அத்தியாயம் – 2

நித்யா பாலசுப்ரமணியன் | 10 Dec 2025 | Share

கார் அதிவேகம் எடுக்காமல் நிதானமாக போய்க் கொண்டிருந்தது.

காரில் ஏறி அமர்ந்தவளின் மனமோ எதை எதையோ எண்ணிக்கொண்டு வருந்திக் கொண்டிருந்தது.

‘ அடுத்து என்ன செய்வது. ஊருக்கு போனாலும் உதவினு கேட்க யாரும் இல்லை. இவளை நம்பி இவ்வளவு தூரம் வந்தோம் இப்ப இவளும் இல்லை. இங்கு எங்கையாவது தங்கி நாளைக்கு பார்த்துட்டு போகலாம்னாலும் கையில அதிகப்படியான காசு இல்லை. அப்படி இன்னைக்கு தங்கிட்டு நாளைக்கு பார்க்க முடிஞ்சா பரவாயில்லை அப்படி இல்லைனா ? அவுங்க எப்ப வருவாங்கன்னு தெரியாம எப்படி எங்க தங்க முடியும் ? எதுவும் புரியலையே என்ன பண்றது இனி யார்கிட்ட உதவி கேட்கிறது ‘ என ஏதேதோ யோசித்துக் கொண்டே வந்த அவளின் கைகள் இரண்டும் ஒன்றை ஒன்றை பிசைந்து கொண்டிருந்தது.

கைகளை பிசைந்து கொண்டு முகத்தில் பாவனைகள் மாற ஆழ்ந்து யோசித்துக் கொண்டே வந்து கொண்டிருந்தவளை பார்த்தவன் ” உன் பெயர் என்ன ” என கேட்டான்.

முதல் தடவை அவன் கேட்ட போது அது அவள் காதில் விழவே இல்லை. இரண்டாவது முறை சற்று சத்தமாக கேட்ட பின்னே அவன் தன்னிடம் பேசுவதை உணர்ந்தவள் ” என்ன கேட்டீங்க ” என வினவ ” உன்னோட பெயர் என்னனு கேட்டேன் ” என்று சற்று அலுப்புடனே சொல்ல ” வேதவள்ளி ” என பதில் உரைத்தாள்.

” ம்.. ” என்றவன் ” உன்னோட பிரண்ட பார்க்க இவ்வளவு தூரம் வந்திருக்கையே வீட்ல இருந்து வேற யாரையாவது துணைக்கு கூப்பிட்டு வந்து இருக்கலாம் இல்லையா ” என கேட்க ” வேறு யாரும் இல்லைண்ணா ” என அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே கண்களின் ஒரு புறம் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

‘ ஏன் இவள் இப்படி விடாமல் அழுது கொண்டிருக்கிறாள். என்ன பிரச்சனை ‘ என அவன் மனதில் குடைந்ததை அவளிடமே கேட்டான்.

” என்ன ஆச்சு ஏன் அழுதுகிட்டே இருக்க…. எதுவும் பிரச்சனையா ? ” என வினவ ” அது… ” என தயக்கத்துடன் நிறுத்தியவள் அவன் முகம் பார்க்க ‘ பார்த்தால் நல்லவர் போல் தான் இருக்காங்க. சொன்னால் தவறில்லை ‘ என மனதில் பட ” அது வந்து ” என இழுக்க ” ம்… சொல்லு. என்ன பிரச்சனை. எதுக்கு இவ்ளோ தூரம் தனியா உன்னோட பிரண்ட பார்க்க வந்த ? லவ் பிராப்ளமா ? ” என கேட்க ” ஐயோ அதெல்லாம் இல்லண்ணா. என்னோட அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை அதான் என்னோட ஃப்ரெண்ட பார்த்து கொஞ்சம் உதவி கேட்கலாம்னு வந்தேன் ” என மென்று முழுங்க ” என்ன உடம்புக்கு ” என அவன் கேட்க, அவளோ தனது தாயை நினைத்து அழுது கரைந்து கொண்டிருந்தாள்.

