அத்தியாயம் – 25

நித்யா பாலசுப்ரமணியன் | 18 Jan 2026 | Share

மெல்ல அவள் அருகே சென்றவன் ” வேதா ” என அழைக்க திடுக்கிட்டு எழுந்தவள் தள்ளி சென்றாள்.

ஏனோ அவன் அருகாமை தன்னை ஏதேதோ செய்வதாய் உணர்ந்தவள் இன்னும் அவன் அங்கம் தன் மேல் பட்ட இடமெல்லாம் அந்த உணர்வுடன் இருக்க இது என்ன உணர்வு என்றும் புரியாமல் அவள் தவிக்க அவனை தவிர்த்து திரும்பி நிற்க இவனோ தன்னை பார்த்ததும் விலகிச் செல்லும் அளவிற்கு செய்து விட்டோமே என்று எண்ணினான்.

அவள் விலகளை ஏற்க முடியாமல் இவன் மனமோ வலிக்க தொடங்க ” சாரி வேதா. தெரியாம அப்படி நடந்திடுச்சு. இனி இது போல எப்பவும் நடந்துக்க மாட்டேன். சாரி ” என இவன் சொல்லிக் கொண்டிருக்க திரும்பி நின்றிருந்தவள் மனமோ ‘ என்ன சொல்றார் இவர். அப்ப தெரியாம தான் நடந்ததா. இவருக்கு என் மேல எந்தவித ஆசையும் இல்லையா. விரும்பாத ஒரு பொண்ணு கிட்ட அப்படி எப்படி நடந்துக்க தோணும் ‘ என இவள் மனதில் கேள்விகள் எழ விடை கிடைக்காமல் தவித்தாள்.

திரும்பி நின்றிருந்தவளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்றதும் ‘ என்னிடம் பேச கூட பிடிக்காமல் போய்விட்டதா அவளுக்கு. இனி அவளை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யக்கூடாது ‘ என எண்ணியவன் அங்கிருந்து நகர இவளுக்கும் என்ன செய்வது என்று புரியவில்லை.

கீழே இறங்கியவன் தான் இங்கு இருந்தால் அவள் அறைக்கு வராமல் மொட்டை மாடியில் குளிரில் அமர்ந்திருக்க போகிறாள் என எண்ணியவன் வீட்டிற்கு கிளம்பிச் செல்ல கார் சத்தம் கேட்பது போல் இருக்கவும் மாடியில் இருந்து எட்டிப் பார்த்தவள் அவன் கிளம்பி விட்டான் என்பதும் ஏனோ கண்களில் கண்ணீர் துளிர்ப்பதை உணர்ந்தாள்.

அறைக்கு சென்றவள் அவன் நினைவுகளுடன் முட்டி மோத வீட்டிற்கு வந்தவனும் அவள் நினைவுகளுடன் தூக்கம் வராமல் அறையில் உலாவிக் கொண்டிருந்தான்.

எப்பொழுது தூங்கினானோ காலை 10 மணி போல் அம்மா கால் செய்ததும் எழுந்தவன் ” ஒரு வேலை வந்திடுச்சு மா அதான் சொல்லாமலே கிளம்பிட்டேன் சாரிமா ” என்ன சொன்னவன் ” இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை தானே வேதா அங்கேயே இருக்கட்டும். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிட்டு நைட் வந்து கூப்பிட்டுகிறேன் ” என்று சொல்ல ” வேதா கிட்ட நீயே சொல்லிடு ” என கூறி அவளிடம் ஃபோனை கொடுக்கப் போக ” நீங்களே சொல்லிடுங்கம்மா நான் அப்புறம் அவளுக்கு கூப்பிடுறேன் ” என்றவன் போனை வைத்துவிட தன்னிடம் பேசாமல் தவிர்க்கிறான் என்று எண்ணியவளுக்கு அழுகை முட்டுக் கொண்டு வர எங்கே அத்தை கவனித்து விடுவார்களோ என கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தினாள்.

ஏனோ அன்றைய பொழுது விரைந்து செல்வேனா என்றிருக்க அவன் வருகைக்காக காத்திருந்தாள்.

இரவு வந்து அழைத்துச் செல்கிறேன் என்று சொன்னவன் இன்னும் வீட்டிற்கு வரவில்லை.

மறுநாள் கல்லூரி செல்ல வேண்டும் என்பதால் இரவு 10 மணி வரை அவன் வருகைக்காக காத்திருந்தவள் அவன் அதுவரையிலும் வராமல் இருக்க அவனுக்கு போன் செய்தவள் அவன் போனை எடுக்கவில்லை என்றதும் வீட்டிற்கு கிளம்பலாம் என எண்ணியவள் சுபத்ராவிடம் சொல்ல ” சரிமா அவனுக்கு வேலை இன்னும் முடியல போல ” எனக் கூறியவர் டிரைவரை அழைத்து வேதாவை வீட்டில் விட்டு விடும்படி சொல்ல வீட்டிற்கு வந்தவளோ அவன் அங்கேயும் இல்லை என்றதும் ஏனோ தவிப்பாய் உணர்ந்தாள்.

