வர்ஷா தன்னை காதலிப்பதாய் எழுதியிருப்பதை நம்ப மாட்டாமல் திரும்ப திரும்ப பார்த்தவன் ” இங்க பாரு வர்ஷா நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ. நீ சின்ன பொண்ணு. உன்னை தங்கை மாதிரி தான் நெனச்சு பேசுறேன் தவிர உன் மேல எனக்கு வேற எந்த அபிப்ராயமும் இல்லை ” எனக் கூறியதோடு ” நீ நல்ல பொண்ணு தானே. உன் கவனத்தை படிக்கிறதுல மட்டும் வை. நல்லா படி. இதை இப்பவே மறந்திடு. நானும் மறந்திடுறேன். இந்த வயசுல இப்படி யார் மேலேயாவது ஆசை வர்றது இயல்பு தான். ஆனா அது காதல் இல்லை. அது ஒரு விதமான ஈர்ப்பு அவ்வளவு தான். நாளைக்கு நீ ஸ்கூல் முடிச்சுட்டு காலேஜ் போகும் போது இன்னும் நிறைய பேரை பார்ப்ப. அப்போ அழகு மட்டும் கண்ணுக்கு தெரியாது. அவங்க குணம் நடத்தை எல்லாமே தான் பார்க்கத் தோணும். வெளி தோற்றத்தை மட்டும் விரும்புறத வச்சு காதல்னு நினைக்க கூடாது ” என நந்தன் மேலே வந்து விடுவதற்குள் தன்னால் சொல்ல முடிந்ததை எல்லாம் விரைந்து சொல்லி முடித்து விட வேண்டும் என சொல்லிக் கொண்டிருந்தான்.
ஆனால் முழுவதும் சொல்லி முடிக்கும் முன் நந்தன் வரும் சத்தம் கேட்க, கையில் இருந்த பேப்பரை பேண்ட் பாக்கெட்டில் வைத்தவன் வர்ஷாவை கீழே போக சொன்னான்.
திரும்பி நடந்தவள் நந்தன் ஏதாவது தவறாக எண்ணி விடப் போகிறான் என்ற பதற்றத்துடன் நின்றிருக்கும் அஜய்யிடம் ஓடிச் சென்று கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ” நான் எப்பவும் உங்களை மட்டும் தான் விரும்புவேன் ” எனக் கூறி கன்னத்தில் முத்தமிட்டவள் நந்தன் வந்ததும் ” படிக்கிறதை விட்டுட்டு ஸ்னாக்ஸ் சாப்பிட போறீங்களா ” என கிண்டல் செய்து கொண்டே கிண்ணத்தை பிடுங்கி கொண்டு கீழே ஓடினான்.
வர்ஷா கிண்ணத்தை பிடுங்கி கொண்டு கீழே ஓட ” ஏய்… சேட்டை… ” என கத்திக் கொண்டே நந்தன் துரத்தி ஓடுவதற்குள் அவள் கீழே ஓடி மறைந்தாள்.
இங்கே அஜய்க்கு மின்சாரம் தாக்கியது போல் இருந்தது.
” சின்ன பொண்ணுனு நினைச்சா அதுக்கு பாரு எவ்வளவு தைரியம்னு ” என எண்ணியவன் கன்னத்தில் அவள் இட்ட முத்தத்தை ஒரு நிமிடம் நினைத்தவனின் உதட்டில் சிறு புன்னகை தோன்றி மறைந்தது. பின் ‘ எதைப் பற்றியும் யோசித்து மனதில் தேவையில்லாத கற்பனைகளை வளர்த்துக் கொள்ள கூடாது ‘ என நினைத்தவன் நடந்ததை அத்தோடு மறக்க முயற்சித்தான்.
மறுநாள் இருந்தே அஜய் அங்கு செல்வதை தவிர்த்தான்.
நந்தன் எவ்வளவு கேட்டாலும் எனக்கு இந்த வேலை இருக்கு அந்த வேலை இருக்கு என ஏதாவது சொல்லி மழுப்பியவன் அதன் பின் வர்ஷாவை பார்க்கவே இல்லை.
