மறுநாள்-
காலை எப்பொழுதும் போல் வேதா கல்லூரி கிளம்பிக் கொண்டிருக்க அலுவலகம் செல்ல தயாரான நந்து அவளிடம் ” நான் விட்டுட்டு போறேன் ” என சொல்ல ” இல்ல பரவாயில்ல ” என அவள் கூறியது காற்றில் தான் கரைந்தது.
அவளது பதிலுக்கு எதிர் பார்க்காமல் முன்னால் சென்றவன் காரை ஸ்டார்ட் செய்து தயாராக இருந்தான்.
அவசரமாக பின்னாடியே ஓடி வந்தவள் காரில் ஏறிக் கொள்ள கார் புறப்பட்டது.
கொஞ்ச தூரம் தான் சென்றிருக்கும் வேதாவிற்கு வாமிட் வருவது போல் இருக்க காரை நிறுத்தச் சொன்னாள். நந்தனும் வேகமாக காரை ஓரம் நிறுத்தினான்.
‘ என்னாச்சு ‘ என நினைத்துக் கொண்டே காரில் இருந்த வாட்டர் பாட்டிலுடன் வேதாவின் அருகே வந்தவன் அவள் தலையை மெல்ல பிடிக்க அந்த நேரத்திற்கு அவளிற்கு அது தேவையானதாகவும் இதமாகவும் இருந்தது.
வாய் கொப்பளித்துக் கொண்டவள் அவனிடம் தேங்க்ஸ் என சொல்ல ஏனோ அவனுக்கு கோபம் தான் வந்தது.
காரில் ஏறி அமர்ந்தவன் வண்டியை வீட்டிற்கு திருப்ப அவசரமாக தடுத்தவள் ” காலேஜ் போகணும். இன்னைக்கு அசைன்மென்ட் சப்மிட் பண்ணனும்னு தான் நேத்திக்கு லைப்ரரி போயிட்டு லேட் ஆனதே… முடிச்சிட்டேன்ல குடுத்திடுறேனே இல்ல வீட்டுக்கு போனாலும் அதே தான் தோணிட்டு இருக்கும். அதும் வீட்டுக்கு போனாலும் சும்மா தானே இருக்கணும் அதுக்கு நான் காலேஜ்லயே இருந்துடுறேனே….” எனக் கூற சற்றே கோபமானவன் ” முடியாதோட காலேஜ் போகணும்னு என்ன இருக்கு அசைன்மென்ட் சப்மிட் பண்ணிட்டு லீவ் சொல்லிட்டு வா நான் வெயிட் பண்றேன் ” எனக் கூற ” இல்ல வேண்டாம் எனக்கு இப்ப உடம்பு ஓகே தான் ” என அவள் கூறியதை காதில் வாங்காதவன் ” சொல்லிட்டு வா நான் வெயிட் பண்றேன் ” என்று மறுபடியும் கூற சரி என தலை அசைத்தாள்.
கல்லூரி வாசலில் கார் நிற்க இறங்கிக் கொண்டவள் அவனிடம் ” அஞ்சு நிமிஷத்தில வரேன் ” என கூறிவிட்டு நகர சரியாக சத்யன் கண்களில் இது பட்டது.
இன்றாவது வேதாவிடம் எப்படியாவது மனதில் இருப்பதை சொல்லிவிட வேண்டும் என்று எண்ணியவன் அவளை பின் தொடர்ந்தான்.
வேகமாக அவள் அருகே சென்றவன் ” வேதா ” என அழைக்க ” ம்…. ” என திரும்பியவள் சத்யனை பார்த்ததும் மெல்ல புன்னகை சிந்த இவன் மனதிற்குள் புயலே அடித்தது.
