அத்தியாயம் – 6

நித்யா பாலசுப்ரமணியன் | 11 Dec 2025 | Share

வேதா கூறியதற்கு சரி என ஒப்புக் கொண்டவன் ” இன்னும் இரண்டு மாசம் டைம் இருக்கு. நீ உனக்கு எவ்வளவு டைம் வேணுமோ எடுத்துக்க…. உன்னோட அம்மா ஆபரேஷனுக்கு தேவையான பணத்தை நான் தரேன். ஆப்ரேஷன் நல்லபடியா முடிஞ்சு அவுங்க உடம்பு கொஞ்சம் தேறினதும் சொல்லு அப்புறம் என்ன பண்ணனும்னு சொல்றேன் ” எனவும் கூறினான்.

அதன் பின் ” பணம் எப்படி வந்துச்சுனு கேட்டா சென்னையில ஒரு பணக்கார வீட்டுல வயசான அம்மாவ பாத்துக்கிற வேலை கிடைச்சிருக்கு. அவுங்க தான் தந்தாங்க. ஆபரேஷன் முடிஞ்ச பின்ன வேலைக்கு வந்து சேரணும்னு சொல்லி இருக்காங்க. ஒரு வருஷம் நான் அவங்க வீட்ல தங்கி அங்க தான் வேலை பார்க்கணும்னு சொல்லி மாத மாதம் செலவுக்கு பைசா அனுப்புறதா சொல்லு. உன்னோட பிரண்டு உதவி பண்ணுனதா சொல்லு ” எனக் கூறினான். 

பின் தொடர்ந்து ” அதுக்கப்புறம் ஒரு வருஷம் நீ என்னோட வாழ்ந்தாகணும். முறைப்படி திருமணம் செய்து வைப்பாங்க. எங்க வீடு கொஞ்சம் பெருசு. ஒரே பையனோட கல்யாணம்றதால பெருசா பண்ணனும்னு நினைப்பாங்க. ஆனா நீ அத பத்தி கவலைப்பட வேண்டாம். நான் அதுக்கு ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கிறேன். சிம்பிளா கோவில்ல கல்யாணம் பண்ணிட்டு ரிஜிஸ்டர் ஆபீஸ்ல ரிஜிஸ்டர் பண்ணிக்கலாம். நாளைக்கு டிவோஸ் பண்றதுக்கு நமக்கு கல்யாணம் ஆனதா சாட்சி வேணும்ல அதுக்கு தான். அப்புறம் உனக்கு மாசம் மாசம் எவ்வளவு பணம் வேணும்னு சொல்லு அத நான் தந்திடுறேன். உங்க அம்மா செலவுக்கும் தனியா தரேன். மத்தபடி உனக்கு என்ன உதவி வேணும்னாலும் என்கிட்ட கேட்கலாம். என்ன பத்தி உன்கிட்ட எல்லாமே சொல்லிட்டேன். நாளைக்கு கல்யாணம்னு வரும்போது என்னோட தாத்தா பாட்டி அம்மா அப்பா எல்லோரும் உன்னை கட்டிக்கிறதா சொல்லும்போது சந்தேகம் தான் படுவாங்க என்னோட தங்கச்சியும் கூட….. எப்படி இவன் ஒத்துக்கிட்டானு. நீ நாங்க ரெண்டு பேரும் விரும்புறோம்னு அடிச்சு சொல்லனும் அவங்க நம்புற மாதிரி ஓகேவா…. ” என சொன்னவன் அவள் எல்லாவற்றிற்கும் தலையாட்டுவதை பார்த்து சற்று தன் மனம் வலிப்பதையும் உணர்ந்தான்.

‘ அவள் சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறோமே ‘ என்ற குற்ற உணர்வு அவனை குடைந்தது.

பின் மற்ற விஷயத்தை எல்லாம் பேசியவர்கள் அடுத்து எப்பொழுது சந்திக்க வேண்டும் என்ன செய்ய வேண்டும் எனவும் பேசி முடித்தனர்.

இவன் அவளுக்கு ஒரு போன் வாங்கி சிம்மும் வாங்கிப் போட்டு தனது நம்பரை நந்தன் என அதில் சேவ் செய்தவன் அவள் நம்பரையும் தனது போனில் வேதா என சேவ் செய்து கொண்டான்.

