வேதாவையே பார்த்துக் கொண்டிருந்த நந்தனுக்கு ஒரு யோசனை தோன்றியது.
‘ ஏன் இந்த பெண்ணு கிட்ட நம்ம விஷயத்திற்கு ஒத்துக் கொள்ள முடியுமானு கேட்கக் கூடாது. அவளுக்கும் இப்போ பணம் மிகவும் அவசரமாக தேவைப்படுது. நமக்கும் உடனே ஒரு பெண் தேவைப்படுறா…. என்ன செய்யலாம் ‘ என யோசித்துக் கொண்டிருந்தவன் ” உன்னிடம் ஒன்று கேட்கலாமா… தப்பா எடுத்துக்க மாட்டியே ” என ஆரம்பித்தவனை ‘ என்ன ‘ என்பது போல் பார்த்தாள்.
எப்படி ஆரம்பிப்பது என தெரியாது அவன் சிறிது அமைதியாக ” என்னாச்சுண்ணா எதுவும் பிரச்சனையா உங்களுக்கு….. அது தெரியாம நான் என்னோட கஷ்டத்தை சொல்லி புலம்பிட்டு இருக்கேன். சாரி ” என பாவம் போல் பேசும் அச்சிறு பெண்ணிடம் என்னவென்று சொல்வது என புரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
‘ வேறு வழி இல்லை இவளிடம் கேட்டு விடலாம் ‘ என எண்ணியவன் ‘ அண்ணா அண்ணான்னு கூப்பிட்டு இருக்கா இத சொன்னா எப்படி எடுத்துபாளோ ‘ என தோன்றிய எண்ணத்தை ஓரம் தள்ளி வைத்துவிட்டு ” அது வந்து… ” என சொல்லத் தொடங்க அவள் அவன் புறம் திரும்பி அமர்ந்து கேட்கத் தொடங்கினாள்.
” இங்க பாரு வேதா நான் சொல்ல போறத நல்லா உள் வாங்கிட்டு அதுக்கு அப்புறம் பதில் சொல்லு ” என சொன்னவன் ” என்னால உனக்கு உதவி செய்ய முடியும். மருத்துவ செலவுக்கு எவ்வளவு பணம் ஆனாலும் என்னால தர முடியும். இங்க சென்னையிலேயே என்னோட பிரண்டு ஒரு ஹாஸ்பிடல் வச்சிருக்கான். நல்ல பெயர் வாங்கின டாக்டரும் கூட… உன்னோட அம்மாக்கு நல்ல முறையில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து அவுங்கள நல்லபடியா குணமாக உதவி செய்றேன் ” என அவன் சொல்லி முடிக்கும் முன்பே மகிழ்ச்சில் கண்ணீர் சிந்தியவள் ” ரொம்ப தேங்க்ஸ்ண்ணா. நீங்க உதவி செய்றீங்களா…. நிச்சயமா சொல்றீங்களா…. ” என கேட்க ” இரு வேதா. நான் சொல்ல வர்றத முழுசா கேளு ” என சொல்ல, சற்று அமைதியானவள் அவன் சொல்ல வருவதை முழுமையாக கேட்க தொடங்கினாள்.
“உனக்கு உதவி செய்வது எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. ஆனா அதுக்கு பிரதிபலனா நீ எனக்கு ஒரு உதவி செய்தாகணும். உன்கிட்ட இப்படி உதவி கேட்கிறது எனக்கு கஷ்டமா தான் இருக்கு. ஆனா எனக்கு வேற வழி தெரியல. அதான்….. ” எனக் கூற ” என்ன உதவிண்ணா….. அப்படி என்னால என்ன உதவி செய்ய முடியும்… என்னோட அம்மாவை காப்பாற்ற கூட வழி தெரியாம நிக்கிற என் கிட்ட உதவினு கேட்கிறீங்களே….. ” என கேட்க ” முடியும் வேதா. நீ நெனச்சா கண்டிப்பா உதவி செய்ய முடியும். நான் இப்போ ஒரு இக்கட்டான சூழ்நிலையில மாட்டிகிட்டு இருக்கேன். என்னோட பிரச்சனைக்கு தீர்வு காண முடியாம தான் நானும் தவிச்சிட்டு இருக்கேன். உன்கிட்ட என்னோட பிரச்சனை என்னன்னு சொல்றேன். அதுக்கப்புறம் உன்னால எனக்கு உதவி செய்ய முடியுமான்னு நல்லா ஒரு தடவைக்கு பல தடவை யோசிச்சிட்டு அதுக்கப்புறம் பதில் சொல்லு. இல்ல உனக்கு அதுல விருப்பம் இல்லைனாலும் சொல்லிடு ” என கூறியவன் தன்னை பற்றி கூறத் தொடங்கினான்.
