அத்தியாயம் -26

Chellammal Bharathi | 03 Dec 2025 | Share

    காலை நேர இதமான சூழ்நிலையை மிதமாக கெடுத்து தனது வெம்மையை சற்று அதிக அழுத்தமாகவே பூமிக்கு அளித்துக் கொண்டிருந்தது நிலாவின் டார்லிங். தனது கரங்களை பூமிப் பரப்பின் மீது சற்று தாராளமாக நீட்டி தன்னால் இயன்ற வரை சுட்டெரித்துக் கொண்டிருந்தது நிலாவின் டார்லிங். 

      அதற்கு போட்டியாக மைதானத்தில் தனது பிரத்யேக வெம்மையை வாரி வழங்கி கொண்டிருந்தாள் நிலா. வானத்தில் ஒரு சூரியன் இருக்க… பூஞ்சோலை கிராமத்தின் மைதானத்தில் அதற்கு போட்டியாக சூரியன் போல் தகித்துக் கொண்டிருந்தாள் நிலா. 

      கிரிக்கெட் விளையாடுவதற்கான உடையை அணிந்து க்ளவுஸ் ஹெல்மெட் அணியாமல் கையில் இறுக்கப் பிடித்த கிரிக்கெட் மட்டையுடன்… அள்ளி முடிந்த குட்டை முடிகளில் ஓரிரண்டு முடிகள் முகத்தில் பறக்க.. வியர்க்க விறுவிறுக்க சீறும் பாம்பாக அனல் காற்றை மூச்சாக விட்டுக் கொண்டு.. பந்தை அடிக்க மைதானத்தில் தயாராக நின்று கொண்டிருந்தாள் நிலா. ஆனால் அந்தோ பரிதாபம்.. பந்து வீச தான் யாரும் அங்கு தயாராக இல்லை. 

      நிலாவிற்கு பந்து வீச ஒவ்வொருவனும் பயந்து தயங்கி நிற்க… சற்று முன் வீசிய ஒவ்வொரு பந்தையும் அடித்து எங்கோ பறக்க விட்டு பத்திற்கு மேல் பந்துகளை தொலைத்து விட்டு இரைக்காக காத்திருக்கும் குட்டி ஈன்ற பெண் புலியென கிரிக்கெட் மட்டையை தரையில் மெல்லியதாக அடித்துக் கொண்டு அடுத்த பந்திற்காக காத்திருந்தாள் நிலா. 

      அவள் கிரிக்கெட் மட்டையை மெல்லியதாக தரையில் அடிப்பது பந்து வீசுபவன் ஒவ்வொருவனின் தலையிலும் அடிப்பது போல் இருக்க… நிலாவிற்கு பந்து போடவும் அவளை நெருங்கவும் தயங்கி விழி பிதுங்கி நின்றிருந்தனர் பூஞ்சோலை கிராமத்தின் கிரிக்கெட் வீரர்கள். 

       அவளிடம் சென்று பேசினால் பந்தை அடிப்பதற்கு பதிலாக தங்கள் தலையில் அடித்து விடுவாளோ என்று பயந்து ஒரு வழியாக பயத்தில் வியர்த்து வழிந்த கையுடன் ஒருவன் நிலாவிற்கு பந்தை போட… அவள் பந்தை அறைந்த அறையில் சீறிப் பாயும் ராக்கெட்டைப் போல் பந்து வீசியவனின் காது மடலை உரசிக் கொண்டு பாய்ந்து சென்று மறைந்தது. 

        நிலா அடித்த அடியைக் கண்டு மரத்தடியில் தன் அத்தம்மாவின் ஆட்டத்தை கவனிக்க சேதுவடன் வந்திருந்த கவின் , உச்ச கட்ட மகிழ்ச்சியில் சந்தோஷக் கூச்சலிட்டு கத்த… அவனது கத்தலில் திரும்பி அவனை பார்த்த நிலாவிற்கு உள்ளுள்ளே இன்னும் அதிகமாக வெறியேற… அடுத்த வீசியப் பந்தை அடித்து எந்த பக்கம் சென்றது என்பதைக் கூட கணிக்க விடாமல் பந்தை அடித்து தொலைத்தாள் நிலா. 

      நிலாவின் உள்ள வெம்மை தனது வெம்மையை விட அதிகமாக இருப்பதை உணர்ந்து, அவளை சாந்தப்படுத்தவும்.. அவளிடம் இருந்து மற்ற விளையாட்டு வீரர்களை காப்பாற்றவும் தனது தோழன் கார்மேகத்தை அனுப்பி மழையை பொழியச் செய்தான் நிலாவின் டார்லிங்.

