைக்கு சீட்டு பிரிச்சுட்டா முடிஞ்சுச்சு. அதுக்கு அப்புறம் நா ஏன் சீட்டு எடுத்து நடத்த போறேன்?” என சிரித்தார் சுந்தரம்.
“வெரி குட் பாய்…” என குறும்புடன் சிரித்தவாறு சுந்தரத்தின் முதுகை தட்டிக் கொடுத்தாள் வெண்ணிலா.
“நா பாயா? குறும்புக்காரி…” எனப் பாசத்துடன் வெண்ணிலாவின் கன்னத்தை கிள்ளி சிரித்தார் சுந்தரம்.
அப்பொழுது, “சுந்தரம்… சுந்தரம்…” என்றக் குரல் வாசல்புறம் குரல் கேட்க, “நல்லசிவம் வந்துட்டான் போல… நா போய் அவன பாக்குறேன். நீ ஸ்கூலுக்கு கிளம்பு மா…” என்றார் சுந்தரம்.
“சரி ப்பா… நேரத்துக்கு சாப்பிட்டுறனும்?” வெண்ணிலா.
“சரி மா…” என சிரித்தவாறு வெண்ணிலாவுடன் வீட்டின் வெளியே வந்தார் சுந்தரம்.
“சரி ப்பா… நா ஸ்கூலுக்கு கிளம்புறேன்…” என புன்னகையுடன் பள்ளிக்கு புறப்பட்டாள் வெண்ணிலா.
“உள்ள வா நல்லசிவம்…” என சுந்தரம் வந்தவரை வரவேற்று வீட்டின் உள்ளே செல்வதை காதில் வாங்கியபடியே பள்ளிக்கு சென்றாள் வெண்ணிலா.
அதுதான் அவள் சந்தோஷமாக இருந்த இறுதி தருணங்கள். மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்புகையில் வீட்டின் முன் கூட்டம் கூடி இருப்பதைக் கண்டு பதறி வீட்டின் உள்ளே நுழைந்தவளின் கண் முன்னே போலீஸ் சுந்தரத்தை கைது செய்து கொண்டிருந்தது.
“என்ன ஆச்சு ஸார்? ஏன் என் அப்பாவ அரெஸ்ட் பண்றீங்க?” என பதட்டத்துடன் வினவினாள் வெண்ணிலா.
“ம்ம்… ஊரான் வீட்டு பணத்த திருடி தின்னா அரெஸ்ட் பண்ணாம பூசையா பண்ணுவாங்க…” எனக் கூட்டத்தில் நின்றிருந்த பெண்ணொருத்தி குரல் கொடுத்தாள்.
“என் மாமியார் ஹாஸ்பிடல் செலவுக்கு னு கொஞ்சம் கொஞ்சமா சேத்து வச்சது. அத திருடி தின்ன உங்களுக்குலாம் நல்ல சாவு வருமா?”
“அப்பனும் மகளும் எங்க கிட்ட இருந்து திருடுன காச எங்க ஒழிச்சு வச்சு இருக்கீங்க? “
“இந்த திருட்டு ல இவளும் கூட்டா தான் இருக்கும். இவளையும் சேத்து அரெஸ்ட் பண்ணுங்க ஸார்…” போன்ற குரல்கள் வெண்ணிலாவை சுற்றி ஒலிக்க பயந்து அதிர்ந்து போனாள் வெண்ணிலா.
“கொஞ்சம் எல்லாரும் சும்மா இருக்கீங்களா? அதான் போலீஸ் கம்ப்ளைன்ட் குடுத்து இருக்கீங்கல்ல… நாங்க பாத்துக்கிறோம்…” என போலீஸ் இன்ஸ்பெக்டர் சுற்றி இருந்த கூட்டத்தைப் பார்த்து ஒரு அதட்டு அதட்டினார்.
“என்ன ஸார் சும்மா இருக்க சொல்றீங்க? இவன் திருடுனது எங்க பணம் ஸார்… அவங்க அவங்க குடும்ப கஷ்ட்டத்துலயும் கொஞ்ச கொஞ்சமா சேத்து வச்ச பணத்த இவன் மொத்தமா திருட்டிட்டு போறத வேடிக்கை பாத்துட்டு இருக்க சொல்றீங்களா?”
“சரி… அப்ப நீங்களே எல்லாத்தையும் பாத்துக்கங்க… நாங்க கிளம்புறோம்…” போலீஸ் இன்ஸ்பெக்டர்.
“என்ன ஸார் படக்குனு இப்பிடி சொல்லிட்டீங்க?”
