அரக்கன் -02

Chellammal Bharathi | 26 Nov 2025 | Share

   “வாங்க மிஸ் வெண்ணிலா…” என்ற பழகிய குரல் கேட்டு ஆச்சரியத்துடன் உள்ளே இருந்தவனின் முகத்தை நிமிர்ந்து நன்றாக பார்த்தாள் வெண்ணிலா. 

     எதிரே இருந்தவனின் புன்னகை முகத்தைக் கண்டு வெண்ணிலாவின் முகத்தில் இரத்தம் வற்றி வெளிறி போனது. உச்சபட்ச பயத்தில், “நீயா? ” என ஓநாய் முன் நிற்கின்ற ஆடாக உடல் வெடவெடத்து போய் நின்றாள் வெண்ணிலா. 

      “ஓஓஓ…  பரவாயில்லையே… என்னயலாம் உனக்கு ஞாபகம் இருக்கா? மிஸ்ஸா?  இல்ல மிஸ்ஸஸ்ஸா? ” என நக்கலாக வினவினான் அவன். 

      “மறக்க முடியுமா உன்னயலாம்… இன்னக்கி இந்த நிலைமையில நா நிக்கிறதுக்கு முழுக்காரணமே நீதானடா… எப்பிடி தைரியமா இருந்தவள இப்பிடி கொண்டு வந்து நிக்க வச்சு இருக்கியேடா…”என மனதினுள் நினைத்தபடி தன் கண்களை இறுக்க மூடி நடுங்கி கொண்டிருக்கும் தன் மனதையும் உடலையும் திடப்படுத்திக் கொண்டாள் வெண்ணிலா. 

     “என்ன? மனசுக்குள்ள என்னய என்னமோ கேவலமா திட்டுற மாதிரி இருக்கு…” என சிரித்தான் அவன். 

     “அப்பிடிலாம் ஒன்னும் இல்ல. நா… நா… மிஸ்டர் தீரன் ஸார பாக்க வந்தேன். அவரு இல்லையா?” என பயத்தில் நாக்கு வறண்டு விட அதை ஈரப்படுத்திக் கொண்டே மெதுவாக வினவினாள் வெண்ணிலா. 

     “நாந்தான் அந்த மிஸ்டர் தீரன் ஸார்…” என மிடுக்காக கூறினான் அவன். 

     “இவன் பேரு வேற ஆச்சே…” என நினைத்தபடி, “இல்லை… நீ… நீங்க பொய் சொல்றீங்க…” என சந்தேகத்துடன் கூறினாள் வெண்ணிலா. 

     “ஹா ஹா ஹா ஹா… குட் ஜோக்… அயாம் தீரன் … ஃபுல் நேம்  ஆதிரன்…” என தன் நேம் போர்டை அவள் முன் சற்று தூக்கி காட்டி விட்டு கர்வத்துடன் சிரித்தான்  ஆதிரன். 

     தன் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள தனது பேராசிரியர் தன்னிடம் அளித்த விசிட்டிங் கார்டை கைப்பையிலிருந்து எடுத்துப் பார்த்த வெண்ணிலா, அதில்  Mr. ஆதிரன்  என்றிருக்க… தன்னையே நொந்து கொண்டாள். பேராசிரியர் வெறுமனே தீரன் என்றுரைத்து விசிட்டிங் கார்டை அளித்திருக்க அதை சரியாக கவனிக்காமல் வந்த தன் முட்டாள் தனத்தை எண்ணி வருந்தினாள் வெண்ணிலா. 

     தான் உதவி கேட்க போவது இவன் தான் என தெரிந்திருந்தால் நிச்சயமாக இந்த பக்கம் வந்து இருக்க மாட்டேனே என மனதினுள் பொறுமியபடி, “நா பேர சரியா பாக்கல…” என முனுமுனுத்தாள் வெண்ணிலா. 

     “பாத்து இருந்தா வந்து இருக்க மாட்ட?  அதான? ம்ம்ம்… பரவால… உன்னய இப்பிடி என் முன்னாடி தலை குனிஞ்சு நிக்கிறத பாக்குறப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு…” என தனது சாய்விருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்தபடி அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தான் தீரன் எனும் ஆதிரன். 