” சொல்லுங்க சத்யன் ” என அவள் கேட்க ” என் பெயர் ஞாபகம் இருக்கா ” என புன்னகையோடு இவன் வினவ ” அதான் நேத்திக்கு சொன்னீங்களே ” என்று கூறியவளின் முகத்தை பார்த்தவன் ” என்னாச்சு முகம் டல்லா இருக்கே உடம்பு முடியலையா ” எனக் கேட்க ” ஆமா லைட்டா முடியல அதான் அசைன்மென்ட் கொடுத்துட்டு லீவ் சொல்லிட்டு போலாம்னு வந்தேன் ” எனக் கூற ” உடம்பு முடியாததோட யாரு உங்களை அசைன்மென்ட் சப்மிட் பண்ண வர சொன்னது போன் பண்ணி லீவ் சொல்லிட்டு ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கலாமே ” எனக் கூற ” இல்ல பாதி தூரம் வந்துட்டேன் அதான் குடுத்துட்டு போயிடலாம்னு…” என்று கூறியவள் ” சரி வரேன் டைம் ஆகுது ” எனக் கூற ” சரிங்க வேதா பாய் ” எனக் கூறியவன் போகும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
காரிலிருந்து இறங்கியதில் இருந்தே அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் மனதில் ‘ அவன் யார் ? நேத்திக்கும் இவன் தான் வந்து வேதாவ கூப்பிட்டு போனான் இப்பவும் இவளுக்காக கீழே காத்திட்டு இருக்கான் யாரா இருக்கும் ? பேசாம வேதா கிட்டயே இவன் யாருன்னு கேட்கலாமா ‘ என ஒரு நிமிடம் யோசித்தவன் பின் ‘ வேண்டாம் அது நல்லா இருக்காது ‘ என விட்டுவிட்டான்.
வேதாவிடமும் பிறகு பேசிக் கொள்ளலாம் என எண்ணியவன் அவள் கிளம்பும் வரையிலும் அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
காரில் அமர்ந்திருக்க பிடிக்காத நந்தன் கீழே இறங்கி நிற்க, வேதா வந்ததும் ” சொல்லிட்டியா போலாமா ” என கேட்டவன் ” ம்…. ” என அவள் தலை அசைக்க ” சரி ” எனக் கூறியவன் அவள் கூடவே நடந்து கார் கதவை திறந்து அவள் ஏறி அமர்ந்ததும் காரில் ஏறி அமர்ந்தவன் ” ஏதாவது ஜூஸ் குடிக்கிறியா ” எனக் கேட்க குடித்தால் நன்றாகத் தான் இருக்கும் என அவளுக்கும் தோன்ற ” சரி ” எனக் கூற காலேஜ் அருகில் இருந்த காபி ஷாப்புக்கு அழைத்துச் சென்றான்.
அன்று ஏனோ அவனுக்கு வேலைக்கு போக மனமே இல்லாததால் வீட்டில் அவளுடனேயே பொழுதை கழித்தான்.
அன்று-
வர்ஷாவின் பிறந்தநாள்.
அவளுக்கு பரிசு வாங்க நகை கடைக்கு சென்றிருந்த நந்தன் மயில் டிசைன் போட்ட தோடு மிகவும் அழகாக இருக்கவும் அதையே பரிசாக கொடுக்கலாம் என எடுத்தவனின் கண்கள் தற்செயலாக ஒரு மோதிரத்தின் மேல் பட்டது. சின்னதாய் ஒரு பூ டிசைன் நடுவில் நீல நிற கல். அவனுக்கு அதை பார்த்ததுமே பிடித்து விட்டது.
வேதாவிற்கு பரிசாக என இதுவரை எதுவும் வாங்கித் தந்ததில்லை என்பதால் அதை வாங்கித் தரலாம் என வாங்கினான்.
மாலை அம்மா வீட்டிற்கு போக வேண்டும் ரெடியாகி இரு என காலை அலுவலகம் செல்லும் முன் சொன்னவன் இன்று வர்ஷாவின் பிறந்தநாள் என்று சொல்ல மறந்தான். ஆனாலும் எல்லாரையும் பார்க்க போகின்ற சந்தோஷத்தில் படு மகிழ்ச்சியாக அவள் கிளம்பினாள்.
ஆகாய நீலப் புடவை கட்டி தோட்டத்தில் பூத்திருந்த முல்லையை பத்மா பாட்டி கட்டி தர அதை தலையில் சூடிக் கொண்டவள் நந்தன் எடுத்துக் கொடுத்திருந்த நகைகளில் அந்த புடவைக்கு மேட்ச் ஆக இருந்ததை எடுத்து அணிந்து கொண்டவள் நந்தனின் வருகைக்காக காத்திருந்தாள்.
