அத்தியாயம் – 20

நித்யா பாலசுப்ரமணியன் | 02 Jan 2026 | Share

இரண்டு மூன்று நாட்கள் இங்கேயே தங்கிய வர்ஷா அண்ணன் நிறைய நேரம் அலுவலக அறையில் இருப்பதை கவனித்தாள். அது மட்டும் அல்லாமல் இருவரும் பேசி சிரிப்பதை கூட அவள் பார்க்கவில்லை. இதைப் பற்றி வேதாவிடம் கேட்கலாம் என்றால் அவளுக்கு தயக்கமாக இருந்தது. என்ன தான் ஒரே வயது உடையவர்கள் என்றாலும் பெயர் சொல்லி அழைத்தாலும் அவள் அண்ணி ஆயிற்றே….. நாம் எப்படி எதுவும் கேட்க முடியும் என எண்ணினாள்.

அதுமட்டுமின்றி அவன் அலுவலகம் கிளம்பி விட்டால் பாவம் அவள் வீட்டின் நேரம் போகாமல் என்ன செய்வது என்று தெரியாமல் கதை புத்தகத்தோடு நேரத்தை கழிப்பதை பார்த்தவள் ” ஏன் வேதா உனக்கு மேற்கொண்டு படிக்கணும்னு ஆசை இல்லையா ” என கேட்க ” ம் இருக்கே. ஆனா அதுக்கு சந்தர்ப்பம் அமையல ” என சொல்ல ” ஏன் நீங்க இப்ப கூட படிக்கலாமே ” என சொன்னவள் பேசிக் கொண்டிருக்கும் போதே அலுவலக அறைக்குள் இருந்த நந்தனிடம் போய் இதைப் பற்றி கேட்டாள்.

‘ ம்… படிக்கலாமே. ஏன் இது நமக்கு தோணல. ஒரு வருஷம் சும்மாவே இருக்குறதுக்கு பதிலா படிக்கலாமே. அவளுக்கும் படிக்கணும்னு ஆசை இருக்கும் இல்ல. அதை ஏன் நம்ம யோசிக்காமல் போயிட்டோம். இத பத்தி நாம வேதா கிட்ட கேட்டு இருக்கலாமோ… ‘ என எண்ணியவன் ” ம்…. படிக்கட்டுமே யார் இப்போ வேண்டாம்னு சொன்னா ” என அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வர்ஷா வேகமாக அவன் அறைக்கு போகவும் ‘ ஏதாவது அவரிடம் சொல்லப் போகிறாள் ‘ என எண்ணிக் கொண்டே பின்னால் வந்தவள் தடுக்கும் முன் வர்ஷா நந்தனிடம் கேட்டு விட அவனும் பதில் கூற வேதாவோ ” அதெல்லாம் வேண்டாம் ” என அவசரமாக மறுக்க வர்ஷா அவள் புறம் திரும்பி ” ஏன் ” என கேட்க ” அதான் எனக்கு இப்போ கல்யாணம் ஆயிடுச்சே. இனிமே காலேஜ் போய் படிக்க எல்லாம் எனக்கு விருப்பமில்லை ” என ஏதேதோ சொன்னவள் அவளை அங்கிருந்து கிளப்ப வேண்டும் என எண்ணியவளாய் அவள் கையைப் பிடித்து வெளியே இழுத்துச் செல்ல முயல இதை பார்த்துக் கொண்டிருந்தவன் ” வேதா ” என அழைக்க ” ம்…. ” என்று நிமிர்ந்தவள் அவன் முகம் பார்க்க ஏதோ வருடங்கள் பல காணாதது போன்ற ஏக்கம் அவள் மனதில் பரவியது.

ஒரே வீட்டில் தான் இருக்கின்றார்கள் என்றாலும் இப்போதெல்லாம் அவன் சற்று விலகியே தான் இருந்தான்.

இவள் அறைக்கு சென்று தூங்கிய பின்பு தான் அலுவலக அறையில் இருந்து படுக்க செல்வான். ஞாயிற்றுக் கிழமைகளில் கூட வேலை வேலை என அலுவலக அறையில் அடைந்து கொள்வான். மற்ற நாட்களிலோ காலையில் சென்றால் இரவு 8 மணிக்கு மேல் தான் வருவான். இப்படியாக அவன் இருக்க ‘ அவரே வேலை வேலைன்னு இருக்காரு நம்மளால அவருக்கு எந்த தொல்லையும் வந்திடக் கூடாது ‘ என எண்ணி அமைதியாக அவள் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.

பொழுது போகவில்லை என்றால் கதை புத்தகங்கள் படித்துக் கொண்டு நேரத்தை போக்க முயற்சித்தாள்.

ஆனால் அவள் மனமோ 24 மணி நேரமும் அவனைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தது.

இப்பொழுது வர்ஷா வந்து இரண்டு மூன்று நாட்கள் தங்கப் போகிறாள் என்றதும் ” அவள் உன் கூட படுத்துக்கட்டும். நீங்க ரெண்டு பேரும் ஏதாச்சும் பேசிக்கிட்டு இருப்பீங்க இல்லையா… நான் அலுவலக அறையிலேயே படுத்துகிறேன் ” என கூறியவன் அறைக்கு வராமலே இருந்தான்.

அவன் தன்னிடம் பேசுவதே குறைந்து விட்டதே என வருத்தப்பட்டு கொண்டிருந்தவள் அவன் ‘ வேதா ‘ என்று அழைத்த அழைப்பில் உறைந்தாள்.

அவன் அழைத்த அழைப்பில் சிலை போல் இவள் நிற்க அவனும் இவளையே பார்த்துக் கொண்டிருக்க இருவரும் பேசட்டும் என வர்ஷா கீழே சென்று விட்டாள்.

