அத்தியாயம் 2

அர்பிதா S | 14 Dec 2025 | Share

தன் அண்ணனின் மனக் கிறுக்கல்களாகி போன அந்த கவிதையின் அர்த்தம் புரியமுயன்று கொண்டு இருந்தவள், தன் தந்தையின் கூற்றிற்கேற்ப, ஆர்யனை அழைக்கக் கைபேசியை எடுத்தபோது, வந்த அழைப்பைக் கண்டு விழி விரித்து கிடந்தவளை விடப் பதறி போயிருந்தார் லட்சுமி.

நேரம் தவறாமை ஆர்யனின் மிக சிறந்த குணங்களில் ஒன்று. அதுவும் முன்பே வருவதாய் அவன் முடிவெடுத்து இருக்கும் ஒரு இடத்திற்கு இவ்வளவு நேரம் ஆகியும் அவன் வராமல் இருப்பது கவிதாவிற்கும், லட்சுமிக்குமே புதிதுதான்.

இருந்தும் அவனை அழைத்து விவரம் கேட்கலாம் என்றெண்ணிய போது தான், ஆர்யன் பணி புரியும் காவல் நிலையத்தில் இருந்து அழைப்பு வந்தது, கவிதாவின் எண்ணிற்கு.

இயன்ற வரை அலுவலக தொலைபேசியில் இருந்து வீட்டினரை தொடர்பு கொள்வதை தவிர்க்க நினைக்கும் ஆர்யனுக்கே ஆபத்தோ, இன்னலோ வந்தாலே ஒழிய அவன் அப்படி செய்பவன் இல்லை. இது வரை ஒன்றோ, இரண்டோ முறை மட்டுமே அலுவலக கைபேசியில் இருந்து பேசி இருக்கிறான். அதுவும் கவிதாவின் கைபேசிக்கு மட்டும்.

அப்படி இருக்க, இப்போது அதே எண்ணில் இருந்து அழைப்பு வர, அதில் பதறியவள், லட்சுமிக்கு அதை காட்ட, அவர் முகம் காட்டிய பதட்டத்தில் மேலும் கலங்கியவள், அதேக் கலக்கத்தில் கைபேசியையும் எடுத்தாள்.

“ஹலோ கவிதா தானே பேசுறீங்க?” என்றோலித்தது ஒரு கம்பீர குரல்.

அதில் பதறிபோனவள்,

“ஆமாம் சொல்லுங்க.. நீங்க யாரு?” கேட்டாள், அப்பட்டமாய் பதட்டம் புலப்பட.

“நான் இன்ஸ்பெக்டர் பேசுறேன்ம்மா ஒன்னும் இல்லை, ஆர்யன் இப்போதான் காலேஜ் கிளம்பினான். அவனோட போன்ல சார்ஜ் இல்லையாம். நேரம் வேற ஆகுறதால, என்னை கால் பண்ணி இன்போர்ம் பண்ண சொன்னான்” முடித்தவரின் பேச்சில் நிம்மதி அடைந்தவள்.

“ஓஹோ, அண்ணன் கிளம்பி எவ்வளவு நேரம் ஆகும்?” கேட்டாள், சற்றே நிதானமாய்.

“ஒரு டென் மினிட்ஸ் இருக்கும்” என்றவர் அத்துடன் பேச்சை வளர்க்காமல் வைத்து விட,

கவிதா கூறிய விவரம் கேட்ட பின் தான் நிம்மதி அடைந்தார் லட்சுமி.

அடுத்த இருபது நிமிடத்தில் தன் அண்ணனை அவள் எதிர்பார்த்து கிடக்க, விழாவும் சரியாய் அந்நேரம் துவங்கி இருந்தது.

விருந்தினராய் வருவதாய் கூறி இருந்த, முன்னாள் உயர்நீதி மன்ற *நீதிபதி சந்துரு* அவர்களும் சரியான நேரத்தில் அரங்கிற்குள் நுழைந்து இருக்க, அவ்வரங்கமே நிறைந்து இருந்தது.

வந்தவரை ஆரவார வரவேற்புடன், நேரே மேடையில் அமைக்கப்பட்டு இருந்த அகல நாற்காலியில் அமர வைத்தவர்கள், நிகழ்ச்சியையும் இனிதே துவங்கியும் இருந்தனர்.