அன்று அலுவலகத்தில் ஒரு சிறு பிரச்சனை என்பதால் அதை சரி செய்து விட்டு வர நந்தனுக்கு சற்றே தாமதமாகி விட்டது.
வீட்டிற்கு வந்தவன் அம்மாவிற்கு போன் செய்து 8 மணி போல் வந்துவிடுகிறேன் என சொல்லிவிட்டு ரெடி ஆவதற்காக அறைக்கு சென்றான்.
அங்கே ரெடி ஆகி இவன் வருகைக்காக காத்திருந்தவள் அப்படியே பெட்டில் தலையணை மேல் சாய்த்து உட்கார்ந்தவாறே உறங்கி விட அறைக்குள் வந்தவன் அழகு சிலை போல் தூங்கும் அவளை ரசித்தவாறே அவள் அருகே செல்ல ஏனோ அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்ற மெதுவாக அவள் தூக்கம் கலையாமல் மெத்தையில் அவள் அருகே அமர்ந்தவன் சற்று நேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
பின் நேரம் ஆவதை கருத்தில் கொண்டு ” வேதா ” என அழைக்க திடுக்கிட்டு எழுந்தவள் தனக்கு மிக அருகில் அவன் அமர்ந்திருப்பதை பார்த்ததும் இன்னும் சற்று அதிர்ந்தாள்.
‘ சே… அவர் வந்தது கூட தெரியாம நாம இப்படி தூங்கிட்டோமே ‘ என எண்ணியவள் அவசரமாக எழ முயல அவள் கையை பற்றியவன் ” இப்ப எதுக்கு இவ்வளவு அவசரம். ஏன் இப்படி டக்குனு எழுந்துக்கிற. உக்காரு நீ தூங்கிட்டு இருக்கையேனு எழுப்பினேன் நான் ரெடி ஆகுற வரைக்கும் உட்கார்ந்திருந்தா கொஞ்சம் ஃபிரஷா இருக்கும்னு அவ்வளவு தான். நீ ஒரு அஞ்சு நிமிஷம் உட்காரு நான் ரெடியாகிட்டு வரேன் ” எனக் கூறியவன் ” இந்தா இதை பத்திரமா எடுத்துக்கோ வர்ஷா கிட்ட கொடுக்கணும் ” என தோடு இருந்த டப்பாவை அவளிடம் கொடுத்தான்.
” அப்புறம் ” என கூறிக் கொண்டே இன்னொரு டப்பாவை எடுக்க இவளும் என்ன என பார்க்க ” இது உனக்கு ” என அவன் தர ” எனக்கா ” என ஆச்சரியமாக கேட்டவள் ” என்னது இது ” என கேட்டுக் கொண்டே பிரிக்க அழகாய் மின்னிய அந்த மோதிரம் அவளுக்கு பார்த்ததும் பிடித்திருந்தது தான் ஆனாலும் ” இல்லை எனக்கு வேண்டாம் ” என கூறியவள் அதை அவனிடமே நீட்ட அவனுக்கு ஏனோ பயங்கர கோபம் வந்தது.
” இப்ப எதுக்கு வேண்டாம்னு சொல்ற டிசைன் உனக்கு பிடிக்கலையா ” என கேட்க ” அப்படி இல்ல பிடிச்சிருக்கு தான் ஆனாலும் வேண்டாம் நீங்க ஏற்கனவே வாங்கி தந்ததே நிறைய இருக்கு ” என அவள் சொல்ல ” அதெல்லாம் உனக்கு தேவைப்படும்னு நான் வாங்கி தந்தது நீ தினமும் பயன்படுத்துறதுக்காக…. ஆனா இது நான் உனக்காக வாங்கின பரிசு. முதன் முதலா உனக்குனு ஆசையா வாங்கிட்டு வந்தேன் ஆனால் நீ அதை வேண்டாம்னு சொல்ற ” என்றவன் அவள் தன்னை நோக்கி நீட்டிக் கொண்டு இருந்த அந்த மோதிர டப்பாவை வாங்கியவன் அடுத்து எதுவும் பேசாமல் அறையை விட்டு வெளியேறினான்.
No comments yet.