அத்தியாயம் -28

Chellammal Bharathi | 05 Dec 2025 | Share

      நோட்டீஸை கையில் வாங்கிய நிலா தன் கண்களை அதில் ஓட விட்டவள் அப்படியே அதில் நிலை நிறுத்தினாள்.

       “என்ன நிலா அதையே பாத்துட்டு இருக்க?” என அந்த நோட்டீஸை வாங்கினான் சேது.

        அதை வாங்கி பார்த்த சேது, “அப்ப இளாவோட சந்தேகம் சரி தான் னு நினைக்கிறியா?” என்றான்.

        “அப்பிடி என்ன அதுல இருக்கு?” என்றவாறு சேதுவிடம் இருந்து நோட்டீஸை எட்டிப் பார்த்தாள் இசை. அபியும் இசையுடன் சேர்ந்து எட்டிப் பார்த்தவன் அதில் மினிஸ்டர் பார்த்தசாரதி தலைமையில் இந்த டோர்னமென்ட் நடக்கவிருப்பதாக அச்சிடப்பட்டிருக்க நிலாவின் முகத்தைப் பார்த்தான் அபி.

        “தெரியல… பாப்போம்… இசை… நீ உன் வீட்டுக்காரரோட வீட்டுக்கு கிளம்பு. ரொம்ப டயர்ட்டா இருக்க…” நிலா.

         “ஏன்… அத என் கிட்ட சொன்னா என்ன? அதான் அண்ண னு அழைச்சாச்சு ல…” சேது.

          “இசை… இப்ப நீ கிளம்புறியா இல்லையா?” என அதட்டினாள் நிலா.

           “நியாயத்த நீயே கேளு அரசி..” என தன் மனைவியிடம் முறையிட்டான் சேது.

          “அட விடு மச்சான்… அவளும் பெண் தானே… அவளுக்கும் அச்சம் மடம் நாணம்… அப்புறம் என்ன? ஆஹ்… பயிர்ப்பு… இருக்கத்தானே செய்யும்?” என தோழியின் மன உணர்வுகளை சரியாக படித்த இசை, சேதுவை சமாதானம் படுத்தினாள்.

       அதில் அபி சற்று சத்தமாகவே சிரிக்க… நிலாவின் முறைப்பில் சிரிப்பை அடக்கிக் கொண்டான்.

       இசை தன்னை மச்சான் என அழைத்ததில் வானத்தில் சிறகில்லாமல் பறந்து கொண்டிருந்த சேதுவை நிலாவின் குரல் மீண்டும் பூமிக்கு இழுத்து வந்தது.

       “அவளோட காலு வீங்கிருச்சு… ஒழுங்கா அவள வீட்டுக்கு கூட்டிட்டு போய் ஒத்தடம் குடுங்க..” என சேதுவிற்கு ஆணையிட்டாள் நிலா.

       “தங்கையின் ஆணையை இந்த தமையன் சிரமேற்கொண்டு செய்வான்…” என நிலாவை இடுப்பு வரை குனிந்து வணங்கியவன் சட்டென இசையை தன் கரங்களில் ஏந்திக் கொண்டான் சேது.

        அதைப் பார்த்த கவின் கை தட்டி சிரிக்க… இசை தன் கணவனை காதலுடன் பார்த்தாள்.

        “இசை பத்ரம்… கவின எங்கூட கூட்டிட்டு போறேன்…” நிலா.

        “சரி நிலாமா… நா அப்புறம் வந்து கவின கூட்டிட்டு போறேன்..” சேது.

         “சரி… பாத்து போங்க..” நிலா.

         “கையில் மிதக்கும் கனவா நீ…
         கை கால் முளைத்த காற்றா நீ
         கையில் ஏந்தியும் கனக்கவில்லையே…
         நுரையால் செய்த சிலையா நீ…

        இப்படி உன்னை ஏந்திக் கொண்டு..
        இந்திர லோகம் போய் விடவா…
        இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்..
        சந்திர தரையில் பாயிடவா?” என்ற பாடலை சற்று சத்தமாகவே பாடியவாறு தன் காதல் மனைவியை காதலுடன் கரத்தில் ஏந்தியவாறு நடக்க ஆரம்பித்தான் சேது.

        “அய்யோ… ஏன்டா இவ்ளோ சத்தமா பாடுற? மானம் போகுது..” என வெட்கத்தில் கணவனின் நெஞ்சில் தன் முகத்தை மறைத்துக் கொண்டாள் இசை.

