அத்தியாயம் -24

Chellammal Bharathi | 30 Nov 2025 | Share

       இளஞ்சேரன் கத்திய கத்தலிலும் அவன் நிலாவை அறைந்த சத்தத்திலும் வெளியே சென்றிருந்த கதிர்வேலுவும் அலுமேலுவும் அவசரமாக உள்ளே எட்டிப் பார்த்தனர். அங்கு நடு கூடத்தில் கோவத்துடன் நிலாவை அடித்திருந்த இளாவைக் கண்ட அலமேலு, “ஊரு உலகத்துல இல்லாத மாப்ள ய தேடி கொண்டு வந்து இருக்க டா கதிரு… உன் பொண்ண எப்பிடி அடிக்கிறான் பாரு.. ” என இளாவை பார்த்து முறைத்தார் அலமேலு.

      “ஏன் ம்மா நீ அவள அடிச்சதே இல்லயா?” கதிர்வேல்.

       “பொசக்கெட்டவனே.. நா எங்கடா அவள அடிச்சு இருக்கேன்? வள்ளி அவள அடிக்க எடுத்து குடுத்து இருக்கேன்.. அம்புட்டு தே… ” என தன் முகவாயை இடித்துக் கொண்டார் அலமேலு.

       “நீ நிலாவ கையால அடிக்கிறத விட நீ அவள பேசுற பேச்சு நிலாவ ரொம்பவே கஷ்ட்டப்படுத்தும் ம்மா.. ” என ஆழ்ந்த குரலில் கூறினார் கதிர்வேல்.

       “ஆஆ.. அதெல்லாம் எனக்குத் தெரியும்.. அங்க என்னமோ புள்ளயக் காணோம் னு தேடுறாங்க.. நீயும் போய் தேடு… நா போய் சத்த கண் அசருறேன்… ” என அங்கிருந்து நழுவி உள்ளே சென்று படுத்துக் கொண்டார் அலமேலு.

       “என்னது? புள்ளயக் காணோமா? ” என தோளில் கிடந்த துண்டை எடுத்து உதறியபடி உள்ளே நுழைந்து, “என்ன டா சேது? ” என்றார்.

       “கவின காணோம் சித்தப்பா… அந்த டென்ஷன் ல இளா நிலாவ அடிச்சுட்டான்… அவன எங்காவது பாத்தீங்களா? “என கைகளை பிசைந்தபடி கூறினான் சேது.

      “அட மொதல்ல தான்டா காருக்குள்ள போறத பாத்தேன்.. ” கதிர்வேல்.

       “என்ன சொல்றீங்க? ” என சீற்றம் குறையாமல் கேட்டபடி வெளியே காரை நோக்கி ஓடினான் இளா.

        அங்கு காரினுள்ளே ஒவ்வொரு இடமாக எதையோ தேடியபடி இருந்தான் கவின். அவனை காரினுள் பார்த்த பிறகு நிம்மதியாக மூச்சு விட்டு நிதானமானான் இளா. அவனைத் தொடர்ந்து பின்னே வந்த மற்ற அனைவரும் கவினை காரினுள் பார்த்துவிட்டு, “இதுக்கா இவ்ளோ டென்ஷன் ஆன? ” என்ற ரீதியில் இளாவை பார்த்து விட்டு மீண்டும் வீட்டின் உள்ளே சென்றனர்.

      அனைவரையும் கூட்டமாக பார்த்த கவின், காரினுள் இருந்து வெளியே வந்தான். “என்ன ஆத்து? ” என இடுப்பில் ஒரு கை வைத்து மறு கையால் வினவினான் கவின்.

      “கிறுக்கு பயலே.. சத்த நேரத்துல நடுங்க வச்சுட்ட.. ” என கவினை தூக்கிக் கொண்டு உள்ளே சென்றான் சேது.

     “அங்க காருக்குள்ள என்ன பண்ணிட்டு இருந்த கவின்? ” என முறைப்புடன் கேட்டாள் இசை. சற்று நேரத்தில் அவளையும் சேர்த்தல்லவா பயமுறுத்திவிட்டான் அவளது அருமை மகன்.

      “எல்லாம் உன்னால தா..” என தலையில் அடித்துக் கொண்டான் கவின்.

     “நா என்ன டா செஞ்சேன்? ” என ஒன்றும் புரியாமல் விழித்தாள் இசை.

      “கொஞ்சந்தா எத்துத்து வந்து இதுக்க.. அதா அங்க உள்ள இதுக்கா னு பாக்க போனேன்… ” என இசை எடுத்து வந்த ஸ்நாக்ஸ் பையை தூக்கி காண்பித்தான் கவின்.

     “ஹைய்யோ… குடும்பமாடா இதெல்லாம்? ” என தலையில் அடித்துக் கொண்டான் இளா.