     “தனக்கு இவனிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்கப்போவதில்லை” என உணர்ந்து, “அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை… ஸாரி… தெரியாம வந்துட்டேன்…” என வெளியே செல்ல திரும்பினாள் வெண்ணிலா. 

      “அப்போ… நான் னு தெரிஞ்சு இருந்தாலும் வந்து இருப்ப?” ஆதிரன். 

       “ஆதி ப்ளீஸ்… பழச மனசுல வச்சுட்டு இப்பிடி நக்கலா பேசாத… எனக்கு ஒரு பெரிய உதவி தேவைபடுது… யார் கிட்ட போய் கேக்குறதுனு தெரியாம இருந்தப்போ கருணாகரன் ஸார் தான் என்னய இங்க வர சொன்னாங்க. மத்தபடி உன்னய பாக்கனும் னு ஆச பட்டு இங்க வரல. இன்பாக்ட் என் வாழ்க்கையில உன் முன்னாடி வந்து நின்னுறவே கூடாது னு நெனச்சேன். ஆனா விதி விடல. நானே பெரிய பிரச்சனையில இருக்கேன். இதுல நீ வேற பேசி என்னய மேலும் நோகடிக்காத… இங்க வந்தது என் தப்பு தான். மன்னிச்சுரு…” என கையெடுத்து கும்பிட்டு விட்டு திரும்பி நின்றபடியே அவனது முகத்தை பார்க்காமல் கூறி விட்டு தன் கண்ணீர் முகத்தை அவன் காணக் கூடாது என கதவை நோக்கி வேகமாக நடந்தாள் வெண்ணிலா. 

      “இங்க இருந்து போய்ட்டா பதினஞ்சு லட்ச பணத்துக்கு என்ன பண்ணுவ?” என கூலாக தலையை கோதியபடி கேட்டான் ஆதிரன். 

       “எதையாவது வித்து ரெடி பண்ணிக்கிறேன்…” என கதவின் கைபிடியில் கை வைத்தாள் வெண்ணிலா. 

       “எத வித்து ரெடி பண்ணுவ? அப்பிடி விக்கிற அளவுக்கு உன் கிட்ட என்ன இருக்கு? ஒருவேளை…” என இழுத்தபடி நக்கலாக சிரித்தான் ஆதிரன். 

       “ஆதி … தி இஸ் யுவர் லிமிட். வரம்பு மீறி பேசுற நீ…” எனக் கோவத்துடன் அவனை நோக்கி வந்தாள் வெண்ணிலா. 

       “என்னடி பெரிய லிமிட்டு? அன்னக்கி நீ பேசுனத விடவா நா இன்னக்கி அதிகமா பேசிட்டேன். அப்புறம் எந்த உரிமையில என்னய ஆதி ன்னு அழைக்கிற? அப்பிடி என்னய கூப்பிட உனக்கு என்ன உரிமை இருக்கு?” என கோவத்துடன் எழுந்து அவளது கழுத்தை நெரித்தான் ஆதிரன். 

     தன் கைப்பிடியில் மூச்சுக்காற்றுக்காக அவள் திணறுவதைக் கண்டு பிடியை விட்டு விட்டு கோபம் குறையாமல் திரும்பி அவளிற்கு முதுகை காட்டியபடி நின்று தலையை அழுந்த கோதி தன்னை நிதானப்படுத்திக் கொண்டான் ஆதிரன். 

     “இந்தா… இந்த தண்ணிய குடி…” என மேசையின் மீது இருந்த தண்ணீரை எடுத்து வெண்ணிலாவின் முன் நீட்டினான் ஆதிரன். 

       சிறிது தயங்கிய வெண்ணிலா, அது அப்போதைக்கு தனக்கு தேவையாக இருந்ததால் மறுப்பு எதுவும் கூறாமல் வாங்கி அருந்தினாள். 

       “உக்காரு…” என வெண்ணிலாவிற்கு இருக்கையை காட்டிவிட்டு தனது இருக்கையில் சென்று அமர்ந்தான் ஆதிரன். 

       “இல்ல ஆதி … ஸாரி… இல்ல ஸார்… நா கிளம்புறேன்…” வெண்ணிலா. 

       “உக்காரு நிலா…” ஆதிரன். 