” சொல்லு வேதா…. என்ன உடம்புக்கு ” என அவன் மீண்டும் கேட்க, தனது தந்தைக்கு பின் முதன் முதலாக தன்னை வேதா என அழைத்த அவனைப் பார்த்தவளின் உதட்டில் சின்ன புன்னகை தோன்றி மறைந்தது. கார் ஓட்டிக் கொண்டிருந்தவனின் கண்களில் இது படவில்லை.

வேதா பதில் ஏதும் சொல்லாமல் இருக்க, அவள் புறம் ஒரு நொடி திரும்பி பார்த்தவன் ” ம்… ” என கேட்க அதே நேரம் அவள் வயிற்றிலிருந்து கடமுடா கடமுடா என சத்தம் வர அவள் எதுவும் சாப்பிடாமல் பசியோடு இருப்பதை அறிந்தவன் ஹோட்டல் ஒன்றின் முன் காரை நிறுத்தினான்.

” இறங்கி வா ” என அவன் கூற ” எங்கண்ணா ” என தயக்கத்துடன் இவள் வினவ ” ஹோட்டலுக்கு எதுக்கு போவாங்க சாப்பிட தான் இறங்கி வா… ” எனக் கூற ” எனக்கு பசி இல்லை ” எனக் கூற ” எனக்கு ரொம்ப பசிக்குது ஏதாவது சாப்பிட்டு போகலாம் ” எனக் கூறி இறங்குவதற்கு கார் கதவை திறந்து விட்டவன் ஹோட்டலின் உள்ளே அழைத்துச் சென்றான்.

இருவர் அமரும் இருக்கையில் அமர்ந்தவன் அவள் அமர்ந்ததும் ” நீ என்ன சாப்பிடுற ” என கேட்க ” எனக்கு எதுவும் வேண்டாம். நீங்க சாப்பிடுங்க ” எனக் கூறியவள் அங்கிருந்த ஜக்கில் இருந்து தண்ணீரை ஒரு டம்ளரில் ஊற்றி குடிக்க தொடங்க அதை பிடுங்கி கீழே வைத்தவன் இரண்டு தோசை ஆர்டர் செய்தான்.

அமைதியாக ஏதோ யோசனை உடனேயே சாப்பிட்டுக் கொண்டிருந்தவளை பார்த்தவனுக்கு மனம் ஏதோ செய்தது. அவளையே பார்த்துக் கொண்டே சாப்பிட்டு கொண்டிருந்தான். அப்பொழுது போன் அடித்தது எடுத்துப் பார்த்தவன் அட்டென்ட் செய்யாமல் வைத்துவிட்டு சாப்பிட்டு முடித்தான். மறுபடியும் போன் அடித்தது. சாப்பிட்டு முடித்து கைகழுவி விட்டு வந்தவள், போனை பார்த்ததும் அவன் முகம் ஏதோ மாறுவது போல் இருப்பதை கவனித்தாள். இந்த முறையும் போன் அட்டென்ட் செய்யாமல் சைலண்டில் போட்டவன் ஃபோனை பேன்ட் பாக்கெட்டில் வைத்தான்.

அவள் வந்ததை கவனித்தவன் ” போகலாம் ” எனக் கூற அவன் பின்னே நடந்தாள். கார் நிதானமாக செல்ல சிறிது நேரம் அங்கே அமைதி நிலவியது. அவனும் ஏதோ யோசனையில் இருக்க அவளிடம் பேசிக் கொண்டிருந்ததையும் மறந்தான்.