வேதநாயகி என தங்க எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட பெயர் பலகை அவ்வீட்டின் பிரம்மாண்டத்தை பறைசாற்றியது.
தெருவில் நடந்து செல்பவர்கள் கூட வாய் பிளந்து ஒரு நிமிடம் பார்க்கும் வண்ணம் மிகப்பெரிய மாளிகையாய் காண்பவர்களை ஈர்க்கும் வண்ணம் கலைநயத்துடன் வண்ண வேலைபாடுகளுடன் ஜொலிக்கும் அம்மாளிகையின் ராணி வேதநாயகி.
பணக்கார திமிர் துளியும் இல்லாது அன்பை மட்டும் பொழியும் அவர் முகத்தை காண்பவர்களோ தன் தீய எண்ணங்களை கைவிடுவர். வீட்டில் வேலை செய்பவர்களை கூட அதட்டி ஒரு வார்த்தை பேசாமல் தன் அன்பால் புன்னகை பூத்திருக்கும் முகத்தால் கவருபவர்.
அதற்கு அப்படியே நேர்மாறாக எப்பொழுதும் விறைப்புடன் எல்லாவற்றிற்கும் கண்டிஷன் போட்டுக் கொண்டும் அதட்டி கொண்டும் இருப்பவர் தான் ஆதித்யவர்மா. வேதநாயகியின் கணவர்.
ஆதித்யவர்மனின் சொல்லையே வேதவாக்காய் எடுத்துக் கொண்டு அவருக்கெனவே வாழும் ஜீவன் தான் வேதநாயகி. அவர் செய்யும் ஒரு சில விஷயங்கள் பிடிக்காவிட்டாலும் பேசினால் கேட்கும் ரகம் அவர் இல்லை என்பதால் பல விஷயங்களில் தனக்கு பிடிக்காவிட்டாலும் தன் மனதிற்கு மகிழ்ச்சியாய் இல்லாவிட்டாலும் அவருக்காக அனைத்தையும் ஏற்றுக் கொண்டு அவரே உலகம் என வாழ்பவர்.
இவர்களின் செல்லப் புதல்வன் ரவிவர்மன். தந்தை தொடங்கிய வர்மா எண்டர்பிரைசஸ் சிறிதும் தனது நிலையில் இருந்து கீழே இறக்கி விடாமல் இருக்க அயராது உழைத்து அதன் பெயரையும் புகழையும் நிலைநாட்டி கொண்டிருப்பவர். அவரின் அன்பான மனைவி சுபத்ரா.
ஆதித்யவர்மனை போலவே தொழிலில் புலியாக இருக்கும் ரவிவர்மன் தந்தை போல் ஆவேச குணமும் கண்டிப்பும் காட்டினாலும் அன்னை போல் அன்பையும் வாரி வழங்குபவராய் இருந்தார். இவரது மனைவியும் பூவிலும் மென்மையாய் இனிமையானவராய் இருக்க, குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்க, தொழிலும் மென்மேலும் வெற்றி அடைந்து கொண்டே போக, நாலாபுறமும் அதன் கிளைகள் விரிந்து உயர்ந்து அழகாய் வளர்ந்து நிற்க நாட்கள் அழகாய் ஓடிக் கொண்டிருந்தது.
ரவிவர்மன் சுபத்ராவின் ஒரே மகன் தான் நந்தன்.
அபிநந்தன்.
எல்லோரையும் கவரும் அழகன். பணக்கார திமிர் இல்லாது எல்லோரிடமும் அன்புடன் பழகுபவன். பண்பானவன். உதவி என வருபவர்களுக்கு தன்னால் முடிந்ததை செய்பவன். தன் அன்னை மேல் உயிரையே வைத்திருப்பவன். பணத்தை பார்க்காது நல்ல குணம் இருந்தால் போதும் என எண்ணும் அவனுக்கு நட்பு வட்டம் மிக சிறியதே.
நன்கு படித்து கல்லூரி முடித்தவன் தன் சொந்த காலில் நிற்க ஆசைப்பட்டான். தனது உயிர் தோழன் அஜய் உடன் சேர்ந்து பிசினஸ் பண்ண எண்ணினான். ஆனால் அதற்கு வில்லனாக வந்து தடை சொன்னார் அவனது தாத்தா ஆதித்யவர்மன்.