அறையின் வாயிலிலே நின்றாலும் வேதாவின் இதயம் வேகமாக துடிக்க தொடங்கியது.

நந்தனுக்கும் அவளிடம் பேசி வெகுநாட்கள் ஆவது போன்ற உணர்வு தோன்றியது.

மெல்ல பேசத் தொடங்கியவன் ” உனக்கு கல்லூரி போக விருப்பம் இருக்கா ” என கேட்டான்.

” இருக்கின்றது தான் என்றாலும் இப்போது வேண்டாம் பின்ன படித்துக் கொள்கிறேன் ” என அவள் சொல்ல ” அதெல்லாம் வேண்டாம் காலேஜ்க்கு நாளைக்கே போய் பாரு. சர்டிபிகேட் எல்லாம் உன்கிட்ட இருக்கு தானே ” என கேட்டவன் ” இருக்கு ” என அவள் சொல்ல ” சரி நாளைக்கு போய் பாரு. உனக்கு என்ன படிக்கணும் தோணுதோ படி ” என சொல்ல அவளோ தயக்கத்துடன் நிற்க ” என்ன ஆச்சு ” என அவன் வினவ ” இல்ல ஆல்ரெடி அம்மாக்கு பைசா அனுப்புறீங்க. எனக்கும் தனியா பைசா தரீங்க. இப்போ காலேஜ் ஜாயின் பண்ணா அதுக்கும் தனியா செலவாகும். வேண்டாம்… நீங்க தர பைசாவை நான் சேமிச்சு தான் வைக்கிறேன். ஒரு வருஷம் ஆன பின்ன ஊரிலேயே ஏதாச்சு காலேஜ்ல சேர்ந்து படிச்சிக்கிறேன். இங்கேனா பீஸ் அதிகமா இருக்கும் ” என ஏதேதோ சொல்ல நந்தனுக்கு கோபம் வந்தது.

” உனக்கு படிக்கணும்னு ஆசை இருந்தா படி. செலவ பத்தி யார் உன்னை யோசிக்க சொன்னா. நான் தானே கேட்டேன் உன்னை படிக்கிறத பத்தி நீயே ஒன்னும் என்கிட்ட கேட்கலையே பின்ன என்ன. உன்னோட படிப்புக்கு என்ன செலவாகுதோ அது என் பொறுப்பு. நீ அம்மாவ பாத்துக்கணும்னு ஆல்ரெடி ஒன் இயர் கல்லூரி படிக்காம தான இருந்த இப்பவும் இந்த ஒரு வருஷம் படிக்காம இருந்து வேஸ்ட் பண்ணனுமா ” என சற்று கோபத்துடன் பேசியதும் ” சரி ” என சொன்னவள் மனம் மகிழ்ந்தது.

நந்தனுக்கும் அவள் ஒத்துக் கொண்டதில் மகிழ்ச்சி.

மறுநாளே வர்ஷாவுடன் வேதாவை அனுப்பி வைத்தவன் ” எந்த கோர்ஸ் எடுத்து படிக்க விரும்புறாளோ அதுல ஜாயின் பண்ணிவிடு ” எனக் கூறி அனுப்பினான்.

நந்தனிடம் கூறிவிட்டு கிளம்பிய வேதாவின் முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி. அவளின் சந்தோஷத்தை கண்ட நந்தனின் மனமும் மகிழ்ச்சியில் குதித்தது.

அன்றைய பொழுது விரைந்து ஓடியது.

கல்லூரியில் ஜாயின் செய்தவள் மறுநாள் இருந்து கல்லூரி செல்ல தொடங்கினாள். கணித பாடம் எடுத்தாள் ஏனென்றால் அது அவளுக்கு மிகவும் பிடித்த பாடம் என்பதால்.

மறுநாள் இருந்தே கல்லூரி செல்ல வேண்டும் என அதற்கு உண்டானதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு தேவையானது எல்லாம் நந்தன் அலுவலகம் முடிந்து வரும் போது வாங்கி வந்திருந்தான்.

அஜய்க்கும் மிகுந்த சந்தோஷம். வேதாவிற்கு கால் பண்ணி விஷ் பண்ணினான். மறுநாள் காலை அவளை பார்க்க வந்த போது பேனா ஒன்றை பரிசோதித்தான்.

சுபத்ராவும் தன் மகன் வேதாவை படிக்க அனுப்புவதை எண்ணி மகிழ்ந்தார். ரவிவர்மனும் ஆதித்ய வர்மனும் கூட பெருமையாக பேசிக் கொண்டனர்.

தினமும் கல்லூரிக்கு தானே அழைத்து செல்வதாக நந்தன் சொல்ல வேதா உடனே மறுத்தாள்.

” உங்களுக்கு வேலை நிறைய இருக்கும் அதனால உங்களை தொல்லை பண்ண நான் விரும்பல காலேஜுக்கு நானே போய்க்கிறேன் வரும் போதும் நானே வந்திடுறேன் ” என கூறி முடித்தாள்.

அவள் கூறியதை கேட்ட நந்தனுக்கோ ஏனோ ஏமாற்றமாக இருந்தது.

தானே அழைத்துச் சென்று விடுவதும் பின் வீட்டிற்கு அழைத்து வருவதுமாய் அவளோடு நேரம் கழிக்க எண்ணியதோ மனம் அவன் அறியவில்லை. அதனாலேயே என்னவோ அவள் வேண்டாம் என்றதும் மனதில் சற்று வருத்தத்தை உணர்ந்தான். பின் ‘ அவள் சொல்வதும் சரிதான் நாம் நம் வேலையை பார்ப்போம் ‘ என எண்ணியவனாய் விட்டு விட்டான்.

    No comments yet.