ஆட்டோ ஒன்று சீரான வேகத்தில் சென்று கொண்டிருக்க அதில் அமர்ந்து இருக்கும் பெண்ணோ அழுகையின் தடம் முகத்தில் தெரிய ஆட்டோவின் ஓரத்தில் தலை சாய்த்து வெளியே வெறித்தபடி உட்கார்ந்து இருந்தாள். சாலையில் அனைவரும் ஏதோ ஒரு பரபரப்பில் அங்கும் இங்கும் சென்றும் கொண்டும் வந்து கொண்டும் இருக்க தன்னை கடந்து செல்லும் வண்டிகளை ஆட்டோவில் அமர்ந்திருக்கும் பெண் நிர்சலமான முகத்துடன் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
தன்னை தவிர மற்ற அனைவரும் எவ்வித பிரச்னையும் இன்றி சந்தோஷமாக இருப்பது போல் அவளுக்குத் தோன்ற நீண்ட நெடிய பெருமூச்சொன்றை ஏக்கத்துடன் விட்டாள்.
அவளின் அழுது வடிந்த சோகமான முகத்தைக் கண்ட ஆட்டோ ட்ரைவர், “என்ன மா? ஏதாவது பிரச்சனையா?” என ஆட்டோ ஓட்டியபடியே கண்ணாடியில் கண்டு வினவினார்.
ஆட்டோ ட்ரைவர் கேட்ட கேள்வி ஆட்டோவில் அமர்ந்திருக்கும் பெண்ணின் சோகத்தை தாண்டி அவள் செவிகளில் கேட்காமல் போக தன் மோன நிலையில் இருந்து மாறாமல் இருந்தாள்.
“என்ன இந்த பொண்ணு கேட்டும் அசையாம இருக்கு? ஒரு வேளை காது கேக்கலயோ?” என தனக்குள்ளே ஆட்டோ ட்ரைவர் கேள்வி கேட்டுக் கொண்டு, “இந்தாம்மா பொண்ணே…” என சற்று உரக்கமாக மீண்டும் அவளை அழைத்தார் அந்த ஆட்டோ ட்ரைவர்.
அவரது உரத்த குரல் அப்பெண்ணின் செவிகளில் லேசாக சென்று சேர தனது அசையா நிலையில் இருந்து சற்று அசைந்தாள் அவள். ஆட்டோவில் சாய்ந்த நிலையில் இருந்து மாறாமல் விழிகளை மட்டும் லேசாக திருப்பி, “சொல்லுங்க ண்ணா. கூப்பிட்டீங்களா?” என்றாள் அவள்.
“ஒன்னுல்ல மா. வயசு பொண்ணு. அழுது வடிஞ்ச மூஞ்சியா வர்றியே ஏதாவது பிரச்சனையா னு கேட்டேன் மா.” என சாலையை பார்த்து ஓட்டியவாறு சற்று சத்தமாக வினவினார் ஆட்டோ ட்ரைவர்.
“அதல்லாம் ஒன்னும் இல்ல ண்ணா.” எனக் கூறியபடி ஆட்டோவில் சாய்ந்து அமராமல் நிமிர்ந்து அமர்ந்தாள் அவள்.
“இல்ல மா உன் மொகத்த பாத்தா ஏதோ பெரிய பிரச்சனையில இருக்குற மாதிரி இருக்கு. உன் கூட தொணைக்கு யாரும் வரலயா மா?” ஆட்டோ ட்ரைவர்.
“ஏன் ண்ணா நா தனியா போக கூடாதா?” என முன் கண்ணாடியில் தெரியும் ஆட்டோ ட்ரைவரின் முகத்தைப் பார்த்து வினவினாள் அவள்.