“பின்ன என்ன சொல்ல சொல்றீங்க? கம்ப்ளைன்ட் குடுத்து இருக்கீங்க… உங்க பணத்த உங்க கிட்ட சேக்க வேண்டியது போலீஸோட பொறுப்பு. எங்க வேலையில குறுக்க வராதீங்க…” எனக் கூட்டத்தைப் பாத்து அதிகாரமாய் கத்திவிட்டு, “யம்மா… யாருமா நீ? இவருக்கு என்ன வேணும்?” என வெண்ணிலாவைப் பார்த்து கேட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர்.
“என் பேரு வெண்ணிலா ஸார்… நா இவரோட பொண்ணு ஸார். எதுக்கு என் அப்பாவ அரெஸ்ட் பண்றீங்க ஸார்?” என கண்ணீர் சிந்தியவாறு கேட்டாள் வெண்ணிலா.
“ஓஓ… நீ இவரோட பொண்ணா? இவங்க எல்லாரும் சீட்டுப் போட்டு சேத்த பணத்த உன் அப்பா திருடிட்டாரு… அதுக்காக அரெஸ்ட் பண்றோம்…” போலீஸ் இன்ஸ்பெக்டர்.
“என்ன ஸார் சொல்றீங்க? என் அப்பா அந்த மாதிரி லாம் பண்ணக்கூடிய ஆள் இல்ல. நீங்க… நீங்க ஏதோ தப்பா புரிஞ்சுக்கிட்டு அரெஸ்ட் பண்றீங்க ஸார்…” என தன் அப்பாவை பார்த்து அழுதவாறு கூறினாள் வெண்ணிலா.
“யம்மா… அதெல்லாம் ஆதாரத்தோட தான் அரெஸ்ட் பண்ணி இருக்கோம்… எது பேசுறதா இருந்தாலும் ஸ்டேஷன் ல வந்து பேசிக்க மா…” என கரறாக கூறி விட்டு சுந்தரத்தை இழுத்துக் கொண்டு சென்றார் போலீஸ் இன்ஸ்பெக்டர்.
“ஐயோ… அப்பா…” என்ற வெண்ணிலாவின் அழு குரலைக் கேட்டு, “யம்மாடி நிலா… நா திருடல மா அந்த பணத்த…” எனக் கதறியவாறு போலீஸ் வண்டியில் ஏறிச் சென்றார் சுந்தரம்.
“இந்த திருட்டுல இவளும் தான் கூட்டா இருப்பா…”
“இதெல்லாம் ஒரு பொழப்பா? த்தூ…” என பலவாறாக வெண்ணிலாவையும் சுந்தரத்தையும் மாறி மாறி வசைபாடியபடி அந்த கூட்டம் கலைந்து சென்றது.
அழுது வடிந்த கண்ணீரை துடைத்தபடி ஆட்டோவில் போலீஸ் ஸ்டேஷன் நோக்கி விரைந்தாள் வெண்ணிலா.
“ஸார்… ஸார்…” எனக் கதறியபடி சற்று முன் சுந்தரத்தை அரெஸ்ட் செய்த இன்ஸ்பெக்டர் முன் சென்று நின்றாள் வெண்ணிலா.
“நீயா? வந்துட்டியா? இங்க பாரு மா… அத்தன பேரு சீட்டு போட்ட பணத்துக்கு உன் அப்பா தான பொறுப்பு? நாளைக்கு பிரிக்கனும் னு இருக்குறப்ப இன்னக்கி பணத்த காணோம் னு உங்க அப்பா சொல்றாரு. ப்ரோவ உடைக்கல… பூட்ட உடைக்கல… ஆனா உள்ள இருந்த பணத்த காணோமாம்… இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு? ஒழுங்கா எடுத்து வச்சு இருக்குற பணத்த குடுத்துற சொல்லு உன் அப்பாவ…” போலீஸ் இன்ஸ்பெக்டர்.
“ப்ளீஸ் ஸார்… என் அப்பா அப்பிடிபட்டவர் இல்ல ஸார்… நீங்க வேணுனா அக்கம் பக்கத்துல உள்ளவங்க கிட்ட விசாரிச்சு பாருங்க… என் அப்பாவ பத்தி ஒருத்தர் தப்பா சொல்ல மாட்டாங்க…” வெண்ணிலா.
“அவரு மேல கம்ப்ளைன்ட் குடுத்ததே அந்த அக்கம் பக்கத்துல உள்ளவங்க தான மா…” இன்ஸ்பெக்டர்.
“ஸார்… ப்ளீஸ் ஸார்…” எனக் கண்ணீருடன் கெஞ்சினாள் வெண்ணிலா.
ஏதோ சின்னப் பொண்ணா இருக்குறதுனால ஒரு சந்தர்ப்பம் குடுக்குறேன். அஞ்சு நாள் தான் உனக்கு டைம். நீங்க எடுத்த பணத்த கொண்டு வந்து குடுப்பியோ இல்ல யார்க்கிட்டயும் கடன் வாங்கி குடுப்பியோ அதெல்லாம் எனக்குத் தெரியாது. இன்னும் அஞ்சு நாளுல பணம் வந்து சேரனும். இல்லனா சாட்சியும் சூழ்நிலையும் உனக்கு எதிரா இருக்கு. அப்புறம் என்னால எதுவும் பண்ண முடியாது.. இது தான் உன் அப்பாவ காப்பாத்திக்கிற ஒரே வழி…” இன்ஸ்பெக்டர்.
