காலை நேரத்து வெயில் நிலாவின் முகத்தில் பட்டு தெறித்து அவளது கோபத்தை நன்றாக எடுத்துக் காட்டியது. கோபத்தில் புருவத்தை நெறித்தபடி எதிரில் நின்றவனை முறைத்துக் கொண்டிருந்தாள். எதிரில் நின்றவனோ கேவலமான ஒரு சிரிப்பை சிரித்துக் கொண்டு நிலாவை நோக்கி வந்தான்.
“என்னைய எதிர் பாக்கல ல? ” என்ற கேள்வியுடன் நிலாவை நெருங்கினான் நேற்று அவளை மிரட்டியவன்.
“இவன் செத்துட்டான் னு நைட் சேரா சொன்னான். இப்ப என்ன நம்ம முன்னாடி வந்து நிக்கிறான்… ” என்ற யோசனையுடன் அவனையே பார்த்தாள் நிலா.
“என்ன டி போலீஸ்கார பொண்டாட்டி… அப்பிடி பாக்குற? ஓஓஓ… நேத்து நாம அடிச்சு சாச்சவன் இன்னக்கி நம்ம ஊருக்கே வந்து நம்ம முன்னாடியே நிக்கிறானே னு யோசிக்கிறியா? ” தாடையை சொறிந்தபடி நிலாவை நெருங்கினான் அந்த ரௌடி.
“பைத்தியக்கார முட்டா பீசு… நாம எதுவும் பேச வேண்டாம். அவனே எல்லாத்தையும் உலறிருவான்… ” என மனதினுள் சிரித்தபடி வெளியே எப்பொழுதும் போல முறைப்புடன் நின்றாள் நிலா.
“அமைதியா இருக்குறத பாத்தா அப்பிடித் தான் யோசிச்சுட்டு இருக்க போல… அது ஒன்னுல்ல நீ அடிச்ச அடியில மயங்கிட்டேன்.. உடனே என் ஆளுங்க வந்து கூட்டிட்டு போய்ட்டாங்க.. நான் தான் நேத்தே சொன்னேன் ல ஒழுங்கா உன் புருஷன இந்த கேஸ் ல இன்வால்வ் ஆக வேண்டாம் னு… அப்புறம் என்ன தைரியத்துலடி நீ அவன வேலைக்கு அனுப்பி இருக்க? ” ரௌடி.
“நிச்சயமா இவன் பைத்தியக்கார முட்டா பீசு தான்.. ” என நினைத்தபடி “மரியாதையா பேசு…” என விரல் நீட்டி எச்சரித்தாள் நிலா.
“தம்மா தூண்டு இருந்துட்டு என்னைய விரல் விட்டு மிரட்டுற.. ” என நேத்து அடி வாங்கியதை மறந்து விட்டு தன் முன்னே நீட்டிய நிலாவின் விரலை எதிர்புறமாக வளைத்தான் அந்த ரௌடி.
“நேத்து வாங்குன அடிய மறந்துட்ட… இனி சாகுற வரைக்கும் மறக்க மாட்ட… “என தனது இடக்கையால் அவனை அடிக்க நிலா கையை ஓங்கிய நொடி, “அய்யோ… அம்மா.. ” என்ற அலறலுடன் துள்ளி மண்ணில் விழுந்தான் அவன்.
“நாம இன்னும் அடிக்கவே இல்லையே…” என்ற யோசனையுடன் ஓங்கிய தனது இடக்கையையும் கீழே விழுந்த அவனையும் குழப்பத்துடன் பார்த்தாள் நிலா. அப்பொழுது தான் அவன் நெற்றியில் இருந்து வழிந்து கொண்டிருக்கும் இரத்தத்தையும் அவனருகில் கிடக்கும் கல்லையும் கவனித்தாள். அடுத்த நொடியே மீண்டும் ஒரு கல் வந்து அவனைத் தாக்க.. புன்னகைத்துக் கொண்டாள் நிலா.
“பப்லு… போதும் நிறுத்து.. “என விழுந்து வலியில் துடித்துக் கொண்டிருக்கும் அவனை பார்த்தவாறே கூறினாள் நிலா.
“என் அத்தம்மா தா… ” என மழலை மொழியில் மிரட்டியபடி கீழே கிடக்கும் அவனை மிதித்து எடுத்தான் கவின்.
கவினை தடுத்து நிறுத்தியவாறே, “இங்க நீ என்ன பண்ணிட்டு இருக்க பப்லு? ” என்றாள் நிலா.
“அத்தம்மா… அவன்.. அவன்.. “என கோபத்தில் அவனை அடிக்க செல்ல நிலாவின் கரங்களில் இருந்து திமிறிக் கொண்டிருந்தான் கவின்.
