4
பேச தனக்கு கிடைத்த வாய்ப்பில், பல விஷயங்கள் பேச வேண்டும் என்றெண்ணி இருந்தவன், மேடை ஏறி மைக்கை பிடித்து தன் மனம் சொன்ன கூற்றுகளை பேச துவங்குமுன், காக்கி உடையை மேனியில் தரித்து, அதில் சில நட்சத்திரங்கள் பதித்து, கம்பீரமாய் வந்த காவல் அதிகாரியை பார்த்து முதலில் புன்னகை பூக்க எத்தனித்த இதழ்கள், பின் அளவில் சுருங்கி, ஏதோ யோசனையில் வந்தவனையே வெறித்து கிடந்த போது, முழித்து கொண்ட மூளை,
மேடை இறங்கி, வந்தவனின் அருகே வந்ததும், அவன் கூறிய செய்தியில் சற்று குழப்பத்தில் தான் ஆழ்ந்து போனான் ஆர்யன்.
வந்தது ரகு. ஆர்யனின் பள்ளித் தோழன். அவன் போலீஸ் வேலை பிடித்து, அதற்கு படித்து, இன்ஸ்பெக்டராக முயற்சி செய்ய, அதே நேரம் ஆர்யன் ராணுவத்தில் நுழைய போராடிக் கொண்டு இருந்த காலத்தில் இருந்தே இருவரும் நண்பர்கள் தான்.
பின் ஆர்யனுக்கு நடந்த விபத்து, அவனின் கஷ்ட காலம் என அனைத்திலும் துணை நின்றவனை, இப்போது இந்த அரங்கில் காண்பதில் அதிர்ச்சி எதுவும் இல்லை ஆர்யனுக்கு.
ராணுவம் இல்லாமல் போனாலும், துப்பரிவாளன் வேலையிலாவது அவன் தன் மனதை செலுத்தட்டும் என்றெண்ணியவன், தானே தன் ஆர்யனுக்கு இந்த வேலை கிடைக்க உதவியும் செய்து இருந்தான் ரகு.
இவ்வாறு இருக்கையில், இன்று நடக்கவிருக்கும் விருது வழங்கும் விழாவிற்கு, ஆர்யன் தான் ரகுவை அழைத்தும் இருந்தான். அதனாலேயே முதலில் அவனை கண்டதில் அதிர்ச்சி எதுவும் இல்லாமல், புன்னகையோடு பார்த்தவன், ரகு முகத்தில் தெரிந்த ஏதோ ஒரு தீவிரம், அவனையும் சிந்திக்க தான் வைத்து இருந்தது.
கிழிறங்கியவன், ரகு அருகில் செல்ல,
மச்சி, உன்னை கமிஷனர் உடனே வர சொன்னாரு டா. எதாவது எக்குத்தப்பா ஏதும் பண்ணி வெச்சிட்டியாடா?” என்றான், ஒற்றை புருவம் உயர்த்தி அக்கறையுடன்.
நீ பதறுற மாதிரி, ரீசென்டா அப்படி எல்லாம் ஒன்னும் பண்ணலியேடா. இந்த கேஸ்காக தான், ஒரு சில வேலைகள் பண்ணேன்” என்னும் போதே, அவனை எரிப்பது போல பார்த்த ரகுவிற்கு, தன் முப்பத்திரெண்டு பற்களும் தெரிய இளித்து காட்டியவனை.
அடங்கவே மாட்டியாடா நீயு. ஏற்கனவே அந்த டி.எஸ்.பி உன்னை எப்போடா பிடிக்கலாம்ன்னு காத்துகிட்டு இருக்கான். இதுல இந்த மாதிரி வேலை எல்லாம் தேவையாடா உனக்கு. என் உயிரை வாங்குறதுக்குனே இருக்கடா நீயு” தலையில் அடித்து கொள்ளாத குறையாய் ரகு புலம்ப.
