அத்தியாயம் – 9

நித்யா பாலசுப்ரமணியன் | 16 Dec 2025 | Share

ஏழு மணி போல் செல்வி அக்கா வந்து கதவை தட்டும் சத்தம் கேட்க திடுக்கிட்டு எழுந்தவள் கையில் காப்பியுடன் நிற்கும் அவரை கண்டதும் ” சாரிக்கா புது இடம் தூக்கம் வரல. நாலு மணிக்கு மேல தான் தூக்கம் வந்தது அதான்…. ” எனக் கூறிக்கொண்டே காபியை வாங்கிக் கொள்ள, அவளை பார்த்த புன்னகைத்தவர் ” சாப்பிட என்ன செய்யட்டும். உனக்கு என்ன பிடிக்கும் ” என கேட்க ” நீங்க எது செஞ்சாலும் எனக்கு ஓகே தான் ” எனக் கூற ” சரிமா ” எனக் கூறியவர் கீழே சென்று விட காபி குடித்தவள் குளித்து ரெடி ஆகி கீழே சென்றாள்.

அஜய் ” குட்மார்னிங் ” சொல்ல ” குட்மார்னிங் ” கூறியவளின் கண்கள் நந்து எங்கே என ஆராய்ந்தது. இதை கவனித்த அஜய் ” அவன் இன்னும் வரல. இன்னைக்கு கடைக்கு போகணும்னு சொன்னானே நீ சாப்பிட்டு ரெடியாயிரு. பத்து மணி போல வருவான் ” எனக் கூற ” சரிண்ணா ” என்றால் மெல்லிய புன்னகையுடன்.

காலை உணவு அஜய் உடன் சேர்ந்து சாப்பிட்டு முடித்தவள் அவன் வெளியே கிளம்பவும் தன் அறைக்குள் சென்று விட்டாள்.

செல்வி அக்காவும் மற்ற வேலைகளை பார்க்க, உதவி செய்வதாக இவள் போனாலும் வேண்டாம் என தடுத்துவிட இவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

அறைக்குள் வந்தவள் அம்மாவிற்கு ஃபோன் செய்து பேசினாள்.

‘ தினமும் ஒரு முறையேனும் அன்னையிடம் பேசி விட வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் நிம்மதியாக இருப்பார்கள் ‘ என எண்ணினாள்.

அத்தோடு தன் வாழ்க்கை எப்படி போகுமோ என்ற சிறு பயமும் அவள் மனதில் முளை விட தொடங்கியது.

ஒரு வருடம் தான் ஓடிவிடும் என்று எண்ணினாலும் ஏதோ மலைப்பாக இருப்பது போல் உணர்ந்தாள்.

‘ ஒரு வருடம் முடிந்த பின் என்ன செய்வது. இதைப்பற்றி சொல்லாமல் மறைத்து திருமணம் செய்து கொள்ள முடியாது. இது தெரிந்து யாரும் தன்னை திருமணம் செய்து கொள்ள வரப் போவதில்லை. திருமணமே வேண்டாம் என்றாலும் அன்னையின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது. சரி பார்த்துக் கொள்ளலாம். இப்போதைக்கு எதையும் எண்ண வேண்டாம் ‘ என எண்ணியவள் அதை அப்படியே விட்டுவிட்டு மெல்ல எழுந்து ஜன்னல் அருகே சென்றவள் கீழே கார் வந்து நிற்கும் சத்தம் கேட்க அங்கே தனது பார்வையை ஓட்டினாள்.

நந்தன் தான் சரியாக பத்து மணிக்கு சொன்னது போல் வந்து நின்றான்.

நந்தன் வருவதை பார்த்ததும் கீழே சென்றாள்.

படியில் இவள் இறங்கி வருவதை பார்த்தவன் ” சாப்பிட்டாச்சா வேதா கிளம்பலாமா ” என கேட்க உடனே ” நீங்க எதுவும் சாப்டீங்களா ” எனக் கேட்க ” ம்…. ” என்றவன் உட்கார கூட இல்லாது கிளம்பினான்.

இவளும் செல்வி அக்காவிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள்.    

பல அடுக்கு மாடிகளைக் கொண்ட கடையின் முன்பு சென்று கார் நின்றது.

முதலில் துணி கடைக்கு அழைத்துச் சென்றான். அது இரண்டாவது தளத்தில் இருந்தது.

கடையே கடல் போல் பறந்து விரிந்து இருந்தது. இவளுக்கு ஏதோ மாய உலகத்திற்குள் செல்வது போல் இருந்தது. இவள் ஊரிலும் கடைகள் உண்டு தான். ஆனால் மிகவும் சின்னது. பெரிய கடைகள் அருகில் உள்ள ஊரில் உள்ளது என்றாலும் இவள் அங்கெல்லாம் போனதும் இல்லை. அது இவ்வளவு பெரிதாக இருக்கப் போவதும் இல்லை‌.

கடையின் அழகை பார்த்து ரசித்துக் கொண்டே அவன் பின்னால் சென்றாள்.

பட்டு சேலைகள் அடுக்கி இருந்த இடத்திற்கு சென்றவன் இவளை ஒரு சேரில் அமர சொல்லி விட்டு சேலைகளை ஆராய்ந்தான். அவன் மனதிற்கு எதுவும் பிடிக்கவில்லை.

சிறிது நேரம் ஓடியது.