பஸ் ஸ்டாண்ட் அருகே வந்ததும் காரை ஒரு ஓரமாக நிறுத்தினான். அவள் இறங்கியதும் உள்ளே நடந்தான். தேனி செல்லும் கடைசி பஸ்ஸும் போய்விட்டதால் அடுத்து என்ன செய்வது என்பது போல் அவள் விழிக்க, அவன் அவளிடமே கேட்டான் ” இப்ப என்ன பண்றது. தேனி போற பஸ் இல்லையே. திருச்சி பஸ் தான் இருக்கு. இது தான் கடைசி பஸ். வேற பஸ் எதும் இல்லை. நீ பஸ் மாறி மாறி போனாலும் நைட் நேரம் உனக்கு ஓகேவா என்ன பண்ணலாம் ” என கேட்க ‘ வரும் போது ஒரே பஸ்லையே வந்துட்டேன். இங்க வந்ததும் ஆட்டோகார் கிட்ட அட்ரஸ் காட்டி அவ வீட்டுக்கு போனேன். ஆனா மாறி மாறி போறதுனா எப்படி ‘ என மனதிற்குள் குழம்பிக் கொண்டிருந்தவள் ‘ என்ன பண்ணலாம். இங்கே எங்கேயாவது தங்கலாமா? கைல காசு எவ்ளோ இருக்குன்னு பாப்போம் ‘ என யோசித்தவரே தன்னுடைய பர்சில் பார்த்தவள் பஸ்ஸுக்கு மட்டும் தான் இருக்கும் என்பது புரிய அவனிடம் திரும்பியவள் ” மாறி மாறி போறதுக்கு நான் இங்கேயே பஸ் ஸ்டாண்டிலேயே இருந்துட்டு காலையில் முதல் பஸ்ஸுக்கு கிளம்புறேன். இதுவரைக்கும் கொண்டு வந்து விட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ்ண்ணா ” எனக் கூற ‘ பார்த்தா சின்ன பெண்ணா இருக்கா பஸ் ஸ்டாண்ட்ல எப்படி விட்டுட்டு போறது. அது சேஃபா இருக்குமா ‘ என யோசித்தவரே சுற்றி முற்றும் பார்த்தான்.

பஸுக்காக காத்திருந்த சிலர் பேசிக் கொண்டிருப்பதும் சிலர் அங்கிருந்த பெஞ்சில் படுத்து தூங்கிக் கொண்டிருப்பதும் என இருந்தாலும் அங்கு விட்டுச் செல்ல அவனுக்கு மனம் வரவில்லை.

காலையில் எத்தனை மணிக்கு பஸ் என கேட்டு தெரிந்து கொண்டவன் ஏதேனும் ஹோட்டலில் தங்கி இருந்துவிட்டு காலையில் கிளம்பச் சொல்ல ” இல்ல பரவாயில்ல வேண்டாம் இங்கேயே உட்கார்ந்துக்கிறேன் ” என சொன்னவளிடம் சற்று கோபமாகவே பேசியவன் அருகில் இருந்த ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான்.

வேதாவை அழைத்துக் கொண்டு ஹோட்டலுக்கு சென்றவன் இரண்டு பேர் தங்குவதற்காக ரூம் இருக்கிறதா என கேட்க இல்லை என்றதும் வேறு ஹோட்டலுக்கு சென்றான்.

இரவு நேரம் என்பதால் அவளை ஹோட்டல் ஹோட்டலாக கூப்பிட்டுக் கொண்டு போவது அவனுக்கு சரியாக படவில்லை.

அடுத்த ஹோட்டல் சென்றவன் அங்கு ஒரே ஒரு அறையே இருக்க சரி அங்கேயே தங்கலாம் என முடிவு செய்தான்.

அவளிடம் சம்மதம் கேட்ட திரும்பியவன் அவள் பயந்து போய் இருப்பதை பார்த்ததும் ” என்ன ஆச்சு வேதா ஏன் ஒரு மாதிரி இருக்க ” என கேட்க ” ஒன்னும் இல்லண்ணா. எனக்கு இங்க எல்லாம் தங்க வேண்டாம் ” எனக் கூறியவள் வேகமாக வெளியே செல்ல, வேறு வழி இல்லாமல் அவள் பின்னே வந்தவன் ” சரி நாம கார்லையே இருக்கலாம் ” எனக் கூறி காருக்கு அழைத்து வந்தான்.

    No comments yet.