விடுங்க பாஸு. அதிகமா போனா, இந்த வேலையை பிடிங்கிகிட்டு அனுப்பிடுவாங்க. அதானே. உனக்கு இது மட்டும் தான்டா ஒரே வேலை. எனக்கு இது இல்லனா பல வேலை இருக்குடா” என்றான் கிட்டத்தட்ட காலரை தூக்கி விட்ட படியாய்.
திமிருன்னா இதாண்டா. அவளை கண்டுபிடிக்குற வரைக்கும் ஆச்சும் உனக்கு இந்த வேலை கண்டிப்பா வேணும். இல்லனு வெய், உனக்கு நாளைக்கே உங்க வீட்ல கல்யாணம் பண்ணி வெச்சிடுவாங்க. நியாபகம் இருக்குல” என்றவன் பேச்சில், லேசாய் முகம் சுருங்கினாலும், அடுத்த நொடியே மலர்ந்த முகத்துடன்,
போடா அந்த ஆண்டவனே நம்ப பக்கம் தான்” என்றவனின் திமிரில் இன்று புதிதாய் தெரிந்த தன்னம்பிக்கை ஏனோ இயல்பாய் படவில்லை ரகுவிற்கு.
நொடியில் பல கேள்விகள் மனதுக்குள் எழுந்தாலும், அவனின் அந்த உற்சாகத்தை கெடுக்க நினைக்காதவன்,
மொதல்ல நீ கமிஷனரை போய் பாரு. அதுக்கு அப்புறம் ஆண்டவன் யார் பக்கம்னு பாப்போம்” என்றவர்களின் உரையாடலை, உன்னிப்பாய் கவனித்து கொண்டு இருக்கும் அரங்கத்தினரை அப்போதுதான் கவனித்தனர் இருவரும்.
அதுக்கு முன்னாடி இந்த ஃபங்சனை முடி. எல்லார் கண்ணும் நம்ப மேல தான் இருக்கு. போ” என்றவன் கூறியது போல, மேடை ஏறிய ஆர்யன், மைக்கை பற்றி,
தீவிரம் தளர்ந்து, இன்முகத்துடன், ஒரு புன்னகை புரிந்தவன்,
நான் இங்க நிறைய பேசணும். உங்க கூட கிட்ட இருந்து நிறைய கேட்டு தெரிஞ்சிக்கணும்னு நெனச்சி, ரொம்ப பிரிப்பேர் எல்லாம் பண்ணிக்கிட்டு வந்தேன். பட் எதிர்பாரா விதமா, ஒரு அவசர அழைப்பு வந்து இருக்கு, அதுவும் இன்ஸ்பெக்டர் சாரே நேரா கூப்பிட வந்து இருக்காருன்னா பார்த்துக்கோங்களேன்” என்றவன் ரகுவை பார்த்து கண்ணாடித்த படி கூற,
அவனோ, இவனை எல்லாம்… ” பற்களை கடித்து ஆர்யனை முறைப்பதையும் பொருட்படுத்தாதவன்,
இந்த முறை எந்த விபரீதத்துல மாட்டி இருக்கேன்னு தெரியல. சோ நான் கொஞ்சம் அவசரமா போகணும். வாய்ப்பு கிடைச்சா அடுத்த முறை கண்டிப்பா உங்களோட உக்காந்து நேரம் செலவு பண்றேன்.
என்னையும் என் திறமையையும் அங்கீகரித்த முதல் ஆட்கள் நீங்க தான். இதுவரை நான் தேடி திரிந்த அங்கீகாரத்தின் பிள்ளையார் சுழி போட்டு வெச்சி இருக்க உங்களுக்கு நன்றிகள்” என்றவன் தன் கை பற்றிய கோப்பையை எந்திய படி கிழிறங்க,
அவ்விடம் இருந்த மாணவர்கள் முகத்தில் முதலில் ஏமாற்றம் தென்பாட்டாலும், அதையும் ஏற்ற மாணவ கூட்டம், அதே குறையா கரகோசத்துடன் அவனை வழியும் அனுப்பி வைத்து இருந்தது.
மேடையில் இருந்து கிழிறங்கியவன், நேரே சென்றது என்னவோ தன் தாயிடம் தான். அவர் கையில் அந்த விருதை வைத்தவனின் கண்ணில் அளவிற்கு அதிகமாய் தெரியும் பெருமிதமும் எதையோ சாதித்த மன நிறைவும் தெரியவே செய்தது.
