எப்பொழுதும் தன் உணர்வுகளை வெளிக்காட்டாமல் இறுகிய முகத்துடன் அனைத்து சுக துக்கங்களை எதிர் கொள்ளும் நிலா, இன்று உணர்ச்சி பிளம்பாக வெடித்து சிதறிய நிலையில் அவளை தாங்கியபடி நிலாவின் அழுகைக்கான காரணத்தை கேட்டறிந்து உள்ளம் பதறிப் போனாள் இசை.
“அப்ப இதுக்காகத்தான் அண்ண நேத்து கவின காணோம் னதும் ரொம்ப பதறுனானா? ” இசை.
“ம்ம்.. ஆமா… ஆனா அத விட… ” என இளா கூறிய மீதியை நிலா கூற வர… இசை தன் வயிற்றை பயத்துடன் பிடித்துக் கொண்டாள்.
இசையின் முக மாற்றத்தை கவனித்த நிலா, “என்ன ஆச்சு இசை? ” என இசையின் முகத்தில் தோன்றிய வியர்வை துளிகளை பதறி துடைத்தாள்.
“வயிறு… வலி… வலிக்குது நிலாஆஆஆஆஆ… ” என கதற ஆரம்பித்தாள் இசை.
“ஒன்னுல்ல… ஒன்னுல்ல… இது பொய் வலியா இருக்கும்…. ” என இசையின் கையை அழுத்தி பிடித்தவாறு கண்களால் சேதுவை சுற்றிலும் தேடினாள் நிலா.
தொலைவில் சேதுவும் அபியும் வருவதைக் கண்ட நிலா, தன்னையும் மீறி “அண்ணாஆஆஆ…” எனக் கத்தினாள்.
முதன் முறை நிலா தன்னை, “அண்ணா ” என்றழைப்பதைக் கேட்ட சேது ஆனந்த அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றான். ஆனால் அங்கு ஏதோ சரி இல்லை என்பதை அறிந்த அபி, “டேய் முட்டா அண்ணா… இசைக்கு ஏதோ ஆச்சு போல டா… ” என மின்னல் வேகத்தில் நிலாவிடம் ஓடி வந்தான்.
அபி கூறிச் சென்றதை காதில் வாங்கிய சேது, “அய்யய்யோ என் பொண்டாட்டி… ” என கவினுடன் விரைவாக அவ்விடம் வந்தான்.
“அரசி… அரசி.. என்னாச்சுடி? ” என இசை வலியில் துடிப்பதைக் கண்டு ஒன்றும் புரியாமல் விழித்தான் சேது.
“அறிவு கெட்டவனே… உன் புள்ள உதைக்கிறான் டா… ” என மெல்ல புன்னகைத்தாள் இசை.
“என்னது? ” என அதிர்ச்சியுடன் இசையைப் பார்த்தாள் நிலா.
நிலா, தன்னை அதிர்ச்சியாகப் பார்ப்பதைக் கண்ட இசை புன்னகையுடன் கண்ணடித்து மகிழ்ச்சியுடன் நிற்கும் சேதுவின் கரத்தையும் சிறு கோபத்துடன் நிற்கும் நிலாவின் கரத்தையும் எடுத்து தன் வயிற்றின் மீது வைத்தாள்.
“டேய் தங்கம்… உன் அப்பாவ உன் அத்தை அண்ணா னு அழைச்சுட்டா டா… உன் அப்பனுக்கு எப்பிடி இருக்கோ தெரியல… ஆனா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு… என் நிலா… என் நிலா… என் புருஷன… அஹ்… அண்… அண்ணா னு சொல்லி… ட்டா… ” என ஆனந்த கண்ணீருடன் திக்கி திணறி கூறினாள் இசை.
அவள் கூறி முடிப்பதற்காகவே காத்திருந்த உள்ளிருந்த இசை சேதுவின் மழலை தன் தாயின் வயிற்றை எட்டி உதைத்து தனது மகிழ்வை தெரியப்படுத்தி இசையை மகிழ்வித்தது. அதை தங்கள் கரத்தின் மூலம் உணரந்த நிலாவும் சேதுவும் மகிழ்ச்சியில் என்ன பேசுவது என்பது புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“ம்மா… நா… “என கவின் கை நீட்ட… ஒருவித தவிப்புடன் நின்றிருந்த அபியின் கரத்தை பிடித்து கவினின் கரத்தையும் தன் வயிற்றின் மீது வைத்தாள் இசை. அதில் மகிழ்வுடன் அதிர்ந்த அபி கண்ணில் கண்ணீருடன் இசையைப் பார்த்தான் அபி.
