புரியாமல் விழித்துக் கொண்டிருந்த நந்தனிடம் சுபத்ராவும் ” ஆமாம் பா நானும் என்னோட மருமகள பத்தி தெரிஞ்சுக்க வேணாமா. உனக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது எதுவும் சொல்லித் தர வேண்டாமா ” என பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு கேட்க ” சரிமா நான் பிசினஸ் ஸ்டார்ட் பண்ணி வீடு பாக்குற வரைக்கும் நாங்க இங்க இருக்கோம். மூணு மாசம் கிடையாது. ஒரே ஒரு மாசம் தான் ” எனக் கூறி விட எப்படியோ அனைவரும் சம்மதித்து விட்டனர்.
அவனுக்கு திருமணம் ஆகப்போகிறது என்ற மகிழ்ச்சி அனைவர் முகத்திலும் பரவியது. அந்த மகிழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் வேதநாயகியோ மருத்துவமனையில் இருந்தார்.
மற்ற எல்லோரும் சந்தோஷமாய் இருந்தாலும் ஆதித்யவர்மன் மட்டும் சற்று சந்தேகத்துடன் பார்த்தார்.
‘ இதில் ஏதும் இருக்குமோ ஏன் தனியா போவதிலேயே குறியா இருக்கான் ‘ என யோசித்தார்.
சுபத்ரா நந்துவிடம் ” எப்பொழுது பெண் பார்க்க போகலாம் ” என கேட்டதற்கு ” நான் சொல்றேன் ” என ஒற்றை வார்த்தையில் முடித்து விட்டான்.
” பெண் யார் பெயர் என்ன ” என கேட்டதற்கும் ” நீங்க பார்க்கத்தான போறீங்க அப்ப எல்லாம் சொல்றேன் ” என கூறிவிட்டான்.
இங்கே வேதாவிற்கோ நந்துவின் நினைப்பாக இருந்தது.
‘ என்னதான் அவர் சொன்னதற்கு சம்மதம் தெரிவித்தாலும் முன் பின் தெரியாத என்னை நம்பி பணமும் கொடுத்து செல்போனும் வாங்கி கொடுத்து அனுப்பி இருக்கிறார். ஒருவேளை வந்தவரை லாபம் என அந்த பைசாவோடு நான் இருந்துவிட்டால் அதன் பின் அவரை தொடர்பை கொள்ளவில்லை என்றால் என்ன செய்வார். பணம் இருக்கிறது வேறு பெண்ணை பார்த்துக் கொள்ளலாம் என எண்ணுவாரா…. ‘ என எண்ணியவள் ‘ நான் ஏமாற்றி விடுவேன் என அவர் எண்ணவில்லையோ….. மறுபடியும் போன் செய்து பைசா கேட்டதும் கேட்டதை விட அதிகமாகவே அனுப்பி இருந்தாரே…. ‘ என ஏதேதோ யோசனை வந்து வந்து போக ‘ அம்மா உடல் நலம் தேறியதும் நாம கொடுத்த வாக்கை காப்பாத்தனும் ‘ என மனதில் உறுதியாக எண்ணிக் கொண்டவள் தன் தாயை அப்பொழுது தான் பிறந்த குழந்தை போல் பார்த்துக் கொண்டாள்.
வேதாவின் கவனிப்பிலும் மருந்து மாத்திரைகளின் வீரியத்தினாலும் நந்தினி கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் தேறத் தொடங்கினார்.
அவர் மனதிலோ ‘ மருந்து மாத்திரை தவிர ஆப்ரேஷன் தங்கியிருந்த அறை என எல்லாவற்றிற்கும் நிறையவே செலவு ஆகி இருக்குமே. இவ்வளவு பணம் வேதாவுக்கு எப்படி கிடைத்தது ‘ என்ற கேள்வி எழாமல் இல்லை.
இரண்டு மாதங்கள் விரைந்து ஓடியது.
நந்தனும் தான் தொடங்க இருக்கும் தொழில் சம்பந்தமான வேலையில் மும்பரமாக இருந்தான்.
தாய் கேள்வி எதுவும் கேட்டு விடுவார்களோ என வீட்டில் இருக்கும் நேரத்தை குறைத்துக் கொண்டான்.
அஜய் உடனே அவன் வீட்டில் தங்கினான்.
சுபத்ராவிற்கு மேல் வர்ஷா.
” உன் மனதை மாற்றிய பெண் யாரோ… என்னிடம் கூறாயோ… ” என பாட்டு பாடி வேற இம்சை செய்ய அவளிடம் இருந்தும் தப்பிக்க வேண்டுமே என எண்ணி ஓடி ஒளிந்தான்.
வேதாவிடம் இருந்து எப்பொழுது அழைப்பு வரும் என காத்துக் கொண்டிருந்தான். அவள் வரும் நாளையும் எதிர்பார்த்து கொண்டிருந்தான்.
வேதா ஊருக்கு சென்று சேர்ந்ததில் இருந்து ஆப்ரேஷன் நல்ல படியா முடிந்த பின்பும் அவ்வப்பொழுது நந்துவிற்கு கால் செய்து நடப்பதை கூறுவதை பார்த்த அஜய்க்கும் வேதா மேல் நல்ல அபிப்பிராயம் வரத் தொடங்கியது.
அம்மாவின் உடல் நலம் தேறியதும் வேதா அவரிடம் ஒருநாள் எல்லாவற்றையும் கூறத் தொடங்கினாள்.