வரவேற்புரை பேச மேடை ஏறிய பெண் தன் உரையை முடித்து, பின் சில பல பரிசளிப்புகளும், உரைகளும் நடந்து கொண்டே இருந்த வேளையில், அரங்கில் அமர்ந்து இருந்த மாணவர்கள் அனைவரிடமும் ஒரு சின்ன சலனமும், சலசலப்பும் ஆங்காங்கே தெரிய, அது அவ்விடத்தில் இருந்த மற்றவரின் கவனத்தை ஈர்க்கவே, மேடையில் நடந்து கிடந்த நிகழ்ச்சி கூட ஓரிரு நிமிடம் சலனத்தை கண்டே இருந்தது.

சில நொடிகளில் அச்சலனத்தை ஏற்படுத்தியவனின் பிம்பம் தெரியவே,

‘இது எதிர்பார்த்தது தானே’,

என்ற எண்ணத்தில் மேடை வாசிகள் தங்கள் நிகழ்ச்சியை தொடர, கவிதா, லட்சுமி, விநாயகம் மட்டும் வந்த அவனை பெருமிதத்தோடே பார்த்த வண்ணம் கிடந்தனர்.

ஆறடி உயரம், கருத்த தோல் என்றாலும் கலையான, வட்ட வடிவ முகம், குடைமிளகாய் மூக்கு, பள்ளம் மேடாய் அவன் கன்னத்தை அலங்கரித்து இருந்த அந்த குண்டும் குழியும் கூட, இயற்கையின் சிவப்பு சாயம் போட்டது போல ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தி எடுத்து கட்டிட,

இயல்பை விட நீண்ட கழுத்தும், அதில் இருந்து விரியும் ஆஜானுபாகுவான தோள் பட்டையின் முடிவாய் வளர்ந்து இருக்கும், வாழை பூ விரல்களை காணும் போதே அது கொண்ட வலிமை புரியவே செய்யும்.

கழுத்தை தாண்டி, விரிந்த நிலப்பரப்பை கொண்ட அவனின் மார்பும், தொப்பை காணா, பல படிக்கட்டுகளை தாங்கி நிற்கும் வயிறும் என,

ராணுவ வீரனின் வீரத்தின் தழும்புகளை ஏந்தி, மேனியில் சில இடங்களில் தெரிந்தும், பல இடங்களில் ஆடைக்குள் மறைந்துமாகி ஆட்டம் காட்டிட,

ஆறடி உயர ஆணழகனின் கம்பீர நடையில் அவ்வரங்கமே பிரம்மிப்பில் தான் கிடந்தது.

அவன் அரங்கத்தின் வாசலைத் தாண்டி இரண்டடி உள்ளெடுத்து வைக்கவே காத்திருந்தது போல, அவன் முன் அவசரமாய் வந்த பெண்ணொருத்தி,

வாய் மொத்தம் பற்கள் பூத்த படியாய், கையில் இருக்கும் பூங்கொத்தை அவன் முன் நீட்டிய படியாய்,

“வெல்கம் சார்” என்றாள், சற்றே கண்களில் தெரிந்த ஆர்வத்தை முயன்றும் மறைக்க தோற்றவளாய்.

“பைத்தியமா இவ” என்ற படியாய் அவளை ஏற இறங்க பார்த்தவன், அவளை ஏதோ சொல்ல வாயெடுக்க போனவனை, தடுக்கும் படியாய் அவ்விடம் விரைந்து வந்த கவிதா, அவசரமாய் அந்த பூங்கொத்தை கையில் வாங்கி கொண்டு,

“தேங்க் யூ சிஸ்டர்” என்று விட்டாள், ஆர்யனின் பேச்சை தடுத்த படியாய்.

அவள் சிஸ்டர் என்றதும், அப்பெண்ணின் முகம் வாடி, கவிதாவை முறைத்த முறைப்பை கூட கண்டு கொள்ளாதவள் போல, ஆர்யனை இழுத்து கொண்டு முன்னேற துவங்கினாள் மேடையை நோக்கி.

“யார் அந்த பொண்ணு.. லூசா இருக்கும் போலயே” சொன்னவனை,

“யாரு அவுங்களா? நீ தான் லூசு.. ஒரு நிமிஷம் இந்த ரூம்ல இருக்க பொண்ணுங்க எல்லாரையும் நல்லா பாரு.. அதுல நீ யாரை கை காட்டுனாலும் அவுங்க அடுத்த நிமிஷமே உன்ன கல்யாணம் பண்ணிக்க ரெடி ஆகிடுவாங்க.. அவளோ லவ்வு.” என்றாள் லேசாய் நகைத்த படியாய்.