“பப்லு.. நோ.. ” எனக் கூறிய நிலா, அப்பொழுதுதான் அவனது சட்டை பாக்கெட்டிலும் கால் சட்டை பாக்கெட்டிலும் கற்கள் நிறைய இருப்பதை கண்டாள்.
“விது அத்தம்மா… அவன… ” என நிலாவின் கரங்களில் தொங்கி கொண்டே அவனை நோக்கி காற்றில் கால்களை வீசினான் கவின்.
சிறுவனின் ஆக்ரோசத்தைக் கண்டு சற்று மிரண்ட ரௌடி, “என்னடி ஆள் வச்சு அடிக்கிறியா? ” என எழுந்து நின்றான்.
“இந்த சின்னப் பயல பாத்துலாம் நீ பயப்படுற… நீ.. என் தங்கச்சிய மிரட்டுற… உசுர் பயம் இருந்தா அப்பிடியே ஓடிப் போயிரு… ” என மடித்து கட்டிய வேட்டியுடன் வந்தான் சேது.
“ஏய்… என்னய பத்தி உனக்கு தெரியாது… ” என சேதுவை விரல் நீட்டி மிரட்டினான் ரௌடி.
“அட யார்ரா இவன்… ” என சேது சிரிக்கையில் நிலாவின் கரங்களில் இருந்து தப்பி குரங்கை விட வேகமாக சேதுவின் மேல் ஏறியவன் அப்படியே ரௌடியின் மீது தாவி அவனது கழுத்தில் அமர்ந்து முடியை பிடித்து ஆட்டினான் கவின்.
கவின் முடியை பிடித்து ஆட்டியதில் பயந்து,”புள்ளைய பெக்க சொன்னா குரங்கு குட்டிய பெத்து வச்சு இருக்கானுக…. ” என கவினை தள்ளி விட்டு திரும்பி பார்க்காமல் ஓடினான் ரௌடி.
அவன் அலறி அடித்து ஓடியதைக் கண்ட நிலா, “என்னடா இதெல்லாம்? ” என கவினை காட்டி சேதுவிடம் கேட்டாள் நிலா.
“ஹி.. ஹி… மேனுபாக்ட்ஜரிங் டிபால்ட் டா தங்கச்சி…” என அசடு வழிந்தான் சேது.
“விளங்கிரும்… ” என தலையில் அடித்துக் கொண்டு, “பப்லு… யாரு உனக்கு இப்பிடிலாம் அடிக்க சொல்லி குடுத்தது? இதெல்லாம் தப்பு டா பப்லு.. ” என்றாள் நிலா.
“எல்லாம் அவன் அம்மா வளர்ப்பு… அவள மாதிரி தான் இருப்பான்.. வேற எப்பிடி இருப்பான்? ” என புன்னகையுடன் கவினை தூக்கி தன் தலை மேல் வைத்துக் கொண்டான் சேது.
“நீ தான அத்தம்மாவ யாது பாத்து மொதச்சாலும் அவங்கள பாத்து கல்ல வித்து எதிய சொன்ன ப்பா? ” என சரியாக சேதுவை நிலாவிடம் போட்டு குடுத்தான் கவின்.
“குரங்கு பய கரக்ட்டா போட்டு குடுத்துட்டானே… ” என திரு திருவென முழித்தான் சேது.
“அப்ப நீ தான் பப்லுக்கு அடிக்க சொல்லி குடுத்து இருக்க? ” என ஒற்றை புருவம் உயர்த்தி கேள்வி கேட்டாள் நிலா.
“சத்தியமா நான் சொல்லிக் குடுக்கல.. நான் அந்த ரௌடிய அடிக்கலாமா டா னு கேட்டேன்.. அவனா தான் அடிக்க கல்லு கேட்டான், நான் எடுத்துக் குடுத்தேன்.. அவ்ளோ தான்… ” என அப்பாவியாக கூறினான் சேது.
“உன்னைய லாம் திருத்தவே முடியாது.. ” என சேதுவை கூறி விட்டு பப்லுவை முறைத்தாள் நிலா.
“அம்மா தான் உன்னைய யாது தித்துனாலும் அதிக்கனும் னு சொன்னுச்சு.. அப்பா தான் எப்பிதி அதிக்கனும் னு சொல்லி தந்துச்சு.. ” என அழும் குரலில் கூறினான் கவின்.
“இதெல்லாம் ரொம்ப தப்பு கவின்.. ” என முறைப்புடனே கூறிவிட்டு நகர்ந்தாள் நிலா.
நிலாவின் முறைப்பில் சத்தமிட்டு அழத் தொடங்கினான் கவின். அவன் அழுவதை காண முடியாமல், “சரி… இதான் கடைசி.. இதுக்கு அப்புறம் இப்படி பண்ணக் கூடாது… சரியா பப்லு? ” என பதமாக கூறினாள் நிலா.