அதே திருப்தியில், ரகுவிடம் சென்றவன்,
மச்சி நீ ஜீப்ல தானே வந்தே. உன்னோட ஜீப்ல நான் போறேன். நீ என்னோட கார் எடுத்துட்டு, அம்மா அப்பாவை வீட்ல விட்டுடு” என்றான்.
அதெல்லாம் நான் பார்த்துக்குறேன். நீ மொதல்ல அந்த சிடுமூஞ்சி கமிஷனரை போய் பாரு. அவன் உன்ன என்ன பண்ண காத்திருக்கானோ” வடிவேலு பாணியில் அவன் கூறியதில் சிரித்தே விட ஆர்யனின் இதழ் பூத்த சிரிப்பில், எத்தனை இதயங்கள் அவ்விடம் வெடித்ததோ, அவனே அறியாது தான் இருந்தான்.
வேகமாய் அவன் ஜீப் நோக்கி செல்ல, அவனுக்காகவே காத்திருந்தது போல, அந்த ஜீப்பின் டிரைவர் வண்டியை எடுக்க என, சில நொடிகளில் புயலாய் அவ்விடம் விட்டு கிளம்பி இருந்தான் ஆர்யன்.
அவன் சென்ற பின்பும், திட்டமிட்ட படி நிகழ்ச்சிகள் நடைபெற, நீதிபதி சந்துரு தான், ஆர்யனின் இடத்தை நிரப்ப விழா முடியும் வரை அவ்விடம் இருக்க வேண்டியதாகி போயிற்று.
ஆர்யன் கையில் தந்து சென்ற அந்த விருதை கண்கொட்டாமல் பார்த்து கிடந்த லட்சுமி மனதில், இது நாள் வரை, தான் கேட்ட ஏச்சும் பேச்சும் தான் பிம்பமாய் கண்முன் வந்த படி இருந்தது.
அதற்கு காரணமும் உண்டு.
வீட்டிற்கு செல்ல பிள்ளையாய், மகாராணியாய் வளர்க்க பட்டது லட்சுமிக்கு ஏனோ கல்லூரியில் விநாயகத்தை பார்த்த உடனேயே காதல் ஏற்பட்டு இருந்தது. விநாயகத்திற்கும் அதே தான்.
ஆனால் லக்ஷ்மியின் குடும்பத்தை விட, ஜாதியில் தாழ்ந்தவர்கள் தாங்கள் என்பதால், அவரிடம் இருந்து இயன்ற வரை தள்ளியே இருக்க இயன்றும், லட்சுமி மேல் கொண்ட காதல் அவரின் கட்டுப்பாடுகளை எல்லாம் உடைத்தெறிந்து தன் காதலை சொல்லவும் வைத்து இருந்தது.
கல்லூரி முடிய இருக்கும் இறுதி நாட்களில், உடன் பயிலும் யாரோ இருவர் மூலமாய், இவர்களின் காதல் விவகாரம் காட்டுத் தீயாய் ஊரெங்கும் பரவி இருக்க, பெற்றவர்கள் முன் நிறுத்தப் பட்டனர் இருவரும்.
விநாயகத்தின் குடும்பத்தார் பின் தங்கிய சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பல ஏச்சு பேச்சுக்களை சந்தித்தும் கூட, மாறாது லட்சுமி கைப்பற்றி நின்ற விநாயகத்தின் காதலில் சற்று மனம் தளர்ந்தே இருந்தார் லக்ஷ்மியின் தந்தை.
இது எங்க வீட்டு விவகாரம். இனி இதை நாங்க பார்த்துக்குறோம். வேற யாரும் இதுல தலையிட வேணாம்” நாசுக்காய் ஊராரை தன் மகளின் காதல் விவகாரத்தில் இருந்து விலக்கியர், ஒரு வாரம் தீவிர ஆலோசனை மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர்,
தன் வீட்டு இளவரசியின் கையை விநாயகத்தின் பொறுப்பில் ஒப்படைக்க முடிவும் செய்து இருந்தார்.
குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் அவரின் அந்த முடிவை எதிர்த்தாலும், ஒற்றை ஆளாய் அவரின் மகளின் திருமணத்தை இனிதாய் முடித்து வைத்தார் அவர்.
அவரின் பேச்சை மீற முடியாத வீட்டின் மற்றவர்களும், பல்லை கடித்து கொண்டு காத்திருக்க, அவர்களின் கோவம் வெளிப்படும் நாளும் விரைவில் வந்தே இருந்தது.
சரியாக இவர்களின் திருமணம் முடிந்த ஒரு வருடத்தில், அதாவது ஆர்யனை கருவில் சுமந்து கொண்டு இருந்த நேரத்தில் இயற்கை எய்தி இருந்தார் லக்ஷ்மியின் தந்தை.
அதன் பின் தான், வீட்டின் மற்றவர்கள் உண்மை அணுகுமுறை வெளிவர, அவரின் இறப்பிற்கு அடுத்த நாளே வீட்டையும், அவ்வூரையும் விட்டு கிட்டத்தட்ட அடித்து துரத்த பட்டனர் இருவரும்.
அன்றில் இருந்து எல்லோரும், லட்சுமியை கண்ட படி பேசுவதையே வழக்கமாக கொண்டு இருந்தனர். அவ்வூரின் சிலரை அடக்கி வைத்தது என்னவோ ஆர்யன் தான்.
ஒரு முறை வந்த அழைப்பை அவனே எடுத்து பேச, எதிர் தரப்பில் பேசப் பட்ட வார்த்தைகளில் கொதித்தெழுந்தவன் தந்த பதிலில், இதோ இன்று வரை அவ்வூரில் இருந்து எந்த அழைப்பும் வருவது இல்லை.
அப்படி பல இன்னல்களை சந்தித்து வாழ்ந்து வரும் லக்ஷ்மியின் மகன், பலர் மெச்சும் காரியத்தை செய்தான் என்பதே அவரின் வாழ்நாள் சாதனை போல் பட்டது அவனுக்கு.
ஆனாலும் இன்று வரை அவர் மனதில் உறுதி கொண்டு இருப்பது, ஆர்யனின் திருமணம் தான்.
பல முறை திருமணம் குறித்து வழுகட்டாயமாக அவனிடம் பேசிய போது அவனின் கோவமே பதிலாக வர, அதனின் கவலை தான் வரை இன்றும் வாட்டி கொண்டு இருக்கிறது.
ஒரு முறை, உன் மனசுல யாரும் இருந்த சொல்லுடா. நானே அவங்க கிட்ட பேசுறேன்” என்ற வரை கூட இறங்கி பேசியவருக்கு, அப்போதும் அதே பதில் தான் கிடைத்து இருந்தது.
அவரின் மன ஓட்டங்களை புரிந்தது போல, அருகே அமர்ந்து இருந்த விநாயகமும், ஆதரவாய் அவரின் கை பற்றி, அவரை அமைதி படுத்த, அதை புரிந்த லட்சுமியும் மனதை அமைதியாக்கி கொண்டு அமர்ந்து இருந்தார்.
பாவம் அவர் அறிந்து இருக்கவில்லை,
தன் மனம் கவர்ந்தவள் எங்கு இருக்கிறாள் என்பது தானே ஆர்யனின் இத்தனை வருட தேடலே. அத்துணை தேடலிற்க்கு பிறகு அவனுக்கே பதில் ஏதும் கிடைக்காத போது, என்ன பதில் கூற முடியும் அவனால் லட்சுமிக்கு.
ஆனால் இன்றும் அவள் கிடைத்து விடுவாள், தன்னை வந்து சேர்ந்து விடுவாள் என்ற எண்ணத்தில் அவனின் நாட்குறிப்புகள் வேகமாய் பயணிக்க,
வருவாளா அவள்!!! தனியே திளைத்து நிற்கும் ஆர்யானின் ஜீவனை முழுமையாக்க…
No comments yet.