“நீ வேற எதையாவது சொல்லி கிளப்பி விடாத. அப்புறம் அம்மா அப்பாவை என்னால சமாளிக்க முடியாது. அது இல்லாம உனக்கு யார் இந்த மாதிரி டீடெயில்ஸ் எல்லாம் சொல்றது. இதை இந்த பொண்ணுங்க கேட்டா, உன்னையும் என்னையும் இங்கயே கொன்னுடுவாங்க. வம்பை விலை குடுத்து வாங்காத. ஒழுங்கா வா” என்றவன் அதிகம் அலட்டிகொள்ளாமல் முன்னேறி நடக்க.

“ஆமா, எனக்கு பைத்தியம் பாரு. அதான் நானே கற்பனை பண்ணி சொல்லிக்கிட்டு இருக்கேன். அட ஏன்ணே நீ வேற. ஒரு பொண்ணு ஒருத்தி, என்கிட்ட நேரா வந்து, உங்க அண்ணனை கல்யாணம் பண்ணிக்க விரும்புறேன், நீ தான் அவர் கிட்ட பேசி உதவி பண்ணனும்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் ரெகமெண்ட் கேட்டுட்டு போச்சு.

இப்போ என்னடானா, இன்னொரு பொண்ணு வாசலையே ப்ரொபோஸ் பண்ணுது. இதெல்லாம் ரொம்ப ஓவரா இருந்தாலும், அண்ணனா போய்ட்ட, அதான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு அமைதியா இருக்கேன்” என்றாள் ஏதோ பெரிய மனது படைத்தவள் போல.

“சரி சரி, இதை இதோட விடு” இவர்கள் பேசி கொண்டு இருக்கும் போதே, அவனின் பெயர் மேடையில் இருக்கும் பெண்ணால் அழைக்க பட,

கவிதாவை முதல் வரிசையில் விட்டுவிட்டு, மேடை நோக்கி நடந்தவன், மேடையில் ஏற அமைக்கப்பட்டு இருந்த படியில் அடியை எடுத்து வைக்கும்  போதே ஏதோ தோன்றியவனாய், குனிந்து அப்படியை கையால் தொட்டு, சிரம் மேல் வைத்து கொண்டு, இவ்வாய்ப்பை அளித்தமைக்கு தனது நன்றியை கூறியவன், முன்னேறி மேடையின் நடு செல்லும் போதே,

அவனுக்காகவே காத்திருந்த நீதிபதி சந்துரு, கையில் ஆர்யனின் திறமைக்கான பரிசை கையில் ஏந்திய படி, அவனுக்கே காத்திருந்தவர், அவன் தன் அருகே வந்ததை கண்டதும் அவன் கையில் அதை கொடுத்த அடுத்த நிமிடம் அரங்கமே கரகோஷத்தில் தத்தளித்து மூழ்கி போயிருந்தது.

நீதிபதி கை கொண்ட கோப்பை தன் கை மாறியதும் அதில் சிலிர்த்தவன், அதன் மேலே கண்ணாய் இருக்க.

விழாவை தொகுத்து கொண்டு கிடந்த பெண்ணோ,

இப்போது, நம் சிறப்பு விருந்தினர், நீதிபதி சந்துரு அவர்களை, சில வார்த்தைகள் பேச மேடைக்கு அழைக்கிறோம்” என்று வேறு கூறி விடவே, வேறு வழி இன்றி, பேசியே ஆக வேண்டும் என்பதை உணர்ந்தவர், தன் இருக்கையை விட்டு சற்றே நகர்ந்து, மைக் அமைக்கப்பட்ட இடத்தை அடைந்தவர்.

முகத்தில் சலனம் எதுவும் இல்லாமல், குழம்பிய விழியுடன் அவர் இதழ் தரித்த மர்மமோ, நமட்டு சிரிப்போ, அதனின் அர்த்தம் புரியாமல் அவர் என்ன பேசி விடுவாரோ என்ற பதட்டத்தில் அனைவரும் கிடக்க,

ஆர்யன் மட்டும் சாந்தமாய், மனதை எவ்விடமோ நிறைந்தபடி, மேடையில் அமர்ந்து இருந்தான், அவன் போக்கில்.

ஆர்யன் உள் மனதில் மறைந்து கிடக்கும் புதையல் என்னவோ!!!

    No comments yet.