காலையில் எழுந்ததும் வள்ளி புலம்பிக் கொண்டே வீட்டு வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது புலம்பலைக் கேட்ட அலமேலு, “நீ எதுக்கு பொலம்பிட்டு கிடக்க? நான் பாத்துக்கிறேன்… “என உரலில் இடிக்க வெற்றிலையை நீவி எடுத்தவாறு கூறினார்.
“என்னமோ அத்தை…” என அலமேலுவிடம் வள்ளி கூறிக் கொண்டிருக்கையில் அறையை விட்டு வெளியே வந்தாள் நிலா. அவள் கிளம்பி நின்ற கோலத்தைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்ட வள்ளி, “என்ன நிலா இது? ” என்றார்.
“என்ன? ” என எப்போதும் போல ஒற்றை வார்த்தையிலேயே பேசினாள் நிலா.
நிலா மைதானத்திற்கு கிளம்பி வெளியே வந்ததைக் கண்ட வள்ளி, “என்னடி இது கோலம்? எங்க கிளம்பிட்ட நிலா? “என்றாள்.
“விளையாட…” எனக் கூறியபடி தனது பேக்கை தூக்கினாள் நிலா.
“விளையாடவா? உனக்கு கல்லியாணம் ஆகிருச்சு. அது உனக்கு ஞாபகம் இருக்கா? “என விளக்கமாற்றை கையில் எடுத்தவாறு கூறினாள் வள்ளி.
“ஏன்? நேத்து தான டிஸ்டிக் லெவல் மேட்ச் விளையாடுனேன்? எனக்காக சாமிலாம் கும்பிட்டீங்க னு கேள்விபட்டேன்…” நிலா.
“அது நீ ஜெயிக்கனும் னு இல்ல.. விளையாட்டுல எந்த அடியும் பட்டுக்காம உருப்படியா வீடு வந்து சேரனும் னு தான்… “வள்ளி.
“அதான் வந்து சேந்துட்டேன் ல… அப்புறம் என்ன? “நிலா.
“அப்புறம் என்னவா? உனக்கு கல்லியாணம் ஆகி மூணு நாள் தான்டி ஆகுது. அதுக்குள்ள புருஷன் கூட சண்டை போட்டுக்கும் தனியா பொறந்த வீட்டுக்கு வந்து இருக்க? பெத்த வயிறு பத்திக்கிட்டு எரியுதுடி.. நீ என்னடானா ஒன்னுமே நடக்காத மாதிரி விளையாட போறேன் னு பேண்ட் சட்டை ய மாட்டிக்கிட்டு கிளம்பிட்ட. கொஞ்ச மாச்சும் கல்லியாணம் ஆன புள்ள மாதிரி நடந்துக்கிறியா? ” என தன் ஆதங்கத்தை எல்லாம் கொட்டித் தீர்த்தாள் வள்ளி.
அனைத்தையும் கேட்ட நிலா, எந்த பதிலும் கூறாமல் கீழே வைத்த தனது பேக்கை கையில் எடுத்தாள்.
“என்னடி நான் பேசிட்டு இருக்கேன் நீ பாட்டுக்கும் பைய தூக்கிட்டு நிக்கிற? ” வள்ளி.
“நாய குளிப்பாட்டி நடு வீட்டுக்குள்ள வச்சாலும் அது நக்கி தான் குடிக்குமாம்.. அது போல தான் உன் மக கத…” என உரலில் வெற்றிலை பாக்கை இடித்தபடி கூறினாள் அலமேலு.
அதைக் கேட்ட நிலா, அலமேலுவை பாத்தவாறே, “அபி… “என உள் நோக்கி குரல் கொடுத்தாள்.
“வந்துட்டேன் க்கா.. ” என நிலாவின் கையில் இருந்த பேக்கை வாங்கிக் கொண்டான் அபி.
அதைப் பார்த்த அலமேலு, “ஏன்டா பேராண்டி… நீ எங்க அவ கூட கிளம்பிட்ட? “என்றார்.
“அக்காவ க்ரவுண்ட் ல விட்டுட்டு அப்பிடியே நான் காலேஜ்க்கு கிளம்புறேன் அப்பத்தா.. ” அபி.
“ஏன்டா நீயும் இவ கூட சேந்துட்டு இப்பிடி பேசுற? ” வள்ளி.