     “எனக்கு எப்போதும் லைட்டா பசிக்கும்.. அதான் எடுத்துட்டு வந்தேன். அத அப்பனும் மகனும் புடுங்கி தின்னுட்டாங்க.. ” என உதட்டை பிதுக்கினாள் இசை.
     “ஆனா.. சத்தியமா சொல்றேன்டா.. ஒருத்தன் பயந்து வேகமா வர சொல்லி மெஸேஜ் பண்ணுனா ஏதோ படம் பாக்க போற மாதிரி ஸ்நாக்ஸ்.. புள்ள குட்டியெல்லாம் அள்ளிட்டு காரெடுத்து டூர் போற மாதிரி வந்த ஒரே குடும்பத் தலைவன் நீயா தான்டா இருப்ப சேது… ” இளா.

     “ரொம்ப புகழாத மச்சான்.. எனக்கு ஒரே வெக்க வெக்கமா வருது…” என கால் கட்டை விரலை தரையில் தேய்த்து ஆட்காட்டி விரலை வாயில் கடித்துக்கொண்டு தரையைப் பார்த்து கூறினான் சேது.

       “என்ன கருமம் டா இது? ” இளா.

        “வெக்கம் மச்சான்.. ஆம்பளங்க வெக்கப் பட்டா ரொம்ப அழகா இருப்பாங்களாம்லோ… ” என மீண்டும் நாணிக் கோணினான் சேது.

       “உனக்கு இருக்குற அழகே போதும்டா தயவு செஞ்சு இந்த கருமத்த நிறுத்து.. பாக்குறவங்க கண்ணு அவுஞ்சுரும் போல…” இளா.

        
        “நோ… நோ… அப்பிடியே இரு டா புருஷா… நா ரீல்ஸ் எடுத்துக்கிறேன்… ” என  கையில் ஃபோனுடன் சேதுவின் முன்னே வந்து நின்றாள் இசை.

        “ம்மா… நானு? ” என துள்ளிக் குதித்தபடி சேதுவுடன் இணைந்து கொண்டான் கவின்.

       அவர்களின் கூத்தை காண சகிக்காமல் அபியிடம் மட்டும் கண்ணை காட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் இளா. நிலா இருந்த பக்கம் துளியும் திரும்பாமல் செல்லும் இளாவை கண்டு வருத்தம் கொண்டான் அபி.

      அபியின் வருத்தம் துளியும் இன்றி எப்பொழுதும் போல் கவினை ரசித்தபடி இருந்தாள் நிலா. இளா அடித்ததில் அவளது கன்னம் லேசாக வீங்கி இருக்க… அதைக் கண்ட வள்ளி, மருந்து எடுத்து வந்து நிலாவின் கன்னத்தில் போட முற்பட்டாள்.

     அதை உணர்ந்த நிலா, சற்று விலகி “என்ன பண்ற? ” என்றாள்.

     “கன்னம் வீங்கிருச்சு நிலா… அதான் மருந்து போட போறேன்.. ” வள்ளி.

      “அப்பிடியா? இத விட பயங்கரமா என்னய நீ அடிச்சு இருக்க. அப்பலாம் எனக்கு யாரு மருந்து போட்டது? நீயா? அதவிட… நீ பேசுன பேச்சு எல்லாம் இங்க வலிக்குது… அதுக்கு எப்பிடி மருந்து போடுவ? ” என தன் இதயத்தை தொட்டுக் காட்டினாள் நிலா.

      நிலா கேட்ட கேள்வியில் சற்று உள்ளம் ஆடித்தான் போனாள் வள்ளி. “இல்ல… அது.. நிலா… ” என தயங்கினாள் வள்ளி.

      “உங்களோட இந்த திடீர் அன்பும் அக்கறையும் எனக்கு கிடைக்க வேண்டிய நேரத்துல துளி கூட கிடைக்கல. அதுக்காக இந்த நிமிஷம் வரைக்கும் வருத்தப் பட்டது இல்ல. ஏன்னா அது எனக்கு தேவையே இல்லை. சுயமா வளந்து நிக்கிற சுயம்பு நா… என் புருஷன் வந்து கூட்டிட்டு போற வரைக்கும் நா இங்க தங்கிக்க எனக்கு அனுமதி குடுத்தா மட்டும் போதும்… மத்தபடி உங்க பொய்யான அக்கறை எனக்கு தேவை இல்லை… ” என மூச்சு விடாமல் பேசி விட்டு அறையினுள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள் நிலா.

       நிலா பேசி சென்றதில் கண்கள் கலங்கி நின்றாள் வள்ளி. வள்ளியின் அருகே வந்த கதிர்வேல், “விடு வள்ளி.. நமக்கு இந்த பேச்சு தேவை தான்… ” என ஆதரவாக தோள் சாய்த்து கொண்டார்.