  

       உச்ச கட்ட வெறியில் இருக்கும் பொழுது திடீரென பெய்த மழையால் நிமிர்ந்து தனது டார்லிங்கை பார்த்து நிலா ஒரு முறை முறைக்க… அதில் லேசாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த அவளது டார்லிங், பயந்து முழுதாக தன்னை தனது தோழன் கார்மேகத்தின் பின்னே மறைத்துக் கொண்டான். 

     அங்கிருந்த மற்ற அனைவரும் மழைக்கு நன்றி கூறி ஓடி மறைந்தனர். ஆனால் சிறிதும் நகராமல் கிரிக்கெட் மட்டையை அப்படியே கீழே போட்டு விட்டு சட்டென முழந்தாளிட்டு அமர்ந்து இரு கைகளையும் சிறகென வானை நோக்கி விரித்து வானை நோக்கி பார்த்தவாறு வலி தாங்காமல் வலியில் இருந்து மீள வழி தெரியாமல் உயிர் தப்பி பிழைக்க நினைக்கும் உயிரென தன் உயிர் உருக ஓலமிட்டாள் நிலா. 

      அதைக் கேட்டதும் மழைக்கு ஒதுங்கி இருந்த அனைவரும் நிலாவை வித்தியாசமாக பார்க்க.. அத்தம்மாவின் கத்தலில் கவின் பயந்து தனது தந்தையை கட்டி கொள்ள… சேதுவோ பயந்து மிரண்டான். 

       சுற்றி உள்ள யாரை பற்றியும் நினையாமல் முன் தின இரவில் இளா தன்னிடம் கூறிச் சென்ற செய்தியிலேயே மனம் வெம்ப… வானை நோக்கி விரித்த கையை மடக்கி தரையில் ஓங்கி குத்த தொடங்கினாள் நிலா. அவள் வாழ்க்கையில் அனுபவித்த அனைத்து வலிகளும் கோபங்களும் இளா கூறிய செய்தியின் எதிரொலியாக நிலாவை வெறி பிடித்தவளாக மாற்ற.. கொட்டும் மழையில் விடாமல் தரையில் ஓங்கி குத்திக் கொண்டிருந்தாள். அவள் மனதினுள் அடக்கி வைத்திருந்த அனைத்து உணர்வுகளும் சிறிது சிறிதாக வெளி வந்து கொண்டிருந்தது. 

      நிலாவின் செயலைக் கண்டு அவளை தடுக்க செல்லாமல் அனைவரும் பயந்து அவளையே பார்த்தபடி இருக்க… தன் மனைவியால் மட்டுமே தற்போது நிலாவை நெருங்க முடியும் என உணர்ந்து அபியை ஃபோனில் அழைத்து நிலைமையை விளக்கி மழையென பாராமல் எட்டு மாத கர்ப்பிணியான இசையை பத்திரமாக மைதானத்திற்கு அழைத்து வரக் கூறினான் சேது. 

      கவின் பயந்து சேதுவின் நெஞ்சுடன் ஒட்டிக் கொள்ள ஒன்றும் புரியாமல் நிலாவின் வலியை தன் வலியாக கருதி வருத்தத்துடன் கோபத்துடன் தரையில் ஓங்கி குத்திக் கொண்டிருக்கும் நிலாவை மிதமிஞ்சிய வருத்தத்துடன் பார்த்தான் சேது. 

    விசயத்தை அபி மூலமாக கேள்விப்பட்ட இசை… அடித்து பிடித்து அபியுடன் விரைவாக மைதானத்திற்கு வந்து சேர்ந்தாள். மைதானத்தில் நிலாவைக் கண்ட இசை, பதறி மழையில் நனைந்தபடி நிலாவை நெருங்கினாள். 

      தன் மேடிட்ட வயிற்றை தள்ளிக் கொண்டு நிலாவை நெருங்கிய இசை, அளவற்ற காதலை கண்களில் தேக்கி நிலாவின் தோளில் தன் கைகளை பதித்தாள். தன் தோள் மீது பதிந்த கரம் இசையினுடையது என்பதை நன்கு உணர்ந்த நிலா, தரையில் குத்துவதை நிறுத்தி விட்டு திரும்பி இசையைப் பார்த்தாள். 

