அத்தியாயம் – 22

நித்யா பாலசுப்ரமணியன் | 08 Jan 2026 | Share

வேதாவிற்கு ஒரே படபடப்பாய் இருந்தது. பின் ஏதோ எண்ணம் தோன்றியவளாய் அருகே நின்றிருந்த சத்யனை பார்த்தாள்.

அவன் அவளுக்காகவே நின்று கொண்டிருக்க போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தான். சும்மா விளையாடுவது போல் நடித்துக் கொண்டிருந்தான். அவன் பார்வையும் மனதும் அவள் மேல் தான் இருந்தது. 

அவள் ஏதோ கேட்க வருவது போல் இருக்கவும் ” என்ன வேதா சொல்லுங்க ” என்று முந்திக் கொண்டு கேட்டான்.

” ஒரு போன் கால் பண்ணனும் என்னோட போன் சார்ஜ் இல்லாம ஆப் ஆயிடுச்சு உங்க போன் கொஞ்சம் தர முடியுமா…. ” என கேட்க ” ம்… ‘ ” என்று கூறியவன் ஃபோனை அவளிடம் கொடுத்தான்.

நந்தனின் எண் தன் மனதில் ஆழமாக பதிந்து இருந்ததால் அவன் எண்ணை யோசிக்காமல் போட்டவள் எதிர்முனையில் எடுப்பதற்காக காத்திருந்தாள். 

ரிங் போய்க் கொண்டிருந்ததே தவிர எடுக்கப் படவில்லை. மறுபடியும் முயற்சி செய்தாள். 

அங்கே அலுவலகம் வேலை சீக்கிரமே முடிந்து விட எப்போதும் விடவே சற்று முன்னதாகவே ஆறு மணிக்கே வீட்டிற்கு வந்தவன் இன்னும் வேதா வீட்டிற்கு வரவில்லை என்றதும் ‘ ஏன் என்னாச்சு எப்போதும் அஞ்சு மணிக்கே வந்திடுவாளே. என்னாச்சு…. ‘ என்று யோசித்தவனின் மனம் அவள் முகம் காண துடித்தது.

எப்போதும் தான் வருவதற்கு முன்பு பிரஷ் ஆகி நெற்றி வகுட்டில் குங்குமம் இட்டு குடும்பத் தலைவியாய் தன் வருகைக்காக காத்திருப்பதும், தான் பிரஷ் ஆகி வந்ததும் சூடாக காஃப்பியும் ஏதாவது லைட்டாக சிற்றுண்டியும் கொடுப்பதும், நேரமாகி வந்தால் தனக்காக வெயிட் பண்ணி உடனிருந்து இரவு டிபன் சாப்பிடுவதும் என தினசரி அவள் செய்து கொண்டிருந்தது அவன் மனக்கண் முன் ஓடியது. 

இன்று ஏனோ அவள் கண்ணில் படாதது அவன் மனதிற்கு என்னவோ போல் இருந்தது. 

‘ ஏன் இவ்வளவு லேட் ஆகுது? லேட்டாகும்னா நான் வர லேட் ஆகும்னு ஒரு போன் பண்ணா என்ன….. ‘ என மனதில் அவளை திட்டிக் கொண்டும் அதே நேரத்தில் அவளை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டும் காத்திருந்தான். 

அவள் நினைவுகளிலேயே உலாவிக் கொண்டிருந்தவனுக்கு முதலில் போன் அடித்ததே கேட்கவில்லை. இரண்டாவது தடவை அடுத்த போது கவனித்தவன் ஏதோ தெரியாத எண் என்றதும் முதலில் எடுக்கத் தோன்றாமல் விட்டவன் பின் ‘ ஒரு வேளை வேதாவாக இருந்தால் என்ன செய்வது ‘ என்று போனை அட்டென்ட் செய்தான். 

” ஹலோ ” 

” ஹலோ அபி ” என்று கேட்ட அவள் குரலில் இருந்து சற்று ஆசுவாசம் ஆனான். 