       அதைக் கண்ட அபி எதுவும் கூறாமல் வெளியில் செல்ல…. அவனை தொடர்ந்து சேதுவும் இசையும் கவினை தூக்கிக் கொண்டு வெளியே சென்றனர்.

        “உனக்கு என்ன டா ஆச்சு? அம்மா வ நிலா பேசுனத நினைச்சு ஃபீல் பண்றியா?” என அபியின் தோள் மீது கை வைத்து வினவினான் சேது.

      “ச்சே ச்சே அதெல்லாம் இல்ல… மாமா அக்காவ திரும்பி கூட பாக்காம போய்ட்டாங்க.. அக்கா பாவம் இல்லயா? வீட்லயும் யாரும் அவள புரிஞ்சுக்க மாட்டேன்ங்குறாங்க.. இப்ப மாமாவும் இப்பிடி பண்றாங்க.. ” என கண் கலங்கினான் அபி.

      அபி அவ்வாறு கூறியதும் பாய்ந்து சென்று அவனை கட்டிக் கொண்டான் சேது. “எனக்கு இப்ப நிலாவ பத்தி கவல இல்ல டா.. நீ பாத்துப்ப… ” என அணைப்பை இறுக்கியவாறு நெகிழ்ந்து கூறினான் சேது.

       இசையும் மனதால் நெகிழ்ந்தவாறு, “உங்க லவ்ஸ முடிச்சுட்டு வாங்க… என்னால நிக்க முடியல.. நா போய் காருல உக்கார்றேன்… வா கவினு.. ” என கவினையும் அழைத்துக் கொண்டு காரினுள் ஏறி அமர்ந்தாள் இசை.

        “நா என்ன சொல்றேன் .. நீ என்ன பேசுற? “அபி.

        “இளா தான உன் கவலை? டேய்… நீ சின்ன பய டா.. அவங்க ரெண்டு பேரும் வேற லெவல் ல லவ் பண்ணிட்டு இருக்காங்க… உலகமே அழிஞ்சாலும் உன் அக்காவுக்காக இளா உயிர குடுப்பான் டா. இந்த சண்டை லாம் அந்த லவ்ல ஒரு பார்ட் தான். உனக்கு ஒரு ரகசியம் சொல்லவா? தினமும் ராத்திரி உன் அக்காவும் மாமாவும் ஒன்னா தான் தூக்குறாங்க… ” எனக் கூறி கண்ணடித்தான் சேது.

        “அப்பிடியா? ” என ஆச்சரியமாக வினவினான் அபி.

         “என் புள்ள மேல சத்தியம் டா… ” என சிரித்தான் சேது.

         “இப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கு.. ” என புன்னகைத்தான் அபி.

        “இதே சந்தோஷத்தோட போய் உன் அக்காவுக்கு சாப்பாடு குடு.. நா கிளம்புறேன்.. ” என புன்னகையுடனே விடை பெற்றான் சேது.

        அபியும் சந்தோஷமாக நிலாவிற்கு சாப்பாடை எடுத்துச் சென்றான். எதுவும் பேசாமல் சாப்பாட்டை உண்டு விட்டு அமைதியாக இரவிற்காக காத்திருக்க தொடங்கினாள் நிலா. ஆயிரம் கேள்விகள் மனதை குடைய… இரவின் நிலவுக்காக சேரனின் நிலா காத்திருந்தாள்.

      இரவின் பிடியில் வான் நிலா குளுமை வீசிக் கொண்டிருக்க… மெத்தையின் மீது சேரநிலா கண் மூடி சயனித்து இருந்தாலும் மனதில் அனல் காற்று வீசிக் கொண்டிருந்தது.

      திடீரென அவளது இடையில் ஒரு வலிய கரம் படற… அது யாரென உணர்ந்தும் உணராதது போல் அசையாமல் கண் மூடி சயனித்து இருந்தாள் நிலா. சில நொடியில் அவளது கன்னம் குளுமையை உணர… கண் விழித்து பார்த்தாள் நிலா. அவள் அருகே அமர்ந்து கருமமே கண்ணாக நிலாவின் காயத்தில் அஞ்சனம் இட்டுக் கொண்டிருந்தான் நிலாவின் சேரன்.

        அஞ்சனம் இட்டு முடிந்ததும், “வலிக்குதாடி? ” என வருத்தம் தோய்ந்த குரலில் கேட்டான் இளா.

        “இப்ப வலிக்கல… ” என காதல் ததும்ப அவனை பார்த்தபடி கூறினாள் நிலா.

        “ஸாரி டி பொண்டாட்டி… ” என தன்னவளை அள்ளி தன் மடியில் இருத்தியபடி கூறினான் இளா.

        “ம்ம்.. சரி.. ” என வாகாக அவனது நெஞ்சில் முகம் புதைத்தாள் நிலா.