       “என் பொண்டாட்டி க்காக நா பாடுறேன். என்னைய எவன் கேப்பான்?” என சற்று சத்தமாக மீண்டும் பாட ஆரம்பித்தான் சேது.

       வழியில் தென்பட்ட இளவயது பெண்கள் சேதுவை ஏக்கமுடன் பார்க்க… ஊரார் அவ்விருவரையும் புன்னகையுடன் பார்த்து மகிழ்ந்தனர். அவர்களுக்கு மத்தியில்,”நீங்க சந்தோஷமா இருக்கீங்களா? கெடுக்குறேன்… உங்க மொத்த சந்தோஷத்தையும் கெடுக்குறேன்…” என குரூர விழிகளுடன் ஒருவன் அவர்களை பார்த்திருந்தான்.

       யாரைப் பற்றியும் கவலை கொள்ளாமல் தன் மனைவியை அளவில்லா காதலுடன் மூக்கோடு மூக்கு உரச.. நெஞ்சோடு அணைத்து கரங்களில் ஏந்தியவாறு தங்கள் இல்லம் வந்து சேர்ந்தான் சேது.

        தங்கை சொல்லை தட்டாமல் இசையின் கால்களுக்கு வெந்நீரால் ஒத்தடம் அளித்து மருந்து தடவி விட்டான் சேது. அவன் செய்யும் அத்தனை பணிவிடைகளையும் நெஞ்சு பொங்க காதலுடன் பார்த்திருந்த இசை, சேதுவின் சட்டையை பிடித்து தன் முகத்துக்கு அருகே இழுத்தவள் அவனது நெற்றியில் தன் ஒட்டு மொத்த காதலையும் திரட்டி முத்தம் வைத்தாள்.

       அதை புன்னகையுடன் பெற்றுக் கொண்டவன் பத்தாக இசைக்கு திருப்பிக் கொடுத்து அவளை உறங்கச் செய்தான் சேது.

       சேதுவும் இசையும் கிளம்பியதும்,”பப்லு… ” என கவினை நிலா அழைத்ததும் எப்பொழுதும் போல் நிலாவின் தோளில் இருபுறமும் கால் போட்டு அமர்ந்து கொள்ள,”அபி.. வா நமக்கு ஒரு வேலை இருக்கு…” என அபியை அழைத்தவாறு நேராக தன் ஊர் விளையாட்டு கமிட்டியிடம் சென்றாள் நிலா.

        “பப்லு.. கொஞ்சம் கீழ இறங்கு… அத்தம்மா அவங்க கிட்ட பேசிட்டு வந்துர்றேன்..” என நிலா கூறியதும் மறு பேச்சு ஏதுமின்றி நிலாவின் மீது இருந்து இறங்கி அபியிடம் சென்று அவனது கைப்பிடித்து நின்று கொண்டான் கவின்.

        “அபி.. பப்லுவ பாத்துக்க..” என்றபடி கமிட்டி தலைவரிடம் பேச சென்றாள் நிலா.

        “ஸார்…” என தலைவரை அழைத்தாள் நிலா.

        வேலையில் இருந்தவர் நிலாவின் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்து,”வாம்மா… என்ன விசயம்?” என்றார்.

         அவர் முன்னே நோட்டீஸை வைத்தவள்,”ஸார்.. நா இந்த டோர்னமென்ட் ல கலந்துக்கல…” என்றாள் நிலா.

        “அய்யோ.. ஏன்மா?” என பதறினார் தலைவர்.

         “உங்களுக்கே தெரியும் ல ஸார்… எனக்கு கல்லியாணம் ஆகிருச்சு. என் புருஷனுக்கு இதெல்லாம் புடிக்கல. அதுனால எனக்குப் பதிலா வேற யாரையாவது சேத்துக்கங்க…” நிலா.

       “என்ன மா இப்பிடி சொல்ற? அங்க நீ டீம்ல இருக்கியா னு கேட்டு தான் நம்ம ஊருக்கு டோர்னமென்ட் ல கலந்துக்க அனுமதியே குடுத்தாங்க. அவன் வேற திரும்ப திரும்ப கேட்டுட்டு இருந்தான். நீ இல்ல னு தெரிஞ்சா நம்ம ஊர விளையாட விட மாட்டானுங்களே..” என கவலையாக நிலாவை ஏறிட்டார் கமிட்டி தலைவர்.

       “யாரு ஸார்?” நிலா.

        “யாரு மா? “

       ” நா டீம்ல இருக்கேனா னு திரும்ப திரும்ப கேட்டது?” நிலா.

