அத்தியாயம் -3

நித்யா பாலசுப்ரமணியன் | 10 Dec 2025 | Share

வேதாவை காருக்கு அழைத்து வந்த நந்தன் ” உனக்கு தூக்கம் வருதுனா பின்னாடி சீட்டுல படுத்து தூங்கு ” எனக் கூற ” இல்ல எனக்கு தூக்கம் வரல நான் முன்னாடியே உக்காந்துகிறேன் ” எனக் கூறியவள் ஏறி அமர்ந்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம் கண் அயர்ந்தாள்.

குழந்தை போல் தூங்கும் அவளின் தூக்கத்தை கலைக்காமல் அவள் நன்கு தூங்குவதற்கு ஏதுவாக அவளது சீட்டை கொஞ்சம் பின்னால் சாய்த்தான்.

பின் தனது போனை எடுத்து தனது நண்பனுக்கு கால் செய்யலாம் என பார்த்தவன் போனில் நிறைய மிஸ்டு கால் அம்மாவிடம் இருந்து இருக்கவும் இதற்கு மேல் பேசாமல் இருக்க மனம் இல்லாமல் அம்மாவிற்கு ஃபோன் செய்தான்.

எதிர்மறையில் போன் எடுக்கப்பட்டதும் ” சாரிமா ” எனக் கூற ” சாப்பிட்டையா ” என கேட்டதும் ” ம்…. நீங்க ” என வினவ ” ம்… எங்க இருக்க எப்ப வருவ ” என வினவ ” பீச் வரைக்கும் வந்தேன்ம்மா அஜய் வீட்டுக்கு போய்ட்டு காலையில வரேன். நீங்க படுத்துகங்க…. ” எனக் கூறி பேசி முடித்தவன் போனை வைத்தான்.

என்ன தான் கோபம் இருந்தாலும் வருத்தம் கொண்டாலும் தாயிடம் எப்பவும் இணக்கமாக இருப்பவன் இப்பொழுது இத்தனை தடவை போன் பண்ணியும் எடுக்காமல் இவ்வளவு நேரம் அவர்களை தூங்க செல்ல விடாமல் காக்க வைத்ததை எண்ணி தன்னைத்தானே திட்டிக் கொண்டான்.

பின் தன் நண்பன் அஜய்க்கு போன் செய்தவன் தன் மனவருத்தத்தை சொல்லி புலம்ப அவனும் ஆறுதல் படுத்தி அத்தோடு பிரச்சனையிலிருந்து தப்பிக்க தனக்கு தோன்றிய வழியும் சொல்ல அதையே யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு தூக்கம் வர மறுத்தது.

காலையிலிருந்து மன வருத்தத்தில் அழுது கொண்டிருந்தவள் அசதியில் கண் அசர அது சில மணி நேரங்களே நீடித்தது. அடுத்து என்ன செய்ய என புரியாது வழியும் தெரியாது இருக்கும் போது தூக்கம் மட்டும் எப்படி நன்கு வரும்.

அசதியில் கண் அயர்ந்தவள் விழித்துக் கொள்ள அருகில் நந்தன் இல்லை என்றதும் எங்கே என பார்க்க, ஆழ்ந்த யோசனையோடு அவன் காருக்கு வெளியே நின்று கொண்டிருப்பது தெரியவும் கார் கதவை திறந்து வெளியே வந்தாள்.

கார் கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பிய நந்து ” என்ன வேதா தூக்கம் வரலையா ” என வினவ ‘ இல்லை ‘ என்பது போல் தலையசைத்தாள்.

” நீங்க தூங்கவே இல்லையா ” என அவள் வினவ ” இல்லை தூக்கம் வரல ” என பதில் சொன்னவன் பனி படர்ந்து ஜில்லென்று இருந்த காற்றின் குளிரில் அவள் தனது கைகளை கட்டிக் கொள்வதையும் அடிக்கடி உள்ளங்கைகளை தேய்த்து சூடு பண்ணிக் கொள்வதையும் பார்த்தவன் ” நாம கார் உள்ளே உட்காரலாம் ” எனக் கூறி அவளுக்கு கதவை திறந்து விட்டவன் தானும் உள்ளே அமர்ந்தான்.

உள்ளே ஏறி அமர்ந்தவள் அவளது யோசனையில் இருக்க, அவனும் அடுத்து என்ன செய்வது என்ற யோசனைக்கு போனான்.