‘ எங்க போனாரு ஏன் அம்மா வீட்டுக்கு வரல இங்கேயும் வரல ஒரு வேளை ஆபீஸ்லேயே இருக்காரா ‘ என யோசித்தவள் அஜய்க்கு போன் செய்ய அவனோ ” இல்லமா வேதா அவன் இன்னைக்கு மதியமே வெளியே கிளம்பி போயிட்டான். ஏதோ வேலை இருக்குன்னு சொன்னான். முடிச்சுட்டு வீட்டுக்கு வந்திருப்பானு நினைச்சேன் ” என்று சொல்ல ” இல்லண்ணா அவர் இன்னும் வீட்டுக்கு வரல. போன் பண்ணாலும் எடுக்கல அதான் உங்ககிட்ட கேட்கலாம்னு போன் பண்ணேன் ” எனக் கூற ” சரிமா நீ ஒன்னும் பயப்பட வேண்டாம். வேலை முடிஞ்சதும் வந்திடுவான் நீ எதையாச்சும் யோசிக்காம படுத்து தூங்கு ” எனக் கூறி ஃபோனை வைக்க இவளுக்கோ என்ன செய்வது என்று தெரியவில்லை. படுத்தாலும் தூக்கம் வர மறுத்தது. ஏனோ மனது படாதபாடு படுவதை உணர்ந்தாள். அவனை உடனே பார்க்க வேண்டும் போல் மனம் துடிப்பதை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தாள்.

இரவு பதினோரு மணி போல் கார் சத்தம் கேட்டதும் விரைந்து கீழே ஓடியவள் கதவை திறக்க ‘ என்ன இது இன்னும் தூங்காம இருக்கா ‘ என யோசனையுடன் அவளை பார்த்தவன் அவள் கண்கள் கலங்கி இருப்பதையும் பார்த்தான். ஆனால் இப்போதைக்கு எதையும் பேசவோ எதைப்பற்றியும் யோசிக்கவோ மனம் இல்லாதவன் அவள் கதவை திறந்து விட்டதும் எதுவும் பேசாமல் உள்ளே நுழைந்தவன் தனது அலுவலக அறைக்குள் சென்று அடைந்து கொண்டான்.

கதவைத் திறந்தவளோ அவன் மிகுந்த சோர்வுடன் இருப்பதை உணர்ந்தாள். அவனது கலைந்த கேசம், முகத்தில் படிந்திருந்த பிசுபிசுப்பு, முட்டிவரை நனைந்து இருந்த பேண்டும் அவன் மதிய வெயிலில் இருந்து கடற்கரையில் அமர்ந்திருக்கிறான் என்று அவளுக்கு சொல்லாமல் சொல்லியது. 

அவனது முக பாவனைகள் அவன் ஏதோ யோசனையுடன் இருப்பதையும் உணர்த்த இவளும் எதுவும் பேசவில்லை. அவனை பார்த்து விட்டதே மனதிற்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தர அலுவலக அறைக்குள் புகுந்து கொண்டவனை தொந்தரவு செய்ய மனம் இல்லாமல் படுக்க செல்லலாம் என எண்ணியவள் ‘ அவர் சாப்பிட்டாரா இல்லையானு தெரியலையே ‘ என யோசித்தவள் பாலை சூடு பண்ணி எடுத்துச் சென்றாள்.

கதவைத் தட்டி விட்டு திறக்கலாம் என பார்த்தால் கதவு பூட்டி இருக்கவும் ‘ ஏன் பூட்டிட்டு இருக்கு எப்பவும் பூட்டிக்க மாட்டாரே ‘ என எண்ணியவளாய் கதவை தட்ட கதவை திறந்தவன் ‘ என்ன ‘ என்பது போல் பார்க்க ” பால் ” என சொன்னவள் அவனிடம் டம்ளரை நீட்ட வாங்கிக் கொண்டவன் கதவை சாத்தி கொள்ள தனது அறைக்குள் புகுந்து கொண்டாள், வேதா.

பாலை வாங்கியவனோ அவளை பார்த்துக் கொண்டிருந்தால் எங்கே தன்னை மீறி அவளை கட்டிக் கொள்வோமோ என எண்ணி உடனே கதவை சாத்தியவன் 1008 எண்ணங்கள் மனதில் அலை மோத அடுத்து என்ன செய்வது என புரியாது தவித்துக் கொண்டிருந்தான்.

வேதாவிடம் அப்படி நடந்து கொண்டது தவறு என மூளை சொன்னாலும் ‘ அவள் என்னுடையவள் அவகிட்ட நான் அப்படி நடந்துகிட்டது ஒன்னும் தப்பு இல்ல ‘ என மனம் வாதாட அவளை சந்தித்த நாளிலிருந்து அனைத்தையும் நினைத்து பார்த்தவன் அவளை பார்த்ததும் ஏதோ ஒரு உணர்வு தன்னுள் உண்டாகி இருப்பதை உணர்ந்தான். 

நீலா மேல் வைத்திருந்த காதலால் வேதாவை தவிர்த்தானே தவிர அவள் மேல் ஏதோ உணர்வு இருந்து கொண்டே இருப்பதை அவ்வப்போது உணரத்தான் செய்தான். ஏதோ பந்தம் இருவருக்குள்ளும் இருக்கின்றது போல எனவும் எண்ணியவன் அவள் அருகாமை தன் மனதை மகிழ்ச்சியடைய செய்வதையும் அறிந்திருந்தான். இதற்கு ஏதேனும் காரணம் உண்டா என தன்னை தானே கேட்டும் கொண்டான்.

அவள் மாடியில் முகம் கொடுத்து பேசவில்லை என்றதும் வீட்டிற்கு வந்தவன் எதிலேயும் மனம் ஒன்றாமல் போக தூக்கம் வராமல் தவித்தான். மறுநாளும் அலுவலகம் சென்றவன் எதிலும் நாட்டம் வராமல் இருக்க அஜையிடம் சின்ன வேலை இருப்பதாய் கூறிவிட்டு மதியமே வெளியே கிளம்பினான்.

வெளியே கிளம்பியவன் தன் எண்ண அலைகள் அலைமோத உச்சி வெயிலில் கடற்கரை மணலில் அடித்துச் செல்லும் அலைகளைப் பார்த்த வண்ணம் அமர்ந்துவிட்டான் நேரம் போவது தெரியாமல்….

    No comments yet.