“ம்ம்.. ” என தலையை ஆட்டினான் கவின்.
அதில் மகிழ்ந்த நிலா, “ஒழுங்கா நல்லத சொல்லி குடுத்து வள… ” என சேதுவை ஒரு முறை முறைத்துவிட்டு சென்றாள்.
அவள் சென்றதும், “எப்பூதி… ” என தன் சட்டை காலரை சிரிப்புடன் தூக்கி காட்டினான் கவின்.
“சூப்பர் டா மவனே… இதே மாதிரி உன் அத்தம்மா எப்ப திட்டுனாலும் அழுகுற மாதிரி ஒரு நடிப்ப போட்டுறனும்… அதுலயே என் தங்கச்சி உருகிருவா…. ” என அதற்கு மேல் வார்த்தை வராமல், “த.. தா… தா.. த.. ஆஆ… ஹலோ… இதோ வந்துட்டேன் பொண்டாட்டி… மவனையும் கூட்டிட்டு வந்துர்றேன்… “என அழைப்பு வராத ஃபோனை எடுத்து காதில் வைத்துக் கொண்டு கவினை இழுத்துக் கொண்டு கிளம்பினான் சேது.
“எங்கப்பா இழுக்குத? அத்தம்மா விளையாதுதத பாக்கனும்… ” என கவின் சேதுவின் கை பிடித்து இழுத்தான்.
“பின்னாடி திரும்பி பாரு டா… உன் அத்தம்மா கொலை வெறியில நம்மள மொறைச்சுட்டு இருக்கா… “சேது.
கவின் மெதுவாக பின்னால் பார்க்க… அங்கு அவர்கள் பேசிய அனைத்தையும் கேட்டபடி கண்ணில் நெருப்புடன் அவர்களை முறைத்துக் கொண்டிருந்தாள் நிலா.
“அய்யய்யோ… ஓது ப்பா… “என ஓடினான் கவின்.
“டேய் மவனே… அப்பாவ விட்டுட்டு போகாதடா…. ” எனக் கத்தியபடி, “நான்… நா… அவன புடிச்சுட்டு வர்றேன் தங்கச்சி இஇஇ… ” என நிலாவிடம் சமாளித்து ஓட்டம் எடுத்தான் சேது.
“இவன என்ன தான் பண்றது? ” என சலிப்புடன் விளையாட சென்றாள் நிலா.
பேட்டை எடுத்துக் கொண்டு விளையாடும் இடத்திற்கு சென்றவள், தனது முறை வந்ததும் பந்தை சந்திக்க சென்றாள் நிலா. தனக்கு எதிராக போடப்பட்ட ஒரு பந்தை கூட அடிக்க முடியாமல் திணறினாள்.
“என்ன ஆச்சு குட்டச்சி உனக்கு? “என அவளது சக விளையாட்டு தோழர்களே சலித்துக் கொண்டனர்.
“ஸாரி… ” என அவர்களிடம் கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறி மரத்தடியில் வந்து யோசனையுடன் அமர்ந்தாள் நிலா.
“இவன் சாகலனா அப்புறம் யார செத்துட்டான் னு சேரா சொன்னான்? ” என யோசனையுடன் தலை குனிந்து அமர்ந்து இருந்தாள் நிலா.
யோசனையில் மூழ்கி இருந்த நிலாவின் மீது ஒரு பந்து வந்து அடிக்க… யோசனையில் இருந்து வெளி வந்து யாரென பார்த்தாள். அவள் எதிரே பயத்துடன், “ஸாரி க்கா.. ” என அங்கு விளையாடும் சிறுவர்கள் நின்றிருந்தனர். அவர்களை முகத்தை பார்த்தவள் எதுவும் கூறாமல் பந்தை அவர்களிடம் திரும்ப அளித்தாள் நிலா.
நாள் முழுக்க விளையாட செல்லாமல், “அப்ப சேரா யார சொல்லி இருப்பான்… ” என்ற யோசனையிலேயே உலன்றாள் நிலா. காலை நேர கல்லூரி முடிந்து அபி வந்து நிலாவை வீட்டிற்கு அழைக்கும் வரையில் அதையே சிந்தித்துக் கொண்டிருந்தாள். அபி அழைத்ததும் யோசனையில் இருந்து வெளி வராமல் அப்படியே அவனுடன் நடந்தாள். நிலாவின் முகத்தில் இருந்த யோசனையை கண்டவன், “என்ன க்கா யோசிச்சுட்டு வர்ற?” என்றான் அபி.
“ஒன்னுல்ல டா… ” நிலா.