‘ ஏதேனும் ஒரு பெண்ணை ஒரு வருடம் மட்டும் மனைவியாக நடிக்க முடியுமா என கேட்கலாமா….. அப்படி கேட்டாலும் எந்த பெண் ஒத்துப்பா… பணத்துக்கு ஆசைப்பட்டு யாராவது ஒத்துக்கிட்டாலும் நாளைக்கு அதுவே பிரச்சனையா முடிஞ்சிட்டா என்ன பண்றது… கல்யாணம் வேண்டாம்னாலும் இந்த தாத்தா கேட்க மாட்டேங்கிறாரு என்ன பண்றது ? எந்த பெண்ணையும் கல்யாணம் பண்ணிக்கிற மனநிலை எனக்கு இல்லையே. காண்ட்ராக்ட் மூலம் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் வர்ற பொண்ணு எப்படி என்னோட மனச புரிஞ்சுப்பா…. வீட்ல அம்மாவுக்கு இது தெரிஞ்சா ரொம்பவே வருத்தப்படுவாங்களே…. ஆனா இது தவிர வேற என்ன பண்ண முடியும். எப்படியும் இந்த இரண்டு மாசத்துல ஏதேனும் ஒரு பெண்ண கல்யாணம் பண்ணி தான் ஆகணும். என்ன பண்றது பொண்ணு எங்கன்னு தேடுறது. பேப்பர்ல விளம்பரம் கொடுக்கலாம்னா நம்ம காண்ட்ராக்ட் மேரேஜ்க்கு அது சரிப்பட்டு வராது. அஜய்க்கும் எந்த பெண்ணையும் தெரியாது. என்ன பண்ணலாம்….. ” என ஆழ்ந்த யோசனையில் ஏதேதோ எண்ணிக் கொண்டிருந்தவன் அருகில் இருக்கும் வேதாவை பார்க்க அவளும் ஏதோ யோசனையில் இருப்பதை கவனித்ததும் பாதியில் நின்ற பேச்சை தொடர்ந்தான்.

” வேதா ” என இவன் அழைக்க ” ம்…. ” என திரும்பியவள் ” அம்மாவுக்கு என்ன உடம்புக்கு நீ சொல்லவே இல்லையே ” என கேட்டான்.

அவன் முகத்தையே பார்த்தவள் மெல்ல சொல்லத் தொடங்கினாள்.

தேனி பக்கத்துல இருக்க வீரபாண்டி தான் சொந்த ஊர். ரொம்ப வசதி இல்லைனாலும் பசினு வாடி வதங்காமல் இருக்கிறத சாப்பிட்டுக்கிட்டு நிம்மதியான வாழ்க்கை.

அப்பா குணசேகர் படிச்சிருந்தாலும் வெளியூர் போய் வேலை பாக்கணும்னு ஆசைப்படாம சொந்த ஊர்லயே அம்மா அப்பா வாழ்ந்த வீட்டிலேயே வாழணும்னு ஆசைப்பட்டு பள்ளி படிக்கும் போதே பிரிஞ்சு போன அவங்க நினைவோட அவங்க வாழ்ந்து மடிந்த அந்த ஓட்டு வீட்ல இருந்துகிட்டே விவசாயம் பண்ண, அம்மா நந்தினி எப்பொழுது முகத்தில் புன்னகை மாறாமல் கணவனோட நிரம்பி வழியும் காதலுக்கு போட்டி போட்டுக் கொண்டு காதலை கொடுத்துக் கொண்டு வாழ்பவள்.

இவர்களின் ஒரே செல்லப் புதல்வி வேதவள்ளி. திருமணம் ஆகி ஐந்து ஆண்டுகள் கழித்து பிறந்த தேவதை. அழகும் அறிவும் மற்றவர்களுக்கு உதவும் நற்பண்பும் கொண்டவள். அனைவரிடமும் அன்பாய் பழகும் இவள் குணம் சிலருக்கு பிடிக்காமல் இவள் மேல் பொறாமை கொண்டு பார்ப்பதுண்டு. அது எதையும் கண்டுகொள்ளாமல் நன்கு படித்துக் கொண்டும் தோழிகளுடன் நாட்களை மகிழ்ச்சியாக கடத்திக் கொண்டும் சிறகில்லா பட்டாம்பூச்சியாய் சுற்றித் திரிந்தாள். நாட்கள் மிகவும் அழகாகவும் மகிழ்ச்சியாகவும் போய்க்கொண்டிருந்தது.

இவர்களின் மகிழ்ச்சியில் எவர் கண் பட்டதோ வேதா 12-ம் வகுப்பு படிக்க தொடங்கிய போது குணசேகர் நோயால் படுத்தார். காய்ச்சல் இருமல் சளி என சாதாரணமாக எண்ணி அருகில் இருந்த டாக்டரிடமே மாத்திரை வாங்கி சாப்பிட்டுக் கொண்டு இருந்தவருக்கு தெரியவில்லை தான் புற்றுநோய் முற்றி சாவின் நுழைவாயில் இருக்கிறோம் என்று….. என்ன செய்வது விதி சதி செய்ய டாக்டர்கள் கைவிட மருந்து மாத்திரைகளும் பயன் தராமல் போக எமலோகம் சென்றடைந்தார்.