“அவனுக்கு என்னடி தெரியும்? அவன் பச்சப் புள்ள.. ” என வெற்றிலையின் காம்பைக் கிள்ளியவாறு கூறினார் அலமேலு.
“நான் சொல்றத கேளு நிலா.. மொத மொதனு பொறந்த வீட்டுக்கு புருஷன் இல்லாம தனியா வரக் கூடாது.. என்ன தான் பிரச்சனையா இருந்தாலும் மாப்பிள்ளை கிட்ட பேசி அவருக் கிட்ட மன்னிப்பு கேளு… ரெண்டு பேரும் ஒன்னா இருக்குறது தான் நீ பொறந்த வீட்டுக்கும் பெருமை.. புகுந்த வீட்டுக்கும் அழகு… மொதல்ல உன் புகுந்த வீட்டுக்கு கெளம்பு. அங்க போய் இந்த கருமத்த எல்லாம் வச்சுக்க..” வள்ளி.
“பொறந்த வீடா? அப்ப இது என் வீடு இல்லையா? ” என வள்ளியை கூர்மையாகப் பார்த்தாள் நிலா.
“இது உன் வீடு னு யாரு சொன்னது? இது அபி வீடு. நீ கல்லியாணம் பண்ணிட்டு போனியே அதான் உன் வீடு. புருஷன் இருக்குற இடத்துல தான் பொண்டாட்டி இருக்கனும்..” வள்ளி.
“அப்போ இதுவரைக்கும் நான் இந்த வீட்ல இருந்தேனே… அதுக்கு என்ன அர்த்தம்? ” என தன் தாயை வெறி கொண்டு முறைத்தாள் நிலா.
நிலாவின் அப்பார்வையில் வள்ளிக்கு நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொள்ள… உதவிக்கு தனது மாமியாரைப் பார்த்தாள்.
இடித்த வெற்றிலைப் பாக்கை நன்றாக வாயில் போட்டு மென்றபடி.. நிலாவையும் வாயில் போட்டு அரைக்க தயாரான அலமேலு மெல்ல வாய் திறந்தார்.
“என்னடி ரொம்ப வாய் நீளுது? ” என நிலாவின் வாயை அடிப்பதாக நினைத்துக் கொண்டு கை உரலை இடித்தார்.
அலமேலுவின் கேள்விக்கு பதில் கூறாமல் அபியின் கை பிடித்து வெளியே சென்றாள் நிலா.
“அடியேய்… இங்க ஒருத்தி கத்திட்டு இருக்கேன் நீ பாட்டுக்கும் போற…” என வள்ளி உயர்ந்த குரலில் கத்தினாள்.
அவர் கத்துவதை பொருட்படுத்தாமல் அபியின் கை பிடித்து மைதானத்தை நோக்கி நடந்தாள் நிலா. அவள் செல்வதை கோவத்துடன் பார்த்த வள்ளி, “வரட்டும்.. அவங்க அப்பா வரட்டும்… இன்னக்கே இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்..” என முந்தானையை இழுத்து சொறுகியபடி சமையலறைக்குள் நுழைந்தாள்.
“நீ சத்த ஆறப் போடுடி… இவ எத்தன நாளைக்கி ஆடுறா னு நானும் பாக்குறேன்..” என தோரணையாய் கூறியபடி வெற்றிலை பாக்கை நன்றாக வாயில் இட்டு அரைத்தாள் அலமேலு.
“ஆமா.. இந்த கிழவிக்கு வேற வேலையே இல்ல. எல்லாம் நான் பாத்துக்கிறேன் பாத்துக்கிறேன் னு சொல்லிட்டு கடைசில ஒன்னும் பண்ணாம தான் இருக்கும். இதுல இது மூஞ்சிக்கு ஏகப்பட்ட பில்டப்பு.. ” என நினைத்தவாறு முகத்தை தாடையில் இடித்துக் கொண்டு தன் வேலையை கவனித்தாள் வள்ளி.
மைதானத்தை நோக்கி நடந்து கொண்டிருந்த நிலா, அபியின் எதிரே நடந்து வந்து கொண்டிருந்தார் கதிர்வேல். எதிரே தன் மகளைக் எப்போதும் போல பேண்ட் சட்டையில் கண்டு திகைத்த கதிர்வேல், “என்ன மா எங்க கிளம்பிட்ட? ” என்றார்.