“சரிங்க ஸார்… கண்டிப்பா ஸார்…” எனக் கண்ணீரைத் துடைத்தபடி, “என் அப்பாவ பாக்கலாமா ஸார்?” என்றாள் வெண்ணிலா.
“சரி… சீக்கிரம் பாத்துட்டு கிளம்பு…” இன்ஸ்பெக்டர்.
தலை குனிந்து கம்பிக்கு உள்ளே கண்ணீர் சிந்தியபடி இருந்த சுந்தரத்தின் முன் நின்று, “அப்பா…” என்றாள் வெண்ணிலா.
“நிலா…” என அதற்கு மேல் பேச முடியாமல் அழுதார் சுந்தரம்.
“அழாதீங்கப்பா… நா எப்பிடியாவது உங்கள வெளில கொண்டு வந்துருவேன் ப்பா…” வெண்ணிலா.
“அம்மாடி… உன் மேல சத்தியமா நா அந்த பணத்த எடுக்கல மா. நீ என்னய நம்புனா போதும். எனக்கு என்ன நடந்தாலும் கவலப்பட மாட்டேன். யார் என்ன சந்தேகப்பட்டாலும் நீ என்னய சந்தேகப்பட்டுறாத மா. அப்பிடி ஒரு சந்தேகம் உன் மனசுக்குள்ள வந்துட்டா அந்த செகண்ட்டே நா செத்ததுக்கு சமம் மா… சத்தியமா அத நா எடுக்கல மா…” என அழுதார் சுந்தரம்.
“எனக்குத் தெரியும் ப்பா… என் அப்பாவ பத்தி எனக்குத் தெரியும்… அதான் அம்மாவோட நகை இருக்குல அதை வச்சு பணத்த கட்டிர்றேன் ப்பா… எங்க இருக்கு னு சொல்லுங்க…” வெண்ணிலா.
“அத உன் கல்லியாணத்துக்கு தான் மா எடுக்க முடியும். நானே நெனச்சாலும் எடுக்க முடியாது மா. இதுக்கு மேல அந்த நகைய பத்தி எதுவும் கேக்காத நிலா… அது இருக்க வேண்டிய இடத்துல பத்ரமா இருக்கு. என்னய மன்னிச்சுரு மா…” என மண்டியிட்டு அழுதார் சுந்தரம்.
அவரின் நிலையைக் கண்டு, “சரிப்பா… பணத்த நா எப்பிடியாவது ரெடி பண்ணிர்றேன்… நீங்க கவலப்படாதீங்க…” என்றவாறு அங்கிருந்து கிளம்பினாள் வெண்ணிலா.
“நானும் யார் யார்க்கிட்டையோ கேட்டுப் பாத்துட்டேன். யாரும் பணம் குடுக்க முன் வரல… கடைசியா தான் கருணாகரன் ஸார பாக்க போனேன். அதுனால தான் இப்ப உன் முன்னாடி உக்காந்து அழுதுட்டு இருக்கேன்…” என தன்னை மீறி வழிந்த கண்ணீரை துடைத்தபடி கூறி முடித்தாள் வெண்ணிலா.
“சும்மா சொல்லக் கூடாது… ஸேட் ஸ்டோரியா இருந்தாலும் சூப்பரா இருந்துச்சு… அப்போ உன் வீட்ல வச்சு இருந்த பணத்தக் காணோம்… ஆனா உன் அப்பா அத எடுக்கல னு சொல்றாரு…” ஆதிரன்.
அதற்கு எந்த மறுமொழியும் கூறாமல் அப்படியே அவனை பார்த்தவாறே அமர்ந்திருந்தாள் வெண்ணிலா.
“சரி… அதெல்லாம் இருக்கட்டும்… இந்த க்ரைம் ல உன்னய எப்பிடி விட்டாங்க? ஏன் கேக்குறேன்னா… நீதானா ஆகப் பெரிய கிரிமினல்?” என சந்தேகமாக வினவினான் ஆதிரன்.
அதற்கு எதுவும் கூறாமல் அமைதியாக எழுந்தாள் வெண்ணிலா. “ஹேய்… எங்க கிளம்புற? உக்காரு உக்காரு… இனித்தான மெயின் விசயமே பேச வேண்டியது இருக்கு…” என வெண்ணிலாவை உக்கார வைத்தான் ஆதிரன்.
“இப்ப நீ என்ன தான் சொல்ல வர்ற?” வெண்ணிலா.