       “அட அதான் மா… முரளி.. சாராய கேஸ் ல உள்ள போனானே.. இப்ப மினிஸ்டருக்கு நெருக்கமாயிட்டான். அவன் தான் இந்த டோர்னமென்ட் க்கு எல்லாம்… நீ… நிஜமா வரலயாமா?” என உண்மையான கவலையுடன் கேட்டார் கமிட்டி தலைவர்.

      “நீங்க இவ்ளோ பீல் பண்றீங்க வேற… சரிங்க ஸார்.. நா என் புருஷன் கிட்ட பேசிக்கிறேன்…” நிலா.

        “ஹப்பாடா.. இப்ப தான் நிம்மதியா இருக்கு. நீ இல்லனா கொலை பண்ணிர்ற மாதிரி ல மிரட்டுனான் அவன். ரொம்ப சந்தோஷம் மா.. ” என நிலாவிற்கு விடை கொடுத்தார் கமிட்டி தலைவர்.

         தீவிர யோசனையுடன் வெளி வந்தவள், “அபி.. பப்லுவ தூக்கிட்டு வா.. நா உன் மாமா க்கிட்ட பேசனும்…” என தன் ஃபோனை எடுத்து கணவனுக்கு டயல் செய்தவாறு அபியிடம் கூறி விட்டு சாலையில் நடந்தாள் நிலா.

      அபியும் கவினை தூக்கி கொண்டு நிலாவிற்கு சற்று இடைவெளி விட்டு கவினுடன் பேசியவாறு நடந்தான்.

         கணவனுக்கு அழைப்பு விடுத்தவள் அந்த புறம் அழைப்பு எடுக்கப்பட்டதும், “ஹலோ…” என்றாள் நிலா.

        “ஹலோ…” என தன் கணவனின் ஆளுமையான குரல் கேட்டதும் சிலிர்த்து நின்றாள் நிலா.

        இருவருக்கும் தங்களது முதல் அலைபேசி உரையாடல் நினைவில் வர.. “ஹலோ.. யாருங்க பேசுறது? ஃபோன் பண்ணிட்டு பேசாம இருந்தா என்ன அர்த்தம்?” என நிலாவிடம் விளையாட தொடங்கினான் இளா.

          “நீங்க யாருங்க?” என அவனது விளையாட்டை புரிந்து கொண்டு தானும் அதில் கலந்து கொண்டாள் நிலா.

           “நா.. நீங்க ஃபோன் பண்ணுன ஃபோனோட ஓனர் ங்க.. உங்களுக்கு யாரு வேணும்?” இளா.

           “நா… நீங்க வச்சு இருக்குற ஃபோன் ஓனரோட ஓனர் ங்க…” என அசராமல் பதிலளித்தாள் நிலா.

           நிலாவின் பதிலில் வெடித்து சிரித்தான் இளா. அவனது சிரிப்பு சத்தத்தைக் கேட்ட நிலா புன்னகைத்தாள்.

           “சரி.. சொல்லு நிலா.. எதுக்கு ஃபோன் பண்ணுன? ஏதாவது முக்கியமான விசயமா? ” என சிரிப்பை நிறுத்திவிட்டு வினவினான் இளா.

          “ம்ம்.. ஆமா… ஊருல ஒரு டோர்னமென்ட் நடக்க போகுது…” நிலா.

         “சரி..” இளா.

          “நீங்க சொன்ன மாதிரி தான்… மினிஸ்டர் நடத்துற டோர்னமென்ட் இது. என்னைய டார்க்கெட் பண்றாங்க.. எனக்கு  உங்க சந்தேகம் சரி தான்னு தோனுது… ” என்ற நிலாவின் எண்ணம் நேற்று இரவு இளா தன்னிடம் கூறிய நிகழ்வை நோக்கி சென்றது.
    
         நேற்று இரவு விசயத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்து இருந்த நிலாவின் கரங்களை தன் கரத்திற்குள் பாதுக்காப்பாக வைத்துக் கொண்டு, “அது மட்டும் இல்ல…  ஒரு பொண்ணக் காணோம். விசாரிச்சதுல அவ மினிஸ்டர் பார்த்தசாரதி ய பத்தி ஏதோ  டாக்குமென்டரி ரெடி பண்ணிட்டு இருந்ததா சொல்றாங்க. அந்த பொண்ண மினிஸ்டர் தான் கடத்தி இருக்கான் னு என் கிட்ட எவிடென்ஸ் இருக்கு. அதுனால தான் உன்னைய வந்து மிரட்டுனாங்க. உன்னைய பணயமா வச்சு என்னைய நெருங்க முயற்சி பண்ணுவாங்க னு தான் உன்னைய இங்க சண்டை போட்டு அனுப்பி வச்ச மாதிரி அனுப்புனேன். ஆனா அந்த பொண்ணு இந்த ஊருல தான் இருக்குறதா தகவல் வந்து இருக்கு. அத நீதான் கண்டுபிடிக்கனும்…” என நிலாவை ஏறிட்டான் இளா.

