அத்தியாயம் – 8

நித்யா பாலசுப்ரமணியன் | 12 Dec 2025 | Share

வேதா தன் வீட்டில் தங்கிக் கொள்ள அஜய் ஒப்புக் கொண்டதும் அப்பாடா என நிம்மதி பெருமூச்சு விட்ட நந்தன் மறுநாள் காலை அவள் வந்து இறங்கும் முன்பே பேருந்து நிலையம் சென்றவன் அவள் வருகைக்காக காத்திருந்தான்.

அவளைப் பார்த்ததும் மென்மையாக சிரித்தவன் ‘ சொன்னது போல் வந்து விட்டாளே ‘ என்று எண்ணும் போதே ஒருவித மகிழ்ச்சி பரவினாலும் ஏதோ வருத்தமும் உருவாவதை அவனால் தடுக்க முடியவில்லை.

அன்று பார்த்ததை விட சற்று அவள் முகம் தெளிந்து இருப்பதை பார்த்தவன் மனதில் நிம்மதி பரவியது.

” அம்மாவுக்கு உடம்பு இப்போ எப்படி இருக்கு. செலவுக்கு பைசா சரியா இருந்ததா ” என எல்லாவற்றையும் கேட்டு அறிந்து கொண்டான்.

பின் தன் நண்பன் அஜய் வீட்டில் தான் இரண்டு நாள் தங்கும்படி இருக்கும் எனக் கூற, முதலில் தயங்கியவள் அஜயை பார்த்ததும் மனதில் பயம் தோன்றாமல் அண்ணன் போல் தோன்ற அங்கேயே தங்க சம்மதித்தாள்.

அஜய்க்கும் வேதாவை பார்த்ததும் பிடித்து விட்டது. அவள் அண்ணா என்று அழைத்தது காரணமோ இல்லை இன்னும் குழந்தைத்தனம் மாறாது இருக்கும் அவள் முகமோ எதுவென அறியாவிட்டாலும் அவளை தனது உடன்பிறந்த தங்கையாகவே எண்ணத் தொடங்கினான்.

அவளுக்கென தயாராக வைத்திருந்த அறைக்கு அழைத்துச் சென்ற நந்தன் எதுனாலும் தன்னிடம் கேட்கும் படி கூறினான்.

புது இடம் என்பதால் அவளுக்கு சற்று சங்கோச்சமாகவே இருந்தது. குளித்து வேறு உடை அணிந்தவள் பசி எடுப்பது போல் இருக்க யாரிடம் கேட்பது என்று எண்ணியவளாய் கட்டிலில் அமர்ந்து இருக்க தட்டில் இட்லி சாம்பார் உடன் மேலே வந்தான், நந்தன்.

கதவு தட்டும் சத்தம் கேட்டதும் திறந்தவள் அவன் கையில் உணவுடன் இருப்பதை பார்த்ததும் ” என்னை கூப்பிட்டு இருக்கலாமே… நீங்க ஏன் கொண்டு வரீங்க ” எனக் கேட்க ” புது இடம் உனக்கு எப்படி இருக்கும்னு தெரியல அதான் ” எனக் கூறி அவளிடம் தட்டை கொடுத்தவன் அவளை சாப்பிடச் சொல்லி விட்டு அருகில் அமர்ந்து பேசினான்.

” நானு அஜய் அப்புறம் சமையல் பண்ற செல்வி அக்கா நாங்க மூணு பேர் தான். நான் எப்பவாவது தான் இங்க வருவேன். சமையல் பண்ற அக்கா ஏழு மணிக்கு மேல நைட் டிபன் செஞ்சு வச்சுட்டு கிளம்பிடுவாங்க. இப்ப ரெண்டு நாள் நீ இங்க இருக்க போறதால அவங்கள இங்க தங்க சொல்லி இருக்கோம். உனக்கு என்ன வேணுமோ அவங்க கிட்ட கேளு சரியா ” எனக் கூறினான்.

பின் ” அப்புறம் வர புதன் கிழமை நல்ல முகூர்த்த நாள் அதனால நான் அன்னைக்கு கல்யாணத்தை வச்சுக்கலாம்னு வீட்ல சொல்லி இருக்கேன். இன்னைக்கு நீ நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ. நாளைக்கு நாம கடைக்கு போகலாம். கல்யாணத்துக்கு வேண்டிய டிரஸ் எல்லாம் வாங்கணும் சரியா. இன்னும் உனக்கு என்னென்ன வேணுமோ லிஸ்ட் போட்டுக்கோ எல்லாம் நாளைக்கு வாங்கிடலாம். அப்புறம் மாசம் மாசம் உங்க அம்மாவுக்கு பணம் அனுப்புவதற்கு முதல் மாசம் கடைசி தேதியிலேயே பைசா கொடுத்துடுறேன். ஒன்னாம் தேதி கரெக்ட்டா அனுப்பிடு ” என அவன் பேசிக் கொண்டே போக அவன் சொல்வதற்கு எல்லாம் அமைதியாக தலையாட்டிக் கொண்டிருந்தாள்.

இறுதியாக அவள் சாப்பிட்டு முடித்த பின் அங்கே அலமாரியில் இருந்த ஒரு பைலை எடுத்து வந்தவன் அவளிடம் கொடுத்து ” எல்லாத்தையும் நிதானமாக படிச்சு பார்த்துட்டு உனக்கு ஏதாவது அதுல சேர்க்கணும்னா என்கிட்ட சொல்லிட்டு அதுக்கப்புறம் கையெழுத்து போடு ” எனக் கூற அதை வாங்கிய அவளுக்கோ இதயம் படபடக்க தொடங்கியது.