உடல் நலம் சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கும் போது ஆப்ரேஷன்காக பணம் வேண்டி இருந்ததால் தனது தோழியை பார்க்க சென்னை போனதாகவும் அங்கு அவள் தனக்கு தெரிந்த பணக்கார குடும்பத்திடம் உதவி கேட்டு அழைத்துச் செல்ல, அவர்களும் உதவி செய்ய முன் வந்ததாகவும் கூறினாள்.
அம்மா உடல் நலம் பெற்றதும் சென்னை வர வேண்டும். தங்கள் வீட்டிலேயே தங்கி அவருடைய வயதான அன்னைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அவர் வேலை விஷயமாக ஒரு வருடம் வெளிநாடு செல்வதால் அவர் திரும்பி வரும் வரை அவரது அன்னையை பார்த்துக் கொண்டு அவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் எனக் கூறியதற்கு தான் சம்மதித்து பணத்தை வாங்கியதாகவும் கூறினாள்.
வேதா கூறியதைக் கேட்டு கண் கலங்கிய நந்தினி ” எனக்கு இப்போ உடம்பு எவ்வளவோ பரவாயில்லை. அந்த வேலைக்கு நான் போறேன். நீ படிக்கப் போ… ” எனக் கூற ” அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். படிக்கிறத நான் அப்புறம் பார்த்துகிறேன். ஒரு வருஷம் தானம்மா. உங்களுக்கு இப்ப தான் ஆப்ரேஷன் முடிஞ்சது. கொஞ்சம் உடம்பு சரி ஆனதும் நீங்க போறீங்கனு சொல்றீங்களே….. அது புது இடம் உங்க உடம்புக்கு எப்படி ஒத்துக்கும். மறுபடியும் உங்க உடம்புக்கு ஏதாவதுனா என்னால நிச்சயமா தாங்கிக்க முடியாதுமா…. நீங்க இங்கே இருந்து உங்க உடம்ப பாத்துக்கங்க. நான் மாசம் மாசம் உங்க செலவுக்கு பைசா அனுப்புறேன். நீங்க எந்த வேலையும் செய்யாம நல்லா ஓய்வெடுங்க அப்பதான் உடம்பு சரியாகும். வீடு பெருக்க பாத்திரம் அலம்ப பொன்னி பாட்டிய வர சொல்லிட்டு போறேன். அவுங்க போற மத்த வீட்டு வேலை எல்லாம் முடிச்சுட்டு நைட்டு உங்களுக்கு துணையா இங்க வந்து படுத்துக்க சொல்றேன். நீங்க உடம்ப அலட்டிக்காதீங்க….. நேர நேரத்துக்கு நல்லா சாப்பிடுங்க. பழம் காய்கறி எல்லாம் எடுத்துக்கோங்க. என்ன பத்தி கவலைப்படாதீங்க ஒரு வருஷம் தானே சீக்கிரம் ஓடிடும். நான் உங்களுக்கு போன் வாங்கி தரேன். தினமும் நானே போன் பண்றேன் ” என ஒரு மணி நேரத்திற்கு மேலாக
தன் தாயிடம் விளக்கமாக எடுத்துக் கூறினாள்.
‘ தன்னால் மகளுக்கு எவ்வளவு கஷ்டம் ‘ என மனதிற்குள் எண்ணியவர் ‘ இனி நல்ல படியா உடம்ப பாத்துக்கனும். எனக்காக இனிமே ஏ மக கஷ்டப்படக் கூடாது ‘ என ஏதேதோ மனதில் எண்ணியவர் சமாதானமாகி மகளிடம் ” நல்லபடியா போயிட்டு வா. எனக்கு தினமும் பேசு. உடம்ப பாத்துக்க. ஒரு வருஷம் தான அதுக்கப்புறம் வந்திடுவ தானே… ” என ஒரு முறைக்கு பல முறை கேட்டு அவள் ” வந்திடுவேன்மா ” என சொன்ன பின்னே தான் ஆசுவாசம் ஆனார்.
ஒருவழியாக அம்மா சம்மதித்து போய் வா என சொன்ன பின்னே தான் வேதா மன நிம்மதி அடைந்தாள்.
தாயிடம் பேசி சம்மதம் வாங்கிய அன்றே நந்துவிடமும் பேசியவள் என்று கிளம்பி சென்னை வர வேண்டும் என்பதை கேட்டுக் கொண்டாள்.
ஊருக்கு கிளம்பும் முன் பொன்னி பாட்டியிடம் ” அம்மாவை நல்லபடியா பார்த்துக்கோங்க ” எனக் கூறியவள், தாயிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு அவரை கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு விட்டு கிளம்பினாள்.
‘ யாரும் இல்லாத அனாதை பெண் என்று அவன் அறிமுகப்படுத்துவான் என்பது மனதை வருத்தினாலும் தாய் இன்று நலமுடன் இருப்பதே அவனால் தான் ‘ என்றும் எண்ணிக் கொண்டாள்.
அன்னையிடம் சிறுவயதிலிருந்தே சிறு பொய் கூட சொல்லாதவள் முதன் முதலாக பெரிய பொய்யை கூறிவிட்டு கிளம்பினாள். அது அவள் மனதை மிகவும் வலிக்க செய்தது. இருந்தும் மானசீகமாக அன்னையிடம் மன்னிப்பு கூறியவள் சென்னை வந்தடைந்தாள்.
No comments yet.