இப்படியாக போய்க் கொண்டிருக்க வர்ஷாவுக்கோ அவன் நினைவுகள் அதிகரித்து கொண்டே போனதே தவிர ஒரு போதும் குறைந்தபாடில்லை.
‘ தன்னுடைய காதல் உண்மையானது. அது அழகு மட்டும் பார்த்து வந்தது இல்லை. இந்த காதல் எத்தனை வருஷம் ஆனாலும் என் மனசுல இருந்து நீங்க போறதும் இல்ல. என்ன தான் ஓடி ஒளிஞ்சாலும் ஆயிரத்தெட்டு காரணம் சொன்னாலும் என்னோட காதலை ஏத்துகிற வரைக்கும் உங்களை நான் விட போறதும் இல்லை ‘ என மனதில் சபதம் கொண்டவளாய் அவனை மீண்டும் பார்க்கும் அந்த சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டிருந்தாள்.
அவனோ ‘ நான் உன் கண்ணில் படுவேனா ‘ என்று மறைந்திருந்தான்.
வருடங்கள் விரைந்து ஓடின.
வர்ஷாவும் பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்தாகிவிட்டது.
நந்தனின் திருமண பேச்சு வரவும் எப்படியும் நந்தன் திருமணத்தில் அவனைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் என எதிர் பார்த்தாள்.
அவனை நீண்ட இடைவெளிக்கு பின் பார்க்கப் போவதால் மிகவும் ஆர்வத்துடனும் ஆசையுடனும் இருந்தாள்.
அவன் முன்னிலையில் தன்னை பெரியவள் போல் காட்ட வேண்டும் என்பதற்காகவே சேலை கட்டினாள்.
அவன் நிமிர்ந்து தன்னை பார்ப்பான் என எவ்வளவோ கனவு கண்டாள். ஆனால் வேதாவை கோவிலுக்கு அழைத்து வந்தவனோ மறந்தும் கூட வர்ஷாவின் பக்கம் திரும்பவில்லை.
முட்டிக் கொண்டு வந்த அழுகையை கஷ்டப்பட்டு கட்டுபடுத்தியவள் திருமணம் முடிந்த பின்பு அவனைப் பார்த்து பேச வேண்டும் என எவ்வளவோ முயன்றாள். ஆனால் அதற்கு வாய்ப்பே கொடுக்காமல் வேலை இருப்பதாய் கூறி விட்டு வேதாவை நந்தன் வீட்டில் விட்டதுமே கிளம்பி விட்டான்.
‘ இப்படியே இனி எத்தனை காலம் தான் ஓடி ஒளிவானோ ‘ என எண்ணியவள் அவனிடம் கண்டிப்பாக பேசியே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள்
அவன் வீட்டின் முகவரியை தெரிந்து கொண்டு அங்கேயே சென்றாள்.
இவளை பார்த்ததும் அவனுக்கு ஆச்சரியம் தான் இவ்வளவு தூரம் தன்னை தேடி வந்திருக்கிறாளே என…. ஆனால் அதை காட்டிக் கொள்ளாது ” இப்ப எதுக்காக இங்க வந்திருக்க… என்ன விஷயம் ஆனாலும் உங்க வீட்டுக்கு வரும் போது பேசு. இப்போ கிளம்பு இங்க இருந்து ” என சொல்லவும் அவளுக்கு இதயம் வலிக்க கண்ணீர் முட்டும் விழிகளுடன் அவனை ஏறிட்டாள்.