“அதுக்கில்ல மா. ஆட்டோல ஏறுனதுல இருந்து நானும் பாத்துட்டு வர்றேன் நீ இந்த உலகத்துல இருக்குற மாதிரியே தெரியல. உன் நெனப்பு பூரா வேற எங்கயோ இருக்குற மாதிரி இருக்கு. தனியா வேற வர்ற. இப்பலாம் காலம் கெட்டு கிடக்குல்ல மா. யாராவது ஏதாவது உன்னய பண்ணிட்டா? உன் மொகத்த பாத்தாலே தெரியுது நீ ஏதோ பெரிய பிரச்சனையில இருக்க னு. அதான் கேட்டேன்.” ஆட்டோ ட்ரைவர்.
“உங்க அக்கறைக்கு ரொம்ப தேங்க்ஸ் ண்ணா.” எனக் கூறியவாறு மீண்டும் ஆட்டோவில் சாய்ந்து கொண்டாள் அவள்.
ஆட்டோவில் சாய்ந்த அடுத்த நொடியே அவளது விழிகள் கலங்க… கலங்கிய அவளது விழிகளில் எக்கசக்க ஏக்கமும், வெளியில் வெளிப்படையாக தெரியாத பயமும், எப்பாடு பட்டேனும் நினைத்த காரியத்தை செய்து முடிப்பேன் என்ற வெறி கொண்ட வைராக்கியமும் கலந்து தெரிய… அவற்றுடன் சேர்ந்து அவள் இதயமும் கலங்கியது. இருப்பினும் மனம் கலங்காமல் விழிகளில் இருந்த கண்ணீர் கீழே சிந்த விடாமல் இமைகளை மூடி சிந்த இருந்த கண்ணீரை விழிகளுக்குள்ளே அடக்கிக் கொண்டாள் அவள்.
அதற்கு மேல் அப்பெண் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கவும் ஆட்டோ ட்ரைவரும் அதற்கு மேல் எதுவும் பேசாமல் வண்டி ஓட்டுவதில் கவனம் செலுத்தினார்.
அவளும் மனதை இறுக்கமாக பூட்டியபடி விழிகளை வெளியில் ஓட விட்டாள். சில நொடிகளில் வெளியே வேடிக்கைப் பார்ப்பதை தவிர்த்து விட்டு கண்களை இறுக்க மூடிக் கொண்டாள். விழிகளை மூடியவுடன் செவியோரத்தில் பல குரல்கள் மாற்றி மாற்றி ஒலிக்க… அக்குரல்களின் சத்தம் தாங்க முடியாமல் பட்டென்று மீண்டும் கண் திறந்து வெளியே பார்வையை செலுத்தினாள் அவள்.
சில நொடிகளில் அவள் இறங்க வேண்டிய இடம் வந்து விட… அந்த பெண் கூறிய இடத்தில் ஆட்டோவை நிறுத்தினார் ட்ரைவர். தனது கைப்பையை எடுத்துக் கொண்டு ஆட்டோவில் இருந்து இறங்கியவள், ஆட்டோவிற்கான பணத்தை எடுத்து கொடுத்தவள், “ரொம்ப தேங்க்ஸ் ண்ணா…” என்றாள்.
“கவனம் மா. பத்ரமா போ. நா வேணுனா நீ உள்ள போய்ட்டு வர்ற வரைக்கும் நா வெயிட் பண்ணட்டுமா?” ஆட்டோ ட்ரைவர்.
“இல்ல ண்ணா. உள்ள எவ்ளோ நேரம் ஆகும் னு தெரியல. நீங்க கிளம்புங்க. நா பாத்துக்கிறேன்.” என லேசாக புன்னகைக்க முயன்றாள் அவள்.
“சரி மா. எல்லாமே சரி ஆகிரும். கவலப்படாம போய்ட்டு வா. நீ நெனச்சது நடக்கும்.” என தெய்வ வாக்குப் போல ஆசிர்வாதம் செய்து விட்டு ஆட்டோவை எடுத்துக் கொண்டு புறப்பட்டார் ஆட்டோ ட்ரைவர்.
ஆட்டோ புறப்பட்டு செல்வதை பார்த்தவாறு நின்றிருந்த அவள், ஆட்டோ கண்ணில் இருந்து மறைந்ததும் திரும்பி தான் வந்து நிற்கும் இடத்தைப் பார்த்தாள் அவள். தனக்கு இருந்த கடைசி துளி நம்பிக்கையுடன், தனக்கு முன் இருந்த கட்டிடத்திற்குள் தன் முதல் அடியை எடுத்து வைத்தாள் அவள்.