‘ ஏன் இவ்வளவு நேரம் ஒரு புடவை எடுக்க. சும்மா கல்யாணம் செய்றதுக்கு எந்த புடவையா இருந்தா என்ன ‘ என அவள் மனதிற்குள் எண்ணிக் கொண்டிருக்க ” உன்னை விரும்பி கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லி இருக்கேன். உன்ன பார்த்ததும் அவங்களுக்கு தெரியணும் உனக்காக எப்படி நான் ஒன்னொன்னும் பார்த்து பார்த்து வாங்கி இருக்கேன்னு…. அப்ப தான் நான் உன் மேல எவ்வளவு அன்பாய் இருக்கேன்னு அவுங்க புரிஞ்சுப்பாங்க. அதுவும் இல்லாம அவங்களுக்கு இந்த கல்யாணத்துல எந்தவித சந்தேகமும் வந்திறக் கூடாது ” என சிறு புன்னகையுடனே சொன்னவன் மீண்டும் தனது தேடலை தொடர்ந்தான்.

‘ என்ன இது மனசுல நினைக்கிறதுக்கு எல்லாம் பதில் சொல்றாங்க ‘ என்று எண்ணியவளாய் அவன் பொறுமையாக ஆராய்ந்து சேலை எடுப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒரு பத்து சேலை தேர்வு செய்திருப்பான்.

அதிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுப்பான் போல என இவள் எண்ணியிருக்க அந்த பத்து சேலையையும் எடுத்துக் கொள்வதாக சொல்லி விட்டான்.

” எதற்கு ஒரு சேலை போதுமே ” என கேள்வியுடன் இவள் தடுக்க ” கல்யாணத்தன்னைக்கு மட்டும் புது சேலை கட்டினால் போதுமா. பின்னே எங்கேயாவது வெளியே போனும்னாலும் வேணும் தானே… ” எனக் கூறியவன் அங்கே இருந்த தையல்காரர்களிடம் ஜாக்கெட்டுக்கும் அவளை அளவு கொடுக்க வைத்தான். நாளை மாலை வேண்டுமென்றும் கூறிவிட்டான். அத்தனை புடவைக்கும் உள்பாவாடை எடுத்துக்க சொன்னவன் மற்ற தேவையான உள்ளாடைகளையும் வாங்கிக் கொள்ளும்படி சொல்ல இவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. அவனும் கூடவே இருக்க இவளுக்கு எப்படி கேட்பது என இருக்க, அங்கே வரிசையாக மாட்டப்பட்டிருந்த உள்ளாடைகளை பார்வையிட்டவள் தனது அளவு உடையது எது என ஆராய்ந்து கொண்டிருந்தான்.

இதை பார்த்த அவனோ அங்கு வேலை செய்யும் ஒரு பெண்ணை அழைத்து ” இவங்க அளவுக்கு உள்ளாடை வேண்டும் எடுத்துக் கொடுங்க ” என சொல்லிவிட அப்பெண் இவளிடம் அளவு கேட்டு தேவையானதை எடுத்துக் கொடுத்தாள்.

பின் அங்கிருந்து அடுத்த இரண்டாம் தளத்திற்கு செல்ல லிஃப்டில் ஏற இவளுக்கு ஏதோ தலை சுற்றுவது போல் இருந்தது.

ஏனோ அந்த கடையில் எங்கும் ஜில்லென்று இருப்பது இவளுக்கு காய்ச்சல் வர வைப்பது போல் இருந்தது. லேசாக தலைவலியும் ஆரம்பிக்க தொடங்க தலை சுற்றுவது போல் ஆனது.

செப்பல் இருக்கும் இடத்திற்கு அழைத்து வந்தவன் மூன்று ஜோடி செப்பல்ஸ் வாங்கினான். வெளியே போட்டுக் கொள்வதற்கு என வாங்கியது அவன் வாங்கிய சேலைகளுக்கு மேட்ச் ஆக இருப்பதாக இருந்தது.

அடுத்து அங்கிருந்து சுடிதார் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றான்.

‘ அவளை முதன் முதலாக பார்த்தபோது தாவணி தான் அணிந்திருந்தாள். அது போல் ஊரில் இருந்து வந்த போதும் தாவணியில் தான் வந்திருந்தாள். இப்பொழுது இவன் கூட கிளம்பியதும் தாவணியோடு தான். ஆக அவளிடம் சுடிதார் இல்லை. இனியும் தாவணி அணிய முடியாதே… எப்பொழுதும் சேலையோடு இருக்கவும் முடியாது. சுடிதார் பழகட்டும் ‘ என எண்ணியவனாய் ஐந்தாறு சுடிதார் எடுத்தான். எல்லாவற்றையும் அவளை போட்டு காண்பிக்க சொன்னான். அவளோ ” வீட்டுக்கு போன பின்ன போட்டு காட்டறேனே ” என பாவம் போல் கேட்க ” இல்லை இங்கேயே போட்டு காட்டு. அப்ப தான் நல்லா இல்லைனாலோ அளவு சரியில்லைன்னாலோ வேற மாற்ற முடியும் ” எனக் கூறியவன் அவளை உடைமாற்றும் அறை இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றான்.

அவளுக்கோ என்ன செய்வதென்று தெரியவில்லை. வேண்டாம் என்றாலும் அவன் விடப்போவதில்லை என மனதில் தோன்ற ஒவ்வொரு உடையாக போட்டு காண்பித்தாள்.

அவனே தான் சுடிதாரும் தேர்வு செய்திருந்தான். எல்லாம் இவளுக்கு மிகவும் நன்றாக இருந்தது. இவள் நிறத்தையும் அழகையும் இன்னும் அழகாய் காட்டும் வண்ணமே உடைகள் இருந்தன. சில உடைகள் சற்று பெரிதாக இருக்க அதையும் அதற்கு முன்னால் இருக்கும் அளவில் எடுத்து தரச் சொல்லிக் கொடுத்தான். எல்லாவற்றையும் போட்டு காண்பித்தவளுக்கோ மிகவும் களைப்பாக இருந்தது.

    No comments yet.