நேரம் கிடைக்கும் போது பேசுவதாக சொன்னவன் ஆபரேஷனுக்கு தேவையான முன்பணத்தை கொடுத்து அனுப்பினான்.

அவள் பஸ் ஏறி சென்றதும் வீட்டிற்கு செல்லலாம் என எண்ணியவன் தனது நண்பனை பார்த்து விட்டு போகலாம் என எண்ணி அவன் இல்லம் சென்றான்.

நடந்தவற்றை எல்லாம் தன் நண்பனிடம் கூறினான்.  

அனைத்தையும் கேட்ட அஜய் அவனைத் திட்டத் தொடங்கினான்.

” ஒரு பொண்ணு அழுது அம்மாவுக்கு முடியலன்னு சொன்னா உடனே நம்பிடுவியா. அந்த பொண்ணு நல்லா உன்னை ஏமாத்தி பணத்தை வாங்கிட்டு போய் இருக்கா. நீயும் நல்லா ஏமாந்திட்டு வந்து இருக்க ” எனக் கூற ” டேய் அப்படியெல்லாம் இல்ல. அந்த பொண்ண நீ பாத்தா இப்படி சொல்ல மாட்ட. அவ அழுத அழுகையில கொஞ்சம் கூட நடிப்பு இல்லை. அவளோட கண்ணீரில கொஞ்சம் கூட பொய்யும் இல்லை. எனக்கு அவ மேல நம்பிக்கை இருக்கு. அண்ணன் அண்ணன்னு கூப்பிட்டு அவ பேசினதுல வெகுளித்தனம் தாண்டா இருந்தது. எனக்கு தான் அந்த பொண்ணோட சூழ்நிலையை எனக்கு சாதகமா பயன்படுத்துறோம்னு குற்ற உணர்வா இருந்தது. அந்த பொண்ணு கிட்ட கேக்குறதுக்கே தயக்கமாக இருந்தது. வேற வழி இல்லாம கேட்டுட்டேன். ஆனால் அந்த பொண்ணு உடனே ஒத்துக்கிட்டா. அதுல இருந்தே அவ எவ்வளவு கஷ்டத்துல இருக்கான்னு தெரியுது ” எனக் கூறினான்.

அவன் சொன்னதை எல்லாம் கேட்ட பின்பும் ” எனக்கு என்னவோ அந்த பொண்ணு உன்ன நல்லா ஏமாத்திட்டு பணத்தை வாங்கிட்டு போன மாதிரி தான் தெரியுது. இந்த காலத்தில யாரையும் நம்ப முடியாது. பாப்போம் இன்னும் ஆபரேஷனுக்கு பணம் தேவை தானே. அதுக்காக கண்டிப்பா உன்ன கூப்பிடுவா தான். அதுக்கப்புறம் என்ன பண்றான்னு பார்க்கலாம். இல்ல கிடைச்ச வரைக்கும் லாபம்னு அந்த பைசா ஓட போயிடுறாளோ என்னவோ ” எனக் கூறியவன் அதற்கு அத்தோடு முற்றுப்புள்ளி வைத்தான்.

அஜய் என்ன சொன்னாலும் நந்துவிற்கு வேதா மேல் துளியும் தவறான எண்ணம் வரவில்லை.

மறு நாள் –

நந்துவிற்கு அழைத்த வேதா பணத்தை ஆஸ்பத்திரியில் கட்டி விட்டதாக கூறி எப்பொழுது ஆப்பரேஷன் என்றும் அதற்கு உண்டான பணத்தை எப்பொழுது கட்ட வேண்டும் என்ற விவரத்தையும் தெரிவித்தாள்.

உள்ளுக்குள் அவளுக்கு பயம் இருந்து கொண்டு தான் இருந்தது. ‘ எங்கே பணம் தராமல் தான் வேறு பெண்ணை பார்த்துக் கொள்கிறேன் என விட்டு விடுவானோ… அம்மா ஆபரேஷன் எங்கே நடந்து விடாமல் போய்விடுமோ… ‘ என குழப்பத்துடனேயே அவனிடம் பேச அவன் அவளை மேலும் பயமுறுத்தாமல் தேவையான அனைத்து உதவியையும் செய்தான்.

நல்ல முறையில் ஆப்ரேஷனும் நடந்து முடிந்தது.

