அத்தியாயம் -25

Chellammal Bharathi | 03 Dec 2025 | Share

      பூஞ்சோலை கிராமத்தின் எல்லையில் உள்ள அந்த குட்டி பங்களா மிகுந்த அமைதியாக காணப்பட்டது. அதன் அருகே உள்ள வீடுகளில் வசிப்பவர் அனைவரும் அதை பார்த்தும் பாராதது போல் தங்களின் வேலையை கவனித்துக் கொண்டிருந்தனர். 

       “ஏன்ணே இந்த வீட்டுக்குள்ள யாரும் இல்லையா? ” என அங்கு உள்ள பெட்டிக் கடையில் ஒருவன் மற்றொருவனிடம் கேட்டான். 

       “ரெண்டு நாள் முன்னாடி தான் ஒருத்தன் குடி வந்தான்… அவனும் நம்ம ஊரு தான் பா… அவன் கூட ஏதோ போலீஸ் கேஸ் ல உள்ள இருந்துட்டு இப்ப தான் வெளில வந்தான் னு பேசிக்கிறாங்க.. “

       “நமக்கெதுக்கு இந்த ஊர் வம்புலாம்? “

        “அப்ப இந்த பங்களா மினிஸ்டரோடது ங்கிறது உண்மையா? “

       “அட ஆமா… அந்த மினிஸ்டர் பலான விசயத்துக்கு இந்த பங்களாவ பயன்படுத்திக்கிறான் னு ஊருக்குள்ள பேச்சு… இப்ப கூட ஒரு காவாலி பய குடி வந்து இருக்கான். அவன் முழியே சரி இல்ல.. “

      “பெரிய இடத்து சமாச்சாரம் லாம் நமக்கு எதுக்கு.. “

         என அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில்  விலை உயர்ந்த கார் ஒன்று அந்த பங்களாவினுள் நுழைந்தது. கேட்டினுள் கார் நுழைந்ததும் அதற்கு மேல் அவர்களால் காரை பார்க்க முடியவில்லை. ஓங்கி உயர்ந்த மதில் சுவர் பங்களாவின் உள்ளே நடப்பதை வெளியே காட்சி பொருளாக்காமல் பாதுகாத்து கொண்டது. 

       கார் பங்களாவின் முன்னே நின்றதும் அதிலிருந்து ஒருவன் இறங்கி வேகமாக உள்ளே நுழைந்தான். “முரளி… டேய் முரளி.. ” எனக் கத்திக்கொண்டே ஹாலில் வந்து நின்றான். 

       அவனது கத்தலைக் கேட்டு உள்ளிருந்து ஒருவன் பயத்துடன் ஓடி வந்தான்.

        “என்ன முரளி? பங்களா லாம் சொகுசா இருக்கா? ” 

       “துரை சார்… அப்பிடிலாம் ஒன்னும் இல்ல ங்க சார்.. ” என பயத்தில் கை கட்டி முதுகை வளைத்து நின்றான் முரளி என்றழைக்கப்பட்டவன். 

     முரளி பேசி முடித்த மறு கணம் அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்தான் துரை. அறையை வாங்கி கொண்டு அமைதியாக நின்றான் முரளி. 

      “சாராய கேஸ் ல இருந்து உன்னைய வெளில எடுத்து இப்பிடி ஒரு பங்களா ல கொண்டு வந்து வச்சு இருக்குறது எதுக்கு? அந்த போலீஸ்க்காரன் குடும்பத்த கொத்தா தூக்க தான்… நீ இங்க வந்து நல்லா மூக்கு முட்ட தின்னுட்டு நல்லா தூங்கிட்டு இருக்க.. ” துரை. 