     இசையின் விழிகளில் தெரிந்த தனக்கான தூயக் காதலில் மன வெம்மை தணிந்து நிலாவின் கண்களில் இருந்து தானாக கண்ணீர் அருவியாக கொட்டியது. எதற்கும் கலங்கிடாத நிலாவின் கண்களில் இருந்து கண்ணீர் வருவதைக் கண்ட இசை, “நிலாம்மா… என்ன ஆச்சு டா… ” என கண்கள் கலங்க வாஞ்சையுடன் வினவினாள். 

      “இசை… ” என்ற கேவலுடன் தாவி இசையை அணைத்துக் கொண்டாள் நிலா. 

      கொட்டும் மழையில் மைதானத்தின் நடுவே வயிற்றில் ஒரு குழந்தையையும் நெஞ்சில் நிலா எனும் மற்றொரு குழந்தையையும் தாங்கி நின்றாள் இசை. நிலாவின் கடுமையான வெம்மை குறைந்ததும் இசைக்கு மேலும் கஷ்ட்டத்தை அளிக்காமல் வருண பகவான் மெல்ல தனது கரங்களை பூஞ்சோலை கிராமத்தின் மீதிருந்து எடுத்துக் கொண்டார். 

      நிலா குளுமை அடைந்து கண்ணீர் சிந்தியதும் பயந்து ஒளிந்து இருந்த அவளது டார்லிங் பாய்ந்து ஓடி வந்து கார்மேகத்தை புறம் தள்ளி நின்றார். ஆனால் நிலாவோ அவளது டார்லிங்கை சிறிதும் கண்டுகொள்ளாமல் இசையின் நெஞ்சில் சாய்ந்து தனக்கான ஆறுதலை தேடிக் கொண்டிருந்தாள். 

        “என்னால முடியல இசை…” என்றபடி கேவி கேவி அழுக ஆரம்பித்தாள் நிலா. 

        “சரி மா.. சரி மா.. எதுவா இருந்தாலும் என் கிட்ட சொல்லு.. நா இருக்கேன்.. எப்போதும் உன் கூட இருப்பேன்.. ” என நிலாவை தேற்றியபடி அருகில் உள்ள மரத்தடிக்கு நிலாவை தன் கையணைப்பில் அழைத்துச் சென்றாள் இசை. மரத்தடியில் நிலாவும் இசையும் அமர்ந்ததும் அவர்களுக்கு தனிமை கொடுத்து சேதுவும் அபியும் கவினை தூக்கியபடி இசைக்கும் நிலாவிற்கும் டீ வாங்கி வர சென்றனர். 

       “என்ன ஆச்சு னு சொல்லு நிலா..” இசை. 

        “நேத்து நைட் அவரு ஒரு விசயம் சொன்னாரு.. அத கேட்டதுல இருந்து என்னால என்னய கட்டுப்படுத்த முடியல இசை… ” என பாவமாக கூறினாள் நிலா. 

        “அண்ண அப்பிடி என்ன சொன்னாரு?” இசை. 

         கலங்கிய கண்களுடன் நேற்று இரவு இளா தன்னிடம் இறுதியாக கூறியதை தவிர்த்து மற்ற அனைத்தையும் கூறினாள் நிலா. அதைக் கேட்டதும் இசையின் உள்ளமும் நடுக்கமெடுக்க… “பொண்ணுங்களுக்கு தான் பாதுக்காப்பு இல்ல னு நினைச்சா… இப்ப பசங்களுக்கும் பாதுகாப்பு இல்லையா? “என்றாள் இசை. 

      “என்னாலயும் இப்பிடி ஒன்ன ஏத்துக்கவே முடியல இசை… ” நிலா. 

       “அப்ப இதுக்காகத்தான் அண்ண நேத்து கவின காணோம் னதும் ரொம்ப பதறுனானா? ” இசை. 

       “ம்ம்.. ஆமா… ஆனா அத விட… ” என இளா கூறிய மீதியை நிலா கூற வர… இசை தன் வயிற்றை பயத்துடன் பிடித்துக் கொண்டாள். 

     இசையின் முக மாற்றத்தை கவனித்த நிலா, “என்ன ஆச்சு இசை? ” என இசையின் முகத்தில் தோன்றிய வியர்வை துளிகளை பதறி துடைத்தாள். 

      “வயிறு… வலி… வலிக்குது நிலாஆஆஆஆஆ… ” என கதற ஆரம்பித்தாள் இசை. 

                         (சேரநிலா மிளிர்வாள்…)

                     -செல்லம்மாள்பாரதி 

       

     

    No comments yet.