கணவனே உலகம் என இருந்த நந்தினிக்கு அடுத்து என்ன செய்வது என எதுவும் புரியாமல் போக யாரும் இல்லாத காட்டில் தனித்து விடப்பட்டது போல் உணர்ந்தாள்.

தந்தையின் கைக்குள் இருந்த வேதாவுக்கு உலகமே இருண்டது போல் இருக்க அழுது அழுது ஓய்ந்து போனவள் தாயின் நிலை கண்டு தன்னை தேற்றி கொண்டு தாயையும் தேற்ற முற்பட்டாள்.

வேதா, தாயை எவ்வளவு தான் நனவிற்கு கொண்டு வர போராடினாலும் அவள் கொஞ்ச நேரம் மட்டுமே மகளுடன் நேரம் கழித்தாலே ஒழிய மற்ற நேரம் முழுவதும் கணவனின் நினைவுகளுடனே மூழ்கினாள்.

இதனாலேயே அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட தாயை ஒரு குழந்தை போல் பார்த்துக் கொண்டாள், வேதா.

பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்தவள் தாயின் நிலை கண்டு மேற்கொண்டு படிக்கும் ஆசையை தள்ளி வைத்து விட்டு நிலத்தில் வேலை பார்க்கத் தொடங்கினாள்.

விளைச்சலில் கிடைக்கும் வருமானத்தில் தாயை பார்த்துக் கொண்டாள். அது தவிர மற்ற நிலத்திலும் போய் கூலிக்கு வேலை செய்தாள்.

ஒரு வருடம் ஓடியது.

தாய்க்கு உடல்நிலை இன்னும் சற்று மோசமாக கொஞ்ச நஞ்சம் இருந்த நிலத்தையும் விற்று மருத்துவ செலவுகளை பார்த்தாள்.

ஒரு நாள் ரொம்பவும் முடியாமல் போய் மூச்சு திணறல் அதிகமாகி மயக்கம் போட்டு விழ இவளுக்கோ என்ன செய்வது ஏது செய்வது என எதுவும் புரியவில்லை.

பின் தனது தாயை தேனியில் இருந்து மதுரையில் உள்ள சற்றுப் பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள்.

எல்லா டெஸ்டும் எடுத்து பார்த்த டாக்டர் நந்தினியின் இதயத்தில் ஓட்டை இருப்பதாக கூறினார். ஓட்டை சின்னதாக ஆரம்பித்த போதே அதற்குண்டான அறிகுறிகள் எல்லாம் காணப்பட்டிருக்கும் தான் ஆனால் இதுதான் என அறியாது விட்டு இன்று உடனே இதயமாற்று அறுவை சிகிச்சை பண்ணினால் மட்டுமே அவரைக் காப்பாற்ற முடியும் என்ற நிலையில் இருப்பதை கூற என்ன செய்வது என புரியாது தவித்தாள் வேதா.

யார் யாரிடமோ உதவி என கேட்டும் எதுவும் கிடைக்காமல் போக தன் தோழி சற்று வசதி படைத்தவளாய் இருக்க தற்போது புது வீடு வாங்கிக் கொண்டு சென்னை சென்றவர்களிடம் சென்று உதவி கேட்கலாம் அவள் கண்டிப்பாக உதவி செய்வாள் என்ற நம்பிக்கையோடு வந்தவளுக்கு இங்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

அடுத்து என்ன செய்வது என எதுவும் புரியாமல் இருக்கும் தனது நிலைமையை நந்தனிடம் எடுத்துச் சொன்னவளின் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாய் கொட்டியது.

அவளுக்கு ஆறுதல் சொன்னவன் ” இப்ப உன்னோட அம்மா எங்க இருக்காங்க ” என கேட்டேன்.

கண்ணீரை துடைத்துக் கொண்டவள் ” மதுரையில ஹாஸ்பிடல்ல தான் இருக்காங்க. இப்போதைக்கு மருத்துவ செலவிற்கு இருந்த நாலு பவுன் நகையை வித்து பணம் கட்டிட்டு தான் வந்தேன். அது இன்னும் நாலு அஞ்சு நாளைக்கு அவங்க மருத்துவ செலவுக்கு ஆகும். அதுக்கு அப்புறம் என்ன பண்றதுன்னு தெரியல. ஹாஸ்பிடல்ல அம்மாவ தனியாவும் விட முடியாது. என்னோட பிரண்டு எப்ப வருவான்னு தெரியாம கையில காசு இல்லாம தெரியாத ஊர்ல இருக்கவும் முடியாதே…. அதான் ஊருக்கே போயிடலாம்னு கிளம்பினேன்…. ” எனக் கூறி முடித்தவளை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான், நந்தன்.

    No comments yet.