       துரை, பார்த்தசாரதி மினிஸ்டரின் வலது கை. அவரது அனைத்து நிழல் காரியங்களுக்கு உயிர் கொடுப்பவன். அவருக்கு தூரத்து சொந்தம் என மினிஸ்டருடன் ஒட்டிக்கொண்டு அவரது நம்பிக்கையை பெற்றுக் கொண்டவன். பொறுமை என்றால் எந்த கடையில் வாங்க வேண்டும் என கேட்பவன். இளஞ்சேரன் கைது செய்து வைத்திருந்த நிலாவின் எதிர்த்த வீட்டு சாராயக் கடைக்காரனான முரளியை வெளியே எடுத்து ஒரு முக்கிய காரணத்திற்காக பூஞ்சோலை கிராமத்தில் உள்ள மினிஸ்டரின் பங்களாவில் தங்க வைத்துள்ளான். ஆனால் அந்த முக்கிய காரணம் முரளிக்கே தெரியாது. இளஞ்சேரனை பழிவாங்க என முரளி நினைத்துக் கொண்டிருக்கிறான். அவனை அவ்வாறு நம்ப வைத்திருக்கிறான் துரை. 

     “இல்ல துரை சார்… அவன் பொண்டாட்டிய மிரட்ட தான் நம்ம செல்வத்த அனுப்பி வச்சு இருக்கேன்..” முரளி. 

     “கிழிச்ச…  அந்த செல்வத்த அடிச்சு துவைச்சுட்டா அந்த போலீஸ்க்காரன் பொண்டாட்டி . இப்ப செல்வம் அந்த இளஞ்சேரன் போலீஸ் கிட்ட.. உன்னால ஒரு காரியத்த கூட ஒழுங்கா செய்ய முடியாதா? ” என கோபத்தில் கத்தினான் துரை. 

     “அச்சோ… இது எனக்கு தெரியாதே.. ” என பாவமாக விழித்தான் முரளி. 

     “தின்னுட்டு தின்னுட்டு சொகுசா தூங்கிட்டு இருந்தா எப்பிடி தெரியும்? “துரை. 

       “இல்ல சார்.. அடுத்த தடவ சரியா செஞ்சுர்றேன்… ” முரளி. 

        “நீயா எதுவும் கிழிக்க வேணாம். அவன் பொண்டாட்டி இந்த.. கிரிக்கெட் விளையாடுவா தான? ” துரை. 

        “ஆமா சார். சுத்து வட்டாரத்துல அவ தான் ரொம்ப நல்லா விளையாடுவா. அவள இது வரைக்கும் எந்த பயலுமே அவுட் ஆக்குனதே இல்ல.. ” முரளி. 

       “அப்பிடியா? அப்ப நாம அவுட் ஆக்கிற வேண்டியது தான்.. ” என மெல்லிய சிரிப்பொன்றை சிரித்தான் துரை. 

       “நாம எப்பிடி சார் அவள அவுட் ஆக்குறது? அத்தோட நாம அவள அவுட் ஆக்கி என்ன பண்ண போறோம்? ” என தலையை சொரிந்தான் முரளி. 

       “நீ நினைக்கிற மாதிரி அவள மைதானத்துல இருந்து அவுட் ஆக்க போறது இல்ல. இந்த உலகத்துல இருந்தே அவள அவுட் ஆக்க போறோம்.. ” என பூடகமாக கூறி விட்டு ஷோபாவில் ஒய்யாரமாக அமர்ந்தான் துரை. 

       “எப்பிடி சார்? ” என ஆச்சரியத்தில் விழி விரித்து கேட்டான் முரளி. 

        “நாம ஒரு டோர்னமென்ட் நடத்துவோம். எப்பிடியும் இந்த ஊரு சார்பா விளையாடுற டீம்ல அவ விளையாடுவா. அந்த விளையாட்டுல நம்ம பசங்கல இறக்கி விட்டு விளையாடுற மாதிரி ஆள முடிச்சுருவோம்.. உடனே டோர்னமென்ட் க்கான வேலைய கவனி.. அதுல அவ கலந்துக்கனும்.. அவ கலந்துக்கிற மாதிரி நீ பண்ணனும்.. ” துரை. 

        “அவ விளையாடாம இருக்க மாட்டா சார்.. ஆனா யாருக்கும் சந்தேகம் வந்துறாதே.. முக்கியமா அவ புருஷனுக்கு.. ” முரளி. 

        “இந்த மாதிரி டோர்னமென்ட் அடிக்கடி நடக்குறது தான? அதுனால எந்த சந்தேகமும் வராது. என்னய கேள்வி கேக்காம நீ போய் அதுக்கான வேலைய கவனி.. நா போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்குறேன்.. ” என மாடியேறி ஒரு அறையினுள் புகுந்தான் துரை. 