        “ஏன்டி… நாம மதியம் பண்ணுன ரொமான்ஸ இந்த சேது பய கண்டு புடிச்சு இருப்பானோ? ” என நிலாவின் இடுப்பில் கை போட்டு தன்னுடன் இறுக்கியபடி சந்தேகத்துடன் வினவினான் இளா.

        அதைக் கேட்டதும் அப்பொழுது நடந்தவை அனைத்தும் நினைவில் வர.. வெட்கத்துடன் புன்னகைத்துக் கொண்டாள் நிலா.

       “ச்சே ச்சே.. கண்டு புடிச்சு இருக்க மாட்டான்… அவனுக்கு அந்த அளவுக்கு லாம் அறிவு இல்ல… அப்புறம் எப்பிடி அவன் சரியா கேட்டான்? ” என யோசனையில் மூழ்கினான் இளா.

        அப்பொழுது தற்செயலாக நிலாவின் அறை பக்கம் வந்த அபி, லேசாக திறந்திருந்த கதவின் வழியே இருவரையும் கண்டு மன மகிழ்ச்சியுடன் கதவை மெதுவாக நன்றாக மூடி விட்டு சென்றான்.

       கதவு மூடும் அரவத்தில் தன்னிலை அடைந்த நிலா, ” இன்னக்கி ஏன் அவ்ளோ டென்ஷன் ஆன சேரா? ” என தன்னவனின் நெஞ்சில் இருந்து தலை நிமிர்த்தாமல் வினவினாள் நிலா.

       “நானே அத பத்தி உன் கிட்ட பேசனும் னு தான் வந்தேன்… ” என நீண்ட பெருமூச்சை விட்டான் இளா.

       “என்ன? சொல்லுங்க… ” நிலா.

        “உன் எதிர் வீட்ல ஒருத்தன் சாராயம் வித்தான் னு அரெஸ்ட் பண்ணேனே… அவன் இப்ப எங்க னு தெரியுமா? ” என நிலாவை தன் அணைப்பில் வைத்துக் கொண்டு கேட்டான் இளா.

        “ம்ம்.. அவன் ஏதோ மினிஸ்டர் கூட சேந்துட்டான் னு கேள்விப்பட்டேன்… ஏன் இப்ப அவனுக்கு என்ன? அவன் தான் இந்த ரௌடிய அனுப்புனதா? “நிலா.

        “அவன் இல்ல… அந்த மினிஸ்டர்… “இளா.

        “ஓஓ..” நிலா.

         “நம்ம சேது கடையில ஒரு பையன் வேலை பாத்தானே.. அவன உனக்கு ஞாபகம் இருக்கா டி? ” இளா.

         “நாம தான அவன ஹாஸ்ட்டல் ல சேத்து டுட்டோரியல் காலேஜ் ல படிக்க அனுப்பி வச்சோம்… அவனுக்கு என்ன? “நிலா.

          “அவன்… அவன யாரோ ரேப் பண்ணி இருக்காங்க நிலா…. ” என வலி தாங்கிய குரலில் கூறினான் இளா.

           “என்ன சொல்ற சேரா? ” என உள்ளம் பதற நிமிர்ந்து இளாவின் முகத்தை கலக்கத்துடன் பார்த்தாள் நிலா.

           “ம்ம்.. ஆமா… அதுக்கு அப்புறம் விசாரிச்சதுல இன்னும் ரெண்டு மூணு பசங்க இதே போல பாதிக்கப்பட்டு இருக்காங்க. இந்த கேஸ் விசயமா தான் அலைஞ்சுண்டு இருக்கேன்… ” என ஆழ்ந்த குரலில் கூறினான் இளா.

         “என்னால… என்னால…சுத்தமா ஏத்துக்க முடியல சேரா.. இதுக்குத்தான் கவின காணோம் னதும் அவ்ளோ டென்ஷன் ஆனியா? யாரு? யாரு னு தெரிஞ்சதா ?” நிலா.

         “ம்ம்… ” இளா.

          “யாரு? ” என கண் சிமிட்டாமல் இளாவின் முகத்தையே பார்த்து இருந்தாள் நிலா.

          “இன்னும் உறுதியா யாருனு தெரியல.. ஆனா நிறைய விசயம் வெளில வந்து இருக்கு… ” என இன்னும் சில விஷயங்களை தெளிவாக கூறினான் இளா.

          இளா கூறியதை கேட்க கேட்க… எதற்கும் நடுங்காத நிலாவின் உடல் நடுங்கியது. “இதெல்லாம் இசைக்கு தெரிஞ்சா என்ன ஆகும்? ” என நடுக்கத்துடன் வினவி இளாவைக் கட்டிக் கொண்டாள் நிலா.

                                 (சேரநிலா மிளிர்வாள்…)
 
                         -செல்லம்மாள்பாரதி

     

    No comments yet.