என்ன தான் உள்ளம் பலவாறு காயப்பட்டு பயத்தில் ஆட்டம் கண்டிருந்தாலும் தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் அழுத்தமாகவே எடுத்து வைத்தாள். உள்ளே நுழைந்து வரவேற்பாளரிடம் தான் பார்க்க வேண்டிய நபரின் பெயரைக் கூறினாள். வரவேற்பாளர் அவள் செல்ல வேண்டிய நபரின் அறைக்கு வழி கூறி விட்டு தனது வேலையை தொடர்ந்தார். வரவேற்பாளர் கூறியபடி மெதுவாக நடந்து சென்று தான் பார்க்க வேண்டிய நபரின் அறைக்கு முன்னே வந்து சேர்ந்தாள் அவள்.
அது பார்க்க சிறிய அலுவலகமாக இருந்தாலும் ஏதோ பழைய பெரிய அருங்காட்சியகத்திற்குள் வந்தது போன்ற உணர்வில் நெஞ்சில் உள்ள துக்கம் தொண்டையை அடைக்க பயத்தில் உள்ளங்கை வியர்க்க அறையின் வெளியே இருந்த இருக்கையில் அமர்ந்தாள் அவள்.
இருக்கையில் அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள சிறியதாக மூச்சை இழுத்து விட்டவள் ஒரு நொடி கண்ணை மூடி திறந்தாள். கண்ணை திறந்தவளின் முன்னே அலுவலக உதவியாளர் தென்பட அவரிடம் பேச முடிவு செய்து தொண்டையை செறுமிக் கொண்டவள், அறையின் உள்ளே டீ கொண்டு செல்லும் அலுவலக உதவியாளனை நிறுத்தி “தீரன் ஸார பாக்கனும் ண்ணே…” என்றாள்.
“கொஞ்ச நேரம் உக்காரும்மா… உள்ள ஸார் கிட்ட கேட்டுட்டு வந்து சொல்றேன்…” என்றவாறு அவர் தன் வேலையை கவனிக்க உள்ளே சென்றார்.
பயத்தில் உண்டான நடுக்கத்தில் குனிந்து தலையை உள்ளங்கைகளால் தாங்கியபடி அமர்ந்து பிறர் அறியாமல் கண்ணீர் சிந்தினாள் அவள்.
“அம்மாடி… உன் மேல சத்தியமா நா அந்த பணத்த எடுக்கல மா. நீ என்னய நம்புனா போதும். எனக்கு என்ன நடந்தாலும் கவலப்பட மாட்டேன். யார் என்ன சந்தேகப்பட்டாலும் நீ என்னய சந்தேகப்பட்டுறாத மா. அப்பிடி ஒரு சந்தேகம் உன் மனசுக்குள்ள வந்துட்டா அந்த செகண்ட்டே நா செத்ததுக்கு சமம் மா… சத்தியமா அத நா எடுக்கல மா…”
“ஏதோ சின்னப் பொண்ணா இருக்குறதுனால ஒரு சந்தர்ப்பம் குடுக்குறேன். அஞ்சு நாள் தான் உனக்கு டைம். நீங்க எடுத்த பணத்த கொண்டு வந்து குடுப்பியோ இல்ல யார்க்கிட்டயும் கடன் வாங்கி குடுப்பியோ அதெல்லாம் எனக்குத் தெரியாது. இன்னும் அஞ்சு நாளுல பணம் வந்து சேரனும். இல்லனா சாட்சியும் சூழ்நிலையும் உனக்கு எதிரா இருக்கு. அப்புறம் என்னால எதுவும் பண்ண முடியாது…”
“நீயெல்லாம் நல்லா இருப்பியா? ஊரான் பணத்த இப்பிடி திருடி தின்னு இருக்க?”
“யார் வீட்டு சொத்த யாரு திங்கிறது?”