      துரை உள்ளே சென்றதும் அவன் கூறிய வேலையை செய்ய வெளியே சென்றான் முரளி. முரளி சென்றதை உறுதிபடுத்திக் கொண்ட துரை, தனது அறையை உள்பக்கமாக பூட்டி விட்டு அந்த அறையின் அலமாரியின் பின் இருந்த இரகசிய பொத்தானை அழுத்தினான். 

      இரகசிய பொத்தானை அழுத்தியதும் அங்கு இருந்த ஆளுயுற பார்த்தசாரதியின் படத்திற்கு பின் இருந்த இரகசிய கதவு திறந்தது. கதவிற்கு பின்னே படி கட்டுகள் கீழ் நோக்கி சென்றது. அந்த படி கட்டில் நிதானமாக நடந்து கீழே சென்றான். 

      படிகள் முடிந்து தளம் வந்ததும் நின்று, “பாலய்யா..” எனக் குரல் கொடுத்தான் துரை. 

      சற்று நேரத்திற்கு முன் வெளியே பெட்டிக் கடையில் இந்த பங்களாவை பற்றி புறணி பேசிக் கொண்டிருந்ததில் ஒருவன் பங்களாவின் கீழ் தள இரகசிய அறையில் இருந்து பணிவாக ஓடி வந்தான்.

      “என்ன பாலய்யா.. வெளில பொட்டிக்கடையில அப்பிடி சுவாரசியமா பேசிட்டு இருந்த? ” என அவனின் தோளில் கரம் போட்டு பேசினான் துரை. 

       “அது ஒன்னுல்ல துரை… எப்போதும் போல தான். இந்த பங்களாவ பத்தி தான்.. “என சிரித்தான் பாலய்யா. 

       பாலய்யா, துரையின் நெருங்கிய தோழன். துரை, பார்த்தசாரதியின் நிழல் என்றால்.. பாலய்யா, துரையின் நிழல். இன்று வரையில் வெளியில் எவருக்கும் தெரியாமல் நடக்கிறது இவர்களது இணைபிரியா நிழல் நட்பு. 

       “எங்க அந்த பொண்ணு? “துரை. 

       “உள்ள தான் துரை.. மயக்கத்துல இருக்கு. ஊசி போட நேரம் ஆச்சே னு ஓடி வந்தேன்… ” பாலய்யா. 

       “சரி.. சரி… போய் ஊசிய போடு… அவ வெளிச்சத்துக்கு வந்தா நாம இருட்டுக்குள்ள போயிற வேண்டியது தான்.. ” துரை. 

         “இரு துரை ஊசி போட்டுட்டு வர்றேன்..” என அங்கிருந்த ஒரு அறையினுள் நுழைந்தான் பாலய்யா. 

        அவன் பின்னே துரையும் உள்ளே நுழைய… அந்த அறையின் ஒரு மூலையில் தலைவிரி கோலத்துடன் ஒரு சட்டை பாவாடை அணிந்து பதினெட்டு பத்தொன்பது வயதே நிரம்பிய ஒரு சிறு பெண் கைகளால் முகத்தை மூடி கால்களை மடக்கி உடலை குறுக்கி சுவரோடு சுவராய் ஒட்டி இருந்தாள்.

       அவளது கரத்தை வலுக்கட்டாயமாக இழுத்த பாலய்யா, அவளது புஜத்தில் ஒரு ஊசியை குத்தினான். அதற்கு அவள் எவ்வித எதிர்வினையும் காட்டாமல் தன் முகத்தை மறைத்திருந்த முடிகளின் இடையே தெரிந்த இடைவெளியின் வழியே துரையையே விழி மூடாமல் பார்த்து கொண்டிருந்தாள். அவனும் அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான். 

       ஊசியின் விளைவால் சிறிது நேரத்தில் அப்பெண் மயங்கி சரிய… மயங்கி சரியும் நொடிதனிலும் துரையை பார்த்தவாறே மயங்கி விழுந்தாள் அப்பெண். 

                               (சேரநிலா மிளிர்வாள்…)

                         -செல்லம்மாள்பாரதி 

       

   

    No comments yet.