“இங்க பாரு குட்டி… உனக்காக உன் அண்ண ரொம்ப ஆர்வமா காத்துட்டு இருக்கான்… சீக்கிரம் வந்து அவன் கூட விளையாடுவியாம்… அதே போல உனக்காக உன் சித்தப்பா ரொம்ப ஆசையா இருக்கான்… உன் அண்ண பொறந்தப்ப தான் அவன் பக்கத்துல இல்ல… அதுனால உன்னைய மொத மொதனு கையில தூக்க ஆசைப் படுறான்… உனக்கு ஓகே தான குட்டி? ” என தன் வயிற்றின் உள்ளே உள்ள மகவிடம் கேட்டாள் இசை.
இசை கேட்ட கேள்வியில் அபியின் கண்ணில் இருந்து நிற்காமல் கண்ணீர் வர… தனக்கும் ஓகே தான் என்பதை போல் இசையின் வயிற்றின் உள்ளே கால்பந்து விளையாடியது அம்மகவு.
“ஹேய்… ” என கவின் துள்ளி குதிக்க… அவனை ஆசையுடன் பார்த்தாள் நிலா.
அதை கவனித்த இசை, அபியின் கை பிடித்து சேதுவின் தோள் சாய்ந்தவாறு, “ஏன்டா மகனே… நீ எதுக்காவது பயப்படுறியா டா? “என கவினிடம் கேட்டாள்.
“பயமா? ” என சிறிது யோசித்தவன் பின் வழக்கம் போல நிலாவின் மீது குரங்கை போல சரசரவென ஏறியவன், “என் அத்தம்மா… நா.. நா ஏ பயபதனும் ம்மா? ” என நிலாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு இசையைப் பார்த்தான் கவின்.
“அப்பிடி சொல்லு டா என் தங்க மகனே… உன் அத்தம்மா இருக்கறப்ப நீ எதுக்கு பயபடனும்? உன் அத்தம்மா உன்னைய பாத்துக்க மாட்டாளா என்ன? ” என நிலாவைப் பார்த்தாள் இசை.
இசை, தனக்காகத் தான் கூறுகிறாள் என உணர்ந்து, “என் பப்லு… ” என தான் பெறாத மகனிற்கு அழுந்த முத்தமிட்டாள் நிலா.
“ம்ம்… இப்ப சேரநிலா ஓகே தான? இப்ப சொல்லு மீதிய… இவனுங்களும் தெரிஞ்சுக்கட்டும்…”என காலை நீட்டி மரத்தடியில் சாய்ந்து வசதியாக அமர்ந்தாள் இசை.
“என்ன? இசை என்ன சொல்லுறா? ” அபி.
“இளா அவனோட கேஸ பத்தி சொன்னானா? ” என மிகச் சரியாக நிலாவைப் பார்த்தான் சேது.
இவர்கள் பேசுவது எதுவும் புரியாமல் தன் தாயுடன் சென்று அமைதியாக அமர்ந்து கொண்டான் கவின்.
“அது… உனக்கு எப்படித் தெரியும்? “என சந்தேகத்துடன் சேதுவைப் பார்த்தாள் நிலா.
“அதான் ஒரு தடவ அண்ண னு சொல்லியாச்சே… திரும்பவும் அண்ண னு சொன்னா என்னவாம்? ” என முனங்கியபடி… “நேத்து கவினுக்காக அவன் உன்னைய அடிச்சதுலயே என்னமோ பிரச்சனை னு தெரிஞ்சுருச்சு… சத்த நேரத்துக்கு முன்னாடி நீ பண்ணுன கூத்தப் பாத்து கன்பார்ம் ஆகிருச்சு… விசயத்த சொல்லு மா… ” என இசையின் அருகில் அமர்ந்தான் சேது.
“ம்ம்… ஆமா… இந்த ஊருல சின்ன சின்ன பசங்கள யாரோ கடத்திட்டு போய் ரேப் பண்றாங்களாம்… அதான் கவின பத்திரமா பாத்துக்க சொல்லி சொன்னாரு. இவன் வயசு பசங்க இப்ப ரெண்டு பேரக் காணோமாம்… அவருக்கு ஒரு ஆளு மேல சந்தேகம் இருக்கு. அந்த ஆளு இப்ப நம்ம ஊருல தான் இருக்கான்.. ” நிலா.