       “இல்ல ஸார்… எனக்கு டைம் இல்ல… நாளைக்குள்ள நா பதினஞ்சு லட்சம் ரெடி பண்ணி ஆகனும். உக்காந்து பேச லாம் எனக்கு டைம் இல்ல. நா கிளம்புறேன்…” வெண்ணிலா. 

        “ஐ செட் சிட் டவுன்…” என அந்த அறை அதிர கத்தினான் ஆதிரன். சவுண்ட் ப்ரூப் செய்யப்பட்ட அறை என்பதால் அவன் கத்திய கத்தல் வெளியில் கேட்கவில்லை. இல்லையெனில் அலுவலக மொத்தத்திற்கும் கேட்டிருக்கும் அவனது கோபக்குரல். 

       அவன் கத்தலில் உடல் அப்பட்டமாக அதிர தன் கைப்பையை இறுக்க பிடித்தபடி இறுக்கையில் அமர்ந்தாள் வெண்ணிலா. 

       “பயத்துல உடம்பெல்லாம் நடுங்குது போல… நீ பயப்படுறத பாக்குறப்ப இன்னும் சந்தோஷமா இருக்கு… ஹா ஹா ஹா…” என இரக்கமே இல்லாமல் சிரித்தான் ஆதிரன். 

       சிரிக்கும் அவனது முகத்தையே கண் இமைக்காமல் பார்த்தாள் வெண்ணிலா. முன்பொரு காலத்தில் அன்பு வழிந்த கண்களில் கொடூரம் வந்து குடியேறிருந்தது. இளகிய இதழ்களில் இரும்பின் இறுக்கம் வந்து சேர்ந்திருந்தது. நிமிர்ந்த நெஞ்சம் தற்பொழுது அவன் அணிந்திருந்த சட்டையை மீறி வெளியேற திமிறிக்கொண்டிருந்தது. மொத்தத்தில் முன்பு அன்பனாக தெரிந்தவன் தற்பொழுது அரக்கனாக உருவெடுத்திருந்தான். அவனது மாற்றங்களை கூர்மையாக ஆராய்ந்த வெண்ணிலாவிற்கு இவனின் இந்த தலைகீழ் மாற்றத்திற்கு தான் தான் காரணமோ என்ற எண்ணம் மனதினுள் பெரிதாக எழுந்தது. 

     “என்னய முன்னாடி பாத்ததுக்கும் இப்ப பாக்குறதுக்கும் உள்ள வித்தியாசத்த கண்டுபுடிச்சுட்டியா?” என தன் விரல்களில் சொடக்கு எடுத்தபடி வினவினான் ஆதிரன். 

      “ஆங்… இல்ல… என்னய எதுக்கு…”என வெண்ணிலா தயங்கி தயங்கி பேசி முடிக்கும் முன்பே, “எதுக்கு உனக்கு இவ்ளோ பணம் தேவைப்படுது? அவ்ளோ அவசரமா வாங்கி எவன் கூட ஊர் சுத்த போற?” என வெண்ணிலாவின் நெஞ்சை குத்தீட்டியாய் தாக்கினான் ஆதிரன். 

     “ஆதியா  இரக்கமில்லாமல் இவ்வாறு பேசுவது?” என நெஞ்சம் தாங்காமல் அவனையே இமைக்காமல் பார்த்தாள் வெண்ணிலா. 

     “என்ன என்னயவே இப்பிடி பாத்துட்டு இருக்க? ஆளு யாருனு என் கிட்ட சொல்ல மாட்டியா?” எனக் கண்ணடித்தான் ஆதிரன். 

      அப்பொழுதுதான் வெண்ணிலாவிற்கு அந்த சந்தேகம் முளைவிட… அதை மறைக்காமல் அப்படியே அவனிடம் கேட்டாள் வெண்ணிலா. 

      “உனக்கு… ஸாரி… உங்களுக்கு எப்பிடி எனக்கு பதினஞ்சு லட்சம் தேவைப்படுது னு தெரியும்? அப்ப நா இன்னக்கி இங்க வருவேன் னு உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?” என கூர்மையாக அவனை ஆராய்ந்தாள் வெண்ணிலா. 