அவள் மெதுவாக படிக்கட்டும் என எண்ணியவன் கீழே சென்று விட பைலை திறந்து படிக்கத் தொடங்கினாள்.

அவன் அவளிடம் என்னென்ன கூறினானோ அதையே தான் வார்த்தைகளால் எழுதி இருந்தான்.

‘ ஒரு வருட திருமண பந்தம் பின் விடுதலை பத்திரத்தில் கையெழுத்து விட வேண்டும். மாதம் இவளுக்கென ஒரு தொகை அதுபோல் அம்மாவுக்கு அனுப்புவதற்கு என்று தனியாக ஒரு தொகை போட்டு இருந்தான்.

அடுத்து சில கண்டிஷன்ஸ் –

அவன் அனுமதி இல்லாமல் அவன் அறைக்குள் வரக்கூடாது. அவன் பொருட்களை தொடக்கூடாது. எங்கு போகிறான் எப்பொழுது வருவான் என்பது போன்ற கேள்விகள் கேட்கக்கூடாது. ஒரு மாதம் அம்மா அப்பா தங்கை தாத்தா பாட்டி உடன் இருக்கப் போவதால் அங்கு நல்ல மருமகளாக இருக்க வேண்டும். அவர்கள் முன்பு நல்ல அன்பான மனைவியாக நடிக்க வேண்டும். அங்கு யாருக்கும் இந்த விஷயம் பற்றி தெரிந்து விடாமல் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். எவர் மனதையும் புண்படுத்தி விடக்கூடாது ‘ என எழுதி இருந்தவன் ‘ அறைக்குள் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் என் நிழல் கூட படாமல் உன்னிடம் இருந்து ஒதுங்கி தான் இருப்பேன். உன் பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்த மாட்டேன் ‘ என உறுதியும் அளித்திருந்தான்.

எல்லாவற்றையும் படித்து முடித்தவள் அவன் உள்ளே வந்து ” ஏதேனும் மாற்றம் இருக்கா ” என வினவ ” மாதம் மாதம் எனக்கும் பைசா போட்டு இருக்கீங்களே. அது வேண்டாம் அம்மாவுக்கு அனுப்பினா போதும் ” எனக் கூற ” அம்மாக்கு அனுப்புறது சரி உனக்குன்னு ஏதும் வாங்கிக்கணும்னா ஏதும் தேவைனா என்ன செய்வ. எனக்கு இவ்வளவு பெரிய உதவி செய்ற உனக்கு மாசம் மாசம் பைசா கொடுக்கிறது எனக்கு ஒன்னும் பெரிய விஷயம் இல்லை ” எனக் கூறியவன் ” மத்தபடி எல்லாம் ஓகே தானே ” என வினவ ” ம்..‌ ” என தலையசைத்தாள்.

அதன் பின் அவன் அந்த பத்திரத்தில் கையெழுத்து இட தானும் கையெழுத்து விட்டாள்.

கையெழுத்து இட்ட பின் ” அப்புறம் ஒன்னு சொல்லணும் ” எனக் கூறியவன் ” சாரி உன்னை எப்படி அறிமுகப்படுத்தனும்னு தெரியாம தான் அஜய் வளர்ந்த அனாதை ஆசிரமத்தில வளர்ந்தவனு சொன்னேன். அவன் அடிக்கடி அந்த ஆசிரமம் போவான் கூடவே நானும் நிறைய டைம் போயிருக்கேன் அதனால தான் நான் உன்னை அங்க பார்த்ததா சொன்னேன். இல்ல எங்க பாத்த எப்போ பாத்த எப்படி பழக்கம்னு கேள்வி வரும். அப்புறம் அஜய்க்கு தங்கை மாதிரினும் சொல்லி இருக்கேன். சாரி அம்மா அப்பா இல்லாத பொண்ணுனு சொன்னதுக்கு. அப்படி சொல்லலனா குடும்பம் எங்க அவுங்க என்ன பண்றாங்கனு ஆயிரத்தெட்டு கேள்வி வரும் அதான் ” என அவன் விளக்கம் அளிக்க ” பரவாயில்லை ” என இவள் பதில் கூற ” நீ ஒன்றும் கவலைப்படாத. இத பத்தி எதும் உன்னிடம் பேச கூடாதுன்னு சொல்லி இருக்கேன். அதனால யாரும் எதுவும் கேட்க மாட்டாங்க. உனக்கு தெரிஞ்சு இருக்கணும்னு தான் சொன்னேன் ” என அவன் கூறியதும் ” சரி ” என தலையசைத்தாள்.

‘ அம்மா நல்ல படியா இருக்காங்க. அவுங்க ஆப்ரேஷன் முடிஞ்சு நல்ல படியா இருக்கிறதே நந்தன் கொடுத்த பணத்தால தான்.

அதனால எத பத்தியும் நினைக்காம ஒரு வருஷத்தை எப்படியாவது கடத்திடனும் ” என எண்ணினாள்.

அன்று இரவு உணவிற்கு பின் நந்தன் கிளம்பிவிட்டான்.

அன்றைய பொழுது அமைதியாக கடந்தது.

புது இடம் என்பதால் இரவெல்லாம் தூக்கம் வராமல் கஷ்டப்பட்டவள் விடியற்காலை தூக்கம் வர சற்றே அயர்ந்து விட்டாள்.

    No comments yet.