         “சரி… ப்ளான் என்ன?” என தன் கணவனைப் பார்த்தாள் நிலா.

         “நிலா… இதுல ரிஸ்க் அதிகம்..” இளா.

         “என் கூட நீங்க இருக்குறப்ப எனக்கு என்ன ஆகிற போகுது? அதே போல உங்க கூட நா இருக்குற வரை உங்களுக்கு எதுவும் ஆக விட மாட்டேன்…” என தீவிரமாக கூறினாள் நிலா.

        “என் செல்லம்…” என அன்புடன் நிலாவின் நெற்றியோடு முட்டியவன் தனது திட்டத்தை கூறத் தொடங்கினான் இளா.

       “நாளைக்கி நீ க்ரவுண்ட்ல போய் வெறியா விளையாடுற.. உன் விளையாட்டு எப்பிடி இருக்கனும்னா உனக்கு பந்து வீச எல்லாரும் பயப்படனும்…” இளா.

       “கிட்டத்தட்ட பைத்தியம் மாதிரி விளையாட சொல்றீங்க?” நிலா.

        “அதே தான்.. “இளா.

         “ஆனா ஏன்? எதுக்கு நா அப்பிடி பண்ணனும்?” நிலா.

         “அட இருடி சொல்றேன். உன் முட்டக்கண்ணப் பாத்தா பேச்சே வர மாட்டேன் ங்குது… ஆங்… நீ எதுக்கு அப்பிடி பண்ணனும் னா உன்னைய அவனுங்க மென்டலி அன்ஸ்டேபுலா பாக்கனும். நீ எந்த அளவுக்கு உறுதியானவ னு அவனுங்களுக்கு தெரியக் கூடாது. ஆனா இங்க உன்னையப் பத்தி மொத்த ஊருக்கே தெரியும். அதுனால அத நாம மாத்துறோம். நா உன் கூட சண்டைப் போட்டு இங்க தனியா அனுப்பிட்டதால உனக்கு என்னமோ ஆச்சு னு எல்லாரும் நம்பனும். அப்பத்தான் அவனுங்க உன்னைய நெருங்குவானுங்க. ஏற்கனவே அவங்க ஆள் ஒருத்தன உயிருக்கு போராடுற அளவுக்கு அடிச்சதால உன்னைய நெருங்க தயங்கிட்டு இருக்குறவங்க உன்னய தூக்க வருவாங்க. அப்பிடி இல்லனா வேற ஏதாவது மூலமா… ஏன் கிரிக்கெட் மூலமா கூட நெருங்கலாம். உன்னைய தூக்குனா எப்பிடியும் அந்த பொண்ணு இருக்குற இடத்துக்கு கொண்டு போவானுங்க. இல்ல அட்லீஸ்ட் அத பத்தியாவது தெரிஞ்சுக்கலாம். இதுல முக்கியமான விஷயம் என்னன்னா… அவனுங்க தான் உன்னய நெருங்குற மாதிரி இருக்கனும். நாம அவனுங்கள நெருங்குற மாதிரி சந்தேகம் வந்துறவே கூடாது. ஸோ… இது சேது இசை னு யாருக்கும் தெரியக் கூடாது…” இளா.

        “ஓகே டன்…” என மகிழ்ச்சியாக கணவனை கட்டி அணைத்தாள் நிலா.

       அனைத்தையும் நினைத்துப் பார்த்தவள், “இப்ப என்ன பண்ணலாம்?” என இளாவுடன் தீவிரமாக பேசியபடி நடந்து வந்து கொண்டிருந்த நிலா தன் எதிரே வந்த ஆபத்தை கவனிக்கவில்லை.

       காதில் ஃபோனுடன் நடந்து வந்து கொண்டிருக்கும் நிலாவின் கழுத்தை நோக்கி கூரிய கத்தி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.

                             (சேரநிலா மிளிர்வாள்…)

                         -செல்லம்மாள்பாரதி
       

    No comments yet.