“பெருசா ஒன்னும் இல்ல… அந்த பதினஞ்சு லட்சத்த நானே தர்றேன்…” ஆதிரன்.
“ரொம்ப தேங்க்ஸ் ஆதி … உன் பணத்த கண்டிப்பா சீக்கிரமே திருப்பி குடுத்துருவேன்…” என சந்தோஷத்தில் நிம்மதியானாள் வெண்ணிலா.
“இந்த பணத்த நீ எனக்கு திருப்பிலாம் தர வேண்டாம்… நீயே வச்சுக்க… உன் கிட்ட இருந்து எனக்கு எதுவும் வேண்டாம்…” ஆதிரன்.
அவனது வார்த்தைகளில் புருவத்தை உயர்த்தினாள் வெண்ணிலா. “எதையுமே உனக்கு ஏதாவது ஆதாயம் இல்லாம செய்ய மாட்டியே நீ… என் கிட்ட இருந்து எதுவும் வேண்டாம்னா நா உனக்காக என்ன செய்யனும்?” வெண்ணிலா.
“சூப்பர் நிலா… ரொம்ப சரியா என்னய புரிஞ்சு வச்சு இருக்க… ரொம்ப சிம்பிள்… நா உன்னய கல்லியாணம் பண்ணுவேன். நீ அதுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்க கூடாது. இதான் என்னோட கண்டீசன். இதுக்கு ஓகே னா இந்த பணம் மொத்தமும் உனக்குத்தான்… ” ஆதிரன்.
“என்ன உலர்ற நீ?” என அதிர்ச்சியானாள் வெண்ணிலா.
“யெஸ்… ஐ வான்ட் மேரி யூ…” ஆதிரன்.
“கண்டிப்பா இது நடக்காது… ” வெண்ணிலா.
“உனக்கு என்னய புடிக்குமா?” ஆதிரன்.
“நிச்சயமா உன்னய எனக்கு புடிக்காது… ” வெண்ணிலா.
“அப்ப இதுதான் என்னோட கண்டீஷன்… நானும் நீயும் கல்லியாணம் பண்ணிக்கனும். அதுக்குனு கல்லியாணம் பண்ணிட்டு சேந்து வாழனும் னு லாம் சொல்ல ல… கல்லியாணம் முடிஞ்சதும் நீ பாட்டுக்கும் உன் வேலைய பாத்துட்டு போகலாம்… நா பாட்டுக்கும் என் வேலய பாப்பேன். நா உன் கழுத்துல தாலி கட்டுனத்துக்கு அப்புறம் அத நீயே கழட்டி கூட போடலாம். அத பத்தி எனக்கு கவல இல்ல. எனக்குத் தேவை நா உன் கழுத்துல தாலி கட்டனும் உன்னோட எதிர்ப்பில்லாம…” என தோளை குலுக்கியபடி கூறினான் ஆதிரன்.
“என்ன பேசிட்டு இருக்க நீ?” என புரியாமல் குழம்பினாள் வெண்ணிலா.
“நா என் கண்டீஷன தெளிவா சொல்லிட்டேன். இதுக்கு நீ ஒத்துக்கிட்டா இந்த பணம் மொத்தமும் உனக்குத்தான். இத நீ எனக்கு திருப்பி தர தேவை இல்லை… ஒன்னும் அவசரம் இல்ல… இன்னக்கி ஃபுல்லா நல்லா யோசிச்சுட்டு நாளைக்கி வந்து உன் பதில சொல்லு… உன்னய ஒன்னும் நா கட்டாயப்படுத்தல… உன் விருப்பம் தான்… இப்ப நீ போகலாம்…” என அவள் செல்ல அனுமதி அளித்தான் ஆதிரன்.
“இவனுக்கு என் கிட்ட இருந்து என்ன தான் வேணும்? கல்லியாணம்ங்கிறான்… தாலிய தூக்கி போட்டுட்டு போகலாம் ங்கிறான்… ஒன்னுமே புரியலயே…” எனக் குழம்பியவாறு அங்கிருந்து கிளம்பினாள் வெண்ணிலா.
அவள் குழப்பத்துடன் செல்வதைக் கண்ட ஆதிரன் வன்மமாக சிரித்துக் கொண்டான். “குழப்பமா இருக்கா நிலா? அந்த பணத்த எடுத்ததும் நாந்தான்… உன்னய இங்க வரவச்சதும் நாந்தான்… என்னய மீறி உன் வாழ்க்கையில அணுவும் அசையாது டி… இப்ப தான என் விளையாட்ட ஆரம்பிச்சு இருக்கேன்… இனி போக போக பாரு…” என செல்லும் வெண்ணிலாவை சிசிடிவி கேமராவில் பார்த்து சிரித்தான் ஆதிரன்.
(நிலவு மலரும்…)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.