” என்ன ஆச்சு வேதா. ஏன் லேட்..? எங்க இருக்க..? இது யார் நம்பர்..? உன்னோட போன் என்னாச்சு..? ” என வினாக்களை அடுக்கத் தொடங்கினான். 

அவளும் அவன் கேட்ட எல்லாவற்றிற்கும் பதில் சொல்லி முடித்துவிட்டு பஸுக்காக காத்திருப்பதையும் சொல்ல ” நீ அந்த பஸ் ஸ்டாப்க்கு ஆப்போசீட்ல இருக்க காஃபி ஷாப்ல வெயிட் பண்ணு நான் வரேன்… ” என்று கூற ” இல்ல வேண்டாம். ஆபீஸ்ல இருந்து இப்ப தான் வந்திருப்பீங்க அலைய வேண்டாம். நான் பஸ்ல வந்திருக்கிறேன் ” என்று இவளோ அவசரமாக கூற ” நீ வெயிட் பண்ணு ” என்று போனை கட் செய்தவன் பத்மா பாட்டியிடம் ” நைட் டிஃபன் ஏதும் செய்ய வேண்டாம் நாங்க வெளியே சாப்பிட்டு வந்திடுறோம் ” என்று சொல்லி விட்டு கிளம்பினான். 

பேசி முடித்தவள் அவனிடம் போனை கொடுக்க, நாகரீகம் கருதி சற்றே தள்ளியே நின்றிருந்தவன் அவள் ” நன்றி ” என்று சொல்லி ஃபோனை கொடுக்கவும் ” பரவாயில்லை ” என்று இன் முகத்துடன் கூறியவன் அவள் எதிர்ப்புறம் இருந்த காஃபி ஷாப்புக்கு செல்லவும் இவனும் பின் தொடர்ந்தான்.

உள்ளே சென்றவளோ எதுவும் ஆர்டர் செய்யாமல் வாசலை பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க ” யாரும் கூப்பிட வராங்களா….? ” என்று கேட்க ” ஆமாம் ” என்று இவளும் கூற ” யாரு ” என நாகரீகம் இல்லாமல் எப்படி கேட்பது என யோசித்தவன் ” எதுவும் சாப்பிடுறீங்களா ” என கேட்க ” இல்லை ” என்று தலையை அசைத்தாள். 

மேற்கொண்டு என்ன பேச என தெரியாது அவ்விடம் விட்டு அகன்றவன் ‘ யார் கூப்பிட்டு போக வராங்க ஒரு வேளை அங்க அண்ணனாக இருக்கும் போல இல்ல பாய்பிரண்டா ‘ என யோசித்தவன் ‘ இல்ல பாய்பிரண்டா இருக்காது. இதுவரைக்கும் எந்த பையன் கூடயும் பேசி நாம பார்க்கவே இல்லையே. என்னன்னா என்னன்னு பேசுறதோட சரி. யார் கிட்டயும் ரொம்ப குலோசா பழகி பார்க்கல ‘ என ஏதோ யோசனையில் காபி ஒன்றை ஆர்டர் செய்தவன் அவள் அமர்ந்திருந்த இருக்கைக்கு எதிரே அமர்ந்து கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். 

சரியாக பத்து நிமிடம் கூட ஆகி இருக்காது புயல் என வந்தான் நந்தன்.

அவன் முகமோ ஏதோ சரி இல்லை என்பது போல் இருக்க அவசரமாக உள்ளே நுழைந்தவனிடம் சென்றவள் ” சாரி ” என்றாள்.

ஏனோ அவளைப் பார்த்ததும் மனதில் நிம்மதி பரவ ” ம்… ” என்று மெதுவாக கண்களை மூடி திறந்தவன் ” போகலாம் ” எனக் கூறி அவள் முன் தன் கையை நீட்ட இவளும் ஏனோ மறுப்பின்றி பிடித்துக் கொண்டாள். 