“காலையில வீட்ல அம்மாவும் பாட்டியும் பேசுனத பத்தி யோசிச்சுட்டு வர்றியா? அவங்க பேசுறதெல்லாம் நீ கணக்குலயே எடுத்துக்க மாட்டியே… ” அபி.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல டா அபி.. ” என அபியின் கை பிடித்து நடந்தாள் நிலா. எத்தனை நாள் கனவு இது… இது போல தன் தம்பியின் கை பிடித்து சாலையில் நடக்க வேண்டும் என மனதினுள் புன்னகைத்தபடி அபியுடன் நடந்தாள் நிலா.
அதை பார்த்த ஒரு பெண், “கல்லியாணம் பண்ணி புருஷன் கூட கை புடிச்சு சுத்தி வருவா னா… இவ தம்பி கூடவே சுத்தி வர்றா… இது என்னடி கூத்தா இருக்கு… ” என மற்றொரு பெண்ணிடம் கூற.. அதை காதில் வாங்கிய அபி, “என் அக்கா என் கை புடிச்சு நடந்தா உனக்கு என்ன? இன்னொரு தடவ என் அக்காவ பத்தி பேசுன… பேசுற நாக்க இழுத்து வச்சு அறுத்துருவேன்… ” என அவர்களுடன் சண்டைக்கு சென்றான்.
“விடு அபி… நீ வா… ” என அபியை இழுத்தாள் நிலா.
“இவ… என் அக்கா… நீ வா க்கா… “என நிலா வை இழுத்து தோள் மீது கரம் போட்டு தன் கையணைப்பில் வைத்துக் கொண்டு நடந்தான் அபி.
அபியின் செயலில் கண் கலங்கி மூச்சு முட்டியது நிலாவிற்கு. அதை எதையும் உணராமல் நிலாவை தன் கையணைப்பில் வைத்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தான் அபி. அபியின் முகத்தை பார்த்தவாறே நடந்து வந்தவள் வீட்டின் உள்ளே நுழைந்ததும் அதிர்ச்சி கொண்டாள்.
“என்ன? என்னைய எதிர்பாக்கல ல? ” என்ற கேள்வியுடன் நடு வீட்டில் தலையில் கட்டுடன் கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருந்தான் அந்த ரௌடி.
“வா நிலா.. உன்னைய தேடி வந்து ரொம்ப நேரமா காத்துட்டு இருக்காரு.. உன் கிட்ட ஏதோ பேசனுமாம்.. ” என நிலாவை பார்த்து கூறினார் கதிர்வேல்.
“உனக்கு இவர முன்னாடியே தெரியுமா நிலா? ” என சந்தேகத்துடன் அந்த ரௌடியை பார்த்தவாறு கேட்டான் அபி.
“நேத்து… ” என்ற ஒற்றை வரியில் அபிக்கு அவன் யாரென உணர்த்திய நிலா அந்த ரௌடியை பார்த்தாள். நிலாவின் பதிலில் சற்று பதட்டமான அபி, சேதுவிற்கும் இளாவிற்கும் ஒரு மெஸேஜை தட்டி விட்டு பதட்டத்துடன் நிலாவைப் பார்த்தான். அவளோ எவ்வித பதட்டமும் இல்லாமல் அந்த ரௌடியை அளவெடுத்துக் கொண்டிருந்தாள்.
“இவன் நம்ம கிட்ட மிதி வாங்காம கிளம்ப மாட்டான் போலயே… இன்னையோட இவன் கணக்க முடிக்கிறேன்… செத்தான் இவன்… ” என நினைத்த நிலா… கடைசி வரியை மீண்டும் நினைத்துப் பார்த்த நிலா திகைத்து காலையில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பெற்றாள். “ஆக… இதத்தான் என் புருஷன் சொல்லி இருக்கான்… ” என தெளிவுடன் நிமிர்ந்து நின்றாள் நிலா.
தனது கணவன் கூறிய செய்தி புரிந்து திமிருடன் அந்த ரௌடியைப் பார்த்து புன்னகைத்தாள் நிலா. அவளின் அந்த புன்னகையை வள்ளியும் கதிர்வேலும் அதிசயமாக பார்க்க… நிலாவின் புன்னகையைப் பார்த்த அபியின் மனதில் அபாய மணி அடித்தது. நான்கு வருடமாக அவன் பார்த்து வருகிறானே… நிலாவின் சிரிப்பிற்கு பின் என்ன ஒளிந்து இருக்கிறது என அவனுக்கு புரியாதா என்ன.
நிலாவின் புன்னகையைப் பார்த்த அபியின் கரங்கள் தன்னாலயே, “அக்கா சிரிக்கிறா… சீக்கிரம் வாடா… ” என சேதுவிற்கு செய்தி அனுப்பியது.
யாரையும் பாராமல் ரௌடியை நேருக்கு நேராக பார்த்துக் கொண்டு நிமிர்வுடன் அவன் முன்னே நின்று, “எந்திரிடா… ” என்றாள் நிலா.
(சேரநிலா மிளிர்வாள்…)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.