“இவ்ளோ தான் அண்ண சொன்னானா? ” என நிலாவை கூர்ந்து பார்த்தாள் இசை.
“ஆமா… ” என இசையின் கண்களை சந்திக்காமல் கூறினாள் நிலா.
“என்ன நீங்க ரெண்டு பேரும் எதுவும் பேச மாட்டேன்ங்குறீங்க? ” என சேதுவையும் அபியையும் பார்த்துக் கேட்டாள் நிலா.
“இல்ல… அது… ரேப்… பசங்களயா?” என விசயத்தை ஏற்றுக் கொள்ள இயலாமல் வினவினான் அபி.
“உண்மை தான்… இதுல மொதல்ல பாதிக்கப்பட்டது நம்ம மணி… ” நிலா.
“யாரு? என் கடையில வேலை பாக்குற மணியா? ” என அதிர்ச்சியாக நிலாவையும் இசையையும் பார்த்தான் சேது.
“ம்ம்… ஆமா… இதுல நல்ல விசயம் என்னன்னா… தான் கற்பழிக்கப்பட்டத அவனுக்கு தெரியல.. ஆனா மனசால ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கான் சேராக்கிட்ட… ” நிலா.
“அவன்… காலேஜ் தான படிக்க போனான்? ” சேது.
“அங்க தான்.. இது நடந்து இருக்கு.. அப்புறம் தான் கவின் வயசு பசங்க காணாம போய் இருக்காங்க..” நிலா.
“இது ரெண்டையும் ஒரே ஆள் தான் பண்ணுனதா இளா நினைக்கிறானா?” சேது.
“ஆமா… ” நிலா.
“விசயம் ரொம்ப பெருசு தான்… ஆனா என்ன நடந்தாலும் நாம பாத்துக்கலாம். இளா சந்தேகப்படுற ஆளு யாரு?” சேது.
“மினிஸ்டர் பார்த்தசாரதி…” நிலா.
“எனக்கு ஒரு சந்தேகம்… ஒரு ஆண ஒரு பொண்ணு தான கற்பழிக்க முடியும்? அப்ப இதுக்கு காரணம் ஒரு பொண்ணு தான? அப்புறம் ஏன் அந்த மினிஸ்டர மாமா சந்தேகப்படுறார்? ஒரு வேளை… ஆம்பளய ஆம்பளயே ரேப் பண்ண முடியுமா? ” என மூவரையும் அபி பார்க்க… அவனை சேதுவும் இசையும் முறைப்புடன் பார்க்க…. அவனுடைய கேள்விக்கு நிலா பதில் கூற முற்படுகையில் அவர்கள் முன்னே நிலாவுடன் விளையாடும் ஒருவன் தயங்கியபடியே வந்து நின்றான்.
“குட்டச்சி… உன் கிட்ட பேசலாமா? நீ ஓகே யா? ” என சற்று முன் நிலாவை ஆக்ரோசமாய் கண்டு பயந்தபடியே நின்றான்.
“என்ன னு சொல்லு.. ” நிலா.
“ஒரு டோர்னமென்ட் வந்து இருக்கு… நீ விளையாடுவியா? அமௌன்ட் கொஞ்சம் பெருசு… இந்த பணம் நம்ம ஊருக்கு கிடைச்சா நல்லா இருக்கும்… “
“ஏன்டா லூசு மாதிரி கேக்குற? நிலா இல்லாம நம்ம ஊருல என்னக்கி டா விளையாண்டு இருக்கீங்க? அவ வருவா… நீ போ.. ” சேது.
“சரி ண்ணே… டீம் ல அவ பேர குடுத்துர்றேன். டோர்னமென்ட் மேனஜ்மெண்ட் ல குட்டச்சிய கேட்டுட்டே இருந்தாங்க.. குட்டச்சி இந்தா நோட்டீஸ்… ” என நோட்டீஸை நிலாவிடம் அளித்து விட்டு அங்கிருந்து பறந்து சென்றான்.
நோட்டீஸை கையில் வாங்கிய நிலா… விடாமல் அதையே பார்த்திருந்தாள்.
(சேரநிலா மிளிர்வாள்…)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.