இருவரும் வெளியேறுவதையே பார்த்துக் கொண்டிருந்தவன் ‘ யார் இவன் வந்தான் கைநீட்டி அழைத்தான் அவளும் சென்று விட்டாளே…. யார் இவன் யாராக இருக்கும் ‘என மண்டையை பிய்த்துக் கொண்டான்.

காரில் இருவருமே எதுவும் பேசவில்லை. 

சிறிது நேரம் சென்றது. 

வேதா வேடிக்கை பார்ப்பது போல் அமர்ந்திருந்தாலும் அவள் எண்ணம் முழுவதும் நந்தனிடமே சுற்றிக் கொண்டிருந்தது. 

கார் ஓட்டிக் கொண்டிருந்தவனும் அடிக்கடி அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான். 

இன்று அவன் மனம் ஏனோ அவனிடமே இல்லாமல் இருந்தது. 

அவளை காணாமல் இருந்ததும், அவளுக்கு ஏதோ ஆகிவிட்டதோ என எதிர்மறை எண்ணத்தை உண்டாக்கிய மனதைக் கடிந்துக் கொண்டதும், அவளிடம் இருந்து போன் வந்த பின்னே நிம்மதி ஆன மனதில் ஏன் இந்த தவிப்பும் என புரியாமல் தான் அவளை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தான்.

பத்து நிமிட பயணத்திற்கு பின் ஒரு ஹோட்டல் வாசலில் காரை நிறுத்தினான். 

” இறங்கி வா ” எனக் கூறியவன் முன்னே செல்ல அவனை பின் தொடர்ந்தாள். 

இருவரும் சாப்பிட்டுவிட்டு பின் வீடு திரும்பினர். 

அறையின் உள்ளே வந்தவன் கோபம் கொள்ளாமல் ஆனால் உறுதியான குரலில் அவளிடம் ” போன கரெக்டா சார்ஜ் போட்டு எடுத்துக்க இனி ஒரு தடவை ஃபோன் ஆஃப் ஆக கூடாது. உனக்கு லேட் ஆகுதுன்னா எனக்கு உடனே போன் பண்ணி சொல்லி இருக்கணும். எதுனாலுமே முதல எனக்கு இன்ஃபாம் பண்ணனும் சரியா ” எனக் கூறியவன் அவள் எல்லாவற்றிற்கும் சரி சரி என தலையசைக்க எங்கே அப்படியே அவளை பார்த்துக் கொண்டே அங்கேயே நின்று விட போகிறோமோ என எண்ணியவன் தன் அலுவலக அறைக்குள் புகுந்து கொண்டான். 

இரவு உடைக்கு மாறியவள் தன் அன்னையிடம் பேசிய பின் உறங்கச் சென்றாள். 

நந்தன் தன் மேல் கோபம் கொள்ளவில்லை என்பதே அவளுக்கு போதுமானதாக இருந்தது. மேற்கொண்டு எதுவும் யோசிக்காமல் படுத்தவள் உறங்கியும் போனாள். 

அலுவலக அறைக்குள் நுழைந்தவனோ எதிலும் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறினான். 

வரவர ஏன் மனம் தன் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருக்கின்றது என யோசித்தவனுக்கு பதில் கிடைக்கவில்லை. 

தலை வலிப்பது போல் இருக்க உறங்கலாம் என எண்ணியவன் அறைக்குள் வர, அங்கே சிறு குழந்தை போல் நிம்மதியாக உறங்கும் வேதாவின் முகம் அவளை பார்த்துக் கொண்டே இருக்கத் தூண்ட தன் தலையை சிலுப்பிக் கொண்டவன் உறங்கச் சென்றான். 

அங்கு – 

சத்யனுக்கோ உறக்கமே வரவில்லை. யாரா இருக்கும் என வெகு நேரம் யோசித்தவன் அண்ணனாக இருக்கும் என நினைத்துக் கொண்டவனாய் விடியலில் கண் அயர்ந்தான்.

    No comments yet.