மறுநாள் அவள் கல்லூரி கிளம்பும் போது இளம் பச்சை நிறத்தில் சுடிதார் அணிந்திருந்தவள் நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்திருக்கவில்லை. இவன் தான் அப்படி வைத்துக் கொள்ள வேண்டாம் என சொல்லி இருந்தாலும் ஏனோ அவனுக்கு அவள் புடவை கட்டி நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து தலையில் பூ வைத்து இருந்தது தான் பிடித்து இருந்தது. ஆனாலும் கல்லூரி செல்லும் போது அவள் அப்படி குங்குமம் வைத்துக் கொண்டு எனக்கு திருமணம் ஆகிடுச்சுனு பறை சாற்றி சொல்லனுமா என்ன. இது அவள் வாழ்க்கை ஒரு வருடம் கழித்து என்ன நடக்கும்னு தெரியாது எனும் போது அவள் இப்படி செல்வதே நல்லது என எண்ணியவன் ‘ எதையும் மனதிற்குள் கொண்டு செல்லக்கூடாது அதுதான் நல்லது. எதுக்கும் ஆசைப்படாத நடக்காத ஒன்னை நினைச்சு பார்க்காத நந்தா ‘ என தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.
கல்லூரி வாழ்க்கை நன்றாக மகிழ்ச்சியாக ஓடியது. அவளும் மிகுந்த சந்தோஷத்துடன் இருந்தாள். நண்பர்கள் வட்டம் கிடைத்தது. எல்லோரிடமும் அன்புடன் பேசும் அவளை அனைவருக்கும் பிடித்தது. படிப்பிலும் முதன் மாணவியாக இருந்தாள்.
வர்ஷாவுக்கு பெருமை தாங்கல. ‘ என்னோட அண்ணி எப்படி படிக்கிறாங்க தெரியுமா ‘ என எல்லோரிடமும் பெருமையாக சொல்பவள் இவள் தான் அண்ணி ‘ என்பதை மட்டும் சொல்லவில்லை.
வர்ஷாவும் தினமும் வேதாவை பார்ப்பதால் மிகவும் சந்தோஷமாக உணர்ந்தாள்.
நாட்கள் அழகாய் ஓடிக்கொண்டிருந்தது.
அன்று நந்தன் தனது பாட்டியை பார்க்க மருத்துவமனை சென்றிருந்தான்.
நந்தனை பார்த்ததும் முகம் பளிச்சிட புது ஒளி கண்ணில் பிறக்க உற்சாகத்துடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தவர் சோர்வடைய அவன் ” பொறுமையா பாட்டி இப்ப தான் உங்க உடம்பு கொஞ்சம் கொஞ்சமா சரி ஆகிட்டு வருது என்ன அவசரம் நீங்க பொறுமையாவே பேசுங்க. நானும் தினமும் வந்து பார்க்கிறேன் ” என கூற ” எப்போ வேதாவ கூப்பிட்டு வருவ ” என அவர் கேட்க ” கூப்பிட்டு வரேன் பாட்டி. உங்க உடம்பு இன்னும் கொஞ்சம் சரியாகட்டும். அவ கிட்ட நீங்க நல்லா பேசணும் தானே. அதனால சரியான நேரத்தில் சாப்பிட்டு மாத்திரை போட்டுக்கிட்டு ரெஸ்ட் எடுங்க சரியா… ” என சொன்னவன் அடுத்து வந்த நாட்களில் பாட்டியின் உடம்பில் முன்னேற்றம் ஏற்படுவதை உணர்ந்தான்.
அன்று-
வேதா கல்லூரியிலிருந்து கிளம்ப சற்று நேரமானது.
அசைன்மென்ட் இருந்ததால் லைப்ரரி சென்றவள் புத்தகங்களில் மூழ்கியதால் நேரம் போனதே தெரியவில்லை.
வானம் சற்று இருளத் தொடங்கியது.
தன் கை கடிகாரத்தில் நேரத்தை பார்த்தவள் ஆறு மணிக்கு மேலாகிறது என்றதும் சற்று பரபரப்பானாள்.
இதுவரை ஒருநாள் கூட நேரம் தாமதமாகி அவள் சென்றதில்லை.
‘ நந்தன் வீட்டிற்கு வந்திருந்தால்…. இல்லை அவன் வர எப்படியும் இன்னும் நேரம் ஆகும் அதற்குள் வீட்டிற்கு சென்று விடலாம்.. ‘ என எண்ணியவள் அவசர அவசரமாக கிளம்பினாள்.
அவள் லைப்ரரியில் இருந்து வெளியே வரவும் யாரோ உள்ளே நுழையவும் சரியாக இருக்க முட்டிக் கொண்டவள் ” சாரி ” எனக் கூறிக்கொண்டே நிமிர, அங்கே சத்யன் அவனும் ” சாரி ” என கூறிக் கொண்ட இவளை பார்க்க அவன் மனதில் ஒரே குஷி.
நீண்ட நாட்களாக தூரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தவன் அவளிடம் பேச வேண்டும் என எண்ணி எத்தனையோ தடவை அருகே செல்ல முயன்றும் ஏதோ ஒன்று தடுத்துக் கொண்டிருக்க இன்று கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல் அவள் தனது அருகில் இருப்பதை நம்ப முடியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
லேட்டாகிறது என்ற எண்ணத்திலேயே இருந்தவள் சாரி எனக் கூறினாலே தவிர அவன் முகம் கூட பார்க்கவில்லை. அவ்விடம் விட்டு அகன்றாள்.
அவளிடம் என்ன பேசலாம் என்று எண்ணியவனுக்கோ ஏமாற்றமே மிஞ்சியது.