“எப்போதும் போல தான்.. ” என பொறுமையாக பதிலளித்தாள் நிலா.
“எப்போதும் போல னா? மைதானத்துக்கா? ” கதிர்வேல்.
“ஆமா…” நிலா.
அடுத்து கதிர்வேல் பேசுவதற்குள், “இப்ப அக்கா விளையாட போறதுல என்ன ப்பா பிரச்சனை? அதான் நான் கூட போறேன் ல. காலையில இருந்து இதே கேள்விய மாத்தி மாத்தி அவள கேட்டுட்டு இருக்கீங்க? ” என படபடவென பொறிந்தான் அபி.
அபியின் கூற்றைக் கேட்ட கதிர்வேல் அதற்கு மேல் எதுவும் கூறாமல், “சரி அபி.. பத்ரமா போயிட்டு வாங்க..” என வழி அனுப்பி வைத்தார்.
“நீ வா க்கா… நீ எப்போதும் போல இரு. உனக்கு நான் இருக்கேன்..”என நிலாவின் பையை தூக்கியபடி முன்னே நடந்தான் அபி.
முன்னே செல்லும் அபியை பார்த்த நிலாவிற்கு, அவன் தறுதலையாய் சுற்றி திரிந்தது எல்லாம் போன ஜென்மம் போல் தோன்றியது. அதற்கு முழு காரணமாக இருக்கும் தன் கணவனை பெருமையாக நினைத்து கர்வம் கொண்டாள் பேதை.
அப்பொழுது நிலாவைக் கண்ட ஊரார், “இங்க பாருங்கடி இவள.. இன்னும் அவுத்து திரியுற காளைக் கன்னாட்டம் மேஞ்சு திரியுறா.. ” என தங்களுள் பேசி சிரித்துக் கொண்டனர்.
அதை கேட்டும் கேட்காதது போல் அபியுடன் மைதானதிற்குள் நுழைந்தாள் நிலா. மைதானம் வந்ததும், “சரி க்கா.. நீ விளையாடு.. நான் க்ளாஸ் முடிச்சுட்டு வந்து உன்னைய பாக்குறேன்.. ” என நிலாவிடம் பையை குடுத்து விட்டு கல்லூரிக்கு கிளம்பினான் அபி.
“சரி டா… போய் ஒழுங்கா படி.. ” என அபியின் முதுகில் தட்டி கொடுத்து விட்டு மைதானத்தை நோக்கினாள் நிலா.
இந்த நான்கு வருடங்களில் பூஞ்சோலை கிராமத்திற்கு என தனியே ஒரு விளையாட்டு மைதானத்தை உருவாக்கி இருந்தனர். அதை பெருமையாக பார்த்தபடி தன் முதல் அடியை உள்ளே எடுத்து வைத்தாள் நிலா.
அவளுடன் விளையாடும் சக தோழர்கள் அவளைக் கண்டதும், “டேய் குட்டச்சி வந்துட்டா டா.. ” என உற்சாகமாக அவளை நோக்கி வந்தனர்.
“எப்பிடி இருக்க குட்டச்சி? நேத்து மேட்ச் ல பொலந்து கட்டிட்ட னு கேள்விப்பட்டோம்.. “என இயல்பாக விசாரித்தபடி பாரட்டினர்.
அவர்களுக்கு மில்லி மீட்டர் புன்னகையே பதிலளித்து நின்றாள் நிலா. “என்ன பேசுனாலும் இதே ரியாக்ஷன் தான்… சொல்ல மறந்துட்டேன் குட்டச்சி உன்னைய பாக்க ரொம்ப நேரமா ஒருத்தர் வெயிட் பண்ணிட்டு இருக்காரு.. போய் அவர பாத்துட்டு வா.. அப்புறம் நாம விளையாடலாம்… ” என்றான் அவளுடன் விளையாடும் சக விளையாட்டு வீரன்.
“என்னைய பாக்கவா? ” என புருவத்தை உயர்த்தியபடி அவன் கை காட்டிய திசையை நோக்கி நடந்தாள் நிலா.
அங்கு அவளுக்காக காத்துக் கொண்டிருந்த நபரைக் கண்டு இரு புருவத்தையும் நெரித்து தன் கோபப் பார்வையை வீசினாள் நிலா.
(சேரநிலா மிளிர்வாள்…)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.