       “ஹப்பாடா… வந்ததுல இருந்து இப்பத்தான் உருப்படியா ஒரு கேள்வி கேட்டு இருக்க… நீ இன்னக்கி இங்க வரப் போற னு நேத்தே கருணாகரன் ஸார் எனக்கு ஃபோன் பண்ணி சொல்லிட்டாரு…” ஆதிரன். 

      “ஓஓ… அப்ப என் பிரச்சனை என்ன னு தெரிஞ்சும் இப்பிடி உக்கார வச்சு நக்கல் பண்ணிட்டு இருக்கீங்க ல… ரொம்ப நன்றி. எனக்கு உதவி பண்ற தகுதி உங்களுக்கு இருந்தாலும் எப்பிடியும் நீங்க எனக்கு உதவி பண்ண மாட்டீங்க னு நல்லா தெரிஞ்சு போச்சு. இன்னும் எவ்வளவு என்னய பேசி காயப்படுத்த முடியுமோ செஞ்சுக்கங்க. ரெண்டு நாள் முன்னாடியே நா செத்துட்டேன். எனக்கு ஒன்னும் கவலை இல்லை…” என நிராதரவான நிலையில் என்ன ஆனாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற தைரியம் வெளிவர தலை நிமிர்ந்து அமர்ந்தாள் வெண்ணிலா. 

     “குட்… இப்பத்தான் பழைய வெண்ணிலாவ பாக்குறேன். எத பத்தியும் கவலப்படாம அதே திமிரான வெண்ணிலாவ பாக்குறேன்…” ஆதிரன். 

      அதற்கு எந்த பதிலும் கூறாமல் அப்படியே அமர்ந்திருந்தாள் வெண்ணிலா. 

       “சரி… இப்ப விசயத்துக்கு வருவோம். உனக்கு அவசரமா பதினஞ்சு லட்சம் தேவைப்படுது னு மட்டும் தான் தெரியும். ஆனா எதுக்கு னு எனக்கு தெரியாது. அத தெரிஞ்சுக்கத்தான் கருணாகரன் ஸார் கிட்ட உனக்கு ஹெல்ப் பண்றேன் னு என்னோட விசிட்டிங் கார்டு குடுத்து உன்னய வந்து என்னய பாக்க சொன்னேன். பதினஞ்சு லட்ச ரூபா தேவைப்படுற அளவுக்கு இப்ப எவனோட சுத்திட்டு இருக்க? ஐ மீன் எவனோட சுத்த உனக்கு இவ்ளோ அமௌன்ட் தேவைப்படுது. உனக்கு ஒன்னும் புதுசு இல்லையே அடிக்கடி ஆள மாத்திட்டு இருப்பியே… பரவாயில்ல முன்னாடி இருந்தத விட ஆள் இப்ப தேறிட்ட… முன்னாடி…” என ஆதிரன் பேசிக்கொண்டே போக அவனது பேச்சின் வீரியம் தாங்க முடியாமல், “வில் யூ ப்ளீஸ் ஷட் அப்… என்னய பத்தியோ என் கேரக்டர பத்தியோ ஜட்ஜ் பண்ண உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல. எஸ்… எனக்கு பணம் தேவைப்படுது தான். உதவி கேட்டு வந்த ஒரே காரணத்துக்காக நீங்க பேசுற பேச்சையெல்லாம் நா அமைதியா கேட்டுட்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. என் விதி… மறந்து தொலைக்க வேண்டிய உன் முன்னாடிலாம் வந்து நிக்க வேண்டியதாயிருச்சு…” என கோவத்தில் முகம் சிவக்க கத்திவிட்டு எழுந்து அறைக் கதவை நோக்கி சென்றாள் வெண்ணிலா. 

       அப்பொழுது ஆதிரன் கூறிய வார்த்தைகளை கேட்டு, மின்னல் தாக்கியதைப் போல் உணர்ந்து அப்படியே நின்றாள் வெண்ணிலா. இத்தனை வருடம் கழித்து இக்கட்டான நிலையில் இவன் முன் தான் வந்து நிற்பது தன் விதி அல்ல இவன் செய்த சதி என உணர்ந்தவளுக்கு பைத்தியம் பிடிப்பது போல் தலை சுற்றியது. 

                                (நிலவு மலரும்…)

                             -செல்லம்மாள்பாரதி

    No comments yet.