இதற்கிடையில் வேதநாயகி உடல்நலம் சரியில்லாமல் போக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

பேரனின் திருமணத்தை பார்க்க விரும்பும் அவர் மனதை புரிந்து கொண்ட ரவிவர்மன் நந்துவிடம் ” என்னப்பா இனியும் எதுவும் சொல்லாம இருந்தா என்ன அர்த்தம் ” என கேள்வி கேட்டு துளைக்க அம்மாவும் தனது பங்கிற்கு கேள்வியா கேட்க அதற்கு மேல் பொறுக்க முடியாது தனது கண்டிஷனை எல்லோரிடமும் சொல்லத் தொடங்கினான்.

” நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். ஆனா எனக்கு பிடிச்ச மாதிரியான பொண்ண தான் கட்டிப்பேன் ” என அவன் சொன்னதும் ‘ அது போதுமே உன்னோட மனசுக்கு பிடிச்சாவே போதும் ‘ என அவன் தாய் மனதிற்குள் எண்ணினாள்.

” காசு பணம் நிறைய இருக்கிற பொண்ணையோ இல்ல நல்லா படிச்ச பொண்ணையோ கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். எளிமையான பொண்ணா ஏழ்மையில இருந்தாலும் பரவாயில்ல அப்படிப்பட்ட பொண்ண தான் கட்டிப்பேன். அதுபோல எங்களோட கல்யாணம் ரொம்பவே ஆடம்பரமா இருக்கக் கூடாது. கோவில்ல தான் கல்யாணம் பண்ணிப்பேன். கல்யாணத்துக்கு உண்டான எல்லாமே நானே தான் பாத்துப்பேன். கல்யாணம் ஆன அன்னைக்கே ரிஜிஸ்டர் ஆபீஸ்லையும் பதிஞ்சுக்கலாம் ” என சொன்னான்.

கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. குடும்பத்தின் ஒரே வாரிசு அவன் தானே. நம் எதிர்பார்ப்பை விட அவன் சந்தோஷம் முக்கியம் ஆயிற்றே‌ என எண்ணியவர்களாய் அவன் பேசுவதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர்.

” அப்புறம் கல்யாணம் ஆனதும் நான் தனியா வேற வீடு போய்டுவேன். என்னோட பிசினஸும் ஸ்டார்ட் பண்ணனும் அதனால தனியா போறது தான் எனக்கு பெட்ரா இருக்கும். அதுக்கு நீங்க எந்த தடையும் சொல்லக்கூடாது ” எனவும் கூறினான்.

ரவிவர்மன் சுபத்ரா அனைத்திற்கும் சம்மதிக்க இடையில் புகுந்த ஆதித்யவர்மன் ” சம்மதம் தான். நீ சொல்ற எல்லாத்துக்கும் சம்மதம் தான். ஆனால் கல்யாணம் ஆகி மூணு மாசமாச்சும் எங்களோட நீங்க இருக்கணும் ” எனக் கூறி குண்டை தூக்கி போட ” அது முடியாது. கல்யாணம் ஆனதும் பிசினஸ் தொடங்கும் போது எனக்கு எங்க வசதியா இருக்குமோ அங்க வீடு பார்த்து நாங்க அங்க தான் போவோம் ” எனக் கூற ” அது முடியாது. இந்த வீட்டுக்குனு ஒரு கௌரவம் இருக்கு. கல்யாணம் நீ சொன்ன மாதிரி கோயில்ல சிம்பிளா வச்சாலும் ரிசப்ஷன் வைக்கணும். எல்லாருக்கும் தெரியனும் என்னோட பேரனுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு. அதுக்கப்புறம் நீ எங்க வேணாலும் பிசினஸ் ஸ்டார்ட் பண்ணு ஆனா கல்யாணம் ஆகி முதன் முதலில் மருமக வர்றது இந்த வீட்டுக்குள்ள தான் இருக்கணும். பொண்ண பத்தி எதுவும் தெரிஞ்சுக்காம எங்களால தனியா உங்கள அனுப்பி வைக்க முடியாது. மூணு மாசம் தானே இருக்க சொல்றேன் அதுக்கப்புறம் நீ நினைச்ச மாதிரி வேற வீடு போய்க்க…. ” எனக் கூறி விட இவனோ என்ன செய்வது என புரியாமல் விழித்தான்.

    No comments yet.