சத்யன் பிஎஸ்சி மேக்ஸ் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவன்.
வேதா கல்லூரியில் சேர வந்த அன்றே இவன் கண்ணில் பட்டு விட்டாள். பார்த்ததுமே இவனுக்கு அவளை பிடித்து விட்டது.
பணக்கார குடும்பத்தை சேர்ந்தவன் சத்யன். கொஞ்சம் திமிர் பிடித்தவன் தான் இருந்தாலும் நல்லவன். அவன் பார்க்காத பெண்கள் இல்லை ஆனால் நவ நாகரீகமாக இருக்கும் பெண்களுக்கு மத்தியில் எளிமையாய் மிகவும் அமைதியாய் எந்தவித ஒப்பனையும் இன்றி இருக்கும் இவள் எல்லாரிடமும் இருந்து வித்தியாசமாக தெரிந்தாள்.
எல்லோருக்கும் மத்தியில் தனித்து தெரிந்த வேதாவை ஃபாலோ செய்ய தொடங்கினான்.
அவள் நன்றாக படிப்பதும், எல்லோரிடமும் அன்பாக பழகுவதும் இன்னும் அவனை அவள் பக்கம் ஈர்த்தது.
இன்று கூட கல்லூரி முடிந்த உடனே சென்று விடுபவள் நூலகத்தில் இவ்வளவு நேரம் இருக்கிறாளே என்ன என்று பார்ப்போம் என்ற எண்ணத்தில் தான் வந்தானே. ஆனால் அவளோ அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் போனது அவனுக்கு மிகவும் வேதனையாக தான் இருந்தது. ஆனாலும் தென்றல் போல் வந்து மோதியவளின் நினைவுகளில் மூழ்கியவன் தனது பைக்கை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினான்.
பஸ்ஸுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்த வேதாவை அவன் கவனிக்கவில்லை. சிறிது தூரம் சென்றவன் அவன் நண்பன் கால் செய்யவும் என்னவென்று கேட்கலாம் என்று பைக்கை நிறுத்தி விட்டு பேசிக் கொண்டிருந்தவன் பேசி முடித்துவிட்டு கிளம்பலாம் என்று எண்ணிய போது தற்செயலாக வண்டி ஏதும் வருகிறதா என பார்க்க திரும்பியவன் அங்கே தன் கைக்கடிகாரத்தையும் பஸ் ஏதும் வருகிறதா என்றும் ஒரு பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந்த வேதா கண்ணில் பட அங்கே அவள் அருகே சென்று பைக்கை நிறுத்தினான்.
மிகவும் அருகில் வந்து பைக் நிற்கவும் சற்று பயந்தவள் பின்னால் நகர அங்கு பஸ்சுக்காக நின்றிருந்த வேறு சிலரும் எப்படி வந்து பைக் நிறுத்துறான் பாரு என மனதில் வசை பாடத் தொடங்கினர்.
” என்ன வேதா லேட்டாயிடுச்சா. ஏன் டென்ஷனா டைம் பாத்துட்டு இருக்கீங்க…. ” எனக் கேட்க அவனை முன்பின் பார்த்ததாகவே நினைவில் இல்லாத வேதாவுக்கு ‘ இவனுக்கு நம்ம பெயர் எப்படி தெரியும் ‘ என்று யோசித்தவளாய் ” நீங்க… ” என மெதுவாக கேட்க வேதாவிற்கு தன்னை தெரியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் அவள் கவனித்து இருக்க மாட்டாள் என்று மனதை சமாதானம் செய்து கொண்டவன் ” என்னை ஞாபகம் இல்லையா…. சத்யன் உங்க சீனியர். போன டைம் மேக்ஸ் லக்சர் ஒன்னு நடக்கும் போது மீட் பண்ணுனமே ” எனக் கூற ” சாரி எனக்கு ஞாபகம் இல்ல ” எனக் கூறியவளிடம் ” இப்ப கூட லைப்ரரி வாசல்ல என் மேல மோதிட்டு நிற்காம கூட சாரி சொல்லிட்டு வந்துட்டீங்க ” என்று சற்று வருத்தத்துடன் முகத்தை வைத்துக் கொண்டு சொல்லவும் ” சாரி நான் கவனிக்கல டைம் ஆகிடுச்சுனு கிளம்பிட்டேன் ” என கூறியவள் இப்போதும் பஸ் ஏதும் வருகிறதா என்று தான் பார்த்துக் கொண்டிருந்தாள். பஸ் வந்தபாடில்லை.
இவ்வளவு நேரம் கழித்து அவள் சென்றதே இல்லை அதனாலேயே எப்போது பஸ் வரும் என்பதும் அறியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.
போன் வேற சார்ஜ் இல்லாமல் ஆஃப் ஆகிவிட்டது. நந்தனுக்கு போன் பண்ணியும் கூற முடியாத நிலை. அதுவே அவளுக்கு இன்னும் கஷ்டமாக இருந்தது.
ஏதோ யோசனையில் இருந்தவளை சத்யனின் குரல் கலைத்தது.
” லேட் ஆகுதுன்னு சொல்றீங்களே பஸ் எப்ப வரும்னு தெரியல. என்னோட பைக்ல வரீங்களா நான் உங்களை வீட்டில் விட்டிடுறேன் ” எனக் கூற ” வேண்டாம். பரவாயில்ல உங்களுக்கு ஏன் சிரமம். இப்ப பஸ் வந்திடும் நான் போய்க்கிறேன் ” என்று கூறியவள் பஸுக்காக காத்திருந்தாள்.
அவனும் அவள் அருகிலேயே நின்றான்.
இன்னும் பத்து நிமிடம் ஓடியது.
No comments yet.