இன்னைக்கு என்ன ஆனாலும் பேச வந்ததை பேசியே தீரனும் என எண்ணியவளாய் கண்ணீரை துடைத்துக் கொண்டு ” நான் உங்களை உண்மையாவே நேசிக்கிறேன். அப்போ உங்ககிட்ட என் காதலை சொன்னேனே அப்ப இருந்து மட்டும் இல்ல இப்பவும் எப்பவும் உங்களை மட்டும் தான் நான் காதலிப்பேன் ” எனக் கூறியவள் ” நீங்க என்ன உண்மையாவே விரும்பவே இல்லையா… இத்தனை நாள் பார்க்காமல் இருந்ததுல ஒரு நாள் கூட என் நினைவு உங்களுக்கு வந்ததே இல்லையா…. ” என ஏதேதோ கேள்விகள் கேட்டும் எவ்வளவோ தன் மனதை புரிய வைக்க முயன்றும் எதற்குமே அவன் அசரவில்லை.
இறுதியாக ” உன்மேல் அப்படி எந்த ஒரு எண்ணமும் எனக்கு இல்லை. இனியும் அப்படி ஒரு எண்ணம் வரவும் வராது. நீ இனி இதை பத்தி பேசிட்டு என்ன பார்க்க வர வேண்டாம் ” என கூறியவன் ” உன்னோட மனச மாத்திட்டு நல்லபடியா படிச்சு முடிச்சிட்டு நல்ல பையனா பார்த்து கட்டிட்டு லைஃப்ல செட்டில் ஆகுற வழிய பாரு. தேவையில்லாத விஷயத்தில உன்னோட நேரத்தை வீணாக்காத ” எனவும் சொல்லிவிட இவளுக்கோ அழுகை அழுகையாய் வர ” அதை நீங்க சொல்லனும்ற அவசியம் இல்லை. உங்க அட்வைஸ்ஸ கேட்கவும் நான் இங்க வரல. நீங்க எங்க வேணும்னாலும் ஓடி ஒளிங்க ஆனா என்னோட மனசு மாறிடும்னு மட்டும் கனவுலேயும் நினைச்சுடாதீங்க…. ” என கூறியவள் அங்கிருந்து வெளியேறினாள்.
வீட்டுக்கு வந்தவளுக்கோ எவ்வளவு முயன்றும் அவன் பேசியதே திரும்ப திரும்ப நினைவில் வர என்ன செய்வது என தெரியாது தவித்துக் கொண்டிருந்தாள்.
உண்ண பிடிக்காமல் உறங்க முடியாமல் எந்த செயலும் செய்ய மனசு வராமல் இதயம் பாரமாய் இருப்பது போல் உணர்ந்தவள் இதை யாரிடம் சொல்வது எப்படி சொல்வது என எதுவும் தெரியாமல் ஓட்டுக்குள் ஒடுங்கும் நத்தையாய் தனக்குள்ளே முடங்கிக் கிடந்தாள்.
இதோ இப்போது வேதா கேட்டதும் மனதில் இருந்த எல்லாவற்றையும் ஒன்று விடாமல் கொட்டித் தீர்த்தாள்.
எல்லாவற்றையும் கேட்ட வேதாவிற்கு வர்ஷா படும் கஷ்டம் புரிந்தது. அதே நேரத்தில் அஜய்யின் மனமும் தெரிந்தது.
‘ அனாதையாய் இருந்தவனுக்கு உற்ற நண்பனாய் மட்டுமல்லாது எல்லாவிதத்திலும் அவனுக்கு பக்க பலமாய் இருந்து உதவும் நந்தனின் தங்கையை அவன் எப்படி காதலியாக ஏற்பான். காதல் எண்ணம் வந்தால் கூட நட்பு இடையில் வந்துவிட்டால் நட்பை தானே எண்ணுவான்….. அத்தோடு என்ன தான் படித்து நல்ல வேலையில் அவன் இருந்தாலும் இவள் பணக்காரி ஆயிற்றே அந்த பயமாக கூட இருக்கலாம்… ‘ என ஏதேதோ எண்ணங்கள் இவள் மனதில் ஓட வர்ஷாவுக்கு ஆறுதல் கூறியவள் ‘ இதை பற்றி சந்தர்ப்பம் கிடைக்கும் போது அண்ணாவிடம் பேச வேண்டும் ‘ எனவும் எண்ணிக் கொண்டாள்.
No comments yet.