வர்மா எண்டர்பிரைசஸ் நன்கு வளர்ந்து பறந்து விரிந்து இருக்க அதற்கு தலைமை தாங்கி இன்னும் முன்னேற்றி கொண்டு சென்று சாதிக்காமல் தனியே எதற்கு பிசினஸ் பண்ணனும் என சண்டையிட்டதோடு, அப்படி நீ பிசினஸ் பண்ணி தான் ஆகணும்னா முதல்ல நீ கல்யாணம் பண்ணிக்க… பின்ன என்ன பிசினஸ் பண்ணனுமோ பண்ணு… ” என சொல்லி முடித்து விட இவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
கல்லூரி படிக்கும் போது நீலா என்ற பெண்ணை காதலித்தான். இருவரும் உயிருக்கு உயிராய் காதலித்துக் கொண்டிருந்தனர்.
அவள் சற்று வசதி குறைவான வீட்டில் பிறந்தவள் தான் என்றாலும் பணத்திற்கோ பகட்டிற்கோ ஆசைப்பட்டது கிடையாது. தான் உண்டு தன் வேலை உண்டு என அமைதியாக இருப்பவள். நட்புடன் பழகும் அவள் குணமும் எல்லோருக்கும் உதவி செய்யும் மனமும் இவனுக்கு பிடித்து விட அவள் மறுத்தும் அவள் பின்னாலேயே சுற்றினான்.
அவளுக்கும் இவனை பிடித்து இருந்தது தான் ஆனால் இவன் பணக்கார வீட்டுப் பையன் என்பதாலேயே தவிர்த்து வந்தாள். ஆனால் அவன் உண்மையான காதல் அவள் மனதை மாற்றியது. அவனது காதலை ஏற்றவள் அவனிடமிருந்து எந்த பரிசுப் பொருளையும் ஏற்காது ஆடம்பர செலவும் செய்ய விடாது மறுத்தாள்.
நாட்கள் மிக அழகாக ஓடியது. கல்லூரியும் முடிந்ததும். அஜையும் நந்தனும் பிசினஸ் தொடங்க இருப்பதாக கூறி நீலாவையும் தங்களுடனேயே வேலை செய்யும்படி அழைத்தனர். அவளும் சம்மதிக்க அதற்குண்டான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினர்.
இதற்கு இடையில் இவர்களது காதல் ரவிவர்மனுக்கு தெரிய, அவர் பெண்ணை பற்றி விசாரிக்க பெண் குணத்தில் தங்கம் என்றதும் மற்ற எதையும் பார்க்காமல் அப் பெண்ணையே தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்துவிடலாம் என எண்ணினார். தனது மனைவியிடமும் இதை பற்றி கூற அவருக்கும் மிக்க மகிழ்ச்சி. ஆனால் ஆதித்யவர்மனுக்கு இதில் துளியும் பிடித்தம் இல்லை.
அந்தஸ்து பார்க்கும் அவரது குணம் இன்றளவும் மாறாது இருப்பதைக் கண்டு ரவிவர்மன் கலங்கினாலும் தன் மகனின் சந்தோஷம் தான் முக்கியம் என எண்ணினார்.
எப்படியாவது தனது தந்தையிடம் பேசி சம்மதம் வாங்கி விட வேண்டும் என எண்ணிக் கொண்டிருக்கையில் ஒரு நாள் எதிர்பாராத விபத்து ஒன்றில் நீலா இறந்துவிட நந்தன் பைத்தியம் பிடித்தது போல் ஆகி விட்டான்.
எதிலும் நாட்டம் இல்லாமல் உண்ண பிடிக்காமல் உறங்க முடியாமல் அவன் தவிப்பது அவனது தாய் தந்தை இருவரையும் மிகவும் வருத்தத்திற்கு உள்ளாக்கியது.
வேதநாயகியோ தன் பேரனுடனேயே இருந்து அவனது மனதை கொஞ்சம் கொஞ்சமாக தேற்ற முற்பட்டார். பாட்டி மீது வைத்திருக்கும் அலாதி அன்பினால் அவர்கள் சொல்வதை கொஞ்சமேனும் கேட்டு சாப்பிட்டு தன் வேதனையை மறைத்து கொஞ்சம் கொஞ்சமாக நார்மலாக மாறத் தொடங்கினான்.
அவனது நண்பன் அஜய் அவனுக்கு உறுதுணையாக இருந்தான். அவன் கவனம் முழுவதையும் தொழிலில் திருப்ப முயற்சித்தான். தொழில் தொடங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை எல்லாம் செய்தான்.
ரவிவர்மனும் தன் மகனுக்கு தெரியாமல் அவர்கள் தொழில் தொடங்குவதற்கு தேவையான முன் பணம் வங்கி கடனாக பெற செய்தார்.
நந்தனுக்கு தனது அப்பா தாத்தாவின் நிழலில் இல்லாமல் தன் சொந்த முயற்சியில் முன்னேறி தன் சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற ஆசை.
தன் மகனின் ஆசை நிறைவேற நிழலாக அவனை பின் தொடர்ந்தார் ரவிவர்மன்.
No comments yet.