“ஸார்… இவனெல்லாம் இப்பிடி கேட்டா உண்மைய சொல்ல மாட்டான். கேக்குற விதத்துல கேட்டா தான் சொல்லுவான்…”
“திருடன காப்பாத்த வந்து என் கேக்குறியா? ச்சீ வெளில போ…”
“ஒழுங்கா திருடி வச்சு இருக்குற பணத்த கொண்டு போய் குடுத்துரு…”
“நீலாம் நல்லாவே இருக்க மாட்ட டி…” என்ற குரல்கள் செவிகளில் மாறி மாறி ஒலிக்க கண்களை இறுக்க மூடிக் கொண்டாள்.
தாயில்லாத பெண்ணாக இருந்தாலும் தந்தை வளர்ப்பில் எந்த குறைவும் இல்லை. மகிழ்ச்சி சிரிப்பு மட்டுமே நிறைந்திருந்த அவளது வாழ்க்கையில் திடீரென்று எதிர்பாராத விதமாக பொய் வழக்கு எனும் புயல் ஒன்று வீசியது. அதில் சிக்கியது என்னமோ அவளும் அவளது தந்தையும் தான். ஆனால் அதன் தாக்கம் அவளை சுற்றி சுழன்று அடித்துக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து தந்தையை மீட்க போகாத இடம் இல்லை கெஞ்சாத ஆட்கள் இல்லை. அனைவருமே இவளுக்கு கை விரித்து விட்டனர். இறுதியாக தனது கல்லூரி பேராசிரியர் ஒருவரின் ஆலோசனையின்படி இவரை சந்திக்க வந்திருக்கிறாள். தனது மொத்த நம்பிக்கையும் இவர்தான்… இறுதி நம்பிக்கையும் இவர்தான்.
இரண்டு நாட்களாக உணவு உறக்கம் இல்லாமல் அலைந்து திரிந்ததனின் விளைவாக லேசாக தலை சுற்ற தலையை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.
“யம்மா… பொண்ணே… இந்தம்மா…” என்ற உரத்த குரலில் தலையை நிமிர்த்தி பார்த்தாள்.
“சொல்லுங்க ண்ணே…” என அவரை நிர்சலன முகத்துடன் நோக்கினாள்.
அவளின் அந்த பால்வடியும் முகத்தைக் கண்டு, “எவ்ளோ நேரமா மா உன்னைய அழைச்சுட்டு இருக்குறது? ஸார் உன்னைய உள்ள கூப்புடுறாரு. உள்ள போமா…” என சற்று குறைவான குரலில் கத்திவிட்டு சென்றார் அவர்.
“ரொம்ப நன்றி ண்ணே…” என அவளின் நன்றியை ஏற்க அவர் அங்கில்லை.
மெதுவாக எழுந்து தனது கூந்தலை சரி செய்து கொண்டு அணிந்திருந்த சுடிதாரை ஒரு முறை சரி பார்த்து விட்டு அறையின் கதவை மெல்லியதாக தட்டினாள்.
“கம் இன்…” என்ற குரல் கேட்டு கதவை திறந்து மெதுவாக அறையின் உள்ளே காலடி எடுத்து வைத்தாள். தலை குனிந்தபடியே மேசையின் முன் வந்து நின்றாள்.
“வாங்க மிஸ் வெண்ணிலா…” என்ற பழகிய குரல் கேட்டு ஆச்சரியத்துடன் உள்ளே இருந்தவனின் முகத்தை நிமிர்ந்து நன்றாக பார்த்தாள் வெண்ணிலா.
எதிரே இருந்தவனின் புன்னகை முகத்தைக் கண்டு வெண்ணிலாவின் முகத்தில் இரத்தம் வற்றி வெளிறி போனது. உச்சபட்ச பயத்தில், “நீயா?” என ஓநாய் முன் நிற்கின்ற ஆடாக உடல் வெடவெடத்து போய் நின்றாள் வெண்ணிலா.
யாரா இருக்கும்?
(நிலவு மலரும்…)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.